பின்பற்றுபவர்கள்

25 செப்டம்பர், 2007

வசந்தம்

பூமியின் ஆழத்திலிருந்து காதல்
நெடுமரங்களின் வேர்களுட் புகுந்து மேலெழுந்து
வசந்தத் துளிர்களின் நடுவில் மலர்களாகிறது.
வேனிலின் அசைவற்ற மெளனத்தில்,
வெம்மையில்
ஒவ்வொன்றாக விழுகின்றன மலர்கள்.
நிலம் மறைகிறது.
ஏக்கம் கடலில் ஆவியாகி
விசும்பின் உயரத்தில் திரண்டு
விம்மி வெடிக்கிறது துயரமாக.
நெடுமூச்செறிந்து ஆவிபடரும் மண்ணின்
ஆன்மா அடங்குமோ!

துளிகள் சொட்டும் காலையில்
ஒற்றைக் குயிலின்
தீராக் குரலிலும் சிதைகிறது
வசந்தம்.

சித்திரை - 1995

விசாரம்

வேர்களில் பரவி
இலைகள் செறிந்து
நிலவுக்கு நிமிர்ந்த
மரங்களின் கீழே நகர்ந்தது அருவி.
இருண்ட காட்டின் நறுமணமும் கமழ்ந்தது.
நீரலையைத் தழுவும் பாறையை மருவிக்கிடக்கையில்
வாவென இழுத்துத் தேகம் ஆட்டும்
அருவியைக் கேட்டேன்:
"மானிட ஆத்மாக்களின் துயரம் ஊற்றெடுப்பது எங்கிருந்து ...?
கனவின் வண்ணங்களுடன் வரும் இதய ஆழத்தின் குமிழிகள்
பூமியில் உடைவதேன்...?
காலத்தின் மெளனத்தில் புதைந்திருப்பது என்ன...?"
அருவி போய்க் கொண்டிருந்தது.

மார்கழி - 1994

சமூக ஒழுங்கு

நள்ளிரவில் வீடு திரும்பிய அக்காவுக்கு அத்தான் கூறியது:
"இரவில் உலாவுவது பேய்கள் மட்டுமே"

அப்பா நீண்ட புகையிலையின்
நரம்புகளை நீக்கத் தொடங்குகையில்
புன்னகை ஒன்றை அத்தானுக்குப் பரிசளித்தார்.

அம்மா மன நிம்மதியுடன் அடுக்களைக்குப் போனார்.

அப்பா புகையிலைத் துகள்களை சேர்க்கையில்
அக்கா முகம் சுழித்தாள்.
அவளுக்கு புகையிலையின் மணமும் பிடிப்பதில்லை.
"ஒழுங்கான குடும்பத்தில்
யாரெண்டாலும் வீட்டுக்கு இருட்டுக்கு முன்னம் வரவேணும்"
தனது அறிவு தெளிந்த நாளில் இருந்தே
புகைப்பவரான அப்பா சொன்னார்.

"நகரத்தின் இரைச்சல் அடங்குவது;
காற்று மனம் விட்டு மரங்களுடன் பேசுவது;
நட்சத்திரங்கள் விசும்புடன் குழைவது;
ஆத்மாவின் தனிமை கீதம் இழைவது;
யாவும் இரவிலன்றோ?"

அக்காவோ இரவுவானத்தில் கனவுகளை எழுதுபவள்
அக்கா அத்தானிடம் இது பற்றி
அவ்விரவின் காமத்தின் முன்னரோ பின்னரோ
துணிய(க்)கூடுமோ...

தீக்குச்சியை பெட்டியில் உரோஞ்சி
சுருட்டில் பிடித்து
தீ பரவும் முகத்துடன் அப்பா கூறினார்:
"அதிலும் பெண்கள் வீட்டுக்கு வரவேணும்
இருட்டுக்கு முன்னம்"

அப்பாவின் புகையும்
அத்தானின் இரவும் நீள்கின்றன...

மாசி - 1995

(அ)காலத்தின் சொற்கள்

தடிமனும் சளியும் சற்று அதிகமாக இருப்பதாலும்
சமாதான ஒப்பந்தம் முறியப் போவது பற்றித் தன்
மூக்கு நுனி வியர்ப்பதில் இருந்து முன்னுணர்வதாகவும்
என் நண்பன் கூறியதால்
அக்கடைசி இரவை வீணாக்காமல் இருக்க மட்டுமே
நாங்கள் மதுவருந்தப் போனோம்.

அன்றிரவு எந்த இலக்கியவாதியும்
என் நண்பனின் வசவுக்குத் தப்பவில்லை.
இலக்கியத்தின் உச்சாணிக் கொப்பில் நின்று
தன் சளி அவ்வளவையும் காறித் துப்பினான்.

"அட இலக்கியவாதியே
என் கேள்விகளுக்கு நீ மட்டும் பதில் சொன்னால்
இன்னுமொரு போத்தல் மதுவினால்
உச்சாணிக் கொப்புக்கு மேல் உனக்கொரு சொர்க்கம்
உருவாக்கித் தருகிறேன்" - என்றேன்
பொரி கடலையும் பற்களும் நொ¢பட
விழியுருட்டிக் "கேள்" - என்றான்
"இடியும் மின்னலும் மழையும் மிகைபடப் பொழியும்
இரவில் உன் மடியுள் முடங்கும் பிள்ளையின் முகத்தில் தெரிவது...?"
"அச்சம்"
"வீசும் பிரம்பொடு மூசும் குருவின் முன்னே
விதிர்க்கும் சிறுவன் மூக்கில்
உதிர்வது?"
"வியர்வை"
"உன் காலுக்கிடையில் சிக்கிய எறும்பின் வாழ்வு"
"அவலம்"
"மனிதனை மெளனமாக்குவது?"
"மரணம்"
"உச்சாணிக் கொப்பில் இருந்து நீ சொர்க்கத்திற்குப் பாய
இன்னும் ஒரேயொரு கேள்வியே உள்ளது"
"சொல்லிவை மதுவுக்கு"

"உன் எல்லாச் சொற்களும் ஒரேயொரு அர்த்தத்தை மட்டுமே
கொள்ளும் காலம் எது?"

"என்ன!
ஒரு சொல்லுக்குப் பல பொருளும்
பல சொல்லுக்கொரு பொருளும்
உண்டென் மொழியில் - உண்மை
ஆனால் மேற்சொன்ன சொற்களில்
ஒன்றேனும் ஒன்றுக்கும்
எக்காலமும் பொருந்தாதே!
என்னடா!!
முட்டாள் கவிஞன் ஒருவன் தன் புலம்பல் தொகுப்புக்கு
வைத்த தலைப்போ உன் கேள்வி
போடா உன் மதுவும் சொர்க்கமும்!"

இரவு தள்ளாடிப் போக
நாங்கள் கலைந்தோம்.

அதிகாலை என் தொலைபேசி ஒலித்தது
கலங்கித் தழும்பி உடையும் குரலில் நண்பன்:
"எல்லாச் சொற்களும் ஒரேயொரு அர்த்தத்தை மட்டுமே கொண்ட
காலத்தை நேற்றிரவு பெற்றேனப்பா!
நேற்றிரவு
விசேட அதிரடிப்படை என் பிள்ளையை..."

அச்சம் வியர்வை அவலம் மரணம்...

வைகாசி - 1995

23 செப்டம்பர், 2007

அரளிப் பூவும் தரங்காவும்...

மழலையின் விரல்கள் வருடச் சிலிர்க்கும்
மானுட முகம் போல்
மென்சிறு இலைகளின் வசந்த உயிர்ப்பு
ஒளிரும் காலைப் பொழுதில்
உன் காதலின் அழைப்பில்
ஏக்கமுறும் என் இதயம்
உன் செவ்விதழ்களில்
என் காதலைத்தரக் காலம் இல்லையே!
இதய ஆழத்திருந்து எழுந்து
வாழைக்குருத்தென விரியக்
கடும்காற்றில் கிழிந்த கனவுகளோடு
ஆறாத இரணங்களின் பிணமானேன்
அதுவொரு காலம்.
மீண்டும்...
வெண் அரளிப் பூக்களின் கொத்தைப் பறித்தெடுத்தேன்.
பூவிரண்டு தா
பூஜைக்கென்றாய்
மானுடர்க்கே அன்றிப் பூஜைக்கல்ல என்றேன் முகர்ந்தபடி.
செம்மை தீண்டப் பிடிவாதமுடன் சொல்கிறாய் "பூஜைக்கே"
மென்நய மெளனத்தில்
அரளிப்பூவின் விளிம்போரம் படரும்
செம்மையைப் பார்த்தேன் - உதடுகள்.
சூழவுள்ள விழிகளைத் தப்பி
மொழிகளையும் தப்பி
நீ எதையோ தேடுவதை
நான் மட்டும் உணர்வதேன்?
அந்தி மாலையில்
நித்திய கல்யாணிப் பூக்களை
என் முன்றலில் நீயேன் கொய்து கோர்க்கிறாய்?
விலகிச் செல்லும் என் ஆத்மாவின் சுனையில்
ஊற்றின் குமிழியொன்று
எழஎழப் பெரிதாகும் உணர்வில் துடிக்கிறேன்.
தீபாணி தரங்கா
பிரியும் நாளில்
நானும் அழுவேன்.

ஆனி - 1995

மாயச்சுனை

நெஞ்சச் சிறுகுழியின் உள்ளிருந்து பின்னுகிறது ஏக்கம்
என் துயரம் எப்பொழுதும் வாழுமோ
என் கவிதையைப் போலே.
வெறுவான நுனியில் தலைநிமிர்த்திய
புளிய மரத்தின் சிற்றிலையின் அளவேயான என் கனவுகள்
அறைக் காற்றாடியின் அலகுகளில்
கறுப்பாகிப் படிந்துள்ளன.

சில நாட்களின் முன் எழுதிய
என் கவிதை இப்படி இருந்தது:
(ஓர் காதல் கவிதைக்குரிய தொடக்கம் இருப்பதாக
நீங்கள் நம்பத் தொடங்குமுன் வாசியுங்கள்...)

"வெறுமை மெல்ல மெல்ல அழிந்து போனது
மண்ணுடன் புரண்ட அலைகளில் குமுறல் இல்லை.
பெளர்ணமி நிலவோடு
காற்றோ விசும்பின் கதைகள் ஆனது.
தெப்பக்குளத்தில் மெல்லென விழுந்த பூவெனக்காதல்
என்னுள் ஆடுகிறது.
ஆத்மாவினுள் பிறந்து விழிகளில் பரிதவித்து
உன்னைத்தேடி ஏங்குகிறது காதல்
அந்திமாலை வேளைகளில்"
(என்ன
கரைகளை ஈரப்படுத்தும் துயரம் இருக்கவே செய்யும்
என்று உணர்கிறீர்களோ)
உன் ஆத்மாவை மூன்றாம் மனித வார்த்தைகளுக்குள் காணுவது
முடியாதென்பதைப் போலவே
விழியும் விழியுள் ஒளிரும் காதலும்
சாஸ்வதமாயிருக்கும் எனவும்
அது எவ்வார்த்தைகளுக்கும் அஞ்சாதிருக்கும் எனவும்
நான் நம்பேன்
என் காதல் இனியொருமுறை கெஞ்சாது

இளவேனில் காலத்தளிர் போலும் உதடுகளைக் கவ்வி
வசந்தகால ஊர்க்குருவியின்
உயர்வானச் சறுக்கல் போல
காதலின் ஆழியுள் ஓர்நாள் போவேன்.
உன் ஆத்மா எனக்குப் பொய் சொல்லாது என்றால்
இன்னொரு வசந்தத்திற்கு இந்த வேனிலில் வாடியிரு!

நானே என் நெஞ்சத்தில் அகழ்ந்த மாயச்சுனையில்
நீர்மொண்டு அருந்த முயன்று மாய்ந்தேன் என்றால்
நோவதற்கும் நொந்தழுது பாடுதற்கும் பின்
வாழ்வதற்கும் நானேயானேன்.

ஆவணி - 1995

மழையெல்லோரெம்பாவாய்...

இங்கு பொழிகிறது மழை.
அங்கென் மண்ணிலும்
கையேந்தா மனிதரின் கனவுகள்
உலர்ந்த காலத்திலும்
மழையின்றி நிமிராவெப்பயிரிலும்
பெய்யுமோ?
வேரறுந்து விலகிய மனிதரின் விளைநிலம்
சுவடிழந்து அழுகிறது.
தேரசைந்த திருக்கோவிற் கனவுகளை
பாழடைந்த கோபுரம் பாடும் பாடலை
பாடும் கிழவனின் கைத்தடியும்
வழுவி நனையுமோ?
ஊர் முடிந்த வெளியில்
பொன்னிற மாலையில்
மஞ்சள் குளிக்கும்
என் தனியொரு வீடும் வேம்பும் நனையுமோ?

ஏக்கம் மீதுற விண்ணின் துளிகள்
பின்னிப் பெருமழையெனப் பொழிய
என் சகியின் விழிகளை மருவி
இதழ்களைத் தழுவும்
சாளரக் கரையின் சயனத்துடலில்
படுமோ தூவானம்?
மூசிப் பெய்தும்
முழுநிலமும் கரையவோடியும்
பின்னும் பெயரின்றி
ஆழக்கடலில் கலந்து அழியும் மழையே!
தேடிப் பெய் என் தேசத்தை.

ஏங்கித் தளர்ந்து இனிப்புகலேயில்லை
எனத்தளம்பும் மனிதரை,
நெடுமரமடியின் நனையாக் குடிலில் இருத்திப் பின் பெய்.
'இம்மழை,
மண்ணில்
மரத்தில்
மனதிலும் பெய்தது'
என்றுனக்கழியாப் புகழ் தருவேன்.

கார்த்திகை - 1996

16 செப்டம்பர், 2007

முடிந்துபோன ஆண்டு

ஆவணி

தேமா மலரின் திரள்கள்
காற்றிற் கிளர்ந்து கடலின் திரையென உயரத்தாழ
விசையுறும் உள்ளம்.
மாலைப் பொழுது...
ஆழக்கடலின் மோகத்துளிகள் மோதிச்சிதறும் கரையில்
தனியக் கிடந்தேன்.

கடலின் மடியில் நிலவின் தடமும் அழியும் முகிலின் திரளில்.
பின்னிரவில் பேய்க்காற்றிற் பேதலித்தலையும் மரங்கள்.
மென்முலையோடணையா மழலைக்குரலோ அழுகிறது.

புரட்டாதி

அன்றோ
காற்றடங்கிய பகலில் மே மலர்களில் தீ எ¡¢ந்தது.
இன்றோ
ஓங்கார ஓலமிட்டு உலகத்தின் உதிர்வெல்லாம்
அள்ளி வந்தது சோளகம்.
இரவிலோ
நெடிதுயர்ந்த ஆலமரத்தின் கீழ்
நிலவில் பாடும் பைத்தியக்காரனுடன் தனித்திருந்தேன்.

ஐப்பசி

இரவினில் எங்கிருந்தோவரும் இசையுள் மூழ்குதல்...
கனவினுள் அமிழ்ந்து கடலுடன் பேசுதல்...
இல்லையெனில்
கண்ணீர் வழியத்
தேமாமரங்களுடன் தேம்புதல்...

கார்த்திகை

இரவின் மீது இரைகிற காற்றில்
விருட்சங்களின் இலைகள் பேசுகின்றன.
நிலவைத் தழுவ எழும்பும் கடலின் அலைகள்
ஏங்கி விழுகின்றன.

முன் மார்கழி

மானுட ஆன்மாவின் புன்னகையைத் தேடி நடந்த
காலத்திடலின் நடுவில்
புல் தேய்ந்தழிந்த தடமோ நீள்கிறது.
மழையில் நனைந்து
நிலவில் தனித்த பூக்கள் உதிரும்.

நடு மார்கழி

மாரிகால இரவிற் புதைந்து
மண்ணெது விண்ணெது
கடலெது கரையெது
என்றறியா இருளிலும்
ஆழியின் இசையெனத் திரள்வது எதுவோ?

பின் மார்கழி

நீள் தெருவெங்கும் நிராசை சிந்திப் பின்
அதிகாலைக் கடலில் ஆடும் படகில் வாழ்க்கை,
தீராக்காதலைத் தேடி
ஆறாத இன்பமருளும் மாயக் குகையுட் போனதென்றார்.
நாளை நதிமுகக் கலப்பில் இன்பம் நுரைக்கையில்
நறுமலர்ப் பொய்கையின் பொன்தாது கொண்டு வருமென்றார்.

போரும் பொய்மையின் பாதையில் போயழிந்த காலமும்
போற்றிப்பாடும் புலவரைப் பொரிந்து போனதென்றால்
பொய்யாம்!
அச்சமும்
அச்சத்தின் கனவுகளும் பற்றிப்பிடித்தலைக்க
ஆதரவற்ற காலத்தில் அணைந்து கொள்ள
ஆருமற்றுப் போனதடி வாழ்வு.

வாழ்வென்று எவர் சொன்ன வாழ்வும் வாழ்வல்ல
என்றறைகிறது ஆழி.

எல்லாம் மூடிய இருளிலும்
வெள்ளி அலைவீசி விண்ணின் ஒளி வீழ்த்தும்
என் இனிய கடலே!
ஆழத்தின் ஆழத்தில் உறையும்
உன் மெளன வர்மத்தின் துளி பருகி
உயிர் நிறைந்து
உயர்ந்து வரும் என் வாழ்க்கை
என்றுன் கரையில்
மணலின் துகள்கள் எண்ணிக் காத்திருப்பேன்.

மார்கழி - 1996

காதல்

கடலோங்கிக் கரைதழுவப் பார்த்து
உடலுள்ளிருந்து தவித்தெழுந்தாத்மா
மெய்யிறங்கியுன் விழி தேடி வருகிறது.
பொய்யெது மெய்யெது
போதிமாதவச் சிரிப்பெதுவென்றறியா
மென்மயிர்ப் பூனைபோலேங்கி நடந்தவென்னிதயம்
உன்மார்பிலணைகிறது.
முலைதழுவி முன்னெற்றி மயிரொதுக்கி
முத்தமிட்டுன் நறுவுதட்டுச் சாரலையும் தாவென்று தவித்து
ஆண்மையும் பெண்மையும் பெயரழியும்
காலத்துள் போய்வரவாவென்று கேட்பேன்.
கேசம் கலைந்து கிடந்தவுன் கழுத்தில்
புதைந்து புதைந்து
நீலம் படர்ந்த நெடுவான முடிவுக்கும் போவேன்.
மெய்யும் காதலும் ஒன்றென்றுயிர் சுடர்கிறது.

ஆடி - 1997

கவிஞனுடன் மதுவருந்தல்

சிறுமேசை
செந்நிற விரிப்பு
சிம்னி ஒளி இறங்கித் தவழ்கிறது.
பொன்னிறத்தில் நுரைக்கிறது மென்மது.

"குற்றவுணர்வுகளின் குறைந்த பட்ச ஆயுட்காலம் எவ்வளவு?
கோடைப் பொழுதின் குளிர் கள் பருக எத்தனை பேருக்கு அஞ்ச வேண்டியுள்ளது
பெண்களுக்கான ஏக்கத்தில் குறி புடைக்கிறது.
உலர் காற்றில் ஆடும் அவள் உள்ளாடைகளில்
என் காமம் காய்கிறதே!
சட்டைப்பையிற் கனக்கிறது இரவல் காசு
இறந்தவர் நினைவிற் கல்லாகிறது இரவு
நீ ஏன் உரையாடுகிறாய் இல்லை" - அவன் கேட்கிறான்.
"முட்டை வட்டப் பொரியலைத் தின்று தீர்க்காதே
உரையாட வேண்டும் இவ்விரவு முழுவதும்"- சினக்கிறான்.

மதுக்கடை நிறைகிறது
உரையாடல்கள் உயர்கின்றன.

"கருத்தரங்கொன்றில் தேநீர் பரிமாறிய பெண்ணைத்
தன் மடியில் அமரக் கெஞ்சிய கவிஞனைப் பற்றியாவது
பேசுவோமா" என்கிறான்.
"எஞ்சிய மதுவை
ஊற்றிக் கொள்" - என்றேன்.
இன்னும் ஏதேதோ சொல்ல உன்னுகிறான்
என் நட்பார்ந்த கவிஞன்.

எழுந்து வருகிறோம் வெளியே
கடற்காற்றில் போதை வலுக்கிறது.
கரையைப் பிரிந்த கலங்கள் தூரக்கடலில்...
முற்றுப் பெறாத உரையாடலொடு
முடிவுறாத இரவு நீள்கிறது.

வைகாசி - 1998

9 செப்டம்பர், 2007

வனமழிந்த காலம்

மகிழ்ச்சி பூமியை வனமாக மூடியிருந்த காலமொன்றிருந்தது.
வனம் பூமியை மகிழ்ச்சியாக மூடியிருந்த காலமுமதுதான்.
ஆறுகளின் மேனியில்
வனங்கள் கிறங்கிக் கவிந்த காலங்கள்...
துயரம் நிரம்பிய இதயத்தில்
சொற்கள் சிதறுண்ட நேரத்தில்
உருப்பெறாத கவிதைகளுடன் கானகம் புகுந்தனர் கவிஞர்கள்,
அற்புதமான கவிதைகளுடன் திரும்பி வந்தனர்.
நீங்களோ நானோ கண்டிராத அக்காலத்தைத் தேடிப் பயணப்பட்டேன்.
வேரடி மண்ணைப் பிரிய மனமில்லாத பட்ட மரங்களில்
பறவைகள் ஓலமிடுகையில்
பொட்டல் வெளிகளில்
வனமிருந்த பள்ளத்தில் துளிர்விடப் புல்லும் இல்லை.
புழுதியுரிந்து சிவப்பெனப் புயல் எழுகிறது.
காடுகளைத் தூர்த்த காலத்தின் காற்றில் அள்ளுப்படச் சருகுகளும் இல்லை.
அடவியின் இதய நீளத்தில் அரண் செல்கிறது.
துன்பம் நிறைந்த கவிதையின் சொற்களைத் தேடி
உலகத்தின் மிக அற்புதமான கவிஞன்
ஆத்மாவின் உள்ளெங்கும் பயணம் செய்வதைப் போல
இலைகள் அடர்ந்த அடவியைத் தேடிப் பயணம் செய்தேன்.
வனங்களைத் தின்னும் இராணுவம்
அரண்களில் கண்தூங்கிக் காவல் புரிகிறது.
எஞ்சிய மரங்களின் கீழே
முகங்கள் கோணிய மனிதர்கள்
வியர்வையை வழித்தெறிந்து புறுபுறுக்கிறார்கள்.
இன்னும் ஏதோ எஞ்சியிருப்பதாக நீண்ட தொலைவுக்குப் பார்க்கிறார்கள்.
தனித்துச் சிதறிய மரங்களோ
எதைச் சொல்லவல்ல நிலையிலுமில்லை.

ஆனி - 1998

தலைப்பிட முடியாவொரு கவிதை

புரியாமையில் ஒளி இழந்த உன் விழிகளைத் துயரம் படுத்துகிறது.
போர் நிலத்தின் அனுபவத்தில்
இருண்டு போன மனங்களில்
வன்மம் ஒரு பெரும் சுழியாய் எழுகிறது.
நீ போய் வா!
விகாரமான முகங்களுள் உறவுகள்
புதையுண்டு போயின.
வனங்களின் மர்மம் பிடிபடாது
போர் உன்மத்தம் பிடித்து அலைகிறது.
அலை அடங்கிய ஆடாத கடலின் மெளனம்
தேடுவாரற்றுக் கிடக்கிறது.
இலையுதிர்ந்து உணர்வுகளின் சுழிப்பென
கிளைதிரிந்து பாதையெங்கும் தவமியற்றும்
மரங்களில் தளிர்களை எண்ணப் பிடிக்குமோர் காலத்தில்
திரும்பி வா!


கல்லறைக்கு வர்ணம் பூசும் சவக்காலைத் தெருவில்
நான் ஓடிக் கொண்டிருப்பேன்.

ஆடி - 1999

3 செப்டம்பர், 2007

தேடல்

இதயத்துள்ளிருந்து கவிதை வருவதை
ஏதோவொன்று அடைத்துக் கொண்டிருக்கிறது.
அகவெளியின் சஞ்சாரம் அற்றிருக்கிறேன்
பழைய நண்பர்களைச் சந்திக்கையில்
திரி தீண்டிய விளக்கொளி நெஞ்சத்தில்.
ஆத்மாவுக்கருகில் ஒலித்த குரல்கள்
தொலைதூரங்களுக்குச் சிதறுண்டு போனபின்
வாழ்க்கைக்கு மரணம் என்றொரு அர்த்தம் உள்ளதை உணர்கிறேன்.
தனித்து விடப்பட்ட மனிதர்களின் கண்கள் ஒளி மங்கிப் பஞ்சடைந்து வருகின்றன.
துன்பம் பிரபஞ்சமயமாகி வருகிறது.
பெரும் வனங்களும் சரிகின்றன.
வெட்டுக்கட்டைகளின் மீதான வட்டவரிகளில்
காட்டுப்பறவையின் ஏகாந்தம் எஞ்சியுள்ளது.
விடுதலையைப் பாடும் எண்ணுக்கணக்கற்ற கவிஞர்களின்
குரல்களுக்கிடையிலுள்ள இடைவெளியை நிரப்பிச்செல்லும்
சத்தியநதியின் ஊற்று மூலத்தை அடைத்திருப்பது எது?

ஐப்பசி - 1999

இலையுதிர்காலம்

இலையுதிர் காலத்தின் குளிருக்கே நடுங்குகிறாய்...
உன்னையெது இங்கு கொண்டுவந்தது?
காற்றா... கடலா...கனவா
*காட்டமான மதுவின் வெறியா*... கானல் நீரா...?
போடா முட்டாள்!
நெடிதுயர்ந்த மரங்கள்
இலைகளை இழக்கையில் பேசிக்கொண்டவைகளை
காற்றோ அள்ளிச்செல்கிறது.
நீயோ அவற்றையெட்டிப்பிடித்து
கவிதையாக்கலாமென்று
ஓடிக்கொண்டிருக்கிறாய்!

மார்கழி 2000
*-* கலீல் கிப்ரானின் வரி.

நதி

நான் பிறந்தபோது என்னுள்ளொரு நதியும் பிறந்தது.
பருவங்களின் புத்தம்புதுவூற்றுக்கள்
வெடித்துப்பீறிடும் உணர்வுகளில்
ஆழமும் அகலமும் கொண்டென் நதி
அணைகடந்தது.
வாழ்க்கையும் படிமமாகிச் செறிந்தது என்னுள்.
கைகளிலும் மனங்களிலும் இரத்தமும்
வார்த்தைகளில் மாய்மாலமும் நிறைந்த நாட்டில் இப்படியொருநதி என்னுள்!
உலகம் தூங்கும் போது கூட அதனுடன் பேசிக் கொண்டிருப்பேன்.
எத்துணை துயரமான காலங்களைக் கடந்தபோதுமது
என்னிதயச் சொற்களைத் தனதாழத்தின் கவிதையாக்கித் தந்தது.
திணறியதென் நன்றியுணர்வு.
எனக்கே தெரியாதவெனதும் உனதும் ஆழத்தை
அழியாவரமாக்கும் என் வாழ்க்கை என்றுரைத்திருந்தேன்.
எமக்கொரு மகன் பிறந்தபோது இதுவுன் குஞ்சுநதியென்றேன்.
தனக்குள் ஒரு நதியைக் கொண்டிருக்கிற எவரும்
தலைநிமிர்ந்தே வாழ்வர்.
காலத்தின் தடத்தில்
தன்னிதயத்தின் நதி பல்கிப்பெருகுதல் காண்பதே
வாழ்வென்று பாலியாறு சொன்னதே!
ஆனால்
என்தேசவெல்லையைக் கடந்தவன்று
என் நதி நடுங்கியதோ?
விமான இரைச்சலில் இழந்ததுவதன் குரலோ?
நதியைக் கேட்காது பெயர்ந்த கால்களில்
இலையுதிர் காலத்தின் சருகுகள் மோதிப் போயின.
பெயர்ந்து விழுந்தவை போவது காற்றோடுதானா?
பெரும்பனி வீழுமிப் பெரும்வெளியில்
தனித்தவென்னுள்
உறைந்துபோனது என்நதி.


என்றாவது ஒருநாள் "என்னை நீயேன் அகதியாக்கினாய் அப்பா"
என்றென் மகன் கேட்கையில்
இறந்தேபோகும் என்நதி.

மாசி - 2001

நான் எப்பொழுது இறந்தேன்

கனவின் பசிய இலைகள் உரசும்
காலம் நிறையும்
வேரடி மண்ணின் வாழ்வும்
பெயர்ந்தது.
குறுகியது இதயம்
தடக்கின வார்த்தைகள்
உதிர்தலும் குளிர்தலும் தாங்கி
துளிர்க்கும் துணிவைப் பெற்றன மரங்கள் மட்டும்.
காற்றும் மரமும் கலந்து பாட
கையேடும் கோலும் கொண்டு
கவிதை பெற்ற காலம்
கண்முன் சிரிக்கிறது.
ஓவென்றிரைந்த கடல்வழித் தெருவில்
என் காலடியோசை
மறைந்த நாளிலேதான்
நான் இறந்து இருக்க வேண்டும்.
பனியுறையும் இம்முகாமிலல்ல.

வைகாசி - 2002

அறியாததும் உணராததும்

ஒன்றுமறியாக் கன்றெனத் துள்ளும் காலத்தை
பள்ளியில்;
ஒன்றா இரண்டா காதல்
உள்ளச் சலனத்தின் கொதிப்பில் அழிந்த இரவுகளை
பெறுபேற்றுப் புள்ளியில்;
பாடவும் பின் இருந்து பகிரவும் ஆகிய
பன்னெடும் காலத்தோழமை பிரிய
பின்னிரவின் பழுவை
அன்றெழுந்த நிலவில்;
வாழ்க்கையைத்
தாரழிந்து தடம் சிதறிய வழியெங்கும்
உருக்குலைந்தோடும் மனிதரில்;
காணாமல் போனவர்களைக்
காலத்தின் மேனியில் கதியற்றுச் சிதைந்தவர்களைக்
கதையற்றுக் கண்ணீரையும் விழுங்கி
இறுகிய விழிகளில்;
நீதியற்ற காலத்தின் நாசத்தை
போரில்;
போரைப் போய் வெடிக்கும்
பிஞ்சுகளில்;
உணர்ந்துகொண்டேன்

உண்மைகளின் வலியையோ
இப்பெரு வெளியிலே தனித்தபோது உணர்ந்துகொண்டேன்.
இன்னும் அறியாததும் உணராததும் எதேனுமிருக்குமென்றால்

அதுவே...

யாரொடு நோகவென்றும் யார்க்கெடுத்துரைக்கவென்றும்...

புரட்டாதி 2003

2 செப்டம்பர், 2007

வாழ்வில்லாப் போர்!

நினைவறிந்து
நெஞ்சம் கிளர்ந்து
தெரிந்த உலகமோவிது?
வாழ்வு புரிந்து
வலியையுணர்ந்து
யாரடைந்தார் ஞானம்?

புரிந்த போர்..
புரியாப் போர்..
களங்கொண்ட மெளனம்...
கையாலாகாத அமைதி...
கண்தெரியாச் சடுகுடுவாட்டம்...

அதிகாரமும் ஆணவமும் பேசும் வார்த்தைகளின்
உள்ளர்த்தமும் வெளியர்த்தமும் யாரறிவர்?

கண்ணீரும் கம்பலையுமாகி
மண்ணள்ளித்திட்டி மார்பிலடித்து
ஓலமிட்டு ஒப்பாரிவைத்தும்மாறாதரணங்களின் மீது
காலாதிகாலமாக இராசதந்திரமும் நடக்கிறது.

கைதொழுதேற்றும் காலடிகள் நீளும்.
கங்கை தின்ற சடையும்
காவி மூடிய தாது கோபுரமும்
கர்த்தரும்
பாங்கொலியும் பகரா விடைகள் மீது
பாவிகளின் கேள்விகள்...

காலத் தடத்திலும் உண்டே கையறு நிலை.

ஊழி கொண்ட ஆழியோ
உன்மத்தமான கோடையோ
அலையுமாயிரம் இலைகளில்
அழியுமிரவின் அமைதியோ
அன்பேயென்று என்னுள் உறங்கும் காதலோ
கூடவறியாத ஆயிரங்கணங்களின் கனத்தை
எப்பாயிரத்திலிறக்கி வைப்பேன்;
எப்போது வாழுவேன்?

ஆடி 2005

சுடுதல்

திருக்கோவில் தெப்பக்குளம் போலவும்
தெருக்கோவிற் பிள்ளையார் போலவும்
சூடு சுறணையற்றிருந்தது வாழ்க்கை.
பால பருவமது
பாலப்பம் பகோடா
தோசை வடை சுடுதல் நடந்தகாலம்

பள்ளிக் காலப் பொல்லாக் காதலோ
தீயினால் சுட்டவடு ஆறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடுவென்றறைந்தது.
பின்
சுட்டமண்;
சுட்டபழம்;
சுடாத பழமுமறிந்தேன்.

தன்வினை தன்னைச்சுடும்
ஓட்டப்பம் வீட்டைச் சுடுமென்று
உள்ளுறைந்த போதம் பயம் காட்டும்
அறிவறிந்த காலத்திலும்.

ஆயினும்
சூடடைந்து சுறணை கொண்டதுவாழ்வொருநாள்
சுடுவதற்கான சுதந்திரம்
சுதந்திரத்திற்கான சுடுகள்
எனப்பலபரிமாணங்களிற்
சூடுகளை நானப்பொழுது கேட்கத்தொடங்கினேன்

சுடுதலின் சுகத்தை நானறியேன்
(அறிய விரும்பவும் இல்லை)
சுடப்படும் துயரம் நானறியாவரம் வேண்டும்.
சுடுவதற்கும்
சுடப்படுவதற்கும் இடையில் அகப்பட்ட
ஆயிரம் கணங்கள் அடியேன் தன்வினையைச் சாருமோ?
நானறியேன்!

சுடுபவர்க்குத் தெரியாது
எதைச் சுடுகிறோமென்று!
சுடப்பட்டவர்க்குத் தெரியாது
எது சுடுகிறதென்று!!
சுடச் சொன்னவர்க்குச் சுடப்படுபவைகள் பற்றிக்
கவலைகள் இல்லை!

சுடுவதற்கும்
சுடப்படின் ஆறுவதற்கும்
ஆனதத்துவங்கள் எங்கள் வேர்களுக்குள் உள்ள போது
சுட்டவர்களையும் சூடுபட்டவர்களையும்
சொல்லிப் பெயரிடின் இது
கவிதையல்ல!
சூடுகள் பற்றி எவருமே எதுவுமே
அறியாக் காலமென்றொன்று
இருந்திருக்குமோவென்று
மாய்ந்தேன்

சுடுதல் சூடிக் கொண்ட நாடு!

நல்ல மாட்டுக்கோர் சூடு போதுமென்பார்
நன் மிருகங்களைநலமடித்துச் சூடு வைத்து மேய்த்தவகையில்.

நாமறிந்த மாடுகளைக் கவிதையும் சுடுவதில்லை!

மாடுகள் மனிதர்க்காகி வந்தமைக்கு
மாடுகள் என்னை மன்னிக்க!

ஆவணி 2005

போரின் விலை!

போரின் விலையைப் பற்றி 'நீ ' பேசுகிறாய்!
அமைதியிழந்த இத்தீவில்
நாங்கள் கேட்க வேண்டிய அக்கேள்வியையும்
நீயே கேட்கிறாய்.
நீயே பதிலும் சொல்கிறாய்.

அமைதிக்காக நீ எங்கும் நுளைக்கும் *பாதைகளின்
வரைபடங்கள்* பற்றியும் நாமறிவோம்

அமைதியை ஆக்குமுன் கருத்தியல் தெளிவாகவுள்ளது.
சாக மறுப்பின் கும்பிடு.
கும்பிட மறுப்பின் குறுகு.
குறுக மறுப்பின் குனி.
குனிய மறுப்பின் அடங்கு.
அடங்க மறுப்பின் சா.
அமைதி வரும்!
அடக்குபவர்க்குப் பால் கொடு
அடங்குபவர்க்கு பாய் கொடு
பாலைக் குடித்தவன்
முலையைக் கடிப்பான்
யோனியைத் தின்பான்
சாத்வீகச் சிலைகளின் கீழே சடலங்களும் விரிப்பான்.
போரின் விலையைப்பற்றி எங்களுக்கே விடுகிறாய் சரடு.
போர் மரணத்தின் வார்த்தை
மரணமோ விடுதலையின் வார்த்தையல்ல
அதையும் நாமறிவோம்.

'அமைதி ' உன்னால் எல்லா மொழிகளிலும் அழிந்தவார்த்தை!

அமைதி பொங்கி வெடிக்கிறது
அமைதி கொழுந்துவிட்டெரிகிறது.

ஆடி அடங்கிய ஆழியின் கரையில்
அமைதியின் விலையையும்
நாங்களே தீர்மானிப்போம்!
அதனை
'நீ '
பேசாதே!!!

தை 2006
*-* socalled roadmap.
1 “US wants cost of return to war to be high”
2 “they will face a "stronger, more ca-pable and more determined" Sri Lankan military”
3 “Now you may be asking, why is the American Ambassador using such blunt language at a gathering of the business elite? What has this got to do with our businesses or our interests?" - US Am-bassador to Sri Lanka and Maldives Jef-frey J. Lunstead

போதையும் கவிதையும்

நான் இன்று மது அருந்தினேன்.

நிறைந்த போதையில் கவிஞர்களுக்கு
தள்ளாட மட்டுமே முடியுமென்பீர்களோ?

இவ்விரவில் நிறைவடைந்த
காதலும் காமமும் மட்டுமே
என் வார்த்தைகளுக்குள் சிக்காதவை.
வார்த்தைகளுக்குள்ளவை சிக்குவதும் இல்லை!

வாழ்வின் ஆழம் தெரியாவிடின்
கவிதையாகவது வடிவதில்லை.
கண்ணுக்குத் தெரியும் விம்பங்களைக்
கவிதை நம்புவதுமில்லை.
கடுகிச் செல்லும் உலகின் மொழி
கவிதைகளின்றி வரண்டு போகிறது...
உலகின் துயரத்தைப் பேசும் வார்த்தைகள்
கவனிப்பாரற்றுச் சிதறிக் கிடக்கின்றன...

சிதறாத எண்ணங்களுடன்
என் கையெழுத்தோ தள்ளாடுகிறது.
போதை காற்றானால்
நானுமென்னெழுத்தும் ஏனாடக்கூடாது?

எல்லாவற்றையும் விற்கவும் வாங்கவும்
கற்பிற்கும் உலகில்
எவரும் விற்கவோ வாங்கவோ முடியாதது
நான் போதையில் எழுதிய இக்கவிதை!

மாசி 2006

நகரம்

மர்மங்களின் முடிச்சவிழ்க்கும் பெருந்தாடிக்கிழவனின் கைத்தடிபோல்
அறைச்சுவரில் தொங்கிக் கொண்டிருக்காமல்
நானின்றிறங்கி நகரத் தெருவுள் விழுந்தேன்.

அடர்ந்த கானகம் போலல்லாது
நகரம் எல்லாரையும் பார்த்துப் பல்லிளித்தது.

வாழ்வுச் சட்டியின் வெறுமைக்குள் வரண்டவர்கள்
வர்ணங்களின் மாயத்தில்
அகப்பட்டுச் சுழல்கின்றார்கள்.
உண்டியல்கள் உடைந்த கண்ணில் போதையின் கோணல்...

இரண்டாம் சாமத்தின்
கண்ணாடிச் சாளரத்தினுள்
அடக்க முடியாத விரகத்தில் எரியும் கண்கள் படையெடுக்கின்றன.
நெளிந்து நசிகிறது பெண்மை.

புட்டிகளும் கிண்ணங்களும் வெறுமையாகும் மதுச்சாலைத் தரையில்
நிலக்கடலைக்கோது நரிபடுகிறது
எள்ளிலும் சிறிய எண்ணங்களின் விகசிப்பில்
சொல் விளம்புமோ மது?
செல்லப்பிராணிகள் பற்றியும்
விலையுயர்ந்த காலணியை அணியக் கூடிய விருந்துகள் பற்றியும்
அவர்கள் நற நறக்கும் ஒலியில்
நள்ளிரவுத்தேவாலய மணி அறுந்து போகிறது

சில நூறு ஆண்டுகளின் முன்பு
எமது கிராமங்களில் அள்ளி வந்த
பொற்கழஞ்சுகள் சிதறச் சிதற சீமான்களும் சீமாட்டிகளும் ஆடிய நடனத்தின் ஒலி இன்னும்
அடங்காது திரிகிறது.
நானோ,
கனவுகள் வெடித்த காலக்கிழவியின் நெற்றியெனக் கற்கள் நெருங்கி
புல்லும்கருக மருந்தடித்த இரவுவீதியில்
திமிறிக்கிடந்த வரலாற்று வேர்களில் தடக்கி
புலத்தைப்பாடும் துருக்கிக்காரன் இரவுப்பாட்டில் சில்லறையென விழுந்தேன்.
இலையுதிர் காலத்தின் மழை நகரத்தை மூடுகையில்
விசும்பின் தொன்மையின்கீழ்
நானும் அவனும் தனித்து நடுங்கிக்கொண்டிருந்தோம்...

மாசி 2006

விடுதலை

முன்னோர் விட்டுச்சென்ற கவிதைகளிலன்று
விடுதலையையுணர்ந்தோம்.
இன்று இருண்மையுட் தனித்துப் போனோம்...
அடர்ந்த வனங்களுள்
நடந்தபோதுமில்லாதவுணர்வு.
அற்புதமான கனவுகளுடன் பிள்ளைகள்
பிறக்கிறபோதும்
வாழ்வேனற்பமாகிறது?
இரத்தத்தில் தொட்டெழுதும் அரிச்சுவடி..
எண் சட்டத்தில் தலைகள்..
வாழ்வு சொற்பமாகிறது.
வடக்குகிழக்கைத் திராட்சைத்தோட்டமாக்கி
அரசருந்துகிறது மது.
அதிகாரிகளுக்கோ
போர் புரிகையில் மனம் சமாதானமாயிருக்கிறது.
மக்களுக்கோ கீதையும் மஹாவம்சமும் துணையிருக்கிறது.
பாலைமரக்காலடியின்கண்ணியில்
காலிழந்தது கூழைக்கடா.
கார்த்திகைப்பூக்களின் வெறுமையில்
இறுகியது நதி.
மறுகியது
பல்லாண்டுகாலப்படிவுகளில் நிமிர்ந்த வனம்.
பட்டறிவு புழுதியாகிறது
சிந்தனையின் மடிப்புகளற்ற
மூளைகளுக்குள் யுத்தம்
விளைகிறது.
நாங்களறியா ஆழத்துள் வேரோடிய திமிரில்
போர் கைகொட்டிச்சிரிக்கிறது
புல்லாகிப் புழுவாய் மரமாகிப்
பல்மிருகமாகிப்
பறவையாய்ப் பாம்பாகி எல்லாமுமாகி
வினை கழிந்தும் பின்
மனிதராய் பிறந்தாரென்றால்
அந்தரிக்கவோ இன்னும் ஐயா?

வாழ்வின் முடிவே மரணம்
பற்றிக்கொள்ளத் தத்துவமல்ல.
விடுதலை,
கவிதைகளிலுமில்லையென்றால்
பிரபஞ்சமுமற்பமாகும்.

ஐப்பசி 2006

நான்கு சாமங்கள்

நகரம் எரிக்கும்
மாய விளக்குகள்தெறிக்கும்
கண்ணாடி அறைக்குள்
நான் நெளிந்தேன்.

இரண்டு சாமங்களின் பின்
வேண்டப்படாத வெப்பத்தின் பிசு பிசுப்பில்
என் ரத்தத்துள் புழுக்கள் நெளிந்தன.

ஆத்மாக்கள் இல்லாது
பெண்களின் மீது விழும் உடல்களின்
கனத்தில் இரவு நசியும் போது
மூன்றாம் சாமத்தில்
பத்தொன்பதாம் நூற்றாண்டின்
கை விடப்பட்ட அச்சியந்திரமாகி
மை வடிந்துகிடந்தேன்.

கழிவுக்கூடைக்குள் என் குறியைக் கழற்றி வீசியபின்
ஆடைகளையும் கழுத்துப்பட்டிகளையும் அணிந்து அவர்கள் செல்லுமொலி
என் கபாலத்துட் குடைகிறது.

அறுவடை முடிந்த இரவின்
அரிய கந்தத்திற் கிளர்ந்தவென் காதலும்
முதற் புணர்வுமிந்தநகரத்தில் என்றோ முடிவடைந்தன.

என்னை விற்றவனும் வாங்குபவனும்
விரித்துவைத்த வானத்தின் கீழ்
கருத்தடை மாத்திரைகளும் ஆணுறைகளும்
நிறைந்த குட்டியறைகுள்
நான்காம் சாமத்தில் உறங்கிப்போனேன்.

ஆவணி 2007

பிரபஞ்சநதி

பிரபஞ்சநதியின் கரையில்
உனது மணம் பரந்திருந்தது.

நாடோடிப்பெண்ணின் சுதந்திரமான
கூந்தல் படர்ந்திருந்தது.

யுகங்களின் வெளியை நிரப்பும்
உன் நரம்பு வாத்தியத்தின் இசை போன்ற
உன் கண்களுக்குள்
இரவு மெளனமாக அடங்கிக் கிடந்தது.

நிலவு வனங்களின் மீது படர்ந்த போது
உணர்வுகள் பிரளயமாயின.

வானத்திற்கும்
ஈரித்திருந்த மண்ணுக்குமிடையில்
என் இதயம் மிதந்து சென்றது.

வாழ்க்கை உணரப்பட முடியாத
அதிர்வுகளின் சுருதியாயிற்று.

இருளும் மெளனமும் கலந்துயிர்கொண்டு
சிறுவெண்கூர்களாயிரம் சிறந்திருந்த
வான்நோக்கி எழுந்தன.

யாரும் நடந்திராத நதியின் கரையை
உனது நிர்வாணமும்
உனது வெப்பமும்
வியாபித்தன.

உன் காலடி நீண்டு செல்கிறது

நானோ
நீ விட்டுச் சென்றவொரு
மயிர் முடியிற் சிக்கிக்கிடந்தேன்.

ஆவணி 2007

எனது தேசத்தில் ஏழு நாட்கள்

திங்கட்கிழமை

இரத்தம் மண்ணுள்.
ஓலம் காற்றுள்.
இருண்டநீரின் பெருக்கில் அள்ளுண்டன
கொலையுண்ட பிணங்கள்.
வனங்களுக்கப்பால் பெருவெளியில்
கை விடப்பட்டனர் மக்கள்.

பெரிய அலைகளின் ஓசையில்
இரவு மெளனமாகிறது.
மௌனத்தை உள்வாங்கி மனவெளி எரிகிறது.
மனித ஓலங்களின் அதிர்வெண்ணை
உள்நின்று பீறிடெழும் இரத்தத்தை
உணரும்
ஆத்மாக்களை நாமென்றோவிழந்தோம்.

செவ்வாய்க்கிழமை

மானுடவான்மாவைப் பீடிக்கிற
எல்லாச் சாபங்களும் வலுவோடிருக்கின்றன.
தனிமனித இயலாமை
நெருப்பெரியும் தணலின் மீது கொதிக்கும்
கலசநீர் போலொலிக்கிறது.
கண்ணீரை விடவும் துயரமானவற்றை
விழிகளிற் காண்கிறேன்

புதன்கிழமை

நான் உங்களை நேசிக்கிறேனென்பதை
நீங்கள் உணர
நானென்ன செய்ய வேண்டும்?
கை குலுக்கல்...
தழுவிக்கொள்ளல்...
முத்தமிடல்...
இவ்வையெல்லாமும்...

நடைப்பிணங்களின் மரக்கட்டை
உதடுகளிலும்
விழிகளிலும்
எனது காலை இறந்தது.

வியாழக்கிழமை

இன்னொரு சீவனை அச்சுறுத்தும்
முகமென்னிடமுள்ளதென்றாள்.
என்னுணர்வுகளுக்குள் தோய்ந்தெழுந்த போது
என் மனமும் விகாரமென்றாள்.
கண்ணீர் விடக்கூடிய இதயத்தை
காலமென்னிடமிருந்தும் பறித்து விட்டதென்றாள்.

இருப்பினிற் பயம் கொண்டோமோ
இனியொரு கணத்திற் பிரிவோமென்றறிந்தோமோ
இதயங்களின் இலயம் உடைந்தது.
கணங்களின் வெப்பத்தில்
வார்த்தைகள் ஆவியாகிச் சூல் கொண்டன.
வாழ்வென்னும் முரண்பாட்டிடைவெளியுள்ளவை
மழையாய்ப்பொழிந்தன.

அந்நாளில் அவளும் நீங்கினாள்.

வெள்ளிக்கிழமை

"இதயம் எப்படியெல்லாம் சுடரக்கூடும்?"
முன்னொரு காலம் கனவு கண்டிருந்தேன்.
இன்றோ
மூளை கொதித்து
மனம் கோடைகாலமானது.

சனிக்கிழமை

ஊடுபத்தப்போகுமொரு விளக்குப்போல் நடுங்கும்
இதயத்தைப் பற்றியபடி
நான் மண்டியிட்டேன் வாழ்வின் முன்.
மானுடம் நடந்த பாதைகள் தோறும்
இழுபட்டது போலவும்
எல்லா வகையான அச்சங்களையும் மரணங்களையும்
தரிசித்தது போலவும் உணர்ந்தேன்.

ஞாயிற்றுக்கிழமை

ஆதரவற்ற விழிகளோடு
யாவற்றிலும் தனியனாக
காலத்தின் துயரங்களுக்கும்
மௌனச்சாட்சியாக
இருக்கப்பணிக்கப்பட்டேன்.

ஆவணி 2007