பின்பற்றுபவர்கள்

11 டிசம்பர், 2007

விக்னேஸ்வரனின் கட்டுரையொன்று

விக்கி என அழைக்கப்படும் விக்னேஸ்வரன் குறிப்பிடத்தகுந்த சமூக அரசியல் விமர்சகர். முன்பு சரிநிகர் இதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியுள்ளார். தற்பொழுது கொழும்பில் வசித்து வருகிறார். இவர் காலச்சுவட்டில் எழுதிய கட்டுரையை இங்கு இணைத்துள்ளேன்

தமிழ்ச்செல்வன் படுகொலை
- சமாதான முயற்சிகளுக்கெதிரான தாக்குதல்


தனிநபர்களைக் கொல்வதன் மூலமாக ஒரு நாட்டின் அல்லது ஒரு தேசத்தின் அரசியலை மாற்றி அமைத்துவிட முடியுமா? அந்த நாட்டு மக்களின் அல்லது தேசத்தின் உரிமைகட்கான போராட்டத்தை நசுக்கிவிட முடியுமா? ஒடுக்கப்படுகின்ற மக்களின் அரசியலை முன்வைத்துப் போராடுகின்ற ஒரு அரசியல் இயக்கம் தன்னளவில் எவ்வளவுதான் அரசியல் தவறுகளை மேற்கொண்டாலும், அந்தத் தவறுகட்காக அது ஒடுக்குகின்ற எதிரியின் கையில்சிக்கி அழிவதை அந்த நாட்டு மக்களோ அல்லது தேசமோ ஏற்றுக்கொள்ளுமா?

இவை ஒன்றும் புதிய கேள்விகள் அல்ல. ஈழத்து அரசியற் போராட்ட வரலாற்றில் பலமுறை திரும்பத் திரும்பக் கேட்கப்பட்டு விவாதிக்கப்பட்ட கேள்விகள்தான். இவைமட்டுமல்ல, இவற்றுடன் கூடவே, அரசியற் தவறுகள், மக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற போராட்டங்களை நடாத்தும் ஒரு விடுதலை இயக்கத்தை அதன் நோக்கத்திலிருந்து விலகாமற் செல்ல அனுமதிக்குமா என்ற கேள்வியும் விவாதிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், இன்றுவரை இந்த விவாதங்கள் தொடர்கின்ற போதும் இலங்கையில் இவ்விவாதங்களின் உள்ளொளி உணரப்பட்டதாகத் தெரியவில்லை. வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பது இன்னமும் கணக்கெடுக்கப்படாததாகவே இருந்துவருகிறது.

விளைவு, நாட்டில் ஓடும் இரத்தக் களரியும் இளஞ்சந்ததியின் அழிவும் நாட்டின் அனைத்து வளங்களும் ஈடுசெய்ய முடியாத விதத்திலும் வேகத்திலும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்ட நிகழ்வு, ஒரு மாபெரும் வெற்றியாகத் தென்னிலங்கையின் பல பகுதிகளில் வெடி கொளுத்தி ஆரவாரமாகக் கொண்டாடப்பட்டது. இலங்கைத் தமிழ் மக்கள் வாழ்கின்ற அனைத்துப் பிரதேசங்களிலும் தமிழ்ச்செல்வனுக்காக அஞ்சலிக் கூட்டங்கள் நடை பெற்றுக்கொண்டிருக்கையில் தெற்கில் இவ்வாறு நடந்தது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பாரிய பிளவுக்கு உதாரணமான மிகக்கிட்டிய சம்பவமாகும். இது இலங்கையில் சமாதானத்தைக் காண்பதற்கான காலம் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லை என்பதைத் துல்லியமாக வெளிப்படுத்தியிருக்கிறது. இதன் அர்த்தம் தமிழ்ச்செல்வன் உயிரோடு இருந்திருந்தால் விரைவில் சமாதானத்தைக் கொண்டுவந்து விடுவார் என்பதல்ல, மாறாக, தெற்கு இன்னமும் சமாதானத்தை அவசியமான ஒன்றாகக் கருதத் தொடங்கவில்லை என்பதை இச்சம்பவம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

அரச மற்றும் இராணுவத் தரப்பினைப் பொறுத்தவரை இந்தக் கொலை, புலிகள் தரப்புக்கு விழுந்த மாபெரும் அடி என்ற நம்பிக்கையே நிலவுகிறது. உண்மையில் அப்படி அவர்கள் நம்புகிறார்கள் என்பதைவிட அப்படி ஒரு படத்தை அவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் வெளிப்படுத்த விரும்புகிறார்கள் என்பதே சரியானது. கிளிநொச்சியில் நடாத்தப்பட்ட விமானக் குண்டுவீச்சொன்றின்போது கொல்லப்பட்ட தமிழ்ச்செல்வனின் இந்தக் கொலை தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தம்பியும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச 'இது தொடரும். புலிகளின் தலைவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று எமக்குத் தெரியும். அவர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொருவராக இப்படி இல்லாமற்செய்வோம், என்று முழங்கியிருந்தார். ஆனால் உண்மையில் அவருக்குத் தெரியும், தமிழ்ச்செல்வனின் கொலை 'காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதை'யாக நடந்த ஒரு சம்பவம் என்று. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார் என்ற செய்தியைப் புலிகள் அறிவிக்கும்வரை இலங்கை இராணுவத்தினருக்குக் கொல்லப்பட்டவர்கள் யார் என்றே தெரிந்திருக்கவில்லை.

வன்னிக்கான கட்டளைத்தளபதி 'எமக்குத் தாக்குதல் நடாத்தப்பட்ட இடத்தில் தமிழ்ச்செல்வன் இருந்தார் என்று அப்போது தெரிந்திருக்கவில்லை' எனத் தெரிவித்திருந்தார். ஆனால் அரசாங்கப் பேச்சாளர் ஹெகலிய றம்புக்வலவிற்குப் பாதுகாப்புச் செயலாளர் போலவே, அப்படிச்சொல்வது கௌரவக் குறைவாக இருந்திருக்கிறது.

தமது படையினர் மிகவும் நுணுக்கமான உளவு ஆற்றல்களைக் கொண்டிருக்கிறார்கள் என்று காட்டவும் அனுராதபுரம் விமானப்படைத்தளத் தாக்குதலின்போது ஏற்பட்ட இழப்புக்களால் உருவாகியிருந்த சிங்கள மக்கள் மத்தியிலான உணர்வலைகளுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும் என்பதற்காகவும் அவர் தாம் தெரிந்துகொண்டே குண்டை வீசியதாக அறிவித்தார். அரசாங்கத் தகவல் அறிவிப்பாளராக இருந்தபோதும், பெரும்பாலும் ஒரு யுத்தகளத் தளபதி போல வீறாப்புடன் பேசுவதற்காகத் தவறான தகவல்களைக்கூடத் தெரிவிக்கத் தயங்காத றம்புக்வலவின் இந்த அறிவிப்பு எதிர்பார்த்ததைவிட அரசுக்குச் சர்வதேச மட்டத்திலிருந்து பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.

சமாதானப் பேச்சுக்கான புலிகள் தரப்புப் பேச்சாளர் என்ற முறையில், தமிழ்ச்செல்வனைக் கொலை செய்தது சமாதான முயற்சிகளுக்கு எதிரான நடவடிக்கையாகும் என்ற கண்டனத்தை அரசு எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது. இதனால், பின்னர் தமக்குத் தகவல் கிடைத்தது உண்மை என்றும் ஆனால் அது புலிகளின் நடமாட்டம் பற்றிய தகவல் என்றும் அதில் தமிழ்ச்செல்வனும் இருக்கிறார் என்பது அவர் கொல்லப்பட்ட பின்னரே தெரியும் என்றும் இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்காரவூடக அறிவிக்க வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டது.

எது எப்படியிருப்பினும், இந்தக் கொலையை ஒட்டி நடந்த ஆரவாரங்கள் இலங்கை அரசாங்கத்தின் இன்றைய அரசியல் மற்றும் இராணுவத் தலைமைகளிடம் இருக்கும் இன்றைய நிலைமை பற்றிய பார்வையானது மிகத் தெளிவாக ஒரு அரசியற் தீர்வை நோக்கியதல்ல, யுத்தத்தில் புலிகளை முழுமையாகத் தோற்கடிப்பதே என்பதைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. அதிலும் புலிகளை இராணுவரீதியாக அழிக்க எந்த வழிமுறைகளையும் அவர்கள் கையாளத் தயார் என்பதை வெளிப்படுத்துகின்றன. இந்த வழிமுறைகளில் ஒன்றாக, புலிகளின் முக்கியத் தலைவர்களைத் தேடிப்பிடித்துக் கொன்றுவிடுவதும் அடங்குகிறது. ஆனால், புலிகளை தமிழ்த்தரப்பினைப் பிரதிநிதித்துவம் செய்யும் அணியாக அங்கீகரித்துக்கொண்டு அதைச் செய்ய முடியாது என்பதால் - அல்லது அப்படிச் செய்வது நியாயப்படுத்தப்பட முடியாத ஒன்று என்பதால் - புலிகளை வெறும் பயங்கரவாத அணியென்றும் பிரபாகரனைத் தலைமைப் பயங்கரவாதி என்றும் அரசுத் தரப்பு இப்போது தீவிரமாகப் பேசிவருகிறது. இந்தக் கருத்தை வலியுறுத்தும் விதத்தில் ஆங்கில, சிங்களப் பத்திரிகைகள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.

அண்மையில், பயங்கரவாதம் மற்றும் இராணுவத் துறை தொடர்பான ஆய்வு நிறுவனமொன்றை (மிஸீstவீtutமீ யீஷீக்ஷீ ஞிமீயீமீஸீநீமீ ணீஸீபீ ஷிtக்ஷீணீtமீரீவீநீ ஷிtuபீவீமீs) சிங்கப்பூரில் நடாத்திவரும் இலங்கையைச் சேர்ந்த ஆய்வாளர் கலாநிதி றொகான் குணரத்னவின் பேட்டி ஒன்றை ஆங்கிலப் பத்திரிகை ஒன்று பிரசுரித்திருந்தது. அந்தப் பேட்டி தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பாகவும் இலங்கை அரசின் அண்மைக்கால வெற்றிகள் தொடர்பாகவும் அரசாங்கத்தின் முன் முயற்சி இன்மை பற்றியும் விமர்சித்திருந்தது. கிழக்கில் இலங்கைப் படையினர் புலிகள் வசமிருந்த நிலப்பிரதேசங்களைக் கைப்பற்றி, அவர்களை அங்கிருந்து விரட்டி விட்டிருப்பது குறித்தும் அதுகுறித்து இலங்கை அரசுத் தரப்பில் வெளியிடப்பட்டுவரும் மகிழ்ச்சியும் ஆரவாரமும் கிட்டத்தட்ட யுத்தம் முடிவுக்கே வந்துவிட்டது என்ற ரீதியில் போடும் கூப்பாடு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் தெரிவித்த பதில் இது:

"இது போன்ற ஒரு தேக்கம் நிறைந்த போரில் பிரதேசங்களையோ அல்லது படைகளையோ இழப்பது என்பது ஒன்றும் முக்கியமான விடயம் அல்ல. சர்வதேசரீதியாக நடைபெற்றுவரும் பல போராட்டங்களில் இதற்கு ஆதாரமான பல முன்னுதாரணங்கள் உள்ளன. மேலே ஒரு அரசியல் தலைமை இருந்து செயற்படும்வரை, பிரதேசங்கள் கைப்பற்றப்படுவதும் இழக்கப்படுவதும் திரும்பத் திரும்ப எத்தனை தடவைகளும் நடக்கலாம். அதுபோலவே கீழ்மட்டத் துருப்புகள் கொல்லப்படுவதும் அவை விரைவாகவே புதியவர்களால் ஒப்பீட்டளவில் இலகுவாக நிரப்பப்படுவதும் நடக்கலாம். இவ்வாறான ஒரு யுத்தம் முடிவில்லாத யுத்தமாக நூற்றுக்கணக்கான வருடங்களுக்கும் தொடரலாம். இத்தகைய ஒரு யுத்தத்தில் வெல்வதற்கு இரு முனையிலான முயற்சி அவசியம். ஆனால், இங்கே இருமுனைகளுமே காணப்படவில்லை

முதலாவது முயற்சி, தீவு பூராவுமுள்ள தமிழர்களின் இதயங்களை வெல்வதை மையங்கொண்டதாக அமையவேண்டும். இது மிக முக்கியமான புலிகளின் பிரதேசத்தில் விடுதலைக்கான கலகங்களைத் தூண்டுகின்ற நடவடிக்கையாக அமையும். இப்போது தமிழ் மக்கள் கட்டாந்தரைக்கும் பாறைக்கும் இடையில் அகப்பட்டுக் கிடக்கிறார்கள். இந்த அரசியல்ரீதியிலான முயற்சியானது தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதை நோக்கமாகக்கொண்டிருப்பதுடன் புலிகளின் உயர்மட்டத் தலைமைகளை அழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுக்குப் பிறகு, பிரபாகரன் இயக்கத்தின் இறுக்கமான பிடியைத் தனது கையில் வைத்திருப்பதால், பிரபாகரன், அவரது மகன் சார்ள்ஸ் அன்ரனி, பொட்டு அம்மான், மற்றும் கே.பி. ஆகியோர் இன்று கொல்லப்பட்டால் நாளை யுத்தம் நின்றுவிடும். அரசாங்கத்திடம் அத்தகைய ஒரு மூலோபாயம் குறித்த முன்னெடுப்புக்கள் ஒன்றும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்புச் செயலாளர், படையணித் தலைமைகள் மற்றும் உளவு அமைப்புக்களை ஒரு அரசாங்கம் வைத்திருப்பது என்பது, பாரிய தந்திரோபாய மூளைகள் பொருத்தமான மூலோபாயங்களை வகுத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக அன்றி வேறெதற்குமாக அல்ல. ஆனால் அவர்கள் யாரும் ஒரு வெற்றி பெறக்கூடிய மூலோபாயத்தை உருவாக்குவதை நோக்காகக்கொண்டு பணியாற்றுவதாகத் தெரியவில்லை. (ஷிuஸீபீணீஹ் றீமீணீபீமீக்ஷீ, ளிநீtஷீதீமீக்ஷீ 7, 2007)

றொஹான் குணரத்ன ஈழத் தமிழ் மக்களுக்கு நன்கு பரிச்சயமான ஒரு இராணுவ ஆய்வாளர். அரசப் படைத்தரப்புத் தகவல்களை மட்டும் வைத்துக்கொண்டு, தமிழ் மக்களின் போராட்டம் பற்றிய தனது 'ஆய்வுகளினூடாக' ஆரூடம் கூறிவந்த ஒருவர் இவர். நூற்றாண்டுப் பழமை வாய்ந்த மற்றும் மேற்கத்தைய இராணுவக் கோட்பாடுகளை வைத்துக்கொண்டும் ஆயுதப் போராட்டங்களென்றாலே அவை பயங்கரவாதம்தான் என்று மட்டுமே புரிந்துவைத்துக்கொண்டும் நிலைமைகளை 'ஆய்வு' செய்து 90களில் பத்திரிகைகளில் கட்டுரைகளும் நூல்களும் எழுதிவந்தவர். அவரது மேற்படி கருத்துக்கூட திக்ஷீமீபீக்ஷீவீநீளீ tலீமீ நிக்ஷீமீணீt போன்றோரின் 17ஆம் நூற்றாண்டு இராணுவச் சிந்தனைகளைத் தாண்டவில்லை என்பதைக் காட்டுகின்றன. உலகிலுள்ள அனைத்து அடக்குமுறை அரச இராணுவமும் இதைத்தான் சொல்கிறது; செய்கிறது. இலங்கையின் றொகான் குணரத்ன போன்ற பேரினவாதப் புத்தி ஜீவிகளினதும் சிங்களப் பேரினவாத யுத்த வெறியர்களதும் சிந்தனை மட்டம் இதற்கு விதிவிலக்காகிவிட முடியுமா என்ன?

ஒரு போராட்ட அமைப்பின் தலைமை முக்கியமானதுதான் என்ற போதிலும் அந்த அமைப்பின் தோற்றத்திற்கான அரசியல் என்ன என்பதையும் அதன் முக்கியத்துவத்தையும் இவர்களால் ஒருபோதும் கண்டுகொள்ள முடியாது என்பதை இந்த வரிகள் தெளிவாக இனங்காட்டுகின்றன. றொஹான் குணரத்ன போன்ற இராணுவ நிபுணர்களும் அதே அரசியல் கோட்பாட்டைக் கொண்டவர்களுந்தான் இன்றைய அரசாங்கத்தின் கொள்கை வகுப்பாளர்கள் மட்டத்தில் இருக்கிறார்கள். ஒரே ஒரு வேறுபாடு இலங்கை அரசியல்வாதிகள் றொஹான் கூறுவதுபோல - அமெரிக்கப் பாணியில் - செயற்படாமல் இருப்பதுதான். ஆனால் இதிலுள்ள முக்கியமான அம்சம் என்னவென்றால் உண்மையில் அவர்கள் செயற்படாமல் இருக்கிறார்கள் என்பதைவிட அவர்களால் செயற்பட முடியாமல் இருக்கிறது என்பதுதான். தமிழ்ப் பிரதேசங்களில் புலிகளின் தலைமைகளை அழிப்பதற்கான முயற்சிகளில் அரசுப் படையினரால் நேரடியாக வெற்றி கரமாகச் செயற்பட முடியாததன் காரணமாகத்தான் அவர்கள் கருணா அணியினரினூடாக இத்தகைய செயல்களில் ஈடுபட்டனர்.

கருணா அணியின் நடவடிக்கை காரணமாகச் சில வெற்றிகளை அவர்களால் பெற முடிந்தபோதும் பெருமளவிலான சாதனைகள் எதனையும் அவர்களால் சாதிக்க முடியவில்லை. பதிலாக, கருணா அணிமூலம் வெற்றிகரமாகச் சாதிக்கப்பட்டதெல்லாம் கடத்தல், கப்பம் வாங்குதல் போன்ற சமூக விரோதச் செயல்களை வளர்த்துவிட்டதும் அதற்கு ஆதரவான அரசுத் தரப்பு அணியொன்றை உருவாக்கிவிட்டதுந்தான். இதன் விளைவு அரசாங்கத்தை அரசியல்ரீதியாக சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கிவிட்டிருக்கிறது. கருணாவைப் பயன்படுத்தித் தமக்கு வேண்டியவற்றைச் சாதித்துக்கொண்ட அரசு சார்புச் சக்திகளுக்குக் கருணா அணியினால் ஏற்பட்ட அவப்பெயரைத் துடைக்க அவரை நாட்டைவிட்டு வெளியேற்றுவது தவிர்க்க முடியா மற்போய்விட்டது. கருணாவுக் கெதிராகக் கருணாவின் துணையாளாக இயங்கிய பிள்ளையானை வளர்த்துவிட்டுக் கருணாவை நாட்டில் இருக்க முடியாத நிலைக்குத் தள்ளியதுடன் சாதாரண வெளிநாட்டு ஏஜென்சி வியாபாரம் செய்யும் நபர்கள்செய்வதுபோல அரசாங்க அமைச்சே தலைமாற்றிய கள்ளக் கடவுச்சீட்டில் வி.ஐ.பி ஒருவரது பெயரில் (கோகுல குணவர்த்தன) விசா எடுத்து இலண்டனுக்கு அனுப்பியிருக்கிறது. இந்தக் குடியகல்வுச்சட்ட மீறலுக்குப் பொறுப்பானவர்கள் யார் என்பது திட்டமிட்டு மறைக்கப்பட்ட போதும் இலண்டனில் கருணா கைதானதன் காரணமாகப் பலத்த அவமானத்தை அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டதுடன் சர்வதேச நாடுகளின நம்பகத்தன்மையையும் இழந்துள்ளது.

தமிழ்ச்செல்வனது கொலை, யுத்தமுனையில் புலிகளைப் பலவீனமடையச் செய்துவிடும் என்னும் நம்பிக்கை அரசுக்கு இருக்கும் என்று யாரும் நம்பத் தேவையில்லை. அப்படி நம்பியிருந்தாலும் அதற்குப் பின் முகமாலைப்பகுதியில் நடந்த யுத்தத்தில் அரசுப்படைகள் எதிர்கொண்ட பெரும் அழிவுகள் அந்த நம்பிக்கையைத் தகர்த்திருக்கும். உண்மையில் தமிழ்ச்செல்வனது கொலை தொடர்பாக இலங்கை அரசுத் தரப்பில் வெளியிடப்பட்ட ஆரவாரமான மகிழ்ச்சி எல்லாம் மிகக் குறுகிய அரசியல் லாபம் கருதிய ஆரவாரங்கள்தான். ஆனால் இதன் மூலம் புலிகளுடன் பேச்சுவார்த்தை மூலமாகச் சமாதானத்தை அடைய நாம் ஒருபோதும் விரும்பவில்லை. புலிகளை அழிப்பதே சமாதானத்திற்கான எமது வழி என்ற சிங்கள மக்களுக்கு வலியுறுத்தித் தெரிவித்திருக்கிறது.

தமிழ்ச்செல்வன் தமிழீழ விடுதலைப்புலிகளது அரசியற் பிரிவின் தலைவர் மடடுமே. அதன் அரசியலுக்கான தலைவர் அல்ல. அந்த அமைப்பின் அரசியலைத் தீர்மானிக்கும் பொறுப்பைக் காலம் சென்ற முன்னாள் தலைவர் அன்ரன் பாலசிங்கம்கூடக்கொண்டிருக்கவில்லை. உண்மையில் அந்த அரசியலின் பிரச்சாரம் மற்றும் அதற்கான வேலைத் திட்டங்கனை நடைமுறைப்படுத்துபவர்களாகவே அவர்கள் இருந்து வந்துள்ளனர். அந்த வகையில் பாலசிங்கமும் சரி தமிழ்ச்செல்வனும் சரி இலங்கை அரசுடனும் சர்வதேச அணியுடனும் புலிகளின் சார்பாகக் கருத்துரைக்கவும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் போதுமான அதிகாரங்களைக் கொண்டிருந்தார்கள். குறைந்தபட்சம் இலங்கை அரசின் சார்பில் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட உயர்மட்ட அமைச்சர்களைவிட அவர்கள் அதிகளவுக்கு முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்டிருந்ததுடன் பிரச்சினை தொடர்பான தமது தரப்பு நியாயங்களை மிகவும் தெளிவாகத் தெரிந்தும்வைத்திருந்தார்கள்.

இலங்கை அரசுடனான அண்மைக்காலப் பேச்சுக்களின்போது தமிழ்ச்செல்வன் தமது பக்கம் பற்றி மிகத் தெளிவாகவும் நிதானமாகவும் தனது விவாதத்தை முன்வைக்கக் கூடியளவுக்குத் தன்னை வளர்த்துக்கொண்டிருந்தார். இலங்கை அரசுத் தரப்பினரைப் போல நிதானமிழந்து செயற்பட்டுப் பேச்சுவார்த்தை மேடையைப் பயனற்ற ஒன்றாக்கிவிடாமல் சிறப்பான தொழிற் தேர்ச்சியுடன் அவர் செயற்பட்டிருந்தார். தவிரவும் அவர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இயங்கிவரும் ஒரு அங்கீகரிக்கப்படாத அரசின் கீழ் இயங்கும் பல்வேறு நிறுவனங்களை உருவாக்கியும் செயற்படுத்தியும் வந்துள்ளார். தனிப்பட்ட முறையில் அந்த அரசச் சார்பு சிவில் நிர்வாக அமைப்பைக் கட்டி எழுப்புவதில் மிகத் திறமையுடன் செயற்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. சுகாதாரம், கல்வி, கலாச்சாரம், விளையாட்டு, வனவளம் போன்ற பல்வேறு துறைகளை அவர் தலைமையேற்றுச் செயற்படுத்தி வந்துள்ளதாகப் புலிகள் தெரிவிக்கின்றனர். புலிகளின் அரசியற் கருத்துக்களுடனோ அல்லது அவர்களது போராட்ட வழிமுறைகளுடனோ ஒருவர் உடன்படாமல் இருக்கலாம். ஆனால் அவர்களது நிர்வாகத் திறமையைக் குறைத்து மதிப்பிட முடியாது என்று சுனாமி அனர்த்த நிவாரணப் பணியின்போது பல வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்கள் பாராட்டியிருந்தன. தமிழ்ச்செல்வனின் பங்களிப்பு இந்த நிர்வாக முகாமைத்துவ வளர்ச்சியில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது எனப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்ச்செல்வனது இறுதி ஊர்வல நிகழ்வுகள் அவருக்கு இருந்த செல்வாக்கைத் தெளிவாக வெளிப்படுத்தி இருந்தன. அவர் இறந்ததும் புதிய தலைவர் நியமிக்கப்பட்டதும் நிர்வாகம் தடங்களின்றித் தொடர்வதும் அந்த அங்கீகரிக்கப்படாத புலிகளின் அரச நிர்வாகத் துறையின் வெற்றி என்பதில் ஐயமில்லை.

தனிநபர்கள் கொல்லப்படுவதால் அரசியல் அழிவதில்லை; அரசும் அழிவதில்லை என்ற பழைய உண்மையை இச்சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதனை ஒட்டி ஏற்பட்ட நிகழ்வுகள் இருபக்க இராணுவச் சமநிலையில் எத்தகைய பாரிய மாற்றத்தையும் எற்படுத்திவிடவில்லை. ஆனால், அவரது கொலை மூலமாக ஏற்பட்டிருக்கும் இலங்கை அரசுமீதான நம்பிக்கை சிங்கள மக்கள் மத்தியில் ஓரளவு அதிகரித்திருப்பதை அறிய முடிகிறது. (ஆயினும் இந்த நம்பிக்கை வெறுமனே யுத்தம் விரைவில் முடியப்போகிறது என்ற மாதிரியான ஒரு குறுகிய கால நம்பிக்கையே என்பது வேறு விடயம். ஆயினும் இப்போது அரசுக்குத் தன்னைத் தானே தேடிக்கொண்ட அரசியல் நெருக்கடிகளிலிருந்து பாதுகாக்க அது தேவையாக உள்ளது-குறைந்தபட்சம் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் வரைக்குமாவது இது அவசியம்) தமிழ் மக்கள் மத்தியிலோ இது மாபெரும் உணர்வலைகளை ஏற்படுத்திவிட்டுள்ளது. சமாதானத்தை விரும்புகிற ஒவ்வொருவரும் இந்த நடவடிக்கை சமாதான முயற்சியைப் பலவீனப்படுத்தும் ஒன்றாகவே உணர்கின்றனர். அது மட்டுமல்லாமல் அந்த அரசு தமிழ் மக்களையோ அவர்களது அரசியலையோயற்றி எந்த அக்கறையுமற்றது என்னும் கருத்து மேலும் வலுப்பெற்றிருக்கிறது.

இலங்கை அரசாங்கம் யுத்தம் மூலம் புலிகளை முற்றாக ஒழித்து விடமுடியும் என்று கருதுகிறது. புலிகளை ஒழிப்பதற்கு மட்டுமே இந்த அரசுக்குத் தாம் ஆதரவளிப்போம் என்று ஜே.வி.பி கூறுகிறது. யுத்தமே இந்த அரசின் இனப் பிரச்சினைக்கான அரசியற் தீர்வாகச் சொல்லாமற் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்ச்செல்வன் அரசைப் பொறுத்தவரை புலிகளின் முக்கியத் தலைவர்களுள் ஒருவர் என்பதைத் தவிர வேறு முக்கியத்துவம் எதுவும் அற்றவர். எனவே அவரது கொலை ஒரு போர்க்கள வெற்றிமட்டுமே. ஆனால், தமிழ் மக்களுக்கோ தமிழ்ச்செல்வன் சமாதானத்திற்கான ஒரு குறியீடு. எனவே அக்கொலை சமாதான முயற்சிகட்கெதிரான ஒரு தாக்குதல்.

புலிகள் இந்தச் செய்தியைப் புரிந்துகொண்டுள்ளார்கள் என்பதை அவர்கள் புலிகளின் பொலிஸ் பிரிவுத் தலைவரான நடேசன் அவர்களை அரசியற் பிரிவுத் தலைவராக உடனடியாக நியமித்ததன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

இலங்கையில் உடனடியாக இனிவரப்போகும் நாள்கள் சமாதானம் தொடர்பாக அவ்வளவுக்கு நம்பிக்கை தரும் நாள்களாக இருக்கும் என்பதற்கான அடையாளங்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை. விலைவாசி ஏறும் வேகத்தைப் பார்த்தால், முழு இலங்கையுமே போர்க்களமாக மாறும் அபாயம் நெருங்கிக்கொண்டிருப்பதாகவே கூற முடியும்.

நன்றி காலச்சுவடு

6 டிசம்பர், 2007

உங்களுடனும்.....

உங்களுடனும்
உங்களுள் ஒருத்தியுடனுமான என் காதல்...


காற்றில்லை,
கரையோர நாணல்கள் ஆடவில்லை,
ஆற்றின் கண்ணீர் மெல்லிய கோடாய் வழிகிறது.
நேசத்தை இழந்த குயிலோ நீள் துயரம் பாடுகிறது.
நேற்றுவரை என்னருகில் எத்தனை விழிகள்!
அவளும் இருந்தாள்.
அவளாக இருந்தாள்.
நேசத்தின் உச்சமோ...? நிர்மலமான நாட்களோ...?
சொற்களின் எல்லைக்குள் அடங்காத சுருதியோ...?
உயிர்ப்புறும் ஆத்மா என்றிருந்தேன்.
எத்தனை திங்கள் எத்தகை நிலவு
எங்கள் பாடலில் செம்மண் சுடரச் சேர்ந்து நடந்தோம்...
முற்றிலும் பொய்யோ?
மூச்செறிந்து நடக்கிறேன்.
ஈரமற்ற மணலில் புதையும் கால்கள்.
ஈரமற்ற மடிகளில் புதையுமோ முகம்.

பரவைக்கடல் மீது
படகேறிப் பாடியதோர் நாள்...
இரவுகளிலிருந்து வாதம் புரிந்தது பலநாள்...
ஆழ்தியானப் பயில்வுகளில் எத்தனை நாள்...
கைபற்றிக் கண்ணீர் துடைத்து,
முடிகோதி முத்தமிட்டு,
பொய்யன்றிப் புரிதலின் ஆழமேயென்றிருந்தேன்.
ஐயோ!
அனலெரி நெஞ்சும் ஆற்றொணாத் துயரமும்
புனல்வற்றிப் போயழும் ஆற்றின் கரையில் ஆறுமோ?

பொய்மையின் முகந்தெரியப் போயழ மடியுமில்லை.

சொல்லே விளங்காத மனங்களில் சுருதியுறையுமோ?
வில்லேற்றி நாண் பூட்டி
விரையும் அம்புச் சொற்கள்
அவளும் ஏவினாள்.

நேசமொன்றை நெஞ்சிற் சுமந்ததற்காய்
நீயும் எய்யடி
சாகவே நான்.
அற்றகுளத்தில் அறும் பறவைக் கூட்டம்.
உற்றவிடத்தில் உறையும் விழிகள்.
விரையும் வழியில் நசியும் மனங்களை நானறிவேன்.
ஓருகால் ஆறியிருந்தால்

அழியா மனமொன்று அன்றேனும் இருக்குமென்றால்
அழவும் கூடும் நீங்கள்.

காதல் மறக்கலாம்! கனவுகள் துறக்கலாம்!!
வசையன்றி வேறறியாச் சமூகத்தின் வேர்கள் அறுமென்றால்.
வாழ்தலென்னும் இருப்புக்காய்
வெஞ்சமர் ஒன்றில் மெய்யுமாகுதியாகலாம்.
வேறெந்த வழியிலும் எழும்
விருட்சத்தின் பொய்நிழலில்
போய்ச்சுகம் கொள்ள நான் மாட்டேன்

போங்கள் நீங்கள்.

"நன்றி" உங்கள் சொற்களுக்கும்
நில்லாதலையும் அவள் விழிகளுக்கும்.
நானறியாப் பொழுதில் அவள் சுடர
அவளறியாப் பொழுதில் நான் தளர
இருளிலும் சுடர்ந்த அவள் விழிகள் சாரமிழந்தன.
காலமதன் துயரப்படிவுகளிலொன்றாய்க் கணக்கிடவோ?
நீள் வழியெங்கும் விழிபெருக நான் போன நாட்கள் போயின.

நெஞ்செங்கும் புண்ணென்றும்
நீ மயிலிறகு கொணர்வாயென்றும்
கண்மூடிக் கனவு காணும் முட்டாள்க் கவி,
மென்நெஞ்சு
மன்றாடும் புழுவென்றிருப்பாயோ?
நானறியேன்.
நேசத்தின் முன்னால்
"நெஞ்சத்து மானம்" எதற்கென்று நீயொருகால் உணர்வாய்.
மென்மையும் வன்மையும்
மேன்மைகொள் ஆத்மாவுமாய்
நான் நிமிர்கையில் நீயும் உணர்வாய்.
ஆக,
நான் விடைபெற விரும்புகிறேன் நண்பர்களே!
இறுதிப்பிரிதலுக்கு முத்தங்களோ கைலாகுகளோ வார்த்தைகளோ
தேவையில்லை
கடந்த கால அனுபவங்களே போதும்!

மழையின் நாள்

பூமி ஏங்கித் தவித்துக் கனன்று கொண்டிருந்தது.

வேனிலிலும் மரங்கள்
துளிர்களும் இலைகளுமாய் மதமதர்த்திருந்தன.
ஆழத்து நீரில் வேரோடிய திமிரில் நின்றன.

மண் தன் இறுதி நீரையும் இழந்தது.
ஆத்மாவிலும் துயரம் மிகுகிறது.
அனலைக் காற்று அள்ளி வருகிறது.
முந்திய வருகையில்
அவள் பதித்த ஈரமுத்தத்தடங்கள்
புழுதியாய் உரிந்து பறந்து போயின.
ஆடையவிழ்ந்து வார்த்தைகளற்ற துயரத்தில்
மண் காத்திருந்தது.

வானம் இருளில் அழிய
மரங்கள் எதிர்பாராதவொரு நாளில்
ஆர்ப்பரித்து ஆர்வமுடன்
ஆழியின் நீரெலாம் அள்ளிவந்தாள்.

துளிகள்
காதலாகிக் கண்ணீராக
மோகமாகி முத்தமாகி
ஓவென்ற ஒலியாகி மோதினாள்.

வெள்ளி நீளக்கோடுகளில் ஒளி முறிந்தது.
விசும்பதிர்ந்தது.
மண் தளர்ந்தது.
மரங்கள் விறைத்து நின்றன.

வைகாசி - 1993

நிறைவேறாத காதல்

தனிமை
துயர்தரும்
எனத்தெரிந்திருந்தும்
நீரற்ற ஆற்றின் கரையில் நான்.
வானம் சிவப்பாய் எரிந்தது
மந்தைகளும் இடையனும் மறைந்தனர்.
ஒரு தொலைவுக்கு வெற்று வீதி...
ஒரு நொடியில் இருள்...
எல்லாச் சமாதானங்களின் பின்பும்
பாறை வெடிப்பொன்றினூடு சீறிப்பாயும்
ஊற்று நீர் போல உன் நினைவு.
இக்காதலும் இப்புனிதமும்
இப்படியே வாழட்டும்.

நீயோ நானோ
ஒருவரை ஒருவர் நோக்கி வராதிருப்போம்.
மெளன அழுகை
ஆற்றை நிறைக்கட்டும்.

பங்குனி - 1991