பின்பற்றுபவர்கள்

21 ஆகஸ்ட், 2008

காதல்

காதல்

கடலோங்கிக் கரைதழுவப் பார்த்து
உடலுள்ளிருந்து தவித்தெழுந்தாத்மா
மெய்யிறங்கியுன் விழி தேடி வருகிறது.
பொய்யெது மெய்யெது
போதிமாதவச் சிரிப்பெதுவென்றறியா
மென்மயிர்ப் பூனைபோலேங்கி நடந்தவென்னிதயம்
உன்மார்பிலணைகிறது.
முலைதழுவி முன்னெற்றி மயிரொதுக்கி
முத்தமிட்டுன் நறுவுதட்டுச் சாரலையும் தாவென்று தவித்து
ஆண்மையும் பெண்மையும் பெயரழியும்
காலத்துள் போய்வரவாவென்று கேட்பேன்.
கேசம் கலைந்து கிடந்தவுன் கழுத்தில் புதைந்து புதைந்து
நீலம் படர்ந்த நெடுவான முடிவுக்கும் போவேன்.

மெய்யும் காதலும் ஒன்றென்றுயிர் சுடர்கிறது.

ஆடி - 1997

விசாரம்

விசாரம்

வேர்களில் பரவி
இலைகள் செறிந்து
நிலவுக்கு நிமிர்ந்த
மரங்களின் கீழே நகர்ந்தது அருவி.
இருண்ட காட்டின் நறுமணமும் கமழ்ந்தது.

நீரலையைத் தழுவும் பாறையை மருவிக்கிடக்கையில்
வாவென இழுத்துத் தேகம் ஆட்டும்
அருவியைக் கேட்டேன்:
"மானிட ஆத்மாக்களின் துயரம் ஊற்றெடுப்பது எங்கிருந்து ...?
கனவின் வண்ணங்களுடன் வரும் இதய ஆழத்தின் குமிழிகள்
பூமியில் உடைவதேன்...?
காலத்தின் மெளனத்தில் புதைந்திருப்பது என்ன...?"

அருவி போய்க் கொண்டிருந்தது.

மார்கழி - 1994

பிரிதல்

பிரிதல்


இரவுக் காற்றில் மனித முறையீட்டின் பாங்கொலி.
பாறைகளைத் தழுவும் ஆற்றின் குரல்.
ஓயாது சலியாது
பள்ளத்தாக்கின் பாறைகளும் ஆறுகளும் செய்யுமோ காதல்?

மலைகளைப் படலமிட்ட புல்வெளியில்
விழுகிறது என்னிதயம்.

உன் விழிகளுக்கு ஒளியென்னும் அர்த்தம்
இல்லையென்றுணராமல் போனேனே!

மலைகளை மோதிக் குளிரில் உறையுமோ காதல்?

நாளை நான் போய் விடுவேன்
தடுமாற்றம் நிறைந்தது இவ்விரவு - உனக்கு.

இருளான இதயங்களுக்குள் நீ
சிறுசுட்டி - நின்றெரியும் அதன் சுடராகவாவது ஆகியிருக்கலாம்

நீயும் என்னை மறந்தாய்.

சமரசங்களுக்கும் ஒப்பீடுகளுக்கும் அப்பாற்பட்டதென் ஆத்மா.

முன்னறையில் இருந்து
பிரியும் என் முதுகைப் பார்த்திரு!

புரட்டாதி - 1993