பின்பற்றுபவர்கள்

10 பிப்ரவரி, 2009


சிங்களதேசமே!

காலத்திடலில் கிழிந்து கந்தலான
வடக்கை,
கிழக்கை,
பார்க்காதே.. கேட்காதே..

பாட முடியாப் பறவைகளைக்
காலை வைக்க அஞ்சிக்கடந்துபோன
கூழக்கடாக்களைக்
கருகிப்போன கார்த்திகையைக்
கட்டுடைந்த குளத்தைக்
கனரகப் போர்வெறியில் கடைசேறான வயலைப்பார்க்காதே..

உன்மத்தமானவர் உயிர் விடும் வெளியைப்பார்க்காதே..

முப்பது தலைமுறைகள் வாழ்ந்த முற்றத்தைப்
பற்றுக்கோடென்றிருந்த ஒரேயொரு மகளைக்
கொழுத்திய கொத்தணிக் குண்டைக்
குருதியொழுகவொழுகக்
கொண்டோடியவென் குஞ்சைப் பார்க்காதே..


அண்டங்கள் அதறப்
பிண்டங்கள் சிதறிப் பேயறைந்த கிறவல் வீதியை
உருக்குலைந்து போன வீட்டை
உள்ளிருந்து மணக்கும் பிணத்தை
கரு சிதைந்த தாயை
உருத்தெரியாதழிந்த என் பாட்டனைப்
பார்த்தழும் என் பாட்டியைப்
பாதுகாக்கமுடியாப்பதுங்குகுழியைப்
பார்க்க முடியாதுறைந்த விழியை
அதனுள்ளுறைந்த மொழியை கேட்காதே..

உடைக்கப்பட்ட பேனாவையும்
முடக்கப்பட்ட வாயையும்
அடைக்கப்பட்ட காதையும்
உன்காலின் கீழோடும் குருதியையும் பார்க்காதே..
கைநிறையக்கூலி வரக் கையசைத்து
விடை கொடுத்தவுன் மகனை,
வராது நின்ற மடலை,
உடலைக்கேட்காதே..
உயர்ந்து செல்லும் விலையை
தளர்ந்துசெல்லுமுன் வாழ்வைப் பார்க்காதே..

பார் உங்கள் சிங்கக்கொடியை...
கேள் உங்கள் தேசிய கீதத்தை…

சிங்கள தேசமே!

தீயனவற்றைப்பார்க்காதே
தீயனவற்றைக்கேட்காதே
தீயனவற்றை...........

தேவ அபிரா
09-02-2009