பின்பற்றுபவர்கள்

7 ஜனவரி, 2013

மாவீரர்களுக்குச் செய்யும் மரியாதை ...

அண்மையில் யாழ்பாணம் பல்கலைக்கழகத்தில் மாவீரர் வாரத்தை பல்கலைக்கழக மாணவர்கள் நினைவு கூருவதற்குச் செய்த முயற்சிகளுக்கு இலங்கை இராணுவமும் பொலீசும் செய்த தடைகளையும் வில்லங்கங்களையும் எதிர்த்தும் போரில் மரணத்தவர்களை நினைவு கூரும் உரிமையை வலியுறுத்தியும் யாழப்பாணப்பல்கலைக்கழக மாணவர்கள் செய்த அமைதியான எதிர்ப்புப்போராட்டம் இலங்கை இராணுவத்தாலும் காவல் துறையாலும் மோசமான முறையில் அடக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி இந்தப்போராட்டங்களில் முன்ணணியில் நின்ற நான்கு மாணவர்களை பொய்க்குற்றச்சாட்டுகளைச் சுமத்தி கைது செய்து தடுத்து வைத்திருக்கிறது. இவர்களில் ஒருவர்மட்டும் பிணையில் தற்போது விடுவிக்கப்பட்டிருக்கிறார். ஏனையவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பயங்கரவாத முலாம் பூசப்பட்டிருக்கிறது.
யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கை அடிப்படையில் ஒரு சனநாயகக்கோரிக்கை அதில் இனவாத அல்லது பயங்கரவாத முலாம்கள் எதுவுமில்லை.
கடந்த மூன்று தலைமுறைகளாக நிகழ்ந்த தமிழீழவிடுதலைப்போராடத்தில் மக்களின் அல்லது நிலத்தின் விடுதலைக்காக இதய சுத்தியுடன் தம்மை அர்ப்பணித்துப்போராடி மரணமடைந்த அனைவரும் மாவீரர்களே!
அரசியற்தவறுகள் சனநாயக மறுப்புகள் உட்கட்சி மற்றும் கட்சிக்கு வெளியேயான கொலைகள் போன்ற பல்வேறு சிக்கல்களைக் கடந்து பயணித்த தமிழீழவிடுதலைப்போராட்டத்தின் ஒரு பரிமாணம் முடிவடைந்த நிலையில் மரணித்தவர்களை நினைவுகூருவது உண்மையிலும் அவசியமானதாகும்.சமூக உளவியற் பார்வையில் இந்த நினைவு கூரல் கடந்த காலம் பற்றிய மீள்பார்வையைக் கொண்டுவரும். இந்த நினவு கூரல் இழப்புக்களுக்கு இருக்கவேண்டிய பெறுமதியையும் இல்லாமல் போன பெறுமதியையும் நினைவு படுத்தும்.
தனிமனிதர்களைப் பொறுத்தவரை அவர்களின் இதயத்தில் நிரம்பியிருக்கும் துயரத்தையும் கண்ணீரையும் இறக்கிவைக்கும் நாளாக இருக்கும். இந்த வகையில் மரணித்தவர்களை நினைவு கூருதல் என்பது அடிப்படை மனித உரிமையாகி விடுகிறது. ஆனால் அரசியற்பார்வையில் இந்த நினைவுகூரல் ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு குறியீடாகவும் இருக்கிறது. இந்த இடத்தில் தான் இலங்கை அரசு அச்சமடைகிறது.
உண்மையிலும் போராட்டத்தில் மரணமடைந்த அனைத்துப் போராளிகளையும் நினைவு கூரும் நாளாக அந்த நாளைப் பிரகடனப்படுத்துவதுடன் அதனை நினைவு கூரும் உரிமையை சட்ட பூர்வமாக அங்கீகரிக்கக் கோரவும் முடியும். ஜேவிபியால் கார்த்திகை வீரர்களை நினைவு கூரமுடியும் என்றால் தமிழர்கள் மாவீரர்களை நினைவுகூருவதற்குத் தடைகள் விதிப்பது சனநாயகமில்லை.

இந்த நினைவுகூரலை அனுமதிப்பதும் மதிப்பதும் ஒரு இனத்தின் உணர்வுகளை மதிப்பதாகும். ஆனால் சிறுபான்மை இனங்களின் உணர்வுகளை மதிப்பது என்பது இலங்கையின் பேரினவாத ஆளும்வர்க்கத்தின் இரத்தத்தில் இல்லாத ஒன்று.

வழமை போலவே பயங்கரவாதம் புலிகள் என்ற பதங்களை பாவித்து மாணவர்களின் கோரிக்கை அமுக்கப்பட முயற்சிகள் செய்யப்படுகின்றன. வடக்கு கிழக்கில் நீடித்திருக்கும் இராணுவப் பிரசன்னம் நிலப்பறிப்புகள் சனநாயக மறுப்புகள் ஊடக அடக்குமுறை போன்றவை காரணமாகத் தமிழ் மக்கள் அடைகிற வெறுப்புகளும் அதிருப்திகளும் முள்ளிவாய்காலுக்கு பிறகும் கூட காலத்திற்கு காலம் வெளிப்பட்டே வந்திருக்கின்றன. அவற்றுக்கான சரியான அரசியல் வழிப்படுத்தல்கள் இல்லாமையினாலும் மோசமான இராணுவ அச்சுறுத்தல் காரணமாகவும் அவை அடங்கிப்போய்விடுகின்றன.இந்தப்போராட்டம் சற்றே மேற்கிளம்பியமைக்கு காரணம் இது பல்கலைக்கழகச் சூழ்நிலையில் நிகழ்ந்தமையே காரணமாகும். தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் மட்டுமல்ல தென்னிலங்கையிலும் பல்கலைக்கழகங்கள் போராட மையங்களாக இருந்திருக்கின்றன. இலங்கையைப்பொறுத்தவரை பல்கலைக்கழகங்கள் சமூகத்தின் கொதிநிலையை வெளிகாட்டும் வெப்பமானிகளாக இருந்திருக்கின்றன. இளைஞர்களே சமுகத்திற்கும் அதிகாரத்துக்கும் இடையிலான முரண்பாட்டில் அதிருப்திக்கு போராட்டவடிவம் கொடுப்பவர்களாக அதனை வெளிப்படுத்துவர்களாக இருப்பதை உலகம் முழுவதும் நிகழும் போராட்டங்களில் அவதானிக்கிறோம். இது கொதிநிலையடைகிற ஒரு சமூகத்தின் உளவியற்பண்பாகிறது. இது ஏதோவொரு புறமிருந்து வருகிற தூண்டுதலால் ஏற்படுவதல்ல. பதிலாக இளைஞர்கள் வாழும் சமூகத்தில் நிகழும் ஒடுக்குமுறைகளினால் ஏற்படுவதாகும். இந்த வகையிலேயே தற்போது இலங்கையில் இருக்கிற சூழ்நிலையைப் புரிந்து கொள்ளவேண்டும்.

தமிழ் மக்களைப்பொறுத்தவரை தற்போது இரண்டு எதிரிகள் இருக்கிறார்கள். ஒன்று சிங்கள பௌத்த பேரினவாத மேலாதிக்க வாதிகள். மற்றயது சிற்றறிவும் மோசமான ஊழற்குணாம்சமும் கொண்ட ராஜபக்ஸ் குடும்பஅதிகாரம்.
முந்தய காலங்களிற் சிங்களப்பேரினவாதத்தின் நிகழ்ச்சிநிரலை நடைமுறைப்படுத்தும் சிங்கள அரசியல் வாதிகள் மட்டுமே இலங்கையில் இருந்தனர். ஆனால் தற்போது சிங்களப்பேரினவாதிகளின் நிகழ்ச்சி நிரலைப்பேண அவர்களை அனுமதிக்கிற அதே வேளை அவர்களைத் தங்களது அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளும்படி நிற்பந்திக்கும் ஒரு குடும்ப அதிகாரத்தை; நீண்டகால சர்வாதிகார ஆட்சியை நிலைநிறுத்தும் நோக்கத்தைக் கொண்ட குடும்ப அதிகாரத்தைக் காண்கிறோம்.
இந்த இடத்தில் இன்று இலங்கைப்பாராளுமன்றத்தின் சபாநாயகர் சமல் ராசபக்ஸ கூறிய ஒரு கூற்றை நினைவு கூருவது பொருத்தமாக விருக்கும்.

சபாநாயகர் என்ற வகையில், தாம் வழங்கும் தீர்ப்பு சரியாக இருந்தாலும் தவறாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். சரி எது பிழை எது என்பதல்ல முக்கியம் தாங்கள் சொல்வதை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்னும் தொனியே இங்கு தெரிகிறது. இது அப்பட்டமான சர்வாதிகாரம் என்பதைப் பெரும்பான்மைச் சமூகத்தின் பெரும்பான்மையானவர்களும் உணர நாட்கள் எடுக்கும். அதுவரைக்கும் சிங்கள மேலாதிக்க உணர்வைத் தூண்டிப் பெரும்பான்மை இனமக்களுக்கு புலிப்பூச்சாண்டி காட்டி அவர்களை மாயையுள் ஆழ்த்திவைத்திருக்கவே இந்த அதிகாரம் விரும்புகிறது. ஆனால் அதே பெரும்பான்மையின மேலாதிக்க வாதிகள் இந்த அதிகாரத்திற்கு எதிராக ஏதாவது செய்ய முயன்றால் அவர்களத் தாக்குவதற்க்கும் ராஜபக்ஸ் அதிகாரம் தயங்குவதில்லை. சிங்கள பௌத்த பேரினவாதத்தின் குறியீடுகளான பிக்குகளைக் கூட இந்த அதிகாரம் கடந்த காலங்களில் நேரடியாகத்தாக்கியிருப்பதைக் கண்டிருக்கிறோம்.
தென்னிலங்கையில் கடந்த அண்மைக்காலங்களில் சிங்கள மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்ட போதும் மாணவத் தலைவர்கள் மோசமான முறையில் தாக்கப்பட்டதையும் பொய்க்குற்றசாட்டுக்கள் சுமத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டதையும் கூடக்கண்டிருக்கிறோம்.

எனவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் மீதான இந்தத்தாக்குதலை “சிங்களவர்களின் தமிழர்கள் மீதான தாக்குதலாக” வியாக்கியானப்படுத்துவது எமது போராட்டத்தைக்குறுகிய வட்டத்துள் அமிழ்த்திவிடும்.
இந்தச்சந்தர்ப்பத்தில் சிங்கள மாணவர்கள் மத்தியில் இருந்து யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவான குரல்கள் எழுந்துள்ளன. அவற்றைச் சரியான முறையில் உள்வாங்கி இணைத்துக்கொள்ளவேண்டிய தேவை இருக்கிறது. தமிழ் மக்களுடைய பிரச்சனைகளைப் புலிகளின் பிரச்சனையாகக்குறுக்கி விட முனையும் இந்த அரசுக்கு சிங்கள மக்களின் மத்தியில் இருந்து தமிழ்மக்களின் பிரச்சனைகளுக்கு ஆதரவாக வருகிற எந்தக்குரலும் பிரச்சனையாகவே இருக்கும். இந்தக்குரல்கள் எதிர்காலத்தில் வளர்ந்து செல்லும் என்பதையும் அது அறியும்.

காலப்போக்கில் ராசபக்ஸ குடும்பஅதிகாரமும் தனது சொந்த மக்களுக்கு எதிராகத்திரும்பும் என்பதை இந்தக்குரலுக்குரியவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். மேலாதிக்க உணர்வை விடவும் சனநாயக உணர்வு வலிமையானதும் தேவையானதும் என்பதை இவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். இவர்களின் தொகை சிறிதாக இருக்கிற போதும் கடந்த மூன்று தசாப்தங்களில் இலங்கையுள் நிகழாத ஒன்றாகும். இதனைச் சகல தமிழ்த்தரப்புகளுக் வெளிப்படையாக வரவேற்பதுடன் அவர்கள் நடாத்தும் போராட்டங்களுக்கும் தமது பங்களிப்பையும் ஆதரவையும் தரவேண்டும்
நடைமுறை உலகின் இராச தந்திர மொழியில் பிரிவினை என்ற சொல்லைவிடவும் சனநாயகம் என்ற பதம் பலகதவுகளைத்திறக்கும் தந்திரோபாய மொழியாக இருக்கிறது.
எவ்வாறு பயங்கரவாதம் என்ற சொல் ஒடுக்கு முறை அரசுகளுக்கு பிரிவினைப்போராட்டங்களை அடக்க உதவியதோ அதே போல அடக்கப்படும் மக்களுக்கு இராச தந்திர வழி மொழியிலும் உண்மையான யதார்த்தத்திலும் இருக்கிற ஒரே ஒரு சொல் சனநாயகம் என்பதாகும். இன்றைக்கு எங்களுக்கு இருக்கிற ஒரே ஒரு வழி எங்களது போராட்டங்களை சனநாயகத்திற்கான போராட்டங்களாக ஒழுங்கு படுத்துவதுதான். இதனைவிட்டுவிட்டு அமெரிக்காவின் பின்னாலும் இந்தியாவின் பின்னாலும் ஒடுவதன் மூலம் எதனையும் சாதிக்க முடியாது. அப்படியேதான் எதனைச் சாதித்தாலும் அங்கேயும் சனநாயகத்திற்கான கோரிக்கை எஞ்சி நிற்கவே செய்யும்

எங்களுடைய போராட்டங்களைச் சனநாயகத்துகான போராட்டங்களாக ஒழுங்குபடுத்துதலில் எங்களுக்கிடையிலான ஒற்றுமையும் எங்களுடைய பிரச்சனைகளைப்புரிந்துகொண்டு நேசக்கரம் நீட்டுகிற சக இனச் சகோதரர்களுடனான கூட்டிணைவும் முதலாவது படியாக வருகின்றன.இதனை உணருவது மாவீரர்களுக்குச் செய்யும் மரியாதையாக இருக்கும்.குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவ அபிரா

04-12-2012

கல்லானாலும் கணவன்…

அண்மையில் ஊடகமொன்றில் வந்த செய்தியை வாசித்தபோது என்னுட் சில நாட்களாகக் குமைந்து கொண்டிருந்த ஒரு சம்பவத்தையும் பகிர்ந்து கொள்ளலாமே என்று தோன்றியது மனதில் தோன்றுகிற எல்லா உணர்வுகளையும் பொதுவெளியிற் பகிருகிற ட்ருவிற்றர் காலத்தில் வாழ்கிற போது எனது அனுபவத்தையும் பொதுவெளியில் முன்வைப்பது பிரயோசனமாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் எனது அனுபவத்தைப் பகிர முன்னர் நான் வாசித்த செய்தியையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

வீரமரணங்களும் போரும் அரசாட்சி செய்த காலத்திலும் தனிமனிதப்பிரச்சனைகளும் சமூகப் பிரச்சனைகளும் தமிழ்ச் சமூகத்துள் நிலவவே செய்தன. ஆனால் அப்பொழுது இத்தகைய சம்பவங்கள் எங்களின் ஊடகங்களின் கண்களுக்குப் படவில்லை. இப்பொழுது தனிமனித அல்லது சமூகப்பெறுமானங்கள் தொடர்பான மனித நடத்தைகளை விடுப்புக்களாகவும் விரகங்களாகவும் விற்கிற காலம் தோன்றியுள்ளது.

சமுகத்தின் பெறுமானங்களில் ஏற்படுகிற மாற்றங்களைப் பொறுப்புணர்வுடன் அணுகும் போக்கை அனேகமான ஊடகங்களின் செய்தியிடலிற் காணமுடிவதில்லை. ஒரு சமூகத்தின் கலாசார மற்றும் பண்பாட்டுக் கூறுகளை அதனுள் வாழ்பவர்கள் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றவேண்டிய தேவை இல்லை என்பதைப்பல ஊடகங்கள் மறந்து விடுகின்றன. ஒரு சமூகத்தினுள் நிகழும் பண்பாட்டு மற்றும் கலாசார மாற்றங்களை எந்த முறையில் விளங்கிக் கொள்ளலாம் என்ற கேள்வியையும் முன்னதாகவே உங்களின் முன் வைத்து விடுகிறேன்.

இனிச் செய்திக்கு வருவோம்

நான் வாசித்த செய்தியின் சாரம் இதுதான்.

இலண்டனில் இருக்கும் மகளின் அழைப்பின் பேரில் யாழ்பாணத்திலிருந்து இலண்டன் செல்லும் தாய் ஒருவர் அங்கு தனது மகள் தனது கணவனை விட்டுப்பிரிந்து இன்னொருவருடன் வாழ்வதைக் கண்டு அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் உடனே யாழ்ப்பாணம் திரும்பிவிடுகிறார். அவர் உடனே ஊர் திரும்பியதன் காரணத்தை அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் மாணவர்கள் அறிய விரும்புகிறார்கள். ஆனால் அந்தத்தாயார் அவர்களுக்கு எதனையும் சொல்ல வில்லை. பின்னர் அத்தாயார் கௌரிவிரதம் இருந்த நாள் ஒன்றில் அவரது கணவன் நிறைந்த குடி போதையில் இருந்த காரணத்திற்காக அவரைக் கண்டித்திருக்கிறார். இதனால் கோபமடைந்த அவரது கணவன் குடிபோதையில் மகளின் நடத்தையையும் விமர்சித்து சூழவுள்ளவர்களும் அவற்றை அறிந்துகொள்ளும் வகையில் உரத்துப் பேசியிருக்கிறார். சூழ உள்ளவர்களும் உடனே அந்தக்குடும்ப முரண்பாட்டைக் காணொளியாக்கி ஊடகத்திற்கு அனுப்பி இருக்கிறார்கள் அந்த ஊடகமும் அச்சம்பவக் காணொளியை வெளியிடாமல், செய்திக்கான ஆதாரம் தங்களிடம் உள்ளது என்ற தொனி புலப்பட அச்சம்பவத்தைச் செய்தியாக மட்டும் வெளிப்படுத்தி விட்டிருக்கிறது.

எந்தச் சம்பவத்தையும் யாரும் எப்படியும் செய்தியாக்கலாம் . அதற்கான முழு உரிமையும் ஊடகங்களுக்கு இருக்கின்றன. ஆனால் இத்தகைய சம்பவங்களைச் செய்தியாக்கும் போது அதன் பின்னாற் தொழிற்படுகிற கருத்தியலை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதுதான் ஆரோக்கியமான ஊடக அணுகு முறையாகும்.

இந்தச் சம்பவத்தில் பாத்திரங்களாக இருக்கிற தாய் தந்தை மகள் மகளின் பழைய கணவன் மகளின் புதிய நண்பன் மற்றும் புறநிலையாக இருந்து விடுப்புப் பார்க்கிற மாணவர்கள் ஆகியோருக்கிடையில் இருக்கிற உறவையும் அவர்களுக்கிடையில் இருக்கிற உணர்வுப் போராட்டங்களையும் அவர்களுடைய நடத்தைகளுக்கு காரணமாக இருக்கிற கருத்தியலையும், கலாசாரத்தையும் உன்னிப்பாக அவதானித்துப் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு ஊடகவியலாளனுக்கு அல்லது ஒரு படைப்பாளிக்கு அல்லது ஒரு நெறியாளனுக்கு இந்தச்சம்பவம் எமது தமிழ்ச்சமூகத்தின் ஒரு குறுக்குவெட்டு என்பது புரியும்.

நாடகம் ஒன்றிற்கான அல்லது குறும்படம் ஒன்றிற்கான கருவாக இருக்கக்கூடியது இந்தச்சம்பவம். பொறுப்புடன் புரிந்து அளிக்கையாக்கப்பட வேண்டிய கருவான அந்தச்சம்பவம் அது செய்தியிடப்பட்ட முறையினால் வெறும் விடுப்பாகிப் போனது அதிசயமல்ல.

குடிகாரக் கணவனின் இம்சைகளைச் சகித்துக்கொண்டு கௌரி விதரம் அனுஸ்டிக்கிற தாய்க்கும் தன்னைச் சந்தேகிக்கிற கணவனை விட்டு விலகித் தன்னை நேசிக்கிற இன்னொருவனோடு சேர்ந்து வாழத் துணிவு கொண்ட மகளுக்கும் இடையில் ஏற்படுகிற இடைவெளி எங்கள் கலாசாரத்தில் உருவாகத்தொடங்கியுள்ள ஒரு வெளி. குடும்பம் என்னும் சனாதனமான மரபான அமைப்பில் பெண்ணுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பாத்திரம் குறித்து அலட்டிக்கொள்ளாமல் அடுத்த தலைமுறை கௌரிவிரதம் அனுட்டிக்கப் போவதில்லை. கணவனுக்காகவே வாழ்கிற கணவனின் விருப்பங்களையே நிறைவேற்றிக் கொண்டிருக்கிற தனது சுயத்தைக் கணவனிடம் இழக்கிற பெண்களின் தொகை இனி எமது சமூகத்தில் குறைந்து செல்லும்;செல்லவேண்டும்.

இந்தச் செய்தியை வாசிப்பதற்கு முன் என்னுள் கிடந்து குமைந்து கொண்டிருந்த ஒரு சம்பவத்தையும் இங்கு பரிமாறவேண்டியது அவசியம்.

சில வாரங்களுக்கு முன்பு எனது நெருங்கிய நண்பர் ஒருவர் என்னுடன் தொலைபேசியிற் தொடர்பு கொண்டு தனது மருமகள் வீட்டிற்கு அழையா விருந்தாளியாகச் செல்லவேண்டும் வருகிறாயா என்றார். கடந்த சில மாதங்களாக அவளுடன் தொடர்பேயில்லை தொலைபேசியையும் எடுக்கிறாளில்லை என்ன பிரச்சனையோ தெரியாதென்றார். வருகிறேனென்று ஒத்துக்கொண்டேன்.

மறுநாள் எனது நண்பரின் மருமகள் வீட்டுக்குச் சென்றோம். அழைப்புமணியை அழுத்தினோம். கதவு திறந்தது மெல்லிய சிரிப்புடன் மருமகளின் கணவன் உள்ளே அழைத்தார். அழையா விருந்தாளிகள் நாமென்றாலும் வரவேற்கும் பண்பிற் பிரச்சனை இருக்கவில்லை. மருமகளின் முகத்தில் அச்சமும் மகிழ்வும் ஒன்றாகத்தெரிந்தது.

வழமையான குசல விசாரிப்புக்களின் பின் நிலவிய அமைதியை மருமகளின் கணவரே கலைத்தார். ஆரம்பத்தில் தெரிந்த மெல்லிய சிரிப்பு மறைந்துவிட்டது கோபமும் எரிச்சலும் நிறைந்த முகமொன்று வெளிவந்தது.

“நீங்கள் என்னத்துக்கு வந்திருக்கிறியள் எண்டு எனக்குத் தெரியும். கலியாணம் முடிக்க முதல் பேசிய விடயங்களை- வாக்குறுதிகளை முதல்ல சரியா நிறைவேற்றிப்போட்டு வந்து என்னோடை கதையுங்கோ. உவண்ட அம்மா சொன்னவ ஊரில இருக்கிற காணியையும் வீட்டையும் எழுதித் தாறன் எண்டு அதை இன்னும் செய்யேல்லை. அது மட்டுமில்லை இப்ப எழுத்தித்தாறணெண்டு சொன்ன காணியிலை வீடுமில்லை. எண்டபடியால் வீட்டுக்கான பெறுமதியையும் சேர்த்துக் காசாகத் தரவேணும்.” எனத் தொடங்கினார்.திருமணம் முடித்து 15 வருடங்களின் பின்பும் ஏழு வயதில் ஒரு மகளும் இருக்கிற நிலையில் பெல்யியத்தில் வாழ்கிற என் நண்பரின் மருமகளின் கணவரின் கோரிக்கைகள் எங்கள் சமூகத்தில் உள்ள பெரும்பான்மையானவர்களுக்கு நியாயமானவையாகத்தான் தோன்றும் என்பதில் சந்தேகமில்லை. திருமணத்திற்கு முன்னரேயே எட்டு இலட்சம் ரூபாவையும் இன்னொரு ஒன்பது பரப்புக்காணியையும் சீதனமாகப் பெற்றுக்கொண்ட அவர் இவ்வாறு கேட்பது சரியானதுதான் என்பவர்கள் அதிகம் உள்ள சமூகம் நாங்கள்.

எனது நண்பர் மருமகளின் கணவனின் உரையாடலில் இடையில் நுழைந்து “தம்பி வெளிநாட்டில இருக்கிறவர்களின்ரை காணியைப் பாதுகாப்பு அமைச்சு எடுக்குது இப்ப பாதுகாப்பாக பெற்றோரின் பேரில் இருக்கிற காணியை நீங்கள் வேண்டி என்ன செய்யப்போறியள்” என்று கேட்டார்.

“அது உங்கடை பிரச்சனையில்லை அதை ஆமிக்காரன் எடுத்தாலும் பரவாயில்லை உவ்வின்ரை அம்மா எங்கடை கலியாணத்தரகருக்குச் சொன்னதைச் சரியா நிறைவேற்ற வேண்டும்” என்றார்.

வெறும் காணி சீதனம் என்ற நிலையில் நின்ற அவரது கோபம் இப்பொழுது அவரது மனைவியின்மேல் திரும்பியது. எனது நண்பரின் மருமகளுக்கு வீட்டு வேலைகள் செய்வதில் நாட்டமில்லை என்றார். விருந்தினர்கள் வந்தால் பலகாரம் செய்யத் தெரியாதென்றார் குடும்பவளர்ப்புச் சரியில்லை என்றார். நண்பரின் மருமகளுக்குப் பற்கள் சரியில்லை பழுதாகிவிட்டன என்றார். அதிகாலையில் எழுந்ததும் மனைவியின் பற்களைப் எண்ணிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார் போலிருந்தது. தனது மனைவியின் பற்கள் பழுதானதற்கு மனைவியின் பெற்றோரின் பிள்ளை வளர்ப்பு முறையே காரணமென்றார். தான் அறியாமல் அந்தக் குடும்பத்துக்குள் சென்று விழுந்து விட்டேன் என்றார். தங்களுடைய ஊராட்கள் அந்த ஊரில் பெண்ணெடுப்பதில்லை என்றார். எனது நண்பர் தனது மருமகளின் மகளின் படமொன்றை முகப்புத்தகத்தில் பரிமாறியிருந்தார். அதனைப் பார்த்தவர்கள் நாவூறு படுத்தியமையால் தனது மகளுக்குப்பல்லு மிதந்து இப்போது சாப்பிடவே கஸ்டப்படுகிறாள் என்றார்.

அவரது வெறுப்பும் கோபமும் நிறைந்த வார்த்தைகளால் கொதித்துக் கொண்டிருந்த அந்த வரவேற்பறையில் அவரது மனைவி கண்கலங்கி அமர்ந்திருந்தார் இப்படித்தான் ஒவ்வொரு நாளும் விடிகின்றதென்று அவர் தனது மாமாவிடம் கூறினார். எனது நண்பரின் மருமகளுக்கும் அவரது கணவருக்குமிடையிலான அன்பினதும் பிணைப்பினதும் ஆழத்தின் சாட்சியாக(?) அவர்களுக்கு பிறந்த மகள் இந்த முரண்பாட்டை மொழி அதிகம் புரியாவிடினும் உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

மேற்குறித்த பிரச்சனைகளைக் காரணம் காட்டியே அவர் தனது மனைவியை அவரது பெற்றோரிடமும் உறவினருடனும் உரையாடவிடாது முற்று முழுதாகத் தடுத்துவிட்டார். தன்னுடைய மனைவி தனக்குப் பிடிகாதவர்களுடன் உரையாடத் தேவையில்லை என்றும் உறுதியாகக் கூறிவிட்டார். (அவரது மனைவிக்கு, அவருக்குப் பிடிக்காதவர்களுடன் தனது கணவரை உரையாட வேண்டாம் என்று கட்டளையிட உரிமையிருக்குமென்றால் இந்த விதியை வேறு ஒரு வகையில் புரிந்து கொள்ளலாம்)

இறுதியாக அவர் இன்னும் ஒன்றையும் தெளிவாகக் கூறினார். இந்த வருடம் மார்கழி 31ம் திகதிக்கு முன்னர் காணியை எழுதித்தருவதுடன் வீட்டுக்குரிய பணத்தையும் தந்துவிட்டுத் தங்களுடனான தொடர்பை முற்று முழுதாக துண்டித்துவிடவும் வேண்டும் என்றார்.

எல்லாம் கிடைத்த பின்பும் ஏன் தொடர்பைத் துண்டிக்க வேண்டும் என்று நான் குழம்பிய போது பின்வருமாறு கூறினார் என்ரை பிள்ளைக்கு நாளைக்கு கலியாணம் நடக்கவேண்டும் உங்களோட தொடர்பிலிருந்தால் அது நடக்காது என்றார். நான் ஏன் இப்படிச் சொல்லுறன் எண்டு உங்கள் எல்லாருக்கும் நல்லா விளங்கும் என்றார்.

நான் திரும்பிவரும் வழியில் எனது நண்பரைக்கேட்டேன்: “அவர் ஏன் தன்னுடைய மகளுக்குத் திருமணம் நடக்காதென்கிறார் ”

எனது இன்னொரு மருமகள் கலப்புத் திருமணம் முடித்திருக்கிறாள் என்றார் என் நண்பர்.

மருமகளின் கணவரின் நடத்தையினால் ஏற்பட்ட அவமானம் கோபம் மற்றும் கவலை என யாவும் ஒன்றாகச் சேர்ந்து அழுத்த எனது நண்பர் மௌனித்திருந்தார்.

இருபது வருடங்களுக்கு மேலாக வெளிநாட்டில் வசிக்கும் நண்பரின் மருமகளை முறையாக மொழிபடிக்கவோ வேலை செய்யவோ அனுமதிக்காமல் வீட்டுக்குளேயே வைத்திருந்து பின் இப்பொழுது யாருடனும் உரையாடவேண்டாம் என்று கட்டளை இடுமளவுக்கு அவரது கணவர் வளர்ந்திருக்கிறார்.

கடந்த பதினைந்து வருடங்களாக வேலை எதுவும் செய்யாமல் வீட்டிலேயே இருந்து கொண்டு சாதிவெறி மற்றும் ஊர்வெறி கொண்ட அறியாமை நிறந்த உன்மத்தனாக அவர் மாறியிருந்தார். அவர் போன்ற மனிதர்களை எங்கள் சமூகத்தை எங்கு வெட்டிப்பார்த்தாலும் காணலாம்.

ஆண் பெண்ணின் சுயத்தை மதித்தல், சரிசமமாக உரையாடுவதற்கு பெண்ணுக்குள்ள உரிமையை மதித்தல், குடும்பவேலைகளில் இருக்கவேண்டிய பகிர்வு பெண்ணின் சுயவளர்ச்சிக்கான வெளி இருத்தல் பரஸ்பர விட்டுக்கொடுப்பு தொடர்பாடற் சுதந்திரம், அன்பையும் காதலையும் வளர்பதில் பரஸ்பரம் இருக்கவேண்டிய நாட்டம் எனப் பல்வேறு பண்புகளில் எங்களது சனாதனமான குடும்ப அமைப்புக்குள் மாற்றங்கள் ஏற்படவேண்டியுள்ளது. இந்த விடையங்களில் பெண்ணே பலிக்கடாவாக இருக்கும் சூழ்நிலைகள் வெளிப்படும் போது ஊடகங்கள் அவற்றை இனம் கண்கண்டு வெளிப்படுத்துவது எமது சமூகத்தைச் சனநாயகப்படுத்தும்

நான் மேற்சொன்ன எந்த பண்புகளிலும் முன்னேற்றமில்லாத ஒரு குடும்பச் சூழ்நிலையில் உணர்வற்ற மரக்கட்டைபோல வாழும் என் நண்பரின் மருமகளுக்கு என்ன தீர்வு எனக் கேட்ட போது சிலர் அவள் பிரிந்து தனியாக வாழ்வது தான் நல்லதென்றார்கள். ஆனால் அனேகமானவர்கள் எனது நண்பரின் மருமகள் கௌரிவிரதம் பிடித்தால் எல்லாமும் சரியாகிவிடுமென்கிறார்கள்.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்...?குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக

தேவ அபிரா

25-11-2012

போராடாதே!Bookmark and Share
போராடாதே! - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவ அபிரா

அண்மைக் காலங்களிற் தமிழில் எழுதும் சிலபத்தியாளர்களின் பத்திகளை வாசிக்கும் போது அவர்கள் எவ்வளவு கவனமாகவும் நுட்பபமாகவும் தொழிற்படுகிறார்கள் என்பது தெரியவருகிறது.  இவர்கள் எதில்கவனமாக இருக்கிறார்கள் என்பதனையும் எதனை நுட்பமாக வாசிப்பவர்களின் மனதில் பதியவைக்க விரும்புகிறார்கள் என்பதையும் நாங்கள் கவனிக்கவேண்டும்
இந்தப்பத்தியாளர்கள் இரு வகையானவர்கள் ஒரு வகையினர் விடுதலைப் புலிகளை நிரந்தரமாகவே கடுமையாக எதிர்த்து இலங்கை அரசுடன் இணைந்திருந்தவர்கள்.  மற்றவகையினர் விடுதலைப் புலிகளின் அழிவுடன் தீடீர் என ஒடுக்குமுறை அரசின் பக்கம் சாய்ந்து விட்டவர்கள்.
விடுதலைப் புலிகளை மிக வீராவேசமாக ஆதரித்த பலர் இன்றைக்குள்ள சிங்களப் பேரினவாத அரசின் ஆதரவாளர்களாக மாறியுள்ளமை பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம்கருணா டக்ள்ஸ் கே பீஎன வெளித்தெரியும் முகங்களைத் தவிர வெளியே தெரியாமற் பலர் அவர்களைப் போலத் தொழிற்படுகின்றனர். என்பது வியப்பாக இருக்கக்கூடும்.
முன்பொருகாலத்தில் இந்திய இராணுவம் இருந்த போது மாற்று இயக்கங்களில் இருந்த பலர் புலிகளின் பரம எதிரிகளாக இருந்தார்கள்.ஆனாற் பின்னர் புலிகள் பலமடைந்த போது அவர்களின் ஆதரவாளர்களாக மாறினார்கள்.  இன்றைக்கு புலிகள் அழிந்துள்ள நிலையில் அவர்களை ஆதரித்த பலர் சிங்களப் பேரினவாத அரசின் நிகழ்ச்சி நிரலை நகர்த்துபவர்களாக இலங்கையிலும் புலம் பெயர்ந்த தேசத்திலும் மாறி இருக்கிறார்கள்.
நான் மேலே விபரித்த, அதிகாரமாற்றங்களின் போது தமது இடங்களை மாற்றிக்கொள்ளும் மனிதர்கள் ஒடுக்கப்படும் மக்களின்  போராட்டங்களில் ஏற்படுத்தும் பாதகமான தாக்கங்கள் பெரியவை என்பதுடன் கவலையும் தருபவை.
விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக அல்லது அவர்களால் ஏற்பட்ட இழப்புக்களுக்கு பழிவாங்கும் முகமாக அல்லது சொந்தப்பிழைப்புக்காக அல்லது எல்லாவறையும் விட்டொதுங்கிப்புலம் பெயர்வதற்கான வசதி அற்றதனால் அல்லது உண்மையிலும் வேறுவழிகள் அற்றதனால்   மாற்று இயக்கங்களைச் சேர்ந்த இராணுவப் பயிற்சி பெற்ற பல இளைஞர்கள் ஒடுக்குமுறை இராணுவத்துடன் சேர்ந்து  இயங்கினார்கள். இன்றைக்கு அதேமாதிரியாக விடுதலைப் புலிகளில் இருந்த பல முன்னாள் போராளிகள் இராணுவத்தின் அச்சுறுத்தல் அல்லது அழுத்தம் காரணமாகவும் சில வேளைகளில் வயிற்றுப் பிழைப்புக்காகவும் இராணுவத்துடன் இணைந்துள்ளார்கள். இவர்கள் எல்லாருமே தனிமனித முரணணிகளுக்கு உதாரணமாகக் கொள்ளக் கூடியவர்கள். இவ்வாறு இராணுவத்துடன் சுய விருப்பின் பேரிலோ அல்லது வற்புறுத்தலின் பேரிலோ இணைந்து செயற்படுபவர்களால் ஆட்களை மட்டுமே கொல்ல முடியும். இவர்களால் ஒடுக்கப்படுவர்களின் ஆன்மாவைக் கொல்ல முடியாது.ஆனால் நான் மேற்கூறிய பத்தியாளர்கள் இவர்களையும் விட ஆபத்தானவர்கள். என்னேனில் இவர்களால் ஒடுக்கப்படுபவர்களின் ஆன்மாவரைக்கும் ஊடுருவ முடியும் இவர்கள் அதிகாரங்களின் பலத்தையும் பலவீனத்தையும் சரியான முறையில் எடைபோட்டு கால மாற்றங்களின்போதும் சாரவேண்டிய இடங்களைச் சேர்ந்து தமதுதனிப்பட்ட நலன்களைப் பேணிக் கொள்ள முடிகிற கெட்டித்தனத்தைக் கொண்டவர்கள்.
தனிமனித சனநாயகமென்று வரும்போது இந்தக்கெட்டித்தனம் தவறென்று சொல்ல முடியுமோ தெரியவில்லை.இதுஒருவகையில் உயிர்வாழும் திறன்ஆனால் இந்தத் திறனில்லாமல் சிறைகளிலும் சமூகத்தின் விளிம்பிலும் வாழும் ஆயிரக்கணக்கான முன்னாட் போராளிகளுக்கு இந்தக்கலையை இவர்கள் கற்றுக்கொடுத்தால் நன்றாக இருக்கும்டில்றுக்சனுக்கும் நிமலரூபனுக்கும் இன்னும் சாவின் விளிம்பில் நிற்கும் பல அரசியற் கைதிகளுக்கும் இந்தக்கலை தெரியாமற் போயிற்று.
அதிகாரம் என்பது மிகச்சிக்கலான ஒருதத்துவம்.ஒடுக்குவதற்கும் அதுதேவைப்படுகிறது விடுதலைக்கும் அது தேவைப்படுகிறதுபல வேளைகளில் விடுதலைக்கு அது எதிரியாகியும் விடுகிறதுஆனால் நான் மேற் சொன்ன மனிதர்களுக்கு மட்டும் அது என்றைக்கும் நண்பனாகவே இருக்கிறது.
இந்த வகையானவர்களால் எழுதப்படுகிற பத்திகளை வாசிக்கும் போது தோன்றுகிற துயரம் அளப்பரியதுஏனேனில் இவர்கள் ஒடுக்குகிறவனின் பக்கமிருந்து ஒடுக்கு முறையை அற்புதமாக அழகாக நியாயப்படுத்தி விடுவார்கள்.வாழைப்பழத்தில் ஊசிஏற்றுவது போல ஒடுக்குமுறையை இவர்கள் நிராகரிக்கும் அழகைப்பார்த்து வியந்து அதிகாரங்கள் இவர்களை அரவணைத்துக் கொள்ளும்.
அண்மைக் காலங்களில் இலங்கையிலும் சரி புலம் பெயர்ந்த நாடுகளிலும் சரி இவ்வாறானவர்களால் எழுதப்படும் பத்திகளில் இலங்கைத் தமிழர்களை அமைதியாக இருக்கவிடுங்கள்போராடத் தூண்ட வேண்டாமென்ற கோரிக்கை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் முன்வைக்கப்படுகிறதுதமிழ்மக்கள் போராடிக் களைத்துப் போனார்கள் அவர்களை ஆற அமர இருக்க விடுங்கள் என்ற கோரிக்கை இத்தகைய பத்தியாளர்களால் முன்வைக்கப்படுகிறது.
”ஐயோ நீ ஓட்டி ஓடிக் களைச்சுப் போனாயப்பு உந்த அரசமரத்துக்கு கீழ கொஞ்சம் குந்தியிருந்து ஆறனப்பு எனச் சொல்கிற பேரன்பு போலத் தோன்றும் இந்தப்பத்திகள்.ஆனால் நன்றாகக் கவனித்தோமென்றால் ஓடுகிறவர்களைக் கத்தியுடன் சிலர் துரத்தி வருவது அங்கே காட்சிப் படுத்தப்பட்டிருக்காது. கலைத்துக் கொண்டு வருகிறவர்களைப் பார்த்து இந்தப்பத்தியாளர்கள் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்குறைந்தபட்சம் ஐயாமாரே கடந்த அரை நூற்றாண்டாக கலைத்து கலைத்து ஒடுக்கி ஒடுக்கியே நீங்களும் களைச்சு போனியள் கொஞ்சக் காலத்துக்கு ஓய்வாக இருந்தாலென்ன என்று கூடக் கேட்கமாட்டார்கள்.
சில பத்தியாளர்கள் கலைத்துக் கொண்டு வாறவர்களின் கையில் கத்தியே இல்லைஅவர்கள் தர்மச்சக்கரமும் அலரிப்பூவும் தான் வைத்திருக்கிறார்கள் என்பார்கள் சில பத்தியாளர்கள் உங்களைக் கலைச்சு மேச்சது புலிகள் மட்டும்தான் இப்ப உங்களை ஒருத்தரும் கலைக்கேலை  உங்களுக்கு பிரமை பிடித்திருக்கிறது என்றும்எழுதிவிடுவார்கள்.
தங்களது பத்திகளில் முதலில் இரண்டுபக்கமும் பிழை செய்யதென்று தான் எழுதத் தொடங்குவார்கள். பின் ஒன்றிரண்டு வரிகளில் இலங்கை அரசும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாகச் சொல்லிவிட்டுப் பின் புலிகளைத் தாக்கத் தொடங்கி கடைசியாக தமிழ் மக்கள் களைச்சு போனார்கள் அவர்களை அப்படியே விட்டுவிடுங்கள் என்று சொல்லி அவர்களைப் போராட்டத் தூண்ட வேண்டாமென்றும் கேட்டுக் கொள்வார்கள்.
ஒடுக்கப்படுபவர்களை எந்த நிலையிலும் போராடவேண்டாம் என்று சொல்ல யாருக்கு உரிமை இருக்கிறது. ஒடுக்கப்படுபவர்களை அமைதியாக இருங்கள் என்று சொல்ல யாருக்கு உரிமை இருக்கிறது. தாகத்தில் இருப்பவரைத் தண்ணீரைத் தேட வேண்டாமென்றும் பசித்தவரை உணவைத் தேட வேண்டாமென்றும் வீடிழந்தவரை வீட்டைக் கேட்க வேண்டாமென்றும் நிலமிழந்தவரை நிலத்தைக் கேட்க வேண்டாமென்றும் போராட வேண்டாமென்றும் கேட்க எனக்கு என்ன உரிமை இருக்கிறது? இவர்களை அமைதியாக இருங்கள் எனக் கேட்பதன் பின்னாலுள்ள அரசியல் என்ன?
போராட்டம் என்ற சொல்லின் பின்னாலுள்ள அர்த்தமும் தத்துவமும் வெறும் ஆயுதப் போராட்டமாகக் குறுகி அர்த்தம் பெற்றமைக்கு எமது கடந்த அரசியற் தலைமைகள் காரணம் அவர்களைக் கட்டாயம் விமர்சிக்க வேண்டும். இலங்கை சுதந்திரமடைந்ததில் இருந்து இலங்கையை ஒரு பல்லினச் சமூகமும் கலாசாரமும் கொண்ட ஒரு சனநாயக நாடாகக் கட்டி எழுப்பத்தவறிய எல்லா  அரசியல்வாதிகளிலும் தொடங்கி தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் தொடங்கிய பின் அதனை சனநாயகப்பண்புகள் கொண்ட மக்கள் போராட்டமாக வளர்த்தெடுக்காமல் வெறும் இராணுவவாதமாகக் குறுக்கிய விடுதலை அமைப்புகளின் தலைமை வரை எல்லாரையும் விமர்சியுங்கள்! தவறில்லை!! மேலும் புலிகளின் மேல் உங்களுக்குக் ஆத்திரமும் கோபமும் இன்னமும் தீரவில்லை என்றால் கோத்தபாய குழிதோண்டிப்புதைத்த புலிகளின் எலும்புகளைத் தேடித் தேடியெடுத்து  ஒன்றை அவர்களின் வரவுக்காய் இன்னமும் கண்ணீருடன் காத்திருக்கும் அவர்களின் உறவினர்களிடம் மரபணுமுறையில் அடையாளம் காணக் கொடுத்து விட்டு மீதியை வைத்து அவ்வப்போது ஆத்திரம் தீர அடித்துடையுங்கள். ஆனால் ஒடுக்கப்படுகிற மக்களைப்போராடாதே என்று மட்டும் எழுதாதீர்கள். காரணம்.வாழ்வின் அடிநாதமே போராடுதல்தான். உயிர்வாழும் ஒவ்வொரு உயிரியும் போராடுகிறது.
இந்த இயல்பூக்கத்தை போராட்டமெனும் இயங்கியலின் ஆதார தத்துவத்தை இந்த மக்களிடம் இருந்து எடுத்துவிட்டால் மிஞ்சிக் குறுகி ஒடுங்கிப்போயிருக்கும் ஒரு இனத்தின் தலையில் கொள்ளிக்கட்டை வைக்க இலகுவாக இருக்கும் இல்லையா?
போரில் நொந்து அழிந்தமக்கள் எதைகேட்கிறார்கள் அதனைப்புரிந்து பத்திகளை எழுதலாம். புலிகளை அழித்த சிங்களப் பேரினவாதம் ஒடுக்கப்படும் சிறுபான்மை இனங்களின் கலாசார பண்பாட்டுப் பொருளாதார சூழலியல் வளங்களை திட்டமிட்டு அழிக்கிறது இதனை ஆழமாக ஆராய்ந்து எழுதலாம். ஒடுக்கப்படும் இனங்களின் தலைமைகள் வரலாற்றில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளாமல் தமது சொந்த நலன்களுக்காக வாய்ப்பேச்சுகளோடு நின்றுவிடுவதை எழுதலாம்.  போராட முனையும் மக்களுக்கு சரியான அரசியற் பரிமாணத்தை வழங்க முனையாமல் பாராளுமன்றக் கதிரைகளுக்காகவும் சலுகைகளுக்காகவும் மேடைப்பேச்சுக்களை மட்டும் பேசிக்கொண்டு திரியும் அரசியல் தலைவர்களைப் பற்றி எழுதலாம். மக்களுக்கு ஒரு கதையும் திரைமரைவில் ஒடுக்கு அரச அதிகாரத்துக்கொரு  கதையும் பேசும் பாராளுமன்ற அரசியல் வாதிகளைப்பற்றி எழுதலாம். ஈழத்தை வைத்துப் பொச்சடிக்கும் கருணாநிதியைப் பற்றி எழுதலாம்.அலைக்கற்றை ஏந்திழை கனிமொழியின் கதைவிடுதலைப்பற்றியும் எழுதலாம். இன்னும் நான்கு தலைமுறைக்கு பிரபாகரனை வைத்துப்பிழைக்க முனையும் தமிழ்நாட்டு அரசியல் வாதிகளைப்பற்றி எழுதலாம். முன்னாள் போராளிப் பெண்களை அல்லது முன்னாள் போராளிகளின் துணைவிகளை சீதனம் இல்லாமல் மாவீரர் தினமன்று திருமணம் செய்ய துடிக்கும் சீமான்களைப்பற்றி எழுதலாம்  அல்லது முன்னாள் போராளிகளின் துணைவிகளை தாயலாந்துக்கு அழைத்து ஒரு இரவைக்கழிக்கத் துடிக்கும் புலம் பெயர் தமிழர்களைப்பற்றியும் எழுதலாம். 
ஆனால் போராட முனையும் மக்களை மட்டும் போராட்டவேண்டாம் என்று எழுத வேண்டாம். ஏனெனில் அவர்களை அமைதியாக இருக்கக் கேட்பது அடிமையாக இரு என்று கேட்பதாகும்.
இதைத்தான் இவர்கள் கவனமாகவும் நுட்பமாகவும் தமது எழுத்துக்களில் கேட்கிறார்கள்.
அதிகாரங்களுடன் சார்ந்து கொண்டு உங்களுக்குப் போராடாமலே கிடைக்கிற விடையங்கள் ஒடுக்கப்படுபவர்களுக்கு போராடினால் தான் கிடைக்கும் இன்றைக்கில்லாவிட்டாலும் என்றைக்காவது ஒரு நாள்...
குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவ அபிரா
11-08-2012
குளோபல் தமிழ்ச் செய்திகள் இணையத்தில் இணையத்திற்காக பிரத்தியேகமாக எழுதப்படும் கட்டுரைகள் மொழிபெயர்ப்புகள் படைப்புகள் யாவும் காப்புரிமை பெற்றவை. அவற்றை மீள்பிரசுரம் பதிவேற்றம் செய்பவர்கள் globaltamilnews.net என மூலத்தை குறிப்பிட்டே மீள் பிரசுரம் செய்ய முடியும். என்பதனை நட்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். 
அனுப்புக HomeArticles
அபிப்பிராயங்கள்
(2) அபிப்பிராயங்கள்
13-08-2012, 10:16
 - Posted by Anonymous
தேவ அபிரா உஙளுக்கு என் வாழ்த்துக்கள் இன்று என்னநடந்து கொண்டிருக்கின்றதோ அதை அப்படியே தோலுரித்துக்காட்டியுள்ளீர்கள். வைக்கல் பட்டறயிலை கட்டியதுகளின் வேலைதான் இப்போது உலகத்த்மிழர்கள் மத்தியில்நடந்து கொண்டிருக்கின்றது.விமர்சனம் என்பது இப்போது முக்கியம் எது வந்தாலும் வரட்டும் அடுத்த சந்ததியையாவது ஆரோக்கியமான சொந்த உரிமைக்காக குரல் கொடுக்கும் சுயனலமற்ற தமிழினமாக ஆக்கவேண்டியது பொறுப்புள்ள ஊடகங்களின் கடமை என்பதை தமிழ் ஊடகவியலாளர்கள் உணரவேண்டும் என்பதை சுத்தமான எண்ணங்களுடன் தந்துள்ளீரகள் மற்றவர்களும் உணரட்டும்.தொடரட்டும்.உங்கள் பணி.
16-08-2012, 06:14
 - Posted by Nadarajah Kuruparan

இது எனது மின் அஞ்சல் முகவரிக்கு கிளிநொச்சியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது:-

தேவ அபிரா அவர்களின் போராடாதே ஆய்வுக்கட்டுரையை எமக்கு வழங்;கியதற்கு தேவ அபிரா அவர்களிற்கும், குளோபல் தமிழ் ஆசிரியரிற்கும் நன்றியை கூறிக்கொள்கிறேன்.
எங்கள் மன ஆதங்கத்தை அப்படியே வெளிப்படுத்தி உள்ளீர்கள்.நாங்கள் வன்முறையாளர்கள் அல்ல.போராட்டம் எம்மீது திணிக்கப்பட்டது.
இன்றும் எமது நாட்டில் நாம் கடும்போராட்டத்திற்கு மத்தியில்தான் வாழ்கிறோம். போராடாதே என்று கூறுபவர்கள் எங்களை 'சா' என்று கூறுவதாக அர்த்தம் என்று கொள்வோம்.இப்போது இழப்பதற்கு உயிரை தவிர எம்மிடம் வேறு எதுவும் இல்லை. கொடிய போரில் எல்லாம் இழந்துவிட்டோம்.ஆயினும் நாங்கள் இப்போது உயிர் வாழ்கிறோம். உயிர் வாழ்வதற்காக போராடுகிறோம்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் பாதுகாப்புடன் வாழ்ந்த நமது பெண்கள் இன்று துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகிறார்கள். புலம்பெயர் தமிழர் சிலர் போராட்டம் பற்றி பேசுபவர்கள் கூட உதவிசெய்கிறோம் என்ற போர்வையில் மாவீரர்களின் மனைவிமாரை சட்டபூர்வமற்ற திருமணத்திற்கு உள்ளாக்குவது நான் அறிந்த ஒரு விடயம். வறுமையை சாட்டாக வைத்து அவர்களை ஆள நினைப்பது மிகதவறு. இது எங்கள் கலாசார,பண்பாட்டு, விழுமியங்களுக்கு முரணானது. இதற்காகதானா எமது இளைஞர்கள் வாழவேண்டிய இளமை காலத்தை துறந்து மாவீரர்கள் ஆனார்கள்.கரும்புலியாக வெடித்தார்கள்.30 வருட போராட்டம் இதற்குத்தானா?
புலம்பெயர்ந்தவர்கள் சிலர் அந்நாட்டு கலாசாரத்திற்கு மாறியிருக்கலாம்.தயவு செய்து எமது பெண்களை கேவலப்படுத்த நினைக்க வேண்டாம். அதுமட்டுமல்ல இறந்த எம்மினத்தையும் கேவலப்படுத்த வேண்டாம். நாங்கள் தோற்றவர்களாகவே இருந்துவிட்டு போகிறோம்.உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரவம் இல்லாமல் இருந்துவிடுங்கள்.
தேவஅபிரா அவர்களே நீங்கள் எழுதிய எழுத்துக்கள் குற்றமுள்ளவர்களை நெற்றிப்பொட்டில் அறையட்டும்.

அன்புடன்,
ச.பாரதி,

முகப்புத்தகத்தில் முகம் செய்Bookmark and Share
முகப்புத்தகத்தில் முகம் செய் ….
குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவ அபிரா

இணையம் தகவற்தொழில் நுட்ப உலகில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் மனிதர்களின் தனிப்பட்ட வாழ்விலும் சமூக வாழ்விலும் பாரிய மாற்றங்களைஏற்படுத்தியுள்ளதுஇணையம் மனிதர்களின் பௌதீக அசைவியக்கத்தை(physical movement) தூண்டாமல் மெய்நிகர் உலகில் (virtual world) அவர்களை இருந்தஇரையில் இயங்கத்துண்டுகிறது. இதற்குக் காரணமாக இணையத்தில் வளர்ந்து நிற்கும்  சமூக  ஊடகவலையமைப்புக்கள் (social media networks)இருக்கின்றன.  இச் சமூக வலைத் தளங்கள் தனிமனித நடத்தைகளிலும்  சமூகத்திலும் அந்தச்சமூகத்தின் அரசியலிலும் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து   நின்று ஆராய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதற்கான ஒரு முன்குறிப்பை இக்கட்டுரை தரமுயல்கிறது.
சாதாரண மனிதர்களின் நட்பு வட்டம் சிறிதாக இருந்த காலம் போய் அது சமூக ஊடக வலையமைப்புக் காரணமாக விரிவடைந்து வருகிறது. பௌதீக தூரத்தில் தங்கியில்லாமல் மனிதர்கள் தங்கள் அகத்தையும் புறத்தையும் பரிமாறிக் கொள்கின்றார்கள். முன்பின் தெரியாதவர்களுடன் நட்பை உருவாக்க மனிதர்கள் தயங்கிய காலம் போய்  இந்த வலைத்தளங்களில் எவருடனும் நட்பை உருவாக முனையும் தன்மை  அதிகரித்து வருகிறது.  குறிப்பாக இளைய தலைமுறையினர் இந்தப்பண்பை வெளிப்படுத்தி நிற்கின்றனர்.  இணைய இணைப்புள்ள வீடுகளில் முதியவர்களும் சமுக ஊடகவலைத்தளங்களுக்குள்  இணைந்து வருகின்றனர்.  மேலும் நண்பர்களுடன் உரையாடுவதற்குத் தனியாக நேரங்களை ஒதுக்கிய காலங்கள் போய் வேலை நேரத்திலும் நமது அன்றாட அலுவல்களுக்கிடையிலும் இவ்வுரையாடல்களைச் செய்துகொள்ளல் அதிகரித்து வருகிறது. என்னிடம் எக்ஸ்-கதிர்ப்படம் எடுக்க வந்த ஒருவரின் வலது கை உடைந்து தொங்கிக்கொண்டிந்தது ஆனால் அவர் தனது இடது கையில் செல்லிடப்பேசியை வைத்து ருவிற்றர் செய்துகொண்டிருந்தார் எந்தளவுக்கு இச் சமூக ஊடகங்கள் எங்களூக்குள் ஊடுருவிட்டுள்ளன என்பதற்கு இது உதாரணம். அவர் தனது நிலமையை உடனடியாகத் தனது நண்பருக்குத் தெரிவித்துக்கொண்டிருந்தார்.
மெய்நிகர் உலகத்தில் (virtual world) விரிந்து வரும் இந்தநட்புலகத்துள்  நிலவுகிற  நடபின் அல்லது உறவின் தன்மை ஆளை ஆள்  நேரில் சந்தித்து உருவாகக்கூடிய  நட்பின் தன்மையுள் ஒப்பிடும் போது வேறாக இருப்பதாக சமூகவியலாளர்கள் கருதுகிறார்கள்.  (இவ்வாறு மெய்நிகர் உலகில் சந்தித்துக்கொள்பவர்கள் பின் நிஜ உலகத்திலும் சந்தித்துக்கொள்கிறார்கள்.)
சமூக ஊடக வலைத்தளங்களில் மனிதர்கள் தமது  அன்றாடநடத்தைகளில் தொடங்கி  தமது அனுபவங்கள் மற்றும் தமது  ஆழமான அக உணர்வுகள் வரை பரிமாறிக்கொள்கிறார்கள்.இந்தப்பரிமாற்றம் ஒற்றைப்பரிமாணமாக இருப்பதில்லை. ஒரே நேரத்திலேயெ விம்பம் வார்த்தைகள் ஒலி அசைவியக்கம் என யாவற்றையும் ஆயிரக்கணக்கானவர்களுடன் பரிமாறிக்கொள்ள முடிகிறது. இந்தப்பரிமாற்றத்திற்கு வலையமைப்பு நிர்வாகிகள் வழங்குகிற தரவளவு (data limit) எல்லையைத்தவிர மன எல்லைகள் இல்லை.

இங்கு இன்னுமொரு விடையத்தையும் கவனிக்க முடிகிறது முகத்துக்கு முகமான நட்புறவில் நாங்கள் ஒரு கருத்தைப் பரிமாறும் போது எமது உடல் மொழியையும் சேர்த்தே பரிமாறுகிறோம். மொழியின் தொனி மொழி கொண்டுவரும் உணர்வு உரையாடுவர்களின் ஆளுமை போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த மெய்நிகர் உலகில் நிகழும் உரையாடலுக்குள் வருவதில்லை. இதனால் கருத்தை வாசிப்பவர் கருத்தைக் கூறுபவரின் ஆளுமைக்குள் சென்றுவிடத்தேவை இல்லாது போய்விடுகிறது. கருத்தைப்பரிமாறுபவரின் உணர்வையும் அனேகமாக புரிந்து எதிர்வினையாற்றவேண்டிய தேவை இல்லாமல் போகிறது. உளவியலாளர்கள் சமூக ஊடக வலையமைப்புக்களைத் தீவிரமாகப்பயன்படுத்துபவர்களிடம் இரக்கவுணர்வு அல்லது பரிவுணர்வு (Empathy) வெளிப்படும் உணர்வுகளைத் தானுமுணர்தல் (compassion) போன்ற பண்புகளில் பிரச்சனை அல்லது குறைபாடு இருப்பதைக் கண்டறிந்துள்ளார்கள். குறிப்பாக முகப்புத்தகம் ருவிற்றர் போன்றவற்றில் நிகழும் உரையாடல்கள் இந்த வகைக்குள் வருகின்றன.
பல மனிதர்களுக்கு சமூக ஊடக வலையமைப்பு அவர்களது கருத்தை இலகுவான முறையில் முன்வைக்க அல்லது எனையவர்களின் கருத்தை நிராகரிக்க உதவியாக இருக்கிறது. இதனால் நிறைய மனிதர்கள் இணைய வெளியில் துணிந்து பேசவும் முன்வருகிறார்கள். மேலும் பொய்யான அடையாளம் ஒன்றை உருவாக்கிக்கொண்டு மெய்நிகர் உலகில் வலம் வருதலும் சாத்தியமென்பதால் மனிதர்கள் அதிகளவில் கருத்துப்பரிமாறல்களில் கலந்துகொள்வதுடன் நட்புவட்டங்களுக்குள்ளும் இணைந்து விடுகிறார்கள். விம்ப அசைவியக்கப்பரிமாற்றத்துடன் (video conversation)  கூடிய  உரையாடல்களில் இதற்குச் சாத்தியம் இருப்பதில்லை[
பரஸ்பர மனித உறவுப்பரிமாற்றங்களுக்கு அடிப்படையாக இருக்கிற  நம்பிக்கை  என்னும் முன்நிபந்தனை  மெய்நிகர் உலகில்  நடைமுறைச் சாத்தியமற்றதாகிவிட்டது.   நான் யாராவது ஒருவருடன் மட்டும் பரிமாற விரும்புகி விடையம் அவருக்கு மட்டுமே போய் சேரும் என்பதற்கு இந்த உலகில் எந்த உத்தரவாதமும் இல்லை.  இந்த உறவுப்பரிமாற்றத்தின் இயங்குதளம் கணணிசார் மென்பொருளின் இயக்கவடிவத்தினாலேயே தீர்மானிக்கப்படுகிறது. நாங்கள் எதனை எந்த அளவில் எமது நண்பர்களுடன் பரிமாற முடியுமென்பதை இந்த மென்பொருள் பொருள் தீர்மானிக்கிறது. மிக நுணுக்கமாகப்பார்த்தால் நட்புத்தளத்தின் பரிமாணங்களைத் தீர்மானிக்கும் உரிமை சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களிடம் நிஜ உலகத்தில் உள்ளது போல முழுமையாக இருப்பதில்லை. பதிலாக இந்த அதிகாரம்  இந்த வலைத்தளங்களை உருவாக்கி நிர்வகிப்பவர்களிடமே  இருக்கிறது.
அடிப்படையில் இந்த வலைத் தளங்களின்மென்பொருட்கட்டமைப்பை நன்கு விளங்கி அதனை உரிய முறையில் ஒழுங்கமைத்துப் பயன்படுத்துபவர்களைத் தவிர ஏனையவர்களுக்கு தாம் பரிமாறுகிற விடையங்கள்யார்யாரிடமெல்லாம் போய்ச்சேருகின்றன  என்ற விபரம் தெரிவதில்லை.  மேலும் ச் சமூக வலைத்தளங்களை உருவாக்குபவர்கள், அதனைப் பயன்படுத்துவர்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் சேமித்து வைத்து தமக்கு தேவைப்படும் போது குறிப்பாக வியாபார நோக்கங்களுக்காகவும் அரசுகளின் புலனாய்வுத்தேவைக்களுக்காகவும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
ஒரு மனிதரின்  நட்பு வட்டத்துள் அடங்கக்கூடிய மனிதர்களின் எண்ணிக்கை குறித்த ஒரு அளவுக்குள்ளேயே பௌதிக உலகில் இருக்க முடியும். இது நூறுக்கும் இருநூறுக்கும் இடையிலேயே இருக்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். மிகப்பிரபல்யமான நபர்கள் கூடத் தமது நட்பு வட்டம் என்று வரும் போது நூறுக்கும்  குறைவானவர்களையே நண்பர்களாக கொண்டிருக்க  முடிவதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.  ஆனால் மெய்நிகர் உலகில் இந்த எல்லை உடைந்துவிடுகிறது.மேலும் தனிப்பட்டவை என்பவற்றுக்கும் வெளிப்படையான எல்லோருக்கும் தெரியக் கூடியவை என்பவற்றுக்கும் இடையிலான இடைவெளியை இந்த சமூக வலைத்தளங்கள் அனேக உடைத்துவிட்டன நிகழ்வொன்று ஓன்று நிகழும் போது அதில் ஈடுபட்டு அனுபவித்தல் என்பதுடன் நின்றுவிடாது அதனை காட்சியாக அல்லது விம்பமாக பதிவு செய்து உடனே இணையத்தில் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் விருப்பு தூண்டப்பட்டுள்ளது. பலவேளைகளில்  குறித்த நிகழ்வை அனுபவிப்பதனைவிடவும் அதனை மெய்நிகர் உலகுக்கு கொண்டு செல்வதே அதிக மகிழ்வுதருவதாகவும் ஆகிவிட்டது.  
புதிய காலணி ஒன்றை நான்  எனது மகனுக்கு வாங்கிக் கொடுத்த போது அதனை உடனே அணிந்து அழகு பார்ப்பதை விடவும் அதனை படம் எடுத்து ருவிற்றரில் தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதிலேயே அவனது முதலாவது ஆர்வம் இருந்தது. ளைய வயதினரின் ருவிற்றரில்அல்லது முகப்பக்கத்தில் பரிமாறுபவைகள் சாதாரண வாழ்வில்மற்றவர்களுடன் பரிமாறப்படவேண்டிய அளவுக்கு முக்கியத்துவம் உள்ளவையும் அல்ல.  பல் துலக்குதல் ஆடை அணிதல் என்பதில் தொடங்கி தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பது வரை சமூக ஊடக வலையமைப்பில் பரிமாறப்படுகிறது இங்கே இளையவயதினர் மட்டுமல்ல அரசியல்வாதிகள் பிரபல்யங்களில் தொடங்கி  வர்த்தக நிறுவனங்கள் வரை இந்தகலாசாரத்துள் இணைந்து வருகிறார்கள்.
தன்னடக்கம், தனது முறைக்கு காத்திருத்தல் போன்ற அறநெறிக்கோட்பாடுகளுக்குள் வளர்க்கப்பட்ட தமிழ்ச் சமூகத்துள் இச்சமூக ஊடக வலையமைப்புக்கள் ஒரு முற்போக்கான மாற்றத்தையும் கொண்டு வருகின்றன. தன்னை வெளிப்படுத்தி கொள்ளல் அல்லது தனது திறமையை வளத்தைவெளிக்காட்டல்  என்பது இணைய வெளியில் அதிகரித்து வருகிறது. இதற்கு  இன்னொருவரின் தயவு அல்லது அங்கீகாரம் தேவைப்பட்ட காலம் கரைந்து போவதை நாங்கள் இங்கு அவதானிக்கிறோம்.  சுயவிளம்பரம் என்னும் இந்தப் பரிமாணம்  (தம்பட்டம் அடித்தல் என முடக்கப்பட்ட இத்தனிமனித ஆளுமை விருத்தி ) முதலாளித்துவ வளர்ச்சி அடைந்த நாடுகளில் முக்கியமான தேவையான பண்பாகவே பார்க்கப்படுகிறது. இதன் மறுபக்கமாக எதையாவது பரிமாற வேண்டும்; மெய்நிகர்வெளியில் நாளாந்தம் இயங்கவேண்டும் என்ற மன உளைச்சலுக்குக்குள் மனிதர்கள் ஆட்பட்டு விடுவதையும் காண்கிறோம் அது மட்டுமல்ல மற்றவர்களின் கவனம் தன்மேல் குவியவேண்டும் என்கிற ஒருவிதளுமைப்பிரைச்சனைக்குள்ளும் ]Narcissism-சுயவிம்பத்தன்முனைப்பு[ மனிதர்கள் சென்று விடுகிறார்கள்.
நாங்கள் எங்களை எங்கள் திறமையை எங்கள் கருத்தைவெளிப்படுத்தும் போது எதிர்பாராத கோணங்களிலும் திசைளிலும் இருந்து எதிர்வினைகள் வருவதும் மிகவழமையானதாக ஆகிவிடுகிறது . எங்களது நல்ல முகங்களும் கெட்ட முகங்களும் வெளிப்படுகின்றன. இவ்வாறு வெளிப்படுவது மட்டுமல்ல இவை வெளிப்பட்ட மறுகணம் காற்றில் கரைந்து விடுவதுமில்லை. ஆதாரங்களாக ஆயிரக்கணகான கணணிகளில் சேமிக்கப்பட்டும் விடுகின்றன. ]நீங்கள் ஒருதடவை சொன்னாற் சொன்னது தான் அது அழியாது (மெய்நிகர் உலகம் அழிந்தாலன்றி)[ எனவே சமூக வலையமைப்புக்களில் பொறுப்புணர்வுடன் கருத்துக்களைப்பரிமாறவேண்டிய தேவை ஏற்படுகிறது. ஆனால் இளைய வயதினரிடையே இந்த விடையத்தில் நுண்ணுணர்வோ ஒழுக்கவுணர்வோ இல்லாமல் போவதை- இணைய வதை அல்லது இலத்திரனியல் வதை (Cyberbully)அதிகரித்து வருவதைக் காண்கிறோம். இந்தப்பண்பு வயதுக்கு வந்தவர்களிடமும் அவதானிக்கப்படுகிறது. சாதாரண பகிடிகளில் தொடங்கி பாலியல் வக்கிரம் நிறைந்த வதைகள் வரை பரிமாறப்படுவதைக்காண்கிறோம்.
தொடர்பாடற்பொறிமுறைகளில் ஏற்பட்ட வளர்ச்சியும் புரட்சியும் மனிதர்களின் பௌதீகவெளிக்கும் மனவெளிக்கும் மேலாக தோற்றுவித்துள்ள மெய்நிகர்வெளி சாதகமான பண்புகளையும் பாதகமான பண்புகளையும் வெளிக்காட்டி நிற்கிறது. ஆனால் நாளுக்கு நாள் இனமத வர்க்க பேதமின்றி மக்களும் அவர்களை ஆளுகிற அதிகாரங்களும் இந்த வெளியுள் தம்மை அறிந்தும் அறியாமலும் உள்நுளைந்து வருகின்றனர். அதன் ஒரு அங்கமாகவும் ஆகிவருகின்றனர். சமூக ஊடக வலையமைப்புக்கள் மற்றும் இணையத் தொழில் நுட்பம் காரணமாக கருத்துச்சுதந்திரத்தின் எல்லைகள் அகலித்து வருகின்றன. இதுவே சகிப்புத்தன்மையின் எல்லைகளையும் அகலிக்கக்கோருகிறது. இது நிலப்பிரபுத்துவ அரைநிலப்பிரபுத்துவ சமூகங்களின் சனநாயகப்படுதலை துரிதப்படுத்துகிற அதே நேரத்தில் முதலாளித்து சனநாயகத்தின் எல்லைகளை வெளிச்சம் போட்டுக்காட்டவும் செய்கிறது விக்கிலீக்ஸின் மீது மேற்கொள்ளப்படுகிற அழுத்தங்களை நாங்கள் இங்கு கவனிக்க வேண்டும்.
அராபிய வசந்த எழுச்சிகளின் போது விதந்துரைக்கப்பட்ட சமூக ஊடக வலையமைப்புக்களின் பங்களிப்பு  மேற்குலகில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளின் காரணமாகத் தோன்றிய “வோல் வீதியை ஆக்கிரமித்தல்” (OccupyWallStreet) என்னும் அசைவியக்கத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்த வில்லை என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும்.
அரபு வசந்த எழுச்சிகளில் பங்கு கொண்ட மக்களின் பொருளாதார நிலமைக்கும் வோல் வீதியை ஆக்கிரமித்தல்” (Occupy WallStreet) என்னும் இயக்கத்தில் பங்கு கொண்டவர்களின் பொருளாதார நிலைமைகளுக்கும் இடையில் பெருமளவு வேறுபாடிருந்தது. அரபு நாடுகளில் கண்மூடித்தனமான பிரபுத்துவப்பண்பு நிறைந்த சர்வாதிகார ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறை சகிக்க முடியாததாகவும் மாறி இருந்தது.
ஆனால் மேற்குலகில் மக்கள் அடிப்படையான பொருளாதார வசதிகளைக்கொண்டிருப்பதால் மெய்நிகர் உலகில் அசைவதுடன் நின்றுவிடுகிறார்கள்.
நாங்கள் இனிமேல் முகத்தில் முகம் பார்க்க முடியாது.
வாசித்தவைகள்:
படம் நன்றி:
குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவ அபிரா
3-11-2012

]
அனுப்புக HomeSrilankan NewsArticles
அபிப்பிராயங்கள்
(1) அபிப்பிராயங்கள்
05-11-2012, 09:47
 - Posted by யதார்த்தன்
கணிணி தொழிநுட்பத்தின் இன்னொரு பரிமாணமான முகநூல் அiதை வைத்திருப்பவர் தனது உறவினர்கள் நம்பிக்கைக்குரிய நண்பர்களுடனான தொடர்பைப் பேணுதல் புதிய விசயங்களை கலந்துரையாடுதல் போன்றவற்றுக்கு மட்டுமே பயன்படுத்தி வருவார்களாயின் அது ஆபத்தற்றதே.ஆனால் யார் எவர் என்று தெரியாமல் வகை தொகை தெரியாமல் தொடர்புகளை ஏற்படுத்தும் போது பல சிக்கல்களை உருவாக்குகின்றது.ஒருவரின் முகநூலில் தொடர்புi உலகளாவிய நிiலைக் கொண்டிருக்குமானால் அதில் பங்காளர்களாக இருப்பவர்கள் கழுவித் துடைத்த யோக்கியர்களாகவே இருப்பார்கள் என்பதைச் சொல்லவே முடியாது.கபட எண்ணங்கள் சபல புத்தியுள்ளவர்கள் மட்டுமல்ல நல்ல மனப் போக்குடையவர்கள் சில சமயங்களில் சபலத்தில் போய் விழுந்துவிடுகின்றார்கள்.

உலகளாவிய முகுநூல் தொடர்பினால் பலரின் வாழ்வு சிக்கலுக்குள்ளாகியுள்ளாகியுள்ளன. சில தம்பதிகள் இளம் தம்பதிகள் பிரிந்துமிருக்கின்றாhர்கள்.முகநூலில் பல்துலக்குகிறேன், குளிக்கிறேன்,உடை மாற்றுகிறேன் என பதிவது வெகுளித்தனமான வேலையே.

முகநூல் வைத்திருப்பவர்களில் திருடர்களும் உண்டு,நேர்மையற்றவர்களும் உண்டு.சிலர் தமது முநூலில் 'நாங்கள் அதிகதூரத்தில் உள்ள திருமண வீட்டிற்குப் போகிறோம் திரும்பி வர மாலையாகும்' எனப் பதிவு செய்ய அநத வீடுகளில் திருட்டு இடம்பெற வாய்ப்பாகி விடுகின்றது.

திருமணத்திற்கு முன்பு பழகும் ஆண் பெண் நண்பர்கள் முகநூலில் அவற்றை புபை;படத்தடன் வெளயிட்டு 'அது நடந்தது'' இது நடந்தது'என புரிந்து புரியாத வார்தை;தைகளில் சொல்லப் போய் வேறொருவருடன் திருமணம் இடம்பெறும் போது ஆப்பிழுந்த குரங்காய் பல சம்பவங்கள் பல இடம்பெற்று வருகின்றன.

முகநூல் காத்திரமான பங்களிப்பை தர வேண்டுமென்றால் அதன் தொடர்பெல்லை கட்டுப்பாடுடையதாக இருக்க வேண்டும்.