பின்பற்றுபவர்கள்

21 மே, 2012

அமெரிக்காவின் பாதுகாப்புக்கான புதிய மூலோபாயத்தில் ஆசியா குவிமையப் படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பாதுகாப்புக்கான புதிய மூலோபாயத்தில் ஆசியா குவிமையப் படுத்தப்பட்டுள்ளது.


அமெரிக்காவின் பாதுகாப்புக்கான புதிய மூலோபாயத்தில் ஆசியா குவிமையப் படுத்தப்பட்டுள்ளது.
 ஆசியப்பிராந்தியத்தில் உருவாகும் புதிய அதிகாரக் கூட்டணிகளை விளங்குவதற்கு கிழ்வரும் மொழிபெயர்ப்புக் கட்டுரை உதவிசெய்யும். இந்த அதிகாரக் கூட்டணிகளுக்கிடையிலான மோதலையும் இவற்றின் இயங்கியலையும் உன்னிப்பாக அவதானித்து விளங்குவது தமிழர்களின் அரசியற்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும்.

US New Defense Strategy focuses Asia: Nations tied to China need re-thinking
Daya Gamage – Asian Tribune Foreign News Desk
Washington, DC. 07 January (Asiantribune.com)

ஆசியா மீது தனது முதன்மையானதும் முழுமையானதுமான கவனத்தைத் திருப்பியிருக்கும் அமெரிக்கா சீனாவை தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நாடாக இனம் கண்டுள்ள அதேவேளை தனது மூலோபாயத்தில் இந்தியாவுடனான தனது நீண்ட கால உறவுக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் சனாதிபதியும் பாதுகாப்புச் செயலாளரும் இணைந்து வெளியிட்ட அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சின் ஆவணம் ஒன்றில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
"ஆசியப் பிராந்தியத்தில் சீனாவின் வளர்ச்சியை அவதானிக்கும் போது நீண்ட காலப் போக்கில்  அதன் வளர்ச்சியானது அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விடையங்களில் பல்வேறு வகைகளில் தாக்கம் செலுத்தும் வல்லமையைக் கொண்டுள்ளதை அவதானிக்க முடிகிறது."
சீனாவை தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக எடுத்துக் கொண்டு ஆசியாவை முதன்மைப்படுத்தி பென்ரகன்வகுத்துக் கொண்டுள்ள புதிய பாதுகாப்புக்கான மூலோபாயத்தை  வெளிப்படுத்தும், பென்ரகனுக்கு அரிதான விஜயம் ஒன்றை மேற்கொண்ட ஒபாமா அவர்களால் வெளியிடப்பட்ட   ஆவணத்தில்   கீழ்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா தனது தொலைநோக்குக் கொண்ட மூலோபாயத்தில் இந்தியாவைத் தனது நீண்ட கால நண்பனாக வைத்திருப்பதற்கு முக்கியமளித்து செயற்பட்டுவருகிறது.  இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் பொருளாதார நலன்களின் நங்கூரமாக  இந்தியா விளங்குமென்பதால் அதன் வல்லமைக்கு அமெரிக்கா உதவி அளிக்கும்.மேலும் இந்துசமுத்திரத்தின் கடலோரங்களின் பாதுகாப்பை  உறுதிப்படுத்தும் நாடாகவும் இந்தியா விளங்கும்"
"அமெரிக்காவின் உலகத் தலைமைத்துவத்தைத் தக்கவைத்துக் கொள்ளல்: 21ம் நூற்றாண்டில் பாதுகாப்பு திட்டங்களில் முன்னுரிமை பெறுபவை" என்னும் தலைப்பில் வெளியிடப்பட்ட அந்த ஆவணத்தில் நீண்ட காலப் போக்கில் சீனாவை தனது பாதுகாப்பிற்கான அச்சுறுத்தலாக அமெரிக்கா இனம் கண்டுள்ளது.
கிழக்கு ஆசியாவில் ஸ்திரத்தன்மையும் அமைதியும் நிலவ வேண்டும் என நாங்கள் இருவரும்(அமெரிக்காவும் சீனாவும்) வலிமையாக விரும்புகிறோம். அத்துடன் கூட்டுறவு அடிப்படையிலான பரஸ்பர உறவை உருவாக்குவதற்கும் விருப்பத்துடன் இருக்கிறோம்.  ஆயினும் சீனாவின் இராணுவ வலிமையின் வளர்ச்சியானது அந்தப் பிராந்தியத்தில் தேவையற்ற இராணுவ முரண்பாடுகளை உரசல்களை ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்டதாக இருக்கக்கூடாது.  சீனா தனது இராணுவக் கொள்கை வகுப்பில் இந்த உரசல்களை தவிர்க்கும் மூலோபாயத்தையும் கூடவே கொண்டிருக்க வேண்டும் என அந்த ஆவணம் மேலும் தெரிவிக்கிறது.
கடந்த வியாழக்கிழமை அமெரிக்க சனாதிபதி வெளிப்படுத்திய பாதுகாப்புக்கான மூலோபாயத்தில் ஆசியாவில் அமெரிக்க துருப்புக்களின் வலிமையான பிரசன்னத்தையும் வலியுறுத்தி இருந்தார்.

பழுதடைந்து வரும் அமெரிக்காவுடனான உறவுகள் காரணமாகப் பாகிஸ்தான் சீனாவின் பக்கம் சாய்ந்து வருவதுடன் சீனாவுடன் தந்திரோபாய ரீதியான உறவுகளை ஏற்படுத்த முனைந்தும் வருகிறது. அமெரிக்கா பாகிஸ்தானுக்கான 700 மில்லியன் டொலர் இராணுவ உதவியை கடந்த மாதம் நிறுத்திவிட்டிருந்ததையும் இங்கு நினைவு கூரலாம்.
பாகிஸ்தானின் தலைமை இராணுவத் தளபதி  சீனாவுடனான உறவுகளை மேம்படுத்துவதற்கான பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவதற்காகத் தற்போது சீனா சென்றுள்ளார்.
இன்னுமொரு தென்கிழக்காசிய நாடான இலங்கை தமிழீழ விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்தை அழிப்பதற்கு உதவியதன் காரணமாக சீனாவை நோக்கி ஈர்க்கப்பட்டுள்ளது.  இந்த விடையத்தில் மேற்குலகும் அமெரிக்காவும் இலங்கைக்கு உதவுவதில் பின்நின்றதும் இதற்கு ஒரு காரணமாகும்.
கடந்த 2009 ஆண்டு மே மாதத்தில் இலங்கை சீனாவினதும் பாகிஸ்தானினதும் உதவியுடன் 26 வருடங்களின் பின்பு விடுதலைப் புலிகளை அழித்தது.

சீனாவுக்கு மிக நெருக்கமாக வந்ததில் இருந்து இலங்கை சீனாவின் உதவியுடன்  பாரிய கட்டுமானத்திட்டங்களைச் செய்துள்ளது. குறிப்பாகத் தென் ஆசியக் கடற்பிராந்தியத்தின் முக்கியமான கடல் வழியில் அமைந்திருக்கும் அம்பாந்தோடடைத் துறைமுகத்தில் ஆழ்கடல் துறைமுகமொன்றை அமைத்ததன் மூலம் சீனா அமெரிக்காவை எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளது.
ஆசியா தொடர்பான அமெரிக்கக் கொள்கைகள் மாற்றமடைந்துள்ளதால் சீனாவுடன் நெருக்கமாக உறவுகளைப் பேணிவரும் நாடுகள் சீனாவுடனான தமது உறவை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்ற செய்தியும் அந்த ஆவணத்தில் வளங்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 2009 இல் அமெரிக்க வெளிநாட்டு உறவுகளுக்கான அமெரிக்க செனற்சபையின் குழு அமெரிக்க இராசாங்கத்திணைக்களத்தை இலங்கையை சீனாவை நோக்கி தள்ள வேண்டாம் என எச்சரித்திருந்தது.  ஆசியாவில் பேணப்படவேண்டிய ஒட்டுமொத்தமான அமெரிக்க நலன்களுக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை முக்கியமானது என அக்குழு மேலும் எச்சரித்திருந்தது. எட்டுப் பக்கங்களைக் கொண்ட  அந்த ஆவணத்தில் உள்ள  முக்கியமான ஒரு பகுதி கீழே தரப்படுகிறது.

மேற்கு பசுபிக் பிராந்தியத்தில் தொடங்கி கிழக்கு ஆசியா மற்றும் இந்து சமூத்திரப் பிராந்தியத்தினூடாகத் தென் ஆசியா வரைக்கும் பரவிக் கிடக்கிற ஒரு வளைவினுள் நிகழும் விடையங்களுடன் அமெரிக்காவின் பொருளாதார மற்றும் இராணுவ நலன்கள் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன.  இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்க நலன்களுக்கான சந்தர்ப்பங்களும்  சவால்களும் ஒன்றாக இணைந்து கிடக்கின்றன..
அமெரிக்க இராணுவம் உலகத்தின் பாதுகாப்புக்காக பங்களித்துக் கொண்டிருக்கும் அதே நேரம் ஆசிய பசுபிக் பிராந்தியத்தினை மீளச் சமநிலைப்படுத்தும் அவசியத்தை உணர்ந்துள்ளோம். ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் எதிர்கால ஸ்திரத்தன்மைக்கும் வளர்ச்சிக்கும் எமது ஆசிய நண்பர்கள் மற்றும் முக்கிய பங்காளிகளுடனான உறவு முக்கியமானதாகும். அதுமட்டுமன்றி எற்கனவே உள்ள எமது கூட்டணிகளையும் நண்பர்களையும் வலுப்படுத்தவும் செய்வோம் என்னெனில் இது ஆசிய பசுபிக் பாதுகாப்புக்கான உயிரோட்டமான அடித்தளத்தைத் தரும்.
மேலும் நாங்கள் எங்களது கூட்டுறவு வலைஅமைப்பை ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் புதிதாக மேலெழுந்துவரும் நண்பர்களுக்கும் விஸ்தரிக்க விரும்புகிறோம்.  இதன் மூலம் எங்களுக்கும் அவர்களுக்குமான பொதுவான நலன்களை பேணும் வல்லமையையும் எங்கள் அனைவரினதும் கொள்ளளவையும் அதிகரிக்க முடியும். அதுமட்டுமல்ல அமெரிக்கா தனது தொலைநோக்குக் கொண்ட மூலோபாயத்தில் இந்தியாவைத் தனது நீண்ட கால நண்பனாக வைத்திருப்பதற்கு முக்கியமளித்து செயற்பட்டுவருகிறது.  இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் பொருளாதார நலன்களின் நங்கூரமாக  இந்தியா விளங்குமென்பதால் அதன் வல்லமைக்கு அமெரிக்கா உதவி அளிக்கும்.மேலும் இந்துசமுத்திரத்தின் கடலோரங்களின் பாதுகாப்பை  உறுதிப்படுத்தும் நாடாகவும் இந்தியா விளங்கும்
அமைதியைப் பேணுவதற்கும் ஸ்திரத்தன்மை மற்றும் தடங்கலற்ற வர்த்தகம் என்பவற்றை இந்தப் பிராந்தியத்தில் பேணுவதற்கும் இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் வெல்வாக்கைப் பேணுவதற்கும் அடிப்படையானதாக அமெரிக்க இராணுவத்தின் பிரசன்னத்தையும் கொள்ளவையும் இந்தப்பிராந்தியத்தில் சமநிலையுடன் பேணுவது தேவையாக இருக்கிறது.  நீண்ட காலப் போக்கில் இந்தப் பிராந்தியத்தில் சீனாவின் எழுச்சி அமெரிக்காவுடன் பொருளாதார மற்றும் பாதுகாப்பு நிலைமைகளில் மீது பல்வேறு விதமான தாக்கங்களை உண்டுபண்ணக் கூடியதாக அமைகிறது. கிழக்கு ஆசியாவில் ஸ்திரத்தன்மையும் அமைதியும் நிலவ வேண்டும் என நாங்கள் இருவரும்(அமெரிக்காவும் சீனாவும்) வலிமையாக விரும்புகிறோம். அத்துடன் கூட்டுறவு அடிப்படையிலான பரஸ்பர உறவை உருவாக்குவதற்கும் விருப்பத்துடன் இருக்கிறோம்.  ஆயினும் சீனாவின் இராணுவ வலிமையின் வளர்ச்சியானது அந்தப் பிராந்தியத்தில் தேவையற்ற இராணுவ முரண்பாடுகளை உரசல்களை ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்டதாக இருக்கக்கூடாது.  சீனா தனது இராணுவக் கொள்கை வகுப்பில் இந்த உரசல்களை தவிர்க்கும் மூலோபாயத்தையும் கூடவே கொண்டிருக்க வேண்டும்.
பிராந்தியங்களுக்குள் தங்குதடையின்றிப் பிரவேசிக்கவும் அதேவேளை சர்வதேசச் சட்டங்களை மதித்துக்கொண்டு பிரதேச இறையாண்மைக்கு குந்தகம் செய்யாதவாறு செயற்படவும் எங்களுக்குள்ள சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு தேவையான சகல முதலீடுகளையும் நாங்கள் செய்வோம்
எமது பங்காளிகளுடனும் நண்பர்களுடனும் மிக நெருக்கமாக இணைந்து வேலை செய்வதன் மூலம் நாங்கள் தெளிவான விதிகளுக்கு உட்பட்ட ஒரு உலக ஓழுங்கை உண்டாக்குவோம்.  இந்த ஒழுங்கு புதிதாக வரும் அதிகாரசக்திகள் அமைதியான முறையில் மேற்கிளம்பும்  அதேவேளை பிராந்தியங்களின் ஸ்திரத்தன்மை பேணப்படுவதையும் உறுதி செய்யும்.  இதன் மூலம் பொருளாதாரம் பன்முகப்படுவதுடன் பாதுகாப்பு தொடர்பான திட்டவட்டமான  பரஸ்பர ஒத்துழைப்பும் ஏற்படுத்தப்படும்.
சைபர் வெளியிலும் விண்வெளியிலும் வினைத்திறனுடன் தொழிற்படுதல்
நவீன இராணுவம் ஒன்று சைபர் வெளியிலும் விண்வெளியிலும் பாதுகாப்பான உள்ளிடலையும் தங்கு தடையற்ற அனுமதியையும்  கொண்டிருக்க வேண்டியதுடன் நம்பகத்தன்மையான தகவல்களையும் தகவற்பரிமாற்ற வலையமைப்பையும் கொண்டிருக்க வேண்டும்.  இல்லாவிடின் நவீன இராணுவத்தினால் வினைத்திறனுடன் செயற்படமுடியாது. இன்றைய விண்வெளித் திட்டம் மற்றும் அதனை பேணும் உள்நாட்டு மற்றும் சர்வ தேசக் கட்டமைப்புக்கள் பல்வேறு விதமான பயமுறுத்தல்களுக்கு உள்ளாகி இருக்கின்றன.  இந்தத் திட்டங்களை உடைத்தல் இடையீறு செய்தல் அல்லது அழித்தல் போன்ற பயமுறுத்தல்களுக்குச் சாத்தியமுள்ளது.  எனவே அமெரிக்காவின் பாதுகாப்புத் திணைக்களம் தனது உள்ளூர் மற்றும் சர்வதேச கூட்டாளிகளுடன் இணைந்து சைபர் வெளியையும் விண்வெளியையும் அதன் வலை அமைப்புக்களையும் பாதுகாப்பதற்கான அதி நவீனமான வசதிகளை ஏற்படுத்துவதற்கு முதலீடு செய்யும்.

சைபர் வெளியிலும் விண்வெளியிலும் வினைத்திறனுடன் தொழிற்படுவது என்று கூறுவதன் மூலம் அமெரிக்கா உலகின் ஏனைய பகுதிகளைப் போல ஆசியாவிலும் தனது ஆளில்லாத வேவு விமானங்களைப் பயன்படுத்தி இந்தப் பிராந்தியத்தைக் கண்காணிப்பதை தீவிரப்படுத்தப் போவதை அறிவிகிறது.

இதே வேளையில் சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து, தங்களுக்கிடையிலான இராணுவ உறவுகளை வலுப்படுத்துவதுடன் தங்களுக்கிடையிலான இராணுவ உறவுகளைப் புதிய ஒரு நிலைக்கு எடுத்துச் செல்லப்போவதாக  கடந்த ஜனவரி 5 இல் பாகிஸ்தானின் இராணுவத்தளபதி கயானி (Ashfaq Parvez Kayani) சீனாவிற்கு விஜயம் செய்து சீன உயர்மட்ட இராணுவத் தளபதிகளைச் சந்தித்துப் பேசியதன் பின்னர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளன.  இதனை சீன அரசால் நடத்தப்படும் சின்குவா செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. 
சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வியாங் குவாஸ்லீ(Liang Guanglie) சீனா பாகிஸ்தானுடனான மரபார்ந்த நட்புணர்வைப் பெறுமதியானதாகக் கணிக்கிறது என அவ் அறிக்கையில் கூறி இருந்தார்.  மேலும் சீனா தேசியப் பாதுகாப்பு என்ற தளத்தில் பாகிஸ்தானுடன் நடைமுறைச் சாத்தியமான அதேவேளை வினைத்திறன் மிக்க கூட்டுறவை வளர்க்க விரும்புகிறது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இரண்டு நாடுகளுக்கிடையிலும் நிலவும் இந்த எல்லாக்கால நிலையிலும்(எந்தச் சூழ்நிலையிலும்) நீடிக்கக் கூடிய பரஸ்பர உறவானது இரண்டு நாடுகளினதும் அடிப்படையான நலன்களுக்கு அவசியமானதும் தந்திரோபாய அடிப்படையிலான தெரிவுமாகும் எனச் சீனப் பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார். 
சீனா பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத் தன்மையையும் பாகிஸ்தானுடன் இணைந்து பாதுகாக்கும் எனவும் இரு நாடுகளின் பாதுகாப்புக்கும் அபிவிருத்திக்கும் பங்களிக்கும் எனவும் அவர் தெரிவித்தருந்தார்.
பாகிஸ்தானின் இராணுவத் தளபதி ஜெனரல் கயானி (Gen Ashfaq Parvez Kayani) தனது பங்குக்கு சீனாவுடனான உறவில் பாக்கிஸ்தான் பெரும் முக்கியத்துவத்தை இணைத்துக் கொண்டுள்ளது எனக்குறிப்பிட்டுள்ளார். பிராந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் இரு நாடுகளுக்கும்  பொதுவாக பெருமளவான நலன்கள் உள்ளன என்றும்  அவர் கூறியுள்ளார்.
இவற்றுக்கு முன்பதாக பாகிஸ்தானின் இராணுவத்தளபதி  சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் துணைத் தலைவரான ஜெனரல் மா ஷீஒசியான்(Ma Xiaotian)அவர்களுடனும் பேச்சுவார்தைகளை நடாத்தி இருந்தார்.
இரண்டு நாடுகளும் தமக்கிடையில் இராணுவப்பாதுகாப்பு பயிற்சிகள் ஆட்புலப்பயிற்சிகள் புலமைப்பரிமாற்றங்கள் உபகரண உருவாக்கம் மற்றும் கட்டமைப்பு போன்ற விடையங்களிலும் மரபு வழியற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் இணைந்து செயற்படப்போவதை வெளிப்படுத்தியுள்ளன.

நன்றி: Asian Tribune
http://www.asiantribune.com/news/2012/01/06/us-new-defense-strategy-focuses-asia-nations-tied-china-need-re-thinking

பிரபாகரன் இல்லாத இரண்டரை வருடங்கள்...


பிரபாகரன் இல்லாத இரண்டரை வருடங்கள்... குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக -   தேவ அபிரா

வடபகுதி மக்கள் தமது உரிமைகளுக்காகவே போராடினார்கள். விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை தவறில்லை. வடக்கு மக்கள் நாட்டைப்பிரிக்கப் போராடவில்லை (கிழக்கு மக்கள் போரடவே இல்லையோ?) என மூன்று விடையங்களைத் தொட்டுத்தொடங்கி இறுதியில் இன ஒற்றுமையில் முடியும்  வகையில் ஒரு பேச்சை இலங்கை அரசின் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க கிழக்கு மாகாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாநிகழ்வில் பேசியிருந்தார். பல்வேறு முரண்களைக் கொண்ட அந்தப்பேச்சின் நோக்கம் என்னவென்பது அந்தச்செய்தியை வாசிப்பவர்களுக்குத் தெரியும். விடுதலைப்புலிகள் உயிரோடு இருக்கும் போது இவற்றைக் கூறியிருந்தால் சிலவேளை அர்த்தமிருந்திருக்கும். மேலும் சிங்கள அரசியல்வாதிகள் பேசுவதற்கும் செய்வதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை யாவரும் அறிவர். என்ன இருந்தாலும் பிரபாகரன் இல்லை என்ற துணிவில் தானவர் பேசியிருக்கிறார் என்றே பலரும் கருதுகின்றனர். பிரபாகரன் இல்லையென்பதால்தான் வடக்குகிழக்குக்கு வந்து இன ஒற்றுமையைப்பற்றிப் பேச எவருக்கும் முடிகிறது என்ற உண்மையை ஒத்துக்கொள்ள மறுப்பவர்களும் இருக்கிறார்கள். 

இன ஒற்றுமை என்பது தமிழ்த் தேசியத்தின் சயனைட்”  அல்ல என்பதைப் புரிந்துகொள்வது எங்களில் பலருக்குக் கடினமாகவே இருக்கிறது. ஆனால் இன ஒற்றுமை பற்றி யார் பேசுகிறார்கள் எந்த நிபந்தனைகளின் கீழ் எந்த உத்தரவாதங்களின் கீழ் ஒற்றுமையாக இருக்கக் கோருகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வது மூன்று தசாப்தங்களின் பின் எளிதாகவும் இருக்கிறது. இதனால் தான் திசநாயக்கா போன்றவர்களினது பேச்சு வாவிக்காற்றோடு போச்சு.

பொங்கல் நாளன்று பத்திரிகையில் வெளிவந்த படங்களில் இலங்கையின் அதிபர் ராஜபக்ஷவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணாவும் (ஒவ்வொரு வருகையின் போதும் பேசுவதும் பூசுவதுமாக இருப்பவர்கள் இவர்கள்.) பொங்கற் பானையில் அரிசியிட்டுக் கொண்டிருந்தார்கள். எனக்கோ அவர்கள் எங்களுக்கு  வாய்க்கரிசி போடுவது போலத்தெரிந்தது.

சிலவேளை புலிகளின் கணக்குச்சரிவந்து பெருமளவு மக்கள் கொல்லப்படுவதைப்பார்த்து உலகம் வெகுண்டெழுந்து ஈழத்தைப் பிரித்தெடுத்துக் கொடுத்திருக்குமென்றால் முல்லைத் தீவிலோ முள்ளியவளையிலோ வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவில் முன்றலிலோ ஈழத்தின் அதிபர் பிரபாகரன் பொங்கற்பானயில் அரிசி இட்டிருப்பார். அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் அல்லது திரு எரிச் சொலஹெய்ம் அவர்களும் கூடவே பொங்கற்பானையில் அரிசி இட்டிருப்பார்.

உலக ஒழுங்கு எங்கள் பொங்கலை இப்படி மாற்றிவிட்டது.

பிரபாகரன் இல்லாத கடந்த இரண்டரை வருடங்களைத் திரும்பிப்பார்க்கிறோம். போரில்லாத இரண்டரை வருடங்களைத் திரும்பிப் பார்க்கிறோம். போர் இருந்ததினால் சந்தோசமாக இருந்தவர்களும் போர் இல்லாதபோதும் சந்தோசமாகவே இருக்கிறார்கள். பிரபாகரன் செய்யாதவற்றை செய்யப்போவதாகவும்  பிரபாகரன் வழங்காதவற்றை வழங்கப் போவதாகவும் கூறிப் போரை முடித்தார்கள். பிரபாகரன் விட்டுச் சென்றிருந்தவைகளையும் பூண்டோடு அழித்துவிட்டார்கள். யாழ்ப்பாண மாநகர சபையில் கொடிகட்டிப்பறக்கும் சனநாயகத்தோடு வாழ்வு வழமைக்குத் திரும்பி விட்டது. வழமைக்கு திரும்புதல்என்பதிலேயே எல்லாம் அடங்கி இருக்கிறது. தமிழர் வாழ்வில் எதுவெல்லாம் வழமையாக இருந்தனவோ அவையெல்லாம் திரும்பிவிட்டன. பிரபாகரன் போராட்டத்தைப் போராக்கினார். போர் வழமைகளை மறக்கச்செய்திருந்தது. இப்பொழுது ...

யுத்தம் முடிந்து சந்தைகள் திறந்து விடப்படிருக்கின்றன (சீதனச்சந்தையும்) பாதைகள் திறந்து விடப்பட்டிருகின்றன. எந்தப்பாதைகள்... எவற்றுக்கான பாதைகள்... எல்லாப்பாதைகளும்... (மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்த வீடுகளுக்கும் வேர்களுக்குமான பாதைகள் என்னவோ மூடித்தான் கிடக்கின்றன.) சிங்கள மக்கள் சுற்றுலா வருகிறார்கள். புத்தபகவான் பாதை நெடுகிலும் அவர்களுக்காகக் காத்துக்கிடக்கிறார். சிங்கள வியாபாரிகள் தோள்களிற் பொருட்களைச்சுமந்து சென்று ஊரெல்லாம் விற்கிறார்கள்.

முஸ்லிம்மக்களும் மெதுவாக  வடக்கு நோக்கி திரும்புகிறார்கள் நண்பர்களற்ற சூனியத்திற் தாங்கள் விட்டுச் சென்றவற்றை மீண்டும் தேடுவது கடினமென்றும் உணர்கிறார்கள்.
 வன்னி உன்னி எழும்பவும் முடியாது நொடிந்து கிடக்கிறது. ஏழைகள் விவசாயிகள் என அதிகமானவர்கள் தற்கொலை செய்கிறார்கள் அல்லது பிச்சை எடுக்கிறார்கள்.

ஆண்கள் தமது விந்துகளைச் சிந்துவதற்கு அனாதரவான  பெண்களைத் தேடித்திரிகிறார்கள். பெண்கள் விளைந்த சிசுக்களை வீசுவதற்கு பற்றைகளை அல்லது பாழும் கிணறுகளைத் தேடித்திரிகிறார்கள்.
நான்காம் ஈழப்போருக்கு மாணவர்களை அனுப்பிய பாடசாலை அதிபர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கல்வி அதிகாரிகளாகி இருக்கிறார்கள் அல்லது பதவி உயர்வு பெற்றிருக்கிறார்கள். இன்னும் பல அதிகாரிகள் கொள்ளை அடிக்கிறார்கள், அடி வருடுகிறார்கள் அல்லது அடியை வருடக் கொடுக்கிறார்கள். சில அதிகாரிகள் பெண்களின் மார்புகளைப் பிடிக்கிறார்கள் அல்லது பிருஷ்டங்களைப் பிடிக்கிறார்கள். அல்லது சிவனே என்று இருந்து விடுகிறார்கள். 

இறுதிவரையும் தலைவணங்காத முன்னாட் போராளிகளிற் சிலர் சிறைகளில் சித்திரவதைபடுகிறார்கள் அவர்களின் ஈனக்குரல்களின் அதிர்வு மிக அதிகமென்பதால் நாய்களுக்கு மட்டுமே கேட்கிறது. அவையும் ஈழமெங்கும் பரவிக்கிடக்கும் இராணுவ முகாம்களில் இருந்து கிடைக்கும் இறைச்சித் துண்டுகளால் இந்திய ராணுவகாலம் போல் அதிகம் குரைப்பதில்லை. மேலும் முன்னரைப் போல் இப்போது நாய்களுக்கு மொழிப்பிரச்சனையும் இல்லை.
விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மரத்துப்போன சமூகத்துள் எறியப்பட்டிருக்கிறார்கள். ஆயினும் பெண் போராளிகளுக்கான வாழ்க்கைத் துணையை தேடும் சங்கமொன்றும் புலம் பெயர்ந்தவர்களால் ஆரம்பிக்கப்பட்டிருகிறது.

கவிஞர்கள் மூடிவைத்திருந்த பெட்டகங்களுள் இருந்து கவிதைகளை எடுத்துத் தூசு தட்டி வெளியிடுகிறார்கள். எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். பதிப்பகங்கள் புதிய அடையாளங்களைத் தேடுகின்றன. முகப்புத்தகம் நிறைகிறது. புலிஆதரவு /புலிஎதிர்ப்பு, சிங்களஆதரவு /சிங்களஎதிர்ப்பு, முஸ்லீம்ஆதரவு/முஸ்லீம் எதிர்ப்பு, தமிழ்ஆதரவு/தமிழ் எதிர்ப்பு என முகாம்கள் வலுக்கின்றன.

புலம்பெயர்ந்தவர்கள் பயமின்றி நாடு திரும்புகிறார்கள், காசை அள்ளி வீசுகிறார்கள், முதியோர் இல்லங்களைக் கட்டுகிறார்கள் அல்லது உல்லாச விடுதிகளைத் திறக்கிறார்கள். காலம்கடந்த செல்லிடப்பேசிகளை அல்லது கணணிகளை உறவினர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்து திட்டுவாங்குகிறார்கள். புலம் பெயர்ந்ததிலிருந்து உறவுகளுக்கு பணம் அனுப்பியவர்கள் அன்பின் விலை அதிகரித்திருப்பது கண்டு மனம் உடைந்து போகிறார்கள்.

நாடு கடந்த அரசாங்கமோ புதிய உலக ஒழுங்கைத்தேடி பூதக்கண்ணாடியுடன் அலைகிறது. புலிகளின் பினாமிகளோ பிரபாகரன் வரும் வரை சொத்துக்களைப் பாதுகாத்து அவரிடம் மட்டுமே ஓப்படைப்போம் எனத் தியாகவுணர்வுடன் இருக்கிறார்கள். ஆனால் பிரச்சனை என்னவெனில் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் திரும்பி வருவாரேயானால் வடக்கில் இந்திய அரசின் துவிச்சக்கர வண்டிகளைப் பெறுவதற்கு இலங்கை இராணுவத்தின் அனுமதியை அவர் பெற வேண்டியிருக்கும்.
குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக -   தேவ அபிரா
18/1/2012

அரசியல் வியாபாரம்..


அரசியல் வியாபாரம்...குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவஅபிரா

அரசியலுக்கும் வியாபாரத்துக்கும் எதாவது தொடர்பிருக்கிறதா? அல்லது இரண்டும் ஒன்றுதானா? அல்லது இரண்டுக்கும் உள்ள நோக்கமென்ன? இந்தக் கேள்விகளுக்குப் பதிலை இப்பத்தி முடிவில் தேடுவது உங்கள் பொறுப்பு.
ஏனேனில் ஒருகாலத்தில் அரசியல் விடுதலைக்கானது என்னும் தோற்றமாவது இருந்தது. வியாபாரம் கூட விடுதலைக்கு அவசியமானது என்று கூறப்பட்டு நடாத்தப்பட்டது. கடந்த ஆறு தசாப்தங்களாக தமிழ்மக்களின் விடுதலையையும் வியாபாரத்தையும் ஒவ்வொருவராக் குத்தகைக்கு எடுக்க முயன்ற வியாபாரிகள் எல்லோருமே எப்படியெல்லாமோ அழிந்து போனார்கள் அல்லது அழிக்கப்பட்டார்கள்.
இப்போது விடுதலையைப்பற்றி யாரும் சிந்திப்பதில்லை. விடுதலை அரசியல் பற்றியோ அரசியல் விடுதலை  பற்றியோ இனிவரும் தலைமுறைக்குத் தெரியப்போவதில்லை. விடு-தளை விடு-தலையாகிப்போன பின்னர்  பிழைப்பைப்பார்ப்பதே- வியாபாரத்தைப்பார்ப்பதே அவசியமாகிப்போய்விட்டது. ஆனால் துன்பமானது என்னவேனில் எல்லோருமே மக்களை வைத்துப் பிழைக்க முனைவதுதான். மக்களை வைத்து வியாபாரத்தை இரண்டு முறைகளில் செய்யலாம்.

கீழே இரண்டு வியாபாரக்கதைகள்.
அண்மையில் எனது நண்பர் ஒருவர் இந்தியாவுக்குச் சென்றிருந்தார். இந்தியாவில் இருந்து சில பொருட்களை  இறக்குமதி செய்து நெதர் லாந்தில் விற்பதுதான் அவரது நோக்கம். இந்தியாவில் எற்கனவே வங்கிக் கணக்கொன்றையும் ஆரம்பித்திருந்த அவர் நெதர்லாந்தில் இருந்து தனது இந்திய வங்கிக் கணக்குக்கு பணத்தையும் அனுப்பிவிட்டு இந்தியாவுக்குப் போனார். கொள்வனவு செய்ய வேண்டிய பொருட்களைத் தெரிவு செய்தபின்னர் அவற்றுக்கு பணம் செலுத்த முற்பட்ட போதுதான்  நெதர்லாந்தில் இருந்து தான் அனுப்பிய பணம் இன்னும் தனது இந்திய வங்கிக்கணக்குக்கு வந்து சேரவில்லை என்பது தெரிந்தது.
உடனடியாக இந்தியவங்கியுடன் தொடர்புகொண்ட போது அந்த வங்கி முகாமையாளர் உங்கள் பணம் வந்திருக்கிறது. ஆனால் அதனை உங்கள் கணக்கில் இடுவதற்கு ஒரு தடை இருக்கிறது. நீங்கள் கணிசமான அளவு பணத்தை முதன்முதலாக இந்தியாவுக்கு அனுப்புவதால்  பயங்கரவாதிகளின் பணப்பரிவர்த்தனையைக் கண்காணிக்கும் சட்டவிதிகளின் கீழ் உங்களைக் கண்காணிக்க வேண்டியிருக்கிறதுநெதர்லாந்தில் இருக்கும் உங்கள் வங்கி உங்களைப்பரிந்துரைக்குக்கும் கடிதமொன்றை எங்களுக்கு அனுப்பவேண்டும். அதற்கான நடவடிக்கையை துரிதமாக மேற்கொண்டால் உரிய நேரத்தில் உங்கள் பணத்தை நீங்கள் பயன்படுத்த முடியுமென்றார். நண்பர் உடனடியாகவே தொலை பேசியூடாக நெதர்லாந்து வங்கியுடன் தொடர்பு கொண்டார். ஆவன செய்யப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் எதுவும் நிகழவில்லை. நண்பர் நெதர்லாந்தில் தனது வங்கிக் கணக்கிருக்கும் கிளைக்கு தனது கணக்காளரை அனுப்பி நிலைமையை விளங்கப்படுத்தினார். ஆனால் கிளைப்பொறுப்பாளர் வங்கிக் கணக்குக்குரியவர் நேரில் வந்தாலேயே பரிந்துரைக்கடிதத்தை வழங்க முடியும் எனக் கூறிவிட்டார். வேறு வழியின்றி எனது நண்பர் நெதர்லாந்து திரும்பி பரிந்துரைக்கடிதத்தைப் பெற்று இந்தியாவுக்கு அனுப்பிப் பணக்கொடுக்கல் வாங்கல்களையும் இறக்குமதியையும் முடித்துக்கொண்டார். ஆனாலும் பல வருடங்களாக குறித்த வங்கியின் வாடிக்கையாளராக இருக்கும் எனது நண்பருக்கு கோபம் தாங்கவில்லை. தனது வங்கியின் வாடிக்கையாளனின் நலன்களைப்பற்றி பற்றிக் கவலைப்படாத தான் தோன்றித்தனமான நடவடிக்கை குறித்துக் கோபம் கொண்டு வங்கித் தலைமையகத்திற்குக் கடிதமொன்று எழுதினார்.
என்னை நன்கு தெரிந்திருந்தும் எனது கணக்காளரை அனுப்பி விளக்கமளித்த பின்பும் எனக்குப் பரிந்துரைக்கடிதத்தை அனுப்பாதபடியினால் எனது இந்தியப்பயணம் முழுவதும் வீணாகிப்போனது. எனது பயணச்செலவு எனது தங்குமிடச்செலவு எனது தொடர்பாடற் செலவு என எனக்கு ஏற்பட்ட நட்டத்திற்கு யார் பொறுப்பு எனக் கடுப்பான கடிதமொன்றை எழுதினார்.
அதனை வாசித்த தலைமையகம் தவறுக்கு மன்னிப்புக் கோரியதுடன் அவருக்கு  ஏற்பட்ட அனைத்துச் செலவுகளையும் ஈடுகட்டியும்  விட்டது. இந்தச்சம்பவத்தைக் கூறி இதெல்லோ ஜனநாயகம் என்று என் நண்பர் கூறினார்.
இது ஜனநாயகமல்ல முதலாளித்துவ வியாபாரம். நல்ல சேவையை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளனைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பும் வியாபாரக்குறிக்கோள். அது மட்டுமல்ல தமது தவறைச் சரி செய்வதன் மூலம் இன்னும் பல வாடிக்கையாளர்களை தம்மை நோக்கி திரும்ப வைக்கும் வியாபார உத்தி. இது ஒரு வியாபாரம்.

இன்னுமொரு வியாபாரம் அரசியல் வியாபாரம். சரி இப்போ அரசியல் வியாபாரமாகிறதென்று வைப்போம். அவ்வாறெனின் நல்ல சேவையை வழங்குவதன் மூலம் வாக்காளனைத் தன்னை நோக்கி வரவைப்பதுவும் வாக்காளனின் நலன்களை தொடர்ந்து பேணுவதும்தானே  அரசியல் வியாபாரத்தின் நோக்கமாக இருக்க முடியும். அப்படிதான் நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் இந்தப்பருப்பு இலங்கையில் வேகாது.
மக்கட்சமூகத்தின் பிரச்சனைகளைப் புரிந்துகொண்டு அவற்றை முதன்னிலைப்படுத்திவேலை செய்யும் அரசியல் வியாபாரம் பற்றி இலங்கை அரசியல்வாதிகள் குறிப்பாக பிரபாகரனைக்கொன்று தங்களுக்கான சனநாயகத்தைக் கொண்டு வர விரும்பிய தமிழ் அரசியல் வாதிகள் கேள்விப்பட விரும்புவதில்லை.
அரசியல் வாதிகளின் விருப்பு வெறுப்புகளைப்புரிந்து கொண்டு மக்கள்தான் அவர்களின் வாலைப்பிடிக்கவேண்டும் அல்லது விழுந்தடித்து ஓடிப்போய் மாலையைப் போடவேண்டும். இவ்வாறு தான்  இலங்கையில் எல்லாம் நடக்கின்றன.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் ஊர்வலமாகச் சென்று தமது பிரச்சனைகளை முன்வைத்த போது தனக்கு வாக்களிக்காததால்தான் அவர்கள் அனாதரவாக நிற்பதாக அரச அதிகாரத்தின் அலகாக இருக்கும் ஒரு அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
மக்கள் யாருக்கு வாக்களித்தார்களோ அவர்களிடம் அதிகாரமில்லை. அவர்களுக்கு அதிகாரங்கள் ஒருபோதும் கொடுக்கப்படப்போவதுமில்லை. அதிகாரத்திலிருப்பவர்களுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை என்பதால் கைவிடப்பட்டுள்ளார்கள்.
வளங்களையும் வாய்ப்புக்களையும் அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு சாதகமாகப்பயன்படுத்துவதை அரசியலில் சகஜம்  என்கிறார்கள். இந்தச் சகஜங்கள் வேண்டாமென்றுதானே விடுதலை கேட்டோம். அல்லது இந்தச் சகஜங்கள் இல்லாத வாழ்வையும் அதிகாரத்தையும் தானே விடுதலையென்றோம்.
இந்தப் பாழாப்போனவாய் திரும்பவும் விடுதலையென்று புலம்பத்தொடங்கி விட்டது. போகட்டும் விடுதலை. அரசியல் வியாபாரத்தையென்றாலும் சரியாகச் செய்தாலென்ன?
அரசு மக்களுக்கானதுஉண்மையான அரசு இன மத சாதி மற்றும் பிரதேச வாதங்களின் அடிப்படையில் தொழிற்படுவதில்லைஅரசை நிர்வகிக்கும் கட்சிகள் வளங்களையும் அதிகாரத்தையும் தமது விருப்பங்களின் அடிப்படையிற் பயன்படுத்துமெனில் சனநாயகம் செத்துவிடும். இந்தவகையில் பிரபாகரன் பிறக்கமுன்னரேயே இலங்கையில் சனநாயகம் செத்து விட்டதென்று எவரும் உணர்வர். இது இவ்வாறிருக்கப் பிரபாகரன் கொல்லப்பட்டதும்  இலங்கையில் சனநாயகம் திரும்பிவரும் எனப் புளுகியவர்கள் பெருகி அவரவர்கள்  புஜங்கள் முறுகியதே மிச்சம்.
மக்கள் யாருக்கு வாக்களித்தார்களோ அவர்களது அரசியல் வியாபாரமும் வெளிப்படையாக இல்லை. பேட்டை ரவுடியில் இருந்து உலகச்சண்டியன் வரைக்கும் போய் முறையிடுகிறார்கள் விளக்கமளிக்கிறார்கள். சொந்த மக்களுக்கு ஒரு சொல்விளக்கம் சொல்கிறார்கள் இல்லை. கேட்டால் மானத்தை விற்கமாட்டொம் பயப்படவேண்டாம் என்கிறார்கள். மானத்தைப்பற்றி யார் கேட்டது மத்தியகுழுவுக்குள்ளே வைத்து விடுதலைப்போராட்டம் நடத்திய காலங்கள் எப்படிப்போயினவென்று தெரியாதா என்ன?
நெற்றியில் பட்டையாய் இழுத்து அணிந்து சாமி வேடம் போடத்தேசியம் என்ன திருநீறா அல்லது தேர்தல் காலத்தில் வந்து வாக்குப்போடு வேலைதாறன் என்று கேட்கத் தேசியம் என்ன மண்ணாங்கட்டியா?
மக்கள் அநீதிகளைக்கண்டு சும்மாயிருக்கவில்லை கோபப்படுகிறார்கள் கொந்தளிக்கிறார்கள் ஊர்வலம் போகிறார்கள். ஆனால் வழிப்படுத்த எவருமின்றி மிரட்டல் அரசியல் வியாபாரிகளின் முன்பு தனித்து நிற்கிறார்கள்.
மக்களின் பிரச்சனைகளுக்கு ஒழுங்கான சனநாயகப் போராட்ட வடிவங்களைக் கொடுக்கிற அதேவேளை அவர்களின் நலன்களுக்காகப் பேசுகிறோம் என நினைக்கிற ஒவ்வொரு சொல்லையும் அவர்களின் முன் வைக்கிற அரசியல் வியாபாரத்தைச் செய்யாத வரை எங்களுக்கு விடிவில்லை. திரைமறைவில் பேசுகிற எல்லாவற்றையும் அது இராசதந்திரம் என்று கொடுப்புச் சிரிப்போடு சொல்ல அதைக்கேட்டு அமிர்தலிங்கம் காலத்துத் தமிழர்கூடச் சொக்கிப்போகவில்லை.
தமிழ் மக்களுக்குத் தேவையானது பாராளுமன்ற சனநாயகமல்ல. பங்குபற்றும் சனநாயகம்.
அண்மையில் அரசியல்வாதி ஒருவர் அதிகாரிகள் - அரசியல்வாதிகள் - பொதுமக்களுக் கிடையிலான இடைவெளி குறைய வேண்டும் என கூறியிருக்கிறார். அதன் முழு அர்த்தத்தையும் விளங்கிக் கொண்டு கூறியிருந்தால் நல்லது குறைந்தபட்சம் மக்கள் நலனை மையப்படுத்தும் அரசியல் வியாபாரத்துக்கான முதலாவது  படியாக அது அமையட்டும்.

குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவஅபிரா
05/02/2012