பின்பற்றுபவர்கள்

28 ஜூன், 2009

துப்பாக்கி அரக்கரும் மனிதனின் விதியும்

"நாளைய கனவுகள் இன்று கரைந்தன
நேற்றைய உணர்வுகள் இன்று சிதைந்தன
காக்கி உடையில் துப்பாக்கி அரக்கர்
தாண்டவம் ஆடினர்
ஒரு பெரும் நகரம் மரணம் அடைந்தது."

- ஏம்.ஏ.நு•மான்

பல ஆண்டுகளுக்கு முன் நு•மான் எழுதிய கவிதை இன்று இப்படியாகிப் பொருந்திப்போனது.
இலங்கை அரசு பயங்கரவாதத்தை வென்றுவிட்டது என்று சொல்லிக் கொள்கிறது ஆனால் அது விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு எல்லாவிதமான பயங்கரவாதங்களையும் செய்துகொண்டிருக்கிறது. எதையெல்லாம் செய்யக்கூடாதோ அதையெல்லாம் செய்துகொண்டிருக்கிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குள்ள எந்த கடமையையும் சரியாகச் செய்யாத ஒரு அரசாங்கத்திடம் விடுதலைப்புலிப் போராளிகள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுச் சரணடைய நேர்ந்தது வரலாற்றுத் துயர்.
விடுதலைப்புலிகள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததை யாவரும் அறிவர். ஆனால் பயங்கரவாத நடவடிக்ககளைச் செய்வதொன்றே அவர்களது நோக்கமாக இருந்ததா?
தமிழ் ஈழத்தை அடைய எதையெல்லாம் செய்தால் முடியும் என்று புலிகளின் தலைமை நினைத்ததோ அவையெல்லாம் நிகழ்த்தப்பட்டன. அதில் பயங்கரவாத நடவடிக்கைகளும் அடங்கும்.
மேலும் ஒடுக்குகிறவர்களின் பண ஆள் ஆயுத பலத்துடன் ஒப்பிடும் போது ஒடுக்கப்படுகிறவர்கள் பலவீனமாகவே இருக்கின்றனர். இப்பலவீனமும் தூர நோக்கற்ற அரசியல் சிந்தனையும், குறுகிய காலத்தில் பலத்த சமூக அதிர்வலைகளை ஏற்படுத்தும் ஆசையும் காரணமாக விடுதலை இயக்கங்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.
உலக வரலாற்றில் அரசுகளும் போராட்ட அமைப்புக்களும் ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு அளவிற் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டே வருகின்றன.
அரசோ அல்லது விடுதலை அமைப்பொன்றோ மேற்கொள்கின்ற பயங்கரவாதச் செயல்களுக்கான பொறுப்பை அவற்றின் தலைமையே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எய்தவனிருக்க அம்பை நோவானேன் என்னும் பழமொழி இங்கு பொருந்தும். விடுதலைக்காகப் போராடுகின்ற அமைப்பொன்றின் செயற்பாடுகள் அரசியல் நோக்கமொன்றின் அடிப்படையிலானதாகும்.தமிழ் ஈழம் என்பது அரசியற்கோரிக்கை. எனவே அடிப்படையில் விடுதலைப் புலிகள் அரசியற் கைதிகள்.

இது எனது பூமி என உணர்வுபூர்வமாக எழுந்த இந்த இளையதலைமுறையின் நோக்கம் குற்றச்செயல்களில் ஈடுபடுவதல்ல...

"அய்யா,
என்னை அடைத்து வைக்கிறீர்கள்
நான் ஆட்சேபிக்க முடியாது
சித்திரவதைகளையும்
என்னால் தடுக்க முடியாது
ஏனெனில்,
நான் கைதி.
நாங்கள் கோருவது விடுதலை எனினும்
உங்களது வார்த்தைகளில்
“பயங்கரவாதி”
- ஊர்வசி

ஒரு சனநாயகநாடு அரசியற் கைதிகளை எவ்வாறு நடத்த வேண்டுமோ அவ்வாறே இலங்கை அரசும் அவர்களை நடத்த வேண்டும்.
இராணுவ மற்றும் அரசியல் முரண்பாடுகள் நிகழும் உலகின் சகல பாகங்களிலும் அரசியற் கைதிகள் முறையற்ற விதத்தில் விசாரணை செய்யப்படுவதும் சித்திரவதை செய்யப்படுவதும் உலகறிந்த விடையம்.
கியூபாவின் குவந்தனமோ வில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அல்கைத்தாப் போராளிகளை அந்த வகையில் அடைத்து வைப்பதும் நடாத்துவதும் பிழையானதென அமெரிக்க ஒபாமா அரசாங்கம் ஒத்துக்கொண்டு மாற்று வழிகளைத் தேடுகிறதை இங்கு கவனிக்க வேண்டும்.
இலங்கையில் அரசியற் கைதிகளைத் துன்புறுத்துவது சித்திரவதை செய்வது விசாரணை என்ற முறைமைக்குள் முற்றிலும் அடங்காத வழியில் விசாரணை செய்வது எல்லாம் மிகச் சாதாரணமான விடையங்கள்.

“முகமூடி அணிந்த உருவம் ஒன்று என்னை LTTE என்று அடையாளம் காட்டியது. அதைக் கேட்டவுடைனேயே இராணுவத்தினர் என்னைப் பலமாகத் தாக்கினார்கள். அப்போதுதான் இலேசாக மாறிக்கொண்டிருந்த காயங்களின் மேல் துவக்குப் பின்புறத்தால் தாக்கினார்கள். கைவிலங்கிடப்பட்ட நிலையில் மேசைமீது எனது கைகள் வைக்கப்பட்டு விரல்கள் மீது தடியால் தாக்கியதால் எனது வலது கையின் நாலாவது விரல் முறிந்தது. நடுவிரலும் சிதைக்கப்பட்டது. பின் எனது கால் விரல்களைச் சிறு குறடு ஒன்றினால் பிடித்து மடக்கி சத்திரவதை செய்தார்கள். போலித்தீன் பையை நெருப்பில் உருக்கி எனது ஆணுடம்பின் மீது ஊற்றினார்கள். எனது இடது கையில் மெல்லிய கத்தியால் மூன்று தடவைகள் கீறி மிளகாய்த் தூள் போட்டார்கள். நான் மயங்கி விட்டேன்”
- சோபாசக்தி(கொரில்லா என்னும் நாவலில்)


சனநாயகச் சிந்தனை கொண்ட எவரும் வெட்கித் தலை குனிய வேண்டிய செயல்கள் இவை.எந்த வித விசாரணைகளும் இன்றியே இளைஞர்கள் மறைந்து போகிறார்கள்.
பெண் விடுதலைப்புலிப்போராளிகள் இப்படியான சந்தர்ப்பங்க்ளில் அனுபவிக்கக்கூடிய துயரங்கள் பன்முகமானவை.குறிப்பாகப் பாலியற்சித்திரவதைகள்.

விடுதலைப் புலிகளுடன் இறுதிக்காலத்தில் இணைக்கப்பட்டவர்களுள் பெரும்பான்மையானவர்கள் சொந்த விருப்பத்திற்கு மாறாகவே இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள். அது அவர்களுடைய அரசியல் தெரிவாக இருக்கவில்லை.
யுத்தக்கைதிகள் அரசியற்கைதிகள் போன்றோரை எவ்வாறு நாடாத்த வேண்டும் எனச் சர்வதேசச்சட்டங்கள் கூறுகின்றன. எந்த போர்க்கைதியும் அல்லது அரசியற்கைதியும் வெளிப்படையாகவே கையாளப்படவேண்டும்.
தோற்கடிக்கப்படுகிற அரசியல் போராட்டத்தில் இணைந்திருந்த அனைவரையுமே கொன்றொழிக்கும், பழிவாங்கும் சிந்தனை மிகக் கொடுமையான பயங்கரவாதமாகும்.
அதனையே இலங்கை அரசு செய்து வருகிறது.
உலக வரலாற்றில் அரசியல் மாற்றங்களின் போதும் போராட்டத் தோல்விகளின் போதும் வெற்றி கொண்டவர்கள் மாற்றவர்களைக் கொன்றொழிப்பதையே வேலையாகக் கொண்டுள்ளனர்.
சாதாரண தமிழ் மக்களையே மிருகங்கள் போல் நடத்தும் இந்த அரசு இந்த முன்னாள் போராளிகளை எப்படி நாடாத்தும் எனச்சொல்லத்தேவை இல்லை
தமிழர்களின் அரசியற் கோரிக்கைகள் எதுவுமே நிறைவேற்றப்படாத நிலையில் வன்னியில் எஞ்சியுள்ள இளைய தலைமுறையை அழித்தொழிக்க அரசாங்கம் நினைக்கிறது. ஜே.வி.பி கிளர்ச்சிகளின் போது ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் இவ்வாறுதான் சுவடில்லாமல் ஆக்கப்பட்டனர்.

தேர்தல் வெற்றிகளோடு அரசியல்வாதிகள் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள். யுத்தம் நடந்த மண்ணின் குருதியும் வெப்பமும் ஆறும் ஆறாது யுத்தங்களில் கணவனை மனைவியை பிள்ளைகளை இழந்த சீவன்களின் ரணமும் துயரமும்.

விடுதலைப் புலிகளின் சகல போராளிகளையும் அரசியல் கைதிகளாகவே கையாள வேண்டும்.அவர்கள் யாவரும் மீண்டும் வாழ்வதற்கான சந்தர்ப்பம் அளிக்கப்படவேண்டும்.

இலங்கை அரசின் வெற்றியும் மமதையும் மனிதத்தன்மையற்ற காட்டுமிராண்டித்தனமான நடத்தைகளும் சீரழிந்த நாட்டையே உருவாக்கும்.

அரிதேவா

22 ஜூன், 2009

எப்பொருளையும்பேச விடு! அப்பொருளின் மெய்ப்பொருளும் காணவிடு!!கடந்த ஞாயிறன்று நெதர்லாந்தின் தேசியத் தொலைக்காட்சியின் செய்தியை அவதானித்துக் கொண்டிருந்தேன். அதன் 8 மணிப் பிரதான செய்தியில் இலங்கையின் அரசு இலங்கைத் தமிழ் மக்களைப் பாரபட்சமாக நடத்துகிறது என்னும் சாரப்படும்படியான முக்கியமான செய்தித் தொகுப்பொன்றை வழங்கியது. இதே முறையான வியாக்கியானப்படுத்தலை விடுதலைப் புலிகளையும் அவர்களோடு சேர்த்து பல்லாயிரம் மக்களையும் இலங்கை அரசு கொன்று குவித்துக் கொண்டிருந்தபோது இந்தச் செய்தி நிறுவனம் செய்யவில்லை.
அப்போது இலங்கை அரசு மக்களைப் பயணக்கைதி நிலையில் இருந்து விடுவித்தது என்றும் யுத்தப்பிரதேச நிலவரத்தை விட மக்கள் முகாம்களில் நல்ல நிலையில் உள்ளனர் என்றும் ஒரு வியாக்கியானத்தைச் செய்திருந்தது.

சிறுபான்மை இனங்களின் மீதான இலங்கை அரசின் அடக்குமுறையையும் விடுதலைப்புலிகளின் சனநாயக மறுப்பையும் இருவேறாகப்பார்க்க முடியாத முட்டாள்கள் அல்ல இவர்கள்.
பலஸ்தீனத்தில் ஹமாஸ் அடிப்படைவாத இயக்கமாகவிருந்தபோதும் இஸ்ரேலின் காசா மீதான இறுதியான படைஎடுப்பையும் பொதுமக்களின் இழப்பையும் பெருமளவுக்கு நடு நிலையில் நின்று மேற்குலக ஊடகங்கள் வெளிப்படுத்தியிருந்தன.
இஸ்ரேலின் யுத்த விதி மீறல்கள் குறித்தும் மேற்குலக மக்கள் அறிந்து கொண்டனர்
ஊடகங்கள் வழங்குகின்ற தகவல்களின் அடிப்படையிலேயே நிகழ்வுகள் தொடர்பான ஒரு விம்பத்தை/முழு உருவத்தை நாங்கள் அடைகிறோம்.
எமது கண்ணுக்கு முன்னால் நடக்கும் ஒரு நிகழ்வைக்கூட ஊடகங்களின் ஊடாகவே நாங்கள் முழமையாக வடிவமாக்கிக் கொள்கிறோம்.
இது தகவற்தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால் சமூகவியலில் ஏற்பட்ட முக்கியமான மாற்றம்.
ஒரு நிகழ்வின் உண்மையான பரிமாணத்தைப் புரிந்து கொள்வதற்குப் பல ஊடகங்களையும் ஒருங்கிணைக்க வேண்டியுள்ளது. அது மட்டுமல்ல பல்வேறு ஊடக நிறுவனங்களின் செய்திகளையும் ஒருங்கிணைத்தே விடையங்களை புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.ஏனெனில் உள்ளூர் ஊடகங்கள் தணிக்கை காரணமாக வெளியிடாதவொரு செய்தியை வெளியூர் ஊடகங்களினூடாகப் பெறக்கூடியதாக உள்ளது.
ஒவ்வொருவரும் தமது கோணத்தில் இருந்தே செய்திகளை வழங்குகின்றனர். மேலும் செய்தி வழங்கப்படும் முறையை செய்தி வழங்குபவர்களின் உணர்வு நிலையும் கருத்து நிலையும் தீர்மானிக்கிறது.
உள்நாட்டு ஊடக கலாசாரம்இலங்கையில் ஊடகங்கள் கடந்த 50 வருட காலத்தில் மெதுவாக இரண்டு முகாம்களாகபிளவுபட்டன. இந்த முகாங்களைத் தமிழ்-சிங்களம் என மேலெழுந்தவாரியாகக் கூறமுடியும் எனினும் அடிப்படையில் சிங்கள பேரினவாதத்திற்கு ஆதரவானது எனவும் சிறுபான்மை தமிழ் தேசியவாதத்திற்கு ஆதரவானதெனவும் இவற்றைப்பிரிக்கலாம். இப்பிளவு மக்களின் சிந்தனை மற்றும் கலாச்சாரத் தளத்தில் மிக ஆழமான தெளிவான பாதிப்புக்களை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஊடகங்கள் மக்களைப் பிளவு படுத்தி நிற்கும் கருத்தியலை மட்டுமே விற்க அல்லது சந்தைப்படுத்தப்படக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
மக்கள் தாம் விரும்புவதையே வாசிக்கவும் கேட்கவும் விரும்புகின்றனர். கசப்பான உண்மைகளை விட மாயமான பொய்களை இலகுவாக விற்க முடிகிற உண்மையே இலங்கையில் யதார்த்தமாக உள்ளது.
உண்மைகள் அல்லது செய்திகள் என்பதை மக்களால் விரும்பப்படுகிற அல்லது ஏற்றுக்கொள்ளப்படுகிற கருத்தியல் நிலையில் நின்று அறிக்கையிடுகிற சூழ்நிலை உருவாகியுள்ளது.
தமிழர்களின் கலாசாரத்தில் விம்பங்களை உருவாக்குதல் ஒரு முக்கியமான அம்சமாக காணப்படுகிறது. இது பல சந்தர்ப்பங்களில் யதார்த்தத்தை அறியவிடாமல் தடுத்துவிடுகிறது.
சிறுபான்மை இனங்களின் நலன்கள் பாதிக்கப்படும்போது அடிப்படை உரிமைகள் மீறப்படும் போது அவை பற்றிய செய்திகளை வியாக்கியானம் செய்யாமல் செய்திகளாக வெளியிடவேண்டிய கடமையானது சிங்கள ஊடகங்களுக்கு உள்ளது.ஆனால் இது வரலாற்றில் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளது. இது போல தமிழீழ விடுதலைப்போராட்டகாலத்தில் மக்கள் மீது விடுதலைஸ்தாபனங்கள் மேற்கொண்ட சனநாயக, மனித உரிமை மீறல்கள் தமிழ் ஊடகங்களினால் உரிய முறையில்அறிக்கையிடப்பட்டிருகவில்லை.
இது அந்தந்தப்பிரதேசங்களில் அந்தந்தக்காலங்களில் இருந்த இருக்கிற அதிகார சக்திகளின் அழுத்தத்தினாலும் ஊடகங்கள் தமதுசார்பு நிலைகாரணமாகக் கொண்டிருந்த சுய தணிக்கையினாலும் ஏற்பட்டதாகும்.
எந்த சமூகத்தினதும் தூண்களாக நீதித்துறை, சட்டம், அரச அதிகார அமைப்பு மற்றும் பத்திரிகைத்துறை விளங்குகின்றன .அதிலும் பல்லினச்சமூகங்கள் வாழுமொரு நாட்டில் மேற்கூறிய நான்கு தூண்களும் மிகக் கவனமான முறையிலும் உறுதியான முறையிலும் நிலை நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்
ஒரு அரசு அல்லது ஒரு அதிகார அமைப்பு மக்களின் மீது கொண்டுள்ள இறையாண்மை என்பது எப்பொழுதெல்லாம் தவறான முறையில் மோசமான முறையில் மீறப்படுகிறதோ அப்போதெல்லாம் பத்திரிகைத்துறை விழித்துக்கொள்ள வேண்டும் ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் மேற்குறிக்கப்பட்ட நான்கு தூண்களும் மக்களின் துயரத்திலும் இரத்தத்திலும் தோய்ந்து கோரமாய்ப்பிளந்து குத்தீட்டியாக உள்ளன.
இலங்கையில் நிகழும் ஒரு நிகழ்வு குறிப்பாக அரசியல் நிகழ்வு சிங்கள மக்களுக்கு சிங்கள அல்லது ஆங்கில ஊடகங்கள் மூலமாகவும் தமிழ் மக்களுக்கு தமிழ் அல்லது ஆங்கில ஊடகங்கள் மூலமாகவும் வழங்கப்படுகின்றன. குறித்த ஒரு நிகழ்வு தொடர்பாக சிங்கள் ஊடகங்கள் எவ்வாறு அறிக்கை இடுகின்றன, அதன்மூலம் அவர்கள் என்ன விம்பத்தைப் பெறுகிறார்கள் எனத் தமிழ் மக்களுக்குத்
தெரிவதில்லை. இதேபோன்று தமிழ்மக்கள் தமிழ் ஊடகங்களினூடாக என்ன விம்பத்தைப்பெறுகிறார்கள் எனச் சிங்களமக்களுக்குத் தெரிவதில்லை.
ஒரே செய்தியை அல்லது நிகழ்வை பல்வேறு ஊடகங்களும்பல்வேறு ஊடக நிறுவனங்களும் வெவ்வேறாக வியாக்கியானம் செய்து செய்தியாக வெளியிடும் போது மக்கள் மத்தியில் குழப்பங்கள் எற்படுகின்றன.


தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படுகிற சகல ஒடுக்குமுறைகளும் விடுதலைப் புலிகளுக்கெதிரானதாக, பயங்கர வாதத்திற்கெதிரானதாக சிங்கள மக்கள் மத்தியில் உருவகப்படுத்தப்படுகின்றன. வன்னியில் முகாம்களில் மிருகங்களிலும் கேவலமான முறையில் நடாத்தப்படுகிற சகோதர இனத்தைப்பற்றிச் சிங்கள இனம் அறியவில்லை இதே போல் மலையகத் தமிழ் மக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டு வருகிற ஒடுக்குமுறைகள் பற்றியோ தென்னிலங்கையில் நடந்த கிளர்ச்சிகளின் போது சிங்கள மக்கள் எவ்வாறு கொன்றொழிக்கப்பட்டார்கள் என்பது பற்றியோ பெரும்பான்மையான தமிழ்மக்களுக்கு அறிக்கையிடப்பட்டிருக்கவில்லை. ஒரே நிகழ்வு பல்வேறு மொழிகளிலும் ஒரே மாதிரியாக அறிக்கையிடப்படுவதில்லை என்பது பன்மொழிக் கலாச்சாரம் நிலவுகிற அனேகமான வளர்ச்சி அடையாத நாடுகளில் குறிப்பிடத்தக்கதொரு பண்பாகவுள்ளது.
இது இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கு தடையானதாகும்.
உதாரணமாக இந்தியாவில் இலங்கை யுத்தம் தொடர்பாக பன்மொழிகளிலும் ஒரேமாதிரியாகச் செய்திகள்
அளிக்கப்பட்டிருக்கவில்லை பெருமளவான ஆங்கிலப்பத்திரிகைகள் யுத்தத்தை தமிழர்களுக்கெதிரானதாக சித்தரிக்கவில்லை. இலங்கை அரசின் கோர முகத்தைச் சரியாக அவை வெளிப்படுத்தவில்லை.
பெரும்பான்மை இன அரசொன்று ஊடகங்களைத் தன் கையகப்படுத்தி மக்கள் என்னென்ன விம்பங்களைப் பெற வேண்டும் என்பதை தீர்மானிப்பது அவர்களின் அதிகாரத்தை பேணுவதற்கும் மக்களை மேலும் மாயைக்குள் அழுத்தி வைத்திருக்கவும் மட்டுமே உதவும்.
ஊடகங்கள் எதை எல்லாம் சொல்ல முடியும் என்பதை அரசோ அல்லது இன்னொரு அதிகாரசக்தியோ தீர்மானிக்கும் நிலை இருக்கும் எந்தச்சமூகமும் வளர முடியாது.
ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் மக்களுக்கு தெரிய வேண்டியவைகள் “இவைகள் மட்டுமே” என வரையறை செய்யப்பட்டிருக்கும். மேலும் மக்களுக்குத் தெரியக்கூடாதவைகள் என அதிகாரத்தில் உள்ளவர்களால் கருதப்படுபவைகள் குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருக்கும். குழியைத் தோண்ட முயலும் பத்திரிகையாளர்களும் குழி தோண்டிப் புதைக்கப்படுவார்கள்.
இன்றைய சூழ்நிலையில் செய்திகளை செய்தியாகவே பன்மொழியிலும் வெளியிடும் கலாச்சாரம் உருவாக்கப்பட வேண்டியது முக்கியமாகிறது.
கருத்தியலைச் சந்தைப்படுத்துகிற இலங்கையின் ஊடக கலாச்சாரத்தில் “செய்திகளைச் சந்தைப்படுத்துகிற” நிலையை இரு முகாங்களைச் சேர்ந்த ஊடகங்களும் எடுக்கக் தயங்குகின்றன.

வெளிநாட்டு ஊடக கலாசாரம்வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகளில் மக்கள் அறியக்கூடாதது என்று எதுவுமே இருப்பதில்லை. இங்கு "பேசாப்பொருட்களைக் காண்பதரிது" அப்படி ஏதாவது இருப்பின் அதையும் பத்திரிகையாளர்கள் வெளியுலகுக்குக் காலம் பிந்தினாலும் வெளிக் கொண்டு வந்து விடுகிறார்கள். இவ்வாறு தொழிற்படும் பத்திரிகையாளர்கள் சட்டத்தினாலும் மக்கள் மத்தியில் நிலவும் சனாநாயகக் கலாசாரத்தினாலும் பாதுகாக்கப்படுகிறார்கள். மேலும் இங்கு பத்திரிகையாளர்கள் அரசியல்வாதிகளால் மூன்றாம் உலக நாடுகளில் உள்ளது போல் நேரிடையான அச்சுறுத்தல்களுக்குள்ளாவது மிகக்குறைவு. பத்திரிகையளர்களை பணத்தினால் விலைக்கு வாங்கிக்கொள்கிறார்கள் அது வேறு.
மேலும் பொருளாதர அரசியல் சமூகப் பிரச்சனைகளில் மக்களும் அதிகாரத்தின் சகல மட்டத்தினரும் ஊடகங்களினூடாகச் சந்தித்துக்கொள்கிறார்கள்.
அண்மையில் அம்ஸ்ரடாமில் தவறான தகவல் ஒன்றினடிப்படையில் மொரக்கோவைப்பூர்வீகமாக கொண்ட நெதர்லாந்துவாசிகளை கைது செய்த சம்பவத்தில் நெதர்லாந்துத் தேசிய தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்கள் தொழிற்பட்ட விதம் ஊடக சுதந்திரத்திற்கு எடுத்துக்காடாகும்.
இத்தேசியதொலைக்காட்சி பாதிக்கப்பட்டவர்களின் பேட்டியை ஒளிபரப்பியதுடன் மாநகர மேயர் ஏன் அந்த மக்களிடம் மன்னிப்புக் கேட்கவிலை எனவும் அவரிடம் வலியுறுத்திக்கேட்டிருந்தது

சமூகத்தின் பல்வேறு பிரிவினரையும் இலக்காகக் கொண்டியங்கும் ஊடகங்களால் அவர்களுக்குரிய குரல்களை வழங்க முடிகிறது. ஆயினும் முதலாளித்துவ சனநாயகம் எல்லைகள் அற்றதல்ல. பயங்கரவாதத்ததிற்கெதிரான போரெனும் அணுகுமுறையினால் இச்சுதந்திரத்தின் எல்லைகள் குறுகி வருகின்றன
சனநாயக நாடுகள் என்று சொல்லப்படும் நெதர்லாந்து போன்ற வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகளின் ஊடகங்களும் தமது எல்லைக்கு வெளியே செய்தி விம்பங்களை 100 வீத நடுநிலையில் நின்று உருவாக்குவதில்லை. ஆப்கானிஸ்தான் ஈராக் போன்ற நாடுகளில் நிகழும் மேற்குலகின் தலையீடுகளையும் இந்த ஊடகங்கள் முற்றிலும் நடுநிலைமையுடன் உருவாக்குவதில்லை.ஆனாலும் பொதுமக்களுக்கேற்படும் பாதிப்புக்களை கூறவே செய்கின்றன. மேலும் தன்னார்வப் பத்திரிகையாளர்களின் நடுநிலையான புலனாய்வுச் செய்தி வழங்கலை இருட்டடிப்புச் செய்யாமல் வெளியிடும் துணிவையும் இவை கொண்டுள்ளன. பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாக்கும் சிறப்பான சட்டரீதியான பாதுகாப்புகளும் இங்கு உள்ளன. இங்குள்ள அரசியல்வாதிகளும் இந்தச்சட்டங்களை பொதுவில் மதிக்கும் சனநாயக உணர்வைக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அய்ரோப்பாவில் காணப்படும் இந்தப்பண்பு அண்மைக்காலம் வரையும் தனிமனித கருத்துச் சுதந்திரத்தில் பின்தங்கியிருந்த கிழக்கைரோப்பியநாடுகளை நோக்கி நகர்ந்து வருகிறதைக் காணமுடிகிறது. முதலாளித்துவ சனநாயகத்தின் கூறுகளை அந்த நாடுகள் உள்வாங்கி வருகின்றன.
பர்மாவில் நிகழும் இராணுவ அடக்குமுறை, துருக்கியில் குர்திஸ்தானிகளின் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறை திபேத்தில் நிகழும் ஒடுக்குமுறை சிம்பாபேயில் நிகழும் ஒடுக்குமுறை போன்றவைகள் தொடர்பாக மேற்குலக ஊடக நிறுவனங்கள் கொண்டிருக்கும் நிலைப்பாட்டுடன் ஒப்பிடும் போது, இலங்கையில் நடந்துவரும் போராடம் பற்றி அனேகமான மேற்குலக ஊடகங்க்ள் போதிய கவனம் எடுத்திருக்கவில்லை . (சில தவிர்ப்பான ஊடகங்கள் உள்ளன)

இவ்வூடகங்களின் கவனம் இலங்கையில் வாழும் மக்களின் வாழ்நிலையில் உடனடி மாற்றங்களைக் கொண்டு வரப்போவதில்லை. ஆனால் சர்வதேச மக்கள் மத்தியில் இலங்கை அரசு பற்றிய தெளிவானவிம்பத்தை ஏற்படுத்த இவை உதவும். இந்த மக்களுக்குள் இருந்து எழுந்து வரும் அழுத்தக்குழுக்கள் அந்தந்த நாட்டு கொள்கைவகுப்பாளர்களிடத்தும் அரசியல்வாதிகளிடத்தும் உரையாடக்கூடியவர்கள். அவர்களின் மூலமாக சர்வதேச அரங்கில் தமிழ் இன ஒடுக்கு முறைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.
இலங்கையின் இனங்கள் எவ்வாறு பிளவுண்ட சகிப்புத் தன்மையற்ற சமூகங்களாக மாறினவோ அதேபோல தமிழ் சமூகமும் சனநாயக சிந்தனையில் பின்தங்கி கருத்தியலில் பிளவுண்ட சகிப்புத் தன்மையற்ற சமூகமாக மாறியுள்ளது. இதனால் இலங்கையின் பல்லினச்சமூகங்களுக்கும் இடையிலும் தமிழ் சமூகத்தின் பல்வேறு முகாம்களுக்கிடையிலும் கருத்துப் பரிமாற்றத்துக்கான சாத்தியங்களை உருவாக்க வேண்டியுள்ளது. இதனை ஊடகங்களே செய்ய வேண்டும்.

ஈழம் பிரிவது இப்போதைக்குச் சாத்தியமில்லை என்கிற யதார்த்தம் எங்களை அறைந்துள்ளது. இலங்கையின் பல்லினச்சமூகங்கள் தம்முள் இணங்கி வாழ்வதைத்தவிர அவற்றுக்கு வேறு வழி இல்லை. எனவே சனநாயகச் சிந்தனை ஒன்றே எங்களை வாழ வைக்கும். சக உயிரின் உணர்வையும் உரிமையையும் மதிக்காத எந்த நாட்டிலும் அமைதி இல்லை.
(இக் கட்டுரை பிரதானவோட்டத்தில் உள்ள ஊடகங்களை(main stream media)) அடிப்படையாகக்கொண்டே எழுதப்படுகிறது).
அரிதேவா.
12/06/2009

13 ஜூன், 2009

தமிழீழ விடுதலைப் போராட்டமும் அதிகார வெற்றிடமும்...சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையின் அதிகாரம் சிங்கள இனத்தினது எனக் கருதப்படக்கூடிய வகையில் மாற்றம் அடைந்தது. நாடோன்றின் அரசஅதிகாரம், குறித்த இனம் ஒன்றினால் மட்டுமே அனுபவிக்கப்படும் போது பல்லினங்கள் வாழும் நாட்டில் பிரச்சினைகள் தோன்றும். தோன்றுகின்றன. இனங்களின் தனித்தன்மைகளுக்கு பாதுகாப்பும் உரிமையும் அளிக்கப்படவேண்டும். அரசு இன அடிப்படையில் இயங்க முடியாது. ஆனால் இலங்கையில் அரசு அவ்வாறே இயங்குகிறது.

தமிழர்கள் தாம் சிங்களவர்களால் ஆளப்படுவதாக உணரத்தொடங்கினர். மிக ஆரம்பத்திலேயே இந்த உணர்வை உறுதிப்படுத்தும் புறநிலையான காரணிகள் அறியப்பட்டன. அதிகாரத்தில் சிறுபான்மை இனங்களுக்கு பங்கு இல்லை. பெரும்பான்மை இனத்தைச் சார்ந்து, சலுகைகளை மட்டுமே பெறமுடியும் என்னும் நிலை தமிழர்களைத் தங்களுக்கென அதிகாரத்தை பெறவேண்டும் என்னும் எண்ணக்கருவை நோக்கித் தள்ளியது.

மனிதரை மிருக நிலையில் இருந்து புரிந்து கொள்ள முயற்சித்தால் அதிகாரம் என்பது மிருக நிலையின் அடிப்படையான பண்பென்பதை அறியலாம். மிருகங்கள் தமது சமூகத்திற்குள்ளும் சகசமூகங்களுடனும் தமது வாழிட எல்லைக்குள்ளும் வெளியிலும் மிகத் தெளிவான அதிகாரப்போட்டியினைக் கொண்டுள்ளன.

மிருகங்களின் அதிகாரப் போட்டி வெற்றி அல்லது தோல்வியினால் தீர்த்து வைக்கப்படுகிறது. மனிதர்களின் அதிகாரப் போட்டியும் வெற்றி அல்லது தோல்வி என்ற முறையில் அணுகப்படுவது வியப்புக்குரியதல்ல.

தமிழர்கள் தமக்கான அதிகாரத்தைத் தேடத் தொடங்கிய போது தமிழர்களிடையே பல போராட்டக் குழுக்கள் தோன்றின. காலப்போக்கில் அவை கரைந்து தமிழ்ச் சமூகத்தினுள் இருந்த சமூகப் பிரிவுகளைப் பிரதிநிதித்துவம் செய்யக் கூடிய அமைப்புக்களாக மாறின.

இங்கு குறிப்பிடத்தக்க அம்சம் தமிழர்கள் தமது அதிகாரத்தை வேண்டி நின்றது மட்டுமல்ல அது எத்தகையதாக இருக்க வேண்டும் எனச் சிந்தித்ததும் தான். அதிகாரப் போட்டி என்பது அதிகாரத்தின் பண்புகள் குறித்த கேள்வியுடனும் இணைந்திருந்தது. அதிகாரம் என்பது சமூக அதிகாரம் பொருளாதார அதிகாரம் அரசியல் அதிகாரம் எனவிரிவடையும். தனிமனித உணர்வுகளுக்கும் உறவுகளுக்கும் இடையே நிலவும் அதிகாரம் மற்றும் குடும்பத்துள் நிலவும் அதிகாரம் ஆகியவை ஒன்றிணைந்து சமூக அதிகாரமாக விரிவடைகிறது. ஒரு இனத்துக்குள் இருக்கும் பல்வேறு சமூகப் பிரிவினருக்குள்ளும் மேற்குறித்த மூன்று வகையான அதிகார அம்சங்களைக் காணமுடியும்.

பல்லினங்கள் வாழும் நாட்டில் எவ்வாறு சகல இனங்களுக்கும் அதிகாரத்தில் பங்கு இருக்க வேண்டுமோ அது போலவே போராடும் ஒரு இனத்துக்குள் இருக்கும் சகல சமூகப் பிரிவுகளுக்கும் சரியான அதிகாரப்பகிர்வும் பிரதிநிதித்துவமும் இருக்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே இனம் ஒன்றின் முழுச்சக்தியையும் ஒன்றிணைக்க முடியும்.

ஒரு அமைப்பு ஒரு இனத்தின் முழு அதிகாரத்தையும் தனது கையில் எடுக்கும் போது அதன் அழிவுடன் அபாயகரமானதொரு அதிகாரவெற்றிடம் தோன்றுகிறது. இது வெற்றிகொண்ட இனத்திற்கு வாய்ப்பான சூழ்நிலையைத் தந்துவிடுகிறது.

உதாரணமாக ஒரு பேச்சுக்கு பலஸ்தீனத்தில் கமாஸ் முற்றுமுழுதாக அழிக்கப்படுகிறது என வைத்துக்கொண்டால் இதனைத் தொடர்ந்து பலஸ்தீன மக்களின் மத்தியில் ஒரு அதிகார வெற்றிடம் தோன்றப்போவதில்லை.பலஸ்தீன மக்களின் அதிகாரம் எப்படியானதாக இருக்கவேண்டும் என்பதில் அவர்களுக்கு முரண்பாடு தோன்றலாம் அது வேறு.

80 களில் மேலெழுந்து வந்த பிரதான விடுதலை இயக்கங்கள் சமூகத்தின் வேறுபட்ட பிரிவுகளை அல்லது கருத்தியல்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி நின்றதைக் காணமுடிந்தது. ஆனால் இவை சரியான முறையில் ஒரு ஜக்கிய முன்னணியாக இணைக்கப்பட்டிருக்கவில்லை.

உதாரணமாக பலஸ்தீன விடுதலை இயக்கத்தில் அத்தகைய இணக்கப்பாடு ஒரு கால கட்டத்தில் அடையப்பட்டிருந்தது. அந்தக்காலகட்டமே பலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் பொற்காலமுமாக இருந்தது.

ஆரம்பத்தில் இருந்த பல்வேறு சமூகங்களையும் பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய தமிழர் விடுதலை இயக்கங்களின் ஜக்கிய முன்னணிக்கான சாத்தியம் என்னென்ன காரணங்களால் சாத்தியமற்றுப் போனது என மீள்வாசிப்புச்செய்வது புதிய படிப்பினைகளைத்தரலாம்.

எந்த இனத்துக்குள்ளும் பல்வேறு கருத்தியல்கள் நிலவும். இவை ஒரு சமூகம் தன்னை மீள்வாசிப்புச்செய்யும் போது இயக்கமடையத் தொடங்கும். இந்த இயக்கங்களின் இயக்கவியலை சரியான முறையில் ஒன்றிணைக்கக் கூடிய சனநாயக ரீதியான அணுகுமுறை மட்டுமே ஒரு இனத்தை முன்னோக்கித்தள்ளும்; எந்த இடர்ப்பாடுகளுக்குள்ளும் தலை நிமிர்ந்து நிற்க வைக்கும்.

தமிழர்களின் விடுதலைப்போராட்டம் படிப்படியாக அங்கீகரிக்கப்படாத ஆனால் உறுதியான அதிகாரத்தை மெதுவாக எடுத்துக்கொண்டது.

விடுதலைப்புலிகள் தமது அதிகாரத்தை ஏனைய ஸ்தாபனங்களை அழித்து ஸ்தாபிப்பதில் வெற்றி அடைந்தனர். ஈரோசைத் தவிர எனைய ஸ்தாபனங்கள் தமக்குள் ஏற்கனவே அதிகாரப் போட்டி காரணமாக அழியத்தொடங்கியும் இருந்தன. இது விடுதலைப்புலிகளின் வெற்றியை இலகுபடுத்தியது எனலாம்.

தமிழ்ப் பகுதிகளில் இயங்கிய இலங்கைச் சிங்கள அரசஅதிகாரத்தின் மீது தமிழர்களின் அங்கீகரிக்கப்படாத அதிகாரம் நிழலாகப்படியத் தொடங்கியது. தமிழர்களின் இந்த நிழல் அதிகாரத்தைத் தமிழ்ப் பகுதிகளில் நிலவிய சிங்கள அதிகாரம் இயலாமையுடன் பார்த்து நின்றது.

இலங்கை இராணுவம் பொலிஸ் மட்டுமல்ல சிவில் நிர்வாக அதிகாரிகளும் முடக்கப்பட்டனர். தமிழ் நிழல் அதிகாரத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தவர்கள் வடக்கு கிழக்கை விட்டு நீங்கினர் அல்லது சுட்டுக் கொல்லப்பட்டனர். காலப்போக்கில் தமிழ் பிரதேசங்களின் இலங்கை அரசின் அதிகாரிகள் தமிழ் நிழல் நிர்வாகத்துடன் இணக்கப்பாட்டுக்கு வரலாயினர். இலங்கைக்குள் நிகழத்தொடங்கிய இந்த அதிகாரப் போட்டி தமிழர்களின் சமூக பொருளாதார அரசியல் பரிமாணங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்தது.

விடுதலைப்புலிகள் மிகத் தெளிவான அதிகார நிலையை எடுக்க முன்னர் அதேநேரம் சிங்கள அரசு அதிகாரம் வலுவிழந்து இருந்த நேரம் தமிழ் சமூகத்துள் பல்வேறு அம்சங்கள் கேள்விக்குட்படுத்தப்பட்டன.

குறிப்பாக மொழி உணர்வும் பயன்பாடும், சமூகத்தில் பெண்ணின் நிலை, சாதிய முரண்பாடுகள் வர்க்க முரண்பாடுகள் என்பனவற்றைக் குறிப்பிடலாம்.

விடுதலைப்புலிகள் போராட்டத்தில் தீர்மானகரமான சக்தியாக வளர்ச்சி அடைந்த போது இனத்துக்குள் பல்வேறு பிரிவினருக்கும் இருக்கக்கூடிய அதிகார உரிமையையும் பங்கீட்டையும் அங்கீகரிக்கும் சனநாயக நிலையை எடுக்காமல் எல்லைகளை விடுவிக்கும் இராணுவ அணுகுமுறைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினர். இது 80 களில் தோன்றிய எழுச்சியைச் சிதறடித்து அன்றைய இளைஞர்களின் ஒரு பகுதியினரைப் போராட்டக் களத்தில் இருந்து அகற்றியது.

தமிழ் அதிகாரத்துள் ஒரு காலத்தில் ஆழமாக கேள்விக்குள்ளாக்கப்பட்ட பல்வேறு விடையங்கள் விடுதலைப்புலிகளால் பின்னர் ஆழமாகக் கேள்விக்குட்படுத்தப்படவில்லை. ஆனாலும் அவர்கள் கொண்டிருந்த அதிகார எல்லைக்குள் அவற்றைப் பற்றி முணுமுணுப்பவர்களாவது இருக்கவே செய்தனர். அல்லது அவர்கள் சக பயணிகளாகவிருந்தனர்.

குறிப்பாக ஆயிரக்கணக்கான பெண்கள் அவர்களுக்கென இருந்த “கடமைகளுக்கு” புறம்பான விடையங்களைச் செய்வதற்கான அதிகாரம் அளிக்கப்பட்டனர்.

இன்றைக்கு எற்பட்டுள்ள அதிகார வெற்றிடத்தால் மிக மிகப் பாதிப்புக்குள்ளாகப் போகிறவர்களும் பெண்களே.குறிப்பாகப் போராளிப் பெண்களே.

சமூகத்தின் சகல பிரிவினரையும் போரில் இணைப்பதற்காக அவர்களுக்கிடையில் இருந்த முரண்பாடுகள் பேசப்படாது விடப்பட்டன.

தமிழ் அதிகார எல்லைக்குள் வாழ்ந்த முஸ்லீம்களுக்கு இருக்கக்கூடிய அதிகார உரிமை பறிக்கப்பட்டு துரத்தப்பட்ட துரதிஸ்டவசமான நிலையும் இக்காலகட்டத்திலேயே தோன்றியது.

தமிழ் அதிகாரம் பற்றி பேசுகிற ஒவ்வொரு கணமும் சனநாயகம் பற்றிய எண்ணக்கருவும் இணைந்தே வரவேண்டும்.

அதிகாரத்தை பிரயோகிக்கும் போதே சனநாயகத்தையும் உறுதிசெய்ய வேண்டியது அவசியம். இதனால்தான் எந்த அரசியல் அமைப்பிலும் இது தொடர்பான விளக்கங்களும் விபரிப்புக்களும் வரையறைகளும் உள்ளன. இவற்றை நன்கு விளங்கி ஆட்சி செய்ய வேண்டியது அரசாங்கங்களினதும் அதிகாரிகளினதும் பொறுப்பாகும். இலங்கையின் எந்த அரசாங்கங்களும் இப்பொறுப்புணர்வைக் கொண்டிருக்கவில்லை. துரதிஸ்டவசமாக விடுதலைப் போராட்ட அமைப்புகளுக்குள்ளும் இப்பொறுப்புணர்வு இருக்கவிலை.

பிழையான அதிகார அமைப்புக்குள் மக்களை வாழ நிர்ப்பந்தித்தால் அல்லது வாழப்பழக்கப்படுத்தினால் அதிகார வெற்றிடம் ஒன்று ஏற்படும் போது மக்கள் முன்பிருந்த அதிகார அமைப்பை நிபந்தனைகள் அற்று ஏற்றுக்கொள்ளும் மரத்த நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

மாற்றீடான அதிகாரம், தான் எந்த வகையில் முன்பிருந்த அதிகாரத்திற்கு மாற்றீடு என்பதையும் உணர்த்த வேண்டும்.

தமிழர்களின் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் இருந்த பன்முகத்தன்மையான அதிகார ஒருங்கிணைப்பிற்கான சாத்தியம் சிதைக்கப்பட்டு ஒருமுகமான அதிகார அமைப்பு விடுதலைப்புலிகளால் ஸ்தாபிக்கப்பட்டது. விடுதலைப்புலிகளின் எல்லைகள் பரந்திருந்தபோது நிர்மாணிக்கப்பட்ட நீதி நிர்வாக பொருளாதாரக் கட்டமைப்புக்களின் தன்மை குறித்து ஆழமான விமர்சனத்தை அதனை நன்கறிந்தவர்கள் செய்யவேண்டும்.

அவர்களின் சட்டமூலத்தொகுப்பில் இலங்கை அரசுடன் ஒப்பிடும்போது முற்போக்கான அம்சங்கள் இருந்ததாக முன்பு பேசப்பட்டது.

ஆனால் தமிழ்மக்களின் அரசு அனேகமான சந்தர்ப்பங்களில் விடுதலைப்புலிகள் என்னும் ஸ்தாபனத்தின் நலன்களைப் பேணுவதற்காகவே தொழிற்பட்டதையும் காணமுடிந்தது.

ஒரு விடுதலை அமைப்பு அரசாக பரிமாணம் கொள்ள முயன்றது. ஆனால் பரிணாமம் அடையவில்லை. அது சாத்தியமும் இல்லை. என்னேனில் அரசுருவாக்கம் நான் முன்பு கூறிய மூவகை அதிகாரங்களின் கூட்டிணைவுடன் சம்பந்தப்பட்டது.

விடுதலைப்புலிகளின் பொருளாதாரக் கட்டமைப்பு தமிழ் மக்களின் பொருளாதாரக் கட்டமைப்பு என்பதாக மாறுவதற்கான சந்தர்ப்பம் தமிழ் ஈழம் கிடைத்திருப்பின் சாத்தியமாக இருந்திருக்கலாம்.

எனவே அங்கீகரிக்கப்பட்ட அதிகாரமோ அல்லது அங்கீகரிக்கப்படாத அதிகாரமோ அல்லது நிழல் அதிகாரமோ எதுவாயினும் சரி அது ஒரு முழுமையான அதிகாரமாக வளர்ச்சியடைவது தனியே எல்லைகளை விடுவிப்பதுடன் மட்டும் சாத்தியமாகி விடுவதில்லை.

சமூக அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரங்கள் சரியான முறையில் சனநாயக ரீதியான பங்கீட்டுடன் இணைக்கப்பட்டு எல்லைகளும் விடுவிக்கப்படும் போதுதான் ஒரு நாடு உருவாகிறது.

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் மிக முக்கியமான தோல்வி விடுதலைப்புலிகளின் அழிவல்ல. பதிலாகத் தமிழர்கள் தங்களின் சுய அதிகார உணர்வை இழந்ததுதான்.


.
இங்கு சொல்லப்படுகிற அதிகார உணர்வு என்பது மற்ற இனத்தை கொல்லும் உணர்வல்ல. இன்னொரு இனத்தின் உரிமைகளைப் பறிக்கும் அதிகாரமல்ல. பதிலாக நாம் என்று நிமிர்ந்து நிற்கும் சுய தன்னம்பிக்கை பற்றிய உணர்வு‐கூட்டுணர்வு இதனை ஒரு சமூகம் இழக்கும் போது அது அரசியல் ரீதியில் சிதறிவிடுகிறது.
அந்தச்சிதறலை நாங்கள் இன்று பார்கிறோம் அனுபவிக்கிறோம்.

முழமையான அதிகாரம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு எல்லைகள் விடுவிக்கப்பட வேண்டும் ஆனால் பெளதிக எல்லைகளில் தங்கி இருக்காத முக்கியமான அம்சங்களை தமிழர்களின் விடுதலைப் போராட்டம் கவனிக்கத்தவறியதின் விளைவே இன்றைக்கு தோன்றியுள்ள அதிகார வெற்றிடத்துள் தமிழர்கள் தலைகுனிந்து நிற்கக் காரணம்.

ஒரு இனம் தனக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டிய சனநாயகச் சிந்தனை அதன் சமூக அதிகாரத்திற்கு மிக அவசியமாகும்.
தமிழ் சமூகத்தின் திறந்த தன்மை, உரையாடற் பண்பு, சேர்ந்து வேலை செய்யும் தன்மை, கேள்வி கேட்டல் என்பவற்றைக் கேள்விக்குள்ளாக்கும் சந்தர்ப்பத்தை நாங்கள் ஏன் தவறவிட்டோம்.

விடுதலைப்புலிகளின் சனநாயக மறுப்பைத் தூக்கிப் பிடிப்பவர்கள் அதன் அடித்தளம் என்ன என்பதை மறந்து விடுகிறார்கள். விடுதலைப்புலிகள் சனநாயகத்தை விரும்பியிருக்கவில்லை என்பது உண்மை. ஆனால் சனநாயக மறுப்பை விடுதலைப்புலிகளே தொடங்கி வைத்ததாக யாரும் கூறுவார்களேயானால் அவர்கள் கோத்தபாயவோடு தேனீர் அருந்தலாம்.

தமிழ்ச்சமூகத்தினுள் தனிநபர் மற்றும் குடும்ப உறவகளுக்குள் நிலவுகிற அதிகாரத்தை புறநிலையாக நின்று அது எவ்வாறு தொழிற்படுகிறது என்பதை நாங்கள் அவதானிப்போமாயின் இலங்கையின் துயரத்திற்கான காரணத்தை இலகுவாகப் புரிந்து கொள்ளமுடியும்.குடும்ப உறவுகளுக்குள் குறிப்பாக ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு சனநாயகமாக இருப்பதில்லை.

மாணவன் ஆசிரியருக்குப்பயம். ஆசிரியர் அதிபருக்கு பயம். அதிபர் அதிகாரிக்கு பயம். அதிகாரி மேலதிகாரிக்கு பயம். மேலதிகாரி அமைச்சருக்கு பயம். அமைச்சர் சனாதிபதிக்குபயம். சனாதிபதியோ எவருக்கும் பயம் இல்லை.

இப்படிப்பட்ட அதிகார அடுக்குள்ளேயே தலைமுறை தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறோம். மேலும் இவ்வதிகார அடுக்கின் ஒவ்வொரு தட்டுகளிலும் இருப்போருக்குள் தமக்குள் சேர்ந்து வேலை செய்தலும் சாத்தியப்படுவதில்லை.

அதிகாரத்தை நாட்டை அல்லது சமூகத்தை கட்டுக் கோப்புடன் இயக்கப் பயன்படுத்தாமல் தனிநபர்களும் கட்சிகளும் தமது சுயநலன்களை அடைய பயன் படுத்தப்படும் போக்கே உலகெங்கும் அவதானிக்கப்படுகிறது.

அதிகாரமும் சனநாயகமும் ஒரு நாணயக்குற்றியின் இரண்டு பக்கங்கள். அது இரண்டாகப் பிளக்கப்பட்டு தத்தமது தேவைக்கேற்ப பயன்படுத்தப்படுகிறது. மக்களோ செல்லாக் காசாகி நிற்கிறார்கள்.

தமிழர்களிடம் தோன்றியுள்ள அதிகார வெற்றிடம் வெறுமனே ஒரு அரசியல் வெற்றிடம் அல்ல என்பதை உணர்ந்து கொண்டால் மட்டுமே அதை மீண்டும் நிரப்புவது எவ்வளவு கடினம் என்பது புரியும்.

இனிமேல் குறுகிய காலத்துள் தனிநாடு ஒன்றை அடைவதன் மூலம் தமிழர்கள் தங்களுக்கென ஒரு அதிகாரத்தை ஸ்தாபிக்க முடியும் என்பது பகற்கனவாகும்.
எனவே யதார்த்தத்தில் எஞ்சியுள்ள தெரிவுகள் இவையே:

• இலங்கை என்ற முழுமைக்குள் கிடைக்கக்கூடிய அதிகாரப்பகிர்வு.

• இலங்கை என்ற முழுமைக்குள் எந்தவித அரசியல் வேண்டுகோளும் இன்றி ஏற்கனவே உள்ள அரசியல் அதிகாரத்தை எற்றுக்கொண்டு வாழ்வது.

பிராந்திய மற்றும் உள்நாட்டு அரசியற்சூழ்நிலைகளை அவதானிக்கும் போது யதார்த்தத்தில் தமிழர்களுக்கு இந்தத் தெரிவே எஞ்சியுள்ளது. இலங்கையில் இருக்கும் எந்தச்சிங்களக்கட்சியும் தமிழர்களுடன் இதய சுத்தியுடன் அதிகாரத்தைப்பகிர்ந்துகொள்ளக்கூடியவை அல்ல.

மீள்குடியேற்றம் புணர்வாழ்வு நிவாரணம் ஆகிய மூன்றுக்குள்ளும் தமிழர்களின் அரசியல் கோரிக்கைகள் புதைக்கப்பட்டு விடும். சர்வதேச அழுத்தம் ஒன்றின் மூலம் மட்டுமே தமிழர்களுக்கான குறைந்த பட்ச அதிகாரப்பகிர்வாவது சாத்தியம். ஆனால் பிராந்திய அரசுகள் யுத்தமற்ற இலங்கையை நிர்ப்பந்தங்கள் கட்டுப்பாடுகள் எதுவுமற்ற திறந்த சந்தையாக்க மட்டுமே முயற்சி செய்வார்கள். தமிழர்களின் அரசியல் உரிமைகள் பற்றி அவர்கள் கவலைப்படப்போவதிலை.

சிங்கள் பெளத்த பேரினவாத அரசு தனது சனநாயகமற்ற அதிகாரத்தைப் பேணுவதற்காக எதையும் செய்யும் நிலையில் உள்ளது.தற்போதைய அரசாங்கம் தமிழ்த்தேசியம் முழுமூச்சுடன் மீண்டும் அரசியல் ரீதியாக எழக்கூடிய சகல வழிகளையும் அடைக்கவே முயற்சி செய்யும்.

சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரே ஒரு தமிழர்களின் பிரதிநிதித்துவமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கூடுமானவரை செயலிழக்கச் செய்யவும் உடைக்கவும் இந்த அரசாங்கம் முயற்சி செய்யும்.

இதுவரை காலமும் அரசுடன் இணைந்திருந்த இராணுவக் குழுக்களை இவ்வரசாங்கம் உடன் கலைக்கப்போவதில்லை. மாறாக இவற்றை தன்னைச்சார்ந்து சலுகைகளைப்பெறும் அரசியல்வாதிகளாக மாற்றுவதுடன் தமிழர்கள் அரசியல் ரீதியாக ஒன்றிணைவதை இவர்களின் உதவியுடன் தடுக்கவும் செய்யும். இக்குழுக்களைப் பயன்படுத்தித் தேர்தல் காலங்களில் நேரிடையாகவோ மறைமுகமாகவோ சனநாயக மீறல்களிலும் ஈடுபடக்கூடும். மேலும் இந்தக் குழுக்கள் யுத்த காலத்தில் எந்தக் கொள்கைகளும் இன்றி அரசு சார்ந்து தமது இருப்பைப் பேணிக் கொண்டவைகள் என்பதுடன் இவையும் சனநாயக உரிமைகளைக் கோரமான முறையில் நசுக்கியவையே. இத்தகைய அமைப்புக்கள் தமிழர்களின் சமூக பொருளாதார அரசியல் நலன்களை ஒருங்கிணைத்து வலுவான கோரிக்கைகளை வைக்கும் சக்திகளாக மேலெழ முடியாது.

ஆயுதப் போராட்டத்திற்கு முன்னைய காலங்களில் இருந்த அரசியல் வியாபாரமே( தமிழ் நாட்டில்‐இந்தியாவில் உள்ளது போன்று) இனி வடக்கு கிழக்கில் தலைதூக்கும்.


ஆசிய ஆபிரிக்க நாடுகளில் நிகழும் அரசியல் வியாபாரங்களைப் பற்றி எவரும் சொல்லத்தேவையில்லை. வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகளிலும் அரசியல் சந்தையாகவே கருதப்படுகிறது. ஆனால் அது நுகர்வோர் மையப்படுத்தப்பட்ட சந்தையாகவிருக்கிறது. ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் அரசியல்வாதியை மையப்படுத்தியே அரசியற்சந்தை உள்ளது.

அறிவுபூர்வமான அணுகுமுறைகள் இன்றி அரசியல் பொருளாதார சமூக கட்டுமானங்களை அதிகார போதையில் சுயலாபங்களுக்காக அரசியல்வாதிகள் சிதைக்கின்றனர். அவர்களின் ஒரே நோக்கம் அதிகாரத்தில் இருப்பது. தேர்தல் தோல்விகளைச் தவிர்ப்பதற்காக எதையும் செய்கிற நிலமையே உள்ளது.

இதை இங்கு சொல்வதன் நோக்கம் என்னவெனில் இலங்கை போன்ற நாடுகளில் நிலவுகிற பாராளுமன்ற அதிகாரம் என்பது சனநாயகத்தில் இருந்து பிரிக்கப்பட்ட அதிகாரமாகும்.

இத்தகைய பாராளுமன்றக்கலாசாரத்துள் தமிழர்கள் வேறோரு சனநாயக கலாச்சாரத்தை மக்களின் நலன்களை மையப்படுத்திய அரசியல் கலாச்சாரத்தை கொண்டுவருதல் மிகக் கடினமாகும்.

தமக்குள் இருக்கிற பல்வேறு சமூகப் பிரிவுகளையும் பிரதிநிதிப்படுத்துகிற அரசியல் கட்சிகளை உருவாக்குவதும் அவற்றுக்கிடையே ஜக்கியத்தை கொண்டுவருவதும் மிக மோசமான ஒடுக்குமுறைக்குச் சவால் விடுக்குமொன்றாக மாறலாம். முற்றிலும் புதிய கோணத்தில் பாராளுமன்ற அரசியலை அணுகும் அரசியல் கட்டமைப்பு தமிழர்களுக்குத் தேவை. ஏனேனில் இன்னொரு அமிர்தலிங்கமோ இருக்கிற ஆனந்தசங்கரியோ தமிழர்களுக்குத் தேவை இல்லை.

சிங்களசமூகத்திற்குள் இருக்கக்கூடிய சனநாய சக்திகளை, ஒடுக்குமுறைக்கு எதிரானவர்களை இனம் காணுவதும் இங்கு அவசியமாகும்.

தமிழ் மக்கள் தங்களுக்குள் வலுவான சனநாயக ஐக்கிய முன்ணனி ஒன்றை உருவாக்காத வரை சிங்கள பௌத்த பேரினவாதம் பேயாட்டமாடவே செய்யும்.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் விட்டுச்சென்ற தமிழர்களின் அதிகாரம் என்ற தேன்கிண்ணத்துள் தமிழர்களின் குருதியை நிரப்பி அது குடிக்கவே செய்யும்.

அரிதேவா
நன்றி:- குளோபல் தமிழ்ச் செய்திகள்

2 ஜூன், 2009

மாயையும் யதார்த்தமும்உலகம் முழுவதும் உள்ள ஈழத் தமிழர்களின் இதயங்கள் கனத்துப் போயுள்ளன! பல்வேறுவிதமான உணர்வலைகளுக்குள்ளும் அவர்கள் சிக்கி உடைந்து போயுள்ளனர். தமிழர்கள் கொடுமையான இழப்பின் துயரினாலும் அவமானத்தினாலும் தலைகுனிந்து நிற்கிறார்கள்.

விடுதலைப் புலிகளின் இராணுவக் கூட்டமைப்பும் கட்டுப்பாட்டுப் பிரதேசமும் சிதைக்கப்பட்டமைக்கான உடனடிக் காரணம் இலங்கை இராணுவத்தின் அதீத பலமே.இதை யாவரும் அறிவர். இந்தப்பலம் வெளியில் இருந்து கிடைத்த உதவிகளினாலேயே ஏற்பட்டதாகும். மேலும் விடுதலைப்பபுலிகளின் உண்மையான பலத்தை அறிந்த கருணாவின் துரோகமும் இதற்கு உதவியது எனலாம். இத்தைகைய பலத்துடன் ஒரு இராணுவம் பாயும் போது அதைத் தடுப்பதற்கு எந்த விடுதலை அமைப்பாலும் முடியாது.

உலக வரலாற்றில் அரசுகள் விடுதலை இயக்கங்களை இதே முறையில் ஒடுக்கி உள்ளதை நாங்கள் இங்கு நினைவிற் கொள்ளலாம்.

பிலிப்பைன்ஸில் NPA இனையும் கொலம்பியாவில் இடது சாரி கொரில்லாக்களையும் அந்தநாட்டு அரசுகள் அமெரிக்க இராணுவத்தின் உதவியுடன் கணிசமான அளவுக்கு ஒடுக்கியுள்ளன.

கடந்த 30 வருட காலமாக பல்வேறு பரிமாணங்களினூடாக நகர்ந்து வந்த தமிழர்களின் விடுதலைப் போராட்டம் மிக மோசமான முறையில் நசுக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் நியாயமான அரசியற் கோரிக்கைகள் பதிலளிக்கப்படாது உள்ளன. இவ்வளவு கால இழப்பும் நெருப்பும் சிங்கத்தின் கொடூரமான காலடிக்குள் அவிந்து போய் கிடக்கின்றன.தமிழர்களின் அரசியல் வரலாற்றில் தோன்றியுள்ள இந்த பாரிய அரசியல் வெற்றிடம் என்னென்ன விளைவுகளைக் கொண்டு வரப்போகிறது என்பது எவருக்கும் தெரியாது.

தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் இவ்வாறு கொடூரமான முறையில் நசுக்கப்பட்டதற்கு மூல காரணம் சர்வதேசச் சூழ்நிலைகள் தான். இந்து சமூத்திரப் பிராந்தியத்துள் நிலவும் அதிகாரப் போட்டிக்குள் தமிழ் ஈழம் பிரிவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு. இந்தியா என்கிற நாசகார பிராந்திய வல்லரசு எமது தலைக்கு மேல் இருக்கும் வரைக்கும் முற்றுமுழுதான சுதந்திர ஈழம் கனவாகவே இருக்கும். வளர்ந்து வரும் சீன வல்லரசு சிங்கள பேரினிவாத அரசை தனது கைக்குள் வரச்செய்வதற்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறது.

தமிழர்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளைத் தமிழ்ஈழத்தை அடைவதன் மூலம் மட்டுமே வென்று எடுக்க முடியும் என்ற முடிவில் உறுதியாக நின்றதற்கான விலையை புலிகளும் அவர்களுடன் விரும்பியோ விரும்பாமலோ சக பயணிகளாக இருந்த மக்களும் கொடுத்துள்ளனர்.

எந்த விதமான ஆக்கிரமிப்புக்கும் ஒடுக்கு முறைக்கும் எந்த நிலையிலும் பணிய மாட்டோம் என உறுதியாக நின்று மரணம் அடைந்த ஒவ்வொரு உறுதிப் புலிவீரரினதும் தியாகத்தின் முன் உலகும் சிங்கள சமூகமும் வெட்கித் தலை குனிய வேண்டும்.

தமிழ் ஈழம் என்கிற ஒரே நோக்கில் மட்டும் உறுதியாக இருந்த விடுதலைப் புலிகளின் தலைமை கணக்கெடுக்கத்தவறிய பல முக்கியமான விடையங்கள் அரசியல் தளத்தில் அவர்களின் மீது திரும்பிப் பாய்ந்துள்ளன.

தமிழ் ஈழம் தவிர்ந்த வேறு ஒரு தீர்வை வலியுறுத்தக் கூடிய பல்வேறு சந்தர்ப்பங்கள் இருந்தபோதும் விடுதலைப்புலிகள் அதனை புறக்கணித்திருந்தனர். தம்மைச் சூழ உள்ள புற அரசியல் சூழ்நிலைகள் பற்றிய சரியான கணிப்பீடு இருந்திருப்பின் இந்தப் புறக்கணிப்புக்களை அவர்கள் செய்திருக்கத் தேவையில்லை.

உலகம் முழுவதும் ஒடுக்கப்படுகின்றவர்களுக்கு ஆரதவு தருவதற்கு எவரும் முனைவதில்லை. எந்தப் பேச்சுவார்த்தையிலும் ஒடுக்கப்படுகிறவர்களைச் சமரசத்திற்கு நிர்பந்திக்கின்ற சூழ்நிலையே உள்ளது.

இந்து சமூத்திரப் பிராந்தியத்தில் தமது நலன்களைப் பேணுவதற்கு விடுதலைப்பலிகள் என்கிற அமைப்பு எந்த வல்லரசுக்கும் தேவையானதாக இருக்கவில்லை. கிழக்குத் தீமோர் மற்றும் கொசோவோ போன்ற நாடுகள் விடுதலை அடைந்ததற்கு அந்த பிராந்தியத்தில் நிலவிய சாதகமான அரசியல் சூழ்நிலைகளே காரணம்.

இலங்கை மோசமான படையெடுப்பொன்றை நடத்தியபோது விடுதலைப் புலிகளின் அழிப்பைத் தடுப்பதற்கு உலக நாடுகள் முன்வரவில்லை. விடுதலைப்புலிகளின் தீவிரமான ஜனநாயக மறுப்பையும் அரசியற் கொலைகளையும் காரணம் காட்டி மக்களைப்பற்றி மட்டும் கவலைப்படுவதாக அறிக்கைகளை விடுவதுடன் ஒதுங்கி நின்று கொண்டது. ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களின் மீதும் உடல்களின் மீதும் இராணுவத்தின் வாகனங்கள் ஏறிச் செல்ல அவர்கள் அலறிய போதும் கண்டு கொள்ளாத உலக நாடுகள் தத்தமது நலன்களை பேணுவதற்காக தற்போது மனித உரிமைமீறல் போர்க்குற்றம் போன்ற விடையங்களை மேற்கொண்டுவர முயற்சிக்கின்றன. இலங்கையின் சீனச்சார்பு நிலை அமெரிக்காவையும் ஜரோப்பாவையும் அச்சத்திற்கும் எரிச்சலுக்கும் உள்ளாக்குகிறது.

இலங்கை அரசு தமிழர்களுக்கான சனநாயக உரிமைகளை மறுத்த போது விடுதலைப் புலிகள் தழிழர்களுக்குள் இருக்க கூடிய மாறுபட்ட கருத்துக்களுக்கு மதிப்பளிக்கத் தவறி இருந்ததுடன் அவற்றைக் கடுமையாக ஒடுக்கியும் வந்துள்ளனர். இது அவர்களைச் சூழ எதிரிகளையே இன்னும் உருவாக்கியிருந்தது. அரசியற் கொலைகள் தூரநோக்கில் எந்த விதமான சாதகமான விளைவுகளையும் தந்திருக்கவில்லை.

அண்மைக் காலங்களில் தமிழ்ச்;சமூக அசைவியக்கத்தில் ஏற்பட்டிருந்த முக்கியமான ஒரு அம்சத்தை விடுதலைப்புலிகள் கணக்கெடுக்கத் தவறி இருந்தனர்.சுய விருப்பிலான மக்களின் போர்ப் பங்கேற்பு வீதம் குறையத் தொடங்கியிருந்ததே அது.

இதனை விடுதலைப் புலிகள் உணர்ந்து மதிப்பளித்திருந்திருப்பின் அவர்கள் இராணுவ ரீதியான வெற்றியில் நம்பிக்கை வைத்திருந்திருக்க மாட்டார்கள். மக்களைப் பலவந்தமாக போரில் பங்கேற்கச் செய்வது மிகப் பாதகமான விளைவுகளையே கொண்டுவரும். புலிகள் கடைசி காலங்களில் மக்களை பலவந்தமாக போரில் பங்கேற்கச் செய்ய முயற்;சித்திருந்தனர்.

மாறிவரும் உலக சூழ்நிலையில் தகவற் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உலகக் கலாச்சாரத்தை குக்கிராமங்கள் வரையும் கொண்டு வருகிறது. மக்கள் வர்த்;தகமயப்பட்டு வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் மக்கள் யுத்தத்தில் தன்னெழுச்சியாகப் பங்கேற்பது சாத்தியமற்றதாகி வருகிறது. விடுதலை அமைப்பொன்று மரபு வழி இராணுவமாக மாற்றம் அடைவதற்கு சுய விருப்பிலான மக்களின் யுத்தப் பங்கேற்பு வீதம் அதிகமாக இருக்க வேண்டும். அது இல்லை என்கிறபோதே விடுதலைப் புலிகள் விழித்துக் கொண்டிருக்க வேண்டும். உலகம் பூராகவும் உள்ள தமிழர்களில் மிக பெரும்பான்மையானவர்கள்; தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக இருந்தனர். ஆனால் இவர்களில் எத்தனை வீதமானவர்கள் சுயவிருப்பின் பேரில் நேரடி யுத்தத்தில் பங்கேற்கத் தயாராக இருந்தனர்?

விடுதலைப் புலிகள் இன்றைக்கு எடுத்துக் கொண்டிருக்கும் முடிவை சில ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் பேரம்பேசக்கூடிய நிலையில் இருந்த போதே எடுத்திருக்க முடியும்.இந்தோனேசியாவின் ஆச்சே மாநில விடுதலைப் போராளிகளும் நேபாளத்தின் இடது சாரி போராளிகளும் மாறி வந்த சர்வதேசச் சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டே சமரசத்திற்கு இறங்கி சென்றார்கள். ஈராக்கில் குர்திஸ்தான் விடுதலைப் போராளிகள் அமெரிக்க ஒடுக்குமுறையுடன் கணிசமான அளவு சமரசங்களுக்குச் சென்றுள்ளனர். இதன் மூலம் தமது பிராந்தியத்தில் கணிசமான சுயாட்சித் தன்மைகளைப் பெற்றிருந்தனர். நிக்கரகூவாவில் தொடர்ந்த ஆயுத போராட்டம் தேக்க நிலையை அடைந்த போது அவர்களின் தலைவரான டானியல் ஒட்டேகா மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்ததாக கூறி அரசியல் வழியைத் தேர்ந்தெடுத்தார்.

மேற்குறித்த உதாரணங்கள் ஒடுக்கப்படுகிற மக்கள் பூரணமான அரசியல் உரிமைகளை வென்றுவிட்டதை குறிக்காவிடினும் மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தமது முடிவுகளை மாற்றிக்கொண்டதையே குறிக்கின்றன. இது ஒரு வகையில் சமரசம். ஆனால் சர்வதேச சூழ்நிலைகளைச் சரியாக எடைபோடுகிற ஒரு அரசியல் இயக்கம் தனது தந்திரோபாயங்களை மாற்றிக் கொள்வது தவறானது அல்ல.

ஒரு சமூகத்தின் இயக்கத்தை தனது கைகளில் எடுத்துக் கொள்கிற தலைமை தானும் தனது அமைப்பும் சமூக இயக்கவியலில் என்னென்ன தாக்கங்களை உண்டு பண்ணுகிறோம் எனவும் சமூக இயக்கவியல் தமது அமைப்புக்குள் என்னென்ன மாற்றங்களைக் கோருகிறது எனவும் நின்று அவதானிக்க வேண்டும்.

முடிவுகள் வெறும் சுயநம்பிக்கையில் புறநிலையான காரணிகளைக் கணக்கெடுக்காது மேற்கொள்ளப்படும் போது மோசமான தோல்விகளையும் சந்திக்கநேரும். தமது முடிவுகளுக்கு அமைப்பும் தலைமையும் மட்டுமல்ல சக பயணிகளாக இருக்கின்ற மக்களும் மிகக் கொடுமையான விலைகளைக் கொடுக்கவேண்டியிருக்கும்.

வன்னிப் பெருநிலப்பரப்பில் யுத்தத்துள் அகப்பட்டுச் சிதைந்த நான்கு லட்சம் மக்களின் இழப்புக்களுக்கும் துயரங்களுக்கும் காட்டுமிராண்டித்தனமான சிங்கள் அரசு மட்டுமல்ல விடுதலைப் போராளிகளான புலிகளும் பதில் சொல்ல வேண்டும்.

விடுதலைப் புலிகளின் அழிக்கப்படாத தலைமைகள் மீண்டும் திரண்டு போராட முற்படலாம். அது இனி தொடரப் போகும் அரசியல் சூழ்நிலைகளைப் பொறுத்தது. இலங்கை அரசு தனது அரசியலமைப்பை மாற்றிச் சிறுபான்மை இனங்களின் அபிலாசைகளை உரிமைகளை பாதுகாக்கும் சனநாயகரீதியான நீதி நிர்வாகக் கட்டமைப்புக்களை உருவாக்காத வரை மீண்டும் விடுதலைப்புலிகள் போராடுவதற்கான சூழ்நிலைகள் தோன்றவே செய்யும்.

வடக்கு கிழக்கை கடுமையான இராணுவ பிடியில் தொடர்ந்தும் அரசு வைத்திருக்குமமெனில் மீண்டும் போர் தொடரவே செய்யும்.

ஒடுக்குமுறையாளனையும் ஒடுக்கப்படுகிறவர்களுக்குத் தலைமைதாங்குபவர்களையும் வேறுபடுத்தும் முக்கியமான பண்பு ஒடுக்கப்படுகிற மக்களின் தலைமை தனது மக்களின் விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பளிப்பதாகும்.

மேலும் விடுதலைப்புலிகளின் நோக்கம் அதிகாரமாற்றமாகும். முழுமையான அதிகாரத்தை அடைவதற்கான போராட்டத்தை அதிகப்பட்ச அதிகாரங்களை அடைவதற்கான போராட்டமாக மாற்றக்கூடிய தந்திரோபாய நிலையை விடுதலைப் புலிகள் எடுத்திருப்பின் அது தமிழினத்திற்குச் செய்யப்ட்ட துரோகமாக கருதப்படதேவையில்லை என்பதை இன்றைய இழப்பு சொல்லி நிற்கிறது.

நடைமுறையில் உள்ள அரசாங்கத்தின் குணாம்சங்களை அவதானிக்கும் போது விடுதலைப்புலிகள் மீண்டும் எழுவது சாத்தியமாகவே தோன்றுகிறது. ஆனால் முன்பு இருந்தது போன்ற பேரம் பேசும் நிலைமைக்கு வளரமுடியுமா என்பது கேள்விக்குறி.
வடக்குகிழக்கு பகுதிகளில் வாழ்கிற சகல மக்களும் யுத்தத்தின் கொடூரத்திற்கு பல்வேறுபட்ட காலங்களில் முகம் கொடுத்திருந்தனர். இவர்கள் மீண்டும் யுத்தத்திற்கு தயாராவார்களா?

நாங்கள் அடைந்த தோல்விக்கான காரணங்களை அலசாவிடின் இழப்பில் இருந்து மீண்டு வர முடியாது. தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் எற்பட்டுள்ள வெற்றிடம் காலகதியில் சூன்யமாக மாறிவிடும்.

ஒரு தலைமை தனது இலட்சியம் எவ்வளவு உன்னதமானதாக இருப்பினும் மக்களின் மீது அதனை திணிக்கமுடியாது. மக்களைத் தொடர்ச்சியான கருத்தாடல்களின் மூலம் சனநாயக வழியில் அணிதிரட்டுவது மெதுவாதாக இருப்பினும் வலிமையானதாக இருக்கும்.

எந்த அரசியற்போராட்டத்திலும் பிம்பங்களைக் கட்டி எழுப்புவதை விட மக்களின் உணர்வுகளை எடைபோடுவதும் அதற்கேற்ப முடிவுகளை எடுப்பதும் முக்கியமானது.
இலத்தீன் அமெரிக்க நாடுகளில் தற்போது மேலெழுந்து வரும் முக்கியமானதொரு பண்பை இங்கு கவனிக்கலாம்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொடூரப்பிடிக்குள் சிக்கிக் கிடக்கும் இலத்தீன் அமெரிக்க நாட்டு மக்களை இராணுவரீதியாக அணிதிரட்டுவதை விடுத்து அரசியல்ரீதியாக அணிதிரட்டி பாராளுமன்றத்தினூடாக அதிகாரத்தை கைப்பற்றி மக்கள் நலன் புரியும் அரசுகளை நிறுவும் முயற்சியில் சில தலைவர்கள் வெற்றி அடைந்துள்ளனர்.

மிகக் கொடூரமான யுத்தத்தில் உயிர்களும் வளங்களும் அழிவதேயன்றி வேறெதுவும் நிகழ்வதில்லை.

இலங்கை அரசு விடுதலைப்புலிகளை வெல்வதற்காக உலக ஒழுங்கில் மிகத் தெளிவான மேற்குலக எதிர்ப்பு நிலையை எடுத்துக் கொண்டது.

இலங்கை அரசாங்கம் பல்லாண்டு காலமாக சிங்கள மக்களின் மனதுக்குள் ஊறி இருக்கும் சிங்கள பௌத்த மேலாண்மை வாதத்திற்கு தீனி போடுவதன் மூலம் மிக இலகுவாக எந்தவித சனநாயக மற்றும் பொருளாதாரச் சிந்தனை அற்ற அதிகார அமைப்பொன்றைப் இலங்கையில் பேணமுடியம் எனக் கண்டுகொண்டது. இலங்கை அரசாங்கத்தின் இயங்கியல் சிம்பாவே மற்றும் பர்மா போன்றதொரு அதிகார கலாச்சாரத்தை நோக்கி செல்வதைக் காணமுடிகிறது.

இலங்கையில் பாராளுமன்றப் பாதையினூடாக தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க முடியாதபடிக்கு இலங்கையின் அரசியல் அமைப்பு உள்ளது. ஆனாலும் உலகெங்கிலுமுள்ள ஏனைய விடுதலை இயக்கங்களுக்கு இல்லாத விடுதலைப்புலிகளுக்கு இருந்த சிறப்பான நிலமை என்னவெனில் அவர்களிடம் அன்றிருந்த இராணுவச் சமநிலையும் அதிகளவான பேரம் பேசும் சக்தியும் தான்.

புலிகள் பலமாக இருந்த நிலையில் சர்வதேசத்தின் அனுசரணையுடன் இலங்கை அரசக்கு நிர்பந்தங்களை உருவாக்கும் படியான சூழ்நிலைகளை, அரசியல் அமைப்பை மாற்றக்கூடிய நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தக்கூடிய தந்திரோபாய நிலையை ஏன் எடுக்கவில்லை?


புலிகளைத் தோற்கடித்ததன் மூலம் இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கு எந்த உரிமைகளையும் வழங்காமல் விடுவதுடன் இன்னும் இருக்கிற உரிமைகளையும் பறிக்க கூடிய வலுவான நிலமையை அடைந்துள்ளது.

தமது பிராந்திய நலன்களைப் பேணுவதற்காக ஜரோப்பாவும் அமெரிக்காவும் கொடுக்கப்போகின்ற நிர்ப்பந்தங்களுக்கு இலங்கை அடிபணியப் போவதில்லை. ஏனெனில் இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் உள்ள அதிகாரப் போட்டிக்குள் சார்ந்து கொண்டு தனது அதிகாரத்தைப் பேணுவதற்கு இலங்கைக்கு போதுமான அணிகள் உள்ளன.

தமிழ் இனத்தின் விடுதலைப் போராட்டத்தின் இயக்கவியல் சரியான முறையில் புரிந்துகொள்ளப்பட்டு கையாளப்பட்டதா என்ற கேள்விக்கு நாம் பதிலைத் தேடவேண்டும். ஏனெனில் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் எதை விரும்பியதோ அதை அடையாமல் எதை விரும்பவில்லையோ அதை அடைந்திருக்கிறது.

பிரபாகரன் மீண்டும் வருவாரானால் அவர் மேற்குறித்த கேள்விக்கான விடையுடனேயே வரவேண்டும். ஏனெனில் மேற்குறித்த கேள்வி மக்களைப் பிரதிநிதிப்படுத்த விரும்புகிற எல்லா தலைமைகளிடமும் கேட்கப்படுகிற கேள்வியாகும்.

நன்றி
global tamil news.