பின்பற்றுபவர்கள்

31 மார்ச், 2011

மொழியின் திறவுகோல்...

 
மொழியின் திறவுகோல்...குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவ அபிரா


சில வாரங்களின் முன்பு  ஈழமோகம் தனது ஊருக்குப் போய்விட்டு வந்து  முகப்பக்கத்தில் பின்வருமாறு எழுதியிருந்தார்.

கள்ளுண்டு  கடிக்க வடையுண்டு  கைப்பிடிக்கப்
பொல்லுண்டு  பேசப் பொழுதுண்டு - மல்லுண்டு
மடிந்தோர் தம் கதையுண்டு உண்டிடினும் நகைமறந்த
உடலங்கொள் முகங்கள் எமதூரில்!

சரிநிகர் வந்த காலங்களில் சரிநிகரின் இடது பக்க மேல் மூலையில் பிரசுரிக்கப்பட்டு வந்த வெண்பாக்களையும் அதன் வீச்சையும் யாவரும் அறிவர்.  அன்றாட அரசியல் பிரச்சினைகளை நறுக்குத் தெறித்தமாதிரி ஈழமோகம் தந்திருப்பார்.
ஈழ விடுதலைப் போராட்ட காலத்தின் போது மரபுக் கவிதைகளைப் பின்தள்ளிப் புதுக்கவிதைகள் ஆட்சி செய்துகொண்டிருந்தன.  இதயத்துக்குள் பொங்கிப் பிரவகித்த விடுதலை உணர்வும் சமூக விமர்சனங்களும் மரபுக் கவிதைகளின் இலக்கண வரம்புகளை மீறிப் புதுக்கவிதையாக உருவெடுத்தன. ஆயினும்  மரபுக்கவிதகளின் மீதான பரீட்சயம் கொண்டிருந்த புதுக்கவிதைக்கவிஞர்களின் கவிதைகளின் வீச்சு ஆழமாக விருந்ததையும் இங்கு நினைவு கூரவேண்டும் .
சரிநிகரின் ஒட்டுமொத்தமான அளிக்கையின் ஒருபகுதியாவிருந்த அந்த வெண்பாக்களை பலரும் முகப்பக்கத்தில் நினைவு கூர்ந்திருந்தனர். சரிநிகர் நின்றபின் வெண்பாக்களை எழுதுவதை ஈழமோகம் நிறுத்திவிட்டார்.  முகப் பக்கத்தில் நீண்ட நாட்களின் பின் அவரது கவிதையைப் பார்த்துவிட்டு பின்வருமாறு அவருக்கு எழுதி இருந்தேன்.

"சொல்லுண்டு சொல்லுள் பொருளுண்டு
அள்ளுண்டு போகாது அனுபவம்
வில்லுண்டு அம்பு பூட்டஆயுதம் தமிழானால்
கல்லென்ன கால்தளராது கள்ளென்ன மொழி பிசகாது...
எழுதுங்கோ ஈழமோகம்..."

அவருக்கு பதில் எழுதிய பின்னர் கடந்த காலங்களில் எழுதப்பட்ட ஈழத்து மரபுக் கவிதைகளை மீண்டும் ஒரு முறை வாசிக்க ஆவல் ஏற்பட்டது. எழுந்தமானமாக நூலகம் இணையத்தளத்தில் தேடிபார்த்த போது மனதில் தைத்த வரிகள்  இவை:

ஒளியோடு காணமுடியாத யாவும்
உறவாக வாழ்வு புரியும்.
இருளோடு கூடி உறவாட ஆட
ஒரு கோடி உண்மை புரியும்.

என இருளுக்குள்ளும் வாழ்வின் தத்துவத்தைக் கண்ட இணுவைக்கவிஞர் நாக சிவசிதம்பரம் மேலும் கூறுகிறார்

ஒளிதேடும் பிஞ்சுக்கொடியேறும் போது
தடையாவையும் தளிர் மீறும்
நிழல் போதுமென்று களையாற நேரின்
துயர் நூறு வந்து சூழும்...

1991 இல் எழுதப்பட்ட இந்தக்கவிதை  இருண்ட இந்த நாட்களுக்கு ஓளியேற்றுகிறதா இல்லையா?

யார் சிவிகை ஊர்வது ? யார் சுமக்கும் ஆட்கள்?
யார் நாட்டை ஆளுவது? யார் ஆளப்படுவோர்?
யார் கையில் துப்பாக்கி? யார் உடலில் ரவைகள்?
யார் சிறையில் வாடுவது? யார் கையில் திறப்பு?

1986 ஆண்டு சோ பத்மநாதனால் எழுதப்பட்ட இந்தக்கவிதைக்கு  மீண்டும் தேவையேற்படுமென்று அவர் அன்றே நினைத்தாரோ என்னவோ?

வினாக்கள் தாம் எத்தனை! ஏன் விடை கிடைக்கவில்லை.?
வெம்போர் மூண்டு எத்தனை நாள்! விடுதலை ஏன் இல்லை?
கனாக் காணும் புதியயுகம் ஏன் விடியவில்லை?
கண்ணீரும் கம்பலையும்?  ஏன் ஓயவில்லை?

என மூன்று தசாப்தங்களின் பின்பும் அவரது கவிதை விடையைத் தேடி நிற்பதனை என்னெவென்று சொல்ல..

உழைக்க ஓர் கூட்டம் உறிஞ்ச ஓர் கூட்டம்
விளைக்க ஓர் கூட்டம் வெட்ட ஓர் கூட்டம்
தழைக்க ஓர் கூட்டம் தறிக்க ஓர் கூட்டம்
பிழைக்குமா தர்மம் பெருமாட்டி சொல்லு!

என 1983 களில் எழுதப்பட்ட கவிதை ஒன்றில் வாகரைவாணன் கேட்கிறார்.
இப்படி ஏராளமான கவிஞர்களின் கவிதைகள்  மீண்டும் பேசுகின்றன. இந்தக்கவிதைகள் எமது ஆயுதம் தாங்கிய போராட்டம் வெற்றி பெற்றிருந்தாலும் கூட அதன் பின்னான வாழ்விற்குப் பொருத்த மான வகையில் மீள வாசிக்கப்படக்கூடியனவாக உயிர்த்து நிற்கின்றன. இந்தக்கவிதைகள் நவீனமான வாசிப்பு முறைகளைக் கோரிநிற்பவையல்ல.சிக்கலான மொழிநடையெதுவும் இன்றிக்  காலங்களைக் கடந்து நாங்கள் உணர்பவற்றை முன்னுணர்ந்தவையாக  வெளிப்பட்டு நிற்கின்றன.  
அண்மையில் துனிசியாவிலும் எகிப்திலும் சர்வாதிகாரிகளுக்கெதிராக எழுச்சிகொண்ட மக்கள்நெருப்பின் திரியாகவும் சந்தக்கவிதை இருந்திருக்கிறது. 20 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரஞ்சு காலனி ஆதிக்கத்திற்கெதிராக துனிசியா போராடிய  போது துனிசியக்கவிஞரான  அபு அல்- குவாசிம் அல்-ஸபி  (Abu al-Qasim al-Shabi)  அவர்கள் எழுதிய  வாழ்வின் விருப்பு (The Will of Life) என்னும் கவிதை எண்பது வருடங்கள் கடந்து மீண்டும் கண்டெடுக்கப்பட்டு புதிய புரட்சியின் சுலோகமானது.
மக்கள் வாழ்வதற்கு விரும்பின்
அவர்களுக்கெனத்தீர்மானிக்கப்படிருந்த
மேன்மையான கருணை
அவர்களுக்குச்சார்பாகவே வழங்கப்படும்.
இரவு மடியும்படி விதிக்கப்படும்.
அடிமைச்சங்கிலியின் கணைகள் அறுந்தே விழும்.

என அல்-ஸபி எழுதிய கவிதை அங்கே மீண்டும் நெருப்பை மூட்டியிருந்தத்து.
எமது கவிதைகள் மீண்டும் எப்படியான வகையில்  கண்டெடுக்கப்படுமெனெ யாருக்கும் தெரியாது .

இந்தக்கணத்தில் முகப்பக்கத்தில் ஜமாலன் அவர்கள் சமகால தமிழ்க்கவிதைகளைப்பற்றிக் கூறியிருந்த ஒன்றையும் இங்கு நினைவு கூர்ந்து செல்லலாம். அவர் பின்வருமாறு கூறி இருந்தார்:

"நவீன வாழ்வு ஏற்படுத்தியிருக்கும் அந்நியத்தன்மை, பொருட்சார் பண்பாடு,அழகியல், சுவை ஆகியவற்றில் உருவாகியுள்ள ஒருவிதமான ஒட்டுதலின்மை, வாழ்வில்,உணர்வுகளில் ஏற்பட்டிருக்கும் பாரிய மாற்றம் போன்றவற்றைப் பேசும் கவிதைகள் குறைவே. வார்த்தைகளை வாரியிறைத்து உணர்வுகளை மொண்ணையாக வெளிப்படுத்தும் மிகைநவிற்சி சார்ந்த உணர்வுகளோ அல்லது இயல்புநவிற்சி சார்ந்த வர்ணனைகளோ கவிதையாக வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றன "

கடந்த முப்பது வருடங்களாக யுத்தத்தாலும் சனநாயக விழிப்புணர்வின்மையாலும் இனம் என்கிற பொதுமையே கோலோச்சியதாலும் அமிழ்ந்திருந்த  தனிமனித உணர்வுகளின் வெளிப்பாட்டுக்கான அரசியல் சமூக பொருளாதாரக்களம் சரிவர அமையும் போது ஜமாலன்  கோரி நிற்கிற கவிதைகள் வெளிவரலாம்.

இதை எழுதிக் கொண்டிருந்த போது ஈழமோகம் எனக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருந்தார்.  திறந்து பார்த்தேன்.  அது முகப்பக்கத்தில் நான் எழுதிய எதிர்வினைக்குப் பதிலாக இருந்தது.  கவிதையாக இருந்தது.

சொற்களோ பொருளை விஞ்சும் சோதியோ நெருப்பை விஞ்சும்
கற்களோ மலையை விஞ்சும் கற்பனை கதையை விஞ்சும்
உற்பவம் நிகளும் காலை உணர்வுகள் கலங்க உண்மைச்
சொற்பதம் கொண்டு; வாழ்வை சொல்லிட அறியாநின்றேன்

சொக்கி நான் எழுதுதற்கு சுந்தரம் எதையும் காணேன்.
திக்கி வாய் திணற நெஞ்சம் திகைத்திட நின்று கண்முன்
முக்கினோர் முயன்றோரெல்லாம் முதுகெலும் புடைய வீழ்ந்து
வக்கிலார் ஆகிப்போன வகையினை மட்டும் கண்டேன்.

நாங்கள் விக்கி நின்ற வகையை அவர் எழுதியிருந்தார்  

எங்கள் போராட்டத்தை மீண்டும் எங்கிருந்து தொடங்குவது என்று அறியாத கையறு நிலையில் நிற்கிறோம்.  கடந்து முப்பது வருடங்கள் எங்கள் படைப்பாளிகள் எழுதியவற்றைத்  திரும்ப வாசிக்கும் போது இதயம் வலிக்கிறது.

ஜமாலன் சொன்ன நவீன உலகமும் பொருள்சார் பண்பாடும்  ஈழத்தமிழ் சமூகத்துள் இப்பொழுதான் நுளையத்தொடங்கியுள்ளன.

கலையும்  இலக்கியமும் பேச முனைகிற ஆழமான மொழியின் திறவு கோல்களைத்தான் மீண்டும் நாங்கள் தேடத்தொடங்கியிருக்கிறோம்

வர்ணம் மொழியல்ல
வரைந்த கோடும் மொழியல்ல
வாய்மொழியும் மொழியல்ல
விழுந்த வார்த்தையும் மொழியல்ல
சுரம் மொழியல்ல
சுருதியும் மொழியல்ல
சொல்லாது கொள்ளாது உள்ளின் அறிவை
ஊடுருவிச் சென்றதெதுவோ அதுவே மொழியென...

எங்கள் படைப்பாளிகள் பொதுமைக்குள்ளும் தன்னுணர்வின்  ஆழத்தைக் கண்டுகொள்ளும் மொழியின் திறவு கோல்களைக் கண்டுகொள்வார்கள் என்றே தோன்றுகிறது.
கடந்த மூன்று தசாப்தங்களின் படைப்புக்களை மீள வாசிக்கும் போது எங்கள் மொழியின் திறவு கோல்களைக் கண்டுகொள்ள மாட்டோமா என்ன?

குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவ அபிரா
12-03-2011

வடக்கின் வசந்தமும் அராபிய வசந்தமும்….


 

வடக்கின்  வசந்தமும் அராபிய வசந்தமும்….

இலங்கையின் அரசியற்காற்று  நிகழ்காலத்திலும் சரி எதிர்காலத்திலும் சரி தமிழர்களுக்கு எந்த  வசந்தத்தையும் கொண்டு வரப்போவதில்லை என்பதை விடுதலைப்புலிகளைக் கடுமையாக எதிர்த்த ஆத்துமாக்கள் கூட தற்போது உணர்ந்திருக்கும். விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை இந்த அரசு எப்படி நாடாத்தியது என்பதைப் பார்த்த போதாவது அந்தப்புரிதல் வந்திருக்கவேண்டும்; புரிந்திருக்க வேண்டும்.
 வெற்றிகொண்ட கடற்கொள்ளையன் கைப்பற்றப்பட்ட கப்பலில் என்ன ஆட்டமாடுவானோ  எத்தகைய அட்டூழியங்களையெல்லாம் செய்வானோ அதனையே இந்த அரசும் செய்கிறது.
சிங்களப் பேரினவாத உணர்வையும் மேலாண்மையையும் திருப்தி செய்து கொண்டு மிக மோசமான ஊழல் நிறைந்த பகல் கொள்ளை ஆட்சியை செய்யும் அரசிடம் தமிழர்களைக் காவு கொடுத்து விட்டு விடுதலைப் புலிகள் அவலமாக மடிந்து போனார்கள்.
மிக மோசமான பிரபுத்துவச் சிந்தனையும் மட்டரகமான அரசியல் அறிவையும் கொண்ட கொலைகாரர்கள் வடக்கு கிழக்கில் அரசின் அடியாட்களாகச் செயற்பட்டு யாவற்றையும் கட்டுப்படுத்துகிறார்கள்.

இனிவரும் பல ஆண்டுகளுக்கு இந்த நிலைமை நீடிக்கவே போகிறது.
குறைந்தபட்ச சனநாயகச் சிந்தனையையாவது கொண்ட ஒரு அரச கட்டமைப்பு இலங்கையில் தோன்றாதவரை வடக்கு கிழக்கில் நடக்கும் பகற்கொள்ளையை யாராலும் தடுக்க முடியாது.
மகிந்தவையும் அவரது குடும்பத்தையும் ஆட்சிக்கு கொண்டு வந்த சிங்கள சமூகம் எப்போது தனது தவறை உணர்கிறதோ அப்பொழுதான் இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்படும்.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் கூட யார் மீண்டும் ஆட்சிக்கு வருகிறார்கள்; அவர்களின் சமூக பொருளாதார அரசியல் பார்வைகள் என்ன; புதிய ஆட்சியில் சிங்கள பௌத்த மேலாதிக்கவாதத்தின் செல்வாக்கு எப்படி இருக்கப் போகிறது போன்ற விடையங்கள் முக்கியமானவை.
ஏனேனில் தமிழர்களை நாட்டின் இரண்டாம்தரப் பிரசைகளாக கணிக்கும் கலாச்சாரத்தின் அடித்தளம் அங்கிருந்துதான் வருகிறது. காலனித்துவத்திற்குப்பின்னான இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள் எல்லாமே தமிழ் மக்களைப்பொறுத்த வரை பழைய குருடி கதவைத்திறடி என்பதாகவே இருந்து வந்திருக்கிறது.

இனமதபேதமற்ற நாட்டை உருவாக்க வேண்டும் என்ற தேவை யாருக்கு இருக்கிறது…? 
தற்போதைய தேர்தல்முறைமூலம் ஆட்சியைத் தெரிவு செய்யும்  முறைமையில் பெரும்பான்மையானவர்களின் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டிய கடப்பாடு சிறுபான்மையினருக்கு இருக்கிறது.
மூன்றாம் உலக நாடுகளில் தேர்தல்கள் நேர்மையான முறையில் நடாத்தப்படாமை இன்னுமொரு சாபக்கேடு.
ஆட்சிக்கு வந்த மறுகணமே மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய தேவை ஆட்சியாளர்களுக்கு அற்றுப் போகிறது.  மக்களை மந்தைகளாக மாற்றிவிடுகிறார்கள்.
நீதி நிர்வாகம் சட்டம் யாவும் ஓரினத்துக்கு சார்பானவையாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் நாட்டில் சிறுபான்மை இனங்களின் அபிவிருத்தியைப் பற்றி யாரும் சிந்திக்கப்போவதில்லை.
நெஞ்சில் இரத்தம் வடிய அம்மணமாக நிற்கும் தமிழர்கள் தங்கள் மீது சமூக அரசியல் பொருளாதாரத் தளங்களில்  அவிழ்த்துவிடப்பட்டிருக்கும் ஒடுக்குமுறையை எதிர்க்கத் திராணியற்று நிற்கிறார்கள்.

நாங்கள் ஒரு இனத்தை அரக்கத்தனமாக நசுக்கிக் கொண்டிருக்கிறோம்;
நாங்கள் எந்த விதமான அரசியல் பொருளாதார சமூக அறிவுமற்ற ஒரு காட்டேறிக் குடும்பத்திடம் இலங்கையின் ஆட்சியை ஒப்படைத்திருக்கிறோம்;
நாட்டுக்குள் வரும் இந்திய சீன மற்றும் மேற்குலக சக்திகள் முழுநாட்டையும் சுரண்டிச் செல்வதை மட்டுமே நோக்கமாக கொண்டிருக்கிறார்கள்;
என்பதை பெரும்பான்மையான சிங்கள மக்கள் உணராத வரை..
இந்த நிலை நீடிக்கவே செய்யும்.

சுருக்கமாகச் சொன்னால் இலங்கை மக்களிடையே அடிப்படையான சனநாயக சிந்தனை உருவாகாதவரை வசந்தம் எங்கள் வாசலுக்கு வராது.

இங்கே இன்னும் துயரம் தருவது என்னவென்றால் இலங்கை மக்கள் கண்ணியமான சனநாயகச் சிந்தனையை அடைவதை கடந்தகாலத்தில் சிங்கள ஆட்சியாளர்கள் தடுத்தே வந்துள்ளார்கள்.

இந்த விடையத்தில் தமிழ்மக்களுக்குள் முகிழ்த்திருக்கவேண்டிய சனநாயகக்கலாசாரத்தை மழுங்கடித்த பெருமை  காலாதிகாலமாக தமிழ் சமூகத்தின் தலைவிதியைத் தீர்மானிப்பவர்களாயிருந்த தமிழ் அரசியல் வாதிகளையும் புலிகளையும் சாரும்.
இன்றைக்கு அரசாங்கத்தின் அடிவருடிகளாக இருப்பவர்கள் அனைவரும் கடந்தகால விடுதலைப்பண்ணையில் விளைந்த  பெருமக்களல்லவா!
உண்மையிலும் இலங்கையில் எங்களுக்கு தேவைப்படுவது மக்கள் பங்கு பெறும் சனநாயகம்.   தேர்தல் மூலம் கழிசடைகளை ஆட்சியாளர்களாக தெரிவு செய்வதுடன் முடிந்து விடுகிற சனநாயகம் அல்ல. தேர்தல்கள் முடிந்த பின்னும் மக்கள் ஆட்சியில் தீர்மானமானகரமான பங்கை வகிக்க கூடிய சனநாயகக் கட்டமைப்புக்களும் மக்களுக்குள்ள சனநாயக உரிமைகள் பற்றிப் பொறுப்புணர்வுடன் சிந்தித்து நடக்கக்கூடிய அரசியல் வாதிகளும் மட்டுமே  எங்களுக்கு தேவை. (நீங்கள் சிரிப்பது எனக்குக் கேட்கிறது. நடக்கக்கூடியதைக் கதையப்பா என்கிறீர்கள்)

அனேகமான ஆசிய ஆபிரிக்க நாடுகளில் நிலவுகிற இந்த தேர்தல் முறைச்சனநாயகம் (Electoral Democracy) உண்மையான சனநாயகம் அல்ல. பலவீனப்படுத்தப்பட்ட நீதித்துறை, பக்கச்சார்பான அல்லது கட்சிகளினால் விலைக்கு வாங்கப்பட்ட ஊடகத்துறை, ஊழல் நிறைந்த நிர்வாகம் என்பன காரணமாக இந்த நாடுகளில் உண்மையான அரசியல் சமூக பொருளாதார வளர்ச்சிகள் அடையப்படுவதில்லை.
அந்த நாடுகள் வளர்ச்சியடைந்துள்ளன எனக் காட்டப்படும் புள்ளி விபரங்கள் கூட அந்த நாடுகளில் வேர்விட்டுள்ள பல்தேசிய நிறுவனங்களின் செயற்பாடுகள் பற்றிய புள்ளி விபரங்களாக இருக்கின்றன. உண்மையிலும் வெளிக்காட்டப்படும் வளர்ச்சியினால் சமூகத்தின் சகல அடுக்குகளும் நன்மை அடைவதில்லை. பதிலாக பல்தேசியக்கூட்டுத்தாபனங்களையும் அந்நாட்டின் அதிகாரவர்க்கத்தையும் சார்ந்திருப்போர் மட்டுமே அந்த நாடுகளில் உருவாகியுள்ள வளர்ச்சியால் வரும் நலன்களை அனுபவிக்கிறார்கள். இந்தியா இதற்கு நல்ல உதாரணம்.

சனநாயகம் பற்றிப் பேசுகிற மேற்குலகம் தனது பொருளாதார அல்லது இராணுவ நலன்களை அல்லது இரண்டையும் பேணுகிற எந்த ஆட்சியாளர்களையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்தே வந்திருக்கிறது.  சீனாவும் இந்தியாவும் இதையே செய்து வருகின்றன.  அரேபியப் பிராந்தியத்தில் மேற்குலகமும் ஆசியாவில் சீனாவும் இந்தியாவும் தமது நலன்களைப் பேணுபவர்களைக் கண்மூடித்தனமாக ஆதரித்து வருகின்றன.
அரேபியப் பிராந்தியத்தில் மேற்குலகம் தனது நிலைப்பாட்டை தவிர்க்க முடியாமல் மீள்பரிசீலனை செய்ய வேண்டிய நிலைமையை தற்பொழுது அந்தந்த நாட்டு மக்கள் தமது பலமான சனநாயக் கோரிக்கை மூலம் ஏற்படுத்தி உள்ளனர்.  துனிசியா, எகிப்து,  ஏமன், லிபியா, பகரேன், மொரக்கோ, அல்ஜீரியா, ஓமான் போன்ற நாடுகளில் மக்கள் மூன்று தசாப்தங்களின் பின் எழுச்சி கொண்டு மக்கள் பங்குபற்றும் சனநாயக முறைமையைக் (Participatory Democracy) கோரிநிற்கிறார்கள்.
அது ஒன்றுமட்டுமே தங்களது சமூக அரசியல் பொருளாதார சுபீட்சத்திற்கு வழிவகுக்கும் எனக் கூறுகிறார்கள்.  ஆனால் கறையான் புற்றெடுக்க பாம்பு வந்து குடியேறிய கதையாக இந்த அராபிய எழுச்சிகள் மாறமாட்டா என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை.
எவ்வாறெனினும் இந்த எழுச்சிகளை அரேபியாவின் வசந்தம் என்றே குறிப்பிடுகிறார்கள்.  துரதிஸ்டவசமாக இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மகிந்த அரசு கொண்டுவந்த கொடூரங்களும்  வசந்தம் என்றே அழைக்கப்படுகின்றன.
நாங்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக வரும் வரும் எனக் கனவு கண்ட வசந்தம் பிண வாடையை மட்டுமே கொண்டு வந்தது.
 
சனநாயகக் கோரிக்கைகளை முன் வைத்து எழுவதற்கு முன்பு மூன்று தசாப்தங்களாக அராபிய மக்கள் சர்வாதிகாரிகளின் கீழ் அழுந்திக் கிடந்தார்கள்.  கேணல் கடாபியின் அருமை நண்பரான மகிந்தவின் காலடியின் கீழ் எவ்வளவு காலம் தமிழ் மக்கள் அழுந்திக் கிடக்கவேண்டும் என்பதை கணக்குத் தெரிந்தவர்கள் தயவுசெய்து கணித்துக் கூறுங்கள்.

குளோபல் தமிழ்ச்செய்திகளுக்காக அரிதேவா
05.03-2011

RSS comment feed
(1) அபிப்பிராயங்கள்
09-03-2011, 05:13
 - Posted by "நாகேஸ்"
இலங்கையைப்பொறுத்தவரை, பொது எதிரி எனப்படும் ஜெனனாயகப்பண்புகளுக்கு எதிரான சுற்றிவளைப்பு சூழ்ச்சிகள் கண்டிக்கப்படுவதில்லை. பொருளாதார பின்னடைவுக்கு எதிரான மந்தமான எதிர்ப்பும் இனங்களுக்கு இடையேயான வேறுபாடும் காட்டமாக உணர்வுரீதியாக முன்னிலைப்படுத்தப்படுகிறது. பிச்சை எடுப்பது மேல் எனவும் தன் இனத்திற்க்காக எந்த இன மானுடரையும் துவம்ஸம் செய்வது தம் விதி எனவும் ஊட்டு வழர்க்கப்படும் காட்டெருமகள், மக்கள் தமக்கான கடமைகளை சரிவர செய்வதில்லை. தவறான அடிப்படையில் வரையப்படும் கணக்கு சரியான விடையைத்தருவதில்லை. அரசியல்வாதிகளைத்தீர்மானிக்கும் மக்கள் சரியான தத்துவத்துடன் இல்லாது இருப்பது, அரசியல்வாதிகளைகுறைகூறுவதுடன் நிவர்த்திபெற்றுவிடுவதில்லை. எல்லோருக்கும் தன்னம்பிக்கையான எதிர்காலம் தேவைப்படுகிறது ஆனால் அதற்க்குரிய சரியான ஒன்றிணைவை யாரும் இதுவரை ஒழுங்குபடுத்தவில்லை. வெற்றித்திருவிழாவில்திளைத்துப்போயிருக்கும் சக நன்பர்களும் சரி அல்லது வெற்றித்தேரோடிய எம் சகதோழர்களும்சரி தவறான தத்துவத்தையே வரைகின்றனர். நல்லாட்சியில்லாதநாடு, எதிர்காலம் புரியாத மந்தைகள், கரற்றுடன் கனவுகள் முடிவடயும் முயல்க்கூட்டம். அடிப்படை மனித சகமனித உரிமைகளை மறந்துபோயிருக்கும் பேய்வீடு. ஊடக வணிகம், அரசியல்கொள்ளை, தற்புகழ்ச்சி பெருமிதம், மனிதன் தம்மை கடவுளாய் நோக்கும் மமதை. தோலுரிக்கப்படாத உண்மைகளும் தோல் உரிக்கப்பட்ட மனிதர்களும்.

6 மார்ச், 2011

வாய்க்கரிசியும் பண்ணைகளும்


வாய்க்கரிசியும் பண்ணைகளும் - GTNற்காக அரிதேவா
 

சென்ற கிழமை குளோபல் தமிழ்ச் செய்திகள் இணையத்தில் "அரிசித்தட்டுப்பாடும் அன்னம் பாலிக்கும்" என்னும் பத்தியை வாசித்தேன். மனம் தவிர்க்க முடியாதபடி பின்னோக்கிச்சென்றது.
வடக்கு மாகாணத்தின் தானியக் களஞ்சியமாக விளங்கியது வன்னி.  1980 களில் ஆனையிறவு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த போது யாழ்பாணத்திற்கு எல்லாப் பொருட்களும் கப்பலிலேயே கொண்டுவரப்பட்டது. அரிசி உட்பட.அப்பொழுது ஆனையிறவைத்தவிர குடாநாட்டின் பெரும்பகுதியும் வன்னியின் ஏனைய பிரதேசங்களும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலே இருந்தன.
கொழும்பில் இருந்து கப்பலில் வந்த புழுப்பிடித்த வெள்ளை அரிசிக்குப் பயந்து நாங்கள் நல்ல அரிசிக்குத் "தவண்டையடித்த" காலமது.
வன்னியில்(புதுக்குடியிருப்பில்) எனக்கு ஒரு பெரியப்பா இருந்தார். 1970களில் (சிறிமாவோகாலத்தில்) தொடங்கப்பட்ட படித்த வாலிபர் திட்டத்தில் ஈர்க்கப்பட்டு விவசாயம் செய்வதற்காகப் பெரியப்பா யாழ்ப்பாணத்தை விட்டு வன்னிக்குப் போனார்.
அன்றிலிருந்து அவரிடம் அரிசிக்கு பஞ்சமிருப்பதில்லை.
அன்றைக்கு வன்னிக்கும் குடாநாட்டுக்குமிடையில் போக்குவரத்துத் தொடர்புப்பாதைகளாக ஊரியான்வெளி கொம்படி வெளி  சுண்டிக்குளம் எனப்படும் முன்று பாதைகள் இருந்தன. இவை மாரிகாலப்பாதைகள் இவற்றினூடாக  பயணம் செய்வது என்பது ஒரு தனியான அனுபவம்.பிற்பாடு அந்தப்பாதை விடுபட்டு பூநகரி- சங்குப்பிட்டிப்பாதை பாவனைக்கு வந்தது. இந்தப்பாதையிலும் துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்தது வாழ்க்கை முழுவதும் மறக்கமுடியாத அனுபவங்களைத்தந்தது. மேற்குறித்த பாதைகளினூடாகப் பலதடவைகள்  துவிச்சக்கரவண்டியில் பயணம் செய்திருக்கிறேன். யுத்தமும் விடுதலைப்போராட்டமும் எத்தனையோ விதமான துயரங்களைத்தந்திருந்தன. ஆனால் எல்லாத்துயரங்களினூடாகவும் நாங்கள் நடந்து பண்பட்டே வந்திருக்கிறோம்.
திரும்பவும் அரிசிக்கு வருவோம்.
துவிச்சக்கர வண்டியில்  வன்னிக்குப் போய் பெரியப்பாவின்  சொந்த வயலில் விளைந்த அரிசியை வாங்கி மூட்டையாக்கி துவிச்சக்கர வண்டியின் பாரமேற்றியில் ஏற்றிக் கட்டிக் கொண்டு வந்திருக்கிறேன். 
பரந்தனில் இருந்து மூன்று முனைகளில் படர்ந்து கிடந்த வன்னி நிலம் முழுவதும் மாரிகாலங்களில் பச்சைப்பசேல் என்று பரந்து கிடக்கும்.வெள்ளம் தளும்பி நிற்கும் நிலங்களில் கூழக்கடா தவம் கிடக்கும். கார்த்திகைப் பூ பூத்திருக்கும்.
தர்மபுரம் விசுவமடு மரக்கறிகளால் நிரம்பியிருக்கும் கட்டுடையாத பிரதான குளங்கள் வயல்களுக்கு பாசனம் செய்ய வன்னி பொருளாதாரத் தடைகளுக்குள்ளும் உணவுற்பத்தியைப் பொறுத்தவரை நிமிர்ந்து நின்றது.
அந்த வன்னி இன்று காடுமழிந்து தரிசு மேடாகக் கிடக்கிறது.  விவசாயிகளும் நில உரிமையாளர்களும் தொழிலாளர்களும் அங்கமிழந்து உறவிழந்து நிர்க்கதியாக நிற்கிறார்கள்.  மாரிகால மேகம் வன்னியின் மேல் கவியும் போது வந்த இருளுக்கும் சிங்களப் பேரினவாதம் வன்னிமேல் கவிந்த போது வந்த இருளுக்கும் இடையில்தான் எவ்வளவு வித்தியாசம்.

அரிசி, தேங்காய், மரக்கறிகள் என எங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதில்லை. இன்று இலங்கையில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது.
பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த மாதிரி இயற்கை அழிவுகளும் தமிழ் பிரதேசங்களைத்தாக்கியுள்ளன; தாக்குகின்றன.

எதற்காவது தட்டுப்பாடு வரும் போது  உடனே இறக்குமதி செய்ய யோசிக்கும் கொள்கையை அரசு கடைப்பிடிக்கிறது. உடனடித்தீர்வை மட்டுமே அரசியல்வாதி சிந்திக்கிறான் தூரநோக்குடன் நீண்டகாலத்தீர்வைப்பறிச்சிந்திப்பவர் எவருமில்லை. அரசியல்வாதியை விடுவோம் நாங்கள்....!
தமிழீழ விடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் எமக்கான உற்பத்தியைப்பற்றிச்  சிந்தித்தோம். ஆனால் இப்போது...  போராட்டம் அழிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் கனவுகள் அழிக்கப்படவில்லையே...
வளமான நிலமுடைய ஒவ்வொருவரும் தனது வீட்டில் சொந்த நிலத்தில் பயிரிடக் கூடியவற்றைப் பயிரிட முடியுமே அதை யாரால் தடுக்க முடியும்.
70 வயதாகும் எனது அம்மா இப்பொழுதும் வளவில் பின் தோட்டத்தில் பழமரங்களையும் மரக்கறிகளையும் பயிரிட்டுத் தண்ணி விடும் பண்பை இழக்கவில்லை.
இந்தப்பழக்கங்கள் வெட்கட்கேடானவையா என்ன?


இன்று ஒரு நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்த போது  யாழ்ப்பாணம் மருதனார்மடச் சந்தியில் இருந்த வளமான தோட்ட நிலங்கள் யாவும் தற்போது மறைந்து வருகின்றன என்றார். குடா நாட்டின் அனேகமான நன்நிலங்கள் யாவும் இப்படித்தான் அருகிவருகின்றன.
எந்தத் திட்டமும் இல்லாமல் விளை நிலங்கள் கோவில்களாகவும் வீடுகளாகவும் மாறிவருகின்றன.  எல்லாம் புலம் பெயர்ந்தவர்கள் அனுப்புகிற பணம் செய்யும் வேலை என்றார்.  புலம் பெயர்ந்தவர்கள் அனுப்புகிற பணம் சமூகத்தின் சுயசிந்தனையையும் மரபுகளில் இருந்து கற்றறிந்த பாடங்களில் இருந்தும் வருகிற அறிவையும் அழித்து வருகிறது என்றார்.
புலம்பெயர்ந்தவர்கள் காசைமட்டும் கொண்டுசென்று முதலிடாமல் கற்றுக் கொண்ட முன்னேற்றகரமான அம்சங்களையும்  சமூகத்தை முன்னோக்கிச் செலுத்தக்கூடிய விடையங்களையும் முதலிடுவார்கள் எனவே போரினால் முடமாகியிருக்கும் ஈழத்து மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆடம்பரமான திருமண விழாக்களைக்கூடப்புரிந்து கொள்ளமுடியும்  ஆடம்பரமான மரணவீட்டுச்சடங்குகளை எப்படிப்புரிந்துகொள்வதென்கிறார் ஒரு சமூக ஆர்வலர்.
எப்படியோ அசுரத்தனமாக ஆக்கிரமித்திருக்கும் பேரினவாதம் புத்தரிடம் இருந்த பிச்சா பாத்திரத்தைப் பிடுங்கித் தோற்கடிக்கப்பட்ட போராட்டதினால் குட்டையாகக் குழம்பி நிற்கிற தமிழ்ச்சமூகத்திடம் தந்திருக்கிறது.

தற்பொழுது நாங்கள் எதிர்கொள்கிற இந்த உணவுப்பிரச்சனை உலகத்தின் எனைய பாகங்களில் எவ்வாறிருக்கிறது என்பதயும் பார்ப்போம்.
(நாங்கள் எதிர்கொள்கிற ஒவ்வொரு பிரச்சனையையும் உலகம் தழுவியும் புரிந்துகொள்வது முக்கியமானதுதானே. எத்தனை காலம்தான் குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டுவது.)
 
 உணவுப் பற்றாக்குறை எங்களுக்கு மட்டும் தானா அல்லது அது உலகம் தழுவிய பிரச்சனையா என்றும் பார்க்க வேண்டும்.
இந்த வருடமும் கடந்த வருடமும் உலகளாவிய ரீதியில் நிகழ்ந்த இயற்கை அழிவுகளை கவனத்தில் கொண்டால் பாகிஸ்தான்,  இந்தியா, சீனா,இரசியா பிரேசில், மெக்சிக்கோ மற்றும் அவுஸ்ரேலியா போன்ற பெரிய விவசாய நாடுகளில் நிகழ்ந்த பாரிய வெள்ளப் பெருக்குகள் அல்லது வரட்சிகளினால் பெருமளவான விளை நிலங்களும் விவசாயமும் அழிந்து போயிருந்தன.
உலக சனத்தொகை அதிகரித்து வருகிறது .உலகின் சனத்தொகை ஒவ்வொரு வருடமும் 85 மில்லியன்களாக அதிகரிக்கிறது.
 ஆனால் அதிகரித்து வரும் சனத்தொகைக்கு சமாந்தரமாக உணவு உற்பத்தி அதிகரிக்கவில்லை.

உலகம் முழுவதும் விவசாயக்கிராமங்கள் நகரமயமாகின்றன அல்லது பெரும்பான்மையான இளைய தலைமுறையினர் விளை நிலங்களையும் விவசாயக் கிராமங்களையும் விட்டு நகரங்களை
நோக்கி நகருகின்றனர்.
(வளர்ச்சியடைந்த நாடுகளில் விவசாய நிலங்களும் இயற்கை வளங்களும் காடுகளும் கடுமையான முறையில் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால் இலன்கை போன்ற அறிவு கெட்ட மூடர்களால் ஆளாப்படுகிற நாடுகளில் நிலைமை வேறுவிதமாக உள்ளது. பொதுமக்களாகிய நாங்களும் எதனையெல்லாம் பாதுகாக்க வேண்டுமோ அதனையெல்லாம் அழிக்கிறோம். எதனையெல்லாம் அழிக்க வேண்டுமோ அதனையெல்லாம் கட்டிப்பாதுகாக்கிறோம்.)
பெருமளவான விவசாய நிலங்கள் தாவரஎண்ணையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எரிபொருளை(Bio Diesel) உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும் உலகின் புதிய பணக்காரநாடுகளாக மாறிவரும் சீனா, இந்தியா, பிரேசில் மற்றும் மெக்சிக்கோவில் வாழும் மக்களின் உணவுப்பழக்க மாறுதல்களும் உலகில் உணவுப்பொருட்களுக்கான கேள்வியை அதிகரித்துள்ளது.

சீனா, இந்தியா, பிரேசில், மெக்சிக்கோ போன்ற நாடுகளில்  தோன்றியுள்ள வளமான வாழ்க்கையினால் அதிகளவு மக்கள் இறைச்சியை உண்ணத் தொடங்கியுள்ளனர்.
1 கிலோ இறைச்சியை உற்பத்தி செய்வதற்கு 5 கிலோ தானியத்தை விலங்குகளுக்கு வழங்க வேண்டியுள்ளது.

1974ம் ஆண்டு நடந்த உலக உணவு மகாநாட்டில் உலகத்தலைவர்கள் அனைவரும் இணைந்து
ஓவ்வொரு ஆணும் பெண்ணும் குழந்தையும் போசாக்குள்ள உணவைப் பெற்று பட்டினி இன்றி வாழும் தவிர்க்க முடியாத உரிமையை கொண்டவர்கள்
என மார்தட்டினார்கள்.
அந்த மகாநாட்டிலேயே பத்து வருடங்களுக்குள் பட்டினியை ஒழிக்க வேண்டும் என்ற உயர்ந்த சபதத்தையும் எடுத்துக்கொண்டனர்.
அவர்கள் மார்தட்டி 3 தசாப்தங்கள் கடந்து விட்டன.போசாக்கில்லாத உணவுக்கே வழி இல்லாமல் உலக சனத்தொகையின் கணிசமான பகுதி சுரண்டு கிடக்கிறது.  7 பேருக்கு ஒருவர் உலக சனத்தொகையில் பட்டினி கிடக்கிறார்.

ஆபிரிக்கா கண்டத்தில் ஒருசில நாடுகளைத்தவிர எனைய நாடுகளில் 80 வீதமான சனத்தொகை மக்கள் முறையான உணவை உண்பதில்லை.
வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒருவர் தனது வருமானத்தில் 8 தொடக்கம் 12 வீதம் மட்டுமே உணவுக்காக செலவிடவேண்டியுள்ளது.  ஆனால் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் சராசரி மனிதர் தமது வருமானத்தில் 80 வீதத்தை அடிப்படையான உணவுப் பொருட்களை வாங்குவதற்கு செலவிடவேண்டியுள்ளது..
"பசி வர அங்கே மாத்திரைகள் பட்டினியால் இங்கே யாத்திரைகள் இருவேறுலகம் இதுவென்றால்..." என்ற கண்ணதாசனின் வரிகள் தான் ஞாபகம் வருகின்றன.

அரபு நாடுகளில் இன்று தோன்றியுள்ள சர்வாதிகார அரசுகளுக்கெதிரான போராட்டத்தின் அடிப்படைக்காரணம் அத்தியாவசியமான உணவுப்பொருட்களின் விலை அதிகரித்தமையென்பதை நீங்கள் அறிவீர்களா?
உண்மையிலும் உலகளாவிய ரீதியில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளது.
குறித்த ஒரு உணவு உணவுப் பழக்கம் மக்களின் கலாச்சாரத்துடனும் இணைந்த விடையம்.  அதற்கு தட்டுப்பாடு வரும் போது மக்கள் அதிருப்தி அடைகிறார்கள்.
இந்தியாவில் சிவப்பு வெங்காயத்தின் விலை அதிகரித்தது.  இந்தோனேசியாவில் சிகப்பு மிளகாய் விலை அதிகரித்து.அரபு நாடுகளில் கோதுமையினதும் சீனியினதும் விலை அதிகரித்தது.
உலகளாவிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்புக்கு வெளியே சொல்லப்படுகிற காரணங்களை விடவும் முக்கியமான இன்னொரு  விடையம் தற்போது வெளிவந்துள்ளது.
அமெரிக்கா தனது அண்மைக்கால பொருளாதாரக் நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்காக  வங்கிகளிடம் இருந்து முறிகளைப் பெற்றுக்கொண்டு  600 பில்லியன் டொலர்களை அச்சடித்து சந்தையில் புழங்க விட்டிருக்கிறது.  இது பணவீக்கத்திற்கும் அதன் வழி உணவு மற்றும்  எரிபொருள் விலை அதிகரிப்புக்கும் வழிவகுத்துள்ளதாக கூறப்படுகிறது.
உலகின் தானியக் களஞ்சியமான சீனா தற்போது கடும் வரட்சி காரணமாக பாரிய உணவுத் தட்டுப்பாட்டை கொண்டிருந்தாலும்  அதன் தன்னிறைவுக் கொள்கை காரணமாக தானிய உற்பத்தியில் தன்னிறைவடைந்திருந்தது.
1970 களில் இலங்கையில் கொண்டுவரப்பட்ட தன்னிறைவும் பொருளாதாரத்திட்டம் நல்லதேயாயினும் பாணுக்கு வரிசையில் நின்ற கடுப்பில்  தன்னிறைவுக்  கொள்கையை இலங்கை அன்றே கைவிட்டு விட்டது.( இல்லாவிடால் உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் கழுத்தை நெரித்து விடவைத்திருப்பார்கள் என்பது வேறுகதை ஆனால் அரசியல் வாதிகளும் மக்களும் உறுதியாக விருந்தால் ஒரு நாடு வளர்ச்சி பெற முடியும்)
எனது நண்பரொருவர்  ஒவ்வொரு நாளும் காலையில் பண்ணையில் அறுவடைசெய்வது நீர்ப்பாசனம் செய்வது  போன்ற வேலைகளைச் செய்து விட்டுதான் மற்ற வேலைகளைச் செய்வேனென்றார். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. அவரின் வீட்டுக்கு முன்னும் பின்னும் நான்கு சதுரடிக்கு மேல் நிலமில்லை. `நீ எப்பொழுது பண்ணை வாங்கினாய் என்றேன்.
சும்மா பகிடி விட வேண்டாம். நான் முகப்பக்கத்தில் farm ville இல் பண்ணைகட்டி அறுவடை செய்யிறதைச் சொன்னேன் .பெடி  பெட்டையெல்லாம் இப்ப அதைத்தானே விளையாடினம் என்றார்.

முள்ளி வாய்காலில் வைத்து எங்கள் எல்லோருக்கும் இந்த அரசு வாய்க்கரிசி போட்டது. நாங்கள் இணையத்தில் பண்ணை கட்டி அறுவடை செய்கிறோம்
ஏதோ தன்னிறைவடைந்தால் சரிதான்!!

GTNற்காக அரிதேவா
22-02-2011