பின்பற்றுபவர்கள்

9 மார்ச், 2014

இலங்கையும் சனநாயகமும்

படம் : நன்றி அவந்த ஆர்டிகல
விடுதலைப்புலிகளின் காலத்தில் செய்ய முடியாதிருந்தவைகளை இப்போது செய்ய முடிவதாகக்  கூறப்படுகிறது. இதுவே சனநாயகம் எனவும் பெருப்பித்துக்காட்டப்படுகிறது.  சட்ட பூர்வமான ஒரு அரசு தனது குடிமக்களுக்கு அளிக்க வேண்டிய சனநாயகத்தளத்தின் விரிவும் ஆழமும் பற்றிய புரிதலின்மையிலிருந்தே இத்தகைய கருத்துக்கள் பிறக்கின்றன. விடுதலைப்புலிகளுடன் தன்னை ஓப்பிடுவதன் மூலம் இலங்கையின் சட்டபூர்வமான அரசு தனது பொறுப்புகளின் எல்லைகளைக் குறுக்கி விடுவதை மோசமான சனநாயக மறுப்பு என்றே விளங்க வேண்டும்
சில காலங்களுக்கு முன்பு சரத்பொன்சேகா தலைமை வகிக்கும் சனநாயகக்கட்சி சனநாயகத்தைப் பாதுகாப்போம் என்னும் பெயரில் ஒரு ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தியிருந்தது. சரத்பொன்சேகா தலைமை வகிக்கும் கட்சிக்கு சனநாயக்கட்சி எனப் பெயர் இருப்பதும் அவர் சனநாயகத்தைப்பாதுகாக்க ஊர்வலம் நடாத்துவதும் முரண் அணிக்கு உதாரணங்கள். இன்றைய உலகில் இத்தகைய அரசியற்கூத்துக்கள் அதிசயமானவை அல்ல. இப்பத்தி சரத்பொன்சேகா பற்றியதல்ல; சனநாயகம் பற்றியது.
இன்றைக்கு உலகத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் அனைவருமே தங்களைச் சனநாயகவாதிகள் என்றுதான் சொல்லிக்கொள்ளுகிறார்கள். ஒரு ஆட்சி முறைமை என்ற வகையில் அது நிலவுவதாகச் சொல்லப்படுகிற மேற்குலகில் இருந்து பாராளுமன்ற ஆட்சி நிலவுகிற ஆசிய ஆபிரிக்க இலத்தீனமெரிக்க நாடுகள் வரை உண்மையான சனநாயக ஆட்சி நிலவுகிறதா என்ற கேள்வி எழுகிறது.
ஆட்சி முறையாக சனநாயகம் என்பது  எவ்வளவு கேலிக்கூத்தானது என்பதை தோமஸ் ஜெஃபெர்சன் பின்வருமாறு கூறுவார்.சனநாயகம் என்பது ஐம்பத்தியொரு வீதமான மக்கள் நாற்பத்தியொன்பது வீதமான மக்களின் உரிமைகளை மறுத்துவிடக்கூடிய ஒரு கும்பல் ஆட்சி முறைமை. (“A democracy is nothing more than mob rule, where fifty-one percent of the people may take away the rights of the other forty-nine.” Thomas Jefferson)
நாற்பத்தியொன்பது வீதமான மக்களைத் தற்காலிகமாக மறந்து விடுவோம். குறித்த ஐம்பத்தியொரு வீதமான  மக்களுடைய விருப்பங்களும் உரிமைகளும் கூட உண்மையிலும் பேணப்படுகின்றனவா?
மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத்தெரிவு செய்து அதிகாரத்தை அவர்களிடம் அளிப்பது என்பது சனநாயகத்தின் அடித்தளம். ஆனால் சனநாயகத்தினை மிக ஆழமாகவும் நுண்ணியதாகவும் புரிந்து கொள்ள முற்பட்டால் அதிகாரத்தை அளிக்கும் மக்களுக்கும் அதனைப் பெறும் அரசியல் வாதிக்கும் இடையிலான இடையறாத ஊடாட்டமே சனநாயகத்தின் உயிர் என்பது தெரிய வரும்.
மக்களின் அறிவுபூர்வமான நியாயமான கோரிக்கைகளைப் புரிந்து கொண்டு அரசவியந்திரத்தினூடாக அதனை நிறைவேற்றுவதற்கான வழிவகைகளைத் தேடுவதே அரசியல்வாதியின் பணி. நடைமுறையில் அரசியல்வாதிகள் அதிகாரத்தைப்பெறுவதற்காக மக்களுக்கு கவர்ச்சியான வாக்குறுதிகளை வழங்குகிறார்கள். அவர்களது அறிவைக் கிளர்த்தாமல் உணர்ச்சிகளை மட்டும் கிளர்த்துகிறார்கள்; அவர்களை ஊடகங்களினூடாக மூளைச் சலவை செய்கிறார்கள்; முடியுமாயின் விலை கொடுத்து அவர்களின் வாக்குகளை வாங்குகிறார்கள்; அல்லது ஊழல் செய்து வாக்குப்பெட்டிகளை தமக்குச் சாதகமாக நிரப்புகிறார்கள். தேர்தல் முடிவுகளின் பின் மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான உறவு ஆண்டான் அடிமை உறவாகி விடுகிறது. இத்தகைய ஆட்சிகளில் மக்களுக்கு இருக்கும் சுதந்திரம் பற்றி விளாதிமீர் இல்லிச் லெனின் அவர்கள் பின் வருமாறு கூறுவார்: “முதலாளித்துவ சமூகத்தில் சுதந்திரம் என்பது பண்டைக்கால கிரேக்கக் குடியரசில் இருந்த சுதந்திரம் போன்றே எப்பொழுதும் இருக்கும் அது அடிமைகளின் எசமானர்களுக்கான சுதந்திரம்.(“Freedom in capitalist society always remains about the same as it was in ancient Greek republics: Freedom for slave owners.” Vladimir Ilyich Lenin)
சர்வாதிகாரி ஒருவர் தான் விரும்புபவற்றைச் செய்வதற்கு மக்களிடம் அனுமதி கேட்பதில்லை. சனநாயக ஆட்சி இருப்பதாகச் சொல்லப்படும் இடத்தில் இருக்கும் அதிகாரம்  தான் விரும்புபவற்றை மக்களும் விரும்பக்கூடியவாறான சூழ்நிலைகளை ஏற்படுத்திவிடும். சர்வாதிகார ஆட்சியில் மக்களுக்கு கேள்வி கேட்க இடமே இருக்காது. ஆனால் சனநாயகத்தில் மக்களுக்கு கேள்வி கேட்க  உரிமை இருக்கும். ஆனால் முடிவெடுத்தலிலும் நடைமுறைப்படுத்தலிலும் அதிகாரத்தில் இருப்பவர்களின் நோக்கங்களே கவனத்தில் கொள்ளப்படும். ஆகப் பாராளுமன்ற அதிகாரம் தனது நோக்கத்தை நிறை வேற்றிக்கொள்வதற்கான   ஒரு மென்மையான வழிமுறையாகவே  சனநாயகத்தைப் பாவிக்கிறது. அது சனநாயகத்தை ஒரு மேன்மையான வழிமுறையாகப் பாவிப்பதில்லை.
ஒப்பீட்டளவில் சனநாயகம் நிலவுவதாகச் சொல்லப்படுகிற மேற்குலக நாடுகளில் முதலாளித்துவக் கருத்தியலும் அதனப்பேணக்கூடிய அதிகார வடிவங்களும் கட்டமைப்புக்களும் மக்களின் அகத்திலும் புறத்திலும் அவர்களின் சமூக பொருளாதர அரசியல் தளங்களில் பலமாக வேரூன்றியுள்ளன . இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னும் சோவியத் யூனியனின் சரிவின் பின்பும் இந்தக்கட்டமைப்பு என்ன விலை கொடுத்தேனும் பேணப்பட வேண்டும் என்பதில் அரசியல்வாதிகள் தெளிவாக இருக்கிறார்கள். எனவே தேர்தல்களில் ஆளும் கட்சிகளில் மாற்றங்கள் நிகழ்ந்தாலும் அமைப்பு முறையில் மாற்றம் ஏற்பட்டக்கூடாதென்பதில் அவர்கள் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறார்கள். இந்த உறுதியில் இருந்துதான் மேற்குலகின் சனநாயகம் பிறக்கிறது.  இங்கு அரசியல்வாதிகள் செவ்வனே இயங்கிக்கொடிருக்கும் ஒரு அரச இயந்திரத்தின் உதிரிப்பாகங்கள் மட்டுமே. இங்கு அரசாங்கம் ஒன்று இல்லாமல் கூட அரச இயந்திரம் பாரிய பிரச்சனைகளை எதிர் கொள்ளாது  இயங்கும். சில காலங்களுக்கு முன்பு பெல்ஜியத்தின் அரசு இரண்டு வருடங்களாக முறையான அரசாங்கம் இன்றி இயங்கியதை இங்கு நினைவு கூரலாம்.
இலங்கை இந்தியா போன்ற ஆசிய நாடுகளிலும் சரி ஆபிரிக்க நாடுகளிலும் சரி  அரச இயந்திரம் என்பது ஒன்றாகப் பொருத்தப்படாத உதிரிப்பாகங்களாக இருக்கிறது. தேர்தல்கள் மூலம் அதிகாரங்களைப்பெற்றுக்கொள்கிற அரசியல்வாதிகள் உதிரிப்பாகங்களை ஒன்று சேர்த்து ஒரு அதனை ஒரு இயந்திரமாக்குவதற்கு விரும்புவதே இல்லை. ஒன்றுடன் ஒன்று சரியான முறையில் இணைக்கப்பட்டாத உதிரிப்பாகங்களை வைத்துக்கொண்டு ஒரு இயந்திரத்தை இயக்குவதாக மக்களை ஏமாற்றும் வேலை மட்டுமே இந்த நாடுகளில் நிகழ்கிறது. மேலும் இந்த உதிரிப்பாகங்கள் குறித்த அரசியல்வாதிகளின் தனிப்பட்ட உடமையாகவும் உணரப்பட்டு விடுகின்றன. உடமை உணர்வு கூட்டுணர்வின்மை அதிகார வெறி மற்றும் ஊழல் முனைப்பு என்பன காரணமாக  அரசாட்சி முறையின் விழுமியங்கள் அழிந்து போகின்றன.
அங்கீகரிக்கப்பட அரசாங்கங்கள்  கூட தமது அதிகாரத்துக்குச் சவால் வரும் போது தமது சொந்த மக்கள் மீது, இருந்த கொஞ்ச நஞ்ச சனநாயக உணர்வையும் நசுக்கி விட்டு அரக்கத்தனமாக  நடந்து கொள்ளும் ஒரு பண்பையும் அண்மைக்காலத்தில் காண்கிறோம் துனிசியா லிபியா ஜேமன் சவூதி அராபியா பகரேன் மற்றும் எகிப்தில் தொடங்கி சிரியா வரை அரசாங்கங்களின் அரக்கத்தனமான நடத்தைகளைக் காண்கிறோம்.
உலகத்தில் அண்மைக்காலங்களில் சனநாயகத்தை வேண்டி நிகழ்ந்த போராட்டங்களில் மாற்றங்களை நிகழ்த்துவதற்கு மக்களின் எழுச்சியும் உயிரிழப்பும் பயன்பட்டாலும் மக்கள் வேண்டி நின்ற சனநாயகம் அவர்களின் கைகளுக்கு கிடைக்கவில்லை. கடந்த சில வருடங்களில் அரபு நாடுகளில் நிகழ்ந்த சனநாயகத்துக்கான போராட்டங்களின் பின், அதிகாரங்கள் சனநாயகம் பற்றிய எந்தப்புரிதலும் அற்ற இன்னுமொரு அதிகாரக் கும்பலிடமே சென்றுள்ளன. துனிசியா தொடங்கி எகிப்து வரை இதுவே நிகழ்ந்துள்ளது. தாயலாந்தில் தற்போதைய அதிகாரத்துக்கு எதிராக நிகழ்ந்து வரும் போராட்டங்கள் மக்களுக்கான சனநாயகத்தைக் கொண்டு வருவதற்கானவை அல்ல. ஆனால் மக்கள் தான் போராடுகிறார்கள்.  உக்கிரைனில் நிகழ்ந்த போராட்டத்தின் பின் அதிகாரத்துக்கு வந்தவர்கள் மக்களுக்கான சனநாயகத்தைக் கொண்டு வரப்போகிறவர்கள் அல்ல.
நடைமுறை உலகில் அதிகார மலைகளுக்கிடையில் அமைந்திருக்கும் ஒரு பள்ளத்தாக்கு வெளியே சனநாயகம். அதிகாரம் தன்னைப் பாதுகாத்துக்கொண்டு மக்கள் தமக்குள் புறுபுறுத்துக்கொள்வதற்கும் தேவைப்பட்டால் உரத்துக்கத்தி தமது எதிரொலிகளைக் கேட்டுத் திருப்திப்பட்டுக்கொண்டு வாழ்வதற்கும் வழங்கப்பட்ட வெளியே நடைமுறையுலகின் சனநாயகம்.

பிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் தேர்தல்கள் மூலம் அதிகாரத்தை நோக்கி நகர்கிற தனிமனிதர்களின் (கட்சியின் தலைவர்கள் கட்சியைச் சார்ந்த உயரிகள்) நலன்களை நிறைவேற்றுவதற்கே சனநாயகம் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. அதிகாரத்தை நோக்கி நகர்பவர்கள் உலகளாவிய முதலாளித்து நலன்களைக் குறிப்பாக மேற்குலகின் நலன்களைப்பேணுபவர்களாக இருக்கும் போது இந்தப்பதம் இன்னும் உரத்து வலுவூட்டிப் பேசப்படுகிறது.
அதிகாரத்தில் இருப்பவர்களின் சனநாயகம் பற்றிய புரிதலும் அதனை அவர்கள் நடைமுறையில் எவ்வாறு பிரயோகிக்கிறார்கள் என்பதும் இந்த நாடுகளில் முக்கியமாகி விடுகிறது. சனநாயகம் என்பது இரண்டு ஓநாய்களும் ஒரு ஆடும் ஒன்றாகக்கூடி அன்றிரவு இரவுணவாக எதனை உண்பது என வாக்கெடுப்பதல்ல (“Democracy must be something more than two wolves and a sheep voting on what to have for dinner.” James Bovard) என ஜேம்ஸ் போவாட் என்பவர் கூறுவதை இங்கு நினைவு கூரலாம்.
விடுதலைப்புலிகளைத் தோற்கடித்த பின்னர் இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் மக்களுக்களுக்கான சனநாயகம் கிடைத்து விட்டதாக மகிந்த அரசாங்கம் கூறியது. நம்பியவர்கள் மிக விரைவில் அந்த நம்பிக்கையைக் கைவிடவேண்டிய நிலமைகள் தோன்றியதையிட்டுக் கவலைப்பட்டார்களா அல்லது சந்தோசப்பட்டார்களா என்று எனக்குத் தெரியவில்லை.
அங்கீகரிக்கப்படாத, தனது சுயபலத்தில் தன்னம்பிக்கை அடையாத எந்த அதிகாரமும் சனநாயகத்தின் அரிச்சுவட்டைக் கையில் எடுப்பதில்லை. எமது விடுதலைப்போராட்டத்தின் தோற்றத்தில் தொடங்கி பின்னர் விடுதலைப்புலிகளின் வளர்ச்சி வரையான படிநிலைகளை அவதானிக்கும் போது  இது தெளிவு படும்.
விடுதலைப்புலிகள் மிக மோசமான சனநாயக மீறல்களில் ஈடுபட்ட போதும் காலப்போக்கில் தங்களுக்குள் புறுபுறுப்பவர்களைக் கூட அடக்கி விடுவது என்ற போக்கைக் கைவிடுமளவுக்கு வளர்ச்சி அடைந்திருந்தார்கள். இறுதிப்பேச்சுவார்த்தையின் ஆரம்பகாலங்களில் தங்களை விமர்சித்தவர்கள் அல்லது எதிர்த்தவர்களுடன் தங்களது பார்வையிலான  தமிழ்த் தேசிய நலன்களை ஏற்றுக்கொண்டவர்களுடன் உரையாடும் அளவுக்கு மாறியிருந்திருந்தார்கள். இதனை நான் சொல்வதன் நோக்கம் புலிகள் சனநாயகமயப்படத் தொடங்கியிருந்தார்கள் என நிறுவுவதல்ல பதிலாக ஒரு அதிகாரம் தன்னம்பிக்கை அடைந்து வேர் ஊன்றத்தொடங்கும் போது தனது கடும் போக்குகளைத் தளர்த்தும் என்பதைச் சுட்டுவதே.
உலகம் முழுவது விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்ட - ஈடுபடுகின்ற அனேகமான  போராளிக்குழுக்கள் மிக மோசமான சனநாயக மறுப்புகளைச் செய்திருக்கின்றனர்; செய்து கொண்டிருக்கின்றனர். இதற்கான காரணம் இவர்களின் பார்வையில் இவர்களின்  அதிகாரம் நிச்சயமற்றிருக்கிறது; வேரூன்றாதிருக்கிறது. இந்தகைய சனநாயக மறுப்புக்களின் மூலம் தமது அதிகாரத்தை வேரூன்றச் செய்யலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
இலங்கை அரசு  வடக்குக்கிழக்கில் கொடூரமான ஒரு யுத்தத்தை நடத்தியதன் நோக்கம் வடக்கு கிழக்கில் மக்களுக்கான சனநாயகத்தை நிலை நாட்டுவதல்ல மாறாக  வடக்கு கிழக்கில் தனது அதிகாரத்தினை நிலை நாட்டுவதே. எந்த ஒரு இடத்திலும் நிலவக்கூடிய  சனநாயகம் என்பது அங்கு நிலவும் அதிகாரத்தின் கருத்தியல்களினாலும் குணநலன்களினாலும் தீர்மானிக்கப்படுவதாகும். முன்பு விடுதலைப்போராளிகளினதும் விடுதலைப்புலிகளினதும் கருத்தியல்களும் குணநலன்களும் வடக்கு கிழக்கின் சனநாயகச் சூழலைத் தீர்மானித்தன. இப்பொழுது சிங்கள பௌத்த பேரினவாத  கருத்தியல்களுடன் இயங்கும்  அரசினதும், குடும்ப நலன்களின் அடிப்படையில் இயங்கும் ஊழல் நிறைந்த ஒரு அரசாங்கத்தினதும் குண நலன்களால் இலங்கையினதும் வடக்கு கிழக்கினதும் சனநாயகச்சூழல் தீமானிக்கப்படுகிறது.
அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசுக்கு (அது பிற்போக்குத்தனமான ஒடுக்குமுறை அரசாக இருந்தாலும்  கூட) இருக்கிற வெளி போராளிக்குழுக்களுக்கு இருப்பதில்லையெனவே பொதுவாக உணரப்படுகிறது. ஆனால் அரசுகளுக்கு அவற்றின் சட்டபூர்வம் சார்ந்து கிடைக்கிற வெளியை போன்ற ஒன்று போராளிக்குழுக்களுக்கும் இருக்கிறது. இது மக்கள் நலன் சார்ந்த போராட்ட அறங்களுக்கூடாகக்  கிடைக்கிறது. ஆனால் இந்த வெளியைப் போராளிக் குழுக்களின் தலைவர்களோ போராட்டத்தை வழி நடத்தும் கருத்தியலாளர்களோ உணர்ந்துகொள்வதில்லை. தமது போராட்ட இயங்கியலுக்குள் சனநாயகப்பண்பை மிகமிக ஆரம்பத்திலேயே வித்திட்டு விடவேண்டும் என்ற தேவை இருப்பதை இருந்ததை அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை. இதை உணர்ந்திருந்தால்  தமிழீழ விடுதலைப்போராளிகள் இவ்வளவு சனநாயகமீறல்களையும் செய்திருக்கக்கூடிய சூழ்நிலைகள் தோன்றியிருக்காது.
விடுதலைப்புலிகளின் காலத்தில் செய்ய முடியாதிருந்தவைகளை இப்போது செய்ய முடியவதாகக்  கூறப்படுகிறது. இதுவே சனநாயகம் எனவும் பெருப்பித்துக்காட்டப்படுகிறது.  சட்ட பூர்வமான ஒரு அரசு தனது குடிமக்களுக்கு அளிக்க வேண்டிய சனநாயகத்தளத்தின் விரிவும் ஆழமும் பற்றிய புரிதலின்மையிலிருந்தே இத்தகைய கருத்துக்கள் பிறக்கின்றன. விடுதலைப்புலிகளுடன் தன்னை ஓப்பிடுவதன் மூலம் இலங்கையின் சட்டபூர்வமான அரசு தனது பொறுப்புகளின் எல்லைகளைக் குறுக்கி விடுவதை மோசமான சனநாயக மறுப்பு என்றே விளங்க வேண்டும்
சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசாங்கத்திற்குத்  தனது அதிகாரத்துக்கு ஆபத்து வராத வகையில் தனக்குப் பிடிக்காதவற்றைக் கூட அனுமதிக்கவும் மறுக்கவும் சாத்தியங்கள் நிறையவுண்டு. தனக்குப் பிடிக்காத போதும் ஒரு செயற்பாட்டை ஒரு அதிகாரம் தனது எல்லைக்குள் அனுமதிக்கிறது என்றால் அது அதனால் வரும் அரசியல் இலாபங்களைக் கணக்கில் கொள்கிறது என்று அர்த்தம். இதேபோல் உண்மையிலும் சனநாயக ரீதியான ஒரு கோரிக்கையை அதே அதிகாரம் மறுக்கிறது என்றால் அக்கோரிக்கை அதன் இருப்புக்கு அச்சுறுத்தலானது என்று அர்த்தம். இவ் வகையில் கடந்த காலங்களில் இலங்கையில் தமது சுயாதீனமான செயற்பாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டவர்களையும் அனுமதிக்கப்பட்டவர்களையும் புரிந்து கொள்ள முடியும். இதன் வழி இலங்கையில் சனநாயகம் நிலவுவதாக வாதிடுபவர்களுக்கும் நிலவவில்லை என வாதிடுபவர்களுக்கும் பரஸ்பரம் ஆதாரங்களை அடுக்கக் கூடியதாக இருக்கும்.
மக்களுக்கான சனநாயகம் என்பது வெறுமனே ஒரு ஆட்சி முறைமை மட்டுமல்ல. அது ஒரு வாழக்கை முறை. அது ஒரு கலாச்சாரம். தனி மனித உறவில் தொடங்கி சமுக  உறவு வரை விரிந்து பொருளாதார அரசியல் தளங்களுக்குள் ஊடுருவி வேர் செறிந்து நிமிர வேண்டிய வாழ்க்கை முறை.
மற்றவர்களின் கருத்துகளைக் கேட்டல் மட்டுமல்ல, மதித்தல் மட்டுமல்ல, அதன் வழி எனது கருத்துகளில் மாற்றம் செய்து கொண்டு உரையாடலையும் வாழ்க்கையையும் முன் நகர்த்தும் வாழ்க்கை முறையே சனநாயகம் இது பெரும்பான்மையினரைச் சிறுபான்மையினர் ஏற்றுக்கொள்ளும்  ஒரு வழி உறவல்ல.
எனது கைத்தடியைச் சுழற்ற எனக்குள்ள  உரிமை உனது மூக்கு நுனி இருக்கும் இடத்தில் முடிந்து விடுகிறது (My right to swing my fist ends where your nose begins )என்றொரு பிரபல்யமான பேச்சுள்ளது. சனநாயகத்தின்  எல்லைகள் குறித்த இந்தப்பேச்சு பல்வேறு பரிமாணங்களை உணர்த்தி நிற்கிறது. எனது கைத்தடியின் நீளம் எதிரில் உள்ளவரின் மூக்கு நீளம் எதிரில் உள்ளவரின் கைத்தடியின் நீளம் எனது மூக்கு நீளம் எங்களுகிடையில் உள்ள இடைவெளி எனப்பல விடையங்களில் எங்களுக்குள் புரிதல்கள் அவசியம்.  இவை எதுவுமேயில்லாத போது சனநாயகம் மலராது.
விடுதலைப்போராட்டம் பலமாக இருந்த போது போராளிகளிடமும் ஒரு பெரிய கைத்தடி இருந்தது. அவர்கள் அதனால் இலங்கையின் இனவாத ஒடுக்கு முறை அரசின் கைத்தடியை அடித்தார்கள்; ஏனைய இனங்களின் மூக்கையும்  அடித்தார்கள்;  தமது சொந்த மக்களின் மூக்கையும் அடித்தார்கள் இப்போது எங்களிடம் கைத்தடியும் இல்லை; சனநாயகமும் இல்லை. சிங்கள இனவாத அரசின் கைத்தடியினால் நொருங்கிப்போன மூக்குடன் இரத்தம் ஒழுக நிற்கிறோம்.
தேவ அபிரா
2014-பங்குனி