பின்பற்றுபவர்கள்

27 ஜனவரி, 2009
எமது உயிரிலும் மேலான தமிழீழ மக்களே!

நீங்கள் படும் பாடுகள் பற்றியும்
பட்டினியாகவும் பாதுகாப்பற்றிருப்பது பற்றியும்
யாரிடம் முறையிடலாம் என யோசிக்கிறீர்கள்
யார் யாரோவிடமெல்லாம் யாசிக்கிறீர்கள்
கதறி அழும் உங்களுக்கருகில்
அன்புக்குரியவர்களின் பிணங்கள்,
அவயங்கள்
அவர்கள் பற்றிய துயரச்செய்தி
கிடத்தப்பட்டிருக்கிறது.

அழுகிறவர்களை உணர்ச்சி வசப்படாதிருக்கக் கோருகிறோம்.

நிகழ்வுகளைப் புறநிலையாக நின்று புரிந்து கொள்ள வேண்டும்.
உலகம் அதனையே விரும்புகிறது.
உலகம் விரும்புவதைச் செய்யக் கடமைப்பட்டிருக்கிறீPர்கள்,
படைக்கப்பட்டிருக்கிறீர்கள்.

யாருடைய சொல்லைக் கேட்கவில்லையென்பதால்
இந்நிலைக்காளானீர்கள் என்றறியீர்கள்.
எவருடைய சொல்லைக் கேட்டிருந்தாலும்
இந்நிலைக்கே ஆளாகியிருப்பீர்கள் என்றுமறியீர்கள்.

ஆயினும்
உங்கள் முறைப்பாட்டைக்
கண்களால்
கைகளால்
கண்ணீரால்
வார்த்தைகளால்
கேவல்களால்
காற்றில் எழுதுகிறீர்கள்.

உங்களுடைய துயரங்களிலும் கண்ணீரிலும்
நாங்கள் ஏன் கரையவில்லை' என்கிறீர்கள்.
நாங்கள் துயரங்களுக்கு தூரமாக இருப்பவர்கள்

இறைதூதர்களைத் தவிர
எங்கள் எல்லாத் தூதர்களுக்கும்
உங்களைப்பற்றி முறையிடப்பட்டிருக்கிறது.

எங்களுக்கு உங்கள் மீது கோபம் கூட வருகிறது
ஏன் இப்படிக் கதறுகிறீர்கள்
ஊர் உலகத்தில் எங்கும் இது நடக்காதது போலவும்
உங்களுக்கு மட்டுமே நடப்பது போலவும்.....

ஆப்கானிஸ்தான், ஈராக,; பலஸ்தீனம்,
செஸ்னியா, குர்திஸ்தான், கொங்கோ, சோமாலியா,
நாகலாந்து, அசாம், காஸ்மீர்.....

உங்களுக்கு என்ன வந்தது!
நடந்தவைகள் நடக்கின்றவைகள் நடக்கப்போகிறவைகள் யாவும்
நல்லதற்கே என்றெண்ணி அமைதி அடையாச்சென்மங்கள!;
துயரங்கள் முட்டியா உங்கள் தலை வெடிக்கவேண்டும்?
அடபோங்கள்!
இலங்கை இராணுவத்திற்கெதற்குக் கொத்தணிக்குண்டுகளைக் கொடுக்கிறோம்
உடைக்கப்பட்ட குளங்களை ஆழப்படுத்தவோ?

இப்படிக்கு.....

பி.கு. உலகத்தலைவர்களின் சார்பில் இக்கடிதத்தில் கையொப்பமிட விரும்பும் மனச்சாட்சியுள்ள கனவான்கள் மேலே கையொப்பமிடலாம்.

தேவஅபிரா
26-01-1009