பின்பற்றுபவர்கள்

6 டிசம்பர், 2007

உங்களுடனும்.....

உங்களுடனும்
உங்களுள் ஒருத்தியுடனுமான என் காதல்...


காற்றில்லை,
கரையோர நாணல்கள் ஆடவில்லை,
ஆற்றின் கண்ணீர் மெல்லிய கோடாய் வழிகிறது.
நேசத்தை இழந்த குயிலோ நீள் துயரம் பாடுகிறது.
நேற்றுவரை என்னருகில் எத்தனை விழிகள்!
அவளும் இருந்தாள்.
அவளாக இருந்தாள்.
நேசத்தின் உச்சமோ...? நிர்மலமான நாட்களோ...?
சொற்களின் எல்லைக்குள் அடங்காத சுருதியோ...?
உயிர்ப்புறும் ஆத்மா என்றிருந்தேன்.
எத்தனை திங்கள் எத்தகை நிலவு
எங்கள் பாடலில் செம்மண் சுடரச் சேர்ந்து நடந்தோம்...
முற்றிலும் பொய்யோ?
மூச்செறிந்து நடக்கிறேன்.
ஈரமற்ற மணலில் புதையும் கால்கள்.
ஈரமற்ற மடிகளில் புதையுமோ முகம்.

பரவைக்கடல் மீது
படகேறிப் பாடியதோர் நாள்...
இரவுகளிலிருந்து வாதம் புரிந்தது பலநாள்...
ஆழ்தியானப் பயில்வுகளில் எத்தனை நாள்...
கைபற்றிக் கண்ணீர் துடைத்து,
முடிகோதி முத்தமிட்டு,
பொய்யன்றிப் புரிதலின் ஆழமேயென்றிருந்தேன்.
ஐயோ!
அனலெரி நெஞ்சும் ஆற்றொணாத் துயரமும்
புனல்வற்றிப் போயழும் ஆற்றின் கரையில் ஆறுமோ?

பொய்மையின் முகந்தெரியப் போயழ மடியுமில்லை.

சொல்லே விளங்காத மனங்களில் சுருதியுறையுமோ?
வில்லேற்றி நாண் பூட்டி
விரையும் அம்புச் சொற்கள்
அவளும் ஏவினாள்.

நேசமொன்றை நெஞ்சிற் சுமந்ததற்காய்
நீயும் எய்யடி
சாகவே நான்.
அற்றகுளத்தில் அறும் பறவைக் கூட்டம்.
உற்றவிடத்தில் உறையும் விழிகள்.
விரையும் வழியில் நசியும் மனங்களை நானறிவேன்.
ஓருகால் ஆறியிருந்தால்

அழியா மனமொன்று அன்றேனும் இருக்குமென்றால்
அழவும் கூடும் நீங்கள்.

காதல் மறக்கலாம்! கனவுகள் துறக்கலாம்!!
வசையன்றி வேறறியாச் சமூகத்தின் வேர்கள் அறுமென்றால்.
வாழ்தலென்னும் இருப்புக்காய்
வெஞ்சமர் ஒன்றில் மெய்யுமாகுதியாகலாம்.
வேறெந்த வழியிலும் எழும்
விருட்சத்தின் பொய்நிழலில்
போய்ச்சுகம் கொள்ள நான் மாட்டேன்

போங்கள் நீங்கள்.

"நன்றி" உங்கள் சொற்களுக்கும்
நில்லாதலையும் அவள் விழிகளுக்கும்.
நானறியாப் பொழுதில் அவள் சுடர
அவளறியாப் பொழுதில் நான் தளர
இருளிலும் சுடர்ந்த அவள் விழிகள் சாரமிழந்தன.
காலமதன் துயரப்படிவுகளிலொன்றாய்க் கணக்கிடவோ?
நீள் வழியெங்கும் விழிபெருக நான் போன நாட்கள் போயின.

நெஞ்செங்கும் புண்ணென்றும்
நீ மயிலிறகு கொணர்வாயென்றும்
கண்மூடிக் கனவு காணும் முட்டாள்க் கவி,
மென்நெஞ்சு
மன்றாடும் புழுவென்றிருப்பாயோ?
நானறியேன்.
நேசத்தின் முன்னால்
"நெஞ்சத்து மானம்" எதற்கென்று நீயொருகால் உணர்வாய்.
மென்மையும் வன்மையும்
மேன்மைகொள் ஆத்மாவுமாய்
நான் நிமிர்கையில் நீயும் உணர்வாய்.
ஆக,
நான் விடைபெற விரும்புகிறேன் நண்பர்களே!
இறுதிப்பிரிதலுக்கு முத்தங்களோ கைலாகுகளோ வார்த்தைகளோ
தேவையில்லை
கடந்த கால அனுபவங்களே போதும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக