பின்பற்றுபவர்கள்

12 பிப்ரவரி, 2011

எது எப்படியிருப்பினும் வாழ்க இணையம்

 
2ஆம்  இணைப்பு திருத்தங்களுடன் எது எப்படியிருப்பினும் வாழ்க இணையம் - GTNற்காக அரி தேவா

அண்மையில் ஒரு நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது யுத்தத்தின்பின் தமிழீழப்பகுதிகளில் அதிகரித்துள்ள இணைய (Internet) மற்றும் செல்லிடப்பேசிப் (Mobile Phone) பாவனைகள் குறித்தும் அதனால்வரும் பிரச்சனைகள் குறித்தும் கவலைப்பட்டார். தமிழ்ச்சமூகம் சடுதியாகத் தகவல் தொழில் நுட்ப உலகத்துக்குள் திறந்து விடப்பட்டிருப்பதால் இளையசமூகம் சுயகட்டுப்பாடின்றி இணையத்துள் ஊடாட்டி வருவதாகவும் அதனால் பல்வேறு பிரச்சனைகள் தோன்றியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
யுத்தகாலங்களில் மறுக்கப்பட்டிருந்த எத்தனையோ விடையங்களுக்கு எமது சமூகம் திறந்துவிடப்பட்டிருக்கிறது. அரசியல் ரீதியாகச் சிதைந்து போயிருக்கும் சமூகத்தைக் கலாசார ரீதியாகவும் சீரழிப்பது இலகுவானது என்பது சிங்களப்பேரினவாதத்திற்குத் தெரியாததல்ல.
கட்டுப்பாடற்ற மதுப்பாவனை,போதைப்பொருட்பாவனை,முறையான பாலியல்அறிவினடிப்படையில் அமையாத பாலுணர்வைத்தூண்டும் படங்கள் மற்றும் செய்திகளின் பரம்பல், சுய பாதுகாப்பு பற்றிய பிரக்ஞை இன்றிய இணைய அரட்டை(Internet Chat) குறுஞ்செய்திகளினூடாக(sms)மாணவிகள் மற்றும் இளம் பெண்களுக்கு விடுக்கப்படும் மிரட்டல்கள்; அனுப்பப்படும் ஆபாசச்செய்திகள் போன்றவை தமிழீழப்பகுதிகளில் வேகமாகப் பரவி வருவதாகவும் பலர் கவலைப்படுகின்றனர்.ஆயினும் அனேகமாக செல்லிடப்பேசிகள் இல்லாத இளைய சமூகத்தைக்  காண்பது அரிதாகி வருகிறது.
ஒரு சமூகம் நவீன மயப்படும் போது வரும் பிரச்சனைகளை எப்படிக் கையாள்வது என்ற அறிவும் கூடவே வளர்க்கப்பட வேண்டும். இளைய சமூகம் இணையத்தையும் தொலைபேசியையும் ஆக்க பூர்வமான விடையங்களுக்கு பயன் படுத்துவது என்பது அது தொடர்பான கல்வியூட்டலிலேயே தங்கியுள்ளது.
வறுமையில் சுருண்டுகிடக்கும் பல ஆபிரிக்க நாடுகளிலிற்கூட ஏழ்மையான கிராமவீதிகளில் கைத்தொலை பேசி விளம்பரங்களைக் காண முடிகிறது.
தவித்த வாய்க்குத் தண்ணீர் போய்ச்சேர்வதற்கு முன்னர் தொலை பேசி போய்ச்சேர்ந்து விடுகிறது.
நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ இத்தகவல் தொழில் நுட்பத்தை அங்கீகரிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
இத்தகவல் தொழில் நுட்பத்தின் இருண்ட பக்கங்களை பிறதொரு முறை அலசலாம்.
இந்தப்பந்தியில், தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் முக்கியமான ஒருபக்கத்தைப்பார்ப்போம்இணையத்தில் உருவாக்கப்பட்டுள்ள சமூக வலைப்பின்னல்களை(social net works- My space ,Facebook போன்றவை),இணையத்திலுள்ள தொடர்பாடல் பொறிமுறைகளை (skype, messegers)   குறுஞ்செய்தி பரிமாற்றப் பொறிமுறைகளைப் (Twitter) செல்லிடப்பேசியில் உள்ள வசதிகளைப்( SMS, MMS) பயன்படுத்தும் மக்கள்எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  குறிப்பாக சமூக வலைப்பின்னல்களைப் பயன் படுத்துபவர்கள் தங்களுக்குள்  தனிப்பட்ட தகவல்கள் உட்பட தங்களைது விருப்பங்கள் அரசியல் கருத்துக்கள் வாசிப்புக்கள் என்பவற்றையும் பகிர்ந்து வருகிறார்கள். இவற்றினடிப்படையில் ஒருமித்த எண்ணங்களைக்கொண்டவர்கள் குழுக்களாகவும் ஒருங்கிணைகிறார்கள். குறிப்பாக சமூக வலைப்பின்னல்களைப் பயன் படுத்துபவர்கள் தங்களுக்குள்  தனிப்பட்ட தகவல்கள் உட்பட தங்களைது விருப்பங்கள் அரசியல் கருத்துக்கள் வாசிப்புக்கள் என்பவற்றையும் பகிர்ந்து வருகிறார்கள். இவற்றினடிப்படையில் ஒருமித்த எண்ணங்களைக்கொண்டவர்கள் குழுக்களாகவும் ஒருங்கிணைகிறார்கள்.
 

தவிரவும் சைபர் உலகில்(cyber)அல்லது டிஜிரல்(digital)உலகில் சந்தித்துக்கொள்பவர்கள் அதற்கு வெளியேயும் சந்தித்ததுக் கொள்கிறார்கள். இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் நிகழும் வலைப்பதிவர் சந்திப்புகளை இங்கு நினைவு கூரலாம் ஆனால் இந்தச்சந்திப்புக்களில் அரசியல் கருத்துப்பரிமாறல்கள் தவிர்க்கப்பட்டிருந்தன. ஆனால் இந்த அரசியற்தவிர்ப்பு எப்பொழுதும் நிரந்தரமாகவிருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. உலகின் ஏனைய பகுதிகளில் மேற்குறித்த தகவல் தொழில் நுட்பம் எவ்வாறு தொழிற்படுகிறது எனக்கவனித்தால் நான் மேலே கூறியது உறுதிப்படும்.
மேற்குறித்த சமுக வலைத்தளங்களும் இணைய வசதிகொண்ட செல்லிடப்பேசிகளும் சனநாயக மறுப்பை அடிப்படையாகக் கொண்ட அதிகார ஆட்சி நிலவும் நாடுகளில் கிளர்ச்சிகளை பரப்புவதற்கு பாவிக்கப்படும் ஒரு பண்பை அவதானிக்கிறோம்.
சில ஆண்டுகளுக்கு (2004 ல்) முன்பு உக்கிரேனில் நிகழ்ந்த செம்மஞ்சள் (Orange_Revolution) புரட்சியின் போதும் செல்லிடப்பேசிகளும் குறுஞ்செய்திகளும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2006 ம் ஆண்டு அல்லது  2007ம் ஆண்டில் என நினைக்கிறேன் பிரான்சில் சமூக வலைப்பின்னல் தளமான முகப்புத்தகமூடாகப் பரப்பப்பட்ட செய்தி ஒன்றுக்கமைய முகப்புத்தக உறுப்பினர்கள் தன்னெழுச்சியாக ஓரிடத்தில் ஒன்றுகூடியதாக ஞாபகம் இருக்கிறது. ஆனால் அதன் பின்னணியில் அரசியல் நோக்கங்கள் இருக்கவில்லை.
2008 ம் ஆண்டு அதேன்ஸ்-கிரேக்கத்தில் தோன்றிய இளைஞர் எழுச்சியிலும்(Greek_riots) இணையம் ஊடான தகவல் பரிமாற்றம்,  செல்லிடப்பேசியூடான குறுஞ்செய்திப்பரிமாற்றம் என்பவை எரியும் நெருப்பில் எண்ணையை வார்க்க உதவியிருந்தன.
2009 ஆண்டில் மொல்டோவாவில்(Moldovas_Twitter_revolution) நிகழ்ந்த அரசுக்கு எதிரான கலகத்தில் ருவிற்றர் ஊடாக பரப்பப்பட்ட செய்திகள் பெரும் பங்கை வகித்திருந்தன.
2009 ம் ஆண்டு யூனில் ஈரானில் நிகழ்ந்த பாரிய எதிர்ப்புப் போராட்டங்களின்(Iran) பின்ணணியில் சமூக வலை அமைப்புக்களினூடாக மேற்கொள்ளப்பட்ட தொடர்பாடல் பெரும்பங்கை வகித்திருந்தது.
அண்மையில் துனிசியாவில் (Tunisia-social-justice) அது சர்வாதிகார அரசொன்றைத் தூக்கி எறியும் அளவுக்கு நிகழ்ந்த போராட்டங்களையும் ஒழுங்கமைக்க உதவி இருந்தது. குறிப்பாக பொலிஸின் அடாவடித்தனங்கள் பற்றிய படங்கள் செய்திகள் ருவிற்றர்  முகப்பக்கம் யு ரியூப்( You Tube) போன்றவற்றினூடாகப் பரப்பப்பட்டிருந்தன.
தற்போது எகிப்தில் நிகழும் நீண்ட நாளைய சர்வாதிகாரியான ஹஸ்னி முபாரக்கு எதிரான போராட்டங்கள் கூட மேற்குறித்த சமூக வலைத்தளங்களினுடாகவே பரப்பப்பட்டன.
எகிப்தில் மட்டுமல்ல ஜேமன், அல்ஜீரியா, தென் சூடான் ஜோர்டான் ஆகிய நாடுகளிலும் இச் சமூக வலைத்தளங்களினூடாகப் பரப்பப்படுகிற செய்திகளினால் உந்தப்படுகின்ற மக்கள் திரளாக ஒருங்கிணைக்கப்படுகிறதைக்  காண்கிறோம்.
இந்த அனுபவங்களினூடாக முக்கியமான ஒரு பண்பை அவதானிக்க முடிகிறது.
ஒழுங்கமைப்பதற்கு ஒரு நிறுவனம் இல்லாமலும் ஒழுங்கமைப்பதற்கு ஒரு தலைவர் இல்லாமலும் மக்கள் ஒரு நோக்கத்திற்காக ஒருங்கிணையும் பண்பேயது.
மேலும் இணையம் மிகக்குறைந்த செலவில் விரைவான ஒருங்கிணைப்பைச் செய்ய வழியும் வகுக்கிறது.
முதலாளித்துவ சனநாயகம் நிலவுகிற நாடுகளைத் தவிர எனைய நாடுகளில் சமூக வலை அமைப்புக்கள் அதிகார அரசாங்கங்களுக்கு  பெரும் சவாலாகவே விளங்கி வருகிறன.
1989 ஆண்டு அமெரிக்க சனாதிபதி ரேகன் (Regan)பின்வருமாறு கூறியிருந்தார்.
கோலியாத்திற்கு ஒப்பிடக் கூடிய  அதிகார அரசுகளை நுண்கணணிக் கூறுகள்(microchips) என்னும் டேவிட்(david) தோற்கடிக்கும் எனக் கூறியிருந்தார். பின்னர் பில் கிளின்டன் இணையத்தை தணிக்கை செய்ய முயல்வது ஜெலியை(Jelly) சுவரில் பூசி ஒட்ட வைக்க முயற்சிப்பதைப்போன்றதாகும் என்றார்.1999 இல் ஜோற் புஸ்பின்வருமாறு கேட்டிருந்தார் கற்பனை செய்து பாருங்கள் இணையமானது முழுச்சீனாவையும் ஆக்கிரமிக்குமென்றால் சுதந்திரமானது எப்படியயெல்லாம் சீனாவில் பரவுமென்று”.
இதனால்தான் சீனாவும் மிகச் கடுமையான இணையத் தணிக்கை முறையைக் கடைப்பிடிப்பதுடன் தேவைப்படும் போதெல்லாம் பிராந்தியங்களில் இணைய வலையமைப்பையே அறுத்துவிடுகிறது.
2009 ம் ஆண்டு ஸிங்ஸாங் பிரதேசத்தில் சீனா தனது இணைய இணைப்புக்கள் அனைத்தையும் கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு துண்டித்து வைத்திருந்தது. ஆயினும் சீன அரசின் அதிகாரத்ததுவத்திற்கு பலநூற்றுக்கணக்கான வலைப்பூ(Bloggers) பதிவர்கள் சவாலாக இருப்பதாகவே ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவிலும் சவுதி அரேபியாவிலும் Blackberryஎனப்படும் வினைத்திறன் மிக்க செல்லிடத் தொலைபேசிப் பாவனையைத் தடைசெய்வது பற்றிக் கவனம் செலுத்தப்பட்டமையையும் பின்னர்  Black berry நிறுவனம் குறித்த அரசுகளுடன் சமரசம் செய்துகொண்டு தனது வியாபாரத்தைத் தொடர்வதையும் இங்கு நினைவு கூரலாம்.

எகிப்தில் தற்பொழுது இணைய மற்றும் செல்லிடப்பேசி வலையமைப்புக்கள் முடக்கப்பட்டுள்ளன. இதையிட்டு அமெரிக்க சனாதிபதி பின்வருமாறு தெரிவிகிறார். 
உலகம் முழுவதற்கும் பொதுவான சில பெறுமானங்கள் இருக்கின்றன.கருத்துக்களைத் தெரிவிப்பதற்கான பொதுவான உரிமையும், தன்னுடைய உணர்வுகளையும் தனது தனிப்பட்ட கருத்தையும் பரிமாறுவதற்கு தனி நபர் ஒருவருக்குள்ள உரிமையுமே அவையாகும் எனவே மக்கள் சமூகவலைஅமைப்புக்களைப் பயன் படுத்துவதைத் தடுக்கக்கூடாது
ஆனால் சென்ற வருடம் அமெரிக்க செனற்றர்  ஜொ லிபெர்மான்,சீனாவைப் போன்று தேவைப்படும் போது தேவைப்படும் இடங்களில் இணைய இணைப்பைத் துண்டிக்க கூடிய அதிகாரம் அமெரிக்க சனாதிபதிக்கு இருக்க வேண்டுமென்றும் அமெரிக்கவின் மீது சைபர் தாகுதல் ஒன்று நிகழும் பட்சத்தில் அது தேவைப்படும் எனவும் தெரிவித்திருந்தார். மேலும்  விக்கி லீக்ஸ் விடையத்தில் அமெரிக்கா நடந்து கொள்ளும் முறைமையைப்பார்க்கும் போது அமெரிக்காவின் விகாரமுகமும் தெரிய வருகிறது.
அதிகாரத்திற்கும் அடக்கு முறைக்கும் எதிராகக்  குரல் எழுப்பும் மக்களை இணையம் மற்றும் செல்லிடப்பேசிகள் இணைகின்ற அதேவேளை இவை அதிகார வர்க்கங்களுக்கு கிளர்ச்சியில் ஈடுபடுபவர்களைக் கண்டுகொள்வதற்கான ஆதாரங்களாகவும் அமைந்து விடுகின்றன.
அண்மையில் பெலருஸ்சில் (Belarus) நீண்ட காலமாக ஆட்சியில் இருக்கும் அலெக்சன்டெர் லுகெசென்கொவிற்கெதிராக பாராளுமன்றச்சதுக்கத்தில் நிகழ்ந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களின் அன்றைய தொலைபேசிப்பாவனையை வைத்து யார் யாரெல்லாம் எதிர்க்கலகத்தில் ஈடுபட்டார்கள் என அரசு அறிந்து  அவர்களைப் பழிவாங்கிவருகிறது (mobile-phones-protesters/)
சர்வாதிகாரக்குடும்பத்தினதும்  சிங்கள பௌத்த பேரினவாதத்தினதும் கடும் பிடிக்குள் சிக்கியிருக்கும் நாங்கள் இணையத்தையும் சமுக வலைத்தளங்களையும் எமது சனநாயகமயப்பாட்டுக்குப் பயன்படுத்தப்போகிறோமா அல்லது சீரழிவுக்கலாசாரத்துள் அமிழப்போகின்றோமா என்பதையும் இங்கு கேள்வியாக கேட்டுக்கொள்வோம்.
எது எப்படியிருப்பினும் இணையம் வாழ்க !

GTNற்காக அரி தேவா

06-02-2011.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக