பின்பற்றுபவர்கள்

6 மார்ச், 2011

வாய்க்கரிசியும் பண்ணைகளும்


வாய்க்கரிசியும் பண்ணைகளும் - GTNற்காக அரிதேவா
 

சென்ற கிழமை குளோபல் தமிழ்ச் செய்திகள் இணையத்தில் "அரிசித்தட்டுப்பாடும் அன்னம் பாலிக்கும்" என்னும் பத்தியை வாசித்தேன். மனம் தவிர்க்க முடியாதபடி பின்னோக்கிச்சென்றது.
வடக்கு மாகாணத்தின் தானியக் களஞ்சியமாக விளங்கியது வன்னி.  1980 களில் ஆனையிறவு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த போது யாழ்பாணத்திற்கு எல்லாப் பொருட்களும் கப்பலிலேயே கொண்டுவரப்பட்டது. அரிசி உட்பட.அப்பொழுது ஆனையிறவைத்தவிர குடாநாட்டின் பெரும்பகுதியும் வன்னியின் ஏனைய பிரதேசங்களும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலே இருந்தன.
கொழும்பில் இருந்து கப்பலில் வந்த புழுப்பிடித்த வெள்ளை அரிசிக்குப் பயந்து நாங்கள் நல்ல அரிசிக்குத் "தவண்டையடித்த" காலமது.
வன்னியில்(புதுக்குடியிருப்பில்) எனக்கு ஒரு பெரியப்பா இருந்தார். 1970களில் (சிறிமாவோகாலத்தில்) தொடங்கப்பட்ட படித்த வாலிபர் திட்டத்தில் ஈர்க்கப்பட்டு விவசாயம் செய்வதற்காகப் பெரியப்பா யாழ்ப்பாணத்தை விட்டு வன்னிக்குப் போனார்.
அன்றிலிருந்து அவரிடம் அரிசிக்கு பஞ்சமிருப்பதில்லை.
அன்றைக்கு வன்னிக்கும் குடாநாட்டுக்குமிடையில் போக்குவரத்துத் தொடர்புப்பாதைகளாக ஊரியான்வெளி கொம்படி வெளி  சுண்டிக்குளம் எனப்படும் முன்று பாதைகள் இருந்தன. இவை மாரிகாலப்பாதைகள் இவற்றினூடாக  பயணம் செய்வது என்பது ஒரு தனியான அனுபவம்.பிற்பாடு அந்தப்பாதை விடுபட்டு பூநகரி- சங்குப்பிட்டிப்பாதை பாவனைக்கு வந்தது. இந்தப்பாதையிலும் துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்தது வாழ்க்கை முழுவதும் மறக்கமுடியாத அனுபவங்களைத்தந்தது. மேற்குறித்த பாதைகளினூடாகப் பலதடவைகள்  துவிச்சக்கரவண்டியில் பயணம் செய்திருக்கிறேன். யுத்தமும் விடுதலைப்போராட்டமும் எத்தனையோ விதமான துயரங்களைத்தந்திருந்தன. ஆனால் எல்லாத்துயரங்களினூடாகவும் நாங்கள் நடந்து பண்பட்டே வந்திருக்கிறோம்.
திரும்பவும் அரிசிக்கு வருவோம்.
துவிச்சக்கர வண்டியில்  வன்னிக்குப் போய் பெரியப்பாவின்  சொந்த வயலில் விளைந்த அரிசியை வாங்கி மூட்டையாக்கி துவிச்சக்கர வண்டியின் பாரமேற்றியில் ஏற்றிக் கட்டிக் கொண்டு வந்திருக்கிறேன். 
பரந்தனில் இருந்து மூன்று முனைகளில் படர்ந்து கிடந்த வன்னி நிலம் முழுவதும் மாரிகாலங்களில் பச்சைப்பசேல் என்று பரந்து கிடக்கும்.வெள்ளம் தளும்பி நிற்கும் நிலங்களில் கூழக்கடா தவம் கிடக்கும். கார்த்திகைப் பூ பூத்திருக்கும்.
தர்மபுரம் விசுவமடு மரக்கறிகளால் நிரம்பியிருக்கும் கட்டுடையாத பிரதான குளங்கள் வயல்களுக்கு பாசனம் செய்ய வன்னி பொருளாதாரத் தடைகளுக்குள்ளும் உணவுற்பத்தியைப் பொறுத்தவரை நிமிர்ந்து நின்றது.
அந்த வன்னி இன்று காடுமழிந்து தரிசு மேடாகக் கிடக்கிறது.  விவசாயிகளும் நில உரிமையாளர்களும் தொழிலாளர்களும் அங்கமிழந்து உறவிழந்து நிர்க்கதியாக நிற்கிறார்கள்.  மாரிகால மேகம் வன்னியின் மேல் கவியும் போது வந்த இருளுக்கும் சிங்களப் பேரினவாதம் வன்னிமேல் கவிந்த போது வந்த இருளுக்கும் இடையில்தான் எவ்வளவு வித்தியாசம்.

அரிசி, தேங்காய், மரக்கறிகள் என எங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதில்லை. இன்று இலங்கையில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது.
பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த மாதிரி இயற்கை அழிவுகளும் தமிழ் பிரதேசங்களைத்தாக்கியுள்ளன; தாக்குகின்றன.

எதற்காவது தட்டுப்பாடு வரும் போது  உடனே இறக்குமதி செய்ய யோசிக்கும் கொள்கையை அரசு கடைப்பிடிக்கிறது. உடனடித்தீர்வை மட்டுமே அரசியல்வாதி சிந்திக்கிறான் தூரநோக்குடன் நீண்டகாலத்தீர்வைப்பறிச்சிந்திப்பவர் எவருமில்லை. அரசியல்வாதியை விடுவோம் நாங்கள்....!
தமிழீழ விடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் எமக்கான உற்பத்தியைப்பற்றிச்  சிந்தித்தோம். ஆனால் இப்போது...  போராட்டம் அழிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் கனவுகள் அழிக்கப்படவில்லையே...
வளமான நிலமுடைய ஒவ்வொருவரும் தனது வீட்டில் சொந்த நிலத்தில் பயிரிடக் கூடியவற்றைப் பயிரிட முடியுமே அதை யாரால் தடுக்க முடியும்.
70 வயதாகும் எனது அம்மா இப்பொழுதும் வளவில் பின் தோட்டத்தில் பழமரங்களையும் மரக்கறிகளையும் பயிரிட்டுத் தண்ணி விடும் பண்பை இழக்கவில்லை.
இந்தப்பழக்கங்கள் வெட்கட்கேடானவையா என்ன?


இன்று ஒரு நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்த போது  யாழ்ப்பாணம் மருதனார்மடச் சந்தியில் இருந்த வளமான தோட்ட நிலங்கள் யாவும் தற்போது மறைந்து வருகின்றன என்றார். குடா நாட்டின் அனேகமான நன்நிலங்கள் யாவும் இப்படித்தான் அருகிவருகின்றன.
எந்தத் திட்டமும் இல்லாமல் விளை நிலங்கள் கோவில்களாகவும் வீடுகளாகவும் மாறிவருகின்றன.  எல்லாம் புலம் பெயர்ந்தவர்கள் அனுப்புகிற பணம் செய்யும் வேலை என்றார்.  புலம் பெயர்ந்தவர்கள் அனுப்புகிற பணம் சமூகத்தின் சுயசிந்தனையையும் மரபுகளில் இருந்து கற்றறிந்த பாடங்களில் இருந்தும் வருகிற அறிவையும் அழித்து வருகிறது என்றார்.
புலம்பெயர்ந்தவர்கள் காசைமட்டும் கொண்டுசென்று முதலிடாமல் கற்றுக் கொண்ட முன்னேற்றகரமான அம்சங்களையும்  சமூகத்தை முன்னோக்கிச் செலுத்தக்கூடிய விடையங்களையும் முதலிடுவார்கள் எனவே போரினால் முடமாகியிருக்கும் ஈழத்து மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆடம்பரமான திருமண விழாக்களைக்கூடப்புரிந்து கொள்ளமுடியும்  ஆடம்பரமான மரணவீட்டுச்சடங்குகளை எப்படிப்புரிந்துகொள்வதென்கிறார் ஒரு சமூக ஆர்வலர்.
எப்படியோ அசுரத்தனமாக ஆக்கிரமித்திருக்கும் பேரினவாதம் புத்தரிடம் இருந்த பிச்சா பாத்திரத்தைப் பிடுங்கித் தோற்கடிக்கப்பட்ட போராட்டதினால் குட்டையாகக் குழம்பி நிற்கிற தமிழ்ச்சமூகத்திடம் தந்திருக்கிறது.

தற்பொழுது நாங்கள் எதிர்கொள்கிற இந்த உணவுப்பிரச்சனை உலகத்தின் எனைய பாகங்களில் எவ்வாறிருக்கிறது என்பதயும் பார்ப்போம்.
(நாங்கள் எதிர்கொள்கிற ஒவ்வொரு பிரச்சனையையும் உலகம் தழுவியும் புரிந்துகொள்வது முக்கியமானதுதானே. எத்தனை காலம்தான் குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டுவது.)
 
 உணவுப் பற்றாக்குறை எங்களுக்கு மட்டும் தானா அல்லது அது உலகம் தழுவிய பிரச்சனையா என்றும் பார்க்க வேண்டும்.
இந்த வருடமும் கடந்த வருடமும் உலகளாவிய ரீதியில் நிகழ்ந்த இயற்கை அழிவுகளை கவனத்தில் கொண்டால் பாகிஸ்தான்,  இந்தியா, சீனா,இரசியா பிரேசில், மெக்சிக்கோ மற்றும் அவுஸ்ரேலியா போன்ற பெரிய விவசாய நாடுகளில் நிகழ்ந்த பாரிய வெள்ளப் பெருக்குகள் அல்லது வரட்சிகளினால் பெருமளவான விளை நிலங்களும் விவசாயமும் அழிந்து போயிருந்தன.
உலக சனத்தொகை அதிகரித்து வருகிறது .உலகின் சனத்தொகை ஒவ்வொரு வருடமும் 85 மில்லியன்களாக அதிகரிக்கிறது.
 ஆனால் அதிகரித்து வரும் சனத்தொகைக்கு சமாந்தரமாக உணவு உற்பத்தி அதிகரிக்கவில்லை.

உலகம் முழுவதும் விவசாயக்கிராமங்கள் நகரமயமாகின்றன அல்லது பெரும்பான்மையான இளைய தலைமுறையினர் விளை நிலங்களையும் விவசாயக் கிராமங்களையும் விட்டு நகரங்களை
நோக்கி நகருகின்றனர்.
(வளர்ச்சியடைந்த நாடுகளில் விவசாய நிலங்களும் இயற்கை வளங்களும் காடுகளும் கடுமையான முறையில் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால் இலன்கை போன்ற அறிவு கெட்ட மூடர்களால் ஆளாப்படுகிற நாடுகளில் நிலைமை வேறுவிதமாக உள்ளது. பொதுமக்களாகிய நாங்களும் எதனையெல்லாம் பாதுகாக்க வேண்டுமோ அதனையெல்லாம் அழிக்கிறோம். எதனையெல்லாம் அழிக்க வேண்டுமோ அதனையெல்லாம் கட்டிப்பாதுகாக்கிறோம்.)
பெருமளவான விவசாய நிலங்கள் தாவரஎண்ணையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எரிபொருளை(Bio Diesel) உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும் உலகின் புதிய பணக்காரநாடுகளாக மாறிவரும் சீனா, இந்தியா, பிரேசில் மற்றும் மெக்சிக்கோவில் வாழும் மக்களின் உணவுப்பழக்க மாறுதல்களும் உலகில் உணவுப்பொருட்களுக்கான கேள்வியை அதிகரித்துள்ளது.

சீனா, இந்தியா, பிரேசில், மெக்சிக்கோ போன்ற நாடுகளில்  தோன்றியுள்ள வளமான வாழ்க்கையினால் அதிகளவு மக்கள் இறைச்சியை உண்ணத் தொடங்கியுள்ளனர்.
1 கிலோ இறைச்சியை உற்பத்தி செய்வதற்கு 5 கிலோ தானியத்தை விலங்குகளுக்கு வழங்க வேண்டியுள்ளது.

1974ம் ஆண்டு நடந்த உலக உணவு மகாநாட்டில் உலகத்தலைவர்கள் அனைவரும் இணைந்து
ஓவ்வொரு ஆணும் பெண்ணும் குழந்தையும் போசாக்குள்ள உணவைப் பெற்று பட்டினி இன்றி வாழும் தவிர்க்க முடியாத உரிமையை கொண்டவர்கள்
என மார்தட்டினார்கள்.
அந்த மகாநாட்டிலேயே பத்து வருடங்களுக்குள் பட்டினியை ஒழிக்க வேண்டும் என்ற உயர்ந்த சபதத்தையும் எடுத்துக்கொண்டனர்.
அவர்கள் மார்தட்டி 3 தசாப்தங்கள் கடந்து விட்டன.போசாக்கில்லாத உணவுக்கே வழி இல்லாமல் உலக சனத்தொகையின் கணிசமான பகுதி சுரண்டு கிடக்கிறது.  7 பேருக்கு ஒருவர் உலக சனத்தொகையில் பட்டினி கிடக்கிறார்.

ஆபிரிக்கா கண்டத்தில் ஒருசில நாடுகளைத்தவிர எனைய நாடுகளில் 80 வீதமான சனத்தொகை மக்கள் முறையான உணவை உண்பதில்லை.
வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒருவர் தனது வருமானத்தில் 8 தொடக்கம் 12 வீதம் மட்டுமே உணவுக்காக செலவிடவேண்டியுள்ளது.  ஆனால் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் சராசரி மனிதர் தமது வருமானத்தில் 80 வீதத்தை அடிப்படையான உணவுப் பொருட்களை வாங்குவதற்கு செலவிடவேண்டியுள்ளது..
"பசி வர அங்கே மாத்திரைகள் பட்டினியால் இங்கே யாத்திரைகள் இருவேறுலகம் இதுவென்றால்..." என்ற கண்ணதாசனின் வரிகள் தான் ஞாபகம் வருகின்றன.

அரபு நாடுகளில் இன்று தோன்றியுள்ள சர்வாதிகார அரசுகளுக்கெதிரான போராட்டத்தின் அடிப்படைக்காரணம் அத்தியாவசியமான உணவுப்பொருட்களின் விலை அதிகரித்தமையென்பதை நீங்கள் அறிவீர்களா?
உண்மையிலும் உலகளாவிய ரீதியில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளது.
குறித்த ஒரு உணவு உணவுப் பழக்கம் மக்களின் கலாச்சாரத்துடனும் இணைந்த விடையம்.  அதற்கு தட்டுப்பாடு வரும் போது மக்கள் அதிருப்தி அடைகிறார்கள்.
இந்தியாவில் சிவப்பு வெங்காயத்தின் விலை அதிகரித்தது.  இந்தோனேசியாவில் சிகப்பு மிளகாய் விலை அதிகரித்து.அரபு நாடுகளில் கோதுமையினதும் சீனியினதும் விலை அதிகரித்தது.
உலகளாவிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்புக்கு வெளியே சொல்லப்படுகிற காரணங்களை விடவும் முக்கியமான இன்னொரு  விடையம் தற்போது வெளிவந்துள்ளது.
அமெரிக்கா தனது அண்மைக்கால பொருளாதாரக் நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்காக  வங்கிகளிடம் இருந்து முறிகளைப் பெற்றுக்கொண்டு  600 பில்லியன் டொலர்களை அச்சடித்து சந்தையில் புழங்க விட்டிருக்கிறது.  இது பணவீக்கத்திற்கும் அதன் வழி உணவு மற்றும்  எரிபொருள் விலை அதிகரிப்புக்கும் வழிவகுத்துள்ளதாக கூறப்படுகிறது.
உலகின் தானியக் களஞ்சியமான சீனா தற்போது கடும் வரட்சி காரணமாக பாரிய உணவுத் தட்டுப்பாட்டை கொண்டிருந்தாலும்  அதன் தன்னிறைவுக் கொள்கை காரணமாக தானிய உற்பத்தியில் தன்னிறைவடைந்திருந்தது.
1970 களில் இலங்கையில் கொண்டுவரப்பட்ட தன்னிறைவும் பொருளாதாரத்திட்டம் நல்லதேயாயினும் பாணுக்கு வரிசையில் நின்ற கடுப்பில்  தன்னிறைவுக்  கொள்கையை இலங்கை அன்றே கைவிட்டு விட்டது.( இல்லாவிடால் உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் கழுத்தை நெரித்து விடவைத்திருப்பார்கள் என்பது வேறுகதை ஆனால் அரசியல் வாதிகளும் மக்களும் உறுதியாக விருந்தால் ஒரு நாடு வளர்ச்சி பெற முடியும்)
எனது நண்பரொருவர்  ஒவ்வொரு நாளும் காலையில் பண்ணையில் அறுவடைசெய்வது நீர்ப்பாசனம் செய்வது  போன்ற வேலைகளைச் செய்து விட்டுதான் மற்ற வேலைகளைச் செய்வேனென்றார். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. அவரின் வீட்டுக்கு முன்னும் பின்னும் நான்கு சதுரடிக்கு மேல் நிலமில்லை. `நீ எப்பொழுது பண்ணை வாங்கினாய் என்றேன்.
சும்மா பகிடி விட வேண்டாம். நான் முகப்பக்கத்தில் farm ville இல் பண்ணைகட்டி அறுவடை செய்யிறதைச் சொன்னேன் .பெடி  பெட்டையெல்லாம் இப்ப அதைத்தானே விளையாடினம் என்றார்.

முள்ளி வாய்காலில் வைத்து எங்கள் எல்லோருக்கும் இந்த அரசு வாய்க்கரிசி போட்டது. நாங்கள் இணையத்தில் பண்ணை கட்டி அறுவடை செய்கிறோம்
ஏதோ தன்னிறைவடைந்தால் சரிதான்!!

GTNற்காக அரிதேவா
22-02-2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக