பின்பற்றுபவர்கள்

21 ஆகஸ்ட், 2015

தேசியமும் தேர்தலின் விலையும்தேசியப்பெடியும் பெருங்காயப்பெட்டியும் - தேவ அபிரா - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக:-

நடந்து  முடிந்த  தேர்தல் ஊழல்களற்றுச் சுதந்திரமாக நடைபெற்றதென்பது மிக முக்கியமானதொரு அம்சம். ஒரு புள்ளடியை இடுவதன் மூலம்  மக்கள் சொல்லும் செய்திகள் பன்முகமானவை. அது மட்டுமல்ல மக்கள் எனப்படுபவர்கள் ஒருமைத்தன்மையான கூட்டமுமல்ல. எனவே வாக்களிப்பு முடிவுகளும் பலவிதமாக வியாக்கியானப்படுத்தப்படவும்  கூடியவை.

இத்தேர்தல்களின் மூலம்  கண்மூடித்தனமான இனவாதப்போக்கைக் கொண்டவர்களே பெரும்பான்மையானவர்கள் என்ற போக்குச் சற்று மாறியிருக்கிறது. நாட்டின்  சமூக பொருளாதார சூழலியற்  கட்டமைப்புகளை மோசமான முறையில் அழிக்கக் கூடிய ஊழல் நிறைந்த குடும்ப அதிகாரத்தை இலங்கை தழுவி அனேகமானவர்கள்  நிராகரித்திருக்கிறார்கள். மேலும்  குறிப்பிடக்கூடிய ஒரு அம்சம் இத்தேர்தலில் இடதுசாரிகள் பின்னடைவைச் சந்தித்திருக்கின்றமையாகும்.

அமைக்கப்படப்போகிற ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான அரசாங்கம் சிறுபான்மை இனங்களை எப்படி  அணுகப்போகிறது என்பதை இப்பொழுதே எதிர்வுகூற முடியாது. ஆயினும் வரப்போகும்  அரசாங்கத்திற்கு  இலங்கையில் நிலவும் இனப்பிரச்சனைக்கு தீர்வை- சிறுபான்மையினங்கள்  திருப்திப்படக்கூடிய ஒரு தீர்வை வழங்க வேண்டிய  கடப்பாடு  உள்ளது.

இங்கே நான்  நியாயமான தீர்வு என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை. நியாயங்கள்  இவ்வுலகில் கிடைப்பதில்லை. அவை எடுத்துக் கொள்ளப்படவேண்டியவை; போராடிப்பெறப்படவேண்டியவை. நியாயத்தை  எடுத்துக்கொள்வதற்கான வலு வரும் போதுதான்  அதனை எடுத்துக்கொள்ள முடியும். இவ்வலு ஒரு மக்கள்  கூட்டத்தின் அகபுறச்சூழ்நிலைகளிற் தங்கிய  விடையம். இப்பொழுது வலுவற்றிருக்கிறோம்  என்பதை ஒத்துக்கொள்வது  உண்மையிலும் ஒரு மக்கள்  கூட்டம் தனக்குக் கிடைக்க வேண்டியவை கிடைக்கவில்லை  என்பதை  மறந்ததாக  ஆகாது.

தமிழ்மக்கள் இத் தேர்தலிற்  சொன்ன முக்கியமான செய்தி எங்களை   எங்கள்பாட்டிற்  சீவிக்க விடுங்கோ என்பதுதான்.

சுதந்திரத்தின் பின்னர் தமிழர்கள் வன்முறை நிறைந்த போராட்டவழியைச் தெரிவு  செய்வதற்கு 3 தசாப்தங்கள் எடுத்தது. இதுவும் அகப்புறச் சூழ்நிலைகள் கூறிப்பாகப் புறச் சூழ்நிலைகள் சாதகமாக இருந்ததாலேயே சாதகமானது. ஆயினும்  அவ்வழியும் மிகமிகக் கொடூரமான முறையிற் நசுக்கப்பட்டபோது எமது இனத்தின் ஆன்ம வலுவும் சேர்ந்துதான் நசுங்கியது. இவ்விடத்தில் ஒன்றைக் கவனிக்க வேண்டும்.  2000 ஆண்டின் தொடக்கத்திலேயே மக்களின் போர்ப்பங்கேற்பு வீதம் வெகுவாகக் குறைந்து விட்டது( இது குறித்து சிவராம் அவர்கள் தனது ஒரு கட்டுரையிற் குறிப்பிட்டிருந்ததாக ஞாபகம். நீண்ட பேச்சுவார்த்தைகள் மக்களின் போர்ப்பங்கேற்பு வீதத்தைக் குறைக்கும் என்ற அர்த்தத்தில் அவர் அப்பொழுது எழுதியிருந்தார்.)  அப்போழுதே புலிகளுக்கு மக்கள் தமது செய்தியைச் சொல்லி விட்டார்கள். ஆனால்  புலிகள் அச்செய்தியையும்  மீறிப் பேச்சுவார்த்தைகளைக்  கனதியாகக் கையாளாமல்  யுத்தத்தை நோக்கிச் சென்றார்கள். அது மட்டுமல்ல மக்களையும்  பலவந்தமாகப் போரிற் பங்கேற்கச்  செய்தார்கள். தாம் யாருக்கப்போராடுகிறோமோ அவர்கள் தருகிற செய்தியை அவர்களுக்காகப் போராடுகிற அமைப்போ கட்சியோ புரிந்து கொள்ள வேண்டும். (நிக்கராகுவாவில் 90களில் டானியல் ஒட்டேகா மக்கள் ஆதரவு குறைந்த போது. ஆயுதப்போராட்டத்தை விட்டு நாடாளுமன்ற வழிக்குத் திரும்பியிருந்தார்)

கடந்த தேர்தலில் மகிந்தவையும் இத் தேர்தலில்  ஒரு வகையில் புலிகளின் அணுகுமுறை போன்ற ஒன்றையும் தமிழ்மக்கள் நிராகரித்திருக்கிறார்கள். அதேவேளை விடுதலைக்காக உண்மையாக  மடிந்தவர்களை விற்றுப் போலி அரசியல் செய்பவர்களையும் அவர்கள் நிராகரித்திருக்கிறார்கள்.  எனவே ஒரு இனம் தானுண்டு தன் வேலையுண்டு என இருக்க முனைவது பிழையான பிற்போக்குத்தனமா அரசியல்  அறிவீனமா? இல்லை. தமிழ்ச்  சமூகம் கடந்த 3 தசாபதங்களாகக்  கடந்து வந்த பாதையைப் பார்த்தோமென்றால் அவர்களின் இம்முடிவு முற்றிலும்  அரசியல்ரீதியானது என்பது புரியும்.

எனவே இச்  செய்தியைச்  சொல்வதற்கு  அவர்களுக்குத்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடால் யார் கிடைப்பார்? தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பு முன்வைத்து முழங்கிய சம்ஸ்டி கூடக் கிடைக்கக்  கூடிய ஒன்றல்ல என்பது தமிழர்களுக்குத்  தெரியும். ஆனால்  முக்கியமானது என்னவென்றால் தமிழ்தேசியக்கூட்டமைப்பைத் தெரிவு செய்தால் தீர்க்க  முடியாத முரண்பாடுகளுக்குள்ளும் இராணுவம் மற்றும் புலனாய்வுக் கெடுபிடிகளுக்குள்ளும் தாங்கள் சிக்க வேண்டி வராது என்பதை அவர்கள்  அறிந்திருக்கிறார்கள். தேர்தல் முடியத் தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பு தமிழ் மக்களோடு  ஒரு சோலிக்கும்  போகாது. அவர்கள் தங்களுடைய சோலியைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். தங்களுடைய சட்டைப்பையை நிரப்புகிற வழியைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். தீவிரமான அரசியற்கோரிக்கைகள் அரசியல் ஆர்பாட்டங்கள் எதுவுமிருக்காது. தனிப்பட்டவர்களின் தேவைகள் அவரை இவரைப் பிடித்துப் பின்கதவால் நிறைவேற்றப்பட்டுவிடும்.

நவீன உலகில் மக்களின்   சிந்தனை மற்றும் பொதுப்புத்தி என்பன தனியே உள்நாட்டு நிலைமைகளால் தீர்மானிக்கப்படுவதில்லை. இவை உலகளாவிய நிலமைகளால் தீர்மானிக்கப்படுகின்றன. மக்களின் பொதுப்புத்தியும்  இளைய தலைமுறைகளின் சிந்தனையும் நுகர்வுக்கலாசாரத்தை நோக்கி வழி நடத்தப்படுகின்றன. உலகாளாவிய இடது சாரிகளின் வீழ்ச்சிக்கு இதுவும் ஒருகாரணம். நாடுகளை அகலத் திறந்து  வீடுகளை அகலத்திறந்து மக்களை இனம் மதம் மொழி பேதமற்ற நுகர்வுக்கலாசாரத்தின் ஒரு பகுதியாக்கவே உலகளாவிய முதலாளித்துவ கலாசாரம் விரும்புகிறது. அதனைச் சாதிக்கக் கூடிய அரசாங்கங்களையே இக்கலாசாரம் வரவேற்கின்றது; ஊக்குவிக்கிறது; பாதுகாக்கிறது (ஒரு நாடு சீன ரஸ்சிய அமெர்க்க சார்பு நிலைகளில் எதனை எடுத்துக் கொண்டாலும் அடிப்படையில் அவை முதலாளித்துவ நலன் பேணும் அமைப்புக்களே)  இந்த நூற்றாண்டில் இவ்வணுகு முறையில் உலகளாவிய முதலாளித்துவம் வெற்றியும் அடைந்துள்ளது. வடகொரியாவையும்  கியூபாவையும் தவிர உலகின் அனைத்து நாடுகளும் இக் கட்டமைப்புக்குள் தான் இருக்கின்றன; இயங்குகின்றன. (அண்மையில் கியூபாவிலும் அமெரிக்கா தனது தூதரகத்தைத் திறந்து விட்டது.) தொலைத்தொடர்பு சாதனங்கள், ஊடகங்கள், மற்றும் சமூக வலைத்தளங்களினூடாக உருவாக்கப்பட்டுள்ள உலகக்கிராமத்தில்  பாறைகளில்  முட்டிக் கொள்ளக் கூடிய, தீயுக்குள் பாயக்கூடிய பிள்ளைகள் உருவாக்கப்படுவது  தடுக்கப்படுகிறது. தீவிரமான அரசியல் நிலைப்பாடுகள் கண்காணிக்கப்படுகின்றன.

உலகை வழி நடத்தும் நுகர்வுக்கலாசாரத்தின் ஒரு பகுதியாக வாருங்கள் எனப்  புலிகளுக்கு வேண்டுகோளும் அச்சுறுத்தலும் வைக்கப்பட்டது .புலிகள் அதனை புரிந்து கொள்ளக் கூடிய நிலையில் இருக்கவில்லை. ஆனால் தமிழ் மக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள். இனிமேற் கடவுள் கேட்டாலும் அவர்கள் திரும்பமாட்டார்கள். ரணிலின் தலைமையின் கீழ் வடக்கு கிழக்கு முழுமையாக உலக முதலீட்டுக்குத் திறந்து விடப்படுமென்றே எதிர்பார்கிறேன். இது மக்களின் அரசியற் சிந்தனையில் மாற்றங்களைக் கொண்டு வரும். மேலும் இதன் மூலம் ஒரு வகையில் தமிழர்கள் தமக்கான மூலதனத்தை அரசியற் பிரக்ஞையுடன் உருவாக்கவும் சாத்தியங்கள் தோன்றலாம் ஆனால் இது பிரிவினைக்கான சாத்தியங்களைத் தோற்றுவிக்காது. 

இவை எல்லாவற்றையும் பார்க்கும் போது தமிழர்களது நியாயமான அரசியற்கோரிக்கைகளை அடைவதற்கான அரசியற்தளம் முற்றிலும் வேறுபட்டதாகி விட்டது என்பது புரியும். இதன் வழி   நாடாளுமன்ற அரசியலை மையப்படுத்திய கட்சி அரசியல் தமிழர்களின் அரசியற்பயணத்தின் தவிர்க்க முடியாத பகுதியாகிறது.

ஈழம் சுயநிர்ணய உரிமை சுயாட்சிப்பிரதேசம்  சமஸ்டி உச்சக்கட்ட அதிகாரப்பகிர்வு போன்றவை இலட்சிய நிலமைகளாக மாறியுள்ளன. இலட்சியத்தை அடைய ஒவ்வொருவருக்கும் உரிமையுள்ளது ஆனால் இவை மிக நீண்டதூர இலக்குகள். இவற்றைக் கைவிட வேண்டியதில்லை. அதே நேரத்தில் இலங்கை என்னும் ஒருமையான அலகுள் இயங்கவும் வேண்டும். இந்த இயக்கம் இரண்டு பரிமாணங்களைக் கொண்டது. ஒன்று நாடாளுமன்றக் கட்சி அரசியல். மற்றையது நாடாளுமன்றத்திற்கு வெளியிலான அரசியல்.

கட்சி அரசியல் என்று வரும் போது சிறுபான்மை இனக்கட்சிகள் தம்மைச் சனநாயகப்படுத்த வேண்டும். ஒவ்வொரு கட்சியும் முறையான யாப்புடன் கூடியதாகவும் பெருந்தொகையான பதிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களைக் கொண்டதாகவும் இருப்பது சனநாயகத்திற்கு அவசியமானது.  கட்சியின் உறுப்பினர்களும்  தலைவர்களும் குறித்த கால இடைவெளிகளிற் உறுப்பினர்களால் சனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட வேண்டும். கட்சியின் கருத்தியல் நடத்தை மற்றும் பொருளாதாரச் செயற்பாடுகளைக்  கண்காணிக்கும் சுயாதீனமான பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். கட்சிகள்  கிராம மட்டங்கள் வரை தமது செயற்பாடுகளை விரிக்க வேண்டும். கட்சிகள் மக்களின் தேவைகள் மற்றும் உணர்வுகள் குறித்து விழிப்புணர்வையும் கொண்டிருக்க வேண்டும். கட்சிகளின்  உறுப்பினர்களும் தலைவர்களும் அவர்களது வேலை நேரங்களில் மக்களால் அணுகப்படக்கூடியவர்களாக இருக்க வேண்டும். இவை சாத்தியமற்ற விடையங்கள் அல்ல.

கட்சிக்கு வெளியிலான அரசியல் என்பது  நாங்கள் எங்களுக்குள் நிலவும் உள்முரண்பாடுகள் ஒடுக்குமுறைகள் கலாசாரச்  சீரழிவுகள் பிற்போக்கான அம்சங்கள் குறித்த விழிப்புணர்வை அடைவதைக் குறிக்கிறது.  இந்த விழிப்புணர்வின்  மூலம்தான் எங்களது  கூட்டு  ஆன்மா வலுவடைவதற்கான வழியைக் கண்டடையமுடியும். நாங்கள் ஒரு தேசிய இனம் எனவே எங்களுக்குள் ஒற்றுமை வேண்டும்   எனக் கூறுவது அடிப்படையிலே பிழையானது. ஒற்றுமை என்ற சொல்லே ஒடுக்குமுறைக்கான முதற்படிதான். ஒரு இனத்தினுள் உள்ள பல்வேறு  கூறுகளும் ஒற்றுமையுடன் இருக்க முடியாது. பதிலாக அக்கூறுகள் ஒவ்வொன்றும் தமக்கான சரியான பிரதிநிதித்துவத்துடன் ஒடுக்குமுறையற்ற நோக்கங்களுக்காக சேர்ந்து வேலை செய்ய முடியும். இதற்கான சிந்தனை வலுவைத்தான் நாங்கள் உருவாக்க முனைய வேண்டும்.

ஊழலற்ற செயற் திறன் கொண்ட சனநாயக் சிந்தனையுள்ள கட்சிகள்- பொது நோக்கங்களுக்காக இணைந்து வேலை செய்யும் வலுவுடைய கட்சிகள் உருவாகிச் சமூகத்துள் நிலவும் பிற்போக்கான அம்சங்களைக் களைவதற்கான உரையாடலும்  ஆரம்பிக்கப்படும் போதுதான் நாங்கள் வலுவடைவோம். அதுவரையிற் கூட்டமைப்பு ஐந்து வருடங்களுக்குத் தன்பாட்டுக்குப் போகும்.நாங்கள் எங்கள் பாட்டுக்குப்போவோம்.

இன்னுமொரு விடையத்தையும் சொல்லித்தான் இப்பத்தியை முடிக்கவேண்டும். திரு. கஜேந்திரகுமாரைத் தமிழ் மக்கள்  நிராகரித்தார்கள். சரி. ஆனால் அதே அளவுக்குத் பேசிய தேசியப்பெடி சிறீதரன் அவர்கள் எவ்வாறு அதிக விருப்ப வாக்குகளைப் பெற்றார் என்று யாழ்பாணத்தில் உள்ள ஒரு நண்பரைக் கேட்டேன். அவர் கூறினார்: “என்ன விசர்க்கதை கதைகிறாய் அந்தாள்  கோடிக்கணக்காய் பணம் செலவளிச்சதெண்டு கேள்வி.”

இது உண்மையென்றால் ஊடகக்காரரே கண்ணுக்குள் எண்ணை விட்டுப் பார்த்திருங்கள். என்னெனில் அரசியல்வாதிகள் வைத்திருப்பது பெருங்காயப்பெட்டி அல்ல.
தேவ அபிரா
19-8-2015
 
அனுப்புக HomeSrilankan News
அபிப்பிராயங்கள்
(1) அபிப்பிராயங்கள்
20-08-2015, 16:30
 - Posted by Anonymous
அன்பரே
பல விடயங்களை சுட்டிக் காட்டியுள்ளீர்கள். இவை சாதாரண மக்களால் புரியப்படுதல் நன்று.
கடைசிப் பந்தியில் குறிப்பிடப்பட்ட விடயம் பற்றியது, தலைவர் வழியை பின்பற்றப்போவதாகவும் அவர் கூறியதாக 19ம் திகதி வலம்புரி பத்திரிகை செய்தி காணப்பட்டது. TNA யின் வெற்றி குறித்துப் பெருமைப்பட்ட ஓர் அன்பரிடம் இதுபற்றி தெரிவித்தேன். அவர் புருவம் வியப்பால் விரிந்தது.

பொதுவாகவே வடக்கு கிழக்கு தமிழர் அரசியல் ஓர் வியப்பான நிலையிலேயே காணப்படுகிறது. மலையகத்தில் பல்வேறுபட்ட கொள்கைகளை முன்வைக்கும் தலைமைகள் மக்களால் அங்கீகரிக்கப்படுகின்றன. அதேபோன்றே முஸ்லிம் மக்களிடத்திலும். சிங்கள மக்களோ எல்லாளனை வென்ற துட்டகைமுனு என வர்ணிக்கப்பட்ட மஹிந்தரையே ஓர் எல்லைக்கு அப்பால் அனுமதிக்கவில்லை.
மாறாக எம்மிடமோ ஆயுத தலைமையிலும்சரி மிதவாதத் தலைமையிலும்சரி ஏகத் தலைமைத்துவமே கட்டிக்காக்கப்படுகிறது. இது எமது இனத்தின் பலமாக இருப்பின் நாம் இன்றுவரை ஆளப்படும் இனமாக இருப்பது ஏனோ? அதற்கு எட்டப்பர்களும் காக்கை வன்னியர்களும்தான் காரணமோ? அப்படியாயின் மற்றைய இனங்களில் அவ்வாறானவர்கள் பிறப்பதில்லையாயின் இது எமது இனத்திற்கேயான இயல்பா?

தேர்தலை வேன்றாகிவிட்டது. அடுத்து TNA என்ன செய்யப்போகிறது என அதன் ஆதரவாளர் ஒருவரிடம் கேட்டேன். ஒன்றும் பெரிதாக நடக்கப்போவதில்லை என்றார். அப்போ எதற்காக TNA இற்கு ஆதரவு அளித்தீர்கள் என்றேன். தமிழர்கள் TNA இற்கு ஆதரவளிப்பதே அவர்கள் கடமை என்கிறார்கள்.

TNA தலைவர்களோ ஒற்றுமையை வெளிப்படுத்துங்கள், நாங்களே உங்கள் பிரதிநிதிகள் என உலகுக்கு காட்டுங்கள் அவர்கள் மூலம் உங்கள் உரிமையைப் பெற்றுத் தருவோம் என உள்ளூராட்சிசபைத் தேர்தல் தொடங்கி ஜனாதிபதி தேர்தல் வரை எல்லாவற்றிலும் கூறுகிறார்கள்.

அன்பர்கள் சிலரிடம் அவர்களது ஆதரவுக்கான நியாயம் பற்றிவினவும் போது ஒர் கட்சியை புலிகளின் கட்சி என்பதால் நிராகரிபதாகக் கூறுகிறார்கள். மற்றைய கட்சியை ஆயுதக்குழு என்பதால் நிராகரிபதாகக் கூறுகிறார்கள். இன்னோர் கட்சியை பேரினவாதக்கட்சி எனக் கூறுகிறார்கள். வேறோர் கட்சியை சிங்கள அரசோடு சேர்ந்து இயங்கிய கட்சி என்கிறார்கள்.

TNAஐ தெரிவு செய்தால் அனைவரையும் தெரிவு செய்ததாக இருக்கும் என எண்ணுகிறார்கள் போலும்.

சூரியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக