பின்பற்றுபவர்கள்

29 மார்ச், 2009

இப் பெருவெளியில் பெண்ணாய் பிறந்தேனே!

இப் பெருவெளியில்
பெண்ணாய் பிறந்தேனே!
உடல் மட்டும் அறிவீர்
உள்ளிருந்தும் மொழியா உணர்வறியீர்
உயிரின் வலியும் அறியீர்


1869 ம் ஆண்டு பிரித்தாணிய பாராளுமன்றப் பிரதிநிதியாகிய ஸ்ருவாட் மில் முதன் முதலில் பெண்களுக்கான வாக்குரிமை பற்றி பிரித்தானியப் பாராளுமன்றத்தில் பேசினார். 1893 ம் ஆண்டு நியூசிலாந்து முதல்முதலில் பெண்களுக்கான வாக்குரிமையை அளித்தது. 1910 ம் ஆண்டு வேலை செய்யும் பெண்களுக்கான சர்வதேச மகாநாடு கொப்பன்காகனில் நடைபெற்றது. அம் மகாநாட்டில் ஜேர்மனியின் சோசலிச சனநாயகக் கட்சியின் பெண்கள் பிரிவுத் தலைவியான கிளாரா செர்கின் சர்வதேச பெண்கள் தினம் என்னும் எண்ணக் கருவை முன்வைத்தார்.

உலகின் அனைத்து நாடுகளிலும் ஒரே தினத்தில் பெண்களின் குரல்களையும் அவர்களது வேண்டுகோள்களையும் ஒலிக்கச் செய்யும் நோக்குடன் உருவாக்கப்பட்ட அவ் எண்ணக்கரு அன்று அம் மகாநாட்டில் கூடியிருந்த 17 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு தொழிற்சங்கங்கள் சோசலிச கட்சிகள வேலைசெய்யும் பெண்களைப் பிரதித்துவம் செய்த குழுக்கள் போன்றவற்றைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்களால் எந்த வித எதிர்ப்புமின்றி ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பெண்களுக்கான வாக்குரிமை அரசியலில் பெண்களின் பங்களிப்பு வேலை செய்யும் பெண்களின் உரிமைகள் போன்ற விடையங்கள் படிப்படியாகப் பேசு பொருளாக்கப்பட்டன. வளர்ச்சி அடைந்த நாடுகளில் பெண்களின் நிலமைகள் படிப்படியாக வளர்ச்சி அடைந்து வருகின்ற போதும் வளர்ச்சி அடையாத நாடுகளிலும் போர் நிகழ்ந்து வரும் நாடுகளிலும் பெண்களின் நிலமைகள் 18ம் நூற்றாண்டுகளில் இருந்த நிலைகளுக்கு ஒப்பானதாகவே உள்ளன.

உலகம் பெண்கள் தினத்தை கொண்டாடும் தருணத்தில் நாங்கள் எங்கு நிற்கிறோம் எனத் திரும்பிப் பார்க்க வேண்டியுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டம் 80 களில் தமிழச் சமூகத்தின் எல்லா விழுமியங்களையும் கேள்விக்குள்ளாக்கி எழுச்சி கொண்டது. அக்காலகட்டத்தில் தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் நிலமையும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. தமிழ்ப் பெண்ணிலைவாதிகளும் கவிஞர்களும் மேற் கிளம்பினர். பெருமளவான பெண்கள் குடும்பம் என்னும் கட்டமைப்புக்குள் இருந்து போராட்ட அமைப்புகளை நோக்கிப் பெயர்ந்தனர். அக்கால கட்டத்தில் வேலைக்கு போன பெண்களை விடவும் போராட புறப்பட்ட பெண்கள் அதிகமானவர்களாக இருந்தனர். ஆயினும் பல அமைப்புக்கள் சிதைந்த போது போராட போன பெண்கள் நிர்க்கதியானது மட்டுமல்ல அவர்கள் மாற்ற நினைத்த பெண்களின் சுயாதீனத்தை மறுக்கிற சமூக விழுமியங்களை மீளவும் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கும் ஆளாகினார்கள்.

மறுபுறம் ஸ்தாபன அமைப்பு சிதையாத ஒரேயொரு அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் தமக்கென ஒரு மகளிர் இராணுவத்தைக் கட்டியெழுப்பியதுடன் ஈழத்தில் பெண்களின் வினைத்திறன் மிக்க போர்ப் பங்களிப்பை உறுதிப்படுத்தினார்கள். ஆயினும் குடும்பம் ‐ சமூகம் என்னும் கருத்தியலுக்குள் பெண்ணின் நிலை தொடர்பான ஆழமான விமர்சனங்களை அவர்கள் ஸ்தாபன ரீதியாக முன்வைத்துச் செயற்படவில்லை. இதுவரை காலமும் பெண்கள் செய்யாத வேலைகளைச் செய்ய விடுதலைப்புலிகள் இயக்கம் சந்தர்ப்பத்தை உருவாக்கியது. ஆனால் முழு மொத்தமான பெண் விடுதலை என்னும் எண்ணக்கரு பற்றியும் யுத்தத்திற்கு பின்னர் பெண்ணின் நிலை என்ன என்பது பற்றியும் தெளிவான சிந்தனைக் கண்ணோட்டங்கள் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை.

சனத்தொகைப் பெருக்கம் சேவைகளின் தேவை முதலாளித்துவ வளர்ச்சி என்பன காரணமாகப் பெண்களின் சேவையை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை இருப்பதனால் தமிழ் சமூகத்தில் பெண்களுக்கான வேலைகள் என அடையாளம் காணப்பட்ட வேலைகளை நோக்கிப் பெண்கள் நகர்ந்து வருகின்றார்கள். ஆயினும் பெண்களை வேலை செய்ய அனுமதிக்கும் அதிகாரம் இன்னமும் குடும்பத் தலைவனிடத்தில் அல்லது ஆணிடத்திலேயே இருக்கிறது.


பெண்களுக்கான சமூகப் பாதுகாப்பை ஆணே வழங்கி வருகிறான். தமது வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் தீர்மானிக்கும் 100 வீத உரிமை இன்னமும் பெண்களுக்கில்லை. பெண்கள் பற்றிய தங்கள் பொறுப்புணர்வைஆண்கள் இன்னமும் கொண்டிருக்கிறார்கள் வளர்ந்து வரும் ஆண்தலைமுறையினரும் அக்காவை அம்மாவை தங்கையை மனைவியை பாதுகாக்கும் ஆண்களாக‐ அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவர்களாக வளர்க்கப்படுகிறார்கள். அதே வேளை பெண்கள் உணர்வு ரீதியாக ஆண்களில் தங்கி வாழ்பவர்களாக வளர்க்கப்படுகிறார்கள்.

இத்தகைய ஆண் தன்மை மிகுந்த சமூகக்கட்டமைப்பை மிகக் கடுமையான முறையில் கேள்விக்குள்ளாக்ககூடிய ஒரு சந்தர்ப்பத்தை தமிழீழ விடுதலைப் போராட்டக் களம் தந்திருந்தது. ஆயினும் தமிழீழ விடுதலைப் போராட்டம் மிக கொடூரமான முறையில் ஒடுக்கப்படும்போது அது கேள்விக்குள்ளாக்கிய பல விழுமியங்கள் மெதுவாக அழிந்து பழைய விழுமியங்கள் தலையெடுத்துக் கொண்டிருக்கின்றன.

தமிழர்களின் இன்றைய நிலைக்கு விடுதலைப் புலிகளின் அரசியல் தவறுகளும் காரணமென அரசியல் விமர்சகர்கள் சுட்டுகிறார்கள். தமிழர்களை ஸ்தாபன ரீதியாக பிரதிநிதித்துவப் படுத்துகின்ற விடுதலைப் புலிகளின் மீது சுமத்தப்படுகிற பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கும் அப்பால் சிங்களப் பெரும் தேசிய வாதத்தின் ஒடுக்குமுறை முதன்நிலைப்படுத்தப்பட்டு கவனிக்கப்படவேண்டியதாக உள்ளது.

சமூகத்தில் ஏற்கனவே உள்ள பல்வேறு ஒடுக்குமுறைகளுடன் போரின் கொடுமையும் பெண்களைச் சிதைத்து வருகிறது.


போரில் நேரடியாகப் பங்கேற்கும் பெண்கள் எதற்காக உயிரை விடுகிறார்கள்.
அதிகார மாற்றத்திற்கா?


தரிசாகிக் கிடக்கும் நிலத்திற்காகவா?


இல்லை யுகங்களாக அடிமைப்பட்டுக் கிடக்கும் சக பெண்கள் இனியொருகால் சுயமாகத் தலை நிமிர்ந்து வாழ்வார்கள் என்பதற்காகவா?


விடைகள் இல்லை

வெண்ணிலவும் சூரியனும்
இல்லாத வானத்தில்
புற்தரையும் தண்ணீரும்
இல்லாத தேசத்தில்
நீ மட்டும் தனியாக நின்றாயே தோழி

‐ சுதாகினி சுப்ரமணியம்

போரில் நேரடியாகப் பங்கேற்காத பெண்களும் சிதைகிறார்கள்.
அரச பயங்கரவாதத்தினாலும் போராளிக் குழுக்களுக்கிடையேயான மோதல்களாலும் காணாமல் போன கணவனை பிள்ளைகளை எண்ணி எண்ணிச் சிதைகிறார்கள். வருமானமில்லாத குடும்பத்தில் கஞ்சி காய்ச்சுவது எப்படி என்று திகைக்கிறார்கள். அகதி முகாம்களில் திறந்த வெளியில் அந்நிய இராணுவத்தின் முன் இயற்கைக் கடன்களைக் கழிக்கவும் குளிக்கவும் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக இனவெறி இராணுவத்தின் பாலியல் வெறிக்கு இரையாகிறார்கள். பாலியல் வன்முறை என்பது இராணுவ ஒடுக்கு முறையின் மிகத் தெளிவான ஒரு கூறாக வளர்ந்து வருவதை அவதானிக்க முடிகிறது. ஈழப் பெரும்நிலப்பரப்பில் பாலியல் தொல்லைகளுக்கு அல்லது பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகும் பெண்களின் குரல்கள் ஈனமாக அடங்கிப் போவதை யாரறிவார்.

பெண்ணை வன்புணர்வுக்கு உள்ளாக்கும் இராணுவம் அவளிடம் இருக்கும் புனிதத்தை பறித்து அவள் சார்ந்த இனத்தை பழிவாங்கிவிட்டதாக நினைக்கிறது. உண்மையிலும் எந்த நிலையிலும் வன்புணர்வுக்கு உள்ளாகும் ஒரு பெண் இழப்பது தான் எவருடன் எப்போது எவ்வகையில் உடலுறவு கொள்வது என்கிற உரிமையை மட்டுமே. புணர்வு என்பது புனிதம் சார்ந்த விடையமல்ல. உண்மையிலும் எமது சமூகத்தில் பெண்கள் எந்த நிலமையிலும் மேற்குறித்த உரிமையைக் கொண்டிருப்பதில்லை. பல சந்தர்ப்பங்களில் இராணுவம் செய்கிற வேலையை கணவனே செய்வதையும் காண்கிறோம். சமூகத்தில் பெண் புனிதத்தின் குறியீடாக இருக்கும் நிலை கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும். பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்கள் தமது ரணங்களை மறந்து மனிதர்களாக நிமிர்வதற்கும் ஒடுக்குமுறை இராணுவங்களுக்கு எதிராக நிமிர்ந்து போராடுவதற்கும் உரிய சமூக தளத்தை இதன் மூலம் உருவாக்க முடியும்.அதன் கண்கள்
நான் அறியாததோர்
மிருகத்தின் கண்களைப் பறைசாற்றிற்று
அவற்றின் பாலைத் தாகம்
அறியாப் பாசையை
எனக்குள் உணர்த்திற்று.

அழகி மன்னம்பேரிக்கும்
அவள் கோணேஸ்வரிக்கும்
புரிந்த வன்மொழியாகத்தான்
இது இருக்கும் என
அவதியாய் எட்டிக் கடந்து போனேன்.

அன்றைய அலைச்சலும்
மனக்குமைச்சலும் கூடிய
தூக்கத்தின் இடையில் ‐ நானும்
அவள்களுக்குப் புரிந்த
அதே அதே ஆழத்திணிக்கப்பட்ட
பாசையை புரிந்து கொண்டேன்.
அருகே கணவன்
மூச்சு ஆறிக்கிடக்கிறான்.
‐ ஆழியாள்


உரிமைகளுக்காக எழுந்து நிற்கின்ற எவரும் மரணத்தை தவிர எதையும் பதிலாகப் பெறமுடியாத சூழ்நிலையை உலகம் தோற்றுவித்துள்ளது. பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்கிற நிலையில் தமிழ் சமூகம் வந்து நிற்கிறது.


தமிழ் பெண் கேட்கிறாள்:
என்னைச் சுற்றி அப்பா நிற்கிறார் கணவன் நிற்கிறான் அண்ணன் நிற்கிறான் தம்பி நிற்கிறான் ஆசிரியர் நிற்கிறார் அதிகாரி நிற்கிறார் எல்லாவற்றிற்கும் மேலாக இராணுவம் நிற்கிறது. சர்வ தேச பெண்கள் தினத்தை நான் எப்படி கொண்டாடுவது?

தேவஅபிரா.


2009-03-08

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக