பின்பற்றுபவர்கள்

29 மார்ச், 2009

கடன் பட்டார் நெஞ்சம்

சிங்களமக்கள் வெற்றியில் மிதக்கிறார்கள்.
தமிழர்களோ இரத்தத்தில் மிதக்கிறார்கள்.
இலங்கையோ கடனில் மிதக்கிறது…

இலங்கை, வரலாற்றில் முதன்முறையாக இனவெறியும் பணவெறியும் மட்டுமே கொண்ட அடி முட்டாள்களின் கையில் விழுந்துள்ளதை யாவரும் காண்கிறோம். இலங்கையின் பொருளாதரம் அதளபாதாளத்தை நோக்கிச்செல்கிறது.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கிற அனைவரும் தமது பணப்பெட்டிகளை மட்டுமே நிரப்பி வருகிறார்கள்.அரசு பெறும் கடன்கள் தமிழ் மக்களின் தலையில் குண்டுகளாக வந்து விழுகிறது; ஊழல் நிறைந்த அரச நிதி நிர்வாகக்கட்டமைப்புக்களுக்குள் கரைந்து போகிறது அல்லது அரசு சார்ந்தவர்களின் முட்டாள்த்தனமான முதலீடுகளுக்குள் அழிந்து போகிறது.
கடந்த வருடம் விடுதலைப்புலிகளின் அரசியற்பொறுப்பாளர் நடேசன் இலங்கையின் 30 பில்லியன் டொலர் பொருளாதாரத்தை அழிப்பதே தங்கள் நோக்கம் எனத்தெரிவித்திருந்தார். அதனையும் இங்கு நினைவுகூரலாம்.

இன்ரர்பிறஸ் சேவிசிற்காக பைசல் சமத் என்பவர்எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் கீழே தரப்படுகிறது


இலங்கை மீண்டும் சர்வதேச நாணய நிதியத்திடம் தனது பிச்சைப் பாத்திரத்தை தூக்கிச் சென்றுள்ளது.

இரண்டு வருடங்களின் முன்பு நாட்டை விட்டுத் துரத்தப்பட்ட சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை மீண்டும் மண்டியிட்டுள்ளது. அந்நியச் செலவாணிக் கையிருப்பில் ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாகவே இலங்கை இந்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இலங்கையின் இறக்குமதிச் செலவானது அதன் ஏற்றுமதிச் செலவுகளிலும் பார்க்க மிக அதிகமாக இருப்பதுடன் அதன் அந்நிய செலவாணிக் கையிருப்பு சராசரியாக 3 மாதங்களுக்கான இறக்குமதியின் பெறுமதிக்கு சமமானதாக இருக்கிறது.
இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடி இரு பக்கங்களைக் கொண்டுள்ளது.
ஒன்று: ஏற்றுமதி பலவீனமடைந்து வரும் அதேவேளை இலங்கையின் மத்திய வங்கி தனது கையிருப்பில் உள்ள சில டொலர்களைக் கொண்டு உள்ளுர்ச் சந்தையில் இலங்கை ரூபாவின் பெறுமதியை டொலருக்கு எதிராக வீழ்ச்சி அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது.
மற்றயது உலகப் பொருளாதாரத்தில் தோன்றியுள்ள நெருக்கடியால் குறைந்த வட்டியில் கடன்களைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போகின்ற நிலமையைச் சமாளிப்பது.
பொதுவில் இவ்வாறு பெறுகின்ற கடன்களின் மூலமே இலங்கை தமிழ்ப்போராளிகளுக்கெதிரான போரின் செலவையும் மற்றும் இதர அரச செலவுகளையும் கவனித்து வருகிறது.

கடந்த வாரம் இலங்கை அரசாங்கம் அவசரமாக சர்வதேச நாணய நிதியத்திடம் 1.9பில்லியன் டொலர்களை கடனாக பெற பேச்சுவார்த்தை நாடாத்தியதுடன் அது தொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டது!



அரசின் நிதி தொடர்பில் நாட்டை பிழையான வழியில் நடத்தி செல்வதாக பொருளியலாளர்களாலும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளாலும் விமர்சிக்கப்படும் இலங்கையின் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிசாட் கப்ரால் பின்வருமாறு கூறுகிறார்:
“ நாங்கள் சர்வதேச நாணய நிதியத்திடம் நிபந்தனையற்ற முறையிலேயே கடனை வழங்குமாறு கேட்டிருக்கிறோம். அந்தக் கடன் எங்களுக்கு தேவைப்படும் என்று தோன்றவில்லை. ஆயினும் அவ்வாறு வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் அது நல்லதொரு வாய்ப்பாகவும் இருக்கும்.”

கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் இலங்கை அரசிடம் 1.7 பில்லியன் டொலர்கள் கையிருப்பாக இருந்தது. இது ஆக ஒன்றரை மாதத்திற்கு தேவையான இறக்குமதியைச் செய்ய மட்டுமே போதுமானதாகும். அதற்கு முந்திய வருடம் இக் கையிருப்பு 3.5 பில்லியன் டொலர்களாக இருந்தமை கவனிக்கப்பட வேண்டியதொன்றாகும்.
கொழும்புப் பல்கலைக் கழகத்தின் மூத்த பொருளியல் அறிஞரான சிறிமல் அபேயவர்த்தனா இலங்கையின் நிதி நிலைமை மிக மோசமாக இருக்கிறது. இலங்கைக்கு வேறு வழிகள் இல்லை. இல்லாவிடின் அரசு ஏன் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் கேட்கவேண்டும் குறிப்பாக அரசு எவரிடம் கடன் வாங்க விருப்பப்படவில்லையோ அவர்களிடமே ஏன் திரும்பிச்செல்ல வேண்டும் என்கிறார்.



கொள்கைகள் கற்றல் நிலையத்தின் மூத்த பொருளியல் அறிஞரான துஸ்னி வீரக்கோன் இலங்கையின் முக்கியமான பிரச்சனைகள் என்னவென பின்வருமாறு கூறுகிறார்.
“ கடந்தவாண்டில் ஏற்பட்ட உலகளாவிய நிதி நெருக்கடி காரணமாக பெருமளவான அந்நிய நாணயச் செலவாணி திரும்பிச் சென்றது. எனவே எங்களிடம் இருக்கக் கூடிய எல்லா வளங்களையும் பயன்படுத்தி உள்ளுர்ச் சந்தையில் இலங்கை நாணயத்தின் பெறுமதியை பாதுகாக்க வேண்டி இருந்தது.”

சென்ற வருடத்தின் இரண்டாவது அரைப்பகுதியில் 600 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான அன்னியச் செலவாணி இலங்கையின் மத்திய வங்கியில் இருந்து வெளிநாட்டு வைப்பாளர்களினால் மீளப் பெறப்பட்டிருந்தது.

இது மட்டுமல்ல மத்திய வங்கியானது கடந்த வருடத்தின் இறுதி மூன்று மாதங்களிலும் மாதத்திற்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வீதம் இலங்கையின் ரூபாவின் பெறுமதியை பேணும் கொள்கைத் திட்டத்திற்காக செலவளித்திருந்தது. இது எந்த வித முன்னேற்றத்தையும் தந்திராதவொரு திட்டமாகும்.
ஓக்ரோபர் 2008 வரைக்கும் இலங்கை தனது டொலருக்கெதிரான நாணய மாற்று வீதத்தை பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக 108 ரூபாவாக வைத்திருந்தது.

ஆனாலும் ஒக்ரோபருக்குப் பின்பு ரூபாவின் பெறுமதி 114ரூபா30 சதமாக வீழ்ச்சி அடைந்தது.
2007 ம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்திற்கு இலங்கையில் எந்த வேலையும் இல்லை எனக் கூறி அது தனது கந்தோரை மூடிக்கொண்டு வெளியேறியது.
ஆயினும் மீண்டும் இலங்கை தனது அவசரத் தேவைகளுக்காகவே சர்வதேச நாணய நிதியத்தினை தற்போது நாடியுள்ளது. இலங்கை அரசானது அதன் பங்காளிகளான ஜே.வி.பி, ஜே.எச்.யு போன்ற கடும் போக்காளர்களின் நெருக்குதல்களுக்கு பணிந்தே சர்வதேச நாணய நிதியத்தினை வெளியேற்றும் முடிவுக்கு வந்திருந்ததாக எதிர்க்கடசியினரும் பொருளியல் அறிஞர்களும் கூறி இருந்தனர்.

மேற்கத்திய அரசுகளின் நலன் பேணும் சர்வதேச நாணயநிதியம் உலகவங்கி போன்றவை கடன் வழங்கும் போது விதிக்கின்ற கடுமையான விதிகளையிட்டு இக் கடும் போக்காளர்கள் கோபமும் அச்சமும் அடைந்திருந்தனர்.
2003 க்கும் 2006ம் ஆண்டுக்கும் இடையில் இலங்கை அரசு கொண்டிருந்த பொருளாதாரத்திட்டங்களுக்கு உதவி வழங்கும் முகமாக 2003 ம் ஆண்டு ஏப்பிரலில் சர்வதேச நாணய நிதியம் 567 மில்லியன் டொலர்களைக் கடனாக வழங்க இணங்கி இருந்தது. அதன் ஒரு பகுதியாக 81 மில்லியன் டொலர்களை வழங்கியும் இருந்தது. ஆயினும் நவம்பர் 2003 ல் அக்கடன் அரசியல் பிரச்சனைகள் காரணமாக ரத்துச் செய்யப்பட்டதுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் 2006 ம் ஆண்டு ஏப்பிரலில் காலாவதியுமானது.

1979 இல் இருந்து சர்வதேச நாணய நிதியம் கொழும்பில் தனது அலுவலகத்தைக் கொண்டிருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கடன் பெற விரும்புகிற எவரும் உடனேயே சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதில்லை. சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதெனில் அதன் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டாக வேண்டும். சிக்கனமான வரவு செலவுத் திட்டம்; அரச செலவுகளில் கட்டுப்பாடு; தளர்வான நாணயமாற்று விகிதம்; முதன்மையான கரன்சிகளின் பெறுமதிக்கு ஈடாக நாணயத் தளம்பல்களை அனுமதித்தல் எனப் பல கட்டுப்பாடுகளை நாணய நிதியம் விதிக்கும். தற்சமயம் ரூபாவின் பெறுமதி மத்திய வங்கியினால் செயற்கையான முறையில் டொலருக்கு எதிராக உயர்வாகப் பேணப்பட்டு வருகிறது.
இது இலங்கையின் இறக்குமதித் தேவைகளுக்கு அமைவாக செயற்கையான முறையில் செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஏற்றுமதியாளர்கள் பலவருடங்களாக தமது ஏற்றுமதி வருமானம் குறைவாக இருப்பதாக குறைப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக உணவு மற்றும் எரிபொருள் இறக்குமதியின் செலவுகளைக் குறைப்பதற்காக இலங்கை நாணயத்தின் பெறுமதி செயற்கையாக மத்திய வங்கியினால் டொலருக்கு எதிராக உயர்த்தி வைக்கப்பட்டுள்ளது. அரசின் பொருளியலாளர்களும் மத்திய வங்கியும் தொடர்ச்சியாக பொருளாதார நெருக்கடி நிலையொன்று உள்ளதை மறுத்து வந்துள்ளனர்.

ஏற்றுமதி குறைவடைகிறது. அதிக வருமானத்தை ஈட்டித்தந்த ஆடைத் தொழிற்சாலைகள் உலக சந்தையில் ஏற்பட்ட கேள்விப் பற்றாக்குறையினால் நட்டப்படத் தொடங்கியுள்ளன. பல்வேறு தொழிற் பிரிவுகளிலும் ஏற்பட்டுவரும் வேலை இழப்புகளும் இலங்கையின் நிதிநிலமையை மேலும் கடினமாக்கியுள்ளன. இலங்கையின் முதலாளிகள் சம்மேளனம் தமது செலவுகளைக் குறைப்பதற்காக வேலை நேரக் குறைப்புக்கு அரசின் அனுமதியைக் கோரியுள்ளது.

வர்த்தக ரீதியான கடன்களைப் பெறுவதில் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையானது உலகளாவிய பொருளாதார நெருக்கடியுடன் சம்பந்தப்பட்டதாகும் என துஸ்னி வீரக்கோன் கருதுகிறார். சர்வதேச நாணய நிதியத்தின் இணையத் தளத்தில் உள்ள அறிக்கை ஒன்றின்படிக்கு இலங்கை மட்டுமன்றி இன்னும் பல நாடுகளும் இத்தகைய நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளன. உலகின் பொருளாதார நெருக்கடி நிலை நீடிக்கும் பட்சத்தில் இந்நாடுகளின் நிலமை இன்னும் மோசமாகும்

தமது நிதித் தேவைகளை பூர்த்தி செய்யப் போராடும் இத்தகைய நாடிகளின் நெருக்கடியைப் போக்க குறைந்த பட்சம் 25 பில்லியன் டொலர்களாவது தேவைப்படும் எனவும் இல்லையேல் பல லட்சக்கணக்கான மக்கள் மீளவும் வறுமைக் கோட்டுக்கு உள்ளே விழுவார்கள் எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கை உத்தி மற்றும் மீள் பார்வை வளாகத்தின் உதவி இயக்குனரான ஹக் பிறேடன்காம்ப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

உலகளாவிய நிதி நெருக்கடிக்கு முன்னர் தமது வரவு செலவு திடடத்திற்கான நிதித்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சர்வதேச சந்தைக்குள் வருமானம் குறைந்த நாடுகள் இணையத் தொடங்கின. இலங்கையும் கானாவும் இதற்கு நல்ல உதாரணங்களாகும். உலகளாவிய பொருளாதார நெருக்கடி காரணமாக சந்தைகள் மூடப்படும் போக்கினால் இந்த நாடுகள் கடுமையாகத் தாக்கப் படுகின்றன.

கானா அந்நிய முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுப்பதற்காக யூரோ பொன்ட் எனும் செயற்றிட்டத்தை அறிமுகப்படுத்தவிருந்தது எனினும் இம்முயற்சி நிறுத்தப்பட்டுள்ளது. இலங்கையானது மிக விரிந்த அளவில் சர்வதேசக் கடன்களை பெற்றுக் கொண்டுள்ளதுடன் அது இனிமெலும் கடன்களைப் பெறமுடியாத எல்லைகளை நோக்கி செல்வதையும் காண்கிறோம்.

இரண்டு நாடுகளில் இருந்தும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உள்ளுர்ச் சந்தை நிதியங்களில் இருந்து வெளியேறி வருகிறார்கள். ஆக நாட்டின் வரவு செலவுகளூக்கு ஆதாரமாகவிருந்த அந்நிய முதலீடும் இலகுவாகக் கடன்களைப் பெறவிருந்த மார்க்கங்களும் குறையும் போது இத்தகைய நாடுகள் நிதி நெருக்கடியை எதிர்கொள்கிண்றன. வேறு சில பொருளியலாளர்கள் இலங்கையின் செலவுகள் குறிப்பாக இராணுவச் செலவுகள் பெரும்பாலும் உள்நாட்டுக் கடன்களின் மூலமே ஈடுகட்டப்பட்டு வந்தன எனவும் ஆனால் உள்நாட்டுச் சந்தையும் வருமானமும் நலிவடைந்து போனதால் அரசாங்கம் வெளிநாட்டு வர்த்தக மூலங்களான சீனா மற்றும் ஈரானிடம் இருந்து கடன்களை பெறுவதாக கூறுகின்றனர்.


இலங்கையானது அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சீனாவின் பக்கம் சாய்ந்து வருகின்றது. முன்பு மேற்குலகுக்கு சார்பான கொள்கையைக் கொண்டிருந்த போதும் மேற்குலகின் மனித உரிமைகள் தொடர்பான விமர்சனம் காரணமாக இலங்கை சீனா சார்பு நிலையை எடுத்து வருகிறது. உலகளாவிய நிதி நெருக்கடி நிலை தொடங்குவதற்கு முன்பாக இலங்கை அரசு வர்த்தக ரீதியான நாடுகளிடம் இருந்து கிடைக்கக்கூடிய கடன்கள் குறித்து மிகத் தீவிரமான நம்பிக்கைகளுடன் இருந்திருந்தது. அக் காலப் பகுதியில் நிதி அமைச்சின் செல்வாக்கு மிக்க அதிகாரி ஒருவர் உலக வங்கியின் அதிகாரியிடம் பின்வருமாறு கூறியிருந்தார்

“நிபந்தனைகளுடன் வருகிற உங்களின் காசு எங்களுக்குத் தேவையில்லை. மலிவான வட்டிவீதம் கொண்ட நிபந்தனையற்ற கடனை வழங்குவதற்கு பலர் உள்ளனர் “


சனாதிபதியின் முன்னாள் ஆலோசகரும் மத்திய வங்கியின் ஆளுனர் பதவியை அரசியல் செல்வாக்கின் மூலம் பெற்றுக் கொண்டவருமான அஜித் நிவாட் கப்ரல் சுருங்கிவரும் அந்நியச் செலாவாணிக்கையிருப்பை உயர்த்துவதற்கென இரு திட்டங்களை தெரிவித்தார். புலம்பெயர்ந்த சிங்களவர்களிடம் இருந்து 500மில்லியன் டொலர்களைத்திரட்டுதல் ஆசியப்பிராந்தியத்தில் உள்ள எனைய மதிய வங்கிகளுடன் நாணயப் பரிமாற்றம் செய்தல் ஆகிய இரண்டுமே அவை.

ஆனால் இவ்விரு திட்டங்களும் எதிர்பார்த்தபடிக்கு வேலை செய்யவில்லை. மேற்குறித்த இரு திட்டங்களும் குறுகிய காலத்துள் தொழிற்படக்கூடியனவல்ல என வீரக்கோன் கூறுகிறார். நாணயப்பரிமாற்று தொடர்பாக மலேசியாவுடன் ஒரு ஒப்பந்தமும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தையும் நடந்துவருகின்றன அவர் கூறுகிறார்.
ஆளுனரின் கூற்றுப்படி உள்ளூர்ச் சந்தை நிதியத்தில் சில புலம்பெயர்ந்த நிதியாளர்கள் கணக்குகளை திறந்துள்ளபோதும் முன்னேற்றம் மந்தமாகவே உள்ளது. பொருளியலாளர் அபேரத்தினவின் கருத்தின்படி இலங்கை கடுமையான கடன் பொறிக்குள் சிக்கியுள்ளது.
“கடன்களை அடைப்பதற்கு கடன் பட வேண்டிய நிலையில் நாங்கள் உள்ளோம்.நாங்கள் நிதிநிலைமையில் அடிமட்டத்தை அடைந்துள்ளோம். புலம்பெயர்ந்தவர்களின் வைப்புக்கள் எதிர்பார்த்தளவு கிடைக்க வில்லை.கடந்த வருடம் இலங்கை அரைமில்லியன்களூக்குமதிகமாக வட்டி செலுத்த வேண்டியிருந்தது.

இந்த வருடம் இத்தொகை இன்னுமதிகமாகும். சர்வதேச நாணய நிதியத்திடம் பெறப்போகும் தொகையில் ஒரு பகுதி மீண்டும் கடன்களைச் செலுத்தவே பயன்படும் “
வீரக்கோனின் கருத்துப்படிக்கும் இந்த வருடத்தில் காலாவதியாகும் இன்னும் சில நிதியங்களுக்கான கொடுப்பனவுகளைச் செய்யும் போது மீளச்செலுத வேண்டிய கடன்தொகை இன்னுமதிகமாகும். மேலும் கடனடிப்படியில் ஈரானிடமிருந்து பெறப்பட்ட எரிபொருளுக்கான நிலுவைகளும் செலுத்தப்பட வேண்டியுள்ளது. எங்களிடம் நீண்ட நிலுவைகளின் பட்டியல் உள்ளதென்கிறார் அவர்.

நன்றி:Global Tamil news
2009-03-21
மூலம் - ஏசியா தமிழ் ஒன்லைனில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக