பின்பற்றுபவர்கள்

17 ஜூலை, 2009

நாடு கடந்த அரசு [Transnational Government]




"பிரபாகரனுடைய கொள்கைகளை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் தான் நாங்கள் இறங்கி இருக்கிறோம்.
ஈழத் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும்.
அதற்காகவும் உலக அளவில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது."
- வி. உருத்திரகுமாரன்


உலகம் முழுவதும் கிரமமாகப் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டுவருகின்றன. அல்லது போராளிகள் தங்களுக்குள் அடிபட்டுக்கொள்கிறார்கள். இவற்றினால் மக்கள் அடையும் துன்பங்கள் சொல்லிமாளாதவை. இக்கட்டுரை எழுதப்படும் போது சோமாலியாவில் முஸ்லீம் அடிப்படை வாதிகளுக்கும் அரசபடைகளுக்குமிடையில் மக்கள் சிக்கி மரணமடைந்துகொண்டிருக்கிறார்கள் அல்லது வாழிடங்களை விட்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் இப்பொழுதுதான் ஒரு விடுதலைப் போராட்டத்தின் தோல்வி எப்படியிருக்கும் என்பதை நாங்கள் உணர்ந்து வருகிறோம்.
அதன் வலியை உணர்ந்து வருகிறோம்.
வெற்றியடைந்த சிங்களப் பேரினவாதம் தலைகால் புரியாத ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது.
அது செய்யப் போகிற எந்த நடவடிக்கையையும் எங்களால் இனிவரும் காலங்களில் மெளனமாக பார்த்துக்கொண்டிருக்க மட்டுமே முடியும்.
வடக்கு கிழக்கு மட்டுமல்ல முழு இலங்கையுமே சனநாயகத்தை இழந்து நிற்கிறது.
சனநாயகம் என்பதைத் துளிகூடஅறியாத காட்டுமிராண்டிகளின் கூட்டத்தை அரியணையில் ஏற்றியபோது அதன் விளைவுகள் எவ்வாறு எதிர்காலத்தில் அமையும் என யாரும் அறிந்திருக்கவில்லை.
இன்றைக்கு விடுதலைப்புலிகள் அடைந்த தோல்விதான் தமிழ் விடுதலைப் போராட்டத்தின் முதலாவது தோல்வி என யாரும் கருதுவார்களானால் அது தவறாகும்.உண்மையிலும் விடுதலைப்புலிகள் எப்போதோ தோல்வியடைந்து விட்டிருந்தனர். இலங்கை அரசின் கொடூரமான ஒடுக்குமுறையொன்றே அவர்களின் இருப்பை நியாயப்படுத்திவந்தது.
ஆய்வாளர்கள் பலரும் விடுதலைப்புலிகளின் தோல்விக்கான காரணங்களையே தேடிவருகின்றனர்.
தமிழீழவிடுதலைப்புலிகள் வெற்றி அடைந்திருந்தாலும் நாம் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்திருக்கும்.
இது விடுதலைப்புலிகளின் அரசியல் பிரக்ஞை மற்றும் குணாம்சங்கள் பற்றியவையாக இருந்திருக்கும்.


சிங்களப் பேரினவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அணிதிரண்ட போராளிகள்
எப்போது சனநாயக மறுப்புக்கான நடவடிக்கைகளை ஆரம்பித்தனரோ, எல்லாவகையான அக மற்றும் புற சமூகஅரசியற் பிரச்சனைகளுக்கும் ஆயுதங்களினாலேயே தீர்வைத் தேடத் தொடங்கினரோ அன்றைக்கே ஈழவிடுதலைப் போராட்டத்தின் தோல்விக்கான அத்திவாரம் இடப்பட்டுவிட்டது.

இன்றைக்கு
அரசுடன் இணைந்திருந்து கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் அடாவடித்தனம் என சகலவற்றையும் செய்கிற தமிழ் இளைஞர்கள் அனைவரும் முன்னாற் போராளிகளே. இவர்கள் கொண்டிருக்கிற அரசியல்- வெளிப்படுத்துகிற அரசியல் நடத்தைகள் எங்குகற்றுக்கொண்டவை.

"மூன்று தலைமுறை இளைஞர்களைச் சொல்வதைச் செய்யப் பழக்கினோமே தவிர சிந்திக்கப் பழக்கவில்லையே! எதற்கெடுத்தாலும் துவக்கை நீட்டுகிற கலாசாரத்தைத்தானே அய்யா நாடு காண்கிறது"

தமிழீழவிடுதலைப் போராட்டத்தினைத் தலைமை தாங்க விரும்பியவர்கள் எவருமே கீழ்குறித்த இரண்டு விடையங்களையும் சரியாகக் கவனத்திற்கு எடுக்கவில்லை;கையாளவில்லை.
தமிழீழவிடுதலைப் போராட்டத்தின் பெளதிக எல்லைக்குள் மதரீதியாகவும் இனரீதியாகவும் சாதிரீதியாகவும் வர்க்க ரீதியாகவும் பிளவுண்ட சமூகங்கள் இருக்கின்றன.
இவற்றுக்குள் முரண்பாடுகள் இருக்கின்றன.
தமிழீழவிடுதலைப் போராட்டம் தொடங்கிய போது அது தனக்குள்
கேள்விக்குட்படுத்திய பல்வேறு விடையங்கள்.

அதேவேளை தமிழீழவிடுதலைப் போராட்டத்தின் புறக்காரணிகளாக இருந்தவை
இலங்கை அரசின் அரசியல் பொருளாதர இராணுவ அடக்குமுறைகள், பிராந்திய அரசியற் சூழ்நிலைகள் மற்றும் சர்வதேச அரசியற் சூழ்நிலைகள் ஆகும்.இவற்றையும் அவர்கள் சரியாகக்கையாளவில்லை.
இன்றைக்கு விடுதலைப்புலிகளின் தோல்வியோடு தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டம் இலங்கையின் அரசியலின் அகக்கூறுகளில் ஒன்றாக மாற்றியுள்ளது.

சாதாரண கட்டிடம் அல்லது பாலம் ஒன்றைக் கட்டுவதற்கே பன்முக அறிவுகளையும் வளங்களையும் ஒருங்கிணைத்து கலந்துரையாடி திட்டமிட்டு சேர்ந்து வேலை செய்கிறார்கள்.ஒரு சமூகத்தின் விடுதலைப் போராட்டத்திற்கு எத்தகைய கலந்துரையாடலும் கூட்டுழைப்பும் தேவைப்படும் என்பது கற்பனை பண்ணிப் பார்க்க முடியாத ஒன்றாகும்.
தமிழீழவிடுதலைப்புலிகளின் தோல்விகளுக்கான காரணங்களை மட்டுமே தேடுவோமேயானால்
தமிழீழவிடுதலைப் போராட்டம்
தோல்விகளையே எதிர்காலத்திலும் சந்திக்கும்.
இன்றைக்கு விடுதலைப்புலிகளின் எஞ்சியுள்ளவர்கள் நாடுகடந்த அரசு என்னும் கருத்தாக்கத்தை முன்வைக்கும் போது கடந்த காலங்களில் தமது அரசியல் குணாம்சம் எப்படி இருந்தது என்பதையும் சுயவிமர்சனம் கொள்வது காலத்தின் வேண்டுதலாகும். ஒருவரியிலல்ல.
விடுதலைப்புலிகள் இந்தியாவுடன் கொண்டுள்ள பகைமையைக் களைவதிற் காட்டும் முனைப்பு தமிழீழவிடுதலைப்போராட்டம் கோரும் பல்வேறு அம்சங்களில் ஒன்றுமட்டுமே. மேலும் இந்திய அரசுடனான பகைமையைக்களைவது
என்பது இராசதந்திரமே அன்றி மூலோபாயமல்ல. இந்தியா ஒடுக்கப்படுகிறவர்களின் நண்பனல்ல.

பெரும் இராணுவக்கட்டமைப்பை கட்டியெழுப்பிய, சிங்களப் பேரினவாதத்திற்கு அடிபணிய மறுத்த வீரம் மிக்க ஒரு போராளியைச் சுற்றி உருவாக்கப்பட்ட ஒளிவட்டம் தமிழீழவிடுதலைப் போராட்டத்தின் முழுப்பரிமாணத்தையும் ஒளியூட்டவில்லை.
இந்தப்பின்ணணியிலேயே நாடுகடந்த அரசு என்னும் கருத்தாக்கத்தை நோக்கவேண்டும்.
தமிழீழவிடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல விரும்புகிற அனைத்து தரப்பினரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தோல்விக்குக் காரணமான தவறுகளை ஆராய்வதும் சுயவிமர்சனம் செய்து கொள்வதும் காலத்தின் தேவையாகும்.

நாடுகடந்த அரசு என்னும் அரசியல் முனைப்பு தமிழீழவிடுதலைப் போராட்டத்தின் அகக் காரணிகள் மீது நேரடித் தாக்கங்களை ஏற்படுத்தப் போவதில்லை.
வெற்றிகொண்ட சிங்கள அரசு தமிழீழத்தின் அகமுரண்பாடுகளை பெரிதாக்குவதுடன் எதிர்ப்பரசியலைச் சிதைக்கும் எல்லாவிதமான சீரழிவுக்கலாசாரங்களையும் ஊக்குவிக்கவும் செய்யும். இவற்றுக்கெதிராக நின்றுபிடிக்கும் ஆன்மீகவலுவை நீண்ட யுத்தத்தில் சீரழிந்திருக்கும் சமூகம் கொண்டிருக்குமோ?
இலங்கைக்குள் தமிழ் மக்களின் விடுதலைக்கான எந்த அரசியல் முனைவையும் தற்போது எவராலும் எடுக்க முடியாத நிலையில் நாடுகடந்த அரசு என்னும் அரசியல் முனைப்பு தமிழர்களின் ஒடுக்குமுறைக்கதிரான எதிர்ப்பரசியலை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும்.

ஆனால் பழைய கள்ளைப் புதிய மொந்தையில் தருவதென்ற நிலை இருக்கும் எனின் அது எந்தப் பலனையும் தரப்போவதில்லை.
உலகில் கேள்விக்குள்ளாக்கப்படக்கூடாதவை என்றெதுவுமிலை.

எனேனில் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் வெறும் அதிகார மாற்றத்திற்கான போராட்டம் அல்ல.தமிழீழ விடுதலைப் போராட்டம் தமிழதிகாரம் தனக்கான சந்தையை கட்டி எழுப்புவதற்கு மட்டுமேயான போராட்டமும் அல்ல.ஆனால் விடுதலைப்புலிகள் இதனையே செய்ய விளைந்தனர்.
சந்தையின் மீதான அதிகாரத்தை மூலதனமும் மூலதனப்பெயர்வும் தீர்மானிக்கிற
உலக ஒழுங்கில்
இலங்கை போன்ற நாடுகளின் கையில் எதுவுமே இல்லை. அரசியல் ரீதியில் எதிரியாக இருக்கிற நாட்டுடன் வர்த்தக ரீதியில் நண்பனாக இருக்க வேண்டிய சூழ்நிலையே இன்றைய உலகு.
மேலும் இலங்கைகுள் தமிழ் மக்கள் மீண்டும் தமது அரசியல் அபிலாசைக்கான போராட்டங்களை எப்போது வெளிப்படையாகச் செய்ய முடிகிறதோ அன்றைக்கே நாடுகடந்த தமிழீழஅரசு என்னும் அரசியல் வடிவம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உண்மையான பகுதியாகவும் ஆகும்.
யதார்த்தத்தில் இலங்கையின் சகல சமூகங்களும் சிங்கள பெளத்த இராணுவ மேலாதிக்க வாதத்தின் மிகக் கடுமையான சனநாயக மறுப்பினுள் சிக்கியுள்ளன.
ஆயுதப்போராட்டம் நசுக்கப்பட்ட நிலையில் சனநாயகமற்ற சூழ்நிலையில் எந்தப்போராட்டமும் தலை தூக்க முடியாது.

"வாயைத்திறக்க முடியாது"
அதுமட்டுமல்ல மகிந்த அரசாங்கம் உருவாக்கி வரும் இராணுவச் சனநாயகமறுப்புக்கட்டமைப்பு வலுவாக வேரூன்றிச் சமூகக்கலாச்சாரமாகி விடும் போது ஆட்சிக்கு வரக்கூடிய எந்தக் கட்சியும் அந்தக் கலாச்சாரத்துக்குள் விழாமல் ஆட்சியை நடாத்த முடியாது போய்விடும்.

சுதந்திரத்திற்கு பின்னான காலத்தில் எவ்வாறு மெல்ல மெல்ல சிறுபான்மை இனங்களின் உரிமைகள் மறுக்கும் அதிகார கலாசாரத்துக்குள் எல்லாவிதமான சிங்களக் கட்சிகளும் விழுந்தனவோ அதேபோல மகிந்த அரசு ஏற்படுத்திவரும் காடைத்தனமான அதிகாரச்சமூககலாசாரத்துக்குள்ளேயே எதிர்கால இலங்கையின் அரசியல் சிக்கப்போகிறது.

சிங்கள அரசுடன் சேர்ந்து தமிழ் பகுதிகளில் அரசியல் வியாபாரத்திற்காக கடைதிறந்துள்ள சகல கட்சிகளின் இரத்த நாளங்களினுள்ளும் அப்பாவிமக்களின் கண்ணீரும் இரத்தமுமே ஓடுகின்றன. அவர்களுக்குத்தெரிந்த ஒரேயொரு கலாசாரமும் மகிந்தவின் கலாசாரமும் வேறல்ல.
இந்நிலையில் தமிழீழவிடுதலைப் போராட்டத்தின் இன்றைய முக்கியமான சவால்களாக பின்வருவனவற்றைக் கருதலாம்.
ஒடுக்குமுறைக்கெதிரான எதிர்ப்பரசியலை நீறு பூத்த நெருப்பாகவேனும் பேணுவது.
சனநாயக உணர்வைத் தமிழ் சமூகத்துக்குள் கட்டியெழுப்புதல்.
முழு இலங்கைக்குமான சனநாயகத்தை விரும்புகிற எனைய சக்திகளை இனம் காணுதல் அவர்களுடன் பொதுவேலைத்திட்டத்தில் இணைதல்.
பிராந்திய மற்றும் சர்வதேச அரசியற்சூழ்நிலைகளைச் சரியான முறையில் எதிர்கொள்ளல்.
தமிழீழவிடுதலைப் போராட்டத்தின் பெளதிக எல்லைக்குள் மதரீதியாகவும் இனரீதியாகவும் சாதிரீதியாகவும் வர்க்க ரீதியாகவும் பிளவுண்டு வாழுகிற சமூகங்களுக்கிடையில் இருக்கிற முரண்பாடுகளை ஒடுக்குமுறையற்ற முறையில் அணுகுதல்.
எதற்கும் சனநாயக அடிப்படையிலான கலந்துரையாடலும் கூட்டுழைப்பும் அவசியமானது. புலிகளைக் கடுமையாக ஆதரித்தவர்களும் புலிகளைக் கடுமையாக எதிர்த்தவர்களும் கண்டு கொள்ளாததும் கண்டு கொள்ள விரும்பாததும் இதுவேயாகும்.



நாடுகடந்த அரசு என்னும் கருத்தாக்கத்தை முன்வைப்பவர்கள் கண்டு கொள்ள வேண்டியவற்றை முப்பதுவருட கால இழப்பு துகிலுரிந்து கண்முன் காட்டிக்கொண்டிருக்கிறது.

"அகாலத்தின் பிடியில்
அம்மணமாக நிற்கிறோம்.
கண்ணீரானது கனவு
கம்பலையானது வாழ்வு
*எங்கே எங்கே ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்!"

அரிதேவா.
13/07/2009
*கவிஞர்
புதுவை இரத்தினத்துரையின் வரிகள்

1 கருத்து:

  1. பெயரில்லாஜூலை 17, 2009 2:29 PM

    எமது தலைவர் பிரபாகரனின் ஆட்சியில் தான் நாங்கள் தலை நிமிர்ந்து நடந்தோம் தன்மானத்தோடு.அவர் தவறு செய்தார் எனக் கூறுவதற்கு இங்கு யாருமே தகுதி கிடையாது.அவர் ஆண்ட காலத்தில் நான் வாழ்ந்தேன் என்பதே போதுமானது.

    பதிலளிநீக்கு