பின்பற்றுபவர்கள்

6 டிசம்பர், 2009

தேர்தல்
எல்லாம்வல்ல அரசன்
என்னுன்னை நீ எண்ணிக்கொண்டிருக்கிறாய்
உனது வளர்ப்புநாய்கள் அகதிகளின் கிழிந்த உள்ளாடைகளை
தெருநீளம் இழுத்துச்செல்கையில்
முட்கம்பிகளில் உன் சிவப்புத்தோள்ச்சால்வை
கிழிந்து தொங்குகையில்
உன்னது மமதையின் ராசாங்கத்தைக் காண்கிறேன்

இரவு பகலாக மதுவருந்திக்கொண்டு
தம்பிகளுக்கெல்லாம் பகிர்ந்து கொடுக்கிற
இரத்தவிறைச்சி தொங்குமான் தசையல்ல.

இரவுகள் கொடூரமான ஒலிகளை எழுப்பின.
காடுகள் வெந்துதணிந்தன.
சிதறிக்கிடந்த மார்புகளைக்
கைவிடப்பட்ட குழந்தைகள் நன்னின.

கருவையும் கருவறையையும்
கல்லறையையும் நசித்துச்சென்றவுன்குறியையும்
அதன் பிணவெடிலையும்
வேட்டிக்குள் மூடி வைக்கிறாய்.
பின் கமண்டலங்களும் கைத்தடியும்
தாங்கிய முனிவர்களை அனுப்புகிறாய்.
வரம்தர வந்தோமென்கிறாய்.

கமண்டலத்துள் இரத்தம்.
கைத்தடியில் என்பிள்ளைகளின் பிடரிமயிர்.

அழகிய கனவை மூன்று தலைமுறைகள் சுமந்தேன்.
வாழ்வின் ஒரு துளிதான் கண்டேன்.
மரணத்தின் பெருவலி பெற்றேன்.
வடகிழக்கு மூலையில் இன்றோடுங்கிப்போனேன்.

நிசப்தம் ‐அரியவரமுனக்கு ஆடு.
இருண்மை‐துயரங்களின் விளைநிலம் எங்களுக்கு.

தத்துவவாதிகள் தாங்கள் அறிந்த புத்தகங்களுக்கு மேல்
தலைகளை உயர்த்தவில்லை.
வியாபாரிகள் இரத்தத்தை வடிகட்டிய நிலத்தை
பங்குபோடுகிறார்கள்.
எஞ்சிய நிலத்தில் கண்ணிவெடியென்கிறாய்.

எனது பிள்ளைகளோ அழுகிறார்கள்
அவர்களின் முன் நீயோ வாக்குப்பெட்டியை வைக்கிறாய்
போடா! துர்க்குறி!!
ஓங்கியழந்தகாலால் என்பெருநிலத்தையறைந்தவன் நீ!!!
என் பிள்ளைகள்
தமது இரத்தத்தைக்குடிக்கும் எல்லாவரசர்களையும்
அறிந்திருக்கிறார்கள்
என்றேன்றைக்கும்.

தேவ அபிரா
05‐12‐2009
நன்றி Global Tamil News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக