பின்பற்றுபவர்கள்

6 டிசம்பர், 2009

மூங்கிலாறே முது நாள் நதியே

மூங்கிலாறே முது நாள் நதியே
மூச்சின்றிக்கிடந்தாயோ

காற்றிலாயிரம் கனல்கள் பறந்தன
சேற்றிலாயிரம் பிணங்கள் நெரிந்தன
காட்டின் ஒரு பிடி கருகிச்சரிந்தது
கண்ணீர் மல்கிக் கரைந்துறைந்தோமே
ஆடிய கால்கள் அடங்கிப்போயின
மோதிய விழிகள் மோட்சமடைந்தன
ஆடாக்கடலில் எதிரி படுத்தான்
ஆடையிழ்ந்து அகதியாகி
கூடாக்கனவில் குறுகிப்போனோம்.

சூழவாயிரம் சதிகள் பிறந்தன
காலநதியின் தடங்கள் சிதைந்தன
மூல வழிகள் தெளியாதிருந்தன
முள்ளிவாய்கால் முகிழாதொழிந்தது
நந்திக்கடலுள் நிணமும் நிறைந்தது
ஈழக் கனவை ஞாலம் மிதிக்க
சோழ விழிகள் சோபையிழந்தன.

வாழத்துளிகள் சேர்க்க நினைத்தோம்
நீள நடக்க நெஞ்சம் கொண்டோம்
ஊழித்தீக்கு உயிர்கள் தந்தோம்
காலக்கணக்கை கோட்டை விட்டோம்
மரணப்படுக்கை வளர்ந்து முடிந்தோம்

மூங்கிலாறே முது நாள் நதியே
மூச்சின்றிக்கிடந்தாயோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக