பின்பற்றுபவர்கள்

25 செப்டம்பர், 2011

ஈரானில் தொடரும் வெளிநாட்டவர்கள் மீதான கைதுகள்... ஒருபார்வை

ஈரானில் தொடரும் வெளிநாட்டவர்கள் மீதான கைதுகள்... ஒருபார்வை


அண்மைக்காலங்களில் ஈரான் தனது நாட்டுக்கு வருகைதரும்  மேல்நாட்டவர்களைக் குறிப்பாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்கப்பிரசைகளைக் கைது செய்து வருகிறது.  இதனை ஈரானுக்கும் மேற்குலகுக்கும் இடையிலான அதிகரித்து வரும் முறுகல் நிலையின் அடிப்படையிலேயே புரிந்து கொள்ள வேண்டும்.
2002 ம் ஆண்டு ஜோர்ஜ் புஸ் ஈரானைச் சாத்தானின் வளையத்துள் உள்ள ஒரு நாடாக வர்ணித்ததில் இருந்து இந்த முறுகல் நிலை அதிகரித்தே வந்துள்ளது.

தற்போது ஈரானின் அணுசக்தித் திட்டம் இஸ்ரேலையும் மேற்குலகையும் அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது. 
ஈரானின் தற்போதைய அரசு இஸ்ரேலின் இருப்பை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுடன் யூதர்களின் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பை இன அழிப்பாக ஏற்றுக் கொள்ளவும் இல்லை.  மத்தியகிழக்கின் வரைபடத்தில் இருந்து இஸ்ரேல் அழிக்கப்பட வேண்டுமென ஈரான் கருதுகிறது. 
பலஸ்தீனம் - இஸ்ரேல் முரண்பாட்டில் அடிப்படைவாத அமைப்பான கமாசிற்கு ஈரான் முதுகெலும்பாக இருந்து உதவி செய்து வருகிறது.
ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் ஈரான் நேரிடையாகவும் மறைமுகமாகவும் குழப்பங்களை உண்டு பண்ணுவதாக அமெரிக்காவும் ஐரோப்பாவும் கருதுகின்றன.
ஈரான் அமெரிக்காவுக்கெதிரான சர்வதேச ராசதந்திர வளையத்துள் தன்னை இணைத்து வருவது குறித்தும் அமெரிக்காவும் ஐரோப்பாவும் எரிச்சலடைந்துள்ளன.  இலத்தீன் அமெரிக்க நாடுகளான வெனிசுவெலா, கியூபா,பெரு போன்றவையும் சீனா, இரஸ்சியா, வடகொரியா, பர்மா, சிரியா, சூடான் போன்ற நாடுகளும் பல்வேறு சந்தர்பங்களில் ஈரானுடன் ஒரே அணியில் சேர்ந்துள்ளன.
இதனால் மேற்குலகம் ஈரானுடன் நம்பத்தகுந்த இராசதந்திர உறவுகளைக் கட்டி எழுப்புவதை விட்டுவிட்டு ஈரானின் மீது கடுமையான அழுத்தங்களைப் பிரயோகிக்கும் இராச தந்திரங்களைக் கைக்கொள்கின்றன ஆனால்
அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஈரானுகெதிராகக் கொண்டு வரக்கூடிய இராசதந்திரஅழுத்தங்களைச் சீனாவும் இரஸ்சியாவும் தடுத்து வருகின்றன.
2007 ம் ஆண்டு ஈரானிய கடற்பரப்பினுள் உளவு பார்க்க நுளைந்த பிரித்தானியாவின் கடற்படை வீரர்களைக் கைது செய்த ஈரான் பின்னர் தனது நல்லெண்ணத்தைக் காட்டும் முகமாக அவர்களை விடுதலை செய்திருந்தது.  ஆயினும் மேற்குலகம் ஈரானை நம்பவில்லை.

குறிப்பாக ஈரானின் அணுசக்தித் திட்டத்தை நிறைவேறவிடாமல் தடுப்பதற்கு எல்லாவகையான முயற்சிகளையும் மேற்குலகம் செய்து வருகிறது.
உலகளாவிய அணுஆயுதப்பரவல் தடைச் சட்டத்தில் கையொப்பமிட்டுள்ள ஈரான் சர்வதேசச் சட்டங்களின் பிரகாரம் தனது சக்தித் தேவைகளுக்கு அணுசக்தியைப் பயன்படுத்தும் உரிமை கொண்டதாகும். ஆனால் அது உலகத்தால் மறுக்கப்பட்டு வருகிறது. இங்கே கவனிக்க வேண்டிய விடையம் என்னவெனில் அணுவாயுதப்பரவல்ச்சட்டத்தில் கையெழுத்திடாத இஸ்ரேல் அணு உலைகளையும் அணுவாயுதத்தையும் கொண்டுள்ளதாகும்.
மேற்குலகம் ஈரான் தனது அணுச்சக்தித் தேவையையும் மீறி அணுவாயுதங்களை உற்பத்தி செய்யும் என அச்சம் கொண்டுள்ளது.
இதனால் மேற்குலகம் ஈரானுக்குள் நாசவேலைகளைச் செய்து வருகிறது.
·    ஈரானின் அணுசக்தி மையங்களில் உள்ள கணணிகளின் மீதான சைபர் தாக்குதல்
·    ஈரானிய அணு விஞ்ஞானிகளைக் குறிவைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள்
·    ஈரானுக்குள் இருக்கும் சிறுபான்மை மதக் குழுக்களை உசுப்பேற்றி ஆயுத உதவிகளை வழங்குதல்
போன்றவற்றை இங்கு குறிப்பிடலாம்.

இவை தவிர மேற்குலகின் மேலும் சில நடவடிக்கைகள் ஈரானை ஆத்திரமூட்டக் கூடிய வகையில் அமைந்துள்ளன.

 2010 ஜுனில் அமெரிக்கா தனது பாரிய கடற்படைத் தொகுதி ஒன்றை குறைந்த பட்சம் ஒரு இஸ்ரேலிய கடற்கலம் உள்ளடங்கலாக சுயஸ்கால்வாய்யூடாக செங்கடலுக்கு அனுப்பி அங்கிருந்து அவை பேர்சியன் வளைகுடாவுக்குள் நுளைந்துள்ளன.
அண்மையில் இஸ்ரேலின் விமானப்படையானது தனது பல முக்கியமான இராணுவத் தளபாடங்களை சவுதி அரேபியாவின் Tabuk நகரத்திற்கு அருகாமையில் உள்ள இராணுவத்தளத்துள்  இறக்கியுள்ளது.
மேலும் சவுதி அரேபியா தனது ஏவுகணைப் பொறிஅமைப்பை ஈரானுடனான‌ போர் ஒன்று மூளும் பட்சத்தில் சவுதிஅரேபியாவுக்கு மேலாகப் பறக்கும் இஸ்ரேலிய விமானங்கள் பாதுகாப்பாக சென்று வரும் வகையில் மாற்றி அமைத்தும் உள்ளது.
இவ்விடத்தில் சவுதி அரேபியா ஈரானின் மீது தாக்குதல் மேற்கொள்ளும் படி அமெரிக்காவைக் கேட்டமை தொடர்பான ஆவணங்களை விக்கி லீக் வெளியிட்டமையையும் நினைவு கூரலாம்.
இதுமட்டுமல்ல பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் அசர்பைஜானில் தனது பெருமளவு துருப்புக்களைக் கொண்டுள்ள அமெரிக்கா  ஈரான்-அசர்பைஜான் எல்லையிலேயே தனது பெருமளவான துருப்புக்களை நிறுத்தி வைத்திருக்கிறது.

உலக இராணுவஆய்வாளர்கள் ஈரான் மீதான இராணுவத்தாக்குதல்களுக்கான ஆயத்தங்கள் திரைமறைவில் நடந்துகொண்டிருக்கலாம் எனவே கருதுகின்றனர்.
தனது சொந்தப்பிரசைகளின் மீது சனநாயகமற்ற அரச அதிகாரத்தைப் பிரயோகிக்கிற ஈரானிய அரச அதிகாரம்  தனது நாட்டுக்குள் நுளையும் மேற்குலகப்பிரசைகளைக் சந்தேகக்கண்கொண்டு கைது செய்வதொன்றும் புதினமல்ல. ஆயினும் இவர்கள் பக்க சார்பற்ற நியாயமான விசாரணைக்கு முகம் கொடுப்பார்களா என்பதும் கேள்விக்குறியாகும்.
 
ஒரு கிழமைக்கு முன்னதாக அமெரிக்க பிரசையான 55 வயதான Hal Talayan ஈரானில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவர் முறையான நுளைவு அனுமதியைக் கொண்டிருக்கவில்லை எனவும் தனது பற்களுக்கிடையே உளவு பார்க்கும் கமராவைப் பொருத்திக் கொண்டிருந்தார் எனவும் ஈரானிய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
கடந்த ஆண்டு  Bild am Sonntag என்னும் ஜேர்மனியப் பத்திரிகையின் இரண்டு ஜேர்மனியப் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.  இவர்கள் முறையான நுளைவு அனுமதியைக் கொண்டிருந்த போதும் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டுக்  கைது செய்யப்பட்டனர்.  இவர்கள் கல்லெறி மூலம் மரணதண்டனையைப் பெறவேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட மொகமதி அஸ்தியானியின் மகனைப் பேட்டி காணவே சென்றதாக ஜேர்மனிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

2009 ஆண்டு ஜூலையில் அமெரிக்கர்களான Sarah Shourd,Josh Fattal, Shane Bauer ஆகிய மூவரும் ஈரான் ஈராக் எல்லையில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தனர்.  இவர்கள் ஈரான்-ஈராக் எல்லையில் சுற்றுலா நடைப்பயணம் செய்து கொண்டிருந்த போது தவறுதலாக ஈரானுக்குள் நுளைந்ததாகக் குடும்பத்தினர் சொல்லுகின்றனர்.  ஆனால் ஈரான் இவர்களை உளவாளிகள் என்கிறது.
இவர்களில் Sarah Shourd மட்டும் பிணைத்தொகையில் வெளிவந்து ஈரானை விட்டு நீங்கியுள்ளார்.  ஏனையவர் எதிர்வரும்  feb 6 ம் திகதி நடக்கவிருக்கும் விசாரணைக்காகக் காத்திருக்கின்றனர்.

2.5 வருடச் சிறையின் பின்னர் கடந்த ஒக்ரோபரில் விடுதலையான 71 வயதான அமெரிக்கரான Reza Tagavi ஈரானிய எதிர்கட்சிகளுக்கு 200 டொலர் பண உதவி வழங்கிய குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டிருந்தார். இவர் தன் மீதான குற்றச்சாட்டு உண்மையற்றதென்கிறார்.

24 வயதான பிரஞ்சு ஆசிரியரான Clotilde Reiss பத்து மாதங்களுக்கு முன்பு கைதுசெய்யப்பட்டு 6 கிழமைகள் சிறையில் அடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டிருந்தார்.  விசாரணையின் பின்  ஜந்து வருடச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.  இவர் மீது ஈரானில் 2009 இல் நிகழ்ந்த சனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து  நிகழ்ந்த அரச எதிர்ப்பு ஊர்வலங்களில் அரச எதிர்ப்புப் படங்களை வினையோகித்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
ஆயினும் பின்னர் இவர் மீதான தண்டனை  தண்டமாக மாற்றப்பட்டு 230,000 யூரோகள் தெகரானில் உள்ள ஈரானிய அதிகாரிகளுக்கு கையளிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார்.
2009 ம் ஆண்டு கடைசியில் பெல்ஜீயப்பிரசைகள் மூவர்  இரண்டு மாதங்கள் ஈரானில் சிறையிருக்க நேர்ந்தது.  இவர்களும் தடைசெய்யப்பட்ட வலையத்துள் உளவு பார்க்கவே நுளைந்ததாக ஈரானால் கூறப்பட்டது.
2009 இறுதியில் கைது செய்யப்பட்ட ஈரானிய நெதர்லாந்தவரான Zahra Bahrami தற்பொழுது மரண தண்டனை விதிக்கப்பட்டுத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.  இவர்மீது போதை வஸ்து கடத்தல் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆனாலும் இவர் 2009 ல் நிகழ்ந்த அரச எதிர்ப்பு ஊர்வலங்களில் கலந்து கொண்டமையே காரணம் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தக் கைதுகளின் பின்னணியில் இருக்கும் உண்மையான காரணங்களைக் கண்டுகொள்வது கடினம். மேற்கத்தைய ஊடகங்களும் ஈரானிய ஊடகங்களும் தமக்குச்சார்பான அறிக்கையிடல்களையே செய்கின்றன.
ஆயினும் ஈரானின் தீவிரமான சனநாயக மறுப்பு நடவடிக்கைகள் வெளிப்படையானவை.
மேற்குலகின் அச்சுறுதல்களைக் காரணம்காட்டி உள்நாட்டில் நிகழும் தீவிர சனநாயக மறுப்பு நவடிக்கைகளை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.
ஆனால் ஈரான், சீனா, வடகொரியா, பர்மா, இலங்கை உட்பட பல நாடுகள் அதையே செய்கின்றன...

09-01-2011
நன்றி:
Metro news
iactucson.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக