பின்பற்றுபவர்கள்

25 செப்டம்பர், 2011

ஒடுக்கும் மகிந்தவின் ஊழல்ப்பட்டாளம் அடைந்த தோல்வி‌

ஒடுக்கும் மகிந்தவின் ஊழல்ப்பட்டாளம் அடைந்த தோல்வி‌

நோர்வேஜியன் பயங்கரவாதியான பிறேவிக்கின்(Breivik) செயற்பாடானது நாங்கள் நீண்ட காலமாகக் கூறிவரும் விடையம் ஒன்றை உறுதிப்படுத்தியுள்ளது.  பயங்கரவாதம் என்பது இடதுசாரிகளாலும் வலதுசாரிகளாலும் கைக்கொள்ளப்படக் கூடியது என்பதே அது.  கிரிக்கட் விளையாட்டுக்காரனான குமார் உட்படப் பலர் எந்தப் பயங்கரவாத நடவடிக்கையையும் ஏதோ ஒரு வகையில்  கொம்யூனிசத்துடன் தொடர்புபட்டதாகவே கருதுகின்றனர்.உண்மைதான். பிறேவிக் தன்னை ஒரு புரட்சியாளனாகவே நினைத்திருந்தான்.  ஆனால்  உண்மையிலும் அவன் அர்ப்பணிப்புத் தன்மை கொண்ட தீவிர கொம்யூனிச எதிர்ப்பாளனாகும்.
 இந்த வகையான பயங்கரவாத நடவடிக்கைகளைச் செய்வது குரூரமானது என அவன் நினைத்த போதும் அவன் இவற்றைப் புரிவது தேவையானது எனவும் நினைத்திருந்தான். ஹிட்லரைப்போலவே இவனும் மற்ற மனிதர்களிலும் பார்க்க தாங்கள் மேலானவர்கள் என நினைக்கிற கொகெசன்  கனவை(Caucasian dream) கொண்டிருந்ததுடன் தூய்மையான(Caucasian) கலாச்சாரத்தை- உயர்ந்த இனங்கள் எனக் கருதப்படுகிற சில இனங்களைத்தவிர வேறு இனக்கலப்புகள் அற்ற ஒரு கலாசாரத்தை  விரும்புகிற ஒருவனாகவும் இருந்திருக்கிறான்.  இந்த நோக்கத்துடன் சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த விரும்பிய அவன் தனது  பார்வையில் புரட்சியை வலிந்து ஏற்படுத்துவது அதற்கு தேவையானது எனக் கருதினான்.  அவன் இந்தத்தாக்குதல்கள் மூலம் தற்போதுள்ள பல் கலாசார சமூகக் கட்டமைப்பைத் தாக்கவே விரும்பி இருந்தான். ஐரோப்பாவின் வலதுசாரித் தீவிரவாதிகளிடையே பன்மைக் கலாச்சாரத்தை குறிப்பாக இஸ்லாமியக் குடியேற்றக்காரர்களைக் குற்றம் சாட்டுவதும் அவர்களை வெறுப்பதும் ஒரு பொதுமையான பண்பாக இருக்கிறது.
பிறேவிக் Knights Templar 2083 எனக் பெயரிட்டுத் தானே தயாரித்த  12 நிமிடம் ஓடுகிற ஒளிப்படச் செய்தியில் ஈரத்தடுப்பு உடுப்பை அணிந்துகொண்டு  தானியங்கித் துப்பாக்கியைத் தாங்கியபடி முஸ்லீம் எதிர்ப்புவாதக் கருத்துக்களைக் கூறுவதைக் காணமுடிகிறது.
கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள் உலகெங்கும் தோன்றிவரும் வறுமைக்கும் பின்னடைவுகளுக்கும் காரணமாக இஸ்லாமியத்தை நினைக்கிறார்கள்.  ஆனால் இன்று உலகம் எதிர்கொள்கிற பிரச்சனைகள்  உண்மையிலும் உலகளாவிய முதலாளித்துவத்தினாலேயே ஏற்படுகின்றன.   இந்த உலகில் பண்பட்ட கனவான்கள் என அழைக்கப்படுபவர்கள் மக்களின் மதநம்பிக்கைகளைத் தமது கொள்ளை அடிப்புக்கும் சுரண்டலுக்கும் ஏதுவாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதே உண்மை.
சிங்கள மேலாதிக்கவாதிகள் நோர்வேயில் நிகழ்ந்த நியோ-பாசிஸ்டுக்களின் தாக்குதல்களைக் கேள்விப்பட்டபோது சந்தோசமடைந்திருப்பார்கள்.  நோர்வேயின் தொழிலாளர் கட்சி ஒரு சமூக சீர்திருத்தவாதக் கட்சியே தவிர கொம்யூனிஸக் கட்சியல்ல. ஆயினும்  பிறேவிக்கின் பார்வையில் சமூக சீர்திருத்த வாதிகள் கூட கலாச்சார மாக்சிஸ்டுக்களாக அல்லது பல்கலாச்சாரத் துரோகிகளாகவே அமைந்துவிட்டனர்.
இதேவேளை இலங்கையின் வடபகுதியில் தமிழர்கள் பல்வேறு முறையற்ற தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் தமக்கு அளிக்கப்பட்ட வாக்களிக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வடக்கில் மகிந்தவை நிராகரித்திருந்தார்கள்.  இராணுவப்பலம் நிர்வாகப்பலம் காடைத்தனம் லஞ்சம் ஆள்மாறாட்டம் என எல்லாவகையான தந்திரோபாயங்களையும் பயன்படுத்தி மக்களின் எரியும் நெருப்பை அணைக்க முயற்சித்தபோதும் அது பயனளிக்கவில்லை.
தமிழர்கள் தன்னிடம் பணிந்து மண்டியிட வேண்டும் என மகிந்த எதிர்பார்த்திருந்தார்.ஆனாலும் துணிச்சலுடன் மீள எழுந்து வரும் தமிழ்ச்சமூகம் ஒடுக்குமுறையும் ஊழலும் நிறைந்த மகிந்த பட்டாளத்தை முகத்தில் அறைந்தது போலத் தோற்கடித்து உள்ளது. தெற்கில் மகிந்த வெற்றியடைந்த போதும் பலவீனமான எதிர்க்கட்சி காரணமாகவே இது சாத்தியமாகியுள்ளது.  எவ்வாறேனினும் தேர்தல் முடிவுகள் நாடு பிளவுபட்டு இருப்பதை வெளிப்படையாகவே காட்டியிருக்கின்றன. மகிந்த தெற்கை ஆளும் போது வடக்கும் கிழக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேலாதிக்கத்தின் கீழே வந்துள்ளது.  இந்த வெளிப்படை உண்மையை மறைக்க முயன்று மகிந்த அரசு தோல்வி அடைந்துள்ளது. 
"இந்த நாட்டில் தேசிய இனங்களுக்கிடையில் காணப்படும் இந்தப் பிளவை இல்லாது செய்வதற்கு ஏதாவது ஒரு தீர்வை இந்த அரசு கொண்டிருந்ததா?"  இனிவரும் காலங்களில் இந்தக் கேள்வி பற்றியே உரையாடவேண்டியிருக்கும்.
தேசிய கூட்டமைப்பின் தலைவர் பின்வருமாறு கூறியிருந்தார்.
"தமிழ்மக்கள் சந்தேகத்துக்கிடமற்ற வகையில் தமது விருப்பத்தையும் ஆணையையும் இந்தத்தேர்தலிலும் தெரிவித்துள்ளார்கள்.  1956ம் ஆண்டில் இருந்து இந்த நாட்டில் நிகழ்ந்த தேர்தல்கள் யாவற்றிலும் தமிழ்மக்கள் மிகத் திட்டவட்டமான செய்தியையே தெரிவித்திருக்கின்றனர்.  ஐக்கிய இலங்கைக்குள் எந்தவிதமான மாற்றங்களுக்கும் உட்படுத்தப்படமுடியாத உரிமைகளுடன் எல்லா இனங்களுக்கும் சமதையானவர்களாகத் தமது சுயகெளரவத்தைத் திரும்பப் பெற்றவர்களாகப் பாதுகாப்பான முறையிலேயே வாழ்வதையே தமிழ்மக்கள் விரும்புகிறார்கள்.   அதுமட்டுமல்ல தமக்கே உரித்தான சமூச கலாச்சார பொருளாதார அரசியல் உரிமைகளை அடையக்கூடிய அரச முறைமையொன்றையும் அடைய விரும்புகிறார்கள்." உள்நாட்டில் இடம்பெயர்ந்த அனைவரையும் மிக விரைவாகக் குடியேற்றிப் புனர்வாழ்வளிக்கக் கோரியும்தான் தமிழ்மக்கள் வாக்களித்துள்ளனர். மேலும் இடம்பெயர்ந்த அனைவருக்கும் முறையான வீட்டுவசதியும் வாழ்வாதாரத்துக்காஅடிப்படைகளும் வழங்கப்படவேண்டும்.  தமிழ் மக்களின் பராம்பரியமான பிரதேசங்களில் அவர்களின் சமய கலாச்சாரப் பிரதேசங்கள் மற்றும் அவர்களுக்கு முக்கியமான அனைத்திலும் அரசும் அதன் கட்டமைப்புக்களும் விதித்துள்ள     தடைகள் நீண்டகால போக்கில் தமிழ்மக்களின் மீது மிகப் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும். எனவே தமிழ்மக்கள் எதற்காக வாக்களித்தனரோ அதனை கணியம் செய்து காலதாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என நாங்கள் கேட்கிறோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மிகமிதவாதப்போக்கை கொண்டவர் என்பதுடன் சமரசத்திற்கும் வரக்கூடியவர். மறைந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்  இடைக்காலத் தீர்வாக முன் வைத்த உள்ளகத்தன்னாட்சி சபையைத்தான் (internal self determination)  திரு சம்பந்தன் அவர்களும்   விரும்புகிறார் என்பது வெளிப்படையானது.  உண்மையிலும் அவர்கள் கோருவது சுயநிர்ணய உரிமையல்ல.  அவர்கள்  ஐக்கிய இலங்கைக்குள் இருக்கக்கூடிய சுய அதிகாரத்தையே கேட்கிறார்கள்.
எனது நம்பிக்கையில் சுயநிர்ணய உரிமை என்பது ஒரு இனம் தனது தலைவிதியை நிர்ணயிப்பதாகும்.  இங்கே அந்த இனத்தின் பிரித்து செல்லும் உரிமையும் உறுதிப்படுத்தப்படுகிறது. சுயஅதிகாரத்தை ஐக்கிய இலங்கைக்குள் தமிழினம் பெறுவது என்பது கூட மகிந்த அரசினால் கடந்த காலத்தில் மறுக்கப்பட்டுள்ளது.
கடந்ததேர்தல் முடிவுகளை உணர்ந்து கொண்டு மகிந்த தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுவார் என நான் நம்பவில்லை.  தான் அதிகாரத்துக்கு வருவதற்காக மக்களைக் கிளர்த்தியும் ஒருங்கிணைத்தும் ஆர்ப்பாட்டங்களைச் செய்து பேரணிகளை நடாத்தியும் வந்த ஒரு தலைவர் தான் அதிகாரத்திற்கு வந்ததும் அவற்றை மறந்து விட்டார்.  ஒடுக்கப்பட்ட மக்களே அவரின் பின்னால் அன்று திரண்டிருந்தனர் என்பதை அவர் இன்று வசதியாக மறந்து விட்டார்.  ஆனால் அவர் கற்க மறந்த அந்தப்பாடத்தை நாங்கள் மறக்கவேண்டாம்.
தமிழ் இனத்தின்கோரிக்கைகளை தொழிலாளர்களினதும் மீனவர்களினதும் இன்னும் அனைத்து ஒடுக்கப்பட்டவர்களினது கோரிக்கைகளுடனும் இணைத்து இலங்கையில் சனநாயகத்திற்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடுவோம்
விக்கிரமபாகு கருணாரத்தின.
நன்றி: http://www.internationalviewpoint.org/spip.php?article2235
மொழிபெயர்ப்பு: தேவ அபிரா
26-08-2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக