பின்பற்றுபவர்கள்

7 ஜனவரி, 2013

மாவீரர்களுக்குச் செய்யும் மரியாதை ...





அண்மையில் யாழ்பாணம் பல்கலைக்கழகத்தில் மாவீரர் வாரத்தை பல்கலைக்கழக மாணவர்கள் நினைவு கூருவதற்குச் செய்த முயற்சிகளுக்கு இலங்கை இராணுவமும் பொலீசும் செய்த தடைகளையும் வில்லங்கங்களையும் எதிர்த்தும் போரில் மரணத்தவர்களை நினைவு கூரும் உரிமையை வலியுறுத்தியும் யாழப்பாணப்பல்கலைக்கழக மாணவர்கள் செய்த அமைதியான எதிர்ப்புப்போராட்டம் இலங்கை இராணுவத்தாலும் காவல் துறையாலும் மோசமான முறையில் அடக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி இந்தப்போராட்டங்களில் முன்ணணியில் நின்ற நான்கு மாணவர்களை பொய்க்குற்றச்சாட்டுகளைச் சுமத்தி கைது செய்து தடுத்து வைத்திருக்கிறது. இவர்களில் ஒருவர்மட்டும் பிணையில் தற்போது விடுவிக்கப்பட்டிருக்கிறார். ஏனையவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பயங்கரவாத முலாம் பூசப்பட்டிருக்கிறது.
யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கை அடிப்படையில் ஒரு சனநாயகக்கோரிக்கை அதில் இனவாத அல்லது பயங்கரவாத முலாம்கள் எதுவுமில்லை.
கடந்த மூன்று தலைமுறைகளாக நிகழ்ந்த தமிழீழவிடுதலைப்போராடத்தில் மக்களின் அல்லது நிலத்தின் விடுதலைக்காக இதய சுத்தியுடன் தம்மை அர்ப்பணித்துப்போராடி மரணமடைந்த அனைவரும் மாவீரர்களே!
அரசியற்தவறுகள் சனநாயக மறுப்புகள் உட்கட்சி மற்றும் கட்சிக்கு வெளியேயான கொலைகள் போன்ற பல்வேறு சிக்கல்களைக் கடந்து பயணித்த தமிழீழவிடுதலைப்போராட்டத்தின் ஒரு பரிமாணம் முடிவடைந்த நிலையில் மரணித்தவர்களை நினைவுகூருவது உண்மையிலும் அவசியமானதாகும்.



சமூக உளவியற் பார்வையில் இந்த நினைவு கூரல் கடந்த காலம் பற்றிய மீள்பார்வையைக் கொண்டுவரும். இந்த நினவு கூரல் இழப்புக்களுக்கு இருக்கவேண்டிய பெறுமதியையும் இல்லாமல் போன பெறுமதியையும் நினைவு படுத்தும்.
தனிமனிதர்களைப் பொறுத்தவரை அவர்களின் இதயத்தில் நிரம்பியிருக்கும் துயரத்தையும் கண்ணீரையும் இறக்கிவைக்கும் நாளாக இருக்கும். இந்த வகையில் மரணித்தவர்களை நினைவு கூருதல் என்பது அடிப்படை மனித உரிமையாகி விடுகிறது. ஆனால் அரசியற்பார்வையில் இந்த நினைவுகூரல் ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு குறியீடாகவும் இருக்கிறது. இந்த இடத்தில் தான் இலங்கை அரசு அச்சமடைகிறது.
உண்மையிலும் போராட்டத்தில் மரணமடைந்த அனைத்துப் போராளிகளையும் நினைவு கூரும் நாளாக அந்த நாளைப் பிரகடனப்படுத்துவதுடன் அதனை நினைவு கூரும் உரிமையை சட்ட பூர்வமாக அங்கீகரிக்கக் கோரவும் முடியும். ஜேவிபியால் கார்த்திகை வீரர்களை நினைவு கூரமுடியும் என்றால் தமிழர்கள் மாவீரர்களை நினைவுகூருவதற்குத் தடைகள் விதிப்பது சனநாயகமில்லை.

இந்த நினைவுகூரலை அனுமதிப்பதும் மதிப்பதும் ஒரு இனத்தின் உணர்வுகளை மதிப்பதாகும். ஆனால் சிறுபான்மை இனங்களின் உணர்வுகளை மதிப்பது என்பது இலங்கையின் பேரினவாத ஆளும்வர்க்கத்தின் இரத்தத்தில் இல்லாத ஒன்று.

வழமை போலவே பயங்கரவாதம் புலிகள் என்ற பதங்களை பாவித்து மாணவர்களின் கோரிக்கை அமுக்கப்பட முயற்சிகள் செய்யப்படுகின்றன. வடக்கு கிழக்கில் நீடித்திருக்கும் இராணுவப் பிரசன்னம் நிலப்பறிப்புகள் சனநாயக மறுப்புகள் ஊடக அடக்குமுறை போன்றவை காரணமாகத் தமிழ் மக்கள் அடைகிற வெறுப்புகளும் அதிருப்திகளும் முள்ளிவாய்காலுக்கு பிறகும் கூட காலத்திற்கு காலம் வெளிப்பட்டே வந்திருக்கின்றன. அவற்றுக்கான சரியான அரசியல் வழிப்படுத்தல்கள் இல்லாமையினாலும் மோசமான இராணுவ அச்சுறுத்தல் காரணமாகவும் அவை அடங்கிப்போய்விடுகின்றன.



இந்தப்போராட்டம் சற்றே மேற்கிளம்பியமைக்கு காரணம் இது பல்கலைக்கழகச் சூழ்நிலையில் நிகழ்ந்தமையே காரணமாகும். தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் மட்டுமல்ல தென்னிலங்கையிலும் பல்கலைக்கழகங்கள் போராட மையங்களாக இருந்திருக்கின்றன. இலங்கையைப்பொறுத்தவரை பல்கலைக்கழகங்கள் சமூகத்தின் கொதிநிலையை வெளிகாட்டும் வெப்பமானிகளாக இருந்திருக்கின்றன. இளைஞர்களே சமுகத்திற்கும் அதிகாரத்துக்கும் இடையிலான முரண்பாட்டில் அதிருப்திக்கு போராட்டவடிவம் கொடுப்பவர்களாக அதனை வெளிப்படுத்துவர்களாக இருப்பதை உலகம் முழுவதும் நிகழும் போராட்டங்களில் அவதானிக்கிறோம். இது கொதிநிலையடைகிற ஒரு சமூகத்தின் உளவியற்பண்பாகிறது. இது ஏதோவொரு புறமிருந்து வருகிற தூண்டுதலால் ஏற்படுவதல்ல. பதிலாக இளைஞர்கள் வாழும் சமூகத்தில் நிகழும் ஒடுக்குமுறைகளினால் ஏற்படுவதாகும். இந்த வகையிலேயே தற்போது இலங்கையில் இருக்கிற சூழ்நிலையைப் புரிந்து கொள்ளவேண்டும்.

தமிழ் மக்களைப்பொறுத்தவரை தற்போது இரண்டு எதிரிகள் இருக்கிறார்கள். ஒன்று சிங்கள பௌத்த பேரினவாத மேலாதிக்க வாதிகள். மற்றயது சிற்றறிவும் மோசமான ஊழற்குணாம்சமும் கொண்ட ராஜபக்ஸ் குடும்பஅதிகாரம்.
முந்தய காலங்களிற் சிங்களப்பேரினவாதத்தின் நிகழ்ச்சிநிரலை நடைமுறைப்படுத்தும் சிங்கள அரசியல் வாதிகள் மட்டுமே இலங்கையில் இருந்தனர். ஆனால் தற்போது சிங்களப்பேரினவாதிகளின் நிகழ்ச்சி நிரலைப்பேண அவர்களை அனுமதிக்கிற அதே வேளை அவர்களைத் தங்களது அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளும்படி நிற்பந்திக்கும் ஒரு குடும்ப அதிகாரத்தை; நீண்டகால சர்வாதிகார ஆட்சியை நிலைநிறுத்தும் நோக்கத்தைக் கொண்ட குடும்ப அதிகாரத்தைக் காண்கிறோம்.
இந்த இடத்தில் இன்று இலங்கைப்பாராளுமன்றத்தின் சபாநாயகர் சமல் ராசபக்ஸ கூறிய ஒரு கூற்றை நினைவு கூருவது பொருத்தமாக விருக்கும்.

சபாநாயகர் என்ற வகையில், தாம் வழங்கும் தீர்ப்பு சரியாக இருந்தாலும் தவறாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். சரி எது பிழை எது என்பதல்ல முக்கியம் தாங்கள் சொல்வதை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்னும் தொனியே இங்கு தெரிகிறது. இது அப்பட்டமான சர்வாதிகாரம் என்பதைப் பெரும்பான்மைச் சமூகத்தின் பெரும்பான்மையானவர்களும் உணர நாட்கள் எடுக்கும். அதுவரைக்கும் சிங்கள மேலாதிக்க உணர்வைத் தூண்டிப் பெரும்பான்மை இனமக்களுக்கு புலிப்பூச்சாண்டி காட்டி அவர்களை மாயையுள் ஆழ்த்திவைத்திருக்கவே இந்த அதிகாரம் விரும்புகிறது. ஆனால் அதே பெரும்பான்மையின மேலாதிக்க வாதிகள் இந்த அதிகாரத்திற்கு எதிராக ஏதாவது செய்ய முயன்றால் அவர்களத் தாக்குவதற்க்கும் ராஜபக்ஸ் அதிகாரம் தயங்குவதில்லை. சிங்கள பௌத்த பேரினவாதத்தின் குறியீடுகளான பிக்குகளைக் கூட இந்த அதிகாரம் கடந்த காலங்களில் நேரடியாகத்தாக்கியிருப்பதைக் கண்டிருக்கிறோம்.
தென்னிலங்கையில் கடந்த அண்மைக்காலங்களில் சிங்கள மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்ட போதும் மாணவத் தலைவர்கள் மோசமான முறையில் தாக்கப்பட்டதையும் பொய்க்குற்றசாட்டுக்கள் சுமத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டதையும் கூடக்கண்டிருக்கிறோம்.

எனவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் மீதான இந்தத்தாக்குதலை “சிங்களவர்களின் தமிழர்கள் மீதான தாக்குதலாக” வியாக்கியானப்படுத்துவது எமது போராட்டத்தைக்குறுகிய வட்டத்துள் அமிழ்த்திவிடும்.
இந்தச்சந்தர்ப்பத்தில் சிங்கள மாணவர்கள் மத்தியில் இருந்து யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவான குரல்கள் எழுந்துள்ளன. அவற்றைச் சரியான முறையில் உள்வாங்கி இணைத்துக்கொள்ளவேண்டிய தேவை இருக்கிறது. தமிழ் மக்களுடைய பிரச்சனைகளைப் புலிகளின் பிரச்சனையாகக்குறுக்கி விட முனையும் இந்த அரசுக்கு சிங்கள மக்களின் மத்தியில் இருந்து தமிழ்மக்களின் பிரச்சனைகளுக்கு ஆதரவாக வருகிற எந்தக்குரலும் பிரச்சனையாகவே இருக்கும். இந்தக்குரல்கள் எதிர்காலத்தில் வளர்ந்து செல்லும் என்பதையும் அது அறியும்.

காலப்போக்கில் ராசபக்ஸ குடும்பஅதிகாரமும் தனது சொந்த மக்களுக்கு எதிராகத்திரும்பும் என்பதை இந்தக்குரலுக்குரியவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். மேலாதிக்க உணர்வை விடவும் சனநாயக உணர்வு வலிமையானதும் தேவையானதும் என்பதை இவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். இவர்களின் தொகை சிறிதாக இருக்கிற போதும் கடந்த மூன்று தசாப்தங்களில் இலங்கையுள் நிகழாத ஒன்றாகும். இதனைச் சகல தமிழ்த்தரப்புகளுக் வெளிப்படையாக வரவேற்பதுடன் அவர்கள் நடாத்தும் போராட்டங்களுக்கும் தமது பங்களிப்பையும் ஆதரவையும் தரவேண்டும்
நடைமுறை உலகின் இராச தந்திர மொழியில் பிரிவினை என்ற சொல்லைவிடவும் சனநாயகம் என்ற பதம் பலகதவுகளைத்திறக்கும் தந்திரோபாய மொழியாக இருக்கிறது.
எவ்வாறு பயங்கரவாதம் என்ற சொல் ஒடுக்கு முறை அரசுகளுக்கு பிரிவினைப்போராட்டங்களை அடக்க உதவியதோ அதே போல அடக்கப்படும் மக்களுக்கு இராச தந்திர வழி மொழியிலும் உண்மையான யதார்த்தத்திலும் இருக்கிற ஒரே ஒரு சொல் சனநாயகம் என்பதாகும். இன்றைக்கு எங்களுக்கு இருக்கிற ஒரே ஒரு வழி எங்களது போராட்டங்களை சனநாயகத்திற்கான போராட்டங்களாக ஒழுங்கு படுத்துவதுதான். இதனைவிட்டுவிட்டு அமெரிக்காவின் பின்னாலும் இந்தியாவின் பின்னாலும் ஒடுவதன் மூலம் எதனையும் சாதிக்க முடியாது. அப்படியேதான் எதனைச் சாதித்தாலும் அங்கேயும் சனநாயகத்திற்கான கோரிக்கை எஞ்சி நிற்கவே செய்யும்

எங்களுடைய போராட்டங்களைச் சனநாயகத்துகான போராட்டங்களாக ஒழுங்குபடுத்துதலில் எங்களுக்கிடையிலான ஒற்றுமையும் எங்களுடைய பிரச்சனைகளைப்புரிந்துகொண்டு நேசக்கரம் நீட்டுகிற சக இனச் சகோதரர்களுடனான கூட்டிணைவும் முதலாவது படியாக வருகின்றன.



இதனை உணருவது மாவீரர்களுக்குச் செய்யும் மரியாதையாக இருக்கும்.



குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவ அபிரா

04-12-2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக