பின்பற்றுபவர்கள்

7 ஜனவரி, 2013

தேவஅபிராவின் முதலாவது கவிதைத் தொகுப்பு காலச்சுவடு வெளியீடாக வெளி வந்துள்ளது.“இருள்தின்ற ஈழம்”  தொகுப்பில் இருந்து ஒருகவிதை - நினைவுச் சின்னங்களும் அழிந்த என் நகரம் -
 தொகுப்பில் இருந்து ஒருகவிதை:
நினைவுச் சின்னங்களும் அழிந்த என் நகரம்.
இலையுதிர் காலத்தின் எதிர்பாராத வெப்பம் தவழ்கையில்
இந்த நகரத்தை வந்தடைந்தேன்.
நகரத்தின் காலடியில் நகர்கிறது நதி.
கரையோர உணவகங்களில் நடுகுடைகள் விரிந்துள்ளன.
முறுகச் சுட்டபாணில் உருகி வழியும் பாலாடைக் கட்டிகளுக்கருகில்
மென்பொன் மதுக் குவளையை இருத்தி
நங்கைகள் விரைந்து பரிமாறுகிறார்கள்.
பங்குச் சந்தை காய்கிறது.
வங்கிகள் சரிகின்றன.
ஆயினும் கொழுத்த முகங்களின் எண்ணைப் படிவுகளில்
இலையுதிர்காலச் சூரியன் பளபளக்கிறது.
மிதவைப் படகின் தோசைக் கடைகளில் 
சிறுவர்கள் காத்திருக்கிறார்கள்.
நூற்றாண்டுகளாக நகரும் ஆற்றின் ஈரத்தைத்
தன் காதலியின் உதடுகளுக்குள் விட்டுக்கொண்டிருந்தான் ஒருவன்.
இலையுதிர் காலத்தின் வெப்பம் தவற விடக்கூடியதா என்ன?
நான்கு தசாப்தங்களின் முன்பு
இந்த நதிக்கரையில் எதிரி காத்திருந்தான்.
விமானங்கள் குண்டுகளைப் பொழிந்தன.
நினைவுச் சின்னங்களாக நசுங்கிப்போன அந்தக்காலத்தின் கல்லறையில் ஒருவாசகம் எழுதப்பட்டிருந்தது
"இது எமது நகரம்"
என்வாழ்வின் நினைவுத் தடத்தில்
உறங்கிக்கிடந்த வென்நகரங்கள் விழித்தன...
உறையாதே நடந்து போவென்றன..
காலத்தினூடே பயணம் செய்யும் * நியூற்றினோக்களைத்தேடி
குறுகலான சந்துகளினூடே நடந்தேன்.
நூற்றாண்டுகள் கடந்தும்
கடல் கடந்து அள்ளி வந்த செல்வங்கள்
இன்னும் சிதறிக் கிடந்தன.
தொன்மையை இழந்து நகரத்துள் நசுங்கிக்கிடந்த பூங்கா வெளியில்
கண்கள் படாமலும் காமம் சுடாமலும்
பெண்ணுடல் கிடத்தி வெய்யில் சுகிக்கிறது.
என்நகரத்திலோ பூதங்களுக்கஞ்சி
ஒடுங்கிய பெண்களின் சாபத்தில்
இன்னுமெரிகிறது எரிக்கிறது சூரியன்.
நினைவுகளின் தகிப்புத்தாளாது
நிமிர்ந்துநின்ற நினைவு சின்னத்தின் அடியில் அமர்ந்தேன்.
அதன்வேர்கள் எத்தனை ஆண்டுகள் நீண்டிருந்தனவென்று நானறியேன்.
அதன்மடியில் இருந்ததுஒ ருகவிதை:
"இந்த நகரத்தில் அதிகநாள் நான் வாழவில்லை
ஆயினும் எனது இளமைக்காலம் இங்கேயிருந்தது
நான் எங்கு சென்ற போதும் என்னருகில் இருப்பதும் இந்தநகரமே".*
ஓலங்கள் மட்டும் மௌனமாக அலையும்
எனது நகரங்களில் என்றாவது ஓர்நாள்
நானும் நினவுச் சின்னமொன்றை எழுப்புவேன்.
ஏனேனில் யுகங்களைக் கடந்து செல்ல விரும்பும்
அற்ப மனிதன் நான்.
சூரியன் விழுந்து சிவப்பாகும்
மனிதர்களற்ற வெளியில் நுழையும்
இரவு நதியின் படுக்கையில்
நான்சரிந்த போது,
என்காதருகில் கேட்கிறது
என் நகரத்தின் ஆழியின் ஓங்காரம்.

ஐப்பசி 2011
 
 
தொண்ணூறுகளில் இலக்கியவுலகிற்கு அறிமுகமான தேவஅபிராவின் முதலாவது கவிதைத் தொகுப்பு தற்போது காலச்சுவடு வெளியீடாக வெளிவந்துள்ளது. 
“இருள்தின்ற ஈழம்” என்னும் இத்தொகுப்பு அவர் இதுவரை எழுதிய ஐம்பது கவிதைகளை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது.
கடந்தகாலங்களில் நான் எழுதியவற்றுள் தேறியவைகள் எனக் கருதியவற்றை அவற்றின் கால அடிப்படையில் தொகுத்திருக்கிறேன். எனது கவித்துவ முனைப்பின் படி நிலை வளர்ச்சியையும் நமதுகாலத்தின் அரசியலையும் சமூகத்தையும் அதன் மாறுதல்களையும் நான் எப்படிப் புரிந்து கொண்டிருந்தேன் என்பதையும் இந்தக் கவிதைகளினூடே பயணம் செய்ய முடிந்தால் கண்டு கொள்ளலாம். கவிதைகளின் வடிவங்களும் அவை பேசவிளையும் உள்ளடக்கத்திற்கேற்ப மாறிவந்துள்ளன.
கவிதைகள் தரும் உணர்வுகளையும் கவிதைகள் பேசும் அரசியலையும் கவிதைகள் எடுத்துக்கொள்ளும் வடிவங்களையும் ஒவ்வொருவரும் தமக்கே உரியமுறையில் வாசித்துப் புரிந்துகொள்கிறார்கள். 
இந்தவகையில் வாசிப்பு என்பது ஒவ்வொரு தனிமனிதரினதும் மொழியறிவின் ஆழம், அவரின் அனுபவங்கள், மற்றும் அவரின் சமூக அரசியற் சிந்தனைகளின் பரிமாணம் என்பனவற்றைப் பொறுத்து மாறுபடும்.
ஒருவருக்குப் பிடிப்பது இன்னொருவருக்குப் பிடிக்காது போகும். ஒருவர் இரசிப்பதை இன்னொருவர் புறந்தள்ளுவதும் சிலவேளை வெறுப்பதுவும் மனித இயல்பு. இந்தவகையில் மனிதர்களுக்கிடையில் இருக்கும் இடைவெளியை நிரப்பும் வலிமை என்கவிதைகளுக்கு இருக்கிறதோ நான் அறியேன்.
எனக் கேள்வி எழுப்பும் தேவஅபிராவின் மொழி எளிமையானது. சிக்கலற்ற தெளிந்த நீரருவி போலத் தவழ்ந்து தவழ்ந்து ஓடுவது. அழகும் தெளிவும் கொண்ட நளினமும் அதேவேளை திசை தேடும் ஆர்வமும் வேகமும் கொண்டது. நேரடியாகவே அதில் இறங்கி அதன்குளிர்மையை, ஓட்ட வேகத்தை ஆழத்தை எளிமையை உணர்ந்தபடியே யாரும் அதை அள்ளிப்பருக முடியும் அதில் நீங்கள் உங்களைக் காண முடியும் உங்கள் ஆசைகளை கேள்விகளை அனுபவங்களை அது பேசுவதைக்கண்டு அனுபவிக்க முடியும் வெளிப்படையான நெஞ்சிலிருந்து நேர்மையாகவும் நேரடியாகவும் வருகின்ற வார்த்தைகளாக அவைவருகின்றன என்கிறார் திரு எஸ். கே விக்னேஸ்வரன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக