பின்பற்றுபவர்கள்

27 அக்டோபர், 2007

சித்திரவதைகளும் சித்திரவதைக்குள்ளாகிச் சீவித்திருப்போரும் II

சித்திரவதை (வரைவிலக்கணம்)

திட்டமிட்ட ரீதியில் தனி ஒருவர் மீதோ அல்லது பலர் மீதோ தனியொருவரோ குழுவோ தானாகவோ அல்லது ஏதாவது ஒரு அதிகார சக்தியின் உத்தரவினாலோ புரியப்படும் உடல் உள நோக்களும் வேதனைகளும் சித்திரவதை எனப்படும். (விரிவான வரைவிலக்கணம் ஆங்கிலத்தில் கீழேயுள்ளது)
Torture, according to international law, is "any act by which severe pain or suffering, whether physical or mental, is intentionally inflicted on a person for such purposes as obtaining from him or a third person information or a confession, punishing him for an act he or a third person has committed or is suspected of having committed, or intimidating or coercing him or a third person, or for any reason based on discrimination of any kind, when such pain or suffering is inflicted by or at the instigation of or with the consent or acquiescence of a public official or other person acting in an official capacity." In addition to state-sponsored torture, individuals or groups may inflict torture on others for similar reasons; however, the motive for torture can also be for the sadistic gratification of the torturer.


சித்திரவதையின் நோக்கம்

சித்திரவதையின் நோக்கங்கள் குற்றத்தை அல்லது செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளச்செய்தல் , தேவைப்படும் தகவல் ஒன்றைப் பெறுதல், கைது செய்யப்பட்டவரைப் பழிவாங்குதல், தேடப்படுகின்ற ஒருவரின் குடும்பத்தினரை அல்லது நண்பர்களைத் துன்புறுத்துவதற் கூடாகத் தேடப்படுகிறவரைப் பணிய வைத்தல் அல்லது சரணடைய வைத்தல் எனப்பன்முகப்படுகிறது.

குற்றம் ஒன்றை நிரூபிப்பதற்கு வேறுபல வழிகள் இருக்கின்ற போதும், தேவைப்பட்ட தகவலைப் பெற வேறுவழிகள் உள்ளபோதும், அல்லது அத்தகவல்களைப் பெற்றபின்னரும் கூடச் சித்திரவதை மேற்கொள்ளப்படுகிறது.

சாட்சி ஒருவரைச் சித்திரவதைக்குள்ளாக்குவதன் மூலம் அவரது உடலை மட்டுமன்றி உள்ளத்தையும் அதாவது அவரது ஆத்ம உறுதியையும் அழித்துவிடச் சித்திரவதை செய்பவர்கள் விரும்புகிறாகள்.
சாட்சி ஒருவரின் தனிப்பட்ட ஆளுமை அழிக்கப்படுவது அதிகார சக்திகளுக்கு மிகவும் தேவையானதாகும். ஏனெனில் அரச அமைப்பை எதிர்த்துப் புரட்சி செய்பவர்கள் , பிழையான தலைமையை எதிர்ப்பவர்கள் அவற்றுக்கெதிரான கருத்தியலையும் நடத்தைகளையும் கொண்டிருக்கிறார்கள் அவர்களது கருத்தியலும் நடத்தைகளும் இன்னும் பலரையும் தொற்றிகொள்வது தமது அதிகாரத்தைப் பேணவிரும்புகிற அரசாங்கத்திற்கோ தலைமைக்கோ உவப்பானதல்ல. எனவே இத்தகையவர்களின் மன உறுதியை உடைத்து
விடுவது அதிகார சக்திகளுக்கு அவசியமானதாகும்.

“பொலிஸை எதிர்க்காதே!
அரசாங்கத்தை எதிர்க்காதே!
தலைமையை எதிர்க்காதே!
எங்களை விமர்சிக்காதே!
விமர்சித்தால் என்ன நடக்கும் என்பதைச் சாட்சிக்கும் அவர்சம்பந்தப்பட்டவர்களுக்கும் உணர்ந்தச் சாட்சியை சித்திரவதை செய்து நடைபிணமாக்க வேண்டிய தேவை உள்ளது.
இவ்வாறு சித்திரவதை செய்து நடைப்பிணமாக்கப்பட்டவரைக் காணுகையில் சமூகத்தினரிடையே ஒரு அச்சஉணர்வு பரவுகிறது. இந்த அச்சஉணர்வு அதிகாரத்துக்கு எதிரான சக்திகளுக்கு எச்சரிக்கையாகும்.

சர்வதேசமன்னிப்புச் சபையின் அறிக்கையின் படி உலகின் ஆறில் ஜந்து பங்கு நாடுகளில் அரச ரீதியான சித்திரவதைகள் இடம்பெற்றுவருகின்றன. உலகம்முழுவதும் அகதிகளாகி உள்ளவர்களில் 10 இல் இருந்து 30 சதவீதமானவர்கள் சித்திரவதைக்குள்ளானவர்களாகவிருக்கின்றனர்சித்திரவதை முறைகள்
சித்திரவதையானது உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் நடைபெறுகின்றது. உடலியல் ரீதியான சித்திரவதைகளும் உளவியல் ரீதியான தாக்கங்களுக்கு வழிவகுக்கின்றன.
சித்திரவதையானது இராணுவம் பொலிஸ் முதலாளிகளது அடியாட்கள் அல்லது போராளிகளின் ஆயதக்குழுக்கள் சாட்சியின் வீட்டிற்குள் புகுந்து யாவற்றையும் அடித்து நொருக்கிக் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் மீதும் வன்முறையைப் பிரயோகித்துத் தேடப்பட்டவரை முரட்டுத்தனமாக கைதுசெய்வதுடன் ஆரம்பிக்கிறது.
உடலியல் ரீதியான சித்திரவதைகள் பின்வரும் அம்சங்களைப் பொதுவாக கொண்டுள்ளன.

தாறுமாறான தாக்குதல்

தடி, இடுப்புப்பட்டி, மண்நிரப்பிய எஸ்லோன் குழாய், போன்றவற்றினால் எழுந்தமானமாக உடலெங்கும் தாக்குதல் போன்றவை இதனுள்ளடங்கும்.

திட்டமிட்ட தாக்குதல்:

தடிகளால் பாதங்களில் தாக்குதல் (பாதக்குழிவுகளிலும் பாதக்குதியிலும்), ஒரே நேரத்தில் இரு காதுகளிலும் அறைதல், முழங்கால் மூட்டுச்சில்லுகளில் அடித்தல், கர்ப்பிணிப் பெண்களுக்கு வயிற்றில் அடித்தல் மூலம் கருச்சிதைவு ஏற்படுத்தல் போன்றவை இதனுள் அடங்கும்.

மின்சாரச் சித்திரவதை :

மின்சாரம் பாய்ச்சப்படும் போது உடலில் கடும் நோவுடன் கூடிய வலிப்பு தோற்றுவிக்கப்படுகிறது. மின்சாரம் உடல் தசைகளை சடுதியான சுரக்கவிரிவுக்கு உட்படுத்துவதால் கடும் நோவு தோன்றுகின்றது. மேலும் மின்சாரம் பாய்ச்சப்பட்டவர் தானே தனது கன்ன உட்சதைகள் உதடுகள் நாக்கு என்பவற்றை மின்சாரத் தாக்கின் போது கடித்து விடுவார்.
மின்சாரம் பாய்ச்சப்படுவதற்கெனப் பயன்படுத்தப்படும் மின்முனைகள் பென்சிற்கூர்போன்று மிகக் கூர்மையானவையாக உள்ளன. இவை உடலின் மென்மையான ஆனால் உணர்ச்சிச் செறிவான இடங்களில் செருகப்பட்டு மின்சாரம் பாய்ச்சப்படுகிறது. காதுகள் (செவிப்பறைமென்சவ்வு), விரல் நுனிகள், காற் பெருவிரல், மார்பக முனைகள், ஆண்குறி, பெண்குறி போன்ற மென்மையான பகுதிகளை சித்திரவதை செய்வோர் தெரிவு செய்கிறார்கள்.

மூச்சுத்திணற வைத்தல்:

இவ்வகையான சித்திரவதைகளின் நோக்கம் சாட்சியை மிகக்கடுமையான திணறலுக்கு உட்படுத்துவதாகும். இதற்கெனப் பாரிய நீர்த்தாங்கிகள் சித்திரவதைக் கூடங்களினுள் உள்ளதாக அறியப்படுகிறது. சாட்சி தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்ட நிலையில் தண்ணீரினுள் அமுக்கப்படுவார். சிலவேளைகளில் சிறுநீர், மலம் போன்றவற்றினுள்ளும் சாட்சி அமுக்கப்படுவார். இவ்வகையான சித்திரவதையின் போது மூச்சுத் திணறி மரணமான சிலரின் சுவாசப்பைகளினுள் மலம் காணப்பட்டமையைப் பிரேதபரிசோதனைகள் வெளிச்சப்பபடுத்தின.
இவ்வகைச் சித்திரவதையின் போது சாட்சி மரணமடைந்துவிடாதபடி கைதியின் நாடித் துடிப்பை சித்திரவதைசெய்பவர் கணித்தபடி இருப்பார்.

எரிகாயங்களை உண்டாக்குதல்:

எரிகின்ற சிகரட்டினால் உடலின் மென்மையான பாகங்களில் சுடுதல். தீயில் நன்கு எரிக்கப்பட்ட கம்பிகளால் சுடுதல். வேப்பமேற்றப்பட்ட மின் அழுத்தியினால் முதுகுப் பகுதியில் அழுத்தி தேய்த்தல் போன்றவை இதனுள் அடங்கும்.

கட்டித்தொங்கவிடுதல்

இருகைகளையும் முறுக்கிக் கட்டி தொங்கவிடுதல், இருகால்களையும் கட்டி தலைகீழாகத் தொங்கவிடுதல், ஒருகை அல்லது ஒருகாலில் மாத்திரம் கட்டித் தொங்கவிடுதல் போன்றவை இதனுள் அடங்கும்.

ஊடற் பாகங்களைப் பிடுங்குதல்:

தலைமயிர், நகங்கள், நாக்கு, விதைகள், பற்கள் என்பவற்றைப் பிடுங்குதல் அல்லது உடைத்தல் அல்லது நசுக்குதல்.

பாலியல் ரீதியான சித்திரவதைகள்:

பாலியல் ரீதியான சித்திரவதை என்பது உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தாக்கத்தை உண்டுபண்ணுகிற ஒரு சித்திரவதையாகும்.
காம வக்கிரமான கதைகளைக் கூறுதல், கூறச் செய்தல், பாலியல் நடத்தைகளைச் செய்து காட்டுதல், செய்து காட்டச் செய்தல், வெளியேற்றப்பட்ட விந்தை உண்ணக் கொடுத்தல். சாட்சி மீது சிறுநீர் கழித்தல், ஆண்களின் ஆண்குறி, விதை என்பவற்றைத் தொழிற்பாடு இழக்கச் செய்தல். பெண்களை வன்புணர்தல் . பழக்கப்பட்ட மிருகங்களை கொண்டு பாலுறுப்புக்களில் நோவுண்டாக்குதல் போன்ற முறைகளை அறியப்படுகின்றன.

உளவியல் ரீதியான முறைகள்:

சாட்சியைத் தனிமைப்படுத்தி வெறுமையை உண்டாக்கி மன அழுத்தத்திற்கு உட்படுத்தல்: இதற்கென மிகச்சிறிய அறைகள் உள்ளன. இவற்றினுள் சாட்சி பல நாட்களுக்கு கடும் இருளில் அல்லது கடும் ஒளியில் அடைத்து வைக்கப்படுவார். இவை நிலவறைகளாகவும் இருக்கக்கூடும். மலசலம் கழிப்பதும் அவ்வறைகளிலேயே!
நாள் ஒன்றில் ஒழுங்கற்ற இடைவெளிகளில் உணவு அல்லது நீர் சிறியளவில் வழங்கப்படும். அதைத்தவிரக் காலத்தை உணரக்கூடிய எதனிலும் இருந்தும் சாட்சி பிரித்து வைக்கப்படுவார்.
இதன் காரணமாக அவருக்கு ஒவ்வொரு நிமிடத் துளியும் ஒருயுகம் போலவே தோன்றும். இந்நிலை அவருக்குள சூனிய உணர்வைத் தோற்றுவிக்கும். வெறுமையைத் தோற்றுவிக்கும். மன உறுதியையும் தன்னம்பிக்கையும் அழிந்துவிடும்.

அதீதிமான பயமுறுத்தல்கள்:

பயங்கரமான சித்திரவதை முறைகளை விபரித்தல். சாட்சியின் மனைவியை கணவனை , குழந்தைகளை, சகோதரர்களை, சித்திரவதை செய்யப்போவதாக பயமுறுத்தல். வேறு யாரையாவது சித்திரவதை செய்யும்போது பார்வையிடச்செய்தல் ஆகியன உளவியல் ரீதியானவையாகும்.

இவை யாவற்றின் பின்பும் சாட்சியானவர் சித்திரவதை செய்யப்படவில்லையென மருத்துவரொருவர் சான்றிதழை வழங்குவார். அல்லது சாட்சி தான் சித்திரவதை செய்யப்படவில்லை என ஒப்பதல்வாக்குமூலமொன்றில் கையொப்பமொன்றை அல்லது விரலடையாளமொன்றை இடவேண்டியிருக்கும்.

மேலே விபரிக்கப்பட்டவை சில அடிப்படையாக அறியப்பட்ட சித்திரவதைகளே! இன்று சித்திரவதை என்பது தொழில் முறையாகவும் கலைநுணுக்கம் நிறைந்ததாகவும் நவீன உபகரணங்கள் பாவிக்கப்படுவதாகவும் மாறியுள்ளது. சித்திரவதை செய்வோர் சித்திரவதைக்குள்ளாகி உயிர் வாழ்பவர்களின் அனுபவங்களை அடிப்படையாக வைத்து கைதியை மரணமடையச் செய்யாமல் அதே நேரத்தில் எவ்வளவு கடுமையாகச் சித்திரவதைகளைச் செய்யலாம் என்பதைக் கண்டுபிடிக்கிறார்கள்.

இதனையும் விட வேதைனையானது கீழ் வரும் காட்சி.

சித்திரவதைக் கூடம் ஒன்றில் சாட்சி சித்திரவதையால் துவண்டு போயிருக்கிறான். சித்திரவதை செய்வோர் மருத்துவர் ஒருவருடன் வருகின்றனர். கைதியின் மனதில் சிறிது நிம்மதி தோன்றுகிறது. கண்களில் ஆவல் வருகிறது. ஏதோ முறையிட விரும்புகிறான். ஆனால் நடப்பது தலைகீழாக. மருத்துவரின் ஆலோசனையுடன் சித்திரவதை கடுமையாகின்றது. முன்பை விட அவன் அலறல் உயர்கிறது.
ஆய்வுகளின் படி உலகளாவிய ரீதியில் கணிசமான அளவு மருத்துவர்களும் தாதிமார்களும் சித்திரவதைகளில் பங்குகொள்கின்றனர் என அறியப்படுகிறது.

இனி சித்திரவதையின் விளைவுகள் என்னவாக இருக்கின்றன எனக் கவனிப்போம். இவ்விளைவுகள் உடனடியானதாகவோ, நீண்டகால போக்கில் தோன்றுவனவாகவோ இருக்கலாம். இவை சிகிச்சை அளிக்கப்படும் போது உடன் நீங்கி விடுபவையாகவோ உடன் நீங்காது மெதுவாக நீங்குபவையாகவோ இருக்கலாம். சிலவேளைகளில் சித்திரவதையின் விளைவுகள் வாழ்க்கை பூராவும் நிலைத்து விடுகின்றன. ஊடல் அங்கவீனம், இனப்பெருக் ஆற்றல் இழப்பு என்பவற்றை நிரந்தர விளைவுகளாக கருதலாம்.
சாட்சியானவருக்கு அவர் கண்டபடி தாக்கப்பட்டதனால் வெளிப்படையான காயங்கள், இரத்தக்கண்டல்காயங்கள், சிறிய பாரிய எலும்பு முறிவுகள் என்பன ஏற்படலாம். பற்கள் உடைதல் பற்கள் இல்லாது போதல் முழுப் பற்களும் காலப்போக்கில் உதிர்தல் போன்றனவும் அவதானிக்கப்படுகிறது. மூட்டுக்களில் நோ, மூட்டுக்கள் வீங்குதல், நீண்ட தூரம் நடக்கமுடியாமை போன்ற தசை, வன்கூட்டுத் தொகுதிகளுடன் தொடர்புடைய விளைவுகளும் ஏற்படலாம்.
மூச்சுத் திணறவைக்கும் சித்திரவதை முறைகள் காரணமமாக சுவாசக்குழாய் அழர்ச்சி, சுவாசப்பையுள் பக்ரீரியாத்தாக்கம் வயிற்றழர்ச்சி போன்ற நோய்கள் தோன்றும் வாய்ப்புக்கள் உள்ளன.
இது தவிர இழைய வீக்கம், தசைத் தொழிற்பாடு மந்தமடைதல் போன்ற நிலைமைகளும் தோன்றுகின்றன. சித்திரவதைக்குள்ளான அனேகமானவர்கள் இருதயம், சுவாசப்பை, உணவுக்கால்வாய் தொகுதி, மூளை ஆகியவற்றுடன் தொடர்புடைய பாதிப்புக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
உடலியல் ரீதியான சித்திரவதையின் விளைவுகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்படின் அவற்றிலிருந்து ஓரளவுக்காவது மீள முடியும். ஆயினும் சித்திரவதையினால் அடைந்த உளவியல் பாதிப்பை நீக்குவதற்கு செய்யப்படவேண்டிய சிகிச்சையே உடற்சிகிற்சையைவிடவும் முக்கியமானதாகும்.
சித்திரவதை செய்யப்பட்டவர் தான் மாற்றப்பட்டுவிட்டதாக, தனது அடையாளம் அழிக்கப்பட்டு விட்டதாக உணர்கிறார். முன்பு உறுதியானவராகவும் பலமுடையவராகவும் இருந்த அவர் இப்பொழுது உறுதியை இழந்தவராக களைப்படைந்தவராக மாறிவிடுகிறார். சுயமதிப்பீடு அவருக்கு சாத்தியமற்றதாகவே தோன்றுகிறது. சூழ உள்ளவர்களை நம்ப அஞ்சுகிறார். மன அமைதியை இழந்து போகிறார்.
சித்திரவதைக்குள்ளாகி உயிர்வாழும் அரசியல் கைதிகளின் நிலை மிக மோசமானது. ஏனெனில் இவர்கள் தாம் எதற்காககாகத் துன்புறுத்தப்பட்டார்கள், எவ்வாறெல்லாம் துன்புறுத்தப்பட்டார்கள் என்பவற்றைச் சாதாரண வாழ்க்கையின் துயரங்களை நண்பர் ஒருவருடன் உரையாடி மன அமைதி காண்பது போல உரையாட முடியாதவர்களாக இருக்கிறார்கள். மேலும் அவர்கள் எந்த அரசியல் சமூக வாழ்க்கை முறைகளை புரட்சிகரமானதாக கருதினார்களோ அவற்றைப் புரிந்து கொள்ளும் திறனுள்ள மனிதர்களை சந்திக்கும் சந்தர்ப்பம் அற்றிருக்கிறார்கள்.
பொதுவாகக் கடுமையான சித்திரவதைகளுக்கு உட்பட்டவர்கள் தொடர்ச்சியான தலையிடி, ஞாபகமறதி, உறக்கமின்மை என்பவற்றால் அவதியுறுகிறார்கள்.

நாளும்பொழுதும் இவர்களது உடலும் ஆத்மாவும் அடைகிற வேதைளை உங்களால் உணரமுடிகிறதா?
ஏன் இவர்களின் துயரங்கள் பேசப்படுவதில்லை.
ஏன் இவை பற்றி புரிந்து கொள்ள வேண்டும் என எவர்க்கும் தோன்றவில்லை.
இருண்ட நிலவறைகளுக்குள் இருந்தும்
அடைக்கப்பட்ட கூடுகளுக்குள் இருந்தும்
அவலக்குரல்கள் உங்களுக்கு கேட்பதில்லையா? பகலில்தான் உலகம் இரைச்சலாக இருக்கிறது.
இரவிலுமா கேட்கவில்லை.
யாவும் உறங்கி வழியும் இரவுகளில் காற்றில் கேட்கிறதே அவலக்குரல்கள்.
யுத்தங்கள் புரிவதில் ஆர்வம் உள்ள அளவுக்கு கொலைகளை சித்திரவதைகளை செய்து இன்பமுறும் அளவுக்கு
இவற்றுக்கு எதிரான மானுட விழுமியங்கள் குறித்த அக்கறை ஏன் தோன்றவில்லை.

டேனிஸ் கவிஞர் ஹெல்வ்டான் றாஸ்முஸ்ஸென்(Danish Poet Halfdan asmussen)
கூறுகிறார்:

“சித்திரவதை என்னைப் பயமுறுத்தாது
இவ்வுடலின் இறுதி வீழ்ச்சியும் என்னைப் பயமுறுத்தாது
சுடுகுழலின் கண்களும்
என்னை மூடி உயர்ந்த சுவர்களும் என்னைப் பயமுறுத்தாது
பூமியை மூடுகிற இரவும்
என்மீது வீசப்பட்ட கடும் வேதனையில் மங்கி வரும் கடைசி நட்சத்திரமும் கூட என்னைப் பயமுறுத்தாது
என்னைப் பயமுறுத்துவது எல்லாம்
எதனைப்பற்றியும் அக்கறையற்ற குருட்டுத்ததனத்துடன்
இரக்கமும் உணர்வுகளும் அற்று அசையும் இவ்வுலகுதான்”


நன்றி : Torture Survivors
-A new group of Patients
By Lone lacobsen & Peter Vesti

3 கருத்துகள்:

 1. ஒரு நரகத்தின் மிகப்பெரும் வேதனையை இக்கணத்திலும் கூட யாரேனும் ஒருவர் அனுபவித்துத் துடித்துக்கொண்டுதான் இருப்பார்கள்.
  எதற்கும் எல்லையுண்டு.ஆனால் சித்திரவதைப்படுத்தப் படுவோருக்கு...?
  மரணம் மட்டுமே பெரும் விமோசனம்.அதுவும் இலேசில் கிடைக்காது.
  அப்போது நானொரு சிறுவன்.விடிகாலையில் எழுந்து பார்த்தால் வீட்டின் முன்னே ஒரு கட்டுமஸ்தான இளைஞனின் சடலம்.அநீதிக்குச் சாட்சியாக விடிகாலைச் சாம்பல் நிறம் மட்டுமே எஞ்சியிருந்தது.எனக்கு ஏற்பட்ட மிகப்பெரும் மனச்சோர்வையும்,துயரத்தையும் அன்றுதான் உணர்ந்தேன்.
  எவ்வளவோ சித்திரவதைகள்...இப்படியெல்லாம் கூட உயிரை வதைக்கமுடியுமாவென்ற அதிர்ச்சி பார்த்தவர் அத்தனை பேர் கண்களிலும் தொக்கியிருந்தது.அந்த அனுபவம் இன்னும் கண்ணில் நிற்க எழுதியதுதானிது.

  http://mrishanshareef.blogspot.com/2007/08/blog-post_25.html

  பிரார்த்திப்போம்.இனிமேல் எவர்க்கும் இவ்வாறு நேரக்கூடாது என.வேறு என்னதான் செய்ய முடியும்?

  பதிலளிநீக்கு
 2. படையினரின் சித்திரவதைக் கொடுமை இலங்கையில் சர்வ சாதாரணமாகிவிட்டது ஐ.நா. விசேட இணைப்பாளர் சாடுகிறார்

  [Tuesday October 30 2007 06:15:14 AM GMT] [யாழினி]


  இலங்கைப் பாதுகாப்புப் படையினர் மிகப்பெரிய அளவில் கொடூரங்களை, சித்திரவதைகளைப் புரிந்துவருகின்றனர். அங்கு அவை சர்வசாதாரணமாகி வழமையாகி வருகின்றன. அவற்றைத் தடுப்பதற்கு இலங்கை அரசு உடனடியாகக் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.


  ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை கவுன்ஸிலின் சித்திரவதைகள் கண்காணிப்புக்கான விசேட இணைப்பாளர் மான்பிறெட் நொவாக் நேற்று விடுத்த அறிக்கையில் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

  விசேட இணைப்பாளர் மான்பிறெட் இம்மாதம் இரண்டாம் திகதி தொடக்கம் இலங்கையில் ஒருவாரகாலம் தங்கியிருந்து அங்கு நடைபெறும் சித்திரவதைகள் குறித்த முறைப்பாடுகளை விசாரித்து ஆராய்ந்தார்.

  தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில், இலங்கைப் பாதுகாப்புப் படைகள் கொடூரமான சித்திரவதைகளில் ஈடுபடுகின்றார்கள் என்று அவர் தமது அறிக்கையில் சாடியுள்ளார்.

  அந்த அறிக்கையின் முக்கிய பகுதிகள் சில வருமாறு:

  தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் மற்றும் உத்தியோக பூர்வ அமைப்புகளுக்கும் கிடைத்த சித்திரவதைக் கொடுமைகள் பற்றிய முறைப்பாடுகளை அவதானித்தால், இலங்கையில், தடுப்பாரின்றி மிகத் தாராளமாகச் சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது தெளிவாகப் புலனாகிறது.

  விடுதலைப் புலிகளுடன் அரசு நீண்டகாலமாகப் போரை நடத்திவருவதால் அரசு முகங்கொடுக்கும் சவால்களைப் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனாலும் பயங்கரவாத விசாரணைத் திணைக்களத்திற்கு (ரி.ஐ.டி.) எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து விரைவாக விசாரணைகளை மேற்கொள்வது அவசியம்.

  தடுத்துவைக்கப்பட்டிருப்போருக்கு எதிரான சித்திரவதைகளையும் கொடுமைப்படுத்தல்களையும் விசõரிப்பதற்கு உடனடியாக விசேட நீதிமன்றங்கள் நிறுவப்படவேண்டும்.

  தூக்குத்தண்டனை வழங்கும் முறை நிறுத்தப்படவேண்டும். அவை ஆயுள் தண்டனையாக மாற்றப்படவேண்டும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற பெயரில் சித்திரவதைகள் வழமையாகிவருகின்றன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  பதிலளிநீக்கு