பின்பற்றுபவர்கள்

14 அக்டோபர், 2007

"மனித இனத்தின் மிகப்பெரிய எதிரி முதலாளித்துவம்"

சனநாயகம்


அண்மையில் பி.பி.சி யும் மெற்றோ நிறுவனமும் இணைந்து "ஏன் சனநாயகம்?"என்னும் தலைப்பில் பல்வேறு ஆவணத்திரைப்படங்களையும் நேர்காணல்களையும் செய்திருந்தன. இவ்வாறு நேர்காணப்பட்டவர்களுள் பொலிவியாவின் சனாதிபதியான எவொ மொராலெஸ்சும் ஒருவராவார்
எவொ மொராலெஸ் பொலிவியாவின் இந்தியப்பழங்குடி மக்களுக்குள்ளிருந்து வந்த முதலாவது சனாதிபதி. இவர் அய்மாரப் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். பொலிவியாவின் கொக்கா பயிரிடும்(coca) விவசாயிகளின் சனநாயக முறையிலான எழுச்சிக்குத் தலைமை தாங்கிய இவர் 2005 ம் ஆண்டு பொலிவியாவின் சனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.
தென்னமெரிக்க நாடுகள் அமெரிக்காவின் ஏகாதிபத்திய கொடூரப்பிடிக்குள் தவித்து வருகின்ற அதேவேளை அதற்கெதிரான முனைப்புக்களையும் கொண்டேயுள்ளன. தென்னமெரிக்காவிலுள்ள பல நாடுகள் (கியூபா, பொலிவியா, நிகரகுவா, பெரு, வெனிசுவெலா) அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கெதிராக எழுந்து நிற்கின்றன. வெனிசுவெலாவிலும் பொலிவியாவிலும் பாராளுமன்றத் தேர்தல்களின் மூலம் தேசிய, சோசலிச எண்ணக்கருக்களைக் கொண்ட கட்சிகள் மக்கள் ஆதரவோடு ஆட்சியைக்கைப்பற்றி உள்ளன. உயர்வர்க்கமும் உள்ளூர் ஏகாதிபத்திய ஆதரவாளர்களும் அதிகாரத்திலிருந்து கீழிறக்கப்பட்டுள்ளனர் . அமெரிக்காவும் ஐரோப்பாவும் இப்புதிய போக்கை-சோசலிச அரசுகளை ஜனநாயகத்திற்கெதிரானவை எனவும் சர்வாதிகாரமானவை எனவும் கூறுகின்றன.
நடுநிலையாளர்கள் இவ்வரசுகளை ஜனநாயகமானவை எனக் கூறாவிடினும், தென்அமெரிக்காவில் நிகழும் இம்மாற்றத்திற்கான காரணம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடாவடித் தனத்திற்கெதிரான அடித்தட்டு மக்களின் எழுற்சியே என்கின்றனர். வெனிசுவெலாவில் புதிய சோசலிச - சனநாயக அரசு, கல்வி மற்றும் சுகாதார சேவைகளை இலவசமாக்கியுள்ளதுடன் எண்ணை எற்றுமதி மூலம் கிடைக்கும் வருமானத்தை மிகப்பெருமளவில் சமூக நல அபிவிருத்தித்திட்டங்களில் முதலிடுவதன் மூலம் அடித்தட்டு மக்களை அசைவியக்கத்திற்கு உள்ளாக்கியுள்ளது என்கின்றனர். ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் மற்றும் உயர்குடியினர் சம்பந்தப்பட்ட வரையில் சர்வாதிகாரப்போக்கைக் கடைப்பிடிக்கும் இவ்வரசுகள் பலவேளைகளில் தமக்கெதிரான போராட்டங்களை சனநாயகமற்ற முறையில் ஓடுக்குவதாகவும் குறிப்பிடுகிறார்கள். இவ்வசைவியக்கத்தின் மூலம் வெனிசுவெலாவின் பொருளாதாரமும் மக்களின் வாழ்க்கைத்தரமும் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றமடைந்துள்ளதாகப் பக்கம் சாராதவர்கள் குறிப்பிடுகின்றனர். இவ்வுதாரணங்களைப்பின்பற்றி பொலிவியா, நிகரகுவா, பேரு ஆகிய நாடுகளும் மாற்றங்களை ஏற்படுத்த முயல்கின்றன. வெனிசுவெலா சர்வதேச நாணயநிதியம் போன்றவொரு நிதியமொன்றை தென்னமெரிக்க நாடுகளுக்கென உருவாக்கவும் முயற்சிக்கிறது.
இப்பின்ணணியில் பொலிவியாவின் புதிய சனாதிபதியின் (எவொ மொராலிஸ்சின்) பேட்டி கவனத்துக்குரியது.
மக்களினுடைய எழுச்சிகளுக்குத் தலைமை தாங்குபவர்களின் கருதியல்களும் நடத்தையும் கவனமாக அவதானிக்கப்பட வேண்டியதொன்றாகும். என்னெனில் இவர்களது கருதியல்களும் நடத்தைகளும் இவர்களால் வழிநடத்தப்படும் அரசுகளிலும் அமைப்புக்களிலும் பிரதிபலிக்கும் . மக்களை வழிநடத்த விரும்புகிற தலைவர்கள் தங்களுடைய கருத்தியல்களை சனநாயக அடிப்படையிலானதாக ஆனால் அடக்குமுறைக்கெதிரான நடத்தைகளாக வெளிப்படுத்தும் போது அவர்களால் பெருமளவான மக்களை அசைவியக்கத்திற்குள்ளாக்க முடிகிறது. அமெரிக்க அசுரனின் காலடியில் நசுங்கிக்கிடக்கும் அந்நாடுகளின் தலைவர்களுக்கு அதுவொரு சவால். வெளியில் நின்று பார்ப்பவர்களுக்கு இதுவொரு படிப்பினை.

எவொ மொறலிஸ் பி.பி.சி இன் பத்திரிகையாளருக்கு வழங்கிய பேட்டியின் தமிழ் வடிவம் :

"மனித இனத்தின் மிகப்பெரிய எதிரி முதலாளித்துவம்"
- எவொ மொறாலெஸ்


இவ்வுலகின் மிகச்சிறந்த தலைவராக யாரைக்கருதுகிறீர்கள்?


பிடல் காஸ்ரோபயங்கரவாதம் சனநாயகத்தை அழித்து விடுமா?

பயங்கரவாதம் சனநாயகத்தை ஒரு போதும் அழித்து விட முடியாது. எந்தநிலையிலையிலும் தென் அமெரிக்காவில் இது சாத்தியமில்லை.
சனநாயகம் பற்றிய எங்கள் உணர்வுகள் மிகவும் ஆழமானவை. சனநாயகம் என்னும் கட்டமைப்பை நாங்கள் மிகவும் கவனமானமுறையில் அணுகவேண்டும்.
பொலிவியாவில் சுதந்திரமான தேர்தல் முதன் முதலில் 1952ல் வந்தது. அதற்கு முன்னர் பெருமளவான மக்கள் கொல்லப்பட்ட சூழ்நிலையே காணப்பட்டது. சர்வசனவாக்கெடுப்பு என்னும் சனநாயக வடிவம் 2003 இலேதான் முதன் முதலாக பயன்படுத்தப்பட்டது. இவை யாவும் சனநாயகத்தின் வருகையுடன் சம்பந்தப்பட்டவை. ஆனால் சனநாயகம் என்பது-மிக எளிமைப்படுத்தப்பட்டு - "வாக்களிப்பது" என்பதாக மட்டும் ஆகிவிடக்கூடாது. சனநாயகம் என்பதை அதன் முழுக்கருத்துருவத்துடனும் புரிந்துகொள்ளவேண்டும்.

சனநாயகத்தின் பலவீனமான அம்சங்கள் எவை?

சனநாயகத்தின் மிகப்பெரியகுறைபாடு அதில் பெரும்பான்மை சிறுபான்மை என்கிற பிரிவினை இருப்பதாகும்.பெரும்பாலான சந்தர்ப்பங்களிற் பெரும்பான்மையினரின் முடிவுகளைச் சிறுபான்மையினரால் ஏற்க முடிவதில்லை.
எங்களது கலாசாரத்தில்(இந்தியப்பழங்குடி மக்களிடையே) இப்பிரிவினை இல்லை. மேற்கத்தியர்களே இதனை கொண்டுவந்தார்கள்.
நாங்கள் நடைமுறையிலிருந்து மேலெழுந்துவரும் கொள்கைகளின் அடிப்படையிலேயே முடிவுகளை எடுக்கிறோம். சிறிய குழுவொன்றின் நலன்களுக்காக நீங்கள் எழுச்சிகொள்வதென்றால் கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்படவேண்டும்.

சனநாயகத்தைக்கட்டியெழுப்புவதற்கு சுதந்திரமான தேர்தல்கள் மட்டுமே போதுமானவையா?

இல்லை.
மிகவும் முக்கியமானது என்னவென்றால் அதிகாரம் மக்களிடம் வரவேண்டுமென்பதாகும்.அதிகாரமானது அரசர்கள் பிரபுக்கள் தேவாலையம் எனக்கைமாறி இறுதியில் எண்ணைமுதலாளிகளிடம் வந்துநின்றது.
அதிகாரம் இனித் தங்களைத்தாங்களே ஆழ்கிற மக்களிடம் வரவேண்டும்.

பெண்கள் ஆண்களை விட ஜனநாயகவுணர்வு கொண்டவர்களா?

ஆணும் பெண்ணும் மனிதத்துவம் என்னும் எண்ணக்கருவுள் ஒருவரை ஒருவர் நிரப்புபவர்கள்.
தற்போது இந்தச்சிந்தனை பின்தள்ளப்பட்டுள்ளது.இது மனிதத்துவத்திற்கு எதிர்மறையான முன்னேற்றமாகும்.

சனநாயகம் நல்லதொரு அரசவடிவமா?


ஆம்.
சர்வாதிகாரம் ஒருபோதும் நல்லதல்ல.

சனநாயகத்தின் பலன்களை எவ்வாறு எல்லோரும் அனுபவிக்கமுடியும்?

வளங்களையும் பணத்தையும் நியாயமானமுறையில் எல்லோருக்குமிடையில் பகிர்வதன் மூலமே எல்லோரும் சனநாயகத்தை அனுபவிக்க முடியும். மேலும் சனநாயகத்தில் எல்லோருக்கும் சமமான உரிமைகளும் கடமைகளும் இருக்க வேண்டும். வெறுப்புணர்வும் பாரபட்சம் செலுத்துவதும் நடைமுறையிலிருந்து அகற்றப்பட வேண்டும்.குறிப்பாக இந்தியப்பழங்குடி மக்களுக்கெதிரான பாரபட்சம் ஒழிக்கப்படவேண்டும்.

புரட்சியொன்றைத்தொடங்குவதற்கான உங்கள்
தேவையென்ன?


பொலிவியாவில் நாங்கள் எற்கனவே ஒரு
புரட்சியைத் தொடங்கியுள்ளோம்.எங்கள் புரட்சி அமைதியான சனநாயக நடைமுறையினூடான உருவ உள்ளடக்க மாற்றமாகும். முக்கியமானது என்னவெனில் மக்களைத் தங்களது பொருளாதார சமூக அரசியல் கலாசார நிலைமைகளுக்குத் தாங்களே பொறுப்பானவர்களாக மாற்றுவததாகும். இம் மாற்றத்தை சனநாயகக்கட்டமைப்புக்குள்ளேயே வேகமாக அமூல்படுத்தவேண்டியுள்ளது.

சர்வாதிகாரம் ஒருவேளை நல்லதாகவிருக்குமா?

ஒருபோதுமிலை

சனநாயகக்கட்டமைப்பு சூழலியல் மாற்றங்களால் எற்படும் பிரச்சனைகளைத்தீர்க்க உதவுமா?

கட்டாயமாக!.
இந்தியப்பழங்குடிமக்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்து அமைதியாக வாழ்பவர்கள் மட்டுமல்ல இயற்கையோடும் இணைந்து வாழ்பவர்கள்.எங்களது வாழ்கை முறைமைகளும் சனநாயகம் என்கிற கட்டமைப்பும் ஒன்றிணைவது சூழலியல் பிரச்சனைகளுக்குத் தீர்வாக இருக்கமுடியும்.
நாங்கள் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்குக்கற்றுக்கொள்ள வேண்டும்। நல்லமுறையில் வாழ்வதென்பது வசதியாக வாழ்வதென அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது.வசதியா வாழ்தல் என்பது மறுபுறத்தில் வசதியற்று வாழ்பவர்களையும் உள்ளடக்குகிறது.சமூகமாக நல்லமுறையில் சேர்ந்து வாழ்வதன் மூலம் நாங்கள் சனநாயகத்தை வளப்படுத்தமுடியும்.


தென் அமெரிக்காவில் வாசிக்கத்தெரியாதவர்களை அல்லது அதிகம் வாசிக்காதவர்களை முட்டாள்கள் எனக்கருதுகிறார்கள். வாய்வழியாகக் கையளிக்கப்பட்டு வந்த மரபுகளையும் பெறுமானங்களையும் யாரும் கண்டுகொள்வதில்லை.
நல்ல முறையில் ஒருங்கிணைந்து வாழ்வதில் நாங்கள் எங்கள் கவனத்தைச்செலுத்தினால் அது சூழலியல் பிரச்சனைகளைத்தீர்பதற்குதவியாகவிருக்கும். இதற்கு அடிப்படையாக பொருளாதரக்கட்டமைப்பில் மாற்றங்களை எற்படுத்தவேண்டும்.
முதலாளித்துவம் வாழ்க்கையினதும் மனிதகுலத்தினதும் முதல் எதிரியாகும்.
*******


குறிப்பும் மொழிபெயர்ப்பும்
தேவஅபிரா
14-10-2007

6 கருத்துகள்:

 1. தேவ அபிரா... நல்லதொரு செவ்வியை வழங்கியதற்காக நன்றி..மேலும் இதுபோன்ற படைப்புக்களை தொடர்ந்து எழுதுங்கள்..
  நன்றி..

  பதிலளிநீக்கு
 2. எர்னெஸ்ரோ

  வாசித்ததற்கும் பின்னூட்டமிட்டதற்கும் நன்றி

  தேவ அபிரா

  பதிலளிநீக்கு
 3. இணையவலைப்பதிவுக்குள் வந்திருக்கும் தேவஅபிராவை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

  சுகந்தன்

  பதிலளிநீக்கு
 4. இணையவலைப்பதிவுக்குள் வந்திருக்கும் தேவஅபிராவை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

  சுகந்தன்

  பதிலளிநீக்கு
 5. தோழர் தேவ அபிரா...

  அருமையான பதிவு. உரையாடலுக்கான சில ஆழமான கருத்துக்களை முன்வைத்துள்ளது.

  //சனநாயகத்தின் மிகப்பெரியகுறைபாடு அதில் பெரும்பான்மை சிறுபான்மை என்கிற பிரிவினை இருப்பதாகும்.பெரும்பாலான சந்தர்ப்பங்களிற் பெரும்பான்மையினரின் முடிவுகளைச் சிறுபான்மையினரால் ஏற்க முடிவதில்லை.எங்களது கலாசாரத்தில்(இந்தியப்பழங்குடி மக்களிடையே) இப்பிரிவினை இல்லை. மேற்கத்தியர்களே இதனை கொண்டுவந்தார்கள்.//

  ஜனநாயகம் என்கிற அரசியல் சொல்லாடலே மேற்கத்திய இறக்குமதிதான். இதன் அடிப்படையே பெரும்பாண்மை, சிறுபான்மைதான். இதை தவிர்த்த நமக்கான (ஆசிய, ஆப்பரிக்க அல்லது மூன்றாம் உலக மக்கள்) ஜனநாயகத்தை தேடி அடைவதும், அதனை வரையறுப்பதும் அவசியம். அதனை இச்செவ்வி வெளிப்படுத்தகிறது. இதற்கு மாற்றாக மார்க்சியம் முன்வைத்த பாட்மாளிவர்க்க சர்வாதிகாரம் மற்றும் மாவோ முன்வைத்த மக்கள் ஜனநாயகம் போன்ற கருத்தாக்கங்கள் இவ்வுரையாடலில் உள்ளடக்கப்பட வேண்டியவை. சிறுபான்மை, பெரும்பான்மை என்பது தனிநபர்களைக் கொண்ட குழுக்களின் கூட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது. இது சமூகம் முழுமைக்கான ஒரு பிரிவாக மாறிவிடுகிறது. இந்நிலையில் சாதி, வர்க்கம், மதம், பாலினம் போன்ற அடிப்படை பிரிவுகளை கட்சிகள் என்கிற முதலாளித்துவத்தின் புதிய கருத்தாக்கம் மாற்றீடு செய்தது. இக்கட்சிகள் அடிப்படையில் லெனின் கூறியதுபோல வர்க்க உணர்வுபெற்ற முண்ணனிப்படையாகவே செயல்பட்டது. எனவே முதலாளித்த ஜனநாயகம் என்பது அடிப்படையில் முதலாளிகளின் ஜனநாயகம்தான். அவர்களது உற்பத்தியும் உபரியும் நடைபெறுவதற்கான ஒரு அமைதியான சூழ்நிலையை உருவாக்குவதே முதலாளி்த்துவ ஜனநாயகத்தின் நோக்கம். இதற்கு ஒரு மாற்றை தேடுவது அவசியம், என்றாலும் குறைந்தபட்சம் இன்றைய நிலையில் இந்த ஜனநாயகத்தை நாம் கைவிட்டுவிட முடியாது என்பதே யதார்த்தம்.

  //மிகவும் முக்கியமானது என்னவென்றால் அதிகாரம் மக்களிடம் வரவேண்டுமென்பதாகும்.அதிகாரமானது அரசர்கள் பிரபுக்கள் தேவாலையம் எனக்கைமாறி இறுதியில் எண்ணைமுதலாளிகளிடம் வந்துநின்றது.
  அதிகாரம் இனித் தங்களைத்தாங்களே ஆழ்கிற மக்களிடம் வரவேண்டும்.//
  அருமையான வரிகள். எண்ணைமுதலாளிகள்தான் இன்று உலகை ஆள்கிறார்கள்.

  //நல்லமுறையில் வாழ்வதென்பது வசதியாக வாழ்வதென அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது.வசதியா வாழ்தல் என்பது மறுபுறத்தில் வசதியற்று வாழ்பவர்களையும் உள்ளடக்குகிறது.//

  இதுவும் அருமையான மற்றும் பொதுபுத்தியை தாக்கும் ஒரு வாசகம். வசதியாக வாழ்தல் என்பதன் உள்ளடங்கியிருக்கும் வசதி என்பது மிகவிரிவாக பேசப்பட வேண்டிய விஷயம்.

  //பொருளாதரக்கட்டமைப்பில் மாற்றங்களை எற்படுத்தவேண்டும்.
  முதலாளித்துவம் வாழ்க்கையினதும் மனிதகுலத்தினதும் முதல் எதிரியாகும்//

  இதுதான் முகத்தில் அறையும் உண்மை.

  இதுபோன்ற சிற்ப்புமிக்க பதிவுகளை வெளியட வாழ்த்துகிறேன்.

  -ஜமாலன்.

  பதிலளிநீக்கு
 6. ஜமாலன்

  வாசித்ததற்கும் பின்னூட்டமிட்டதற்கும் நன்றி

  தேவ அபிரா

  பதிலளிநீக்கு