பின்பற்றுபவர்கள்

29 ஜூன், 2012

ஈழத்துக் கலை இலக்கிய அசைவியக்கம்- முள்ளிவாய்க்காலுக்கு முன்னும் பின்னும் --சில குறிப்புக்கள்


ஈழத்துக் கலை இலக்கிய அசைவியக்கம்- முள்ளிவாய்க்காலுக்கு முன்னும் பின்னும் --சில குறிப்புக்கள்

பகுதி ஒன்று:
முள்ளிவாய்க்கால் அல்லது நந்திக்கடல் அழிவென்பது ஈழத்தமிழர் வாழ்வின் ஒரு திருப்புமுனை. இதனால்தான் இன்றைக்கு யாவற்றையும்  முள்ளிவாய்க்காலுக்கு முன் அல்லது பின் என்கிற பெயரீட்டுக்குள் கொண்டு வருகிறோம்.
சிவகுமாரனின் மரணத்துடன் தொடங்கிய தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் எழுச்சி முள்ளிவாய்க்காலில் ஓய்ந்த போது பெரும் ஊழி ஒன்று நடந்து முடிந்திருந்தது. முப்பது வருடங்களாக நம்பிக்கையுடன் நோக்கப்பட்ட தனி நாட்டுக் கோரிக்கை ஒருகணத்தில் வலுவிழந்து போனது . இது ஈழத்தமிழர்களின் அரசியல் பொருளாதார மற்றும் சமூக அசைவியக்கத்தில் தீர்மானகரமான மாற்றங்களைக் கொண்டு வருகிறது. இந்த  மாற்றங்கள் முள்ளிவாய்க்காலுக்குப்  பின்னான  ஈழத்துக்கலை  இலக்கியங்களின்  அசைவியக்கத்துள்ளும் மாற்றங்களைக் கொண்டுவரப்போகின்றன. இந்த மாற்றங்களை இன்றைக்கு முன்னெதிர்வு கூற முடியாது
முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான ஈழத்துக்கலை இலக்கியங்களின் அசைவியக்கங்களை அறிவதற்கு முள்ளி வாய்க்காலுக்கு முன்பு ஈழத்துக் கலை இலக்கியங்களின் இயங்கியல் எவ்வாறிருந்தது என்பதிலிருந்து தொடங்க வேண்டும். இதற்கு விடுதலைப்போராட்ட ஆரம்பகாலத்தில் ஈழத்துக் கலை இலக்கிய அசைவியக்கத்தில்  தோன்றிய மாற்றங்களை அறிதல் முக்கியமாகிறது.
அடிப்படையில் யாவும் வழமையாக இருக்கிற சமூகமொன்றில்  கலை இலக்கியங்கள் தனிப்பட்ட நுகர்வுக்கானவையாக இருக்கின்றன. இந்த நுகர்தல் என்பது பொழுது போக்கு மற்றும் கல்வியூட்டல் ஆகிய  இரண்டு அம்சங்களைத் தன்னடக்கியுளது
பொழுது போக்கிற்கான கலைஇலக்கியங்கள் மக்களின் மலினமான இரசனையை உக்குவித்து பிரதான நீரோட்டத்தின் ஒருபகுதியாக இருக்கின்றன அல்லது சனாதனக்கலைகளாக உயர்குழாத்தின் இன்பத்துயிர்ப்புக்கான கலைகளாக இருக்கின்றன. அல்லது சமய மத நிகழ்வுகளில்  கலந்து சகல மக்களாலும் நுகரப்படுபவையாக இருக்கின்றன.
இதேவேளை பிரதான நீரோட்டத்தில் இல்லாமல் அரசியல் மற்றும் சமூகப்பிரக்ஞை கொண்ட குறிப்பான தேடலைக் கொண்ட மக்கள் மத்தியில் முற்போக்குக் கலை இலக்கியங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்தவிடத்தில் தேசிய விடுதலைப்போராட்ட கால எழுச்சிக்கு முன்பு ஈழத்துக்கலை இலக்கிய அசைவியக்கத்துள் நிலவிய இடதுசாரிகளின் ஆதிக்கத்தை நினைவு கூரவேண்டும். குறிப்பாக பனிப்போர்க்கால உலக ஒழுங்கில் காணப்பட்ட சீன மற்றும் சோவியத் சார்பு நிலைகளையும்  இவற்றின் வழிவந்த மார்க்சிய வழிப்பட்ட  கலை இலக்கிய இரசனை மற்றும்  விமர்சன முறைகளையும் நாங்கள் நினைவு கூரலாம்.
இடதுசாரிச்சிந்தனை எமது கலை இலக்கிய அசைவியக்கத்துள் கொண்டு வந்த தாக்கம் தேசியவிடுதலையின் ஆரம்பகாலம் வரையும் இருந்தது. இந்த அசைவியக்கம் கல்வியூட்டலை அல்லது சமூகத்திற்கு எதோவொன்றை அறிவிப்பதைப் பிரதான நோக்கமாக கொண்டிருந்தது.  சாதியத்திற்கெதிரான போராட்டத்தில் நாடகக்கலை ஒரு முக்கியமான பங்கை அன்றைக்கு வகிக்க முனைந்திருந்ததுஇவற்றைத்தவிர படைப்பாளி ஒருவர் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளல் (expose themselves) என்பதையும் இந்த அசைவியக்கம் தன் உள்நோக்கமாகக் கொண்டிருந்தது.  இந்த அசைவியக்கத்துள் இடதுசாரி முகாமைச் சேராத கலைஇலக்கிய வாதிகள் புறக்கணிக்கப்பட்டமையும் நாங்கள் இங்கு நினைவு கூரவேண்டும்.
தேசிய விடுதலைப் போராட்டம் ஆரம்பமான போது கலை இலக்கிய அசைவியக்கம் என்பது  நுகர்தலுக்கானது (consuming) என்ற நிலையில் இருந்து மக்களை இயக்கமடையச் (mass mobilization) செய்வதற்கானதாக மாறத்தொடங்கியது
இந்த மாற்றத்தைக் குறிப்பாக ஈழத்துக்கவிதை இயக்கத்திலும் ஈழத்து நாடக இயக்கத்திலும் ஈழத்து இசைப்பாடல் இயக்கத்திலும் தெளிவாகக் காணக்கூடியதாக இருந்தது.
உதாரணமாக  வாசிப்பதன் மூலம் அல்லது முன் உரைக்கப்படுவதன் மூலம்( poetry reading) நுகரப்படுகிற கவிதை என்னும் இலக்கியம் மக்களை எழுச்சி கொள்ள வைக்கிற கவிதாநிகழ்வுவென்கிற கவிதைஅளிக்கை முறைமையாக வடிவம் கொண்டது. இந்தக்கவிதா நிகழ்வில் பல்வேறு கவிஞர்களின் கவிதைகளும் கவிதைத்துண்டுகளும் ஒரு மூலக்கருவின் உருவடிவமாக தொகுக்கப்படுகின்றன. கவியரங்குகளில் கவிதை வாசிக்கப்படும் போது  கூடி நின்று ஆனால் தனித்து நுகர்தலே நிகழ்கிறது. ஆனால் கவிதாநிகழ்வில்  உணர்வுகள் ஒருவரில் இருந்து ஒருவருக்குப் பரவி கூட்டுணர்வும் கூட்டெழுச்சியும் நிகழ்கிறது. இது எல்லா அளிக்கைக் கலைகளுக்கும் (நாடகங்களுக்கும்) பொருந்தும். நாடக இயக்கத்துள்ளும் இந்த மாற்றம் பிரக்ஞையுடன் நிகழ்ந்தது.
இலங்கைத் தமிழ் வானோலியினூடாக மெல்ல மெல்ல வளரத் தொடங்கியிருந்த ஈழத்து மெல்லிசையால் தென்இந்திய சினிமாப்பாடல்களின் பிடியில் இருந்த எங்களை முற்றிலுமாக விடுவிக்க முடியாதிருந்தது. ஆனால் போராட்ட எழுச்சியுடன்  தேசிய விடுதலை எழுச்சிப்பாடல்கள்  மெல்ல மெல்ல உருவாகத் தொடங்கி மக்களை அணுகத்தொடங்கிய போது இந்த நிலை மாறத்தொடங்கியது.
இந்தக்காலத்துள் எமது கலை இலக்கிய அசைவியக்கத்துள் நிகழ்ந்த இன்னுமொரு மாற்றத்தையும் கவனிக்க வேண்டும் படைப்பவனுக்கும் நுகர்பவனுக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு குறிப்பாக அளிக்கைக்கலைகள் முயற்சி செய்யத் தொடங்கின..
செவ்வியற்கலைகள்  எனப்படுகிற பரதம் கர்நாடக சங்கீதம் போன்றவைகளும் கூட ஒரளவுக்கு தங்களது ஆச்சாரங்களில் இருந்து வெளியேவரத்தலைப்பட்டன. பரத கதகளி மற்றும் கர்நாடக இசைக்கலைஞர்கள் கூட விடுதலை பற்றிய எண்ணக்கருக்களை தமது படைப்புகளில் கொண்டுவர உந்தப்பட்டனர்கலைஞர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளல் என்பதற்கு மேலாக விடுதலையுணர்வை நுகர்பவருக்கு (மக்களுக்கு) கொண்டு செல்ல வேண்டும் என்ற உணர்வு ஏற்படத்தொடங்கியது.
இந்த எழுச்சிக்குள்  இன்னமும் ஒன்று நிகழ்த்தொடங்கியது. தேசிய எழுச்சி என்பதற்குள் தனிமனிதப்பெறுமானங்கள் அமுக்கப்பட அல்லது மறைக்கப்பட அல்லது முக்கியமற்றதாகக் கருதப்படத்தொடங்கின. காதலில் இருந்து எல்லா வகையான நுண்மையான மனித உணர்வுகளும் தேசிய விடுதலையை மையப்படுத்திப் பார்க்கப்படுபவையாக  மாறின. இது தேசிய விடுதலையின் பேரால் தனிமனித விழுமியங்களை மீறும் அதிகாரத்தை அதனைக் கையில் எடுத்துக்கொள்பவர்களுக்கு வழங்குமளவுக்குச் சென்றது. (இது சரியா தவறா என்ற கேள்வியும் ஆராய்வும் பிறிதொரு கட்டுரைக்குரியது)
இங்கே மக்கள் மீதான அதிகாரத்தை எடுத்துக்கொள்பவையாக விடுதலை அமைப்புகள் அல்லது ஸ்தாபனங்கள் மாறுகின்றன. ஆனால் எந்தச் சூழ்நிலைகளுக்குள்ளும் தனிமனித உணர்வுகளும் உரிமைகளும் பற்றிய பிரக்ஞை கொண்ட படைப்பாளிகளும் அவர்களுக்கான சனநாயகமும் இருப்பது அவசியமானது. ஏனெனில் ஒரு சமூகத்தின் விடுதலை என்பது அந்த சமூகத்தின் அங்கமாக இருக்கிற ஒவ்வொரு உயிரினதும் விடுதலையையே குறிக்கிறது. பொது நலனையும் தனிமனித நலனையும் சனநாயகத்தினதும் மனித உரிமைகளினதும் ஓளியில் விளங்கிக்கொள்ளாத போராட்டம் உண்மையான விடுதலையை நோக்கி நகராது. எனவே பொதுநலன்களுக்கும் அமைப்பு அல்லது ஸ்தாபனத்தின் நலன்களுக்கும் தனிமனித நலன்களுக்கும் இடையில் நிகழும் இடைத்தாக்கங்களை புறனிலையாக நின்று அவதானித்து அறிந்து உணர்ந்து வெளிக்கொண்டு வரக்கூடிய சிந்தனைக்கலாசாரத்துக்கும் விடுதலைப்போராட்டம் ஒன்று தளம் கொடுக்க வேண்டும். உண்மையிலும் இந்தத்தளம் எந்த ஒரு விடுதலைப் போராட்டத்தினதும் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக இருக்கவேண்டும். விடுதலையை அறை கூவிப் பிரச்சாரம் செய்யும் கலை இலக்கிய அசைவியக்கத்துக்குச் சமாந்தரமாகவே விடுதலையின் மானுட விழுமியங்கள் குறித்த அறிவுவயப்பட்ட விழிப்புணர்வையும் தொடர் விமர்சனத்தையும் கொண்ட கலை இலக்கிய அசைவியக்கத்திற்கான சனநாயகமும் இருக்க வேண்டும். இந்தச் சனநாயகம் எங்களது சொந்த அதிகாரம் எப்படி  எங்கள் மீது தொழிற்படுகிறது என்பதை அவதானித்தபடி இருக்கும்.

தமிழ் மக்களின் மீதான இலங்கை அரசின் அதிகாரம் என்பது எதிரி அதிகாரம். (இங்கே நான் இலங்கையில் சிறுபான்மை இனங்களையும் உண்மையாக உழைப்பவர்களையும் ஒடுக்கிக்கொண்டிருக்கும்  பிற்போக்குச் சிங்களப் பேரினவாத அதிகாரத்தையே எதிரி என்கிறேன்.) தமிழீழ விடுதலைத்தாபனங்கள் எங்களின் மீது செலுத்த முயன்ற அதிகாரம் என்பது தமிழ் மக்களின் சொந்த அதிகாரம். இங்கே முக்கியமான ஒரு அம்சத்தைக் கவனிக்க வேண்டும். எதிரியின் அதிகாரம் எங்களின் மனவெளிகளுக்குள் நுளைவதில்லை எதிரியின் அதிகாரத்திற்கு அஞ்சுவோம் அல்லது அஞ்சாமல் விடுவோம் ஆனால் எதிரியினால் எமது மனவெளியில் நிகழ்பவைகளைக்கட்டுப்படுத்த முடியாது. ஆனால் எமது சொந்த அதிகாரம் எமது மனவெளிக்குள் இலகுவாக நுளைந்துவிடும் அப்பாவைப்போல ஆசிரியரைப்போல  மருத்துவரைப்போல சாத்திரியைப்போல சிலவேளை காதலைப் போல அல்லது காமம் போல கூட நுளைந்து விடும்.
……தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக