பின்பற்றுபவர்கள்

31 மே, 2008

இலங்கையின் ஊடகத்துறையும் அது எதிர்கொள்ளும் சவால்களும்:

உலகத்தமிழ்ச் செய்திகள் என்னும் இணையத்தளத்தில் பரிபூரணன் என்பவர் எழுதிய கட்டுரையை இங்கு இணைத்துள்ளேன்

இலங்கையின் பிரபல ஊடகவியலாளர் அய்யாத்துரை நடேசன் கொல்லப்பட்டு இன்று 4 வருடங்கள் பூர்த்தியாகின்றன. 2004 ஆம் ஆண்டு ஒரு திங்கட்கிழமை காலை 8 மணியளவில் தனது வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது ஆயுததாரிகளினால் அவரது உயிர்காவுகொள்ளப்பட்டது. 2002 ஆண்டு செய்து கொள்ளப்பட்ட சமாதானம் மெல்ல மெல்ல செத்துக்கொண்டிருந்த காலப்பகுதி அது. இன்று அரசியல் அனாதையாக்கப்பட்டுள்ள ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க கோலோச்சியகாலம் அது. விடுதலைப் கிழக்கின் தனித்துவம்பேசி புலிகள் அமைப்பில் இருந்து கருணா வெளியேறிய மிகப்பரபரப்பான காலம் அது. வீரகேசரி,ஐ.பீ.சீ மற்றும் உள்நாட்டு இலத்திரணியல் ஊடகங்களில் செய்தியாளராக கடமையாற்றிய நடேசன் சில நூல்களையும் வெளியிட்டுள்ளார். ரிச்சார்டீ சொய்சா முதல் நிமலராஜன், நடேசன், சிவராம், ரஜிவர்மன், ரேலங்கி செல்வராஜா, றமேஸ்நடராஜா, பாலநடராஜஐயர், சுகிர்தராஜன் சம்பத் லக்மால் என நீண்டு இறுதியாக மே28 ஆம் திகதி தேவகுமாரன் என 15க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களை இலங்கை பலிகொண்டிருக்கிறது. சில ஊடகவியலாளர்கள் காணமல் போனவர்களாகவே உள்ளனர். 2005 ஆம் ஆண்டின் பின் மே 31 2008 வரை யாழ்ப்பாணத்தில் மட்டும் 9 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டு விட்டனர். இப்போ யாழ் குடாநாட்டில் ஊடகத்துறையின் பக்கம் தலைவைத்து படுக்கக் கூட ஊடகத்துறையினர் பயப்படுவதாக ஒரு ஊடகவியலாளர் கருத்து வெளியிட்டுள்ளார். அங்கு மட்டும் அல்ல இலங்கையின் எப்பாகத்திலும் இன்று ஊடகத்துறை தனது பணியை சுதந்திரமாகச் செய்ய முடியாதவாறு அராஜகம் தலைவிரித்தாடுகிறது. ஆரசாங்கத்திற்கு சார்பான திவயின பத்திரிகையின் பாதுகாப்பு பத்தி எழுதாளரின் பேனாகூட பாதுகாப்பு குறித்து எழுத வேண்டாம் என்ற கட்டளைக்கு உட்பட்டுள்ளது. முன்பு வடக்கு கிழக்கு ஊடகவியலாளர்களுக்கு மட்டுமே பிரச்சனை என்ற கால் மாறி இலங்கை பூராகவும் ஊடகவியலாளர்கள் கொடூரமாக அடக்கப்படுகிறார்கள், பழிவாங்கப்படுகிறார்கள். இக்பால் அத்தாஸ் முதல் ஹேயித் நொயார் வரை ஏராளமான ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டும், கொலைப்பயமுறுத்தலுக்கு உள்ளாகியும் உள்ளனர். வரலாற்றில் முதன்முறையாக அரசாங்க ஊடகமான ரூபவாஹினிக்குள் ஒரு அமைச்சர் புகுந்து ஊடகவியலாளர்களை தாக்கி அச்சுறுத்தி உள்ளார். அதேபோல் லேக்கவுஸ் பத்திரிகையின் இரு ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு செயலரால் எச்சரிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இலங்கையின் ஊடகத்தொறையின் செல்நெறி குறித்து சற்று பின்னோக்கிப் பார்பது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

இலங்கையின் ஊடகத்துறை என்பது மொழிசார்ந்த இனம் சார்ந்த மதம்சார்ந்த ஒன்றாக தற்போது வளர்ச்சி பெற்றுள்ளது. ஊடகம் என்ற பொது வரையறையைத் தாண்டி குறுகிய வட்டத்துள் தனது செயற்பாட்டை குறுக்கிக்கொண்டுள்ளது.

1983களின் பின் எழுச்சிபெற்ற தமிழ்தேசிய விடுதலைப்போராட்டமும் குறிப்பாக ஆயுத எழுச்சியும் தமிழ் சிங்களம் என்ற மொழிவாரியான இனக் கூர்மையை, இனரீதியான பிரிவினையை கூர்மை அடையச் செய்தன.

இதனால் ஆரம்பத்தில் இரண்டு பிரதான இனங்களுக்கிடையிலான முரண்பாட்டை வெளிப்படுத்தி வந்த ஊடகங்கள் 1990களில் யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம்கள் பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட பின்னர் மூவினங்களுக்கிடையிலான முரண்பாடுகளை வெளிப்படுத்த முயற்சித்தன.

எனது அறிவுக்கு எட்டியவகையில் 1990களின் பிற்பாடு இலங்கையின் பிரதான 3 இனங்களான சிங்கள, தமிழ், முஸ்லீம் இனங்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஊடகங்கள் எழுச்சிபெறத் தொடங்கின. இந்த புதிய ஊடக கலாச்சாரம் அச்சு ஊடகங்களிலேயே அவதானிக்க முடிந்தது.

சிங்கள மொழிசார்ந்த அச்சு ஊடகங்கள் பல சிங்கள தேசியவாதத்த்தை நியாயப்பாடுத்துவதாகவும், தமிழ் மொழி சார்ந்த ஊடகங்கள் தமிழ்தேசியவாதத்தை நியாயப்படுத்துகின்றனவாகவும் தம்மை அடையாளப்படுத்தின.

தழிழ்மொழியை தாய்மொழியாகக் கொண்டபோதும்; இனரீதியாக முஸ்லீம் கலாசாரத்த்தை கொண்ட முஸ்லீம்கள் தமது தேசியவாதத்தை முன்னிலைப்படுத்தும் அச்சு ஊடகங்களை ஆரம்பிக்கலாயினர்.

இந்த செயற்பாடுகள் காலப்போக்கில் தமது தனித்துவங்களை உறுதிப்படுத்துவதற்கான அமைப்பியல் சார்ந்த நடவடிக்கைகளாகவும் மாற்றம் பெற்றன.

அதனால் 1990களின் பிற்பகுதியில் தமிழ் ஊடகவியலாளர் சங்கங்கள், முஸ்லீம் ஊடகவியலாளர் சங்கங்கள், சிங்கள ஊடகவியலாளர்களை அறுதிப் பெரும்பான்மையாகக் கொண்ட ஊடகசங்கங்கள் என பல தோற்றம் பெற்றன.

இது இலங்கையின் ஊடகத்துறையில் ஒரு பாரிய சிக்கலான அல்லது முரண்பட்ட விடயமாக காணப்படுகின்றது.

குறிப்பாக பக்கசார்பற்ற தகவல்களை வழங்குகின்ற தமது கடப்பாட்டில் இருந்து விலகிச் செயற்படும் பல ஊடகங்கள் பக்கச் சார்பான, அல்லது தாம் சார்ந்த இன, மொழி, மத, பண்பாட்டு கலாசார விழுமியங்களை முதன்மைப்படுத்தி செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிடும் மரபு சார்ந்த அல்லது அடிப்படைவாத நிலைப்பாடுகளை எடுத்துள்ளன.

இந்த துர்ப்பாக்கிய நிலையானது, உரியதும் முக்கியமானதுமானதும் சரியானதுமான தகவல்கள் மக்களை சென்றடைய முடியாத நிலையைத் தோற்றுவித்துள்ளன.

இலங்கையின் ஊடகத்துறையின் அடுத்த பிரதான பிரச்சனை அரசாங்க ஊடகங்கள் அல்லது அரசாங்கத்திற்கு சார்பான ஊடகங்களின் செயற்பாடுகள்.

மறுபக்கம் தனியார் ஊடகங்கள் அல்லது அரசியல் கட்சிகளைச் சார்ந்த அல்லது அவற்றிற்கு சார்பான நிலைப்பாட்டை எடுத்துள்ள ஊடகங்களின் செயற்பாடுகள்.

இந்த நடைமுறையானது இலங்கையில் எல்லாத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊடக ஒழுக்கவியற் கோட்பாடு என்ற ஒன்றின் இன்றியமையாத தேவையை ஏற்படுத்தி உள்ளது.

காரணம் இலங்கை சுதந்திரம் அடைந்து அரை நூற்றாண்டைக் கடந்த பின்பும் இலங்கையின் ஊடகத்துறையினர் அனைவரும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது ஏற்றுக்கொள்ளக் கூடிய பொதுவான ஊடக ஒழுக்கவியற் கோட்பாடு இல்லை என்றே கூறலாம்.

இன்னொரு புறம் இலங்கையில் 1980களின் ஆரம்பத்தில்; தோற்றம் பெற்ற ஆயுதப் போராட்டத்தின் ஊடு, பல ஆயுத அமைப்புக்கள் உருவாக்கம்பெற்றன. இந்த அமைப்புகளில் முன்னர் உறுப்பினர்களாக இருந்து, அவற்றில் இருந்து விடுபட்டு தற்பொது ஊடகவியலாளர்களாக பலர் மாறி உள்ளனர். அதேவேளை தற்போதும் உறுப்பினர்களாக இருப்பவர்கள் பலரும் தமது அமைப்புக்களின் ஊடகங்களிலும் பிற ஊடகங்களிலும் ஊடகவியலாளர்களாகவும் தம்மை அடையாளப் படுத்தியுள்ளனர்.


இன்னும் சிலர் ஊடகவியலாளர்களாக உள்ள அதேநேரம் மறைமுகமாக ஆயுத அமைப்புக்களுடன் உறவை வைத்திருப்பவர்களாக காணப்படுகின்றனர்.

மேற்குறித்த இந்த விசேட பண்பு தமிழ் ஊடகத்துறையிலேயே காணப்படுகிறது.

இதனால் ஊடகத்துறையில் இவர்கள் தொழிற்படும் போது மாற்று தரப்பினர் இவர்களை அவர்களின் பின்புலத்தோடு இணைத்து சந்தேகத்தோடு நோக்குகின்றனர்.

இது இவர்கள் என்ன சொல்ல வருகின்றனர் என்பதற்கு அப்பால் இவர்கள் யார் இவர்களின் பின்புலம் என்ன என்ற விடயங்கள் முன்னிலைப்படுத்துகின்றன. அதனால் இவர்களினால் வெளியிடப்படும் கருத்துக்களுக்கான சுதந்திரம் மறுக்கப்படுகின்ற நிலமை காணப்படுகின்றது.

இந்த முரண்பாடும் கடந்த காலத்தில் எம்மில் பலர் கொல்லப்பட்டும் காணாமல் போவதற்குமான பிரதான காரணிகளில் முக்கியம் பெறுகின்றன.

மறுபுறம் தமிழ் மக்களின் பிரச்சனைகளை கூறுகின்ற, அல்லது வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட தமிழ் பிரதேசங்களின் பிரச்சனைகளை வெளிக்கொணர முனையும் ஊடகவியலாளர்களையும், ஊடகங்களையும் புலிகளாக அல்லது புலி ஆதரவாளர்களாக அல்லது அதற்கும் மேலாக தேசத் துரோகிகளாக பார்க்கும் தென்பகுதியின் நிலை.

ஆரம்பத்தில் தமிழ் ஊடகங்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த இந்த பார்வை தற்போது அனைத்து ஊடகங்களுக்குமே பொதுநிலைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேபோன்று ஆயுதப் போராட்டதரப்புகளை விமர்சிக்கும் அல்லது அத்தரப்பினரின் உண்மை நிலைகளை வெளிக்கொணர முற்படும் ஊடகங்கள் அரச சார்பு ஊடகங்களாகவும் அல்லது தமது நிலைப்பாட்டுக்கு துரோகம் இளைப்பவர்களாகவும், போராட்டத்தை காட்டிக் கொடுப்பவர்களாகவும், அல்லது தமது ஆயுதக் குழுவை காட்டிக் கொடுப்பவர்களாகவும் நோக்கப்படும் நிலை தொடர்கிறது.
இதில் விசேடமான பிறிதொரு பாதிப்பை தமிழ் ஊடகத் துறை எதிர் கொள்கிறது. குறிப்பாக யுத்த பிரதேசங்களிலோ அல்லது வடகிழக்கிற்கு வெளியிலோ தமிழ் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டோ, காணாமல் போயோ, கொல்லப்பட்டோ இருப்பின் அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு சார்பானவர்கள், விடுதலைப் புலிகளின் ஒற்றர்கள் என பல சிங்கள ஊடகங்களும் ஆங்கில ஊடகங்களும் செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிடுகின்றன. இது ஊடகத்துறையினருக்கு இடையிலேயே உள்ளகரீதியான முரண்பாட்டை வெளிப்படுத்தி நிற்கின்றன.

மறுபுறம் சிங்கள ஆங்கில ஊடகங்களை நோக்கினால் அரச சார்பு, அரச எதிர்ப்பு ஊடகங்கள் என அடையாளப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக அரசாங்கத்தின் செயற்பாடுகள், அரசாங்க செயற்பாட்டாளர்களின் ஊழல்கள், மக்கள் விரோத செயற்பாடுகள் என்பவற்றை விமர்சிக்கும் ஊடகங்கள் அரச விரோத அல்லது தேசவிரோத ஊடகங்களாக முத்திரை குத்தப்படுகின்றன. இதனால் பல ஊடகவியலாளர்கள் உடல், உள பாதிப்புகளுக்கும், ஆபத்துக்களுக்கும் முகம் கொடுக்கின்றனர்.
எனினும் ஒப்பீட்டு ரிதியில் இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்களே பாரிய ஆபத்துக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த ஆபத்துக்கள் ஆளும் தரப்புகளாலும் ஆயுததரப்புகளாலும் ஏற்பட்டு வருகின்றமையை எவரும் மறுக்க முடியாது.

இதனால் 2004 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஆரப்பத்தில் கிழக்கில் இருந்தும் 2005 ஆண்டின் பின் வடக்கில் இருந்தும் 25ற்கும் மேற்பட்ட தமிழ ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.
இன்னும் பலர் தமது ஊடக தொழிலை விட்டு வேறு தொழில்களுக்கு மாறி உள்ளனர்.

இன்னும் பலர் கொல்லப்பட்டுள்ளனர். சிலர் காணமால் போயுள்ளனர்.

இன்று வடக்கு கிழக்கில் இருந்து சுயாதீன செய்திகளை பெறுவது என்பது மிகவும் சிரமமானதொன்றாகியுள்ளது.

சிங்கள ஆங்கில மொழிமூல ஊடகவிலாளர்கள் சிலரும் தெற்கில் ஆபத்துகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கையின் நடைமுறையில் உள்ள 1978 ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பில் ஊடக சுதந்திரம் குறித்த வரையறைகள் அல்லது மீறப்படும் சந்தர்ப்பங்களில் அதற்கான பரிகாரம் என்பன குறித்த தெளிவான வரையறைகள் செய்யப்படவில்லை.

அரசியல் அமைப்பின் 10 முதல் 17 வரையிலான உறுப்புரையில் அடிப்படை உரிமைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளன. இதில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அரசியல் அமைப்பில் ஊடக சுதந்திரம் குறித்து விசேட உறுப்புரைகள் எவையும் உள்ளடக்கப்படவில்லை.

அரசியல் அமைப்பின் 17 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் சுதந்திர ஆணைக்குழுக்கள் அமைப்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒன் று ஊடகசுதந்திர ஆணைக்குழு. எனினும் இந்த விடயம் ஆளும் தரப்புகளால் பிற்போடப்பட்டு வருவதனால் நடைமுறையில் அதனைக் காண்பது இயலாத விடயமாகி உள்ளது.

எனினும் நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பவற்றின் கீழ் நாட்டின் பாடுகாப்பு, இன ஐக்கியம், சமூகப் பாதுகாப்பு, மதரீதியிலான சுமூகம், பொருளாதாரம், சுகாதாரம் உள்ளிட்ட நலன்களுக்காக ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்த வளிஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூல் நேரடியான ஊடக தணிக்கைகளை ஏற்படுத்த முடியும்.

தவிரவும் உளம்சார்ந்த அல்லது மனோரீதியான மூளைச் சலவை செய்வதன் மூலமும ஊடகங்கள் மீதான மறைமுக அழுத்தங்கள் தொடர்கின்றன.

குறிப்பா யுத்தத்தில் ஈடுபட்டுள்ள தரப்பனர் தாம்சார்ந்தவர்களது மனோனிலை பாதிக்கப்படும்படி செய்திகள் வெளியிடுவதனைத் தவிர்க்குமாறு கோருகின்றனர்.

அல்லது யுத்தத்தில் உள்ளவர்கள் மனோரீதியிலான விழ்ச்சியை அடைவதற்கு காரணமாகும் தகவல்களை தவிர்க்கும்படியான கோரிக்கைகளை விடுகின்றனர்.

அதாவது ஊடகங்கள் ஊடக வெளிப்பாடுகள் யுத்தமயமாக்கப்படுகின்றன. யுத்தம் புரிகின்ற ஒவ்வொரு தரப்பினரும்; தமது யுத்த விரிவாக்கத்திற்கு ஊடகங்கள பக்கபலமாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

இந்த நிலையில் இலங்கையின் ஊடகத்துறையானது தற்போது யுத்தகால ஊடக முறைமைக்கும் மெய்யான இயல்பு நிலைமைக்கும் இடையில் இரண்டும் அற்ற சூழலில் தொழிற்படும் நிலை உருவாகி உள்ளது.

இங்கு ஒரு ஊடக முறைமையானது யுத்தகாலத்தில் எவ்வாறு செயற்படவேண்டும், ஒரு மெய்யான சூழலில் எவ்வாறு தொழிற்பட வேண்டும், இயற்கை அனர்ரத சூழல் ஒன்றில் எவ்வாறு தொழிற்பட வேண்டும் என்ற தொழில்சார் ஊடக முறைமை இதுவரை உருவாக்கப்படவில்லை.

மறுபக்கம் இலங்கையில் தொழில்சார் ஊடகவியலாளர்களும் குறிப்படத்தக்க வகையில் உருவாகவில்லை அல்லது இருப்பவர்களும் அதற்கான வெளிப்பாடுகளை அடையாளப்படுத்த வில்லை.

காரணம் ஊடக கற்கை நெறி பல்கலைக்கழக மட்டங்களில் பட்டப்படிப்பிற்கான கற்கையாக நடைமுறையில் அறிமுகப்படுத்தப்படவில்லை.

தனியார் துறையில் அல்லது பல்கலைக்கழக மட்டத்தில் இருக்கும் ஊடக கற்கை நெறிகள் டிப்ளோமாவாகவும், பட்டபின்படிப்பில் ஊடக தலைப்பை தெரிவு செய்வதாகவும் மட்டுமே உள்ளன.

அத்துடன் ஊடகவியல் என்பது ஒரு நிறுவனமயப்பட்ட வளர்ச்சியை இதுவரை இங்கு பெற்றுக் கொள்ளவில்லை.

மேலைத் தேயத்தில் ஒவ்வொரு நாட்டுக்குமான ஊடக முறைமை என்பது இருப்பது போல் இலங்கையில் இல்லை என்றே கூறலாம். இது இலங்கைக்கு மட்டும் உரிய பிரச்சனை அல்ல். இது 3 ஆம் உலக நாடுகளுக்கே பொதுவான ஒரு இயல்பாகக் கொள்ளலாம்;.

எனவேதான் இலங்கை போன்றதொரு நாட்டில் கற்கை நெறியின் ஊடான நடைமுறையோடு பயிற்றப்பட்ட நிறுவனமயப்பட்ட தொழில்சார் ஊடகவியலாளர்களை உருவாக்க வேண்டும்.
அதன்மூலமே ஊடக ஒழுக்கவியல் என்பதனைக் கட்டிஎழுப்ப முடியும்.

இவ்வாறு ஊடகத்துறை கட்டி எழுப்பப்பட்டால் யுத்தகால சூழல் மற்றும் இயற்கை அனர்த்தங்களின் போது செய்தியிடும் முறைமைகளை அல்லது ஆறிக்ககை இடும் முறைமைகளை அவர்கள் புரிந்து கொள்ளமுடியும். இதன் மூல் ஆபத்து விளைவிக்கும் செய்திகளை எவ்வாறு நாசூக்காக கொடுக்க முடியும் என ஊடகவியலாளர்கள் கற்றுக்கொள்வர்.

இதுமட்டும் பிரச்சனைகளுக்கு தீர்வாகாது. ஊள்நாட்டில் யுத்தகால நிலமையின் போது உடக நிறுவனங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்குமான பாதுகாப்பை எவ்வாறு உத்தரவாதப்படுத்த முடியும் என்ற பொதுவான பாதுகாப்பு முறைமை ஒன்றை சர்வதேசம் உருவாக்க வேண்டும்.

ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமரிக்க பிராந்தியங்களில் உள்ள 3ஆம் உலக நாடுகளில் நிலவுகின்ற உள்ளக மோதல்களின் போது ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் ஆபத்துக்களை உருவாக்குபவர்கள் மீதான கடுமையான நடைமுறை ரீதியிலான அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும். இவை அறிக்கை வடிவில் அல்லாமல் கடுமையான தடைகள், அல்லது தண்டனைகளை விதிக்க வேண்டும். உள்நாட்டில் சுதந்திரமான ஆணைக்குழுக்களை அமைப்பதன் ஊடாக உண்மையானதும், சுதந்திரமானதும், விரைவானதும் விசாரனைகளை மேற்கொள்ள வேண்டும். ஊடகவியலாளர்களின் கடத்தல் காணாமல் போதல், கொல்லப்படுதல் குறித்த உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும். இவற்றின் ஊடு குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். அவர்கள் சட்டத்தன் பிடியில் இருந்து தப்பிப்பதற்கு அதிகாரத்தில் உள்ளவர்கள் துணைபுரிவதனை தடுக்க வேண்டும். இதற்கு உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் விரைந்து நடவடிக்கை எடுக்காவிடின் இலங்கையின் வடக்கு கிழக்கில் மட்டும் அல்லாமல் நாடு பூராகவும் உள்ள ஊடகவியலாளர்கள் பாரிய விளைவுகளை இன்னும் இன்னும் எதிர்கொள்ள நேரிடும் என்பது வெளிப்படை.

பரிபூரணன்
Thanks to Global Tamil News |உலகத் தமிழ்ச் செய்திகள்