பின்பற்றுபவர்கள்

29 ஜூன், 2012

ஒரு பாடல்


மறுகும் மனவெளியில்  ஒரு கனவு வருமோ
இருகனவு தழுவவொரு நிலவு வருமோ

உயிர் வெந்து வாடும் உடல் நின்று தேடும்
மனம் கொண்ட பின்னாலே வருகின்ற மாயம்
களி கொண்டு ஆடும் மொழி நின்று போகும்
இதழ் தின்ற பின்னாலே வருகின்ற மோகம்

மறுகும் மனவெளியில் ஒரு கனவு வருமோ
இருகனவு தழுவவொரு நிலவு வருமோ

கடல் தாண்டிப் போகும் கலம் என்று ஆனாய்
நீ சென்ற பின்னாலே நிலவில்லா மாடம்
விடைபெற்ற நாளும் விழி கொண்ட நீரும்
சுரம் நின்ற பின்னாலே அழுகின்ற கானம்

மறுகும் மனவெளியில் ஒரு கனவு வருமோ
இருகனவு தழுவவொரு நிலவு வருமோ

போர் தின்ற நாடு போய் எங்கு சேரும்
பேய் வந்த பின்னாலே வாழ்விங்கு சாபம்
வாழ் வென்று கூட வீ டொன்று வாடும்
சீர் வந்த பின்னாலே மூச்சொன்று சேரும்.

மறுகும் மனவெளியில் ஒரு கனவு வருமோ
இருகனவு தழுவவொரு நிலவு வருமோ

தேவ அபிரா
22-06-2012

ஈழத்துக் கலை இலக்கிய அசைவியக்கம். முள்ளிவாய்க்காலுக்கு முன்னும் பின்னும் சில குறிப்புக்கள் - பகுதி 3


ஈழத்துக் கலை இலக்கிய அசைவியக்கம். முள்ளிவாய்க்காலுக்கு முன்னும் பின்னும் சில குறிப்புக்கள் - பகுதி 3


ஈழத்தில் வாழ்ந்து அந்த அனுபவங்களையும் துயரங்களையும் மூட்டையாக முதுகில் சுமந்து கொண்டு புலம் பெயர்ந்த படைப்பாளிகள் புலம் பெயர்ந்த சூழலில் தமது கடந்த கால அனுபவங்களை  நின்று நிதானித்துப் புறநிலையாகப் புரிந்து கொள்ளக் கூடிய சாத்தியம் ஏற்படுகிறது. உலகம் இவர்களுக்கு திறந்து விடப்பட்டிருக்கிறது. பரந்துபட்ட வாசிப்பு வேறுபட்ட கலாசாரங்களுடனான இடைத்தாக்கம் என்பனவும் இங்கு இவர்களது  ஆளுமையை வளர உதவி செய்கின்றன.  
புலம் பெயர்ந்த தமிழர்களின் சிந்தனையும் வாழ்வியல் தளமும் புதிய கலாசார அதிர்வுகளை எதிர்கொள்கின்றன  இந்தவகையில் ஈழத்துக் கலை இலக்கியவாதிகளுக்கு இல்லாத உலகம் ஒன்று புலம்பெயர்தமிழர்களுக்கு திறந்துள்ளது. அனேகமான புலம் பெயர்தமிழர்கள் முதலாளித்துவ கலாச்சாரத்துடன் பிணைந்துள்ள ஐரோப்பிய கலாச்சாரத்துள் அல்லது அமெரிக்க கலாசாரத்துள் (பொதுவில் மேற்கத்தைய கலாசாரத்துள்) வாழ்கிறார்கள். இலங்கை போன்ற அரைக்காலனித்துவ அரைப்பிரபுத்துவ நாடுகளில் இல்லாத சனநாயகத்தைப் புலம்பெயர்ந்த நாடுகள் கொண்டிருக்கிறன. இது முதலாளித்துவ சனநாயகம் எனப்படுகிறது. ஒரு அமைப்பு(system) பொருளாதார ரீதியிலும் கலாசாரரீதியிலும் நன்றாக ஆழமாக வேரூன்றி இருக்கிற போது அதனை இலகுவாக அசைக்க முடியாதென்கிற நம்பிக்கை வரும்போது வழங்கப்படுகிற சுதந்திரம் என இதனைப்பார்க்கலாம். ஆனால் இந்த முதலாளித்துவ அமைப்பும் கலாசாரமும் இன்றைக்கு நிலவுகிற உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதன் காரணமாக தமது வேர்கள் ஆட்டம் காணுவதைக் கண்டு அச்சம் மொண்டு தமது உண்மையான கோர முகத்தை வெளிப்படுத்துவதைக் காண்கிறோம். ஆனாலும் இலங்கை போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இங்கு சுதந்திரம் நிலவுகிறதென்பதை உணரமுடியும்.
மேலைத்தேச நாடுகள் எதிர்கொள்கிற தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமை வெளிநாட்டவர்களுக்கு எதிரான தேசிய உணர்வை ஐரோப்பியநாடுகளில் வளர்க்கிற அதே நேரம் முதலாளித்துவத்தின் எதிர்மறையான பக்கங்களையும் கொடூரமான சுரண்டலையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
புலம் பெயர் தேசத்திலேயே பிறந்து வளரும் இரண்டாம் தலைமுறை கலை இலக்கியகர்த்தாக்கள் இந்தத் தளத்தில் நின்றுதான் தங்கள் அனுபவங்களை மீள்வாசிப்புச் செய்கிறார்கள்.
தனிமனித விழுமியங்கள் பற்றிய நுண்ணுணர்வு, குடும்பத்தில் பெண்ணின் பாத்திரம், இளம்பராயத்தினருக்கிருக்கிற உணர்வுகள் மற்றும் தெரிவுகள் பற்றிய புரிதல்கள் பல்கலாச்சாரக்கலப்புக்கள் பற்றிய புரிதல்கள், கணவனில்லாத தனித்தாய் குடும்பம் போன்ற விடையங்கள் புதிதாக வரும் படைப்பாளிகளின் படைப்புகளின் கருப்பொருளாவதைக்காண்கிறோம். இந்தப்படைப்புகளின் இலக்கிய அல்லது கலைத்தரம் வளர்ச்சிக்கு உட்படவேண்டியதெனினும் மாற்றங்கள் நிகழ்த்தொடங்கியிருக்கின்றன.
முள்ளி வாய்க்காலின் பின்பு ஒருமையான தேசியவாதம் ஏற்படுத்தியிருந்த இறுக்கமான ஒருமுகமான சூழ்நிலை தமிழ்ச் சமூகத்தின் புறவெளியிலும் படைப்பாளிகளின் அகவெளியிலும் அற்றுப்போகிறது. அதே நேரம் தமிழீழப்பிரதேசங்கள் எனச் சொல்லப்படுகிற  பிரதேசங்களுக்கு வெளியே  குறைந்தது கடந்த இருபது வருடங்களுக்கு நின்றிருந்த  இலங்கை அரசின் இராணுவ அரசியல் மற்றும் சமூக கலாசார ஒடுக்குமுறைகள் முன்பை விடவும் வலிமையானதாக எமது புறவெளியினுள் வந்து நிற்கின்றன. தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் மண்விடுதலையை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட சனநாயகமற்ற வெளி அகன்றபோது படைப்பாளிகளைக் கட்டிப்போட்டிருந்த  மன இறுக்கமும் அகன்று போகிறது. எனவே தமிழீழவிடுதலைப்போராட்டம் குறித்த விமர்சனங்களைத் தாங்கிய படைப்புக்கள் வெளிவரத் தொடங்குகின்றன. குறிப்பாக விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களாக அல்லது ஆதரவாளர்களாக அல்லது சக பயணிகளாக இருந்தவர்களின் படைப்புக்கள் வெளிவரத் தொடங்குகின்றன. ஆனால் இந்த அதிஸ்டம் ஒரு சிலருக்கே வாய்த்திருக்கிறது. பல விடுதலைப்புலிப்படைப்பாளிகள் போரில் மடிந்து போனார்கள் அல்லது அரசின் வதைமுகாம்களுக்குள் சிதைந்து கொண்டிருக்கிறார்கள்.
இங்கே நடந்து முடிந்த தேசிய விடுதலைப்போராட்டத்தின் மீதான விமர்சனங்களைத்தாங்கி வருகிற எங்களை வாசிக்கத் தூண்டுகிற மொழியை கொண்டிருக்கிற படைப்புகளின் முக்கியமான ஒரு பண்பாக அங்கதம் இருப்பதைக்காண்கிறோம்.
சிறுபான்மையினத்தின் மீதான அரச ஒடுக்குமுறை இருக்கும் வரை  சிறுபான்மை இனங்களின் எதிர்ப்போராட்டத்தில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து கொள்ளும் ஒரு படைப்பாளி ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தைக் கொச்சைப்படுத்தாமல் அதேவேளை எல்லோரையும் திரும்பிப்பார்க்க வைக்கும் வகையில் விமர்சனங்களைச் செய்வதற்கு அங்கதம் உதவும். ஆனால் இதே அங்கதத்தினை அரசியல் இலக்கற்ற அல்லது சமூகப்பிரக்ஞை அற்ற நையாண்டியாகவும் கையாள முடியும். அங்கதத்தைக் கையில் எடுத்துக்கொண்ட படைப்பாளிகளின் படைப்புகளுள் இந்த அம்சங்களையும் இனம் காண முடியும்.
தமிழ் தேசிய விடுதலைப்போராட்டம் செய்த தவறுகளைப் புரிந்து கொண்டாலும் இலங்கை அரசின் படு மோசமான அரசியல் இராணுவ கலாசார ஒடுக்கு முறையினை இன்னமும் அகவெளியிலும் புறவெளியிலும் எதிர்கொள்பவர்கள் அதனையே உயர்த்திப்பிடிக்கும் படைப்புக்களையும் கொண்டு வருகிறார்கள். அதுவே முக்கியமானதென்றும் நினைக்கிறார்கள்.
இலங்கையின்  வடக்கு கிழக்கில் நிலவும் சமூக பொருளாதார அரசியற் சூழ்நிலைகளின்  யதார்த்தம் இவர்களின் நிலைப்பாட்டை நியாயப்படுத்துகிறது.
முள்ளிவாய்க்காலின் பின்பு ஈழத்தில் பல்வேறு கலை இலக்கிய முயற்சிகள் நிகழ்கின்றன. இலங்கை அரசின் அரசியல் மற்றும் இராணுவப் பிரசன்னங்களை சிங்கள மேலாதிக அரசின் ஒடுக்குமுறை அம்சங்களை வெளிப்படையாக விமர்சிக்கும் எதிர்க்கும் கலை இலக்கியப் படைப்புகள் இலங்கையில் தமிழ்ச் சமுகத்தை இயக்கமடையச் செய்யும் நிலையை நோக்கி நகர முடியாது. அதற்கு தற்போது சாத்தியமுமில்லை. அந்தளவுக்கு சனநாயக வெளியொன்று இருப்பதாகவும் தெரியவில்லை. (அவ்வாறான சனநாயக வெளி ஒன்று இருக்குமென்றால் தமிழீழத்திற்கான தேவையும் இருக்காது.) தேசிய விடுதலைப்போராட்ட காலத்தில் தொழிற்பட்ட முறைமையில் படைப்பாளிகள் இலங்கையில் தொழிற்படமுடியாது. அவ்வாறு செயற்பட விரும்புபவர்கள் அரச இராணுவப் புலனாய்வுக்குழுவினரின் அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும்.
ஆனால் மக்களின் தனிப்பட்ட நுகர்வுக்கான கலை இலக்கிய வெளி ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த நுகர்வு வெளியில் பல படைப்பாளிகள் தங்களை வெளிப்படுத்திக்கொள்கிறார்கள். இங்கே விடுதலைப்போராட்ட காலத்தில்  சகபயணிகளாக இருந்தவர்களும் புதியவர்களும் வெளிப்படுகிறார்கள். இங்கே படைப்புக்களை வெளிப்படுத்தல் தம்மை வெளிப்படுத்தல் வாசகர்களை அல்லது இரசிகர்களை நுகரத் தூண்டுதல் என்பதே பிரதானமான  நோக்கமாகிறது.  கலை இலக்கியத்தளத்தில் ஏற்கனவே அறியப்பட்ட அல்லது இயங்கிக் கொண்டிருக்கிற படைப்பாளிகளின் உள்ளார்ந்த நோக்கமாகக் கலந்துரையாடல் அனுபவங்களை இரைமீடல் விமர்சனம் செய்தல் சுய விமர்சனம் செய்தல் பரஸ்பரக் கல்வியூட்டல் போன்றவை இருக்கின்ற போதும் அவை பிரதான நீரோட்டத்துக்குள் இறங்கிப் பரந்து பட்ட மக்களைச் சென்றடைவதற்குச் சந்தைப்படுத்தல் என்கிற ஒரு வழிமட்டுமே இருக்கிறது. இந்தப்படைப்பாளிகள்  தங்களைச் திறந்த பொருளாதாரத்தின் சந்தைக்குள் இறக்கிக்கொள்ளவேண்டி இருக்கிறது.
அது மட்டுமல்ல ஒரு சமூகத்தினுள் இயங்கிக் கொண்டிருக்கும் பல்வேறு சக்திகளும் கூறுகளும் தங்களுக்கான தங்களது கலை இலக்கியப்படைப்புக்களை உருவாக்கவும் சந்தைப்படுத்தவும் முனையும்.  முனைகின்றன. தமிழ்ச் சங்கம் கம்பன்கழகம் திருமறைக்கலாமன்றம் போன்ற அறியப்பட்ட நிறுவனங்கள் தொடங்கி அறியப்படாத எண்ணுக்கணக்கற்ற  சக்திகள் வரை தமது கலை இலக்கியப்படைப்புக்களை வெளிக்கொண்டுவர முனையும். இங்கு இன்னுமொரு முக்கியமான அம்சத்தையும் கவனிக்க வேண்டும் இலங்கையில் தமிழர்களினால் முன்னெடுக்கப்படும்  பெருமெடுப்பிலான கலை இலக்கிய நிகழ்வுகள் குறித்து அனேகமாக எதிரான கருத்துக்களே முன்வைக்கப்பட்டு வருகின்றன. இலங்கையில் நிகழ்வதனால் மட்டுமே ஒரு நிகழ்வை எதிர்த்தல் என்னும் போக்கு ஆரோக்கியமானதல்ல ஆனால் இந்த நிகழ்வுகளின் உள்ளடக்கம் இவற்றின் நோக்கம்  போன்றவற்றை நன்கு ஆராய்ந்த பின்பு  விமர்சனங்களை ஆரோக்கியமான முறையில் முன்வைக்கவேண்டும்
முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான  சூழ்நிலையில் அரசின் நேரடியான மற்றும் மறைமுகமான ஆதரவுடன் முன்னெடுக்கப்படுகிற கலை இலக்கிய நிகழ்வுகளில் இன நல்லிணக்கம் என்னும் போர்வையில் இலங்கைத் தமிழர்களின் கலைகள் என்ற அடையாளம்  நீக்கப்பட்டு இலங்கைக்கலைகள் என்னும் அடையாளம் ஏற்படுத்தப்படவேண்டும் என்னும் கருத்தியல் உருவாக்கப்பட்டு வருகிறது.
நாங்கள் ஈழத்தமிழர்களாக இருக்க விரும்பினோம் அது இல்லை என்கிறபோது குறைந்த பட்சம் இலங்கைத்தமிழர்களாகவாவது இருப்போம் எனப் போரில் நொந்த ஈழத்தமிழர்கள் நினைக்கும் போது  இந்த இன நல்லிணக்கம் என்கிற சமூக ஆக்கிரமிப்புப் போர்வை வருகிறது.
போர் ஓய்ந்து இனங்களுக்கிடையிலான ஊடாட்டம் அதிகரித்துள்ள நிலையில் பரஸ்பர அங்கீகாரமும் மரியாதையும் மிக்க கலை இலக்கிய ஊடாட்டம் இனங்களுக்கிடையில் மிகவும் அவசியமானது.
ஆனால் ஒரு இனத்தின் அடையாளங்களை மட்டும் அழித்து விட முனையும் போக்கின் பெயர் இன நல்லிணக்கம் அல்ல. உண்மையான சனநாயகம் இல்லாத பல்லினச் சமூகங்கள் வாழும் நாட்டில் சிறுபான்மை இனங்கள் தமது  அடையாளங்களை இழந்து வருகின்றன. துரதிருஸ்ட வசமாக நாங்களும் அத்தகைய இனமாகி விட்டோம்.
இதேவெளியில்  இந்திய மற்றும் மேற்குலக கலாசாரத்தின் தாக்கங்களைக் கொண்ட ஈழத்துப் பொழுது போக்கு கலை இலக்கியக்கியங்களின் வளர்ச்சியும் அவதானிக்கப்படுகிறது.  குறும்படத்தயாரிப்புகள் இசைத் தட்டுருவாக்கங்கள் என்பன நிகழ்ந்து வருகின்றன. இன்னும் சில வருடங்களுக்குள் இவை ஈழத்தமிழ்ச் சமூகத்தின் நுகர்வுக்கலாசாரத்தின் ஒருபகுதியாகிவிடும். ஆனால்  இவை தென் இந்திய அல்லது மேற்கத்திய அசுரப் பொழுது போக்கு கலை இலக்கியத்தின் ஆதிக்கத்துடன் போட்டி போடுமளவுக்கு வளர்ந்து கொள்ள முடியுமோ என்பது கேள்வி?
தொண்ணூறுகளில் உலகை ஆக்கிரமிக்கத் தொடங்கிய  இணையம் முள்ளி வாய்க்காலுக்கு பின்பு மிக வேகமாக ஈழத்துக் கலை இலக்கிய அசைவியக்கத்தின் தவிக்க முடியாத ஒரு பகுதியாகிவருகிறது. ஆனாலும் மேற்குலகைச் சேர்ந்த சமூகங்களளவுக்குத் தமிழ்ச் சமூகம் இலத்திரனியல் மயப்படவில்லை. ஆனாலும் சமூக வலைத்தளங்கள் வலைப்பூக்கள் ருவிற்றர் போன்றவை படைப்பாளிகள் தங்களை வெளிப்படுத்தும் களங்களாக மாறி வருகின்றன. நுகர்தல் ஒருமித்த கருத்துக்களைக் கொண்டவர்கள் குழுக்களாகச் சைபர் வெளியில் இணைதல் உரையாடுதல் என்பதுடன் இந்த அசைவியக்கம் எங்கள் சூழலில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கலின் பின்பு  ஈழத்துக்கலை இலக்கிய அசைவியக்கத்திற்கு பன்முகமான ஒரு வெளி கிடைத்திருக்கிறது. இது இலங்கையின் பிற்போக்குப் பேரினவாத அரசு தந்துள்ள வெளி அல்ல பதிலாக ஒரு முகமான தமிழ்த்தேசியவாதம் மறுத்திருந்த வெளி. இந்த வெளி மண் விடுதலை என்ற ஒற்றைப்பரிமாணத்துள் மறைந்திருந்தது. ஆனால் இதே வெளியை இலங்கையின் பிற்போக்குப்பேரினவாத அரசு இன நல்லிணக்கம் என்னும் போர்வையால் மூட முயற்சிக்கிறது.
இந்தப்பன்முகமான வெளியை நாங்கள் எந்தக்காரணம் கொண்டும் இழக்கக்கூடாது. ஏனைய இனங்களின் முற்போக்கு சக்திகளுடனா ஊடாட்டம் எமக்குள் நிலவும் பிற்போக்குத்தனங்களுக்கெதிரான போராட்டம் எமது விடுதலைக்கான போராட்டம் என யாவும் இந்த வெளியிலேயேதான் நிகழ வேண்டும்.
வலிகளைத் தாங்கிக்கொண்டும் அடக்கு முறையை எதிர்த்துப் போராடிக்கொண்டும் சுயவிமர்சனத்துடனும் இந்த வெளியில் நாங்கள் இருத்தல் வேண்டும் இந்த வெளியை இனிவரும் கால ஈழத்து கலை இலக்கிய அசைவியக்கம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த வெளி வெறும் அதிகார வெளி அல்லஒடுக்கப்படுபவர்களுக்கான ஒளியின் வெளி
தேவ அபிரா



ஈழத்துக் கலை இலக்கிய அசைவியக்கம். முள்ளிவாய்க்காலுக்கு முன்னும் பின்னும் சில குறிப்புக்கள் -பகுதி 2

ஈழத்துக் கலை இலக்கிய அசைவியக்கம். முள்ளிவாய்க்காலுக்கு முன்னும் பின்னும் சில குறிப்புக்கள் -பகுதி 2

இந்த இடத்தில் ஈழத்தின் முக்கியமான நாடக நெறியாளரான   திரு சிதம்பரநாதன் அவர்கள் மண்சுமந்தமேனியர் நாடகப்பிரதியின் அச்சுருவுக்கு 1998 ம் ஆண்டு எழுதிய முன்னுரையை ஒரு முறை மீண்டும் ஒரு முறை வாசிப்போம். இது அந்தக்காலத்தின்  ஈழத்தின் கலை இலக்கிய அசைவியக்கம் தொடர்பாக [குறிப்பாக அளிக்கைக்கலைகளின் அசைவியக்கம் தொடர்பாக  (Performing arts)] நான் சொல்பவற்றைத் தெளிவாக்குகின்றது. அதில் சில பகுதிகளை நான் தடிப்பாக்கி இருக்கிறேன்

மண்சுமந்த மேனியர் நாடக நூலுக்கான முன்னுரை:

நாம் நாடகத்தில் நடிப்பதற்கு ஆட்களைத் தேடினோம்.  பல்வேறு பார்வைகள் (தேசிய விடுதலைப் போராட்டம் பற்றி) உள்ளவர்களை இணைத்து கொண்டோம். இணைந்தவர்களைப் பார்த்தால் நாடகத்தில் ஆர்வமுள்ளவர்கள் என்பதைவிட தேசியவிடுதலைப் போராட்ட உணர்வும், ஆர்வமும் உடையவர்களாகவே இருந்தனர்.
நாடகபாடம் இன்னமும் நெறியாளரின் கைக்கு வரவில்லை.  எனினும் கலைஞர்கள் சந்தித்துக் கொண்டோம்கத்தினோம்ஆடினோம், பாடினோம், கதைத்தோம்.  விசர்  எனக்கூறி சிலர் விலகிச் சென்றனர்.  மீதமிருந்தவர் ஒன்றாக ஆகினோம்.
இப்போதுதான் (முதல் சந்திப்பிலிருந்து ஏறக்குறைய 10 நாட்களின் பின்)  நாடகபாடம் - மண்சுமந்த மேனியர் - கையில் கிடைத்தது.  மீதமிருந்த அத்தனை பேரினதும் ஈடுபாட்டோடு மண்சுமந்த மேனியர் வளர்ந்தது.  ஈடுபட்டவர்களில் அநேகர் முன் நாடக அனுபவம் எதுவமில்லாதவர்கள்.  சிறந்த நடிகர்கள் என்று பேரெடுக்காதவர்கள்.
ஆனால் ஈடுபாடு இருந்தது.  இந்த ஈடுபாடுதான் மண்சுமந்த மேனியரின் வெற்றிக்கு முக்கிய காரணியாக இருந்தது என்பது  பின்னர் புரியப்பட்ட ஒரு செய்தி.
கலைஞர்களிடையே நட்பு வளரத் தொடங்கியது.  ஓத்திகை நேரங்களைவிட வேறு நேரங்களிலும் சந்தித்தோம்.  மண் சுமந்த மேனியரைப் பற்றியே பேசினோம்.  திட்டமிட்டோம்.  மண்சுமந்த மேனியர் விவரித்த பிரச்சினையின் களங்களுக்குச் சென்றோம்.  பட்டறிந்தோம்.
மண்சுமந்த மேனியர் நாடகபாடத்தில் பல நாட்டார் பாடல்கள் இருந்தன.  ஆவற்றை பேராசிரியர் சண்முகதாஸ் பாடித்தந்தார்.  ஓத்திகைகளின் போது இசைக்கலைஞர் கண்ணன், அவர் பாடித்தந்த இராகங்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு நாடக மனநிலைக்குத் தக்கதான இராகங்களை இணக்கினார்.
ஓத்திகைகள் மிகுந்த கட்டுப்பாட்டோடு நடந்தன.  நேரத்தைக் கடைப்பிடித்தல் முக்கியமானதாக இருந்தது.  நாடகம் மெதுமெதுவாகவே வளர்ந்தது.  கலந்துகொண்டவர்களில் பலருக்கு இது ஒரு புதிய அனுபவமாக விளங்கியது.  இந்த நாடகம் சரிவருமா  என்றவாறுகூட ஒருவர் சந்தேகத்தைக் கிளப்பினார்.
தயாரிப்பின் இறுதிநிலையில் பார்வையாளர் இதனை ஏற்றுக்கொள்வார்களா என்ற ஒரு சந்தேகம் பற்றி கலந்துரையாடப்பட்டது.
கட்டணம் அறவிடாமல் மண்டபத்தில் வெக்கையில்லாத காலை நேரத்தில் (இரவில் ஊடரங்கு உத்தரவு) நாடகத்தை மேடையேற்றுவதெனத் தீர்மானிக்கப்பட்டது.  பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரைக் கொண்டு நாடகத்தை அமைதியாகப் பார்க்குமாறு பார்வையாளரை வேண்டிக்கொள்ளவும் முடிவெடுத்தோம்.
பார்வையாளர் பற்றிய பயத்தோடும் அநேக கலைஞர்களுக்கு முதல் அனுபவமாகையால் அதற்குரிய பதட்டத்தோடும் 1985 மார்ச் 30 இல் நாடகம் மேடையேறியது.  பார்வையாளரிடம் பாராட்டுக் கிடைத்தது.  கலைஞர்களுக்கு உற்சாகம்.
இரண்டாம் நாள் மண்டபம் நிரம்பி வழிந்தது.  பாடுனர்கள், இசைஞர்களுக்காகப் போடப்பட்டிருந்த இடங்களையும் பார்வையாளர் பிடித்துக்கொண்டனர்.  மண்டபத்தின் கதவுகளும், ஜன்னல்களும் தலைகளால் நிரம்பியிருந்தன.  நிறைய அரசியற் போராளிகள் வந்திருந்தனர்.
மூன்றாம் நாளும் நாடகத்தை மேடையேற்ற வேண்டி வந்தது.
அரங்கு வெளிப்படுத்தப்பட்டவிதம் பற்றிப் பலரும் வியப்புத் தெரிவித்தனர்.  சஞ்சிகைகள், பத்திரிகைகளில் விமர்சனங்கள் வெளிவந்தன (இணைக்கப்பட்டுள்ளன).  கலைஞர்களுக்கும், அரசியல் போராளிகளுக்குமிடையில் ஒரு நல்ல உறவு பரிணமித்தது.  அரசியல் வேலையின் ஒரு பகுதியாக மண்சுமந்த மேனியர் ஊர் ஊராகச் செல்லவேண்டும் என அரசியல் போராளிகள் விரும்பினர்.  ஊர் ஊராக ஏற்பாடுகளும் செய்தனர்.
மண்சுமந்த மேனியர் ஊர் ஊராக பவனி வந்தனர். போகப்போக இந்தப் பவனியில் மேலும் பலர் நட்போடு இணைந்துகொண்டனர்.  மண்சுமந்த மேனியருக்கு ஊர் ஊராக வரவேற்பு கிடைத்தது.  வெயிலிலும், மக்கள் காத்து நின்றனர்.  இராணுவ நடமாட்டம் இருந்ததால் நிதானித்து, நிதானித்தே கலைப்பவனியை மேற்கொள்ள வேண்டியிருந்தது.  இதனால் குறித்த நேரத்தைவிட தாமதமடைந்ததும் உண்டு.  இவ்வாறு ஒருமுறை ஊரெழு என்ற கிராமத்திற்கு தாமதித்துச் சென்றபோது மக்கள் குடைகளைப் பிடித்தபடி நடுவெயிலில் காத்து நின்றனர்.  மண்சுமந்த மேனியரைப் பார்ப்பதில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.  கோயில் திருவிழாவிற்குச் செல்வதுபோல் மக்கள் சாரிசாரியாக மண்சுமந்த மேனியரைக் காணவந்தனர்.  பல இடங்களில் கலைஞர்களே பார்வையாளரைக் கட்டுப்படுத்தவேண்டி இருந்தது.  பார்வையாளருடன் ஆத்திரப்பட்டுக் கதைக்கவேண்டி இருந்தது.  இவ்வாறு ஆத்திரப்பட்டது எந்தவிதப் பிரச்சினையையும் கொண்டுவரவில்லை
அதாவது கலைஞர்களிடம் ஒருவகை அதிகாரம் இருந்தது.  அதனை அவர்கள்(மக்கள்) ஏற்றுக்கொண்டனர்.  அல்லது பொறுத்துக்கொண்டனர்.  ஏன் அவர்கள் அந்த அதிகாரத்தை ஏற்றுக்கொண்டனர் அல்லது பொறுத்துக்கொண்டனர்.
இது ஒரு முக்கியமான விசயம்.  ஏனென்றால் இது கலைஞனுக்கும் மக்களுக்குமான உறவு பற்றிய பிரச்சினை.  யாழ்ப்பாணத்தில் வெளிவரும் சிரித்திரன்  சஞ்சிகையின் ஆசிரியர் என்னிடம் பின்வருமாறு கூறினார்,
நாங்கள் சாத்திரியிடமும், வைத்தியரிடமும் மிகவும் கவனமாகக் காதுகொடுத்துக் கேட்போம். ஏனென்றால்  அவர்கள் எங்களுடைய பிரச்சினையைப் பற்றிச் சொல்கிறார்கள்.  அதுபோலத்தான் மண்சுமந்த மேனியரையும் கவனமாகப் பார்க்கிறோம்
மக்கள் தம்மை மண்சுமந்த மேனியரில்  கண்டனர்.
கொக்குவிலில் நிகழ்ச்சி முடிந்த பின்னர் ஒருவர் கேட்டார் என்னெண்டு இப்பிடியெல்லாம் கண்டுபிடிச்சனீங்கள்.
தமது பிரச்சினையின் கனபரிமாணத்தை மண்சுமந்த மேனியர் கண்டுபிடித்து விவரித்த விதத்தை அவர்கள் வியப்புடன் நோக்கினர்.
மண்சுமந்த மேனியரை நிகழ்த்திக் கொண்டு போகப் போக எம்மில் ஒரு மாற்றம் தெரிந்தது.  மண்சுமந்த மேனியரைப் போட்டு திறமையான நடிகர் என்று பெயரெடுப்பதைவிட மண் சுமந்த மேனியரை நிகழ்த்துவதில் ஆர்வம் காட்டினோம்.  நிகழ்ச்சி முடியும் போதும் மேடையைவிட்டு வெளியே வந்து மக்களையும் சேர்த்துக்கொண்டு தானையும் ஏகுவீரே (நாடகத்தின் இறுதியில் வரும் வரி) என்று பாடுவதில் மகிழ்ச்சியடைந்தோம்.  இது பின்னர் போரிடவே வருக என வளர்ச்சியடைந்தது.  மக்களுடன் கதைப்பதில் ஆர்வம் காட்டினோம்.  (இவையெல்லாம் படித்த, நாடகமும் தெரிந்தவர்களுக்கு சினம் கொடுத்த விடயங்கள்) இவற்றை நாம் போலியான மனோபாவத்துடன் செய்யவில்லை.  எமக்குத் தெரிந்தவரையில் உண்மையாகவே செய்தோம். 
கலைஞர்களிடம் ஒரு அர்ப்பணிப்பு மனோபாவம் இருந்தது.  உண்மையில் அந்த நாட்கள் நமது வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான நாட்கள்.
இப்படியான ஒரு நிலையில்தான் நாம் மக்களின் முன்னிலையில் சில கணங்களில் அதிகாரத்துடன் நடந்த போதும் அது பிரச்சினையாய் எழவில்லை என எண்ணுகிறேன்.
மண் சுமந்த மேனியர் 60 தடவைகள் நிகழ்த்தப்பட்டன.  ஓவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அனுபவம்.  சில இடங்களில் ஒழுங்கான மேடை இருக்கும்.  வேறுசில இடங்களில் ஒழுங்கான மேடை இருக்காது.  ஆரம்பத்தில் சிரமப்பட்ட போதும் பின் இடத்திற்கு ஏற்றவாறு நாடகத்தை நெகிழ்ச்சி உடையதாக்கினோம்.   மக்களைச் சந்தித்தல் என்பது முக்கியம் பெற இயல்பாகவே இந்த நிலைக்கு நாம் மாறினோம்.  ஆனால் ஒரு கட்டதிற்கு மேல் இது சாத்தியமற்றுப்போய் விட்டது.  மண் சுமந்த மேனியர் போகமுடியாத இடங்களும் இருந்தன.  மண்சுமந்த மேனியர் நெகிழ்ச்சி அடையக் கூடிய வடிவமாக இருந்தபோதிலும் அது சில குறைந்தபட்ச வசதிகளைக் கோரி நின்றது.  அந்த வசதிகளைத் தரமுடியாத மக்களும் இருந்தனர்.  எனவே அந்த மக்களைச் சந்திப்பதற்குப் பொருந்தமான இன்னொரு அரங்கவடிவத்தை தேடவேண்டி ஏற்பட்டது.
தெரு வெளி அரங்கு வடிவம் இத்தேடலின் விளைவே.  இன்று தொண்ணூறுகளில் தெருவெளி அரங்கு ஈழத்தமிழரிடையே ஓர் முக்கிய அரங்க வடிவமாக மேற்கிளம்பியுள்ளது.
           -நெறியாளர் திரு.சிதம்பரநாதன்.

இந்த முன்னுரையை மீள்வாசிப்புச் செய்யும் போது,
  • ·         பல்வேறு கருத்துக்கொண்டவர்களின் ஒருங்கிணைவு,
  • ·         பட்டறிதலின் அவசியம்
  • ·         கூட்டுழைப்பு
  • ·         கலைஞர்களின் தனிப்பட்ட திறமைவெளிப்பாட்டை விடவும்  படைப்பின் நோக்கத்திற்கான முன்னுரிமை
  • ·         மக்களை நோக்கிச் செல்லல்
  • ·         மக்களின் மீதான அதிகாரத்தை எடுத்துக்கொள்ளல்

போன்ற விடையங்கள் அந்தக்காலத்தில் கலை இலக்கிய அசைவியக்கத்தின் குணாம்சங்களாக இருந்ததை அல்லது இருக்க முயன்றதை அது குறிப்பாலுணர்த்துகிறது.
மூன்றாவதாகப் போர் வலிமை அடைகிற சூழ்நிலை வருகிறது. இது ஈழத்துக்கலை இலக்கிய அசைவியகத்தினுள் இன்னுமொரு மாற்றத்தையும் கொண்டுவருகிறது. மக்களை எழுச்சியடையச்செய்தல் பிரக்ஞை அடையச் செய்தல் என்கிற நோக்கத்தில் இருந்து ஒரு படி மேலே போய் மக்களைப் போரில் பங்கேற்கச் செய்தல் என்கிற நோக்கத்துக்குள் ஈழத்துக்கலை இலக்கிய அசைவியக்கம் வருகிறது. இதனைத்தான்  தானையும் ஏகுவீரே என மண்சுமந்த மேனியர் அடியெடுத்துக் கொடுத்தது. போரிடவே வருகவென்றது
இந்த மூன்று மாற்றங்களும் நிகழ்ந்த போதும் விடுதலைப்போராட்டத்தின்  ஆரம்பகாலத்தில் ஈழத்துக் கலை இலக்கிய அசைவியக்கம்  பன்முகமானதாக இருந்தது. அது பெண்விடுதலையைப் பற்றிப் பேசியது சாதிய ஒடுக்குமுறையைப் பற்றிப் பேசியது. ஓரளவிற்கு பல்லினச் சமூகங்கள் பற்றிய பிரக்ஞையையும் கொண்டிருந்தது. அதுமட்டுமல்ல விடுதலையை அடைவதற்கான பல்வேறு மார்க்கங்களைப் பற்றியும் பேசியது.
பல்வேறு கருத்து நிலைகளின் மோதுகையாகவும் இடைத்தாக்கமாகவும் இருந்த இந்த அசைவியக்கம்   பிற்பாடு மண்மீட்பை மையப்படுத்திய தேசியவாதமாக எழுச்சியடைந்த  போது ஒருமுகமானதாக மாறியது. அது மட்டுமல்ல இந்த அசைவியக்கம் இடதுசாரிச்சிந்தனைகளில் இருந்து மெல்ல மெல்ல அன்னியப்பட்டுத் தமிழர்களின் தொன்மை  அல்லது பண்டைக்கால அரச மான்மியங்களின் கனவுக்குள் அமிழத்தொடங்கியது.
அமைப்பை(ஸ்தாபனம்) முதன்மைப்படுத்தி  மண்மீட்பை மட்டும் மையப்படுத்தி  வலிமையான சனநாயக மறுப்பையும் கூடவே கொண்டிருந்த இந்த எழுச்சி பல கலை இலக்கிய வாதிகளைத் தன்னுள் உள்வாங்கிக் கொண்டது.
ஆனால்  சனநாயக மறுப்பில் மையம்கொண்டிருந்த தனிமனித உணர்வுகளுக்கான சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த சூழ்நிலை காரணமாகப் போரிடும் அனுபவத்தையும் சரி போரினுள் வாழும் அனுபவத்தையும் சரி அதனுள் முட்டி மோதும் தனிமனித விழுமியங்களைப்பற்றியும்  சரி விடுதலையின் உண்மையான விழுமியங்களைப்பற்றியும் சரி ஆழமாகப் பார்க்க முடியாத சூழ்நிலைக்குள் அல்லது பார்க்க அனுமதிக்கப்படாத நிலைக்குள் அந்தப்படைப்பாளிகள் அகப்பட்டுக்கொண்டனர்.
அது மட்டுமல்ல புதிதாக எழுச்சி பெற்றுப் படைக்க முயன்றவர்களுக்கும்  பன்மையான அரசியல் அறிவையோ  ஆழமான மொழி அறிவையோ உலக அறிவையோ பெற்றுக்கொள்வதற்கான  சூழ்நிலைகளும் அங்கு இருக்கவில்லை.
இங்கே இன்னுமொன்றையும் கவனத்திற்கொள்ள வேண்டும். இறுக்கமான அதிகார மற்றும் அறநெறிப்போதனை நிறைந்த கலாசாரத்துள் கட்டுண்டு வளர்ந்த வளர்கின்ற எங்களுக்குள் விட்டு விடுதலையாகி நின்று படைக்கின்ற ஆன்மாவின் வளர்ச்சி ஏற்படுவது இலகுவானதல்ல.
இதனால் மேற்குறித்த எழுச்சிக்குள் உள்வாங்கப்பட்ட படைப்பாளிகளின் படைப்புக்களின் இலக்கிய அல்லது கலைத்தரம் பற்றிய கேள்விகள் எழுந்தன. ஆனாலும் இவை தவிக்க முடியாத முக்கியத்துவத்தைப்பெறுகின்றன. ஏனேனில் இவை காலத்தின் பெறுமதியான இழக்க முடியாத பதிவுகள்.  குறிப்பாக இந்தக்காலத்தில் வந்த போரிசைப்பாடல்களும் குறும்படங்களும் கணிப்புக்குரியவையாக இருக்கின்றன.  
இதே வேளை இந்தப்போராட்டம் பல கலைஇலக்கியவாதிகளை வெளித்தள்ளியும் விட்டது. இவ்வாறு வெளித்தள்ளப்பட்டவர்கள் மௌனமாகச் சகபயணிகளாக இருந்தனர்.  அல்லது புலம் பெயர்ந்தனர்.
நான் மேலே கூறிய  ஒருமுகமான நுண்ணுணர்வற்ற சிந்தனைக்கலாசாரத்தையும்  மீறிச் சிலேடையாக அல்லது மெதுவாக முணுத்தவர்கள் இருக்கவே செய்தனர். ஆனால் இவர்களின் முணுமுணுப்பு ஒரு அசைவியக்கமாக மாறவில்லை.  இவர்கள் இலங்கை அரசின் ஒடுக்கு முறைகளில் இருந்து விடுபடுவதற்கான சூழ்நிலைகள் தோன்றும் வரை அந்தச் சனநாயக மறுப்பை  சகித்துக்கொள்ள வேண்டுமென்ற நிலைப்பாட்டைக் கொண்ட சக பயணிகளாக இருந்தார்கள்.
இங்கே இன்னுமொரு பிரிவினரையும் குறிப்பிட வேண்டும் ஒரு முகமான பன்மைத்துவமற்ற தேசியவாத எழுச்சிகாரணமாக எமது கலை இலக்கிய அசைவியக்கத்துள் இருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் படைப்பாளிகள் சகபயணிகளாக இல்லாது தமிழ்த் தேசிய விடுதலைப்போராட்டத்திற்கு புறநிலையானவர்களாக மாறினர். நாங்கள் அவர்களை விரட்டிய போதும் அவர்களின் இலக்கியஅசைவியக்கம் தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டத்தின் நியாயத்தன்மைக்கு எதிரானதாக மாறாமல் விமர்சனமும் அனுதாபமும் கலந்த ஒரு அசைவியக்கமாக  மாறி முள்ளிவாய்க்காலின் பின்பும் அவ்வாறே நீடிக்கிறது. இந்த வகையில் இலங்கையில் ஒடுக்கப்படும் சிறுபான்மை இனங்களுள் ஒன்றான முஸ்லிம்களின் படைப்பாளிகள் தங்களது பிரக்ஞையையும் நுண்ணுணர்வையும் இழக்க வில்லை என்பதை  நான் இங்கு மிக மிக அழுத்தமாக பதிவு செய்ய விருப்புகிறேன்
புலம் பெயர்ந்த தேசத்திலும்  நான் ஏற்கனவே குறிப்பிட்ட ஒரு முகமான தேசியவாதத்தினால் ஏற்படுத்தப்பட்ட ஒருமுகமான சிந்தனைக்கலாசாரமும் சனநாயக மறுப்பும் முள்ளி வாய்க்கால் வரை ஆட்சி செய்தது. இது புலம் பெயந்த படைப்பாளிகளுள்  ஒருமையான தேசியவாதத்தின் சனநாயக மறுப்பை விமர்சித்த படைப்பாளிகளுக்கான படைப்பு சுதந்திரத்தை மறுதலித்தது. ஆனாலும் ஒரு சில படைப்பாளிகள் தமது படைப்புக்களை இதனையும் மீறி  வெளிக்கொண்டு வந்திருக்கின்றனர்.
ஆனால் இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து நிலவிவருகிற தமிழர்களின் மீதான இலங்கை அரசின் ஒடுகுமுறையின் கொடூரத்தன்மையையும் அதற்கெதிராகப் போராடிய விடுதலைப்புலிகளின் அரசியல்வறுமையையும் சனநாயக மறுப்பையும் ஒரே தராசில் வைத்து நிறுக்க முடியுமா என்ற வாதப்பிரதி வாதங்களுக்குள்  இந்தப்படைப்புகள் சிக்க நேர்ந்தன. ஆனால் இவை முன்வைக்கும் கேள்விகளை எதிர் கொண்டுதான் முள்ளிவாய்காலுக்கு பிறகான தமிழ்க் கலை இலக்கிய அசைவியக்கம் நகர வேண்டும் என்னுமளவுக்கு வலிமையானவையாகவும் இலக்கியத்தரம் கொண்டவையாகவும் இவை இருக்கின்றன.
……தொடரும்