நாடக உலகின் தாய்
“அரங்கை ஒரு பலமிக்க பல தள வழிமுறையாக (means) விசையுடன் பயன்படுத்திய குழந்தை அவர்கள் தமது சுயபடிமத்தை மௌனமாகவே வைத்துக் கொண்டார்.”
சபா ஜெயராசா
குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். அவரை நாடக உலகின் தாய் என பேராசிரியர் சிவத்தம்பி கூறுவார்.
1989 ம் ஆண்டில் சண்முகலிங்கம் சேர்ருடன் எனக்கு அறிமுகம் கிடைத்தது.
கல்விப்பொதுத்தராதர உயர்தரச் சோதனைகள் முடிந்த பிறகு கலை இலக்கிய நாட்டம் காரணமாக நாட அரங்கக் கல்லூரிக்குள் இணைந்தேன். இது ஜெயசங்கர் மூலமாகவே நிகழ்ந்ததாக நினைவு.
அந்தக்காலத்தில் ஜெயசங்கர் அகிலன் சத்தியன் நந்தா இளங்கோ(இன்னும் பலரின் பெயர்கள் மறந்து விட்டன) என் நாங்கள் ஒரு குழுவாக இருந்தோம்.
இந்தக் குழுவில் இருந்த பலர் நாடகமும் அரங்கியலை கல்விப்பொதுத்தராதர உயர்தரச் சோதனைக்கு ஒரு பாடமாக சண்முகலிங்கம் சேரிடம் கற்றுக் கொண்டிருந்தனர்.
அதுநூட்டுமல்ல நாடக அரங்கக் கல்லூரியின் நாடகத்தயாரிப்புகள் களப்பயிற்சிகள் போன்றவற்றிலும் பங்கு கொண்டிருந்தனர். குறிப்பாக பாடசாலை நாடகங்கள் சிறுவர் நாடகங்கள் போன்றவற்றைத் தயாரிப்பதில்/நெறியாள்கை செய்வதில் சண்முகலிங்கம் சேரின் வழிகாட்டலுடன் இந்தக்குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.
சிறுவர் நாடகங்கள் தொடர்பாக- குறிப்பாக குழந்தைகளின் உளவியல் தொடர்பாக குழந்தை சேர் கொண்டிருந்த பிரக்ஞை மிக முக்கியமானது.
சனநாயகப்பண்புகள் குறைந்த எங்கள் தமிழ் சமூகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே குழந்தைகளினதும் சிறுவர்களினதும் ஆளுமை வெளிப்பாட்டுக்கான ஒரு வெளியை சிந்தித்து அதை நாடகத்தினூடாக வழங்க முடியும் என் நிரூபித்தவர் குழந்தை ம. சண்முகலிங்கம்.
ஈழத்து நாடக வரலாற்றில் நாடக அரங்கக் கல்லூரியின் உருவாக்கம் முக்கியமானதொரு திருப்புமுனையாகும்.
நாடக அரங்கக் கல்லூரி நடாத்திய நாடாத்துகிற களப்பயிற்சிகள் முக்கியமானவை.
நான் 1989க்கும் 1993க்கும் இடையில் நடந்த அனேகமான பயில் நெறிகளிலும் பங்கு கொண்டிருந்தேன்.
இவை என் ஆளுமையிலும் அனுபவங்களிலும் பெருமளவு மாற்றங்களை கொண்டு வந்தன.
இன்று உலகம் முழுவதும் சிதறிச்சென்று வாழ்கிற இந்தக்களப்பயிற்சிகளில் பங்கு கொண்ட அனைத்து நாடக மாணவர்களும் ஆர்வலர்களும் இதனை ஒத்துக்கொள்வார்கள்.
நாடகம் என்றால் வெறுமனே எழுத்துரு- ஒத்திகைபார்த்தல்-அளிக்கை என்ற ஒற்றைப்பரிமாணத்தை மாற்றியமைத்தன இந்தக்களப்பயிற்சிகள்.
ஒரு நாடகத்தயாரிப்புக்குள் வருகிற அனைத்து விடையங்களையும் ஒருங்கிணைத்து ஒரு பண்பாடக தானியங்கி ஒழுக்க மாக மாற்றிவிடுகிற வேலையை இந்த களப்பயிற்சிகள் செய்துவிடுகின்றன.
நிதானமாக மனிதஉணர்வுகள் பற்றிய பொறுப்புணர்வுடன் குறித்த களப்பயிற்சியில் பங்குகொள்கிற சம்பந்தப்படுகிற அனைவரையும் நான் மேலே குறிப்பிட்ட தானியங்கிப் பொறிமுறைக்குள் கொண்டுவரும் அழகையும் சண்முகலிங்கம் சேரின் ஆளுமையையும் அதனை அனுபவித்தவர்கள் அனைவரும் ஒத்துக்கொள்வர்.
ஒரே நடிகன் ஒரே நெறியாளன் ஒரே எழுத்துருவாக்கன் கீழ் வரும் மூன்று முக்கிய மான நாடகங்களில் மூன்று வேறு திசைகளுக்குள் விரிந்து சென்றதைக் காணமுடிந்தது.
சிதம்பரநாதன் சண்முகலிங்கம் சேர் கூட்டுழைப்பாக வந்த மண்சுமந்த மேனியரின் எழுத்துரு சண்முகலிங்கம் சேரின் முக்கியமானதொரு எழுத்துரு. பக்தி இலக்கியம் ,மண்வாசனை,
சமூக அவலம் ,விடுதலை வேட்கை என்பவற்றின் அற்புதமான கலவை மண்சுமந்தமேனியர்.
யாழ் மாவட்டத்தின் பெருமளவான பார்வையாளர்களை சென்றடைந்த நாடகம் அது.
அன்னையிட்ட தீ யை வைத்திய காலாநிதி சிவயோகன் அவர்களின் தூண்டுதலாலும் துணையாலும் எழுதியதாக சண்முகலிங்கம் சேர் குறிப்பிடுவார்.
போரினால் உண்டான சமூக மற்றும் தனிமனித உளக்காயங்களுக்கு நாடகத்தை நோய்தீர்க்கும் நிவாரணியாக பயன்படுத்த இந்த நாடகம் முயல்கிறது
மற்றையது எந்தையும் தாயும். இது ஒரு நாற்சார் அரங்கம் படச்சட்ட மேடைக்குள் இயங்கிய இயங்கிவந்த நாடகத்தை நாற்சார் வீட்டுக்குள் கொண்டு சென்றது இந்த நாடகம். பார்வையாளனை நாடகத்தின் ஒரு பகுதியாகமாற்றியது. சண்முகலிங்கம் சேரின் அனேகமான நாடகங்கள் (Narrative Theater ) எடுத்துரைக்கும் அரங்கங்களாகும். அனால் எந்தையும் தாயும் அதில் இருந்து மாறுபட்டு ஒருகதையை மையப்படுத்திய பாத்திர உருவாக்கத்தில் அதிகம் கவனம் செலுத்தியது.
இது ஒரு சிறு குறிப்பெனினும் வாழும் கலைஞனை அவர் வாழும் காலத்திலேயே நினைவு கூர்வதும் கௌரவிப்பதும் முக்கியமானதல்லவா?
தேவ அபிரா.
15 nov 2010