எகிப்தில் அதிபர் ஹுஸ்னி முபாரக் (Hosni Mubarak) தனது அதிகாரங்களை யாரிடமிருந்து பெற்றாரோ அவர்களிடமே மீண்டும் கையளித்துவிட்டுத் தலைநகரை விட்டு அகன்றிருக்கிறார்.
ஜனவரி பதினேழாம் திகதியில் இருந்து நடைபெற்று வந்த மக்கள் போராட்டத்தின் விளைவாக அவர் தனது முப்பது வருடகால அதிகாரத்தை இராணுவத்திடம் வெளிப்படையாக கையளிக்க நேர்ந்திருக்கிறது.
கடந்த மாதம் துனிசியாவின் சர்வாதிகார ஆட்சியாளரான பென் அலியும் இவ்வாறு அதிகாரத்தை இழக்க நேர்ந்தது.
துனிசியாவில் மிக விரைவாக நடந்து முடிந்த அதிகார மாற்றம் எகிப்தில் மிகுந்த இழுபறியின் பின்னரே நிகழ்ந்திருக்கிறது.
இரண்டு நாடுகளிலுமே இராணுவத்தின் நிலைப்பாடு இறுதி முடிவைத் தீர்மானிப்பதாக இருந்தது.
துனிசியாவில் பென் அலியின் குடும்பம் குறிப்பாக பென் அலியின் இரண்டாவது மனைவியான லைலாவின் (Ali-and-his-familys-Mafia-rule) குடும்பம் முழு நாட்டையுமே கப்ளீகாரம் செய்து வந்திருந்தது. இவ்விடத்தில் 1980களில் பிலிப்பீன் தீவுகளின் சனாதிபதியாக இருந்த பெர்டினட் மார்க்கொசின் மனைவி இமெல்டா மார்க்கொசை நினைவுகூரலாம். ஆட்சியில் இருந்த காலத்தில் நாட்டைக்கொள்ளையடித்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்த அரசியல் வாதிகளின் வரலாறு முடிவதாகத் தெரியவில்லை. பென் அலி குடும்பத்தாரின் அளவுகடந்த பேராசையும் கூட்டுக் கொள்ளையடிப்பும் அந்நாட்டின் இராணுவ மட்டங்களிலும் பெரும் அதிருப்தியை உருவாக்கி இருந்தது.
இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் இராணுவமானது பென் அலியின் அதிகாரத்துக்கு ஆதரவாக நிற்க மறுத்து விட்டது.
எகிப்தில் மக்கள் போரட்டம் வெடித்த போது ஆரம்பத்தில் மக்கள் மீது பொலிஸ் ஏவிவிடப்பட்டது. பதிலுக்கு மக்களும் வன்முறையில் இறங்கியிருந்தனர். ஆனால் பல நூற்றுக்கணக்கான மக்கள் வீதிக்கு இறங்கிய போது பொலிசாரால் எதுவும் செய்ய முடியவில்லை.
இராணுவம் வீதிக்கு வந்தது. ஆனால் போராடிய மக்கள் பிற்பாடு வன்முறைகள் எதிலும் ஈடுபடவில்லை. எனவே இராணுவத்தினால் மக்கள் மீது நேரிடையாகத் தாக்குதல்களை நடாத்த முடியவில்லை.
போராட்டத்தின் ஆரம்பத்தில் அமெரிக்காவோ ஐரோப்பிய நாடுகளோ கிளர்ச்சியாளர்களுக்கு வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ (உடனடியாகவோ) ஆதரவு தெரிவிக்கவில்லை ஆனால் எகிப்திய இராணுவத்தைச் சனநாயகமுறை மூலம் போராடும் மக்கள் மீது வன்முறையை பிரயோகிக்க வேண்டாம் என மட்டும் கோரின.
எகிப்திய இராணுவத்தின் மிகப்பெரிய அனுசரணையாளரான அமெரிக்காவின் வேண்டுகோளை உதாசீனம் செய்யக் கூடிய நிலையிலும் எகிப்து இராணுவம் இருக்கவில்லை.
ஆயினும் இராணுவத்தின் உயர்நிலை ஜெனரல்கள் முபாரக்குக்கு ஆதரவாகவே இருந்தனர்.
இராணுவ விமானங்களும் பொலிஸ் உலங்குவானூர்திகளும் ஆர்ப்பாட்டக்காரர்களின் தலைக்கு மேல் பறந்து அதிகாரம் யாரிடம் உள்ளது என்பதை மட்டும் புலப்படுத்தினர்.
இராணுவத்தின் உயர்மட்டம் முபாரக்குக்கு ஆதரவாக இருக்க சாதாரண இராணுவ வீரர்கள் மத்தியில் மக்கள் எழுச்சிக்கு ஆதரவு அதிகரித்தது. இதுவும் இராணுவம் முற்றுமுழுதாக முபாரக் ஆதரவு நிலையை எடுக்க முடியாமைக்கு ஒரு காரணமாக அமைந்தது.
அமெரிக்கா இதுவரை 60 மில்லியாட் டொலர்களை எகிப்திய இராணுவத்துக்கு வழங்கியுள்ளது. ஐரோப்பியன் யூனியன் ஒவ்வொரு வருடமும் 200 மில்லியன் டொலர்களை எகிப்திற்கு வழங்கி வந்தது.
இந்த உதவி முழுவதும் அராபிய உலகின் பெரிய ராணுவமான எகிப்திய இராணுவத்தைப் பலப்படுத்தவும் இதனுடன் சேர்ந்து முபாரக்கின் அதிகாரத்தைப்பலப்படுத்தவுமே உதவியது.
மேற்குலகம் எகிப்துடன் கொண்டிருந்த நட்புறவின் தொடக்கம் பனிப்போர்க்காலமாகும். அரபு நாடுகளில் எழுச்சியுற்று வந்த கொம்யூனிச ஆதரவினை தடுத்து அதனை மேற்குலக ஆதரவு நாடாக வைத்திருக்க அதன் ஆட்சியாளர்களுக்கு அமெரிக்காவும் அதன் ஆதரவு நாடுகளும் உதவி வந்தன. பின்னர் இஸ்ரேலுடனான நட்புறவு, இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தலையெடுக்க அனுமதியாமை என்பன காரணமாக அமெரிக்கா முபாரக்குக்கு உதவி வந்தது. மேலும் எகிப்தின் சுயெஸ் கால்வாய் அமெரிக்காவின் உலகம் முழுவதும் பரவியுள்ள இராணுவத்தளங்களுக்கான கடல் வழி வழங்கல் பாதையின் உயிர்நாடியாகும் அதனை இழப்பது அமெரிக்காவுக்கு பாரிய இழப்பாகும்.
இவ்விடத்தில் மேற்குலக நாடுகளின் உயர் இராசதந்திர மட்டங்களுடன் முபாரக்குக்கும் பென் அலிக்கும் இருந்த தனிப்பட்ட இறுக்கமான தொடர்புகளையும் கவனிக்க வேண்டும்.
பிரான்சின் வெளிநாட்டமைச்சர் துனிசியாவில் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது பென் அலியின் (suspicious-french.) தனிப்பட்ட விருந்தினராக அவரது உல்லாச மாளிகையில் இருந்துள்ளார். அதுமட்டுமல்ல 2009 இல் கிலறி கிளிங்ரன் முபாரக்கின் குடும்பத்தினருடம் தமக்கு தனிப்பட்ட நட்பு இருப்பதை வெளிப்படையாகவே கூறியிருந்தார்.
துனிசியாவில் அரசைக் கண்காணிக்கக்கூடிய சிவில் சமூகங்களோ உறுதியான ஊடகத்துறையோ உயிர் வாழ அனுமதிக்கப்ப்டவில்லை. எகிப்தில் சிவில் சமூகங்களும் ஊடகத்துறையும் உயிர் வாழ அனுமதிக்கப்பட்டிருந்தபோதும் முபாரக்கின் புலனாய்வுப் பிரிவினரும் பொலிசும் எங்கும் தமது கரங்களைப் பரப்பி வைத்திருந்தனர். முபாரக்கின் அதிகாரத்திற்கெதிரான எவரும் கைது செய்யப்பட்டனர். கடுமையான மனித உரிமை மீறல்கள் புரியப்பட்டன. நேர்மையான முறையில் ஒருபோதும் தேர்தல்கள் நடாத்தப்படவில்லை. 2009 இல் வசிங்டன் பொஸ்ட் (The Washington Post) இல் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையொன்றில் மோசமான மனித உரிமைகள் நிலவும் நாடுகள் பற்றித் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் எகிப்து பற்றியும் ஹ¤ஸ்னி முபாரக்கின் மனித உரிமை மீறல்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது பற்றி அன்று பத்திகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு கிலறி கிளிங்ரன் மழுப்பலான பதில்களையே அளித்திருந்தார். முபாரக்கின் சனநாயக மறுப்புக்களைப்பற்றியோ மனித உரிமை மீறல்கள் பற்றியோ அவர் பேசவில்லை
உலகளாவிய அளவில் அதிகரித்த பொருளாதார நெருக்கடிகள் எகிப்திலும் பொருளாதார நெருக்கடிகளைக் கொண்டு வந்தன.
· அத்தியாவசியப்பொருட்களின் விலை உயர்வு
· வேலையில்லாத்திண்டாட்டம்
· அதிகரித்துச்சென்ற வறுமை
· சனநாயக மறுப்பு
· ஊழல்
· இரகசியப்பொலிஸ் மற்றும் பொலிஸ் கெடுபிடிகள்
என்பன காரணமாக முபாரக் மற்றும் அவர் சார்ந்த சிறு உயர்வர்க்கம் தவிர்ந்த எனைய முழு எகிப்திய சமூகமும் எதோ ஒருவகையில் நெருக்கடிக்கு உள்ளாகியிருந்தது. இந்த நெருக்கடி அவர்களால் தாங்க முடியாதளவுக்கு அதிகரித்துமிருந்தது. வெறுமனே அதிகாரத்தை பாதுகாப்பதிலும் தமது தனிப்பட்ட வசதிகளை பெருக்குவதிலும் மட்டுமே கடந்த 30 வருடங்களாக ஈடுபட்டு வந்த முபாரக்கும் அவரது அரசாங்கமும் சமூகத்தின் கீழ் அடுக்குகளில் வளர்ந்து வந்த அதிருப்தியையும் வெறுப்பையும் புரிந்து கொள்ளவில்லை.
எல்லா சர்வாதிகாரிகளையும் போலவே முபாரக்கும் மக்களிடம் இருந்து வெகுதூரத்திலிருந்தார்.
மக்கள் திரளாக எழுச்சியடைந்து “முபாரக்கே வெளியேறு” என கேட்ட போது முபாரக் தனது அரசாங்கத்தை மட்டும் கலைத்து உமர் சுலைமானைத்(Omar Suleiman ) துணைச்சனாதிபதியாக நியமித்தார்.
உமர் சுலைமான் முன்னைநாள் புலனாய்வுத்தலைவரும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நெருங்கிய நண்பரும் இராணுவத்துள் செல்வாக்கு மிக்கவராகவும் கருதப்பட்டவராவார். ஆனால் முறையற்ற கைதுகள் சித்திரவதைகள் போன்றவற்றிக்கு பொறுப்பாக இருந்த இரகசியப் பொலிசின் தலைவராக இருந்தமையால் எகிப்திய மக்களால் மிகவும் வெறுக்கப்பட்டவராவார். அவரைத் துணைச்சனாதிபதியாக நியமித்ததன் மூலம் எகிப்திய மக்களின் கோரிக்கைகளுக்கு சரியான பதிலை முபாரக் அளிக்கவில்லை.
ஆனால் தான் யாரின் நலன்களைப் பாதுகாக்க விரும்புகிறார் என உலகத்துக்கு தெரியப்படுத்தியிருந்தார்.
இதனிடையே முபாரக் தான் இனிமேலும் தேர்தல்களில் பங்கெடுக்கப்போவதில்லை எனவும் செப்ரெம்பரில் தேர்தல் நியாயமான முறையில் நடாத்தப்படுவதை உறுதிப்படுத்தி பின் அதிகாரத்தைக் கையளிப்பதாகவும் கூறினார். எகிப்திய மக்கள் இந்த விதமான வாக்குதிகளின் நம்பகத்தன்மைகள் பற்றி நன்கறிந்திருந்தமையால் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. சில விட்டுக் கொடுப்புக்களையும் போலி வாக்குறுதிகளையும் வழங்கி மக்களின் உறுதியைக் குலைக்க முபாரக் அணி செய்த முயற்சி பலிக்காமல் போனதும் முபாரக் தனது ஆதரவாளர்களுக்கு பணம் கொடுத்து போராடும் மக்களைத்தாக்கும்படி ஏவிவிட்டார். ஆனால்
அமெரிக்காவும் ஐரோப்பாவும் இந்தத் தாக்குதலை மிக வன்மையாக கண்டித்தன.
இவ்வேளையில் சிறைபிடிக்கப்பட்டிருந்த சிலரை எகிப்திய அரசு பதட்டத்தை தணிக்கும் வகையில் விடுவித்தது. அவ்வாறு விடிவிக்கப்பட்டவர்களில் ஒருவரான Wael Ghonims கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தவர்களுக்காக முகப்பக்கமொன்றை(facebook) வடிவமைத்து நிர்வகித்து வந்த கூகிழ்(google) நிறுவனத்தின் மத்திய கிழக்குக்கான சந்தைப்படுத்தல் அதிகாரியாவர். இவர் எகிப்தில் முதலில் பொலிசுக்கு எதிராக நிகழ்ந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டிருந்தபோது எகிப்திய புலனாய்வுத்துறையால் கடத்தப்பட்டிருந்தார். விடுவிக்கப்பட்ட பின்னர் அவர் போராட்டக்காரரிடையே பேசியபோது. "ஆர்ப்பாட்டக்காரர்களே உண்மையான தீரர்கள்" என்றார் அவரது பேச்சும் மக்கள் போராட்டத்தை இன்னும் உந்தித்தள்ளியது.
பெரும்திரளான மக்கள் தகீர் (Tahir square) சதுக்கத்தில் இரவுபகலாக நிலைகொண்டனர்.
ஆரம்பத்தில் இளைஞர்களின் எழுச்சியாக ஆரம்பித்த எழுச்சியில் பின்னர் சமூகத்தின் பல அடுக்கினரும் இணைந்துகொண்டனர். இறுதியில் கணிசமான அளவு காவல் துறையினர் கூட இணைந்து கொண்டதாக வலைப்பக்கங்கள் தெரிவிக்கின்றன.
கிளர்ச்சிகள் தொடங்கி ஒரு வாரத்தின் பின்னரே இஸ்லாமிய சிந்தனைகள பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அமைப்பான இஸ்லாமியச் சகோதரத்துவம் என்னும் எகிப்தின் முக்கியமான அமைப்பும் இணைந்துகொண்டது.
ஆனால் அது எழுச்சியை சொந்தம் கொண்டாடவோ தலைமைதாங்கவோ முயலவில்லை. போராட்டத்தை முன்னெடுத்த இளைஞர்கள் அந்த அமைப்பை தலைமை தாங்கும் படி அழைக்கவுமில்லை. இந்த எழுச்சியின் மதசார்பற்ற தன்மையையின் அவசியத்தை அனைவருமே புரிந்து கொண்டிருந்தனர்.. இதேவேளை உலக அணு சக்தி நிறுவனத்தின் முன்னைநாள் தலைமை அதிகாரியும் நோபல் பரிசு பெற்றவருமானா அல்பரடே எகிப்துக்கு திரும்பி வந்து கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளித்தார். சனநாயக எண்ணங்களைக் கொண்டவராகவும் மேற்குலகுக்கு சார்பானவராகவும் கருதப்பட்ட இவர் எகிப்திய மக்களுடனும் அவர்களின் பிரச்சனைகளுடனும் இணைந்திராமையால் இவரும் அந்நியராகவே கருதப்பட்டார் இவரும் தலைமை தாங்கும்படி இளைஞர்களால் அழைக்கப்படவில்லை.
இளைஞர்கள் "எமது போராட்டத்தை நாங்களே வழிநடத்துவோம். தலைமை தாங்குகிறோமென வந்து பின்னர் அவர்களும் முபாரக்காக மாறுவதை நாங்கள் விரும்பவில்லை" எனத் தெளிவாகத் தெரிவித்திருந்தார்கள்.
முஸ்லீம் சகோரத்துவம் கிளர்ச்சிகளுக்கு ஆதரவு தெரிவித்துக் கலந்து கொண்டமை மேற்குலகின் வயிற்றில் புளியைக்கரைத்தது. சதுக்கத்தில் மக்கள் தொழுகையில் ஈடுபடுவதை எல்லா மேற்குலகத் தொலைக்காட்சிகளும் மையப்படுத்திக் காட்டியிருந்தன.
அடிப்படைவாத முஸ்லீம்கள் எகிப்தில் அதிகாரத்துக்கு வரக்கூடும் எனவும் எகிப்து இன்னொரு ஈரானாக மாறக் கூடும் எனவும் மேற்குலகம் அஞ்சத் தொடங்கியது.
எகிப்தில் முபாரக்கினால் தடைசெய்யப்பட்ட முஸ்லீம் சகோதரத்துவம் என்னும் அமைப்பு அடிப்படையில் ஒரு சேவை நிறுவனமாகவே எழுச்சி பெற்றிருந்தது. வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் மக்கள் மத்தியில் இலவச வைத்திய சேவை, இலவசக்கல்வி மற்றும் பொருளாதார உதவிகளைச் செய்யும் நற்பணிகளுக்கான அமைப்பாகவே அது தோற்றம் கொண்டது. ஆயினும் எகிப்தில் தொடர்ந்த அடக்கு முறை அவர்களை அரசியலை நோக்கி திரும்ப வைத்தது.
இஸ்லாமிய விழுமியங்களைக் கொண்ட இஸ்லாமிய அரசை ஸ்தாபிப்பது அவர்களின் நோக்கமாகும். இவர்கள் வேண்டுகிற இஸ்லாமிய விழுமியங்கள் முன்னேற்றகரமானவை என விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த முஸ்லீம் சகோதரத்துவம் என்னும் அமைப்பு கடைசியாக நடந்த தேர்தலில் ஒரு கட்சியாக போட்டியிட அனுமதிக்கப்பட வில்லை. ஆயினும் அவர்கள் உதிரிகளாக சுயேச்சைகளாக போட்டியிட்டிருந்தனர். அத்தேர்தலில் 450 பாராளுமன்ற ஆசனங்களில் 88 ஆசனங்களையே அவர்கள் வென்றிருந்தனர்.
எகிப்தினை நன்கு அறிந்த மேற்கத்தை ஆய்வாளர்கள் முஸ்லீம் சகோதரத்துவம் அடிப்படைவாத நிலைப்பாடுகளை நோக்கிச் செல்லக்கூடிய அமைப்பல்ல என்கிறார்கள். இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் போது இஸ்லாமிய சகோதரத்துவம் தான் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடப்போவதிலை எனவும் இந்தப்புரட்சி மக்களுக்கு சொந்தமானது எனவும் தெரிவித்துள்ளது.
சில மேற்கத்தைய விமர்சகர்கள் எகிப்தின் பெரும்பான்மையான மக்கள் ஒரு இஸ்லாமிய அரசை விரும்பினால் அதை அமையவிடுவதுதான் சனநாயகம் எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர். உண்மையும் அதுதான்.
மறுபுறத்தில் எந்த மதமானாலும் அதன்அடிப்படைவாதச் சிந்தனைகள் சனநாயக உரிமைகளை மறுப்பனவாகவே இருக்கின்றன. இந்து, பெளத்த, இஸ்லாமிய, கிறிஸ்தவ யூத அடிப்படைவாதங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் மோசமான சமூக அரசியல் பிரச்சினைகளை ஏற்படுத்தியே வருகின்றன. வந்திருக்கின்றன.
துருக்கியில் இஸ்லாமியச்சிந்தனைகள் முபாரக்கினால் நசுக்கப்பட்டதைப் போலவே கொப்ரிக் கிரிஸ்தவர்களும் (coptic Church) நசுக்கப்பட்டிருந்தனர். முபாரக்கின் வெளியேறுகையுடன் சிறுபான்மையினரான கொப்ரிக் கிறிஸ்தவர்கள் தங்களது சனநாயக உரிமைகளைப் பெறுவது சாத்தியமாகியுள்ளது(?)
30 வருடகால சர்வாதிகார ஆட்சியை தூக்கி எறிய மக்கள் முயன்ற போது மேற்குலகம் தனது நலன்களைப் பற்றிச் சிந்தித்ததே தவிர மக்களின் குரலைச் செவிமடுப்பதில் தாமதம் காட்டியது.
குறிப்பாக அமெரிக்கா வெளிப்படையாக மக்களின் சனநாயகக் கிளர்ச்சிக்கு ஆதரவு தெரிவித்து உடனடியாக முபாரக்கைப் பதவி விலகக் கோராதது எகிப்திய மக்களால் விமர்சிக்கப்டுகிறது.
மக்கள் மில்லியன் கணக்கில் திரண்டு வந்து சனநாயக முறையில் போராடும் போது அவர்களின் குரலை மீறி அமெரிக்காவால் முபாரக்கைக் காப்பாற்றவும் முடியவில்லை.
எனவே திரை மறைவில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் கடுமையான அழுத்தங்களை முபாரக்குக்கு வழங்கத்தொடங்கின. அமெரிக்கா தன்னைக் காப்பாற்றப்போவதில்லை என உணர்ந்த போது முபாரக் அமெரிக்காவின் உயர் மட்ட இராசதந்திரியை சந்திக்கவும் மறுத்து விட்டார். அதுமட்டுமல்ல துணை சனாதிபதியான சுலைமான் பொதுமக்களைக் கலைந்து செல்லுமாறும் வெளிநாட்டு ஊடகங்களைக் கவனத்திற்கெடுக்க வேண்டாம் எனவும் மிரட்டியும் இருந்தார். இவையெல்லாம் மக்களை இன்னும் இன்னும் ஆக்ரோசம் கொள்ளச்செய்ததுடன் அவர்களது அமைதியான அணிவகுப்பு ஏனைய நகரங்களுக்கும் முபாரக்கின் அரண்மைனையை நோக்கியும் விரிந்தது.
கடைசி நிமிடத்திலும் முபாரக் பதவி விலகும் எண்ணத்துடன் இருக்கவில்லை. மக்களின் கோபமும் உறுதியும் இன்னும் வலுப்பட்டது.
திரைமறைவில் அமெரிக்க ஐரோப்பிய ராசதந்திரங்கள் முபாரக்கின் மீதும் சுலைமனின் மீதும் கடும் அழுத்தத்தை வழங்கின. உடனடியாக பதவி விலகுமாறு இறுதிக்கணத்தில் ஒபாமாவும் (Obama) தெரிவிக்க வேண்டி வந்தது. களநிலைமையை நன்கு உணர்ந்துகொண்டிருந்த எகிப்திய இராணுவம் தனது நடுநிலைமையைக் கைவிட்டு முபாரக்கை வெளியேற்றி அதிகாரத்தைத் தன் கையில் எடுத்துக்கொண்டுள்ளது
எகிப்திய மக்கள் அதன் இராணுவத்தை இதுவரையும் நம்பியே இருந்திருக்கிறார்கள். எனேனில் எகிப்தின் அனேகமான குடும்பங்களில் யாராவது ஒருவர் இராணுவத்தில் இருக்கிறார். மற்றயது இராணுவம் கிளர்ச்சிக்காலத்தில் கூடவே இணைந்து வரும் கொள்ளை மற்றும் சமூக விரோதச்சம்பவங்களில் இருந்து எகிப்திய சமூகத்தைக் காப்பாற்றியதுடன் கிளர்ச்சியில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது தாக்குதல்கள் எதனையும் முபாரக்கின் அதிகாரத்திற்கு அடிபணிந்து செய்யவில்லை
1989 ம் ஆண்டு சனநாயக ரீதியாக தியனமென் சதுக்கத்தில் போராடிய சீன மக்களின் மீது இராணுவத்தாங்கிகளை ஏற்றிக் கொன்ற சீன இராணுவத்தை இக்கணத்தில் நினைவு கூராமல் இருக்கவும் முடியவில்லை.
எகிப்தில் நிகழ்ந்த இந்த மாற்றத்தினால் அச்சமடைந்திருக்கும் இன்னொரு முக்கியமான நாடு இஸ்ரேலாகும். எகிப்து கடந்த காலத்தில் இஸ்ரேலுடன் செய்துகொண்ட நட்புறவு ஒப்பந்தம் மீறப்படுமோ என அது அச்சம் கொண்டுள்ளது. ஏனேனில் எகிப்து அமெரிக்காவின் உதவியுடன் மிகப்பலமான நவீனமானதொரு இராணுவத்தைக்கட்டியெழுப்பியுள்ளது. இந்த இராணுவம் எதிர்காலத்தில் தலையிடியாக மாறுமோ என இஸ்ரேல் அச்சம்கொண்டுள்ளது
ஆனால் எகிப்திய ராணுவம், எகிப்து கடந்தகாலங்களில் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்களை மதித்து நடக்குமென தற்போது அறிவித்திருக்கிறது.
முபாரக் பலஸ்தீனத்தின் காசா பகுதியுடனான எல்லையை முழுமையாக மூடி இஸ்ரேலின் காசாப் பகுதி மீதான பொருளாதாரத்தடையை வலுவூட்டியிருந்தார். எதிர்காலத்தில் எகிப்தில் உருவாகப்போகும் சனநாயக அரசு காசாவுடனான எல்லையத் திறந்துவிடுமானால் இஸ்ரேலின் கடும் போக்கின் மீது கடுமையானதொரு அடி விழக்கூடும்.
எவ்வாறெனினும் எகிப்தில் நடந்து முடிந்த இந்த எழுச்சி
எங்கள் முன் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
- · இராணுவம் இனிவரும் காலத்தில் முற்றுமுழுதாக சனநாயக ரீதியான தேர்தல்களை நடாத்த அனுமதிக்குமா?
- · முபாரக் பதவி விலகினாலும் அவரால் ஸ்தாபிக்கப்பட்ட பொலிஸ் மற்றும் புலனாய்வுக் கட்டமைப்புக்களும் முபாரக்கின் அதிகாரத்தால் நன்மையடைந்த சிறுபகுதி உயரிகள்குழுவும் என்ன செய்யப்போகிறார்கள்?
- · முபாரக் அரசினால் கைது செய்யப்பட்ட 18000 அரசியல் கைதிகளுக்கு என்ன நடக்கப்போகிறது?
- · 30 வருடகால அவசரகாலச் சட்டம் எப்பொழுது நீக்கப்படும்?
- · சனநாயக மாற்றங்களுக்கு இடமாளிக்காத அரசியல் சாசனம் எப்படி மாற்றப்படப்போகிறது?
- · எல்லாவற்றிலும் முக்கியமானது கிளர்ச்சியில் ஈடுபட்ட இளைஞர்கள் கிளர்ச்சிக்கு தலைமை தாங்க வந்து பின் மக்களையே மந்தைகளாக்கி மேய்க்கும் அரசியற்போக்கு வேண்டாம் எனக் கூறி குறிப்பிட்ட காலத்துக்கொரு முறை தேர்தல்களில் வாக்களிப்பதுடன் நிறைவடைந்துவிடுகிற தேர்தல் முறைமை சனநாயகத்தை(electoral democracy) நிராகரித்து, மக்கள் பங்கேற்கும் ஒரு சனநாயகக் கட்டமைப்பு( Participatory_democracy)வேண்டும் எனக் கூறியிருந்தார்கள். அவர்கள் கேட்ட பங்கேற்பு சனநாயகம் எகிப்தில் கிடைக்குமா?
- · ஊழலை ஒழித்து சுற்றுலாத் துறையாலும், சுயஸ் கால்வாயாலும் வரும் வருமானங்ளை நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் அது அடிமட்ட மக்கள் வரைக்கும் கொண்டு செல்லக்கூடிய அரசியல் பொருளாதார கொள்கைகளைக் கொண்ட ஒரு அரசை உருவாக்கி பொலிசையும் இராணுவத்தையும் புலனாய்வுக் கட்டமைப்புக்களையும் சனநாயக ரீதியாக மாற்றியமைத்து புதிய எகிப்தை உருவாக்குவது இலேசான விடையமாகளிருக்குமா?
- · தனது நலன்களுக்காக சர்வாதிகாரிகளை ஆதரித்து வரும் அமெரிக்காவுக்கு இந்த மக்கள் தெளிவாக ஒன்றைச் சொல்லியிருக்கிறார்கள் “நாங்கள் விரும்பாதவர்களை நீங்கள் வைத்திருக்கமுடியாது” என்று.
- · மக்களின் இரத்தத்தினை உறிஞ்சும் சர்வாதிகாரிகளுக்கு, அவர்களை என்றென்றைக்கும் அமெரிக்காவால் காப்பாற்ற முடியாது என்பதைத் துனீசிய மற்றும் எகிப்திய மக்கள் உணர்த்தியிருக்கிறார்கள்.
- · பொலீசுக்கும் தடியடிகளுக்கும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளுக்கும் தண்ணீர்ப்பீச்சியடிப்புக்களுக்கும் புலனாய்வுத் துறைக்கும் நாங்கள் என்றென்றைக்கும் பயந்திருக்கமாட்டோமென்பதை தங்களை ஆட்சி செய்த சர்வாதிகாரிகளுக்கு சொல்லியிருக்கிறார்கள்.
துனீசியாவில் பழவியாபாரி இளைஞர் ஒருவர் தொடக்கி வைத்த நெருப்பு மக்களை தன்னிச்சையாக இனமதமொழி பேதமின்றி ஒருங்கிணைத்து வன்முறையற்ற போராட்டம் ஒன்றை எந்தத்தலைவர்களின் வழிகாட்டல்களுமின்றி நடாத்தியிருக்கிறது.
GTNற்காக அரிதேவா
13-02-2011
குறிப்பு: வாசகர்கள் சிவப்பு நிறமிடப்பட்டிருக்கும் இணைப்புகளுக்கு செல்வதன் மூலம் இக்கட்டுரைக்கான தகவல் மூலங்களையும் மேலதிக தகவல்களையும் பெற்றுக் கொள்ளலாம் -
மீள்பிரசுரம் செய்பவர்கள் எழுதியவர் பெயர் இணையத்தின் பெயர் என்பவற்றை குறிப்பிடல் வேண்டும்:-