International Herald Tribune இல் வெளியான தற்கொலைத்தாக்குதல்கள்-வெடிகுண்டுக்குப்பினால் உள்ள பெண்மணி” என்னும் கட்டுரையின் தமிழ் வடிவம் இது.
இதனை எழுதியவர் Lindsey O'Rourke
இவர் அரசியல் விஞ்ஞானத்தில் கலா நிதிப்பட்டம் பெறுவதற்காக சிக்காகொ பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.
இக்கட்டுரை தொட்டுச்செல்கிற மிக முக்கியமான சில விடையங்கள் கருதி இதை மொழிபெயர்க்க விரும்பினேன்
தற்கொலைப்போராளிகள் பற்றி இக்கட்டுரை ஆழமான பார்வையை கொண்டிராத போதும் அமெரிக்க நலனில் இருந்து பிரச்சனையை அணுகுகின்ற போதும்
பெண் தற்கொலைப் போராளிகளின் விளைதளங்களான இரண்டு அம்சங்களை சுட்டுகிறது
1. அந்தந்த நாடுகளில் நிலவும் பெண் ஒடுக்குமுறைகள்.
2.அன்னிய ஆக்கிரமிப்பு
கட்டுரையில் சில பகுதிகளை தடிப்பாக்கி நிறமுட்டியிருக்கிறேன்
அழுத்தம் தருவதற்காக.
மொழி பெயர்ப்பும் குறிப்பும்
தேவ அபிரா
21/09/2008
தற்கொலைத்தாக்குதல்கள்-வெடிகுண்டுக்குப்பினால் உள்ள பெண்மணி
இந்தக் கிழமை மேலும் நான்கு ஈராக்கி பெண்கள் தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர் இந்த வருடத்தில் பெண் தற்கொலையாளிகள் மேற்கொண்ட 27வது தாக்குதல் இதுவாகும்.
பத்திரிகைகளை அல்லது தொலைக்காட்சிகளை அவதானிப்பவர்கள் அல்லது படிப்பவர்கள் இப் பெண்களின் தற்கொலைப்பயங்கரவாதத்தின் வேர்களைப்பற்றித் தெளிவற்ற கருத்தை அல்லது தவறான அபிப்பிராயத்தையே கொள்ளும்படி வழிநடத்தப்படுவது புலனாகிறது.
இந்தப் பெண்கள் விரக்தியினால், மனநோயினால், சமய அடிப்படையில் உண்டான ஆணாதிக்கக் கருத்துக்களின் ஆதிக்கத்திற்குட்பட்டதால், பால்ரீதியிலான சமமின்மையால் உண்டான விரக்தியினால், மேலும் பெண் என்பதால் இருக்கக் கூடிய சிறப்பான ஒடுக்குமுறைக்காரணிகளால் பயங்கரவாதிகளாக மாறியதாகக் கூறப்பட்டிருக்கிறோம்.
உண்மைதான்! இங்கு எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் ஒரே கருத்து என்னவெனில் ஆணையும் பெண்ணையும் தற்கொலைக்கொலையாளிகளாக மாற்றுகின்ற உந்துணர்வு அடிப்படையில் வேறுபட்டதாகும். ஆயினும் இங்கு முக்கியமான பிரச்சினை என்னவெனில் பெண்களைத் தற்கொலையாளிகளாக மாற்றுகிற குறிப்பான பெண்ணியக் காரணிகள் இவை எனச் சுட்டிக்குறிப்பிடுவதற்கு ஆதாரங்கள் மிகக்குறைவு அல்லது இல்லை எனலாம்.
1981 ம் ஆண்டில் இருந்து உலகம் முழுவதும் பெண்களால் மேற்கொள்ளப்பட்டுவந்த தற்கொலைத் தாக்குதல்களை நான் அவதானித்து வந்துள்ளேன்.ஆப்கானித்தான், இஸ்ரேல், இந்தியா, லெபனான், பாகிஸ்தான், ரஸ்சியா, சோமாலியா, இலங்கை, துருக்கி மற்றும் உஸ்பெஸ்கிஸ்தான் ஆகிய நாடுகளில் நிகழ்ந்த சம்பவங்களையே குறிப்பிடுகிறேன். மேற்குறித்த நாடுகளில் தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்ட அப் பெண்களின் நோக்கங்களை அறிவதற்காக மேற்குறித்த தாக்குதல்கள் பற்றிய தரவுகளை, தற்கொலைப் பயங்கரவாதம் தொடர்பான சிக்காகோ ஆய்வுத்திட்டத்தின் தரவுக்கோவையில் உள்ளடக்கப்பட்டிருந்த, அதுவரை அறியப்பட்டிருந்த பெண் தற்கொலைத் தாக்குதல் பற்றிய விபரங்களுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தேன். இந்த ஆராட்சி என்னை தெளிவான ஒரு முடிவுக்கு இட்டுச் சென்றது.
தற்கொலைத் தாக்குதலுக்கு பெண்ணைத் தூண்டுகிற பிரதான உந்துணர்வுகளும் சூழ்நிலைகளும் ஆண்களை அதே வகையான (தற்கொலைத் தாக்குதலுக்கு) தாக்குதலுக்கு தூண்டுகிற காரணிகளில் இருந்து பெருமளவில் வேறுபட்டதாக இருக்கவில்லை. ஆயினும் பெண் தாக்குதலாளர்களை ஆட்சி செய்யும் பரிமாணங்களைப் புலனாய்வு செய்வது இவ்வகையான தாக்குதல்கள் பற்றிய தவறான கருதுகோள்களைத் திருத்திக் கொள்ள உதவுவதுடன் பொதுவில் தற்கொலைப் பயங்கரவாதத்தின் முக்கியமான பண்புகளை இனம் கண்டுகொள்ளவும் உதவும்.
இது தொடர்பாக ஆரம்பிப்பதற்கு எளிமையான- இது பெண் தாக்குதல்காரர்களினது எனப் பொதுமைப்படுத்தப்படக்கூடிய அவர்களது எண்ணிக்கை, வயது இயல்புகள் குணாதிசியங்கள், நோக்கங்கள், சமூகநிலை போன்ற அம்சங்கள்( Demographic profile)அவர்களிடையே இல்லை.
1980 களில் லெபனானில் இருந்து இஸ்ரேலை வெளியேற்றுவதற்காக தற்கொலைத் தாக்குதல்களை ஆரம்பித்து வைத்த திருமணமாகாத இடதுசாரிகளால் இருந்து, தங்களது கணவர்மார்களைப் போர்களில் இழந்த செச்சென்யாவின் கறுப்பு விதவைகள் என அழைக்கப்பட்ட பெண் தற்கொலைத் தாக்குதலாளிகளில் இருந்து, இலங்கையின் பிரிவினவாத இயக்கமான விடுதலைப் புலிகளின் நீண்டநாள் அதிதீவிர விசுவாசிகளான பெண் தற்கொலை போராளிகள் வரை எல்லாருமே கருத்தியலிலும் தன்னிமனித அனுபவங்களிலும் மிக வேறுபட்ட வாழ்க்கை வரலாற்றுக்குறிப்புகளையே வெளிப்படுத்தி நிற்கிறார்கள்.
செய்திகளை சுவாரசியமாக்குவதற்கும் வாசகர்களை ஆர்வப்படுத்துவதற்கும் (மேலும் பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித்தனத்தினை கோடிட்டுக் காட்டுவதற்காகவும் தாக்குதல்களில் ஈடுபடும் இவ்விளம் பெண்களை உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் எனவும் இத்தாக்குதல்களை மேற்கொள்ளும்படி பலவந்தப்படுத்தப்பட்டவர்களாகவும் கதைகளிலும் செய்திகளிலும் சித்தரிக்கப்படுகிறார்கள். ஆனால் இவ்வகையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மிகச்சிலவே! உதாரணமாக தற்கொலைத் தாக்குதல்களில் ஈடுபடும் பெண்கள் தங்களது நடு இருபது வயதுகளைக் கடந்தவர்களாகவும் இவ்வாறான தாக்குதல்களில் ஈடுபடும் ஆண்களை விடவும் வயது கூடியவர்களாகவும் காணப்படுகின்றனர்
மேலும் பெண்கள் பலவந்தப்படுத்தப்பட்டே தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படுகிறார்கள் என்ற கூற்றும் மிகையானதாகவே இருக்கிறது.
ஊதாரணமாக பக்தாத் பொம்மைச் சந்தையில் பலரைத் தற்கொலைத் தாக்குதல் மூலம் கொன்ற இரு பெண்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என நன்கு பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால் பிற்பாடு அது அவ்வாறில்லை என அறியப்பட்டது.
இஸ்லாமிய அடிப்படை வாதத்தை இது தொடர்பில் குற்றம் சொல்வதும் சூழ்நிலைகளுக்குப் பொருந்தாத வாதமாகும்.
1981ம் ஆண்டில் இருந்து தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்ட பெண் போராளிகளுள் 85 வீதமானவர்கள் மதசார்பற்ற நிறுவனங்களின் சார்பிலேயே தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர் என்பது மட்டுமல்ல இவர்கள் கிறிஸ்தவ மற்றும் இந்து குடும்பங்களிலேயே பிறந்து வளர்ந்தவர்களாகவும் இருந்திருக்கின்றனர்.
மேலும் இஸ்லாமியக் குழுக்கள் பொதுவில் பெண்கள் தற்கொலைப் போராளிகளாக உருவாகுவதை ஊக்குவிக்கவில்லை என்பதுடன் மிகத் தவிர்ப்பான சூழ்நிலைகளில் மிகக் கோபமும் தாக்கவேண்டும் என முனைப்பும் உறுதியும் கொண்டிருந்த சிலரையே தற்கொலைத்தாக்குதலாளிகளாக அனுமதித்தனர்.
2000 ம் ஆண்டு இரண்டாவது இன்ரிபாடா(Intifada) வின் ஆரம்பத்தில் கமாஸ் இயக்கத்தின் ஆரம்ப ஸ்தாபகரான சேக் அகமட் யாசின் பின்வருமாறு கூறினார்: “பெண் தற்கொலைப் போராளி என்னும் கருத்து இஸ்லாமிய சமூகத்திற்குப் பிரச்சினை தரும் விடையம். பெண்னை இத்தகைய தாக்குதல்களுக்கு சேர்த்துக் கொள்பவர்கள் இஸ்லாமியச் சட்டங்களை மீறுகிறார்கள்”
2002ம் ஆண்டு சமய சார்பற்ற அமைப்பான அக்ஸ் தற்கொலைப் படை (Aqsa Martyrs Brigade) சார்பில் குண்டுத் தாக்குதலை நடாத்திய இரண்டாவது பலஸ்தீனப் பெண் போராளியான தாரின் சுபு எய்சேக்(Dari abu Eisheh) இனை கமாஸ் நிராகரித்திருந்தது.
ஆக பெண் தற்கொலைப் போராளிகளை தூண்டுவது எது?.
ஆச்சரியப்படத்தக்க வகையில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஆண்களை ஈடுபடத் தூண்டுகிற அதே விடையங்களே பெண்களையும் ஈடுபடத் தூண்டுகின்றன.
95 வீதமான தற்தொலைத் தாக்குதல்கள் அந்நிய ஆக்கிமிப்புப் படைகளுக்தெதிரான இராணுவத் தாக்குதல்களின் நிமித்தமே செய்யப்பட்டுள்ளன. இதனை நான் மேலெழுந்தவாரியான ரீதியில் சொன்னாலும் இத்தாக்குதல்களின் தந்திரோபாய ரீதியான தர்க்கவியல் தங்களது இன ரீதியான பிரதேச இறையாண்மையை உருவாக்குதல் அல்லது தக்கவைத்தல் என்பதாகவே இருக்கிறது.
இத்துடன் தொடர்புடையதாக ஆண் மற்றும் பெண் தற்கொலைப் போராளிகளின் முதன்மையான தனிமனித உந்துணர்வாக இருப்பது அவர்களின் சமூகம் மீதான ஆழமான பற்றுறுதியும் எதிரிப்படைகளின் மீது கொண்டுள்ள பல்வேறு தனிப்பட்ட வெறுப்பணர்வுகளும் ஆகும்.
பயங்கரவாத இயக்கங்கள் ஆண்களினதும் பெண்களினதும் தனிப்பட்ட இத்தகைய உந்துணர்வுகளை நன்கு அறிந்து வைத்துள்ளன. இதனடிப்படையில் அமைந்த ஆட்சேர்ப்புத் தந்திரோபாயங்கள் பெண்களை முதன்நிலைப்படுத்தி நிற்கின்றன.
இந்த ஆட்சேர்ப்புத் தந்திரங்கள் பல வாதங்களை- இன்னும் ஒன்றுடன் ஒன்று முரண்படுகிற வாதங்களை முன்வைக்கின்றன.
சமூகத்தில் ஒடுக்கபட்டுள்ள பெண்கள் அதற்கெதிரான ஒரு பெறுமதியான மதிப்புமிக்க பங்களிப்பைத் தற்கொலைத் தாக்குதல்கள் மூலம் செய்வதாகக் கூறப்படுகிறது.
தேசியத்தில், சமயத்தில், சமூகத்தில் பெண்ணுக்கு கொடுக்கப்பட்டுள்ள பாத்திரத்தை மீறுவதன் மூலம் ( தற்கொலைத் தாக்குதல் மூலம்) பழிவாங்குவதன் மூலம் பெண்களுக்கு மதிப்பளிக்கப்படுதிறது என்னும் வாதம் முன்வைக்கப்படுகிறது. எதுவாயினும் தந்திரோபாய ரீதியான மூல நோக்கம் அந்நியப்படைகளுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தலென்பதாகும் எனவே மூலவுபாயத்துடன் முரண்படாத எந்தவொரு உந்துணர்வும்மேற்றுக்கொள்ளப்படுகிறது.
எல்லா மதசார்பற்ற இயக்கங்களும் ஆரம்பத்திலேயே அடிக்கடி தற்கொலைத் தாக்குதல்களுக்குப் பெண் போராளிகளைப் பயன்படுத்தி இருந்தனர். உதாரணமாக குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் 76 சதவீதமான தற்கொலைப்போராளிகள் பெண்கள். இதேபோல செஸ்னியாவின் பிரிவினவாத குழுக்களின் 66 வீதமான தற்கொலைப் போராளிகள் பெண்கள். சிரியாவின் தேசிய சோசலிச கட்சியின் 45 வீதமான தற்கொலைத் தாக்குதலாளிகள் பெண்கள். விடுதலைப் புலிகளினது சதவீதம் 25 ஆகும்.
சமய ரீதியான குழுக்கள், சமய ரீதியற்ற குழுக்களின் பெண் தற்கொலைத் தாக்குதலாளர்களின் வெற்றிகளை அவதானித்த பின்னரே தற்கொலைத் தாக்குதல்களில் பெண்களை ஈடுபடுத்துவதில் உள்ள தந்திரோபாய முக்கியத்துவத்தை உணர்ந்தன.
உதாரணமாக ‘உம் ஒசாமா'(Um Osama) எனத் தன்னை அழைத்துக் கொண்ட அல்கைடாவின் பெண் பிரதிநிதி ஒருவர் சவுதி அரேபியாவின் பத்திரிகை ஒன்றுக்கு 2003ம் ஆண்டு வழங்கிய பேட்டியொன்றில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் பலஸ்தீன இளம் பெண் போராளிகள் நடாத்திய தாக்குதல்களினால் கிடைத்த வெற்றிகளில் இருந்தே பெண் தற்கொலைக்கொலையாளிகள் பற்றிய கருத்தாக்கம் எடுத்துக் கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தற்கொலைத் தாக்குதல்களுக்கு ஏன் பெண்களை உபயோகிக்க வேண்டும்?
இந்த தாக்குதல்கள் நிகழ்கிற இடங்களில் உள்ள சமூகங்களில் பெண்ணின் நடத்தைகள் தொடர்பான விதிகள் அல்லது ஒழுங்குகள் இருக்கின்றன. உண்மையிலும் அவ்வாறு தோன்றாவிடினும் இவ் விதிகள் அல்லது ஒழுங்குகள்தான் பெண் தாக்குதலாளாளர்களை உருவாக்கும் தந்திரோபாய மூலமாக இருக்கிறது.
அனேகமான இந்நாடுகளில் பெண்கள் இரண்டாம் தரப்பிரசைகளாகவே இருக்கின்றனர். பெண்கள் இராணுவக் கண்ணோட்டத்தில் குறைந்தளவு சந்தேகப்பார்வைக்குள்ளாகின்றனர். மேலும் பெண்களால் வெடிபொருட்களை இலகுவாக மறைத்துக் கொள்ளவும் முடிகிறது. “பெண் தாக்குதலாளர்கள் என்பது இன்னும் அதிர்ச்சிக்குரிய விடையமாக இருப்பதுடன் பெண் தாக்குதலாளர்கள் செய்தி ஊடகங்களின் குறிப்பான கவனத்தை ஈர்ப்பவர்களாகவும் அமைகின்றனர். இதன் மூலம் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்களையும் ஈர்க்க முடிகிறது.
இவ் எண்ண ஓட்டத்தில் எனது ஆராட்சியில் இன்னுமொன்றும் புலனாகியது. தனியொரு இலக்கை அல்லது ஒருவரைத் தாக்கி அழிப்பதற்கு ஆணைவிடப் பெண் தற்கொலைத் தாக்குதலாளரைப் பயன்படுத்தும் உத்தியே அது.
இதற்கு உதாரணமாக மிகப்பிரபலமான தற்கொலைத்தாக்குதலான 1991ம் ஆண்டு இந்தியாவின் பிரதம மந்திரியான ராஜுவ் காந்தி மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலைக் குறிப்பிடலாம். இது விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதலாளியான தேன்மொழி ராசரத்தினம் என்பவரால் மேற்கொள்ளப்பட்டதாகும்.
ஆக ஈராக்கில் பெருகி வரும் பெண் தற்கொலைத் தாக்குதால்காரர்களிடம் இருந்து எப்படி பாதுகாப்பை பலப்ப்டுத்துவது?
தர்க்க ரீதியாக பார்த்தால் பாதுகாப்பு முனைகளில் பெண்களை மிகக்கவனமாகச் சோதிப்பது முதற்படியாக இருக்கும். இதற்கு இணையாக அமெரிக்க அதிகாரிகள் அண்மையில் “ஈராக்கின் புதல்விகள்” என்னும் திட்டத்தையும் தொடங்கியுள்ளனர். இதன்மூலம் ஈராக்கில் பெண்களுக்கு பெண்களைச் சோதனையிடுவதற்கு பயிற்சி வழங்கும் முயற்சியில் உள்ளனர். இதன்மூலம் பெண் தாக்குதலாளர்களை இலகுவாக அடையாளம் காணமுடியும் என்பது நோக்கமாகும்.
ஏவ்வாறெனினும் இத்திட்டம் திட்டவட்டமான விளைவுகளை தருமென்பதற்கு எந்த உறுதியுமில்லை. என்பதற்குப் பின்வரும் மூன்று விடையங்களும் ஆதாரமாகும்.
முதலாவது இத்திட்டம் மிகச்சிறியதாகவும் 30 பெண்களே இப்பயிற்சியை முடித்து வெளியேறியும் உள்ளனர். மேலும் இவர்கள் ஒரு மாதத்தில் சில நாட்களே வேலையில் ஈடுபடுகின்றனர்.
இரண்டாவது அந்நியப் படைகளுக்கெதிரான கோப உணர்வே இத்தற்கொலைத் தாக்குதல்களுக்கு மூலவேராக இருக்கும் போது ஈராக்கில் பெண்களது தேசாபிமானத்தை மேற்குறித்த திட்டத்தின் மூலம் விலைக்கு வாங்க முற்படுவது இன்னும் ஆத்திரமூட்டும் செயலாகவே இருக்கும்.
மூன்றாவது கடுமையான பாதுகாப்புக் கட்டமைப்புக்கு எதிராக புதிய தந்திரோபாயங்களைத் தேடி வரும் சமய அடிப்படைவாதக் குழுக்கள் பெண்களை தாக்குதலாளர்களாக உள்வாங்காத பழமையான நிலைப்பாட்டில் இருந்து மாறிப் பெண்களைத் தற்கொலைத்தாக்குதலாளர்களாக மாற்றும் நிதர்சனம்.
ஆக ஈராக்கின் புதல்வியர் போன்ற இத்திட்டங்கள் தற்காலிகமானவையே.
நீண்ட காலத்தில் பெண் தற்கொலைத் தாக்குதல்களைக் குறைப்பது என்பது ஈராக்கில் ஈராக்கி மக்கள் தங்களது பிரத்தியேகமானது எனக் கருதுகிற சூழ்நிலைகளில் அமெரிக்க படைகளின் பிரசன்னத்தைக் குறைக்கும் தந்திரோபாயத்துடன் சம்பந்தப்பட்டதேயாகும். அதேவேளை எல்லா ஈராக்கியர்களுக்கும் போதுமான உதவிகளை வழங்குவதன் மூலம் அவரகள் எல்லோரினதும் வாழ்க்கைத் தரத்தை உயரத்த உதவவும் வேண்டும்.
ஆக இப்போதைக்கு தந்திரோபாயரீதியாக பெண்தற்கொலைத்தாக்குதலாளர்களுக்குள்ள தேவையைக் கருத்துக்கெடுக்கும் போது அவர்களின் தாக்குதல்கள் பெருகுவதையே காணமுடியும்.
தங்களது கண்களில் தமது தேசம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் காண்கிற அவர்கள் அதனை முடிவுக்கு கொண்டுவருவதற்காக தங்களையும் தங்களது சக நாட்டாரையும் கொல்கிறார்கள்.
நன்றி
International Herald Tribune.
SUICIDE ATTACKS
The woman behind the bomb
By Lindsey O'Rourke
Published: August 4, 2008
be open!! write your own meaning also
பதிலளிநீக்குஅருமையான மொழிபெயர்ப்பு கட்டுரைக்கு நன்றி. தொடரட்டும் உங்கள் பணி.
பதிலளிநீக்குகலையகம்