பின்பற்றுபவர்கள்

29 மார்ச், 2009

அதர்மச்சக்கரம்

மரண வீட்டின் ஒப்பாரிக்கும்
இடுகாட்டின் மௌனத்திற்குமிடையே
என் சொற்கள் சிக்கிக்கொண்டன.

தரையில் பதிந்த இராட்சதக்காலடிகளைக்
கண்டேங்கிப்போனேன்.
ஓரிலையோடெனினும் ஒருமரப்பொந்திருப்பின்
என் பிள்ளைகளை ஒழித்து வைப்பேன்
இல்லையே! எங்கே போயின வனங்கள்?

இருண்ட குழியுள் இரவும் பகலும் சிக்கிக்கொண்டன
மருண்ட கண்ணைக்கருநாகம் கொத்தியது.

எனது காவலர்களோ உன்மத்தமாயிருக்கிறார்கள்
அவர்களின் இதயம் கல்லாயிருக்கிறது
மலையே வரினும் தலையே சுமவென்னும்
காலத்தைத் தாங்குவாய் வாழி!
நம்பிகைகளைச் சுமந்தவர் முதுகில்
கூன் விழாதிருக்கக் கடவது.

கணங்கள் யுகங்களாகின்றன.
இரக்கமற்ற கண்களைக் காண விரும்பாதவர்
எங்கென்றாலும் தனித்தேயிருப்பர்.
இயலாமைக்கும்
எதிலிமைக்கும்
நடுவிலோர் இடைத்தங்கல் முகாமெதற்கு?

ஊழித்தாண்டவமாடும் தர்மச்சக்கரம்
என்தலையிற்புரிவிட்டுச் சுழல்கிறது.
வங்காள விரிகுடாவில்
இரத்தம் வழிகிற என் முகத்தைச்சுற்றிச்
சுறாக்களும் கழுகுகளும் வலம் வருகின்றன.

அட பிணம் தின்னி!
நீ உனக்கு மட்டுமே எனச்சொல்கிற
இந்த நாடு ஓர் நாள் இந்து சமுத்திரத்தில் பிணமாக மிதக்கும்.

தேவ அபிரா
27.03.2009