பின்பற்றுபவர்கள்

13 ஜனவரி, 2010

துயரின் நிழலே படராப்பொழுதாய்

துயரின் நிழலே
படராப்பொழுதாய்
நீளும் வாழ்வே நினதாய் ஆக
வருவார் உன் அப்பா
விழிகள் மூடு எந்தன் முத்தே!

வாழ்த்துளிகள் தேட நினைந்து
காலக்கடலைக் கடைய முனைந்து
அழிவின்கரையில் அடங்கிப்போனோம்
ஊரின் துயரம் வழியும் விழியில்
ஆரும் கேட்கா அகதியானோம்
ஒலைக்குடிலுள் உனது கோபம்
உறங்கமறுத்து ஊரை எழுப்பும்
சிறிய மகளே நறிய முகத்திற்
நகையைச்சேர்த்து உறங்குவாயோ

துயரின் நிழலே
படராப்பொழுதாய்
நீளும் வாழ்வே நினதாய் ஆக
வருவார் உன் அப்பா
விழிகள் மூடு எந்தன் முத்தே!

நாறிகிடந்த பிணங்கள் கடந்து
ஊர்கள் தோறும் உன்னைச்சுமந்து
நினைக்க முடியா அகதி வாழ்வில்
நீயும் வரமாய் வந்து சேர்ந்தாய்
எமது இரவில் அவரின் மடியில்
கிறங்கிக் கிடந்த கணங்கள் நூறு
அறியாவயதில்உறங்கிக்கொள்ளு
அறியும் வயதில்விழித்துக்கொள்ளு.
சிறிய மகளே நறிய முகத்திற்
நகையைச்சேர்த்து உறங்குவாயோ

தேவ அபிரா
01/10

அறிவென்பது இயங்கியலை அறிவது

அறிவென்பது இயங்கியலை அறிவது‐


அண்மையில் குளோபல் தமிழ் செய்தியில் மீள் பிரசுரிக்கப்பட்ட நிலாந்தனின் கட்டுரையையும் அது தொடர்பாக ஸ்ராலின் குரு என்பவரின் எதிர்வினையையும் வாசித்தபின் தோன்றிய எண்ணங்களை இங்கு பகிர்ந்து கொள்ள விளைகிறேன்

வீரதீர சாகசங்களின் காலம் எப்பொழுதோ முடிந்துவிட்டது. விளைவுகளே வழிவகைகளை நியாயப்படுத்தி விடும் என்ற வாதமும் தோற்றுப் போய்விட்டது. இது அறிவின் யுகம். இப்பொழுது அறிவுதான் எல்லாமும். உயிரை ஆயுதமாகப் பாவித்த ஒரு சிறிய இனம் இனி அறிவை ஆயுதமாகப் பாவிக்கவேண்டும்.

அறிவுதான் ஆயுதம்

அறிவுதான் சக்தி

அறிவுதான் பலம்

அறிவுதான் நிரந்தரம்

புத்திமான் பலவான்
நிலாந்தன்


இலங்கையின் வரலாறு நெடுகிலும் இனங்களுக்கிடையே முரண்பாடுகள் இருந்து வந்திருக்கின்றன. மன்னராட்சிக்காலத்தில் அது சுயமாக இருந்த இராசதானிகளுக்கிடையிலானதாகவிருந்தது. பின்னர் இலங்கை முழுவதையும் ஒரே குடையுட்கொண்டு வந்த பிரித்தானியர்கள் இம்முரண்பாடுகளைப் பேணியும் தமது தேவைக்கேற்பப் பயன்படுத்தியும் வந்தனர்.

இனங்களுக்கிடையிலான முரண்பாட்டை ஊக்குவித்த காலனித்துவஆட்சியாளர்கள் உருவாக்கித் தந்த அரசியல் யாப்பு இன இணக்கப்பாட்டிற்கோ சம உரிமைக்கோ வழிவகுக்கவில்லை. தேசிய வாதங்களின் வளர்ச்சிக்கான அடித்தளம் அன்றே இடப்பட்டு விட்டது.

மக்களை அறிவூட்டுவதன் மூலம் அரசியல் செய்வதை விட மக்களுக்கு உணர்வூட்டுவதன் மூலம் அரசியல் செய்வது இலகுவானது என்பது மன்னராட்சி காலத்தில் இருந்தே அறியப்பட்ட சமூக உளவியலாகும். இதனை வளர்ச்சியடைந்து வரும் அனைத்து நாடுகளிலும் பொதுப்பண்பாகக்காணலாம்.

பெரும்பான்மையின அரசியல்வாதிகள் பெரும்பான்மையின மக்களின் இருப்புக்கு சிறுபான்மை இனங்கள் அச்சுறுத்தலாக உள்ளன என்னும் தோற்றப்பாட்டை ஏற்படுத்தி அவர்களின் உணர்வுகளைத் தூண்டுவதின் மூலம் அவர்களின் வாக்குகளைப்பெற்று இலகுவாக அதிகாரத்திற்கு வரமுடியும் எனக்கண்டுகொண்டனர்.(இலங்கையின் வரலாறு நெடுகிலும் இதனைஅவதானிக்கமுடியும்)

இன மத சாதிய ஒடுக்குமுறைகள் நிலவும் நாடுகளிற் சிறுபான்மையின அரசியல்வாதிகளும் இதே தந்திரோபாயத்தைக் கைக்கொள்வதைக்காண்கிறோம். வாக்குகளைப்பெறுவதற்காகமட்டும் அவற்றை தூண்டிவிடும் இவ்வரசியல்வியாபாரிகள் தேர்தல்களின் பின் ஒடுக்குமுறையாளர்களுடன் சமரசம் செய்துகொண்டு ஒடுக்குமுறைகளுக்கெதிரான எந்தவித அரசியற்செயற்பாடுகளிலும் ஈடுபடுவதில்லை.



தமது அரசியல்வியாபாரத்துக்காக தமிழ்த்தேசியவாதத்தைப் பயன்படுத்த முனைந்த பாராளுமன்றத்தமிழரசியல்வாதிகளால் அதன் இயங்கியலை இதயசுத்தியுடன் கையாள முடியாது போனமையால் அரங்கில் இருந்து உயிருடனோ உயிரில்லாமலோ அகலவேண்டி ஏற்பட்டது.

பாராளுமன்ற அரசியல்வாதிகளால் கிளர்த்தப்பட்ட தமிழ்தேசிய வாதம் பாராளுமன்ற அரசியலுக்கப்பால் தனக்கான வடிவத்தைத்தேடத்தொடங்கியது. அரசியலை வியாபாரமாகப் பார்க்காத இளைஞர்களைத் தமிழ்தேசியவாதம் ஈர்க்கத்தொடங்கியது.

பாராளுமன்ற அரசியலுள் உயிர்ப்பற்றிருந்த தமிழ்தேசிய வாதம் எல்லாவடிவங்களிலும் சிங்கள இனவாதத்தை எதிர்த்துத்தாக்குதல் என்னும் பண்புகொண்டு ஸ்தாபனமயப்படத்தொடங்கியது.

இன்றைக்கு அது மீண்டும் பாராளுமன்ற அரசியல்வாதிகளின் கையாலாகாத கைகளில் வந்து விழுந்திருக்கிறது. படிப்படியான இன முரண்பாடின் போக்கில் தமிழ் தேசியவாதம் அரசியல்ரீதியான அமைப்புருவாக்கம் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. ஸ்தாபன‐இயக்க வடிவமடைய முனைந்த தமிழ் தேசியவாதம் பல்வேறு அகமுரண்களையும் சமூகக்குணாம்சங்களையும் பிரதிபலிக்கும் இயக்கங்களைப் பிரசவித்தது.

எற்கனவே இலங்கையில் இருந்துவந்த இனமுரண்பாடுகளை, சமூகங்களின் இயக்கவியலை புறநிலையாகப் பார்க்கக்கூடிய‐ அலசக்கூடிய இடதுசாரிகள் தமிழ் தேசியத்தின் எழுச்சியை சரியாகக் கையாளாது ஒதுக்கிவிட்டனர். இவ்விடத்தில் இலங்கையின் தமிழ் சிங்கள இடது சாரிகளின் இயங்கியல் எவ்வாறு இருந்தது அவர்கள் எவ்வாறு நடந்துகொண்டார்கள் எவ்வாறு தடம் புரண்டார்கள் என்பதை திரு தனபாலசிங்கம் அவர்கள் தனது சமீபத்திய அருமையானகட்டுரையொன்றில் அலசி ஆராய்ந்திருக்கிறார்.



http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=18193&cat=5


தமிழ்இடதுசாரிகள் விட்டதவறு வளர்ச்சி அடைந்து வந்த தேசியவாதத்தைச் சரியாகக் கையாளாதது. தமிழ்த்தேசியவாதிகள் விட்ட தவறு தேசியவாதத்தினுள் உள்ளடங்கியிருந்த பல்வேறு பிரிவினருக்கும் இடையிலான சனநாயக உரிமைகளை மறுதலித்ததும் அவர்களுக்கிடையேயான ஜக்கிய முன்னணியை உருவாக்காததும் ஆகும்.

சிங்கள பெளத்த இனவாதத்தின் ஒடுக்கு முறைக்கெதிரான தமிழ்தேசியவாதத்தின் அரசியல் எழுச்சியின் இயங்கியலை அதன் சனநாயக மயப்பாட்டை அதற்குள் உருவாக்கப்பட்டிருக்கக் கூடிய ஜக்கியத்தை அதன் கருவிகளாக இருந்த இளைஞர்களால் கண்டுகொள்ள முடியாது போனமை தனியே அவர்களின் தவறல்ல.

இளைஞர்கள் எந்தவித கேள்விகளுக்கும் உட்படுத்தப்படாது இருந்த தமிழ்சமூகத்தின் சனநாயக மறுப்புக் குணாம்சங்களை தமது அமைப்புருவாக்கத்தினுள் அனுமதித்துக்கொண்டனர்.

ஸ்தாபனங்களுக்குள்ளும் இடையிலும் இதய சுத்தியுடன் கூடிய சனநாயகக் கருத்துரையாடல்கள் இடம் பெறவில்லை. இடது சாரித் தன்மை கொண்டிருந்த ஸ்தாபனங்களுக்குள்ளும் கூட பேச்சளவில் உரையாடல் இருந்ததே அன்றி நடைமுறையில் பேசவல்லவர்கள் தனது சிந்தனையை ஏற்றுக்கொள்ள வைக்க முனையும் போக்கே இருந்தது. இடதுசாரித் ஸ்தாபனங்களினுள்ளும் கருத்து முரண்பாடுகள் ஒருகட்டத்திற்குமேல் உட்கொலைகளினாலேயே தீர்த்துவைக்கப்பட்டன.

விடுதலைப்புலிகள் ஆரம்பகாலத்திலிருந்து தமிழ் தேசியவாதத்தின் எதிர்த்துத்தாக்கும் பண்பை இராணுவத்தளத்தில் திட்டமிட்டு ஒருங்கிணைத்து வந்தனர். அவர்கள் ஸ்தாபனத்துக்குள் அரசியல் அறிவை சமூக அறிவை சனநாயக ரீதியான கருத்தாடல்களை திட்டமிடவோ கொண்டுவரவோ முயற்சிக்கவில்லை.

ஒரு சக்தி ஸ்தாபனமயப்படும் போது அது தனது வளர்ச்சிக்கு தேவைப்படும் எனச் செய்கிற விடையங்கள் நாளடைவில் கோட்பாடாகி முழுத் ஸ்தாபனத்தையுமே ஆட்கொள்ளத் தொடங்கிவிடும். இதனால்தான் சுய மதிப்பீடும் புறநிலைப் பார்வையும் விடுதலைஸ்தாபனங்களுக்கு அவசியமாகின்றன.

இராணுவ ரீதியான கட்டுக்கோப்பை கொண்டுவரும் நோக்கத்துடன் விடுதலைப்புலிகள் வளர்த்த கலாசாரத்தின் கூறுகளின் கைதியாக அவர்களே ஆனார்கள். தொன்மை பற்றிய கனவுடன் மண் மீட்புபற்றி மட்டுமே விடுதலைப்புலிகள் கவனம் செலுத்தினர். ஒரு வழியான அதிகாரத்தைப் பேணிக்கொண்டு தொடர்சியான ராணுவத் தாக்குதல்களைச் செய்யும் அமைப்பாக புலிகளின் இயங்கியல் குறுக்கமடைந்தது.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் இயங்கியல் அதனைத்தலைமை தாங்க விரும்பியவர்களுக்குப் பல பொறுப்புக்களைத் தந்திருந்தது.

• எங்களது சமூகம் எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அது அறியச்சொன்னது
• எங்களுக்குள் நிலவும் அகமுரண்பாடுகளை அறியச் சொன்னது
• எமது இருப்பை பாதிக்கும் அகப் புறக் காரணிகளை தேடச் சொன்னது
• இலங்கையில் ஏனைய சமூகங்களின் இயக்கவியலை ஆராயச் சொன்னது
• ஓட்டுமொத்த உலகின் இயங்கியலில் எங்களது இயக்கத்தினைப் பாதிக்கும் சகல காரணிகளையும் அலசி ஆராயச் சொன்னது.
• உலக இயக்கத்தை புரிந்து கொள்ளச்சொன்னது.


இயங்கியல் தந்த அத்தனை பொறுப்புக்களையும் குறிப்பாக தமிழர்களுக்காக போராட கிளம்பிய எந்தவொரு அமைப்பும் சரியாக நிறைவேற்றவில்லை. பிரபாகரனின் உழைப்பிலும் அர்ப்பணிப்பிலும் யாருக்கும் சந்தேகம் இருந்ததில்லை. எந்தப்பாராளுமன்ற அரசியல்வாதிக்கும் இல்லாத அர்ப்பணிப்பும் உழைப்பும் அவரிடம் இருந்தது.

ஆனால் தமிழீழ விடுதலைப்போராட்ட இயங்கியல் தன்முன் வைத்திருந்த விடைகாணப்பட வேண்டிய பல்வேறு கேள்விகளையும் அவர் கண்டுகொள்ளக் கூடிய நிலையில் இருக்கவில்லை. நடைமுறையைத் தத்துவத்திலும் தத்துவத்தை நடைமுறையிலும் தேடும் புறநிலையான பார்வையை அவர் கொண்டிருக்கவில்லை.

பன்முகப்பட்ட ஆனால் ஒருங்கிணைக்கப்ட்ட சனநாயக ரீதியான சமூக அரசியற் கூட்டுழைப்பை ஊக்குவிக்க வேண்டிய உறுதிப்படுத்த வேண்டிய ஒரு தலைவராக அவர் தன்னை வளர்த்துக் கொள்ள கூடிய இயங்குதளம் அவருக்கு வாய்க்கவும் இல்லை. அதை உருவாக்கும் முனைப்பு அவருக்கு இருக்கவும் இல்லை.

தான் சொல்வதைச் செய்பவர்களையே அவர் தேடினார். தமிழ்ச்சமூகம் பிரபாகரனைக் கேள்வியின்றி ஏற்றுக்கொண்டது என்று சொல்வதை விடவும் விடுதலைப்புலிகள் தங்களை மக்கள் கேள்வியின்றி எற்றுக் கொள்ள வேண்டுமென்பதையே விரும்பியிருந்தனர் என்று சொல்வதே பொருத்தமானதாகும். அவர்களை நம்பிவந்த இளைஞர்களுக்கு இருந்த ஒரேயொரு தெரிவும் அதுதான்.

விடுதலையுணர்ச்சி கொண்ட தமிழ் இளைஞர் கூட்டத்தினை பிரபாகரன் கேள்விகள் கேட்கக் கூடிய சனநாயகப்பொறிமுறையொன்றினூடாக வழிநடத்த முனையவில்லை.

தனது செயல்கள் தன்னையும் தனது சமூகத்தையும் எங்கு இட்டுச் செல்கின்றன என்பதை காணும் வலு அவருக்கும் அவரைச் சூழ இருந்தவர்களுக்கும் இருக்கவில்லை.

இவ்விடையத்தில் பிரபாகரன் என்னும் தனிமனிதனை குற்றவாளியாக்குவதும் சரியல்ல ஏனேனில் தமிழ் சமூகத்தில் சனநாயகமென்று வரும்பொழுது ஒவ்வொருவரும் தலைவராகவே இருந்து விட்ட விரும்புகிறார்கள்.




தமிழ் சமூகத்தினுள் சனநாயகத்தைப் பேணிக்கொண்டு அதேநேரம் இணைந்து வேலை செய்தல் என்பது இன்றளவும் சாத்தியமற்றதாகவே இருக்கிறது. பொது நோக்கம் ஒன்றை எட்டுவதற்கான கலந்துரையாடல், அதனை எட்டியபின் சரியான திட்டமிடல், வேலைப்பகிர்வு, தனிமனித இலாபநோக்கற்ற முகாமைத்துவம், தொடர்ச்சியான சுயமதிப்பீடு, அடையப்பட்ட இலக்குகள் தொடர்பான மீள்பரிசீலனை, மீண்டும் முன்நோக்கி நகர்தல் போன்ற அம்சங்களைக்கொண்ட சனநாயக இயக்கப்பொறிமுறையை தமிழீழவிடுதலைஸ்தாபனங்களின் இயக்கவியலினுள் காணமுடிந்திருக்கவில்லை.

எல்லா விடுதலை அமைப்புக்களின் தலைவர்களும் கடந்த கால அரசியல் வாதிகளும் தத்தமது நோக்கங்களை அவற்றை சனநாயக நிலைப்பட்ட உணர்வுடன் மக்கள்முன் வைக்காமல் சமூகத்தில் அவை என்ன விளைவுகளை கொண்டுவரும் என்ற பிரக்ஞையின்றி நிறைவேற்றவே முனைந்தனர் அவர்களது நோக்கங்கள் உன்னதமான இலட்சியமாக இருந்தன அல்லது கீழ்த்தரமான அதிகார ஆசையாகவிருந்தன. ஆனால் அவை செயல்வடிவம் கொடுக்கப்பட்ட முறையிலும் நிறைவேற்றப்பட்ட முறையிலும் சனநாயகத்தின் அடிப்படைப்பண்புகளைக் காணவேமுடியவில்லை.

தமிழர்களோ சிங்களவர்களோ அதிகாரம் யார் கையில் என்பதில் குறியாக இருந்தனரே அன்றி தாங்கள் எங்கு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதைப் பற்றி புறநிலையாக நின்று சிந்திக்கவில்லை. இது பிரபாகரன் என்னும் தலைவரின் குறைமட்டுமல்ல. இலங்கையின் அனைத்து சமூகங்களையும் அரசியல்ரீதியாகத் தலைமை தாங்கிய அனேகமான தலைவர்களின் குறைபாடும் இதுதான்.


விடுதலைப்புலிகள் தமது இராணுவநடவடிக்கைகளின் போது திட்டமிடல் முகாமைத்துவம் வேலைப்பகிர்வு போன்ற அம்சங்களை சரியான முறையில் பயன்படுத்தி இருந்தனர். ஆனால் இது ஒரு வழியான அதிகாரத்தின் மூலமே செய்யப்பட்டது. இராணுவக்கட்டமைப்புக்கு இது தேவைப்பட்டிருக்கக் கூடும். இராணுவ ரீதியான கண்ணேட்டத்தில் இது சரியாக இருக்கலாம். ஆனால் அரசியல் தளத்தில் அவர்களிடம் இந்த அணுகுமுறை இருக்கவில்லை.

இராணுவநடவடிக்கையொன்றின் நோக்கம் அரசியல்ரீதியானதாகும் அரசியல்ரீதியான கணிப்பீடுகளே ராணுவரீதியான முடிவுகளை எடுப்பதற்கான அடித்தளத்தை வழங்குகின்றன.

விடுதலைப்புலிகள் யாழ்குடா நாட்டிலிருந்தும் கிழக்கு மாகாணத்திலிருந்தும் முழுமையான பின்வாங்கல்களைச் செய்திருந்தனர். இவை முற்றிலும் விடுதலைப்புலிகளின் இராணுவ ரீதியான வளங்களின் பற்றாக்குறையின் அடிப்படையிலானவையாகும். இறுதியாக நடந்த பேச்சு வார்த்தைக் காலங்களில் தமீழீழப்பிரதேசங்கள் மீதான பாரிய இராணுவ நடவடிக்கைக்கான திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. விடுதலைப்புலிகளின் சர்வதேச இராணுவ வலையமைப்பை ஒடுக்குதல் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. மேலும் விடுதலைப்புலிகளை சர்வதேச ரீதியாக தனிமைப்படுத்தும் வேலைத்திட்டமும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டிருந்தது. விடுதலைப்புலிகளின் இருப்பை இராணுவ முறையில் காப்பாற்றமுடியாதென்பதற்கான சகல அறிகுறிகளும் தெரிந்து கொண்டிருந்த போது அதனை உணரமுடியாதவாறு அல்லது உணர்ந்தும் மீளமுடியாதவாறு அவர்களின் இயங்கியல் சென்றுவிட்டிருந்தது.

இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய விடையம் என்னவெனில் சிங்களப் பெருந்தேசியவாதத்தின் எள்ளளவும் விட்டுக்கொடுக்காத அதிகாரம் உலகத்தால் அதிக அழுத்தத்திற்கு உட்படுத்தப்படவில்லை தமிழ்த்தேசியத்தின் நியாயங்கள் உலகத்தால் அதனை விடுதலைப்புலிகளே கொண்டு சென்றமையால் புறக்கணிக்கப்பட்டன.அல்லது புறக்கணித்தல் இலகுவாக இருந்தது.

தம்மைச் சூழ இயங்கிக்கொண்டிருந்த பல்வேறு சக்திகளுக்கிடையிலான இடைத்தாக்கங்களையும் ஒத்திசைவுகளையும் முரண்பாடுகளையும் கணக்கிடும் வலுவை விடுதலைப்புலிகள் கொண்டிருக்கவில்லை.
நடைமுறை உலகில் மிகப்பலம் பொருந்திய அதிகாரசக்திகளுக்கிடையிலான இடைத்தாக்கங்களுக்கிடையில் எங்களுடைய நிலையையும் இருப்பையும் தீர்மானிப்பது இலட்சியங்கள் மட்டுமல்ல அரசியற்தெளிவும் அதனடிப்படையில் அமைந்த தந்திரோபாய நடவடிக்கைகளும் தான்.



இனமுரண்பாடுகள் நிலவுகின்ற அனேகமான நாடுகளில் பெரும்தேசியவாதங்கள் இன்றுவரையும் மிகப்பலமான நிலையிலேயே இருக்கின்றன. சிறுபான்மை இனங்கள் தமது அடையாளங்களைத் தக்கவைக்க பெரும் விலையை கொடுத்து வருகின்றன.

உலகப்பொருளாதார நெருக்கடி காரணமாக மனித உரிமை முகமூடி அணிந்து கொண்டிருக்கும் மேற்கத்திய நாடுகள்
இனமுரண்பாடுகள் நிகழும் நாடுகளில் கடுமையான அழுத்தங்களைப் பிரயோகிக்க முடிவதில்லை. உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்குப்பின் துருக்கி சிரியா ஈரான் இஸ்ரேல் சீனா ரஸ்சியா இந்தியா மலேசியா போன்ற நாடுகள் வெளிப்படையாகவே இன ஒடுக்கு முறைகளை மேற்கொள்கின்றன. இது தொடர்பாக அவை மேற்குலகின் விமர்சனங்களைக் கண்டு கொள்வதே இல்லை. மேற்குலகும் மனித உரிமை மற்றும் சனநாயக உரிமை குறித்த விமர்சனங்களை தமது நலன்களை பேணும் நோக்குடன் மட்டுமே முன்வைக்கின்றன.

சிங்களப் பேரினவாதத்திற்கு மிகவும் வாய்ப்பாக உள்ள இச்சர்வதேசச்சூழ்நிலை மாறாதவரை ஈழத்தமிழர்களின் இனத்துவமும் சமூக கலாச்சார அடையாளங்களும் மிக அபாயகரமான சூழ்நிலையில் இருக்கும்.
இந்த தேர்தலில் தமிழர்கள் எந்த நிலைப்பாட்டை எடுப்பினும் அவர்களது சமூகஅரசியற்சூழ்நிலைகளில் எந்த வித பாரிய மாற்றங்களும் ஏற்படப்போவதில்லை. எந்தச் சிங்களக் கட்சியும் பேரினவாத அரசியலுக்கு அப்பாற்பட்டதல்ல. ஆனால் இனவாதத்தைக் கடைப்பிடிக்கும் முறையிலும் அளவிலும் மாறுபாடுகளை கொண்டிருக்கின்றன.

எந்தச் சிங்கள ஆட்சியும் திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுத்தப்போவதில்லை அபகரிக்கப்பட்ட வாழ்விடங்களை திரும்ப வழங்கப் போவதில்லை. இராணுவக் கட்டுப்பாட்டையோ இராணுவ முகாம்களையோ அகற்றப்போவதில்லை.

யுத்தம் நடாத்தப்பட்ட முறைமையும் அதன் பின்னர் தமிழ் மக்கள் நடத்தப்படும் முறைமையும் தமிழ்த் தேசியவாதக் கோட்பாடின் இருப்பின் நியாயத்தை இன்னும் வலிமைப்படுத்தியிருக்கிறது. ஆனால் தமிழ்த் தேசியவாதம் தனது திருப்பித்தாக்கும் வலுவை இழந்திருக்கிறது. சிங்களப்பெருந்தேசியவாதம் இலங்கையின் அரசியலை ஆட்கொண்டிருக்கும் வரைக்கும் தமிழ்தேசியவாதத்தின் இருப்புக்கு நியாயம் இருந்துகொண்டேயிருக்கும்.

பாராளுமன்ற அரசியலூடாக ஒரு சிறுபான்மை இனம் தனது உரிமைகள் வென்றெடுப்பது என்பது உண்மையான சனநாயகம் இல்லாத நாடுகளில் என்றைக்கும் சாத்தியமில்லை.

ஏனெனில் பேரினவாத ஆட்சியாளர்களின் ஒன்றுகுவிக்கப்பட்ட அதிகாரத்தின் மீதான ஆசை, அளவற்ற ஊழல் கலாச்சாரம் என்பன காரணமாக சிறுபான்மை இனங்களின் உரிமைகளை நசுக்கும் குணம் கொண்டவர்களாகவே இருக்கின்றனர். சட்டம், நீதி, நிர்வாகம் மற்றும் பொருளாதாரத்தளங்களில் யாவரும் சமம் என்னும் நிலை ஏற்படும் போது மட்டுமே இன முரண்பாட்டுக்கான அடித்தளம் அழிய ஆரம்பிக்கும்.

.
அபிவிருத்தியும் முறையான முதலாளித்துவ சனநாயகத்தின் வளர்ச்சியும் இனமுரண்பாட்டைத் தணிக்க வழிவகுக்கக்கூடும்.

ஆனால் நூற்றாண்டுகளாக வேர்விட்டுச்செழித்திருக்கும் இனவாதமும் ஊழல் கலாசாரமும் அவ்வளவு சுலபமாக அரங்கை விட்டகலும் என எண்ணமுடியவில்லை.

உலகளாவிய முதலாளித்துவமும் திறந்த சந்தைக்கொள்கையும் மிகப்பலமாக இருக்கின்றன. முதலாளித்துவத்தின் உலகளாவிய இராணுவக்கட்டமைப்பு மிகப்பலமாக உள்ளது.

உண்மையான நேரிடையாகவோ மறைமுகமாகவோ இனவாத கோட்பாட்டிற்குள் விழாத இடதுசாரிகள் என இலங்கையில் மிகச்சிலரையே குறிப்பிடமுடியும் அவர்கள் கூட தமக்கென அரசியற்தளமற்றிருக்கிறார்கள். இலங்கையில் தமக்கே சரியான தளமிலாத இடதுசாரிகள், தமிழர்களின் சுய நிர்ணயஉரிமைக்காக வலுவாகப் போராடுவதற்கான சாத்தியங்கள் குறைவாகும். "இடதுசாரியத்திற்கான உலகளாவிய அணிகள்" என்றும் எதுவும் இல்லை. உண்மையான இடதுசாரிப்பண்பைகொண்ட நாடுகள் என உலகில் எந்த நாட்டையும் இன்றைக்கு இனம்காணமுடியாதுள்ளது.

தமிழர்கள் நிசப்தமும் இருண்மையும் நிறைந்த காலத்துள் நிற்கிறார்கள். தமிழ்தேசியத்தின் எழுச்சியுடன் தோன்றிய பாராளுமன்ற அரசியலுக்கு வெளியேயான ஸ்தாபனப்படுகையின் இயங்கியலை முழுமையாக அறிவதற்கு அதனுடன் தொடர்புபட்டிருந்த‐ குறைந்தபட்சம் PLOT, EPRLF, TELO, EROS ,NLFT, PLFT ,LTTE ஆகிய அமைப்புக்களில் செயலாளிகளாக இருந்தவர்கள் தங்களது ஞாபகங்கள் அழிந்து போகமுன்னம் எழுதவேண்டும்.

இனியொருவில் திரு அய்யர் அவர்கள் பேசாப்பொருளைப் பேசும் மகத்தான பணியைத் தொடங்கியுள்ளார்.குளோபல் தமிழ்ச் செய்திகள் உள்ளிட்ட பல இணையங்கள் அதனை மீள்பிரசுரம் செய்கின்றன.

மூன்று தசாப்தங்களின் இயங்கியலையும் தமிழ் தேசியத்தின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் புறநிலையாக நின்று ஆராய்வதின் மூலமே இந்த இருண்மையுள் இருந்து வெளிவரமுடியும்.



GTNற்காக அரிதேவா.