பின்பற்றுபவர்கள்

13 ஜனவரி, 2010

துயரின் நிழலே படராப்பொழுதாய்

துயரின் நிழலே
படராப்பொழுதாய்
நீளும் வாழ்வே நினதாய் ஆக
வருவார் உன் அப்பா
விழிகள் மூடு எந்தன் முத்தே!

வாழ்த்துளிகள் தேட நினைந்து
காலக்கடலைக் கடைய முனைந்து
அழிவின்கரையில் அடங்கிப்போனோம்
ஊரின் துயரம் வழியும் விழியில்
ஆரும் கேட்கா அகதியானோம்
ஒலைக்குடிலுள் உனது கோபம்
உறங்கமறுத்து ஊரை எழுப்பும்
சிறிய மகளே நறிய முகத்திற்
நகையைச்சேர்த்து உறங்குவாயோ

துயரின் நிழலே
படராப்பொழுதாய்
நீளும் வாழ்வே நினதாய் ஆக
வருவார் உன் அப்பா
விழிகள் மூடு எந்தன் முத்தே!

நாறிகிடந்த பிணங்கள் கடந்து
ஊர்கள் தோறும் உன்னைச்சுமந்து
நினைக்க முடியா அகதி வாழ்வில்
நீயும் வரமாய் வந்து சேர்ந்தாய்
எமது இரவில் அவரின் மடியில்
கிறங்கிக் கிடந்த கணங்கள் நூறு
அறியாவயதில்உறங்கிக்கொள்ளு
அறியும் வயதில்விழித்துக்கொள்ளு.
சிறிய மகளே நறிய முகத்திற்
நகையைச்சேர்த்து உறங்குவாயோ

தேவ அபிரா
01/10