பின்பற்றுபவர்கள்

17 மே, 2010

முள்ளின் வாய்க்கால்- யார்க்கெடுத்துரைப்போம்


 

"துன்பங்கள் ஆயிரம் சூழினும்

வாழ்வின் துடிப்பில் உயிர் தரிப்போம்"

எனச்சேரன் எழுதினார்.

ஆனால் வாழிவின் துடிப்பையும் இழந்து நிற்கிறோம்.

எத்தனை     இழப்புக்களைச்சந்தித்தோம் நினைவுகூர்ந்தோம் அப்பொழுதெல்லாம் நம்பிக்கையுடன் இருந்தோம். இந்த இழப்புக்களுக்கெல்லாம் ஒரு அர்த்தம் இருக்கிறதென்று.

ஆனாலும் முள்ளிவாய்காலில் நிகழ்ந்தவைகளைக் கண்டு அதிர்ந்து நிற்கிறேம். உண்மையிலும் அதிர்ந்து நிற்கிறோமா? அப்படியும் தெரியவில்லை. ஏனென்றால் பேஸ் புக்கில்(face book) இருந்த குடும்பப் படம் ஒன்றின் கீழ் இளைஞன் ஒருவர் இவ்வாறு எழுதியிருந்தார்.

"முள்ளிவாய்காலில் இருந்து தப்பி வந்தவை மாதிரிக்கிடக்கு"


 



 

ஆனாலும் நாங்கள் இச் சிறு தீவில் நிகழ்ந்த பெரும் இன அழிப்பை மறக்கமாட்டோம். ஏன்றென்றைக்கும் நினைவு கூர்வோம். ஏனெனில் இது திட்டமிடப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டு உலகமே கூடி நின்று வேடிக்கை பார்க்க நிகழ்த்தப்பட்டது. ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று மூன்று இலட்சம் மக்களை உடலாலோ அல்லது உள்ளத்தாலோ முடமாக்கிய இந்த இன அழிப்பை நாங்கள் மறக்கக்க மாட்டோம்.

ஆனால் இருள் சூழ்ந்த இரவில் சூனியம் நிறைந்த பகலில் எங்கள் துன்பங்களையும் வலிகளையும் யாருடன் பகிர்ந்து கொள்ளுவோம்?

துன்பப்படுபவர்களின் குரல்களுக்கு செவி கொடுக்காதவர்களிடம் மண்டியிடுவோமா?

யாரிடம் எங்களின் துயரங்களைச் சொல்லியாறுவோம்.


 

ஏறத்தாள 120 வருடங்களுக்கு முன்பு 1890 ம் ஆண்டு அமெரிக்க கண்டத்தில் செவ்விந்தியர்களின் கடைசிப்போர் நிகழ்ந்தது. பரந்து விரிந்து கிடக்கும் அமெரிக்க கண்டத்தின் இயற்கையுடன் இணைந்து வாழ்ந்த அவர்கள் தங்களின் வாழ்வையும் வளத்தையும் வெள்ளையர்களிடம் முற்றுமுழுதாக வூண்டட் நீ (Wounded Knee)பள்ளத்தாக்கில் இழந்தார்கள்.

வூண்டட் நீ பள்ளத்தாக்கில் அமெரிக்க படைகளால் சுற்றி வளைக்கப்பட்ட இறுதிக் கணத்தில்

தாங்கள் கொல்லப்படுமுன்பு இறுதியாக ஆடிய "பிசாசு நடனத்தின்"(Ghost Dance) போது செவ்விந்தியர்களின் மூலிகை மனிதன் (Medicine Man) மண்ணை அள்ளித்தூவிக் கீழ்வருமாறு பாடி ஆடுகிறான்.


 

"நான் யுகங்கள் வாழ்ந்துவிட்டேன்

நீ பயப்படாதே!

உனது இதயத்தைப் பலமாக்கு!!

எம்மைச் சூழ்ந்து நிற்கும் படைகளிடம்

பல தோட்டாக்கள் உள்ளன

அவற்றால் எம்மைத் துளைக்க முடியாது!

அவர்களின் குண்டுகள் எங்களை நோக்கி வருமென்றால்

அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் இருக்கும்

அடர்ந்தபுல்வெளிக்குள் அவை காற்றில் பறக்கும் இச் சாம்பல் துகள்கள் போல் சிதறிவிடும்."


அக் கடைசிப் போரையும் ஆண்டாண்டு கால இனவழிப்பையும் அனுபவித்த அந்த மக்களிடம் எங்களைப்பகிர்ந்து கொள்ளுவோம்.

போராளிகளும் ஆண்களும் பெண்களும் பிள்ளைகளுமாக அப் பள்ளத்தாக்கில் அமெரிக்கர்களால் ஒருகுழியுள் புதைக்கப்பட்ட அந்த மக்களிடம் எங்கள் வலியைச் சொல்லுவோம். அவர்களுக்கு மட்டுமே எமது வலி புரியும்.

இரண்டாம் உலக யுத்தத்தில் கிட்லரிடம் அகப்பட்ட மக்களின் துயரங்களை இத்தாலிய யூதக் கவிஞர் பிரிமொ லெவி(Primo Levi) இவ்வாறு விபரிக்கிறார்.


 

"மாலையில் வீடு திரும்பும் போது

பாதுகாப்பான வெப்பமான வீடுகளில்

வெதுவெதுப்பான உணவுகளும்

நட்பு நிறைந்த

முகங்களும் உங்களுக்காக காத்திருக்கின்றன

ஆனால் கருதுங்கள் இந்த மனிதனை

இவன் சேற்றில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பவன்;

போரின் அமைதி பற்றி அறியாதவன்;

ரோட்டித் துகள்களுக்காக போராடுபவன்.

ஆம் அல்லது இல்லை என்ற வார்த்தைக்குள்

ஆடிக்கொண்டிருக்கிறது இவனது மரணம்.

கருதுங்கள் இந்தப் பொண்ணை

உதிர்ந்த முடி அல்லது பெயரில்லாதவள்;

நினைவு படுத்துமளவுக்கு தெம்புமற்றவள்

சூனியமான விழிகளும் குளிர்ந்த கருப்பபையுமாக

பனிக்காலத் தவளையானவள்"


 

இவர்களிடம் சொல்லுவோம் எங்கள் முள்ளிவாய்க்கால் அவலத்தை.


 

இந்த நூற்றாண்டின் இன்னுமொரு அவலமாக சூடானின் டாவூர் இருக்கிறது.

சூடானை பிறப்பிடமாகக் கொண்ட 13 வயது சிறுவன் எம்திதால் (Emtithal Mahmoud, a 13-year-old Darfur native who now lives in Philadelphia.) பின்வருமாறு கேட்கிறான்.


 

உனது நகரங்களும் அவற்றின் அருகில் இருந்த எல்லாமும் குண்டுகளால் சிதைக்கப்பட்டால்

நீ என்ன செய்வாய்?

நீ குளிர்ந்து தனித்திருக்க நேர்ந்தால் என்ன செய்வாய்?

வீடுகள் இல்லாத வீதியில் தனித்திருக்க நேர்ந்தால்

நீ என்ன செய்வாய்?

உனது அம்மாவையும் அப்பாவையும் யாராவது கொன்றால்

நீ என்ன செய்வாய்?

உன்னிடம் இருந்த எல்லாவற்றையும் இழந்து போனால்

நீ என்ன செய்யவாய்?

பேச முடியாதவர்களுக்கு சாட்சியமாக இருந்ததிற்காக

நீ சிதறி உடைந்து போக நேர்ந்தால் என்ன செய்வாய்?

நீ ஓட விரும்பினால் எங்கு ஓடுவாய்?

நீ இறந்து போனால் யாரறிவார்?"

புழுதி மட்டுமே பறக்கிற பாலைவனத்தில் வாழ்வென்றாலே என்னவென்றறியாமல் வாழ்கின்ற ஒரு மில்லியன் டாபூர் மக்களிடம் சொல்லுவோம் எங்கள் அவலத்தை அவர்கள் புரிந்துகொள்வார்கள்.

1962 ம் ஆண்டு ஜக்கிய நாடுகள் சபையும் நெதர்லாந்தும் மேற்கு பப்புவா( West Papua) மக்களை இந்தோனேசியாவிடம் விற்றுவிட்டு சென்றனர்.

1966 ம் ஆண்டில் இருந்து இந்தோனேசியா செய்து வரும் இனப்படுகொலைகளை அவர்கள்அனுபவித்து வருகிறார்கள்.


 



 

கள்ளம் கபடமற்ற குழந்தைப் பருவத்தில் படங்களில்

என்னைப் போன்ற பிள்ளைகளும்

என் அப்பாக்களைப் போன்ற அப்பாக்களும்

கையால் பின்னப்பட்ட பிலும்ஸ் தோள்ப்பைகள் தொங்கும் அம்மாக்களும் அம்மம்மாக்களும் நிலங்களை விட்டு ஓடிக் கொண்டிருந்ததைக் கண்டிருந்தேன்.

நிலங்கள் அவர்களுடையதாக இருந்தபோதும்!

காக்கியுடையும் கருந்தலையும் துப்பாக்கியுமாக

வந்த அந்நியர்கள்

என் மாமாவைப் போன்ற ஒருவரை

தங்கள் கால்களுக்கிடையில் ஏன் அமுக்கிச்

சுட்டுக் கொன்றார்கள்

அந்தப் பெருநிலம்

அவருடையதாக இருந்தபோதும்!!


 

கபடமற்ற குழந்தைமையில் அதை அறியாதிருந்தேன்...

என ஸ்கொட் வைட (SCOTT WAIDE) என்னும் பப்புவன் கவிஞர் எழுதிச்செல்கிறார்.

உலகத்தால் கைவிடப்பட்ட அந்த மக்களிடம் சொல்லுவோம் எங்கள் கதைகளை.

21ம் நூற்றாண்டின் இன்னொரு துயரம் குர்திஸ்தான். நான்கு நாடுகளுக்கு நடுவில் அகப்பட்டு சிதைந்து கொண்டிருக்கும் குர்திஸ்தான், சதாம் குசைனின் இரசாயணத் தாக்குதலால்1998 ம் ஆண்டு இனப் படுகொலையைச் சந்தித்தது.தமது கலாசாரத்தையும் பண்பாட்டையும் வளர்க்க முடியாது மொழியையும் பேசமுடியாது துருக்கியிலும் சிரியாவிலும் ஈரானிலும் இன்னும் சிறுமைப்பட்டுக் கிடக்கிறார்கள் குர்தியர்கள்.

1998 ம் ஆண்டு நிகழ்ந்த கொடூரத்தை பின்வருமாறு 25 வயதான முகமட் அசிஸ் பின்வருமாறு கூறுகிறார்.

"எனது கண்கள் கனத்து வந்தன

எனது சுவாசம் கடுமையான நோவைத் தந்தது

பலமுறைகள் வாந்தி எடுத்தேன்

வீடுகளின் கதவைத் திறந்த ஒவ்வொரு பொழுதும்

அங்கெல்லாம் பிள்ளைகளும் பெண்களும் ஆண்களும்

வலியில் சிதைந்து செத்துக் கொண்டிருந்தார்கள்"

இதைத்தானே நாங்கள் முள்ளிவாய்காலில் 12 வருடங்களின் பின்பு அனுபவித்தோம்.உலகம் திருந்தியா இருந்தது?

இந்த மக்களிடம் செல்லுவோம் அவர்கள் சொல்வார்கள் எங்களுக்கு: "நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்" என்று!

மனித குலம் வெட்கப்பட வேண்டிய இனப்படுகொலைகள் ஆபிரிக்காவிலும் நிகழ்ந்தன.ருவாண்டா, கொங்கோ எதியோப்பியா , சோமாலியா என நீள்கின்றன இரத்தத்தின் தடங்கள்.


1995ம் ஆண்டு Srebrenica வில் "பாதுகாப்பு வலயம்" என அறிவிக்கப்பட்ட பிரதேசத்தில் டச்சுப்படைகளிடம் தஞ்சமடைந்திருந்த பொஸ்னிய மக்களை டச்சு படைகளிடமிருந்து எடுத்துச்சென்று 8000 ஆண்களையும் இளைஞர்களையும் கொன்று குவித்தது சேர்பிய இராணுவம். டச்சுப்படைகள் வெறுமனே கைகட்டிப் பார்த்து நின்றனர்.


 


யார் எவர் என்று தெரியா முடியாமல் புதைகுழியுள் உருவழிக்கப்பட்ட அந்த மக்களின் சமாதிகள் கற்குறிகளாக குத்தி நிற்கின்றன. தன் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என எல்லோரையும் இழந்து நிற்கும் ஒரு மூதாட்டி கற்குறியொன்றிற்கு மலர்வளையம் வைத்து அழுகிறாள். அவளிடம் கூறுவோம் எங்களிடம் இப்பொழுது கல்லறைகளும் இல்லை என்று ,அவள் புரிந்து கொள்ளுவாள்.

இன்னமும் ஆயிரம் இனக்கொலைகள் மெதுவாகவும் அமைதியாகவும் நடந்து கொண்டிருக்கின்றன.அதனை செய்பவர்களிடமேதான் மீண்டும் மீண்டும் நாங்கள் முறையிட்டுக்கொண்டிருக்கிறோம்.



 

இந்தியாவின் சத்திஸ்க்கார்(Chhattisgarh) மாநிலத்தில் இந்திய அதிகாரத்திடம் சிறுகச்சிறுக உயிரழியும் பழங்குடி மக்களிடம் சொல்லுவோம். தங்களது பூர்வீக நிலங்களை அதன் வளங்களை பன்நாட்டுக் கூட்டுத்தாபனங்களுக்கு தாரைவார்க்கும்படி நிர்ப்பந்திக்கப்படுகிற அவர்களிடம் சொல்லுவோம். அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அது புரியும். "ஒடுங்கியிருத்தல்" என்றால் என்னவென்று.

இந்த நாளில் நாங்கள் எதற்காக போராடினோமோ அது எங்களிடமில்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பேரால் நாங்களும் அழிவுகளை மற்றவர்களுக்கு கொடுத்திருக்கிறோம். "மற்றவர்களைக்" கொலைசெய்திருக்கிறோம். மற்றவர்களை அவர்களின் இருப்புக்களைச் சிதைத்து துரத்தியிருக்கிறோம். ஆனால் வெற்றியை நோக்கி நடக்கிற நினைவில் அவற்றை கவனிக்கவில்லை. ஒரு சமூகமாக எல்லாவற்றுக்கும் மெளனச் சாட்சியாக இருந்திருக்கிறோம்.பள்ளிவாசல்களிலும் பௌத்த விகாரைகளிலும் இன்னும் எமது சகோதரர்களின் இதயங்களிலும் ஈட்டியைப் பாய்ச்சி இரத்தம்மோடச் செய்திருக்கிறோம். அவர்களின் தாய்மாரும் தந்தைமாரும் உறவினர்களும் சந்ததியினரும் எம்மைப்போலவே அழுது கொண்டிருக்கிறார்கள். அவர்களிடமும் வேண்டுவோம் எங்களை மன்னித்து விடுங்கள் என...

இறுதியாக...

"அழிக்கப்பட்ட பெருநிலமெங்கும்

சிதைவுகளில் செடிகள் முளைக்கின்றன

அழிவு உறைந்து போயிருக்கிற அபாயச் சூழலில்

இந்தக் குழந்தைகள் புன்னகைக்கத் தொடங்குகிறார்கள்."

-தீபச்செல்வன்

தேவ அபிரா.

17-05-2010


 

உசாத்துணை:

http://en.wikipedia.org/wiki/Wounded_Knee_Massacre

http://rabbibrant.com/2007/04/15/the-poetry-of-genocide/

http://westpapua.net/2009/10/874/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக