பின்பற்றுபவர்கள்

2 செப்டம்பர், 2007

எனது தேசத்தில் ஏழு நாட்கள்

திங்கட்கிழமை

இரத்தம் மண்ணுள்.
ஓலம் காற்றுள்.
இருண்டநீரின் பெருக்கில் அள்ளுண்டன
கொலையுண்ட பிணங்கள்.
வனங்களுக்கப்பால் பெருவெளியில்
கை விடப்பட்டனர் மக்கள்.

பெரிய அலைகளின் ஓசையில்
இரவு மெளனமாகிறது.
மௌனத்தை உள்வாங்கி மனவெளி எரிகிறது.
மனித ஓலங்களின் அதிர்வெண்ணை
உள்நின்று பீறிடெழும் இரத்தத்தை
உணரும்
ஆத்மாக்களை நாமென்றோவிழந்தோம்.

செவ்வாய்க்கிழமை

மானுடவான்மாவைப் பீடிக்கிற
எல்லாச் சாபங்களும் வலுவோடிருக்கின்றன.
தனிமனித இயலாமை
நெருப்பெரியும் தணலின் மீது கொதிக்கும்
கலசநீர் போலொலிக்கிறது.
கண்ணீரை விடவும் துயரமானவற்றை
விழிகளிற் காண்கிறேன்

புதன்கிழமை

நான் உங்களை நேசிக்கிறேனென்பதை
நீங்கள் உணர
நானென்ன செய்ய வேண்டும்?
கை குலுக்கல்...
தழுவிக்கொள்ளல்...
முத்தமிடல்...
இவ்வையெல்லாமும்...

நடைப்பிணங்களின் மரக்கட்டை
உதடுகளிலும்
விழிகளிலும்
எனது காலை இறந்தது.

வியாழக்கிழமை

இன்னொரு சீவனை அச்சுறுத்தும்
முகமென்னிடமுள்ளதென்றாள்.
என்னுணர்வுகளுக்குள் தோய்ந்தெழுந்த போது
என் மனமும் விகாரமென்றாள்.
கண்ணீர் விடக்கூடிய இதயத்தை
காலமென்னிடமிருந்தும் பறித்து விட்டதென்றாள்.

இருப்பினிற் பயம் கொண்டோமோ
இனியொரு கணத்திற் பிரிவோமென்றறிந்தோமோ
இதயங்களின் இலயம் உடைந்தது.
கணங்களின் வெப்பத்தில்
வார்த்தைகள் ஆவியாகிச் சூல் கொண்டன.
வாழ்வென்னும் முரண்பாட்டிடைவெளியுள்ளவை
மழையாய்ப்பொழிந்தன.

அந்நாளில் அவளும் நீங்கினாள்.

வெள்ளிக்கிழமை

"இதயம் எப்படியெல்லாம் சுடரக்கூடும்?"
முன்னொரு காலம் கனவு கண்டிருந்தேன்.
இன்றோ
மூளை கொதித்து
மனம் கோடைகாலமானது.

சனிக்கிழமை

ஊடுபத்தப்போகுமொரு விளக்குப்போல் நடுங்கும்
இதயத்தைப் பற்றியபடி
நான் மண்டியிட்டேன் வாழ்வின் முன்.
மானுடம் நடந்த பாதைகள் தோறும்
இழுபட்டது போலவும்
எல்லா வகையான அச்சங்களையும் மரணங்களையும்
தரிசித்தது போலவும் உணர்ந்தேன்.

ஞாயிற்றுக்கிழமை

ஆதரவற்ற விழிகளோடு
யாவற்றிலும் தனியனாக
காலத்தின் துயரங்களுக்கும்
மௌனச்சாட்சியாக
இருக்கப்பணிக்கப்பட்டேன்.

ஆவணி 2007

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக