பின்பற்றுபவர்கள்

25 செப்டம்பர், 2007

சமூக ஒழுங்கு

நள்ளிரவில் வீடு திரும்பிய அக்காவுக்கு அத்தான் கூறியது:
"இரவில் உலாவுவது பேய்கள் மட்டுமே"

அப்பா நீண்ட புகையிலையின்
நரம்புகளை நீக்கத் தொடங்குகையில்
புன்னகை ஒன்றை அத்தானுக்குப் பரிசளித்தார்.

அம்மா மன நிம்மதியுடன் அடுக்களைக்குப் போனார்.

அப்பா புகையிலைத் துகள்களை சேர்க்கையில்
அக்கா முகம் சுழித்தாள்.
அவளுக்கு புகையிலையின் மணமும் பிடிப்பதில்லை.
"ஒழுங்கான குடும்பத்தில்
யாரெண்டாலும் வீட்டுக்கு இருட்டுக்கு முன்னம் வரவேணும்"
தனது அறிவு தெளிந்த நாளில் இருந்தே
புகைப்பவரான அப்பா சொன்னார்.

"நகரத்தின் இரைச்சல் அடங்குவது;
காற்று மனம் விட்டு மரங்களுடன் பேசுவது;
நட்சத்திரங்கள் விசும்புடன் குழைவது;
ஆத்மாவின் தனிமை கீதம் இழைவது;
யாவும் இரவிலன்றோ?"

அக்காவோ இரவுவானத்தில் கனவுகளை எழுதுபவள்
அக்கா அத்தானிடம் இது பற்றி
அவ்விரவின் காமத்தின் முன்னரோ பின்னரோ
துணிய(க்)கூடுமோ...

தீக்குச்சியை பெட்டியில் உரோஞ்சி
சுருட்டில் பிடித்து
தீ பரவும் முகத்துடன் அப்பா கூறினார்:
"அதிலும் பெண்கள் வீட்டுக்கு வரவேணும்
இருட்டுக்கு முன்னம்"

அப்பாவின் புகையும்
அத்தானின் இரவும் நீள்கின்றன...

மாசி - 1995

2 கருத்துகள்:

 1. இதையொத்த நிகழ்ச்சிகள் ஏராளம் அன்றாட வாழ்வில் எதிர்ப்படுவதுண்டு... ஆனாலும் இத்தனை எளிமையாக வார்த்தைகளுள் அடக்க முடிவதில்லை... சிலவாயிர வருட ஆணடக்குமுறையின் பிரதிநிதியாக உணரும் ஒவ்வொரு கணமும் குற்ற உணர்வுக்கு ஆளாக நேர்கிறது ஒரு ஆணாக எனக்கு..

  பதிலளிநீக்கு
 2. வியாபகன்,
  வேலைப்பழு காரணமாக உடன் பதிலளிக்கமுடியவில்லை.
  எல்லா ஆண்களும் பெண்களை விரும்பியும் அறிந்தும் அறியாமலும் ஒடுக்கியே வருகின்றனர்.
  குடும்பம் என்கிற அமைப்பும் மத நம்பிக்கைகளும் பெண் ஒடுக்குமுறைக்கு வசதியான அடித்தளத்தைத் தருகின்றன. சில நாடுகளில் அரசே இதற்கான அடித்தளத்தை அளிக்கிறது.கருத்தளவில் விழிப்புணர்வு பெற்ற ஆண்களும் கூட நடைமுறையில் பெண்களை ஒடுக்கிவருகின்றனர். ஏனேனில் நாங்கள் ஆணாதிக்க சமூகத்தால் வடிவமைக்கப்பட்டவர்கள்.
  இந்த வகையில் நீங்கள் மட்டுமல்ல நானும் எல்லா "ஆண்களும்" குறைந்தபட்சம் குற்றவுணர்வாவது கொள்ளவேண்டும். மாற்றங்களுக்கு இதுவே முதற்படி!கவிஞனான உங்கள் சுயவிமர்சனம் எல்லோருக்கும் முன்னுதாரணம்!

  பதிலளிநீக்கு