பின்பற்றுபவர்கள்

21 மே, 2012

நான் உரத்துப் பேசாவிடில் எமது தேசம் மௌனமாக்கப்பட்டுவிடும்…இன்று உலகப்பெண்கள் தினம். ஆசிய நாடுகளில் பெண்களின் சமூக பொருளாதார நிலமைகள் இன்னமும் மோசமாகவே உள்ளன. ஆயினும் இங்கிருந்தும்  உறுதியான புரட்சிகரமான  குரல்களுடன் பெண்கள் எழுந்து வரவே செய்கின்றனர். இங்கே Joshua Barnes என்பவர் sampsoniaway.org என்னும் தளத்தில் எழுதிய கட்டுரை ஒன்றின் மொழிபெயர்ப்பினூடு  அவ்வாறான ஒரு பெண்மணியை அறிமுகம் செய்ய விரும்புகிறேன்.
பிற்போக்குத்தனமான சிங்களப்பெருந்தேசியவாதத்தின் சமூக பொருளாதார கலாசார இராணுவப்பிடிக்குள் தமிழர்கள் படிப்படியாக தமது சனநாயகத்தையும் சுதந்திரத்தையும் இழந்து வருவது போலவே இன்றைக்கு பல வருடங்களின் முன்பே தீபெத் தனது சுதந்திரத்தை சீனாவிடம் இழக்க நேர்ந்தது.
அசுரத்தனமான சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் தீபெத் தனது அனைத்து அடையாளங்களையும் இழந்து தவித்துக் கொண்டிருக்கிறது. தமிழ் மக்களுக்கு எதிர்காலத்தில்  என்ன நடக்கக்கூடுமென்பதனைத் தீபெத்தைப் பார்த்துப் புரிந்து  கொள்ளமுடியும்.
நான் விடையங்களை ஆவணப்படுத்தாவிடில் நான் உரத்து பேசாவிடில் எமது தேசம் மௌனமாக்கப்பட்டுவிடும்.வரலாறு மாற்றப்பட்டுவிடும்.புதிய தலைமுறைக்கு இவற்றை அறிந்து கொள்ள முடியாது போய்விடும். உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்கு இந்தத் தனிமனித ஊடகம் ஒரு ஆயுதமாகும். இதன் முடிவுவரையும் இதனை எடுத்துச் செல்வேன்
என்றும்
எனக்குப்பிரச்சனை வரலாம் ஆனால் அது பற்றி நான் கவலைப்படவில்லை. திபெத்தின் வரலாற்றையும் நிலைமைகளையும் இன்னும் இன்னும் அதிகமானவர்கள் அறிந்து கொள்ளவேண்டும். மாற்றம் இப்போதோ அல்லது காலம் தாழத்தியோ வரலாம் ஆனால் மனம்தளராத முயற்சியே மாற்றத்திற்கான திறவுகோல் "
என்றும் கூறுகிற வூசரின் குரல் எங்களுக்காகவும் கூறப்பட்டது போன்றிருக்கிறதல்லவா?
சீனாவில் சிறுபான்மை இனங்களின் சனநாயக ரீதியான போராட்டங்கள் மிகமோசமான முறையில் ஒடுக்கப்படும் நிலையில் சீனாவினுள் இருந்து கொண்டு தீபெத்தின் மீதான ஒடுக்குமுறைக்கெதிராகக் குரல் கொடுக்கும் சீனமொழி பேசும் ஒரு பெண்மணியைப் பற்றிய அறிமுகமே இது.
-      தேவ அபிரா

தெசெரிங் வூசர்: சீனப்பெருஞ்சுவரின் பின்னாலிருந்து பயமற்ற அறிக்கையிடல்
[Tsering Woeser: Fearless Reporting Behind China’s Great Firewall-
Joshua Barnes]
1966 ம் ஆண்டு பிறந்த வூசர் வலைப்பதிவர்,கவிஞர் கட்டுரையாளர் எனப்பல பரிமாணங்களைக் கொண்டவர். வூசர்அவர்களுடைய இணைய ஊடகத்தொழிற்பாடு அவருக்கு சர்வதேச அங்கீகாரத்தையும் பல விருதுகளையும்  பெற்றுத் தந்துள்ளது.  அதே வேளை சீன அரசின் தொந்தரவுகளுக்கும் தொடர்ச்சியான கண்காணிப்புக்கும் அவர் உட்பட்டுள்ள சூழ்நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.  ஆனால் சீன அரசின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களினால் அச்சமடையாது  தடுத்து நிறுத்தப்படமுடியாத மனவிருப்புடன் அவர் தொடர்ந்தும் எழுதி வருகிறார். இன்றைய திபெத்தைப் பற்றிய உண்மைகளை வெளியுலகுக்குக் கொண்டு வருகிறார்.
தன்னைத் தனிமனித இணையச் செய்தி நிலையம் என அழைத்துக் கொள்கின்ற வூசர் அவர்களுடன் 2010 நவம்பரில் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டேன்.  அந்த நேரத்தில் அவர் தனது வசிப்பிடமான பேஜிங் சீனாவில் இருந்து தனது பிறந்த இடமான திபெத்தில் இருக்கின்ற லசாவுக்கு(Lhasa) சென்று கொண்டிருந்தார்.  பலராலும் வாசிக்கப்படுகின்ற இரண்டு வலைப்பூக்களையும், ருவிற்றர் செய்திப் பரிமாற்றத்தையும் நடாத்தி வந்த அவருக்கு Lhasa உண்மையிலும் பாதுகாப்பான இடமல்ல.  ஆயினும் சீனாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட திபெத்தின் பகுதிகளுக்குள் நடக்கும் சீன ஒடுக்குமுறைகளை வெளிக் கொண்டுவருவதில் அவர் உறுதியாக இருக்கிறார்.
இரண்டு மாதங்களின் பின் எனது மின்னஞ்சல்களை வாசித்தபினர் என்னுடைய அடையாளத்தையும் உறுதிப்படுத்திக் கொண்டு நான் அனுப்பியிருந்த  கேள்விகளுக்குப் பதில் அளித்திருந்தார். 
அவரது வலைத்தளமான கட்புலனாகத் திபெத்(invisible Tibet) நான்கு தடவைகளுக்கு மேலாக இணையத்தளக் குழப்பிகளினால் குறுக்கறுக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.  அவரது மின்னஞ்சற்கடிதங்களும் முகநூல் பரிவர்த்தனைகளும் ஒட்டி உளவாடும் சீன இணையஆக்கிரமிப்பாளர்களின் தாக்குதலுக்கும் உள்ளாகியிருந்தன.  மேலும் கணணிக்கு கேடு விளைவிக்கக் கூடிய மின் அஞ்சல்களும் இவருடன் தொடர்புடையவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
சீனாவின் இணையத்தளப்பாவனையையும் பரிவர்த்தனையையும் இறுக்கமாக கண்காணிக்கும் சீன அரசாங்கம் வூசர் அவர்கள் திபெத் ஆதரவு வலைப்பதிவராக இருப்பதால் அவரைச் சீனப் பொது நலனுக்கு எதிரானவராக ஆபத்தானவராக அறிவித்துள்ளது.
சுதந்திர திபெத் எனப்படும் ஒரு திபெத்திய விடுதலை அமைப்பு சீன ஆக்கிரமிப்பாளர்கள் திட்டமிட்ட முறையில் திபெத்தில் மனிதஉரிமைமீறல்களில் ஈடுபட்டுவருவதாகக் குறிப்பிடுகின்றது. திபெத்திய கலாச்சாரம் சமயம் மற்றும் மொழியையும் சிதைக்கும் நோக்கத்துடன் சீனா திட்டமிட்டுச் செயற்பட்டு வருவதாக இந்த அமைப்பு  மேலும் தெரிவிக்கிறது.
2004 ஆண்டில் இருந்து இணையப் பாவனையை இலகுவாகக் கண்காணிப்பதற்காக  சீனப் பொதுவுடமைக்கட்சி இணைய இணைப்பு தேவைப்படுகிற எல்லாத் திபெத்தியர்களையும் இணைய இணைப்பு அட்டைகளைப் பயன்படுத்துமாறு பணித்துள்ளது.  
வூசர் அவர்கள் கடந்த நவம்பரில்(2011)இல்  எதிர் கொண்ட பிரச்சனை அவருக்கு  ஒன்றும் புதியதல்ல.  2004ம் ஆண்டு  அவர்கள் எழுதி வெளியிட்ட " திபெத் பற்றிய குறிப்புகள்"  என்னும் புத்தகம் அரசியல் ரீதியான தவறுகளை உள்ளடக்கி இருப்பதாக சீன அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.  இதனால் அவர் தீபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் இலக்கியக் கூட்டமைப்பின் இதழின் ஆசிரியையாக வகித்து வந்த பதவியை இழக்க நேர்ந்தது.  அடுத்த ஆண்டு அவர் வலைப்பதிவைத் தொடங்கியபோது அது இலத்திரனியல் தாக்ககுதல்களுக்கு உள்ளானது.
2008 இல் அவரது வலைப்பூவின் அகப்பக்கமானது சீனக் கொடியுடன் கூடிய செய்தி ஒன்றினைத் தாங்கியதாக மாற்றப்பட்டது.  அந்தச் செய்தியில் அவரைத் திபெத்தியப் பிரிவினைவாதி என்றும் அவர்மீது வன்முறையை பிரயோகிக்குமாறும் எழுதப்பட்டிருந்தது.
அதே வருடத்தில் தான் பிறந்த இடமான லசாவுக்குத் தனது தாயாரைச் சந்திக்கச் சென்றிருந்த போது சீனக்காவல்துறையினால் அவர்களது வீடு முற்றுகையிடப்பட்டது. அச்சம்பவத்தை அவர் பின்வருமாறு விபரிக்கிறார்: ஒருவன் எனது அறைக்குள் வந்து மூலை முடுக்கெல்லாம் தேடினான்  அவர்கள்... அவர்கள்... அறைக்குள் வந்தவன் ஒரு ஆவணக்கட்டைக் கண்டுபிடித்தான்.  அப்பொழுது அவன் முகத்தில் தோன்றிய பெருமிதத்தைப் பார்க்க வேண்டும்..  ஏதோ புதையலைக் கண்டவன் போல்.  ஆனால் அந்த ஆவணக்கோவை எனது அம்மாவினுடைய வேலைத்தளத்தைச் சேர்ந்தது என்று  அறிந்தபோது அவன் அடைந்த ஏமாற்றத்திற்கு அளவேயில்லை."
வூசர் அதன்பின்னர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு எட்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக அவமானப்படுத்தப்படும் வகையில் விசாரிக்கப்பட்டார்.  தான் உடல் ரீதியான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படாதது  அதிஸ்டமே என்று அந்தச் சம்பவம் பற்றி நினைவு கூரும் போது கூறுகிறார். மேலும் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் தான்  நடந்து கொண்ட முறைமைபற்றித் திருப்திப்படாதவராகவும் இருக்கிறார்.
" திரும்பி யோசிக்கும் போது நான் எதிர்ப்புணர்வற்றவளாக இருந்திருக்கிறேனே என  அதிர்ச்சியடைகிறேன்.  என்னை அவர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல எப்படி அனுமதித்தேன்?  அவர்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் ஏன் பதிலளித்தேன்? எனது முதலாவது வலைப்பூவை(The maroon map) தொடங்கியதிலிருந்து சீனப் பொதுவுடைமைக்கட்சிக்கெதிரான பாதை கடுமையானதெனத்தெரிந்திருந்தும் நிலமைகள் கடுமையான போது ஏன் இப்படிச் சுயவிமர்சனம் செய்துகொண்டேன் ? எனக் கவலையும் கொண்டிருந்தார்.
அவர் கைது செய்யப்பட்ட நேரத்தில் வெளிநாடுகளில் இருந்தும் அழுத்தங்கள் வழங்கப்பட்டன.  எல்லைகள் அற்ற பத்திரிகையாளர் அமைப்பு உடனடியாகவே சீன அரசாங்கத்தின் பேச்சாளரிடம் இது குறித்துக் கேட்டது.  இதனைத் தொடர்ந்து தாங்கள் புரட்சியாளர்களைக் கைது செய்து வைத்திருப்பதாக முன்வைக்கப்டும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என அந்தப்பேச்சாளர் தெரிவித்திருந்தார்.  ஆனாலும் அந்தக் காலத்தில் பீஜிங்கில் நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக சீனா மீது சர்வதேசத்தின் கவனம் திரும்பியிருந்ததன் காரணமாகத்தான் தான் விடுதலை செய்யப்பட்டிருக்கவேண்டும் என்கிறார் வூசர்.
வூசருடைய ஊடகச் செயற்பாடுகள் அச்சமற்றவை என பலரும் குறிப்பிடுகின்றனர்.  உலகத் திபெத் செய்தி நிறுவனம் உட்பட பலரும் இதனைக் குறிப்பிடுகின்றனர்.  ஒரு திபெத்தியாள் ஆகத் தனக்கு முக்கியமாகப்படுகின்ற அனைத்தையும் ஆவணப்படுத்தும் அவர் அதற்காக குறிப்பிடத்தக்க உயிராபத்தையும் எதிர்கொள்கிறார்.    சீன பொதுவுடமைக் கட்சியினால் தடைசெய்யப்பட்ட ஒரு பௌத்த திருநாளைப்பற்றியதாகவிருக்கலாம் அல்லது 2008 மார்ச்சில் லசா(Lhasa) இல் இடம் பெற்ற சீன எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட ஒரு பௌத்த பிக்குவுடனான நேர்காணலாக இருக்கலாம் எதனைச் செய்வதற்கும் அவர் தயங்குவதில்லை.
திபெத்தில் 2008 மார்ச்சில் நடைபெற்ற பௌத்த பிக்குகளின் சீன எதிர்ப்பு ஊர்வலத்தைத் தொடர்ந்து 20  மரணமடைந்தும் 4400  கைது செய்யப்பட்டு  தடுப்புக் காவலில்  வைக்கப்பட்டும் உள்ளதை இங்கு நினைவு கூரலாம்.
தனது செயற்பாடுகள் காரணமாக தனது குடும்பம் மற்றும் நண்பர்கள் கூடத்தண்டிக்கப்படக் கூடிய சூழ்நிலை தோன்றலாம் எனத் தெரிந்திருந்தும் எனது கேள்விகளுக்கு வெளிப்படையான பதிலை அவர் தந்திருந்தார்.
சீன அரசுடனான அவரது முரண்பாடுகளைப் பற்றி வெளிப்படையாகத் தெரிவித்ததுடன் தனது இணையத்தளம் அடிக்கடி முடக்கப்படுவதற்குச் சீனப் பொதுவுடமைக்கட்சியே காரணம் எனவும் குற்றம் சாட்டுகிறார்.
1966ம் ஆண்டு பிறந்த அவர் சீனாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட திபெத்தின் லசா பகுதியில் வளர்ந்தவர்.   வளரும் காலத்திலேயே களமுனையில் நின்று நிலவரங்களை அறிக்கையிடும் ஒரு பத்திரியையாளனாக  வரும் கனவைக் கொண்டிருந்தார்.
நான்கு வயதாக இருந்த போதே  தனது சீனப் பாடசாலை நண்பர்களுக்கு திபெத்தைப்பற்றிய கதைகளைக் கூறத் தலைப்பட்டுள்ளார். இன்றைக்கு இவர்   ஒரு வலைப்பதிவராகத் திபெத்தின் கதைகளை உலகிற்கிற்குக் கூறுவது ஆச்சரியமானதல்ல.
இவரது தந்தை ஒரு அரைத் திபெத்தியனாக இருந்தபோதும் 1950 இல் சீனா திபெத்துக்குள் நுளைந்து அதனைப் பலவந்தமாகத் தன்னுடன் இணைத்த போது சீனப் பொதுவுடமைக் கட்சியின் மக்கள் விடுதலை இராணுவத்தில் அதிகாரியாக இருந்திருக்கிறார். 
தான் சிறுமியாக இருந்த போது தனது தந்தையாரைப் பலவேறு கேள்விகளைக் கேட்டதை இப்போது அவர் நினைவு கூருகிறார்.
" என்னுடைய தந்தையார் எப்போதும் இரண்டு கால்களிலும் நடக்கப்பழக வேண்டும் என்று எனக்குச் சொல்லுவார் ஒரு கால் எனது சொந்த வழியிலும் மற்றது சமூகத்தின் எதிர்பார்ப்புக்களின் வழியிலும் இருக்க வேண்டும் என்று அவர் சொல்லுவார்.  அவருடன் உடன்படாத நான் சிலவேளை ஒரு கால் உடைந்து போனால் என்ன செய்வதென்று அவரிடம் கேட்டேன்  அதற்கு அவர் பதில் எதனையும் கூறவில்லை." என்கிறார்.
அவரது தந்தையுடனான அவரது உறவைப்பற்றிக் கேட்டபோது " இது இலகுவான கேள்வியில்லை.  இதற்கு ஒரு சில வசனங்களின் மூலம் பதிலும் சொல்லவும் முடியாது." என்றார்.
தற்போது அவர் இந்த விடையம் தொடர்பாக ஒரு நாவலை எழுதிக் கொண்டிருக்கிறார்.  தனது அனுபவங்களைப் புனையப்பட்ட பாத்திரம் ஒன்றினூடாக வெளிக் கொண்டு வரும் நோக்குடன் வேலை செய்துகொண்டிருக்கிறார்.
தனது ஒழுங்குபடுத்தப்படாத உணர்வுகளை பரிமாறிக் கொள்வதற்கு உண்மையான ஒரு கணத்தின் நெருக்கம் தேவைப்படுகிறது எனக் கூறுகிறார்.
கலாச்சாரப் புரட்சியில் அவரது தந்தை வகித்த பங்கு அவரது மூன்றாவது புத்தகத்திற்குரிய விடயங்களை அளித்துள்ளது.   தடைசெய்யப்பட்ட நினைவுகள்: கலாச்சாரப் புரட்சியின் போதான திபெத் என்பதே  அவரது மூன்றாவது புத்தகம்.
மாவோவின் மீள் கல்வித் திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான பௌத்த வாசங்களும் புத்தகங்களும் புத்த ஆலையங்களும் அழிக்கப்பட்டன.  இந்த சம்பவங்கள் இன்றைய திபெத்தில் நிலவும் அமைதியின்மையை விளக்குவதற்கு முக்கியமான அடித்தளத்தை தருவன. எப்படி இருப்பினும் இந்தச் சம்பவங்கள் சீனப் பொதுவுடமைக் கட்சியினால் திணிக்கப்பட்ட மௌனம் காரணமாக அழிக்கப்பட்டுவிட்டன.
கல்விமானும் நூலாசிரியருமான வாங் லிக்ஷ¢ஒங்(Wang Lixiong)தடைசெய்யப்பட்ட நினைவுகள் என்னும் இந்த நூலுக்கு எழுதிய முன்னுரையில்    10000க்கும் அதிகமாக கலாச்சாரப் புரட்சி தொடர்பான சேகரிக்கப்பட்ட ஆவணக் கோவைகளில் 8 மட்டுமே திபெத்தைப் பற்றியனவாக எஞ்சி இருக்கின்றன எனக் குறிப்பிடுகிறார்.
வூசரின் தடைசெய்யப்பட்ட நினைவுகள் என்னும் இந்தநூல் கலாச்சாரப் புரட்சியின் வரலாற்றில் உள்ள இடைவெளியை நிரப்புவதாக இருக்கிறது. அவரது இந்தப்புத்தகம் மக்கள் விடுதலை இராணுவத்தில் அவரது தந்தையார் பணிபுரிந்த போது  எடுத்த நூற்றுக்கணக்கான இதுவரை வெளியிடப்படாத படங்களை உள்ளடக்கியிருக்கிறது. மேலும்  வூசர் எழுதிய பல கட்டுரைகள் அவரது தந்தையாரின் வயதை ஒத்த திபெத்தியர்களுடான அவர் செய்த நேர்காணல்கள்(இவற்றை சீன மொழிக்கு மாற்றுவதற்கு அவரது தாயார் உதவி செய்துள்ளார்) என்பனவும் இப்புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
2006 இல் தாய்வானில் இந்தத் தொகுப்பு வெளியிடப்பட்டது.  இப்புத்தகத்தைத் தொகுப்பதில்  தனது தந்தையாரின் பங்களிப்பைப்பற்றி வூசர் எதுவும் குறிப்பிடவில்லை.
2007 டிசம்பர் 17 இல் நோர்வேயின் கருத்துச் சுதந்திரத்துக்கான எழுத்தாளர் கூட்டமைப்பு அவருக்கு விருதொன்றை வழங்கியது.
சீன அதிகாரிகளுடன் முரண்பட்டபோதும் துணிவுடன் தனது புத்தகத்தை வெளியிட்டமைக்கான விருதாக அது அமைந்தது. 
ஆனால் இந்த விருதை ஏற்பதற்கு சீன அரசாங்கம் அவரை அனுமதிக்கவில்லை.  அவருக்கான கடவுச் சீட்டை தேசியப் பாதுகாப்புக் கருதிசீன அரசாங்கம் வழங்க மறுத்துவிட்டது.
யூலை 2008 ம் ஆண்டு சீன அரசாங்கத்தின் இந்த முடிவுக்கெதிராக சங்குன்(Changchun) பிரதேச இடைநிலை நீதிமன்றத்தில் வழக்கொன்றை வூசர் தாக்கல் செய்தார்.  இந்தப் பிரதேசத்திலேயே இவரது கணவர் நிரந்தரமாக வசித்து வருகிறார்.  ஆனாலும் இவரது வழக்கானது தொடர்ச்சியாகக் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. தான் சீனக்கடவுச்சீட்டொன்றைப்பெறுவதற்கான  சந்தர்ப்பம் மிகக்குறைவே என்கிறார் வூசர்.
சீனாவை விட்டு வெளியேற முடிந்தாலும் அந்தப் பயணம் தற்காலிகமானதாகவே இருக்கும். நான் சீனாவிலேயே இருக்க விரும்புகிறேன்.  ஏனேனில் சீனா திபெத்திற்கு கிட்ட இருக்கிறது. எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய விரும்புகிறேன்.   சீனாவுக்கு வெளியில் இருப்பவற்றைப் பார்க்க விரும்புகிறேன்.  ஆனால் மீண்டும்
சீனாவுக்கு திரும்புவதையே விரும்புகிறேன்.
திபெத் செய்திகளையும் செய்திக்கண்ணோட்டங்களையும் தாங்கி வரும் Phayul.com என்னும் இணையத்தளம் வூசரின் எழுத்துக்கள் திபெத்தில் நிகழும் விடையங்களுக்கு உறுதியான முக்கியத்துவத்தை தருவதுடன் உடனடித்தன்மையையும் கொன்டிருக்கின்றன மேலும் அவை மக்களுக்கு நெருக்கமானவையாகவும் தனிப்பட்டவையாகவும் இருக்கின்றன. இவை வெளிநாட்டுச் செய்தியாளர்களாலோ அல்லது விற்பன்னர்களினாலோ தரமுடியாத பரிமாணத்தைக்கொண்டிருக்கின்றன. புலம் பெயர்ந்த ஜம்ஜங் நொர்பு போன்ற எழுத்தாளர்களினால் கூட இவ்வாறு தரமுடியாது எனச் சிலாகிக்கிறது.

எவ்வாறு இருப்பினும் வூசர் கூடத் தன்னை ஒரு புலம் பெயர்ந்த எழுத்தாளராகவே காண்கிறார்.  சீனாவில் புலம் பெயர்ந்து வசிக்கும் ஒரு திபெத்தியாளாக சீனாவில் வாழும் ஆயிரமாயிரம் திபெத்தியர்களுள் ஒருவராக அவர் தன்னை இனம் காண்கிறார்.
சீனப் பொதுவுடமைக் கட்சி திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாகவே காண்கிறது. மேலும் திபெத்திய கலாச்சாரத்தை கடைப்பிடிப்பதற்கு தடைகளை விதித்து வருவதுடன் தாய் லாமாவை இழிவு படுத்தி சீன தேசப்பற்றை பெருமைப்படுத்தும் கல்விச் செயற்பாடுகளில் கலந்துகொள்ளுமாறு திபெத் பௌத்த பிக்குகளை வற்புறுத்துகிறது என  The Economist சஞ்சிகை தெரிவிக்கிறது.
 திபெத்திய கலாசாரத்தை முற்றிலும் ஒழிக்க முயலும் சீனப்பொதுவுடமைக்கட்சியின் செயற்பாட்டிலிருந்து திபெத்திய கலாசாரத்தை வூசர் பாதுகாக்க முனைகிறார்.
நான் விடையங்களை ஆவணப்படுத்தாவிடில் நான் உரத்து பேசாவிடில் எமது தேசம் மௌனமாக்கப்பட்டுவிடும்.வரலாறு மாற்றப்பட்டுவிடும்.புதிய தலைமுறைக்கு இவற்றை அறிந்து கொள்ள முடியாது போய்விடும். உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்கு இந்தத் தனிமனித ஊடகம் ஒரு ஆயுதமாகும்.இதன் முடிவுவரையும் இதனை எடுத்துச் செல்வேன் என்கிறார் வூசர்.
அவர் சிறுவயதிற் கனவுகண்டது போல் துப்பாக்கிச்சன்னங்கள் பறக்கும் யுத்தகளத்தில் நின்று அறிக்கையிடவில்லை ஆனால் சீனப் பொதுவுடைமைக்கட்சியின் இடையூறுகளுக்கும் மத்தியில் இணையத்தில் மேற்கொள்ளப்படும் சைபர் தாக்குதல்களையும் எதிர்கொண்டு தனது எழுத்துக்களைப்பரப்பி வருகிறார். அவரது தளங்கள் யாவும் தற்காலிகமாக முடக்கப்பட்டிருக்கின்ற போதும் பல்வேறு சீன மற்றும் திபெத் இணையத்தளங்கள் அவரது எழுத்துக்களை மீள்பிரசுரம் செய்துள்ளன. மேலும் அவரது எழுத்துக்களுக்கென ஒரு ஆங்கில மொழித்தளமும் உருவாக்கப்பட்டுள்ளது.
பயமுறுத்தல்களிலும் விமர்சனங்களிலும் அவரை ஒரு திபெத்திய நாய் என விளிக்கிறார்கள் ஆனால் இவை அவரை அவர் செல்லும் வழியில் இருந்து விலக்கிவைக்கும் வலுவற்றவையாக இருக்கின்றன.
" எனக்குப்பிரச்சனை வரலாம் ஆனால் அது பற்றி நான் கவலைப்படவில்லை. திபெத்தின் வரலாற்றையும் நிலைமைகளையும் அதிகமானவர்கள் அறிந்து கொள்ளவேண்டும் மாற்றம் இப்போதோ அல்லது காலம் தாழத்தியோ வரலாம் ஆனால் மனம்தளராத முயற்சியே மாற்றத்திற்கான திறவுகோல் " என்கிறார் வூசர்.

மொழிபெயர்ப்பும் குறிப்பும்: தேவ அபிரா

நன்றி:Joshua Barnesகருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக