பின்பற்றுபவர்கள்

21 மே, 2012

இரண்டு திபெத்தியக் கவிதைகள்


கீழ்வரும் இரண்டு கவிதைகளும் திபெத்தியக்கவிஞர்களுடையவை. முதலாவது திபெத்தின் தலைநகரான லஹ்சாவில் நிலவும் அரசியற் சூழ்நிலையைச் சொல்கிறது. இரண்டாவது கவிதை திபெத்தில் நிலவும் சூழலியற்பிரச்சனையைச் சொல்கிறது.
இவை இரண்டும் இலங்கையில் நிலவும் பிரச்சனைகளுடன் பொருத்திப்பார்க்கப்படக்கூடியவை. இதன் ஆழங்களையும் வாசிப்புக்களையும் உங்களிடமே விட்டு விடுகிறேன்.
முதலாவது கவிதையை எழுதியவர் Tsering woeser( இவர் பற்றிய மொழிபெயர்ப்புக்கட்டுரையொன்று பங்குனி8 இல் GTNஇல் வெளியானது உங்களுக்கு நினைவிருக்கலாம்)
இரண்டாவது கவிதை, இந்தப் பீட பூமி என்வீடு எனத் தன்னைப் பெயரிட்டுக் கொண்டுள்ள ஒரு திபெத்திய வலைப்பதிவரால்  September 5, 2011. இல் வலையேற்றப்பட்டதாகும். இரு கவிதைகளும் அவற்றின் ஆங்கில மொழி பெயர்ப்பினூடே தமிழாக்கப்பட்டுள்ளன. ஆங்கில இணையத்தளத்திற்கான இணைப்புகளும்  அவற்றின் கீழே தரப்பட்டுள்ளன.
-தேவ அபிரா

லஹ்சாவில்(Lhasa) நிலவும் பயம்

லஹ்சாவிலிருந்து விரைவாக விடை பெறுகிறேன்
பயங்களின் நகரமிது.
ஐம்பத்தொன்பதுகளிலும்
அறுபத்தொன்பதுகளிலும்
எண்பத்தொன்பதுகளிலும் இருந்த பயங்களின் கூட்டாகி
அதனிலும் பெரிதான பயங்களின் நகரமிது.

உனது சுவாசத்திலிருக்கிற பயம்
உனது இதயத்துடிப்பிலிருக்கிற பயம்
நீ பேச விரும்புகிற போதும்
பேசாது விடுகிற மௌனத்திலிருக்கிற பயம்
உன் தொண்டையுள் சிக்கியிருக்கிற பயம்.

இடையறாத பயம் ,
உலைக்களத்தில் உருவாக்கப்பட்ட இரும்பு போல
இராணுவத்தின் துப்பாக்கிகளினால்
எண்ணுக்கணக்கற்ற காவற்துறையினரினால்
எண்ணி முடியாத உளவாளிகளினால்
இரவுபகலாக இவர்களின் பின்னால்  அரணாக நிற்கிற
அரசின் கனரக இராணுவ இயந்திரங்களால்
நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

எல்லோரையும்கண்காணித்துக்கொண்டிருக்கும் அசைவியக்கப்பதிகருவியை*1 நீ அவர்களை நோக்கித் திருப்பக்கூடாது
இல்லையேல் நீ துப்பாக்கிமுனையில் நிறுத்தப்படுவாய்
சிலவேளை யாருமறியாத ஒரு மூலைக்கும்
இழுத்துச்செல்லப்படுவாய்.

பொதல*2 வில் ஆரம்பித்து கிழக்கு நோக்கிச் சென்று
திபெத்தின் நான்கு மானிலப்பகுதி*3 முழுவதும்
வியாபித்து நிற்கிறது பயம்.
அச்சமூட்டும் காலடிச்சத்தங்களை நீ கேட்கிறபோதும்
பகலின் ஒளியில் ஒரு கணப்பொழுதேனும் அவர்களின் நிழலைக்கூடக் காணமாட்டாய்.
அவர்கள் பகலின் ஒளியில்
புலனாகாப் பிசாசுகள் போன்றவர்கள்
அவர்களால் நிலவும் பயங்கரமோ மோசமானது.
அது உன்னைப் பைத்தியமாக்குவது.
அவர்களையும் அவர்கள் கைகளில் இருந்த குளிரான ஆயுதங்களையும் சிலதடவைகள் கடந்து சென்றிருக்கிறேன்

அலுவலகங்களில்
சந்துகளில்
மடாலயங்களில்
தேவாலையக் கூடங்களில் தொங்கும் அசைவியக்கப்பதிகருவிகள்
எங்கும் ஊடுருவிப்படர்ந்திருக்கும்
அச்சத்தின் கணங்களைப் பதிவு செய்கின்றன.
எல்லாவறையும் காணும் போது
பௌதீக உலகத்திலிருந்து பயம் உன் அகமனதுள் நுளைகிறது.
உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன்.. கவனமாக இரு!
அவர்கள் எங்களை அவதானித்துக்கொண்டிருக்கிறார்கள்!!:
 என இந்நாட்களில் திபெத்தியர்கள் ஒருவருக்கொருவர் அவசரமாகவும் இரகசியமாகவும் கூறிக்கொள்கிறார்கள்.

லஹ்சாவில் நிலவும் பயம் என்னிதயத்தை உடைக்கிறது
இதை எழுதவேண்டும்

Tsering woeser
August 23, 2008
On the road out of Lhasa

நன்றி: The Fear in Lhasa

*1   camera
*2    Potala
*3    Tibetans quarter.

 
அம்னே மசெனுக்கு

உன்னை ஒரு போதும்  கண்டிராத போதும்
உன் அடிவாரங்களை ஒரு போதும் அடையாத போதும்
வானத்திற்கும் பூமிக்குமிடையில்
உறுதியுடன் பரந்து நிற்கும் உன் கம்பீரத்தை நானறிவேன்

ஆயிரமாண்டுகளாக நிமிர்ந்து நிற்கும் உன் புனிதநெற்றியில்
படர்ந்திருக்கும் தூய வெண்பனியில் பீடபூமிச் சூரியன் பளபளக்கிறது.
உனது உறுதியான அழகான மென்மையான காலடியில்
சமவெளியின் மேய்ப்பர்கள் உன்னைப்புகழந்து பாடும்
ஒலிபரந்து செல்கிறது.

திபெத்தின் ஒன்பது புனிதச் சிகரங்களில் ஒன்று நீ
அம்டொ(Amdo) பெருநிலத்தின் தர்மத்தின் பாதுகாவலன் நீ
உன் மேன்மையெங்கும் பரந்துள்ளது.

ஆனால் உன் மேனியுள் புதைந்திருக்கும்
வைரங்களை தொண்டியள்ளுவதற்கெனப்  பிசாசுகளின்
கருவிகளைச் சுமந்த சக்கரங்கள் பேராசையுடன் பீடபூமியில்
உன் மென்மையான புல்வெளிகளைச் சிதைத்துருளுகின்றன.

யுகங்களாகவுன் பாதுகாவலர்களாகவிருந்தவர்கள்
மௌனத்தில் உறைந்து போயுள்ளார்கள்.
இயலாமையென்னும் தெரிவே விரிந்து கிடக்கக் காத்திருக்கிறார்கள்.
ஒருநாள் பலவந்தமாக அவர்களும் வெளியேற்றப்பட்டுத் தரிசாகிப் பாலையான நிலத்தின் விளிம்பில் கைவிடப்படுவார்கள்.
உன் வெதுப்பு நிறைந்த அணைப்பில் இருந்து பிடுங்கப்பட்டு
வீசப்படுகையில் கண்ணீருடன் விடைபெறுவதன்றி  வேறென்ன?
எங்கள் புனிதமான அம்னே மசென் மலையடிவாரத்தில் இனிமேலும் வெண்செம்மறியாடுகளின் கூட்டுநடையிருக்காது…
மேய்பர்களின் மேய்க்குமொலியும் பாடலும் கூடவிருக்காது…

அசிங்கமான பேராசை நிறைந்தவர்கள்
உன்னை நசுக்கிவிடுவார்கள்…

September 5, 2011.

மொழிபெயர்ப்பு: தேவ அபிரா
12-03-2012


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக