பின்பற்றுபவர்கள்

21 மே, 2012

ராஜபக்ஸ் குடும்பத்தினதும் அவர்களினது கல்வித்தகைமைகளினதும் காதை..
உவிந்து அவர்கள் இக்கட்டுரையில் அலசுகிற விடையங்கள் உதிரியாகச் செய்திகளாக ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இந்தச் செய்திகளை ஒருங்கிணைத்து இலங்கையின் அரசியற் சூழலை அவர் ஆராயும் முறையையும் அவர் சுட்டும் விடையங்களையும் தமிழ் வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக  இந்தக்கட்டுரை இங்கே மொழிபெயர்க்கப்பட்டுத்தரப்படுகிறது-ஆ-ர்
1999 ம் ஆண்டு ராவய அந்த ஆண்டு நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பான ஒரு ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டிருந்தது.  அக்கட்டுரையை எழுதியவர் இலங்கையின் இன்றைய சனாதிபதியான மகிந்த ராஜபக்ச எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மறைந்த ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளை ஒருநாள் ராவயவில் வந்த அந்தக் கட்டுரையை யார் எழுதியதென்று என்னிடம் கேட்டார்.  அதனை ராஜபக்சவே எழுதினார் என்று நான் கூறினேன். உடனே அவர் சத்தமிட்டுச் சிரித்தார். அங்கிருந்தவர்கள் அனைவரும் இதனையிட்டு உடனே ஆர்வமடைந்தனர்.  நீங்கள் ஏன் இப்படிச் சிரிக்கிறீர்கள் என எல்லோரும் அவரிடம் கேட்டனர்.  உடனே அவர் பாராளுமன்ற கட்டிடத்துக்குள் இருந்த நடைபாதையில் சென்று கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பத்திரிகையாளர்கள் அனைவரையும் அழைத்து,  “கவனியுங்கள் கவனியுங்கள்  ராவயவில் வந்த அந்தக்கட்டுரையை மகிந்த அவர்களே எழுதியதாக உவிந்து கூறுகிறார். கேளுங்கள்! சாதாரண தரக்கணிதப் பரீட்சையில் சித்தியடையாத ராஜபக்ச எப்படிப் புள்ளிவிபரங்களை வைத்துக் கொண்டு அலசி ஆராய்ந்து ஒரு கட்டுரையை எழுத முடியும்முட்டாள்தனமாக இருக்க வேண்டாம்.  என்னுடன்  அவர் சட்டக் கல்லூரியில் படித்த போதே அவரது கொள்ளளவு என்னவென்று எனக்குத் தெரியும்.  சட்டக் கல்லூரிச் சோதனைகளை அவர் எப்படி எதிர்க்கொண்டு சித்தியடைந்தார் என்பது கூட எனக்குத் தெரியும். கருணாஜீவ அல்லது அனில் பெர்னான்டோ தான் இந்தக் கட்டுரையை அவருக்காக எழுதியிருக்க வேண்டும்”. 
கடந்த கிழமை விக்கிலீக்சை மேற்கோள் காட்டி கொழும்பு ரெலிகிராப், பேர்சி மகிந்த ராஜபக்ச தனது க.பொ.த உயர்தரப்பரீட்சையில் சித்தியடையவில்லை என்னுமொரு செய்தியை பிரசுரித்திருந்தது.
இரகசியமானது எனக் குறிப்பிடப்பட்டு அமெரிக்க தூதுவராக இருந்த ஜெவ்ரி ஜே. லுன்ஸ்ரெட் (Jeffrey J. Lunstead.) இனால் 21 நவம்பர் 2005 ல் எழுதப்பட்டிருந்த அந்தக் குறிப்பில் ராஜபக்ஸவை  சாதாரணமா ஒரு நாட்டுப்புறச் சட்டத்தரணி (“JUST A COUNTRY LAWYER”) என விபரித்து மகிந்த ராஜபக்ச தொடர்பான கீழ்வரும் தனிப்பட்ட தகவல்களை ஜெவ்ரி எழுதியிருந்தார்.
 “ராஜபக்ஸ 18 நவம்பர்  1945 ம் ஆண்டு  அம்பாந்தோட்டை மாவட்டத்தில் வெருக்கட்டிய என்னுமிடத்தில் பிறந்தார்.  இவர்  (சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரான டி.ஏ. ராஜபக்சவின் எட்டு மகன்களுள் மூன்றாவதாவார்.  (மூத்த சகோதரரான அமல் ராஜபக்சவும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராவார்.  அதேவேளை அமெரிக்காவில் வசித்து வந்த கோதபாயவும் பசிலும் தமது சகோதரரின் சனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்காக இலங்கைக்கு திரும்பி இருந்தனர்.) ராஜபக்ச காலிமாவட்டத்தில் றிச் மொண்ட் (Richmond College) கல்லூரியில் படித்தார்.  (அங்கே அவர் படிக்கும் காலத்தில் அவரது சிங்கள மொழி அறிவை வளர்க்கும் முகமாக அவரது தந்தையார் அவருக்க பிரத்தியோகமான சிங்கள மொழி ஆசிரியரை ஒழுங்குசெய்ய வேண்டியும் இருந்தது.) அதற்குப் பிற்பாடு நாலந்தாக் கல்லூரியிலும் தேர்ஸ்ரன் கல்லூரியிலும் ராஜபக்ச தனது கல்வியைத் தொடர்ந்திருந்தார்.  ஆனாலும் அவர் அவரது க.பொ.த உயர்தரக்கல்வித்தரத்தை வெற்றிகரமாக முடித்திருக்கவில்லை.  பின்னர் சிறீ ஜெயவர்த்தனபுரப் பல்கலைக்கழகத்தில் எழுதுவினைஞராக கடமையாற்றிய அவர் 1976ம் ஆண்டு அதனைக் கைவிட்டு மறைந்த தனது தந்தையின் அம்பாந்தோட்டைப் பாராளுமன்ற ஆசனத்திற்காக தேர்தலில் போட்டியிட்டுப் பாராளுமன்றத்திற்கு சென்றார்.அக்காலத்தில் போது நீதி அமைச்சரினால் எடுக்கப்பட்ட ஒரு முடிவின்படிக்கு  பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் உரிய தகைமைகளைத் கொண்டிராத போதும் சட்டக்கல்லூரிக்கு சென்று சட்டப் படிப்பைத் தொடங்க முடியும் என்ற சலுகை அளிக்கப்பட்டிருந்தது. ராஜபக்ஸ அச்சலுகையைப்  பயன்படுத்திச் சட்டக் கல்லூரிக்குச் சென்று 1974ம் ஆண்டு தனது சட்டப்பபடிப்பை அங்கே முடித்தார்.
ராஜபக்சவின் கல்வித்தகமை குறித்து வெளிவந்த அந்தக் கட்டுரைக்கு கொழும்பு ரெலிகிராபில் நூற்றுக்கணக்கான பின்னூட்டங்கள வந்திருந்தன.  ராஜபக்சவின் கல்வித்தகமைகள் குறித்து விவாதிப்பது சரி எனவும் பிழை எனவும் இருமுகாம்களாக அவை இருந்தன.
இலங்கையில் ஏராளமான அரசியல்வாதிகளுக்கு முறையான கல்வி அறிவு இல்லை.  இப்படி இருக்கும் போது ராஜபக்சவுக்கு மட்டும் ஏன் இருக்க வேண்டும் என்பதே ராஜபக்சவின் கல்வித் தகைமை குறித்து விவாதிப்பதை எதிர்த்தவர்களின் பிரதான வாதமாக இருந்தது.
அவரது கல்வித்தகைமை என்னவாக இருந்தாலும் அது பிரச்சினை இல்லை என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன் ஆனால் அவரது உண்மையான கல்வித் தகமை என்ன என்பதைப் பொதுமக்கள் அறிவதில் என்ன பிழை இருக்கமுடியும்.  அதுமட்டுமல்ல அவரே அவரது கல்வித் தகமைகளை பகிரங்கப்படுத்தியிருந்தால் அது அவரது நேர்மையையும் புலப்படுத்தியிருக்கும்.  மறுபுறத்தில் ராஜபக்ச போன்ற ஒருவருக்கு நல்ல கல்வி அறிவுள்ள ஆலோசகர்களும் தேவைப்படும்.  ஆனால் அவரது பிரதான சனாதிபதி ஆலோசகரின் தகைமை என்ன?
ஜனாபதியின் பிரதான ஆலோசகரும்  பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் அவரது சகோதரருமான பசில் அவர்கள் காலியில் அவரது பாடசாலையில் இருந்து பலதடைவைகள் வெளியேற்றப்பட்டவராவார்.
இன்னும் ஒரு அமெரிக்கத் தூதுவரான றொபேட் ஒ. பிளேக் மே 15, 2007இல் பரிமாறப்பட்ட இரகசியக்குறிப்பொன்றில் பின்வருமாறு எழுதுகிறார்.
“ பசில் தனது குறைவான கல்வித் தகைமைகளையும் சம்பந்தப்பட்ட துறைகளில் தனக்குள்ள  அனுபவக்குறைவுகளையும் கருத்தில் கொள்ளாமல் சனாதிபதி அவர்களுக்குப் பல்வேறு விடையங்களில் ஆலோசனைகளை வழங்குவதாக அமெரிக்கத் தூதரகத்துடன் தொடர்புடையவர்கள்  தெரிவிக்கின்றனர். பசிலும் மாத்தறையிலும் காலியிலும்  கல்வியைத் தொடர்ந்து முடித்துக்கொண்டவராவார்.  காலியில்டித்துக்கொண்டிருந்த போது அவர் பலமுறை பாடசாலையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்ததை அவரது நண்பர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.”( இக்குறிப்பை முழுவதுமாகப்பார்ப்பதற்கு கொழும்பு ரெலிகிராபை பார்க்கவும்.)
னாலுமென்ன இவர்கள்தான் நாட்டை ஆள்கிறவர்கள்.
பிளேக் மேலும் எழுதுகிறார்
 “இலங்கைச் சுதந்திரக் கட்சியில் உள்ள பலமானவர்கள் ராஜபக்சவுக்கு விசுவாசமானவர்களாக இல்லாத படியால் கட்சியினுள் உள்ளவர்களை விடவும் தனது சதோதரக்களையே அவர் கடுமையாக நம்ப வேண்டிய நிலமையில் உள்ளார். ஜனாதிபதி பல நேரங்களில் முடிவுகள் எடுப்பதைத் தள்ளி வைப்பதுடன் பல் சந்தர்ப்பங்களில்  முடிவுகளை எடுப்பதும் இல்லை.  அதுமட்டுமன்றி தனது சகோதரர்களிம் அளவுக்கதிகமான பொறுப்புக்களையும் அதிகாரத்தையும் கொடுத்ததற்காவும் பல சந்தர்ப்பங்களில் பிரபலமற்ற முடிவுகளை எடுப்பதாலும் கடுமையான விமர்சனங்களுக்கும் உள்ளாகிறார். உலகத்திலேயே மிகப்பெரிய அமைச்சரவையைக் கொண்ட நாடாக இலங்கை நிகழ்கிறது.  53 அமைச்சர்கள்.  இந்த அமைச்சுக்கள் ஒன்றுடன் ஒன்று செருகப்பட்டவையாகவும் அவற்றின் செயற்பாடுகள் குறித்த தெளிவான வரையறை அற்றவையாகவும் உள்ளன.  ஆனால் இவ்வாறாக அமைச்சுக்களைத் தோற்றுவித்ததன் மூலம் ராஜபக்ச யாவற்றையும் தனக்குக்கீழ் கொண்டு வந்து அதிகாரத்தை மையப்படுத்தி உள்ளார். கடந்த மூன்று தசாப்தங்களாக இடம்பெற்று வந்த யாப்பு மாற்றங்கள் மூலம் இலங்கையில் அதிகாரமானது மிகப் பெருமளவுக்குச் சனாதிபதியிடம் வந்து சேர்ந்து விட்டது. இதன் விளைவாக மிக முக்கியமான விடையங்கள் யாவும் சனாதிபதியாலும் அவரது ஆலோசகர்களாலும் மட்டுமே கையாளப்படுகின்றன.  மைச்சர்களுக்கு அங்கு வேலையில்லை. நீதி, பாதுகாப்பு, துறைமுகம் மற்றும் விமானப் போக்குவரத்து போன்ற அமைச்சுக்களை சனாதிபதி தன்னகத்தே வைத்திருக்கிறார்.  இதனால் 100 க்கும் அதிகமான திணைக்களங்களையும் நிர்வாகக் கட்டமைப்புக்களையும் சனாதிபதி தனது நேரடி அதிகாரத்தின் கீழேயே வைத்துக் கண்காணிக்கிறார்  மேலும் சனாதிபதியின் வரவு செலவு  தொடங்கி நாட்டின் தேசிய வரவுசெலவுத் திட்டம்வரை ஏறத்தாள 60% தை தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழே வைத்திருக்கிறார்.  சனாதிபதியினது  சகோதரர்கள் 2005ம் ஆண்டு வரையும் வெளிநாட்டிலேயே இருந்துள்ளனர்.  இதனால் அவர்களுக்கு இலங்கைப் பொதுசனங்களின் எண்ணக்கிடக்கையோ தெரியாது. இலங்கையின் உயர் குடியினரின் பரந்துபட்ட தொடர்பும் கிடையாது.  இவர்களுக்கு இலங்கையின் மிகச்சிறிய உயர் குழாத்துடனேயே தொடர்புகள் உள்ளன.  இதனால் தனிமைப்பட்டுள்ள இவர்கள் எல்லா முக்கியமான முடிவுகளையும்  தமக்குள்ளேயே எடுப்பதுடன் இம்முடிவுகள் இந்த நாட்டுமக்களினதோ இலங்கையின் உயர் குழாத்தினதோ அபிலாசைகளை பிரதிபலிப்பதுமில்லை. சனாதிபதி தனது மகனுக்கு அவரது சட்டக்கல்லூரி இறுதிச் சோனைகளை எழுதப் பிரத்தியேகமான குளிரூட்டிய அறையையும் இணைய வசதி கொண்ட கணணியையும் ஏற்பாடு செய்து கொடுத்ததன் மூலம் தனது மகனுக்கும் அபகீர்த்தியைப் ஏற்படுத்தியுள்ளார்.
2009 நவம்பர் 17இல் பரிமாற்றப்பட்ட இன்னுமொரு செய்தியில் அந்நாளய அமெரிக்க தூதுவரான பற்றீசியா புடெனிஸ் பின்வருமாறு எழுதுகிறார்.
இலங்கையில் பொருளாதார ரீதியான முடிவுகளை எடுப்பது என்பது நிதி அமைச்சிலேயே குவியப்படுத்தப்பட்டுள்ளது.  அவ்வாறு முடிவுகளை எடுக்கும்போது பல்வேறு அமைச்சுக்களினதும் தனியார்துறையினதும்  அபிலாசைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டே நிதி அமைச்சு பொருளாதார ரீதியான கொள்கை மாற்றங்களுக்குரிய முடிவுகளை எடுக்கும்.  (இலங்கையானது 100க்கு மேற்பட்ட அமைச்சுக்களை கொண்டிருப்பதுடன் இவற்றுள் பல வெறுமனே அரசியல் ரீதியான காரணங்களுக்காகவே தமது அலுவலகங்களைத் திறந்து வைத்துள்ளன.) ஏதாவது ஒரு அமைச்சு பொருளாதாரக் கொள்கையில் மாற்றங்களைக் கொண்டு வரவிரும்பினால் முதலில் அது நிதி அமைச்சின் தேசிய திட்டமிடல் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெறவேண்டும்.  ஆணைக்குழு அந்த மாற்றத்தை அனுமதிக்க விரும்பினால் முறைப்படியான அனுமதியை நிதி அமைச்சில் இருந்து பெறுவதற்கான வேண்டுகோளையும் அதுவே நிதி அமைச்சுக்கு அனுப்பும். இதுவே இலங்கையின் உண்மையான நடைமுறையாகவும் வழமையாகவும் இருக்கையில் இதனைப்புறந்தள்ளி தற்போது இலங்கையின் பொருளாதாரம் தொடர்பான முடிவுகள் யாவும் அடிக்கடி சனாதிபதியினாலும் அவரது சகோதரர்களாலும் அவர்கள் நம்புகின்ற ஒரு சில ஆலோசகர்களின் ஆலோசனையின் படிக்கு எடுக்கப்படுகின்றன. அரசுடன் இணைந்திருக்கின்ற சில வர்த்தகத் தலைவர்களும் புத்திஜீவிகளும் அரசின் முடிவெடுக்கும் முறைமை வெளிப்டையானதல்ல என்பதை ஒத்துக்கொள்கிறார்கள்.   மிக முக்கியமான முடிவுகளை மிகக் சிறிய குழுவே (ராஜபக்சவும் அவரது சகோதரர்களும்) எடுக்கிறது என்பதையும் அவர்கள் ஒத்துக்கொள்கிறார்கள்.
றொபேட் பிளேக் தனது இன்னுமொரு குறிப்பில் பசில் பற்றிப் பின்வருமாறு எழுதுகிறார்
தூதரகத்துக்குள்ள தொடர்புகளின் ஊடாகப்பெற்றுக் கொண்ட தகவல்களின்படி பசிலுக்கு நெருக்கமான ஆலோசகர் என்று யாரும் இல்லை எனவும் இலங்கையில் அவருக்கு நண்பர்களை விட எதிரிகளே அதிகமென்றும் அறியப்படுகிறது.  பசிலின்  மனிதர்களை விலைக்கு வாங்க முனையும் இயல்பு காரணமாகவே இது ஏற்பட்டது எனவும் அறியப்படுகிறது.  பசில் மகாவலி அபிவிருத்தி அமைச்சில் வேலை செய்த போது அங்கு நிறைவேற்றப்பட்ட ஒவ்வொரு வேலைத் திட்டத்திற்கும் 10 வீதக் கையூட்டை பெற்றுக் கொண்டதால் கனவான் பத்து வீதம்(Mr. Ten Percent) என்ற பட்டப் பேரையும் பெற்றுக்கொண்டுள்ளார்.  பசில் தனது தற்போதைய அமைச்சிலும் இதே வகையான ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.
2010 இல் நிகழ்ந்த சனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக தூதரக அதிகாரியான பற்றீசியா புடெனிஸ் பின்வருமாறு எழுதுகிறார்.
“சனாதிபதி ராஜபக்சவின் பிரதான அபிப்பிராயக் கணக்கெடுப்பாளரான சுனில்பெர்னான்டோ எமது தூதரகத்துடன் வேறுவிடையங்களில் நல்ல தொடர்பைப் கொண்டுள்ளவரான இவர்- தான் செய்த சனாதிபதி பற்றிய முதலாவது அபிப்பிராயக் கணக்கெடுப்பை எம்முடன் பகிர்ந்து கொண்டார்.  அதன்படிக்கு 85 வீதமானவர்கள் ராஜபக்ச குடும்பத்தை ஊழல் நிறைந்ததாகவும் 80 வீதமானவர்கள் ராஜபக்சவையும் ஊழல் நிறைந்தவராகவும் கருதுவதாகக் கண்டு கொண்டதாகத் தெரிவித்தார்.
இந்த அளவில்தான் உலகளாவிய ரீதியில் எமது நற்பெயர் இருக்கிறது. ஒருவேளை இலங்கையின் சீனத்தூதரத்துடனான தொடர்பாடலையும் விக்கிலீக்ஸ் செய்வது போல இடைவெட்டி எடுக்க முடியுமென்றால் இன்னும் அதிர்ச்சி அளிக்கக் கூடிய தகவல்கள் வெளிவரலாம்.
றொபேட் பிளேக் எழுதிய இன்னுமொரு கடிதத்தில் சகோதரர்களுக்கிடையேயான முரண்பாடு என்ற உபதலைப்பில் பின்வருமாறு எழுதுகிறார்
பசிலுக்கும் கோத்தபாயவுக்கும் இடையில் உறவு நன்றாக இல்லை பலர்  இருவரும் இணைந்து பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.  அதுமட்டுமல் இருவரும் சனாதிபதிக்கு முரண்பாடான ஆலோசனைகளை வழங்குகின்றனர்.  ஊதாரணமாக அம்பாந்தோட்டை துறைமுகக் கட்டுமானம் தொடர்பாக இரு சகோதரர்களும் இருவேறு சீன நிறுவனங்களைச் சனாதிபதிக்கு பரிந்துரை செய்ததாகவும் இறுதியில் இரு சகோதரர்களையும் திருப்தி செய்வதற்காக கட்டுமானப்பணிகளை இரண்டாகப் பிரித்து இரண்டு சீன நிறுவனங்களுக்கும் சனாதிபதி வழங்கியதாகவும் அறியமுடிகிறது.
எனவே இந்த விதமான படிப்பறிவற்ற ஊழல் நிறைந்தவர்களுடன் நாடு எப்படி இணைந்து செல்லமுடியும்
இலங்கையின் முன்னை நாள் சனாதிபதியான சந்திரிக்கா பண்டாரநாயக்க இலங்கை அரசியலில் ராஜபக்ச குடும்பத்தின் செல்வாக்கு அருவருப்பானது என்றும் ராஜபக்ச குடும்பத்தைப் படிப்பறிவற்ற பண்பாடற்ற பொறுக்கிகள் எனக் குறிப்பிட்டதாகவும் பறிறீசியா அவர்கள் வோசிங்டனுக்கு அனுப்பிய கேபிளில் தெரிவிக்கப்பட்டிருந்நது.  இதனைப் பின்னர் சந்திரிக்கா அவர்கள் தான் அவ்வாறு கூறவில்லை என்று மறுத்துமிருந்தார். சந்திரிக்கா, தனது பதவிக்காலத்தின் பின் இலங்கையின் அரசியற் சூழ்நிலை பயமுறுத்துவதாகவும் பழிவாங்கும் தன்மை மிக்கதாகவும் மாறிவிட்டதாகவும் குறைப்பட்டிருந்தார்.  மேலும் ராஜபக்ச மக்களின் எண்ணங்களிற் சேறடித்து விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
சிலர் சந்திரிக்காவின் இந்த விமர்சனம் அவரது பிரபுத்துவச் சிந்தனையில் இருந்து வருவதாகவும் ராஜபக்ச போன்ற சாதாரணமான ஒருவரின் அரசியற்செல்வாக்கு குறித்த உயர்குடியின் சந்தோசமின்மையில் இருந்து வருவதாகவும் குறிப்பிடுகின்றனர். அப்படியாயின் இவர்கள் கீழ்த்தட்டு வர்க்கத்தில் இருந்து வந்த தலைவரான சோமவன்ச அமரசிங்க போன்றவர்களின் ராஜபக்ச மீதான விமர்சனத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள்?
அமெரிக்கத்தூதரக அதிகாரியான பற்றீசியா இன்னுமொரு கேபிளில் பின்வருமாறு எழுதுகிறார்.
மரசிங்க ராஜபக்ச பற்றி மிகுந்த விமர்சனத்துடன் இருக்கிறார்.  வர் ராஜபக்ச மிகக் குறுகிய பார்வையைக் கொண்டிருப்பதாகவும் ராஜ பக்ஸ இலங்கையின்  அதிகாரம் மிக்க குடும்பமொன்றிலிருந்து வராதபடியால் மிகுந்த தாழ்வுச் சிக்கலைக் கொண்டிருப்பதாகவும் இதனால் அவர் எவரையும் நம்புவதில்லை எனவும் குறிப்பாகப் படித்தவர்களை நம்புவதில்லை எனவும் குறிப்பிடுகிறார்”
பிளேக்கின் இன்னுமொரு குறிப்பொன்றில்
 னாதிபதியின் ஆலோசகர் ஒருவர் எங்களுக்கு பின்வருமாறு கூறினார்.  உயர் அதிகார வர்க்கத்தில் அல்லது பிரபுத்துவ வர்க்கத்தில் இருந்த வராத சனாதிபதி ராஜபக்ச போன்ற ஒருவருக்கு இரண்டு தெரிவுகள் உள்ளன. ஒன்று ஒரு புரட்சியாளனாக மாறிப் பிரபுத்துவ அதிகார நிலைப்பாட்டை உடைத்து அதிகாரத்ததை மக்கள் மட்டத்திற்கு எடுத்துச் செல்வது  அல்லது அந்த பிரபுக்களுள் ஒருவனாகவே மாறுவது.  ராஜபக்ச இந்த இரண்டாவது தெரிவைச் செய்துள்ளார்.  அவர் தனக்கென ஒரு பிரபுத்துவ வம்சத்தை உருவாக்க முனைகிறார்.  சனாதிபதியினுடைய மூத்தமகனான நாமல் ராஜபக்ச ராஜபக்சவின் வெற்றியினைத் தொர்வார் என அடிக்கடி கூறப்படுகிறது.  ஆனாலும் தூதரகத்தின் பிரத்தியேகமான தொடர்பாளர் ஒருவரின் தகவலின்படி சனாதிபதி இடைத்தேர்தல் ஒன்றை நடாத்துவதற்குப் பின்னடிப்பதற்குக் காரணம் நாமல் ராஜபக்ஸ பாராளுமன்றத்தில் ஒரு பதவியை பெற்றுக்கொள்வதற்கு அதன்போது விரும்பியிருப்பதாகும்.”
ஆனால் துரதிஸ்டவசமாக தனது துடிப்பான  மகனும் முடிக்குரிய இளவரசனுமான நாமல் ராசபக்ஸவின் முகத்திலும் கரியைப்பூசுவதில் அவர் வெற்றிகண்டுள்ளார்.
இந்த வருட ஆரம்பத்தில் நாமலின் இறுதியாண்டுச் சட்டக்கல்லூரிச் சோதனைகளின் போது அவருக்கு இணைய வசதி கொண்ட கணணியையும்  குளிரூட்டப்பட்ட தனியான அறையையும் சோதனைக்கு பொறுப்பான அதிகாரிகள் வழங்கி இருந்தமை ஊடகங்களில் மிக முக்கியமான செய்தியாக இடம்பெற்றிருந்தது.
இது தொடர்பாகக் காவற்துறைக்கும் சட்டக்கல்லூரி அதிபருக்கும் பின்னர் பிரதம நீதித்துறை அதிபருக்கும் நாமலின் சக பரீட்சை எழுதுனனான துசார ஜெயந்த முறைப்பாடுகளைச் செய்திருந்தார்.
இலங்கையில் தற்போதுள்ள சூழ்நிலையில் இதுபோன்ற விடையங்களைப் பகிரங்கப்படுத்தும் துசார ஜெயந்தவின் துணிவு  மீளவும் நிகழத்தேவையில்லை. ஏனெனில் அவர் தனது துணிவினால் உடல்ரீதியான சித்திரவதைகளை எதிர்கொள்ள நேர்ந்ததுடன் தனது முறைப்பாடுகளுக்கான சரியான நீதியையும் பெற்றுக்கொள்ளவில்லை.
சட்டக்கல்லூரியோ நீதிமன்றமோ அவருக்கு நீதியை வழங்கவில்லை
உயர்நீதிமன்றம் அவரது அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கைத் துறைசார்ந்த நுட்பங்களின் பற்றாக்குறையைக் காரணம் காட்டித் தள்ளுபடி செய்துவிட்டது.
எழுதியவர்: உவிந்து குருகுலசூரிய Uvindu Kurukulasuriya
மொழிபெயர்ப்பு: தேவ அபிரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக