பின்பற்றுபவர்கள்

21 மே, 2012

நாங்கள் ஈழம் கேட்கவில்லை.




நேற்று தொலைக்காட்சியில் உலகச் செய்திகளை கேட்டுக்கொண்டிருந்த போது அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலரி கிளிங்டன் சிரியாவில் நடக்கும் பிரச்சனைகள் குறித்துக்கருத்து தெரிவிக்கும் போது கீழ்க்கண்டவாறு  கூறினார் : சிரிய சனாதிபதி என்ன சொல்கிறார் என்பதையல்ல அவர் என்ன செய்கிறார் என்பதையே நாங்கள் அவதானிகிறோம்.
2009 ம் ஆண்டு இலங்கை சனாதிபதியும் இலங்கை இராணுவமும் என்ன செய்கிறார்கள் எனக்கவனிக்காமல் என்ன சொன்னார்களோ அவற்றுடன் திருப்தியடைந்து விட்ட உலகம் குறித்துத் தமிழ்மக்களுக்குத் தெரியும். அது போல இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவந்து விட்டு அமெரிக்கா இலங்கைக்கு எதிரான ஆயுதவிற்பனைத்தடையையும் தளர்த்தி இலங்கையில் வியாபாரம் செய்வதற்கான அக்கறையையும் வெளிப்படுத்தி இருக்கிறதையும் தமிழ்மக்கள் அறிவார்கள்.
அரசியல் வாதிகள் அல்லது அரசியற்கட்சிகள் பேசுவதை  கேட்கும் போதே தலை சுற்றிப்போகிறது. சில உதாரணங்களைக் கவனிப்போம்
கூற்று ஒன்று:
தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகள் வெல்லப்பட வேண்டுமேயானால் இனங்களுக்கிடையிலான நல்லுறவும் ஐக்கியமும் நிலவுகின்ற சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், இன முரண்பாடுகளை வளர்ப்பதன் ஊடாக அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்பதே கடந்த கால அனுபவங்கள் எமக்கு கற்றுத்தந்த பாடங்கள் என்றும் ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் மத்திய குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லுறவும் ஐக்கியமும் நிலவுகின்ற சூழல்  என்று ஒன்று இருக்கிறதா அதனைப் பாதுகாப்பதற்கு ..?
அரசியலுரிமைப்பிரச்சனைகள் தீர்க்கப்படாமையினாலேயேதானே  ஐயா இனமுரண்பாடே தோன்றியது?
மேற்குறித்த செய்தியை வாசித்து விட்டு .பீ.டி.பீ வெறும் ஆயுதக்குழுவாக இருந்து கொலைகளைச்செய்து விட்டுப்போனால் பரவாயில்லை இப்படி முன்னுக்குபின் முரணான வியாக்கியானங்களைச் செய்யப் புறப்பட்டுக் கருத்தியல் கொலைகளைச் செய்வதை கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் இனநல்லிணத்துக்குமான ஆணைக்குழுகூடச் சகித்துக்கொள்ளாது என்கிறார்கள் ஈழத்தமிழர்கள்.
கூற்று இரண்டு:
ஜே.வி.பி இன் முன்னை நாள் உறுப்பினர் லால் காந்த பின்வருமாறு கூறுகிறார்:
ஆயுதப் போராட்டமும் இல்லை, முன்னர் மேற்கொண்ட தேசிய ரீதியான போராட்டமும் இல்லை. இதனால் போராட்டத்தின் உண்மையான உரிமையாளர்கள் தற்போது, போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர்.  தற்போது, நாட்டில் இந்த போராட்டம் நடைபெறவில்லை. நாட்டுக்கு வெளியில் போராட்டம் நடைபெறுகிறது.  அது கெடுதியான நிலைமைக்கு சென்றுள்ளது.  இது மிகவும் பாரதூரமான நிலைமையாகும்.  இது நாட்டிற்குள் பிரபாகரன் நடத்திய தாக்குதலை விட மிகவும் பயங்கரமானது.  அதிகாரத்தை பரவலாக்க வேண்டும் என தற்போது கூறுகின்றனர். இதற்கு முதல், பிரச்சினை என்ன என்பதை அறிந்துகொள்ள வேண்டும். தேசியப்பிரச்சினை என்ன என்பதை அறியாது எப்படி அதனை தீர்ப்பது?
அடகடவுளே! அதிகாரத்தைப் பரவலாக்கவேண்டும் என்பதுதானே பிரச்சனையே. சகல அதிகாரங்களையும் ஒரு இனமே வைத்துக்கொண்டிருக்கிறதே!! இல்லை.. இல்லைஒரு குடும்பமே (அல்லது ஒரு இனத்தைச்சேர்ந்த  சிறிய உயர்வர்க்கமே) வைத்துக்கொண்டிருக்கிறதே!
அதிகாரங்களைபரவலாக்கல்,சனநாயகத்தை உறுதிப்படுத்தல், மனிதஉரிமைகளைப் பாதுகாத்தல், ஊழலற்ற ஆட்சியை வழங்கல்இராணுவமயமாக்கலைக் கைவிடல் போன்ற கோரிக்கைகள் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அவசியமானவைகள் இவற்றைக் கேட்டால் ஈழம் கேட்கிறீர்கள் என்கிறீர்களே
ஈழம் கேட்டபோதும் இவற்றைத்தான் கேட்டோம்ஈழத்துக்குள் கேட்டோம்.
தேசியப்போராட்டம் இன்றைக்கு இல்லை என்கிறீர்கள்.
ஏறத்தாழ பத்து இலட்சம் மக்களின் மனதில் என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது?
இவர்களுட் சில ஆயிரங்களை விட்டு விடுங்கள். அவர்கள் கொள்ளை அடித்தல்  மணல் அள்ளல் சாராயக்கடை வைத்தல் எஞ்சி இருப்பவைகளைச் சுருட்டிக்கொள்ளல் இயலாதபோது சாதிப்பேரால் திட்டுதல் போதைப்பொருள் விற்றல் ஆட்களைக்கடத்தல் அரசமரம் நட இடம்பார்த்தல் அனாதரவான சிறுமிகளைப்பாலியல் வன்முறைக்குட்படுத்தல் பின் தலையில் கல்லைப்போட்டுக் கொல்லுதல் அல்லது இந்தவழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்காக வாதாடுதல் என நேரமின்றி இருக்கிறார்கள்
அவர்களை விட்டு விடுங்கள்
இதைத்தவிர மூன்று தசாப்தங்களாக எரிந்து சாம்பலான ஈழக்காட்டின் சாம்பலின் உள்ளே என்ன கனன்றுகொண்டிருக்கிறது?
தேசியப்பிரச்சனை என்றால் என்னவென்று  தெரியாமலேயேயா முப்பது வருடங்களைக் கழித்தீர்கள?
முப்பது வருடங்களாகச் சிங்கள மக்களின் பேரினவாதக் கள்ளுவெறியை முறிக்காமல்  பாதுகாத்த அரசியல் வாதிகளுக்கு ஆதரவளித்தீர்களா இல்லையா?
கூற்று மூன்று:
30 ஆண்டுகளாக நீடித்து வந்த யுத்தம் தொடர்பான பிரச்சினைகளுக்கு மூன்று மாத காலத்தில் தீர்வு வழங்குமாறு கோருவது நியாயமற்றது என மலேசிய பிரதி வெளிவிவகார அமைச்சர் ரிச்சர்ட் ரியோத் தெரிவித்துள்ளார்.
முப்பது வருடங்களின் முன்பு இன்னும் சொல்லப்போனால் சுதந்திரமடையும் போதே இனங்களுக்கிடையில் நல்லுறவு நிகழக்கூடிய வகையில் அரசியல் யாப்பை ஆக்கி  அதிகாரங்களைப்பகிர்ந்திருந்தால்...
ஐம்பதுக்கம்பது கேட்ட போதே கொடுத்திருந்தால்
இப்படிப்பல ஆலுகள் இருக்கையில்எங்களுடைய அடுப்படிக்குள்ளையே வந்து அரசு நடுகிறீர்கள்.. அரசு தானாக முளைத்தால் அதனை வணங்குவோம் அது வேறு
உருவாக்கப்பட்ட யாப்பில் இருந்த சிறுபான்மை இனங்களின் உரிமைகளைப்பாதுகாக்கக்கூடிய அம்சங்களையும் காலப்போக்கில் தின்று எப்பம் விட்ட  பின்னர் இன்னும் எதற்கு அவகாசம் கேட்கிறார்கள்.
மலேசிய அமைச்சரை விடுங்கள் அவருக்கு வரலாறு தெரியாதென்று வைத்துக்கொள்ளுவோம்.
மூன்று யுகங்கள் ஆனாலும் சரி சிங்களப் பெருந்தேசிய வாதம் இந்தப்பிரச்சனையை தீர்க்கப்போவதில்லை.
இதைத்தான் தந்தை செல்வா சொன்னார்பின்னர் தமிழ்ப்போராளிகள் சொன்னார்கள்அதனால்தான் ஈழம் கேட்டார்கள் கேட்டவர்களையும்  கேட்டவர்களைக் கேட்டவர்களையும் கூண்டோடு கைலாசம் ஏற்றிய கெட்டவர்கள் ஆனீர்கள்.
சரி போனாற்ப்போகிறது வயிற்றுக்குத்தைப் பழைய இடத்திலேயே விட்டுமென்று கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் இனநல்லிணக்கத்துக்குமான  ஆணைக்குழுவின் பரிந்துரைகளையாவது நடைமுறைப்படுத்துங்கள் எனக் கேட்டால் வானுக்கும் மண்ணுக்குமிடையில் எகிறிக் குதிக்கிறீர்கள்
அது சரி கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் இனநல்லிணக்கத்துக்குமான  ஆணைக்குழு என்ன தமிழீழமா கொடுக்கச் சொல்கிறது
விடிய விடிய இராமர் கதை விடிந்த பிறகு ராமர் சீதைக்கு என்ன முறை என்பதைப் போலுள்ளது இலங்கை அரசியல் வாதிகளின் பேச்சுக்கள்.
இராமர் சீதை உறவு முறை என்னும் போதுதான் இந்த உறவு முறை பற்றிய குழப்பங்கள் இலங்கையின் அரசாங்கத்துள் உள்ளவர்களுக்குக் கடுமையாக உள்ளது ஞாபகம் வந்தது. கடந்த சில நாட்களாக  அவர்கள் பேசியவைகளைக் கவனியுங்கள்:
இலங்கையின் மூத்த சகோதரியான இந்தியா, இலங்கை மீது அன்பு இல்லை என்ற காரணத்திற்காக அமெரிக்காவுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. தமிழ் நாட்டு மச்சானுடன் இருக்கும் திருமணம் பந்தத்தை காப்பற்றிக்கொள்ளவே ஆதரவு வழங்கியது.                     -திலான் பெரேரா
தெற்காசியாவின் பெரியண்ணன் என்ற அந்தஸ்தை இழந்துள்ள இந்தியா இன்று ''பெரிய அக்காவாக'' மாறி அமெரிக்காவிடம் மாப்பிள்ளையெடுத்து இலங்கைக்கு துரோகமிழைத்துள்ளது  
-அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய.
ஜே.ஆர் ஜேவர்த்தனா தன்னால் பெண்ணை ஆணாகவும் ஆணைப்பெண்ணாகவும் மட்டுமே மாற்றமுடியாதென்றார். மகிந்த அரசில் உள்ளவர்கள் இந்திய அண்ணணை அக்காவாக மாற்றி அதனையும் செய்துவிட்டனர்.
அதனைவிடப் பெரிய குழப்பம் என்னவெனில் இந்தியா அமெரிக்கா தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கிடையே இருக்கும் உறவு முறைகளை எப்படி விளங்கிக்கொள்வதென்று கடந்த சில நாட்களாக எனக்கு குழப்பமாக இருக்கிறது. எனது பெரியப்பா இருந்திருந்தாலாவது அவரிடம் கேட்டிருக்கலாம். அவர் எனது கிராமத்திலிருக்கிற எல்லா மனிதர்களுக்குமிடையில் உள்ள உறவு முறைகளையும் துல்லியமாகச் சொல்லுவார். பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் கண்டும் காணாமலும் கெட்டும் கெடாமலும் வந்த உறவுகளைக்கூட ஒரு நமட்டுச் சிரிப்போடு சொல்லுவதில் அவர் வல்லவர்.
இன்னுமொரு விடையம் மறந்து போனேன்.  “தம்பி  வயித்துக்குத்தைப் பழைய இடத்தில விட்டு விடுங்கோ எண்டு கேட்கிற ஒரு காலமும் வரும் என்று சொன்னவரும் அவர்தான்
அது போகட்டும் நான் எங்கு தொடங்கினேன்…. ஹிலரி கிளிண்டனில்
எல்லோரும் என்ன பேசுகிறார்கள் என்றல்ல என்ன செய்கிறார்கள் என்றுதான் நாங்கள் பார்க்கிறோம்….  பார்த்துக்கொண்டே இருப்போம்….
அதனால் நாங்கள் இப்போதைக்கு ஈழம் கேட்கவில்லை
தேவ அபிரா
31-03-2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக