பின்பற்றுபவர்கள்

20 மே, 2012

சாதியிழக்காது!.... தேசியம்?




சில நாட்களின் முன் தந்தை செல்வா நினைவுகூட்டத்தில் உரையாற்றுவதற்கென முன்னாள் அமைச்சர் செல்லையா இராஜதுரை வருகை தந்தபோது ரெலோ அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் கறுப்பு கொடிகாட்டி எதிர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் கறுப்புக் கொடிகாட்டிஎதிர்ப்பில் ஈடுபட்டதுமின்றிக் கூட்டத்திலிருந்து  வெளியேற்றப்படும் போது இராசதுரை அவர்களைப்பார்த்துத் துரோகி சக்கிலியா  என உரத்துத் திட்டியவாறே வெளியேறினார்.
அவர் அவ்வாறு திட்டியதைப்பார்த்து அதிர்ச்சியடைவதற்கு எதுவுமில்லை. ஏனெனில் மனிதர்கள் உணர்ச்சிவசப்படும் போதுதான் அவர்களது உண்மையான உள்ளக்கிடக்கைகள் வெளிவரும். இலட்சக்கணக்கான தமிழர்களின் மனக்கிடங்கில் தேங்கியுள்ள சாதி வெறி மூத்திரத்தின் ஒரு துளியே திரு சிவாஜிலிங்கம் அவர்கள்.
செல்லையா இராசதுரை அவர்களைப்பேச விட்டு அவரது கருத்துக்களை திரு சிவாஜிலிங்கம் அவர்கள் தனது கருத்துக்களால் எதிர்கொண்டிருந்தால் அது சனநாயகம். சிலவேளைகளில் திரு செல்லையா இராசதுரை அவர்களின் பேச்சுத்திறனின்  முன் தான்  தோற்றுப்போய்விடலாமென்ற பயத்தின் காரணமாகவும் சாதி என்ற ஆயுதத்தைத் திரு சிவாஜிலிங்கம் அவர்கள் கையில் எடுத்திருக்கவும் கூடும். இங்கே எனது நோக்கம் திரு இராசதுரை அவர்களின் கடந்த கால அரசியல் வரலாற்றை நியாயப்படுத்துவதல்ல. இலங்கையின் அரசியல் வரலாற்றில் மக்கள் நலன்களை மட்டுமே மையமாக வைத்து அரசியல் செய்தவர்கள் எவருமேயில்லை. இன்னும் பாராளுமன்ற அரசியலென்பது அரசியல்வாதிகளின் பங்குச்சந்தை மட்டுமே. அங்கே ஒருவரை ஒருவர் துரோகி எனக்கூறிக்கொள்ளா ஆயிரம் காரணங்கள் இருக்கும். இந்த விவாதத்தை விட்டுவிடுவோம்
சிலகாலங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தின் உள்ளூராட்சி சபையின் கூட்டமொன்றில் நிகழ்ந்த விவாதமொன்றில் ஒரு உறுப்பினர் இன்னொ உறுப்பினரை சாதிப்பெயரைக் குறித்து திட்டியுள்ளார். இது குறித்து ஒரிரு ஊடகங்களில் செய்திகள் வந்த போதும் சிவாஜிலிங்கம் விடையம் போன்றளவுக்கு அது முக்கியம் பெறவில்லை. ஒவ்வொரு நாளும் தான் யாரோ ஒருவர் இன்னொருவரின் சாதியைக்குறித்து திட்டுகிறார் இதனையெல்லாம் பத்திரிகையில் போடமுடியுமோ எனத் தேசியப்பத்திரிகைகள் நினைத்திருக்கக் கூடும். விவாதங்களிலும் சரி கருத்தாடல்களிலும் சரி பல சந்தர்பங்களில் முதுகிற்குபின்னாலும் முகத்திற்கு முன்னாலும் சாதியைக்குறித்துப்  பேசி எதிராளியின் கருத்தை மறுதலிப்பது நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது.
இதே போல் இன்னுமொரு உள்ளூராட்சிசபையில் வேலை ஒன்றுக்கான வெற்றிடமொன்றிற்கு விண்ணப்பித்த ஒருவர் சகல தகுதிகளையும் கொண்டிருந்த போதும் அவரது சாதி காரணமாக அந்த வேலை தரப்படாது நிராகரிக்கப்பட்டிருக்கிறார். இந்தச்சம்பவம் முன்னைய இரு சம்பவங்களைவிடவும் மோசமானதாகும். ஒருவரது சாதி காரணமாக அவருக்கு கிடைக்க வேண்டிய சமூக பொருளாதார அரசியல் இடமானது மறுக்கப்படுவது மோசமான குற்றமாகும். இந்தக்குற்றமும் இலங்கைத்தமிழர்களின் வரலாற்றில் சர்வசாதாரணமாக  இழைக்கப்பட்டே வந்திருக்கிறது;வருகிறது.
அண்மையில் இன்னுமொரு சம்பவமும் சந்தடியில்லாமல் நிகழ்ந்துள்ளது. சைவ வேளாளர்களின் நலன்களைப் பேணுவதற்கான சங்கம் கொழும்பில் தன்னை மீளவும் புதுப்பித்துள்ளது.
சைவ வேளாளர்கள் தங்களின் எந்த நலன்களைப்பேண விரும்புகிறார்கள்?
சைவமும் வேளாளமும்((இந்துத்துவம்) தங்களை ஒத்த மனிதர்களைச் சாதிகளாகப் பிரித்து அடிமை குடிமைகளாக மாற்றிய நூற்றாண்டுகால வரலாறை (சாதியஒடுக்குமுறையை) இன்னும் வலிமையானதாக மாற்ற விரும்புவதன்றி வேறெதையும் செய்யும் நோக்கம் அந்தச்சங்கத்திற்கு இருக்கிறதோ  தெரியாது.
இரண்டு நாட்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்திலுள்ள எனது நண்பர் ஒருவருடன் உரையாடிய போது இப்ப ஊருக்குள்ள கண்ட கண்ட ஆட்கள் எல்லாம் வந்து காணி வீடு வேண்டுகின  யார் எவரென்று தெரியவும் இல்லை என்று குறைப்பட்டுக்கொண்டார். அவரது உணர்வை புரிந்து கொண்ட போது சைவ வேளாளர்களின் நலன்களுக்கான சங்கத்தின் அந்த ஊர்க்கிளைத்தலைவராக விரைவில் அவர் வரக்கூடும் என்று தோன்றியது.
தேசிய விடுதலைப்போராட்ட எழுச்சியின் ஆரம்பகாலங்களின் போது வலிமையாக கேள்விக்குட்படுத்தப்பட்ட ஒரு அம்சமான சாதிய ஒடுக்குமுறை இன்றைக்கு மீண்டும் இயல்பான அம்சமாக மாறிவிட்டது
விடுதலைப்புலிகளின் காலத்தில்  இளைஞர்களின் போர்ப்பங்கேற்பை அதிகரிப்பதற்காக  விடுதலைப்புலிகள் இந்த அசுரனை அமுக்கி வைத்திருந்தனர்.  இன்றைக்கு சாதிய ஒடுக்கு முறை என்னும் நச்சுமரம் அகலக்கால்பரப்பி மீண்டும் விருட்சமாக   வளர முனைவதைத் தமிழ்த் தேசிய வாதிகள் கண்டுகொள்ள விரும்பவில்லை எனத்தெரிகிறது.
தமது சகமனிதரை சாதியின் பேரால் ஒடுக்கமுனைபவர்களுக்கு சிங்கள அதிகாரத்திடமிருந்து  விடுதலை கோர எந்த உரிமையும் இல்லை என்பதை எந்தப்பனைமரத்துக்கு மேலே ஏறிநின்றும் சொல்வேன் எல்லோருக்கும் கேட்குமென்றால்.
நான் புலம்பெயர்ந்து வாழும் நாட்டில் ஒருமுறை தமிழர் ஒருவருக்கு அவரது தொழில் தேடல் மற்றும் சமூக நலன்களைப் பெற்றுக்கொள்ளல் தொடர்பான நேர்முகமொன்றிற்கு மொழி பெயர்ப்பாளராகச் செனறிருந்தேன்.
சுயமாகத் தொழில் தேடும் முனைப்பின்றி நீண்ட காலமாக அரச உதவித் தொகையில் தங்கியிருக்கும் அவரை சுத்திகரிப்புத் தொழிலுக்கு செல்லுமாறு உள்ளூராட்சி சபையின் அதிகாரி வேண்டினார். இதனைக் கேட்டதும் தமிழ் நண்பருக்கு அண்டபிண்டமெல்லாம் பற்றிக்கொண்டது. எங்கடை நாட்டில எளிய சாதிகள் செய்யிய வேலையைச்செய்யவோ என்னை உவன் சொல்லுறாண்என்றார்.
நான் இதனை அந்த அதிகாரிக்கு நாகரீகமான மொழியில் கூறிய போது
எங்களுடைய நாட்டில் உங்களுடைய நாட்டில் உள்ளது போலச்சாதிகள் இல்லை. எங்களுடைய நாட்டில் தொழில்கள் மட்டுமே உள்ளன யாருமெந்தத்தொழிலையும்  செய்யலாம். உங்களுக்கு இருக்கும் அறிவு ஈடுபாடு கற்றுக்கொள்ளும் திறன்  போன்றவற்றைப் பொறுத்து எந்த்த தொழிலென்பது அமையும்.  ஆனால் எங்கள் நாட்டில் வேலை செய்வதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டிருந்தபோதும்  எந்த முயற்சியும் இல்லாமல் மக்களின் வரிப்பணத்தில் சீவிப்பவர்களைத்தான் நாங்கள் இழிந்தவர்களாக கணிக்கிறோம். என்றார் அந்த அதிகாரி. அவரின் பெயர் ஸ்கூன் மாக்கர் (schoenmaker- காலணி செய்பவர் எனப்பொருள்படும்)
முதலாளித்துவத்தின் வளர்ச்சியில் குறிப்பிட்ட தொழிற்பிரிவு என்பது இழிவுத்தன்மைகொண்டதாகக் கணிக்கப்படுவதில்லை மாறாக  பணமீட்டும் ஒரு செயலாக மட்டுமே பார்க்கப்படுகிறது. இதனால் முதலாளித்துவம் வளர்ச்சி அடைந்த நாடுகளில் தமதுதொழிற் பெயரையே குடும்பப்பெயராகக் கொண்டவர்களைக் காணமுடிகிறது.
ஆனால் இவர்கள் எவர்களும் அவர்களது குடும்பப்பெயர்காரணமாக  வேலைவாய்ப்புக்களிலோ கல்வி நிறுவனங்களிலோ அரசியலிலோ சமூகத்திலோ இன்னும் தனிமனித உறவு நிலைகளிலோ ஓரம் கட்டப்படுவதில்லை.
இங்கு நாங்கள் இன்னுமொரு விடையத்திலும் கவனமாக இருக்கவேண்டும். சாதியம் என்பது வெறுமனே  தொழிற்பகுப்பின் அடிப்படையிலான ஒடுக்குமுறையல்ல.  சாதியத்தின் தோற்றம் அதன் தொழிற்படுமுறைமை போன்றவை குறித்து ஆழமான ஆய்வுகள் நடாத்தப்பட்டுள்ளன. சாதியத்தின் தோற்றம் பற்றிக் பலகோட்பாடுகளும் உள்ளன.
நடைமுறையில்  சாதிய ஒடுக்குமுறைகள் மனித குலத்திற்கெதிரான மிருகக்குணம் கொண்ட நடத்தைகளை நினைவுபடுத்துபவையாக உள்ளன. குறிப்பாக இந்தியாவில் இந்த விதமான கொடூரமான சாதிய ஒடுக்குமுறைகளைக் காணமுடிகிறது.
ஆரம்பத்தில் இலவசக்கல்வி முறைமையும் பின்னர் ஈழ விடுதலைப்போராட்டமும் அதன்வழியே ஏற்பட்ட புலம் பெயர்வும் இலங்கைத்தமிழர்களுள் நிலவிய சாதிய ஒடுக்குமுறைகளினுள் இருந்து அந்த ஒடுக்குமுறைக்குள்ளானவர்கள் வெளியே வருவதற்கான கதவுகளை ஓரளவுக்கேனும் திறந்து விட்டிருந்தன.
ஆனால் இந்தக்கதவுகள் இன்றைக்கு மூடப்பட்டுவிடுமோ என்ற அச்சம் தோன்றியுள்ளது.
சாதிய ஒடுக்குமுறையின் மறைவு என்பது எமது விடுதலைக்கான ஒரு முன்நிபந்தனை.
ஒரு இனத்தைப் பிளவுபடுத்தி நிற்கும் முக்கியமான  அம்சத்தை கவனத்தில் கொள்ளாமல் எமது மக்களை அணி திரட்டி சாத்வீக போராட்டத்தை ஆரம்பிக்கும் கட்டம் ஒரு போதும் உருவாகாது. என்பதை திரு மாவை சேனாதிராஜா அவர்களுக்கு யாரேனும் குறும் செய்தியாக(SMS) அனுப்பவேண்டும்.
நீதி நிர்வாக அரசியல் மற்றும் சமூக்கட்டமைப்புக்களில் நிகழக்கூடிய சாதிய ஒடுக்குமுறைகளைச் சட்டரீதியாக தடுக்கிற அதேவேளை மனித மனங்களிலும் மாற்றமேற்படவேண்டும். உயர்சாதி எனப்படுவோரின் உயர்வுச்சிக்கலும் தாழ்ந்தசாதி எனப்படுவோரின் தாழ்வுச்சிக்கலும் இல்லாது போகவேண்டும். இந்த வகையான மாற்றங்கள்   வெறுமனே  திடீரென நிகழ்வதில்லை. இவை அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களுடனும் சம்பந்தப்பட்டவை.
நான் என்னவகையான தொழிலைப்புரிந்தாலும் எந்தச் சாதிநிலையில் பிறந்திருந்தாலும் அடிப்படையில் நான் மனிதன். எனது உள்ளுறை ஆற்றலையும் கருத்தையும் வெளிப்படுத்துவதற்கும் ஒருமனுச சென்மமாக இந்த உலகத்தில் எனது இடத்தைஎடுத்துக்கொள்வதற்கும் எனக்குள்ள உரிமையை யாரும் மறுக்க முடியாது எனச் சொல்லுமளவுக்கு ஒவ்வொருவரும் துணியவேண்டும். உயர்வுச்சிக்கலுடன் திரிகிற மனிதர்களின் முகத்தில் இந்தத்துணிவு அறையவேண்டும்.
இன்றைக்கு இந்த உயர்வுச்சிக்கலையும் தாழ்வுச்சிக்கலையும் கடந்தமனிதர்கள் ஆயிரம்பேர் இருக்கிறார்கள் இது அவர்களுக்கான வேண்டுகோளல்ல. இன்னமும் சாதிய ஒடுக்குமுறைக்குள் சிக்கி இருக்கிற இலட்சகணக்கான மக்களுக்கும் அந்த ஒடுக்குமுறைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் அங்கீகரித்துக்கொண்டு இருக்கிற மாக்களுக்கும் விடுக்கிற வேண்டுகோள்.
சாதியிழக்காத இனம் தேசியமல்ல.
அதுசரி செல்லையா இராசதுரையவர்கள் உண்மையிலும் என்ன சாதி?
தேவ அபிரா
11-05-2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக