பின்பற்றுபவர்கள்

26 அக்டோபர், 2007

சித்திரவதைகளும் சித்திரவதைக்குள்ளாகிச் சீவித்திருப்போரும்.

நான் இப்பத்தியை 1996 ம் ஆண்டு சரிநிகரில் எழுதியிருந்தேன். இத்தனை வருடங்களின் பின்பும் இப்பத்தி பேசமுற்பட்ட விடையம் கவனிக்கப் படாததாகவே உள்ளது।
கடந்த 10 வருடங்களாக மேலும் மேலும் முனைப்படைந்து வரும் யுத்தத்தினால் மனிதப்பெறுமானங்கள் சிதைவடைந்துவருகின்றன.
அதிகாரத்தைத் தக்க வைக்க அரசாங்கங்களுக்கும் விடுதலைஅமைப்புக்களுக்கும் என்னவெல்லாம் தேவைப்படுகின்றது என்பதை நாங்கள் நடைமுறைக்கூடாக அறிந்து வருகிறோம். அதிலும் இலங்கையின் அரசாங்கம் தனது அதிகாரத்தைத்தக்க வைக்க எவ்வாறெல்லாம் செயற்படுகிறது என்பதை நாம் இன்று கண்கூடாகக்காண்கிறோம்.
மனித விழுமியங்களையும் சனநாயக உரிமைகளையும் காக்கவும் நடைமுறைப்படுதவும் வேண்டிய அரசுகள் எதையெல்லாம் செய்யக்கூடாதோ அதையெல்லாம் செய்கின்றன.
புதிய உலக ஒழுங்கில் சனநாயகத்தின்பெயரால் மனித விழுமியங்களையும் சனநாயக உரிமைகளையும் எப்படிச்சிதைப்பதென அமெரிக்கா உலக நாடுகளுக்குச்சொல்லிக்கொடுத்து வருகிற இந்த வேளையில் புதிய அரசொன்றை உருவாக்க விரும்புகிற உருவாக்கிக்கொண்டிருக்கிற விடுதலை அமைப்புக்களும் அதிகாரத்துக்கு வரவிரும்புகிற புரட்சிகர அமைப்புக்களும் மானுட விழுமியங்களையும் சனநாயக உரிமைகளையும் பேணுகிற கலாசாரம் தங்களுக்குள் வளர்வதை பிரக்ஞையுடன் ஊக்குவிக்க வேண்டும் ;உறுதிசெய்யவேண்டும்.
இல்லையெனில் இன்றைய அரசுகள் செய்வதையே எதிர்காலத்தில் இந்த அமைப்புகளும் அதிகாரத்தைப்பேணச் செய்ய வேண்டியிருக்கும்.
இன்னும் குறிப்பாகச் சொல்வதெனின் உலகில் உள்ள எல்லா விடுதலை அமைப்புகளும் மனிதவிழுமியங்களுக்கும் சனநாயகத்திற்கும் எதிரான கலாசாரத்தை வெவ்வேறு அளவுகளில் கொண்டேயுள்ளன.
ஒடுக்குபவர்களும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான அமைப்புகளும் “அதிகாரத்தைப் பேணுதல்” என்பதில் ஒரே விதமான இயங்கியலைக் கொண்டிருப்பதை எவ்வாறு விளங்குவது?
இப்பத்தி மேற்குறித்த இயங்கியலுக்குள்ளிருக்கும் ஒரு கலாசாரத்தை- சித்திரவதைக்கலாசாரத்தைப் பற்றிப் பேச முற்படுகிறது.

வாசிப்பு உங்களுடையது!

பாகம்-1


இலங்கையின் சகல சமூகங்களும் பல்வேறு விதமானதும் புதியதுமான நெருக்கடிக்களுக்கு முகம் கொடுக்கின்றன..
இதுவரை காலமும் சிந்திக்காத புதிய வாழ்க்கைப் பரிமாணங்களைப் பற்றிச் சிந்திக்கவும் அவை தரும் பிரச்சினைகளுக்குக் கூட்டாகச் சேர்ந்து முகம் கொடுக்கவும் வேண்டிய தேவைகள் உருவாகி உள்ளன.

நான் இங்கு விபரிக்க போகும் நிலைக்கு நீங்களோ உங்கள் உறவினரோ உங்கள் அயலவரோ ஆளாகி வாழ்தல் கூடும். நீங்கள் இந்நிலைக்கு ஆளாகி இருந்திருப்பின் உங்களுக்குள்ளேயே அமுக்கப்பட்டிருந்த உணர்வுகளை இப்பத்தி கிளறி விடக்கூடும்.

சித்திரவதையையும் சித்திரவதைக்குள்ளாகி வாழ்பவர்களையும் பற்றி இப்பத்தி பேசமுற்படுகிறது.

குடும்ப நிலைகளுக்குள் பாவிக்கப்படும் சித்திரவதை என்னும் பதம் தன் முழு அர்த்தபரிமாணத்தையும் புலப்படுத்துவதில்லை.

சித்திரவதை எவ்வளவு கொடூரமானது என்பதை அதை அனுபவித்தவர்களாலும்கூட விபரிக்க முடிவதில்லை.

சித்திரவதைபற்றி நாங்கள் முதலில் அறியத்தொடங்குவது சமயபுராணக் கதைகளில்தான்.
இவ்வுலகத்தில் தீமைபுரிவோர் நரகலோகத்திற் கொதிக்கும் எண்ணைய்க் கொப்பரைகளில் இடப்பட்டுப் பின் ஈட்டி முனைகளில் சொருகி விடப்படடுச் சித்திரவதை செய்யப்படுவார்களென அக் கதைகள் கூறுகின்றன. இந்துக்களின் சைவ சமய பாடக்கதைகளிற் சமயகுரவரான அப்பர் சமணர்களால் சித்திரவதை செய்யப்பட்டமை பற்றித்தெரிவிக்கப்படுகிறது. பின்னர் சமணர் அதிகாரமிழந்த போது அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டமை பற்றியும் அறியக்கிடைக்கிறது.

இயெசுபிரான் தலையிற் முட்கிரீடம் சூட்டப்பட்டுப் பாரச் சிலுவை சுமத்தப்பட்டுப் பின் அதன்மீதே ஆணிகளால் அறையப்பட்டார் என வேதாகமம் சொல்கிறது.

சித்திரவதை என்னும் எண்ணத்தின் தோற்றுவாய் இச் சமயபுராணக் கதைகள்தானோ என ஐயுற வேண்டியுள்ளது.

மனிதரை மனிதர் சித்திரவதை செய்யும் எண்ணம் எவ்வாறு தோன்றுகிறது என்பது துயரமான வியப்பல்லவா?

மனிதர்களின் பரம்பரை இயலை ஆராயந்த மருத்துவர்கள் ஒரு சில மனிதர்கள் பிறக்கும் போதே கொடூரமான இயல்புகளை வெளிப்படுத்துவதற்குரிய நிறமூர்த்தஅலகுச்சேர்க்கைகளைக் கொண்டிருக்கிறார்கள் எனக்கூறுகிறார்கள்.

ஆனால் சித்திரவதை எனும் செயல்முனைப்பு , புறநடையான தனிமனித இயல்பினாற் மேற்கொள்ளப்படும் ஒரு சிறுநிகழ்வாகக் கருதப்படமுடியாத ஒன்றாகும்.

ஏனெனில் சித்திரவதை என்பது ஒழுங்குமுறைக்குட்பட்ட செயல்வடிவமாகத் தத்தமது நோக்கங்களை அடைவதற்குரிய ஒரு ஆயதமாக கையாளப்பட்டு வருகிறது.
உலக வரலாற்றில், மத்திய காலத்திற் குறிப்பாக 15ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிற் சித்திரவதை மிக அதிகளவில் நடைமுறையில் இருந்துள்ளது. பின் அது படிப்படியாக குறைவடைந்து மீண்டும் இரண்டாம் உலக யுத்தத்தின் போது மிகப்பரவலாக இடம் பெறத்தொடங்கி இன்றளவும் நீடித்து வருகின்றது.
இரண்டாம் உலக யுத்த காலத்தில் மனிதகுலம் வெட்கப்பட வேண்டிய அநாகரிகமான வரலாறு எழுதப்பட்டது. ஜேர்மனிய நாசிகளால் யுதர்கள் மீது புரியப்பட்ட சித்திரவதைகளும் கொலைகளும் உலகின் ஆன்மாவை உலுக்கியதை யார் மறப்பர்?
யுத இனம் அடைந்த அவமானங்களும் ஊனங்களும் மரணங்களும் மனித நாகரீகத்திற்கு எதிரிடையானதாகும். யூத நாவலாசிரியரான லியோன் யுரிஸ் தனது நாவலான “எக்ஸ்சொடொஸ்”-Exodus இல் அவ்வவமானத்தையும் அவலத்தையும் எழுதிச் செல்கிறார்.

இவ்விடத்தில் கீழ்வரும் பந்தியையும் வாசியுங்கள்
With mounting evidence that a shadowy group of former Israeli Defense Force and General Security Service (Shin Bet) Arabic-speaking interrogators were hired by the Pentagon under a classified "carve out" sub-contract to brutally interrogate Iraqi prisoners at Baghdad's Abu Ghraib prison, one only needs to examine the record of abuse of Palestinian and Lebanese prisoners in Israel to understand .....
The Israeli Torture Template
Rape, Feces and Urine-Dipped Cloth Sacks
By WAYNE MADSENசித்திரவதை யுத்தத்தின் இணைபிரியாத தோழன் என்பதை நாங்களும் இப்பொழுது உணர்கிறோம். சித்திரவதை யுத்தத்தின் போது மட்டுமல்ல பயன்படுத்தப்படுகிறது.
அரசாங்கங்கள், விடுதலைப் போராட்ட ஸ்தாபனங்கள், பலம் பெற்ற முதலாளிகள் யாவரும் தத்தமது கொள்கைகளுக்கும் இருப்புக்கும் தமது அதிகாரத்துக்கும் அச்சுறுத்தலாக இருப்பவர்களைச் சித்திரவகை செய்கிறார்கள்.

பொலீஸ் குற்றவாளிகளிடம் இருந்து உண்மைகளைக் “கறப்பதற்கு”,
புரட்சி செய்பவனை அழித்து விடுவதற்குச் சித்திரவதை செய்கிறது.
விடுதலை இயக்கங்களோ அரசுக்கு ஆதரவானவர்களை, சக விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவர்களை, தனக்குள்ளேயே அதிகாரப்போட்டியாளரை சித்திரவதை செய்கிறது. ஆக சித்திரவதை செய்யும் எண்ணம் எல்லாப் புறத்திலும் வேரூன்றி உள்ளது. சித்த்திரவதையை நீயேன் செய்கிறாய் எனக் கேட்டால் தமக்கு தேவைப்பட்ட ஒரு தகவலைப் பெற அல்லது புரிந்த (புரியாத) குற்றம் ஒன்றை ஒப்புக் கொள்ளவைக்கவே என ஒரு பொலிஸ் அதிகாரி விடையளிப்பான். விடுதலைப்போராளியைக் கேட்டாலோ, தேசத்துரோகம் அல்லது ஸ்தாபனத் துரோகம் அல்லது தலைமைத் துரோகம் பற்றி அறிந்து கொள்ளவே சித்திரவதை செய்தோம் என விறைத்த முகத்துடன் கூறுவான்.
ஆனால் சித்திரவதை உண்மையிலும் எதற்காகச் செய்யப்படுகிறது என்பதற்கான விடை அதுவல்ல.
உலகத்திலுள்ள எல்லாவகையான அதிகார சக்திகளும் தமது இருப்பைப் பேணவே சித்திரவதையைச் செய்கின்றன.
சாதாரண குடும்ப உறவுகளில் தொடங்கி அரசாங்கம்-மக்கள் உறவு வரை இதையே அவதானிக்க முடிகிறது. அதிகார அடிப்படையிலான மனித, சமூக உறவுமுறைகளைப் பேணச் சித்திரவதை உதவுகிறது.
தமிழர்களைப் பொறுத்தவரை விடுதலைப் போராட்டம் தொடங்கிய பின்னர் சித்திரவதை பற்றிய நிதர்சனமான அறிவு தோன்றத் தொடங்கியது.
விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றிய இளைஞர் யுவதிகள் தேடப்பட்டனர்; சுற்றி வளைக்கப்பட்டனர். இலங்கை இராணுவம் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் புரியத் தொடங்கியது. இளைஞர்கள் கைது செய்யப்படத்தொடங்கினர்.
மக்கள் நாலாம் மாடி பற்றியும், பனாகொடை சிறைச்சாலைபற்றியும், வெலிகடைச் சிறைச்சாலைபற்றியும், பூசா இராணுவ முகாம்பற்றியும் கேள்விப்படத் தொடங்கினர்.
தாங்கமுடியாத சித்திரவதைகளில் அகப்பட்டு இளைஞர்கள் கதறிய குரல் கேட்டு இன்னும் இளைஞர் போராட்டங்களுக்கு எழுந்தனர்.
ஆனால் காலப்போக்கில் அரச வதைக்கூடங்கள் தந்த அதிர்ச்சியையும் அச்சங்களையும் விட மோசமான அதிர்ச்சியை சந்தித்தோம். இளைஞர்கள் தங்களுக்குள்ளும் ஒருவரையொருவர் சித்திரவதை செய்ய ஆரம்பித்திருந்தனர் என அறிய வந்தபோது மக்கள் மத்தியில் போராட்டத்தின் மானுடப்பெறுமதி பற்றிக் கேள்வி பலமாக எழுந்தது.
இந்தியாவில் தமது பயிற்சி முகாமை அமைத்திருந்த புளொட் இயக்கம் தமது உறுப்பினர்களைச் சித்திரவதை செய்ய சித்திரவதைக் கூடங்களை அமைத்திருந்தமை தெரியவந்தது. தலைமையின் பிழையான போக்குகளுக்கு எதிராக குரல் எழுப்பியவர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர். அந்தச் சித்திரவதைக் கூடங்களில் எழுந்த அவலக் குரல்கள் கோவிந்தனின் “புதியதோர் உலகம்” நாவலில் பிரதிபலிக்கின்றன.
முன்னணி நிலையில் இருந்த விடுதலைத் தாபனங்களான விடுதலைப் புலிகள், புளொட், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈரோஸ் ஆகிய யாவும் ஜனநாயக உறவுகளை மழுங்கடிக்கும் விதத்தில் சித்திரவதை என்பதை ஏதோ ஓரளவில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டிருந்தன. அதிகாரவெறியும் மிருக குணமும் எங்கள் போராட்டத்துடன் இணைந்து வளர்ந்தது. எவ்வாறெனினும் சித்திரவதை என்பது ஒழுங்கு முறைக்கு உட்பட்ட வடிவமாக கையாளப்படத் தொடங்கியது புளொட்டிற்குப் பிற்பாடு புலிகளாலேயாகும்.
விடுதலைப் புலிகளின் துணுக்காய் இராணுவமுகாம் சித்திரவதைகளுக்கு பிற்காலத்தில் பெயர் பெறத்தொடங்கியது. தம்மை இலங்கை இராணுவத்திற்கு காட்டிக்கொடுக்க முனைந்தவர்கள், தமது சிவில் நிர்வாகம் நிலவிய பிரதேசங்களில் கைது செய்யப்பட்ட கிரிமினல் கைதிகள், மாற்றுக் கருத்துக் கொண்ட அரசியல் கைதிகள் ஆகியோரை ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் சித்திரவதை செய்யும் போக்கை அவர்கள் கடைப்பிடித்தனர்.
87ம் ஆண்டின் முற்பகுதியில் தலைமறைவு அமைப்பாக செயற்ப்பட்டார்கள் எனும் சந்தேகத்தில் தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றில் இருந்த சில இளைஞர்களை புலிகள் கைது செய்தனர் (இந்திய இராணுவம் வருவதற்கு முன்பு). பலமாதச் சித்திரவதைகளின் பின்பு அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் விடுவிக்கப்பட்பவர்கள் சித்திரவதையின் விளைவுகளை சுமந்தே வந்தனர். முகம் உப்பி, உடல் வீங்கி, உடல் மூட்டுக்கள் யாவற்றிலும் நோவை சுமந்தே வந்தனர். வீதியில் செல்லும் வாகனங்கள் யாவும் தம்மை கைது செய்பவர்களை சுமந்து வருவதாக எண்ணிக் கலக்கமுற்றனர்.
வாழ்க்கை அவர்களுக்கு வெறுமையாகத் தோன்றியது.

86ம் ஆண்டு காலப்பகுதி என நினைக்கின்றேன், இலங்கை இராணுவத்தினரால் சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுப் பூசா இராணுவ முகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
பாரிய அரசியற் பணபல முயற்சிகளின் பின் விடுதலை செய்யப்பட்ட இளைஞனொருவன் இராணுவத்தின் சித்திரவதைகளால் பாலுறுப்பில் குறைபாடு உடையவனாக வெளிவந்தான். இக்குறைபாடு காரணமாக அவ்விளைஞன் தான் நேசித்த பெண்ணை பிரிந்ததுடன் அவனுக்கு வாழ்க்கையும் வெறுமையானது. ஆண்மைகுறித்த எமது சமூகக் கருத்துக்கள் இவ்வாறானவர்களை ஆண்கள் எனக் கருதுவதற்கு இடமளிப்பதில்லை. ஆணாதிக்க சமூக மதிப்பீடுகள் அவனுக்கு தாழ்வுச்சிக்கல் தோன்றக் காரணமாகின.
எமது விடுதலைப் போராட்ட வரலாற்றின் நீட்சியுட் பெண்களை பாலியற் சித்திரவதைகளுக்கு உட்படுத்துவது இராணுவங்களால் பிரக்ஞையுடன் செய்யப்படுமொன்றாகியுள்ளது.

இலங்கை இந்திய இராணுவங்களினால் பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் , பாலியல் சித்திரவதைக்குள்ளான ஆண்களை விடவும் மோசமான பாதிப்புக்களுக்கு உட்பட்டனர். கற்பு பற்றி நிலவும் கோட்பாடுகள் இப் பெண்களை இன்னும் சித்திரவதை செய்கின்றன. மேலும் இவ்வாறு அறியப்பட்ட பெண்களை தமது பாலியல் இச்சைக்கும் இலகுவாக பயன்படுத்தக் கூடியவர்களாகக் கருதும் போக்கும் எமது சமூகத்தில் நிலவுகின்றது.
87ம் ஆண்டின் பிற்பகுதியில் எங்கள் பிரதேசமெங்கும் கறையான் புற்றுக்கள் போல இந்திய இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டன। எனது வீட்டிற்கு தெற்குப் புறமாக நூறு யார் தூரத்தில் இந்திய இராணுவ முகாம் ஒன்று இருந்தது. அங்கிருந்து அவ் விராணுவமுகாம் அகலும் வரை ஒவ்வொரு இரவும் இளைஞர்களின் அவலச்சத்தங்களால் நிரம்பியிருந்ததை எப்படி மறப்போம். கையாலாகாத் துயரம் மனதைப் பற்றிக்கொள்ள மௌனமாக இருந்தோம்.

“ஈரல் கருகியது ;
இரத்தம் வற்றியது.”
என்பார்களே அதுவேதான்.
ஏன் இப்படி நிகழ்ந்தது?
ஏன் இப்படி நிகழ்கிறது??
இனிமேலும் இப்படி நிகழுமோ???

இவ்விடத்தில் கீழ்வரும் பந்தியையும் வாசியுங்கள்

"Unfortunately, there appears to be a culture of police torture and brutality, reinforced by widespread impunity of police officials। While some cases of torture and/or death in custody have been investigated, no one has been prosecuted or punished yet। In May 2005 the Supreme Court acquitted all the defendants of the October 2000 mob killing of 27 Tamil detainees at the Bindunuwewa detention facility. The youngest inmate in the camp was twelve years old at the time of his death. Methods of torture included beatings (with sticks, iron bars or hose), electric shock, suspending individuals by the wrists or feet in contorted positions, burning, genital abuse, and near-drowning. Detainees reported broken bones and other serious injuries as a result of their mistreatment, and during the year several deaths occurred in police custody. "

* International Rehabilitation Council for Torture Victims (IRCT)

நான் அறிந்தவைக்கப்பால் இன்னும் இன்னும் நெஞ்சைப்பிழியும் அனுபவங்கள் உங்களுக்குள் உறைந்து போயிருக்கலாம்। அச்சத்தாலும் புரிந்து கொள்ள மனிதர்கள் இல்லாததாலும் அவை உங்களுக்குள் கிடந்து உங்களை சித்திரவதை செய்யக்கூடும். உங்கள் ஆத்ம உயிர்ப்பை அழித்துக்கொண்டிருக்கக்கூடும். நாங்கள் இவற்றுக்கு எதிரான புதிய வாழ்க்கை நிலைமைகளை -மதிப்பீடுகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இனிச் சித்திரவதை என்பது எவ்வாறு ஒழுங்கு முறைக்குட்பட்ட ஒரு வடிவமாக உள்ளது என்பதைக் கவனிப்போம்।

தொடரும்...
படம் : நன்றி tamilnation.