பின்பற்றுபவர்கள்

11 அக்டோபர், 2007

நான்கு நகரங்கள்

நகரம் – 1

புகையிலைக்குடிலின் புகையும்
மூசிப்பெய்யும் மாசிப்பனியும் கவியும்
காலையில் இந்நகரத்தில் பிறந்தேன்.
மாடப்புறாக்கள் கிசுகிசுக்கும்
கோபுரக்கோவில்களின் மணியோசை
என்னை எழுப்பியது.
சப்பறச்சிற்பங்களில் முதிர்ந்தேன்.
ஆழங்களும் மாயங்களும்
நிறைந்ததிந்தநகரமென்றிருந்தகாலை
காயங்களும் நிகழ்ந்தன.
தொப்புள்கொடியும்
அறுந்து அவர்கள் செல்லச்செல்ல
“அல்லாவே”
என்ன செய்ததிந்த நகரம்?
இன்றோ
எவருக்கும் தெரியாமல் நடப்பவைகளும்
எல்லோருக்கும் தெரிய நடப்பவைகளும்
நகரத்தின் மடைமைக்குக் கிடைத்த பரிசு!
முன்னொருகாற் புகையிலை வியாபரம் செய்தவிந்நகரம்
ஒடுங்கியவர்களிடம் தோள்த் துண்டைப்பறித்தது
ஓங்கியவர்களிடம் சேவகம் செய்தது.
இந்நகரத்திற்கெனவொரு நதி இருந்திருப்பின்
அப்பாவிகள் துன்பத்தைக்கழுவியிருப்பர்
பாவிகள் சாபங்களைக் கழுவியிருப்பர்
அரசர்கள் வாள்களைக்கழுவியிருப்பர்
மதகுருமார்களின் புனிததீர்த்தமாகவுமது
நகரத்திற்குச் சாந்தியையழித்திருக்கும்.
எதுவுமில்லாதிது ஏனடிமையானது.

இரவையும் உசுப்பி நடந்த மனிதர்கள்
மறைந்து போனபின்
நம்பிக்கை
கைவிடப்பட்ட இராச்சியத்தின்
சிதிலமடைந்த சுவரானது

நகரம்- 2

சூரியன் உதிக்குமிந்த நகரத்தில்
நான் பிறக்கவுமிலை வாழவுமில்லை.
நடந்து கடந்த நாளொன்றில்
கட்டவிழ்ந்து அலையும் படகுகள் வாவியில்,
மானுடம் கையேந்தி அலையும் வீதியில்,
திசையறியாது சீவியம் சிதைந்தது பீதியில்.
எண்ணங்களையும் வார்த்தைகளையும்
ஒருங்கிணைக்கத்தெரியாத கவிஞன்போல்
அழுந்திக்கிடந்தது அந்நகரம்.

நகரம்-3

கோணங்களாகவும் குடாவாகவும்
இந்துமகா ஆழியுள் நெளிந்தது இந்நகரம்
பாறையாகிய முதுகில் மனிதர் வாழ்ந்தனர்
இரவின் தூக்கத்தைக் கடல் மென்றது
இருளின் வனப்பை அலை கொண்டது
மதுவின் சுவையைக் கரை தந்தது.
மனங்கள் மணற்றுகளுள் கரைந்தன.
நம்பிக்கைகளைத் தொங்கவிட்ட மரம்
நூற்றாண்டுகாலப் பூர்வீகக்கதைகளை நம்பியபடி
ஆழியின் மேற்றொங்கியது..
எதற்கும்மடங்காது வீசுகிற காற்றும் வெப்பமும்
மரண வாடையை மறைக்குமென்று
எண்ணுகிறவர்கள்கையில்
அந்நகரம் விழுகின்றபோதெல்லாம்
உப்பும் வெப்பமும் நிறைந்த கண்ணீரோடு மக்கள்
பிணங்களை எரிக்கிறார்கள்; புதைக்கிறார்கள்.
நான்கு மதங்களின் மயானமாகிக் கிடக்கும்
இந்நகரம்.

நகரம்-4

மாயங்கள் குழைந்தன
மின்னொளி இழைந்தது
இரவின்நகரத்தில்.
மாநகரின் நடைபாதை,
நாதியற்றவர்களின் இரவுப்புகலிடம்.
கொத்து ரொட்டிக்காரன் கடை வாசலில் பரதேசி,
பரதேசி வாயில் நகரின்பாடல்.
விழித்தபின்
விற்பதற்கும்
வாங்குவதற்குமான நெரிசலில் பகல்.
காற்றும் வெப்பமும் குமைந்தன.
அரச இயந்திரம் பாடாவதியாகிக் கக்கிய புகையில்
கருத்தது சூரியன்.
சொர்க்கத்தில் உழல்பவர்கள்
கட்டிய பன்சாலைகளில்
நரகத்தில் உழல்பவர்கள் அழுதார்கள்.
முன்னின்ற அலரிமலர்க்கொத்துக்களையோர்கணம் முகர்ந்தேன்.
“பாவம் அவைகள் என்ன செய்யும்”.
நீண்ட காலத்தின் பின்
இதயத்துக்குள் இருந்த நண்பர்களுடன் மதுவருந்திய
அவ்விரவிற் காவற்துறை என்னைக் கடத்திச்சென்றது
நான்கு நகரங்கள் பற்றிய என் கவிதை,
நான்கு வரிகளோடு முடிந்து போகுமென்று அவர்களறிவர்
நீங்கள்?
குண்டுகள் துளைத்த கட்குழியிலிருந்து
உதிர்ந்த கண்கள் அண்ணாந்து பார்க்கின்றன.
யார் பேசினாலும் மௌனம் இருண்மையுடன் கொண்ட உறவு
கலையவில்லை.
நீதியை பேசும் எந்நாக்குமறுமென்று யாருணர்ந்திருந்தார்.

நீடூழி வாழ்கவென் பொன்நகரங்கள்.


தேவ அபிரா
05-10-2007

2 கருத்துகள்:

  1. தொன்மத்தின் ஞாபகத்துள் இழுத்தமிழ்த்தும் உங்கள் கவிதைகள் சொல்லவியலாத துயரை விதைக்கின்றன. அறிந்த நகரங்கள் அழிந்த நரகங்களான கதையை, நாடோடிப் பாடகனொருவன் பாடிச் செல்வதை இரவின் மெளனத்தில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருப்பதாக உணர்கிறேன். உங்கள் எழுத்தை வாசிக்கும்போது பூர்வீகம் என்றொரு வார்த்தை ஒலிக்கக் கேட்கிறேன். எனக்கு சரியாகச் சொல்லத் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  2. தமிழ்நதி,
    ஈழத்தின் அந்த நான்கு நகரங்களின் மண்ணையும் வாழ்வையும் சிறுதுகள்களாகத்தான் அள்ளி வந்தேன் ஆனால் இன்று என்னுள்ளவை புற்றாக எழுந்து நிற்கின்றன. எனது கவிதை அப்புற்றிலிருந்து ஊர்ந்து வந்தவொரு சிறு எறும்பு.
    கவிஞர்களின் பாராட்டு இன்னும் மகிழ்வு தருவது. எனினும் உணர்வுகளையும் மீறிப் புற நிலையாகவும் நின்று என்னை விமர்சியுங்கள்.அதுவும் முக்கியமானது
    நன்றி உங்களுக்கு!
    தேவ அபிரா.

    பதிலளிநீக்கு