பூமி ஏங்கித் தவித்துக் கனன்று கொண்டிருந்தது.
வேனிலிலும் மரங்கள்
துளிர்களும் இலைகளுமாய் மதமதர்த்திருந்தன.
ஆழத்து நீரில் வேரோடிய திமிரில் நின்றன.
மண் தன் இறுதி நீரையும் இழந்தது.
ஆத்மாவிலும் துயரம் மிகுகிறது.
அனலைக் காற்று அள்ளி வருகிறது.
முந்திய வருகையில்
அவள் பதித்த ஈரமுத்தத்தடங்கள்
புழுதியாய் உரிந்து பறந்து போயின.
ஆடையவிழ்ந்து வார்த்தைகளற்ற துயரத்தில்
மண் காத்திருந்தது.
வானம் இருளில் அழிய
மரங்கள் எதிர்பாராதவொரு நாளில்
ஆர்ப்பரித்து ஆர்வமுடன்
ஆழியின் நீரெலாம் அள்ளிவந்தாள்.
துளிகள்
காதலாகிக் கண்ணீராக
மோகமாகி முத்தமாகி
ஓவென்ற ஒலியாகி மோதினாள்.
வெள்ளி நீளக்கோடுகளில் ஒளி முறிந்தது.
விசும்பதிர்ந்தது.
மண் தளர்ந்தது.
மரங்கள் விறைத்து நின்றன.
வைகாசி - 1993
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக