பின்பற்றுபவர்கள்

13 ஏப்ரல், 2008

எலும்புக்கூடும் இரண்டு கனவுகளும்

எங்கேயென் கனவுகளை எழுதிவைக்கலாம்?
நிறைவேறாத கனவுகளை வேறென்னசெய்ய?
ஏடுகளைக் கரையான் அரிக்கிறது.
எக்காலத்திற்கு வேண்டியவற்றை விட்டுவைக்கிறது- நானறியேன்?
காலம் சுவடிகளின் மீது நடந்து செல்லும்போது
சாமானியர்களின் கனவுகளை மதிப்பதில்லையோ?
ஊழியின் சுவைக்கென ஏங்கும்
ஆழியின் கரையில் இருப்பதே அச்சம் தருகையில்
கரையின் காயாத ஈரத்தில் எப்படி எழுதுவேன்?
அவள் என்னை ஆக்கிரமித்துப்புணர்ந்த;
ஆறு புனைந்த நாணற்படுக்கையில் எழுதிவைத்த கனவுகளை
காலம்தவறி வந்த பெருவெள்ளமள்ளிச்சென்றது.
துருவத்துள் முன்பொருகால் உறைந்து கிடந்த சூரியன்
கனவுகளைக்கரைத்து வெறும்நீராக்கினான்.
சேடமிழுக்கிறது மனிதக்கனவுகளின் துருவம்.
மனித நாகரிகங்கள் விளைந்த மண்ணை அகழ்கிறார்கள்.
ஊரோடும் வாழ்வோடும் புதைந்த மனிதர்க்கருகில்
இறுகிக்கிடந்தன-வாழும் காலத்திற் பேசப்படாக்கனவுகள்.
மென்தூரிகைகள் கொண்டு துலக்குதல் கூடுமோ
கனவுகளின் மௌனத்தை?
நாடோடி போல்
என் கனவுகளுக்கான நிலத்தைத்தேடி நடக்கிறேன்.
சுற்றிவளைப்புக்களுக்கும் தேடுதல்களுக்கும் தப்பிய இரவொன்றை
இடிந்துதிர்ந்து போன இல்லமொன்றினுள் கழிக்கையில்
ஆணென்றும் பெண்ணென்றும் அலியென்றும் வகையிடாக்
கனவொன்றைக் காறைச்சுவர்கட்கிடையிற் கண்டெடுத்தேன்.
என்றோவொருநாள்
என்கனவுகளும் அனாதையாகக்கூடுமென்றஞ்சியிருந்தேன்.
என் கனவின் கூட்டிற்குள் அதுவும் நுளைந்தது.
துகள்கள் நிறைந்து ஒளிபுகாச் சடமாகிய காற்றுவெளியிடை
பஞ்சடைந்ததன் கண்ணூடு நோக்கி
என் அம்மா சொன்னாள்:
“மகனே உன் கனவுகளை ஒருபோதும் விற்று விடாதே”
யுகங்கள் கழிந்து
மீண்டும் மண்ணகழும் போது
நாகரிகமேயில்லாத சமூகத்தோடு
புதைந்தவொரு எலும்புக்கூடும்
இரண்டு கனவுகளும்
மென்தூரிகைகளும்…

13/04/2008
தேவ அபிரா

12 ஏப்ரல், 2008

நாங்கள் சேர்ந்து நடந்தோம்

நாங்கள் சேர்ந்து நடந்தோம்

நாங்கள் இருவரும் ஒரே நோக்கத்திற்காகவே நடந்தோம்

நீ அறிவின் வலிவுடனும்

நான் உணர்வின்தாளத்துடனும்

ஆயினும் நீயும் நானும் ஒரே இலயத்தில் இல்லை

எனேனில் உன் வழி எனதல்ல

நாங்கள் ஒரே பாடலையே படித்தோம்

ஒன்றுடனொன்று பொருந்தாத பாடுமுறையென்றபோதும்

மீண்டும் மீண்டும் முயற்சித்தோம்

எமது எல்லா எத்தனங்களும் தோல்வியில் முடிந்தபோது

நான் உனது முறையிலும் பாட முனைந்தேன்

அக்கணத்தில் அது நானல்ல என்றுணர்ந்தபோது அதிர்ச்சியுற்றேன்.

நானேதான் நானாகவிருக்கவும் எனது பாடலைப்பாடவும்.

எனது பாடல் உன்னைச்சேரவிலை-அச்சமுற்றேன்

ஒரே விளையாட்டை விளையாடிய இருவரும் மகிழ்ச்சியாகவுமில்லை.

உனது ஆட்டவிதிகள் என்னுடையதை விடவும் வெறுபட்டிருந்தன.

இவ்வாறுதான் நாங்கள் எங்கள் வாழ்க்கையை வாழ்ந்தோம்.

ஒவ்வொருவரும் தனக்காக; தனியாக நாளையைநோக்கிய பாதையில்…

உண்மையிலும் எந்தவிடத்தை நோக்கியுமல்ல..

மரிகெ த ஜொங்.

நெதர்லாந்து

மொழிபெயர்ப்பு: சாகித்தியன்
நன்றி:www.globaltamilnews.com