பின்பற்றுபவர்கள்

22 ஜூன், 2009

எப்பொருளையும்பேச விடு! அப்பொருளின் மெய்ப்பொருளும் காணவிடு!!



கடந்த ஞாயிறன்று நெதர்லாந்தின் தேசியத் தொலைக்காட்சியின் செய்தியை அவதானித்துக் கொண்டிருந்தேன். அதன் 8 மணிப் பிரதான செய்தியில் இலங்கையின் அரசு இலங்கைத் தமிழ் மக்களைப் பாரபட்சமாக நடத்துகிறது என்னும் சாரப்படும்படியான முக்கியமான செய்தித் தொகுப்பொன்றை வழங்கியது. இதே முறையான வியாக்கியானப்படுத்தலை விடுதலைப் புலிகளையும் அவர்களோடு சேர்த்து பல்லாயிரம் மக்களையும் இலங்கை அரசு கொன்று குவித்துக் கொண்டிருந்தபோது இந்தச் செய்தி நிறுவனம் செய்யவில்லை.
அப்போது இலங்கை அரசு மக்களைப் பயணக்கைதி நிலையில் இருந்து விடுவித்தது என்றும் யுத்தப்பிரதேச நிலவரத்தை விட மக்கள் முகாம்களில் நல்ல நிலையில் உள்ளனர் என்றும் ஒரு வியாக்கியானத்தைச் செய்திருந்தது.

சிறுபான்மை இனங்களின் மீதான இலங்கை அரசின் அடக்குமுறையையும் விடுதலைப்புலிகளின் சனநாயக மறுப்பையும் இருவேறாகப்பார்க்க முடியாத முட்டாள்கள் அல்ல இவர்கள்.
பலஸ்தீனத்தில் ஹமாஸ் அடிப்படைவாத இயக்கமாகவிருந்தபோதும் இஸ்ரேலின் காசா மீதான இறுதியான படைஎடுப்பையும் பொதுமக்களின் இழப்பையும் பெருமளவுக்கு நடு நிலையில் நின்று மேற்குலக ஊடகங்கள் வெளிப்படுத்தியிருந்தன.
இஸ்ரேலின் யுத்த விதி மீறல்கள் குறித்தும் மேற்குலக மக்கள் அறிந்து கொண்டனர்
ஊடகங்கள் வழங்குகின்ற தகவல்களின் அடிப்படையிலேயே நிகழ்வுகள் தொடர்பான ஒரு விம்பத்தை/முழு உருவத்தை நாங்கள் அடைகிறோம்.
எமது கண்ணுக்கு முன்னால் நடக்கும் ஒரு நிகழ்வைக்கூட ஊடகங்களின் ஊடாகவே நாங்கள் முழமையாக வடிவமாக்கிக் கொள்கிறோம்.
இது தகவற்தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால் சமூகவியலில் ஏற்பட்ட முக்கியமான மாற்றம்.
ஒரு நிகழ்வின் உண்மையான பரிமாணத்தைப் புரிந்து கொள்வதற்குப் பல ஊடகங்களையும் ஒருங்கிணைக்க வேண்டியுள்ளது. அது மட்டுமல்ல பல்வேறு ஊடக நிறுவனங்களின் செய்திகளையும் ஒருங்கிணைத்தே விடையங்களை புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.ஏனெனில் உள்ளூர் ஊடகங்கள் தணிக்கை காரணமாக வெளியிடாதவொரு செய்தியை வெளியூர் ஊடகங்களினூடாகப் பெறக்கூடியதாக உள்ளது.
ஒவ்வொருவரும் தமது கோணத்தில் இருந்தே செய்திகளை வழங்குகின்றனர். மேலும் செய்தி வழங்கப்படும் முறையை செய்தி வழங்குபவர்களின் உணர்வு நிலையும் கருத்து நிலையும் தீர்மானிக்கிறது.




உள்நாட்டு ஊடக கலாசாரம்



இலங்கையில் ஊடகங்கள் கடந்த 50 வருட காலத்தில் மெதுவாக இரண்டு முகாம்களாகபிளவுபட்டன. இந்த முகாங்களைத் தமிழ்-சிங்களம் என மேலெழுந்தவாரியாகக் கூறமுடியும் எனினும் அடிப்படையில் சிங்கள பேரினவாதத்திற்கு ஆதரவானது எனவும் சிறுபான்மை தமிழ் தேசியவாதத்திற்கு ஆதரவானதெனவும் இவற்றைப்பிரிக்கலாம். இப்பிளவு மக்களின் சிந்தனை மற்றும் கலாச்சாரத் தளத்தில் மிக ஆழமான தெளிவான பாதிப்புக்களை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஊடகங்கள் மக்களைப் பிளவு படுத்தி நிற்கும் கருத்தியலை மட்டுமே விற்க அல்லது சந்தைப்படுத்தப்படக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
மக்கள் தாம் விரும்புவதையே வாசிக்கவும் கேட்கவும் விரும்புகின்றனர். கசப்பான உண்மைகளை விட மாயமான பொய்களை இலகுவாக விற்க முடிகிற உண்மையே இலங்கையில் யதார்த்தமாக உள்ளது.
உண்மைகள் அல்லது செய்திகள் என்பதை மக்களால் விரும்பப்படுகிற அல்லது ஏற்றுக்கொள்ளப்படுகிற கருத்தியல் நிலையில் நின்று அறிக்கையிடுகிற சூழ்நிலை உருவாகியுள்ளது.
தமிழர்களின் கலாசாரத்தில் விம்பங்களை உருவாக்குதல் ஒரு முக்கியமான அம்சமாக காணப்படுகிறது. இது பல சந்தர்ப்பங்களில் யதார்த்தத்தை அறியவிடாமல் தடுத்துவிடுகிறது.
சிறுபான்மை இனங்களின் நலன்கள் பாதிக்கப்படும்போது அடிப்படை உரிமைகள் மீறப்படும் போது அவை பற்றிய செய்திகளை வியாக்கியானம் செய்யாமல் செய்திகளாக வெளியிடவேண்டிய கடமையானது சிங்கள ஊடகங்களுக்கு உள்ளது.ஆனால் இது வரலாற்றில் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளது. இது போல தமிழீழ விடுதலைப்போராட்டகாலத்தில் மக்கள் மீது விடுதலைஸ்தாபனங்கள் மேற்கொண்ட சனநாயக, மனித உரிமை மீறல்கள் தமிழ் ஊடகங்களினால் உரிய முறையில்அறிக்கையிடப்பட்டிருகவில்லை.
இது அந்தந்தப்பிரதேசங்களில் அந்தந்தக்காலங்களில் இருந்த இருக்கிற அதிகார சக்திகளின் அழுத்தத்தினாலும் ஊடகங்கள் தமதுசார்பு நிலைகாரணமாகக் கொண்டிருந்த சுய தணிக்கையினாலும் ஏற்பட்டதாகும்.
எந்த சமூகத்தினதும் தூண்களாக நீதித்துறை, சட்டம், அரச அதிகார அமைப்பு மற்றும் பத்திரிகைத்துறை விளங்குகின்றன .அதிலும் பல்லினச்சமூகங்கள் வாழுமொரு நாட்டில் மேற்கூறிய நான்கு தூண்களும் மிகக் கவனமான முறையிலும் உறுதியான முறையிலும் நிலை நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்
ஒரு அரசு அல்லது ஒரு அதிகார அமைப்பு மக்களின் மீது கொண்டுள்ள இறையாண்மை என்பது எப்பொழுதெல்லாம் தவறான முறையில் மோசமான முறையில் மீறப்படுகிறதோ அப்போதெல்லாம் பத்திரிகைத்துறை விழித்துக்கொள்ள வேண்டும் ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் மேற்குறிக்கப்பட்ட நான்கு தூண்களும் மக்களின் துயரத்திலும் இரத்தத்திலும் தோய்ந்து கோரமாய்ப்பிளந்து குத்தீட்டியாக உள்ளன.
இலங்கையில் நிகழும் ஒரு நிகழ்வு குறிப்பாக அரசியல் நிகழ்வு சிங்கள மக்களுக்கு சிங்கள அல்லது ஆங்கில ஊடகங்கள் மூலமாகவும் தமிழ் மக்களுக்கு தமிழ் அல்லது ஆங்கில ஊடகங்கள் மூலமாகவும் வழங்கப்படுகின்றன. குறித்த ஒரு நிகழ்வு தொடர்பாக சிங்கள் ஊடகங்கள் எவ்வாறு அறிக்கை இடுகின்றன, அதன்மூலம் அவர்கள் என்ன விம்பத்தைப் பெறுகிறார்கள் எனத் தமிழ் மக்களுக்குத்
தெரிவதில்லை. இதேபோன்று தமிழ்மக்கள் தமிழ் ஊடகங்களினூடாக என்ன விம்பத்தைப்பெறுகிறார்கள் எனச் சிங்களமக்களுக்குத் தெரிவதில்லை.
ஒரே செய்தியை அல்லது நிகழ்வை பல்வேறு ஊடகங்களும்பல்வேறு ஊடக நிறுவனங்களும் வெவ்வேறாக வியாக்கியானம் செய்து செய்தியாக வெளியிடும் போது மக்கள் மத்தியில் குழப்பங்கள் எற்படுகின்றன.


தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படுகிற சகல ஒடுக்குமுறைகளும் விடுதலைப் புலிகளுக்கெதிரானதாக, பயங்கர வாதத்திற்கெதிரானதாக சிங்கள மக்கள் மத்தியில் உருவகப்படுத்தப்படுகின்றன. வன்னியில் முகாம்களில் மிருகங்களிலும் கேவலமான முறையில் நடாத்தப்படுகிற சகோதர இனத்தைப்பற்றிச் சிங்கள இனம் அறியவில்லை இதே போல் மலையகத் தமிழ் மக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டு வருகிற ஒடுக்குமுறைகள் பற்றியோ தென்னிலங்கையில் நடந்த கிளர்ச்சிகளின் போது சிங்கள மக்கள் எவ்வாறு கொன்றொழிக்கப்பட்டார்கள் என்பது பற்றியோ பெரும்பான்மையான தமிழ்மக்களுக்கு அறிக்கையிடப்பட்டிருக்கவில்லை. ஒரே நிகழ்வு பல்வேறு மொழிகளிலும் ஒரே மாதிரியாக அறிக்கையிடப்படுவதில்லை என்பது பன்மொழிக் கலாச்சாரம் நிலவுகிற அனேகமான வளர்ச்சி அடையாத நாடுகளில் குறிப்பிடத்தக்கதொரு பண்பாகவுள்ளது.
இது இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கு தடையானதாகும்.
உதாரணமாக இந்தியாவில் இலங்கை யுத்தம் தொடர்பாக பன்மொழிகளிலும் ஒரேமாதிரியாகச் செய்திகள்
அளிக்கப்பட்டிருக்கவில்லை பெருமளவான ஆங்கிலப்பத்திரிகைகள் யுத்தத்தை தமிழர்களுக்கெதிரானதாக சித்தரிக்கவில்லை. இலங்கை அரசின் கோர முகத்தைச் சரியாக அவை வெளிப்படுத்தவில்லை.
பெரும்பான்மை இன அரசொன்று ஊடகங்களைத் தன் கையகப்படுத்தி மக்கள் என்னென்ன விம்பங்களைப் பெற வேண்டும் என்பதை தீர்மானிப்பது அவர்களின் அதிகாரத்தை பேணுவதற்கும் மக்களை மேலும் மாயைக்குள் அழுத்தி வைத்திருக்கவும் மட்டுமே உதவும்.
ஊடகங்கள் எதை எல்லாம் சொல்ல முடியும் என்பதை அரசோ அல்லது இன்னொரு அதிகாரசக்தியோ தீர்மானிக்கும் நிலை இருக்கும் எந்தச்சமூகமும் வளர முடியாது.
ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் மக்களுக்கு தெரிய வேண்டியவைகள் “இவைகள் மட்டுமே” என வரையறை செய்யப்பட்டிருக்கும். மேலும் மக்களுக்குத் தெரியக்கூடாதவைகள் என அதிகாரத்தில் உள்ளவர்களால் கருதப்படுபவைகள் குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருக்கும். குழியைத் தோண்ட முயலும் பத்திரிகையாளர்களும் குழி தோண்டிப் புதைக்கப்படுவார்கள்.
இன்றைய சூழ்நிலையில் செய்திகளை செய்தியாகவே பன்மொழியிலும் வெளியிடும் கலாச்சாரம் உருவாக்கப்பட வேண்டியது முக்கியமாகிறது.
கருத்தியலைச் சந்தைப்படுத்துகிற இலங்கையின் ஊடக கலாச்சாரத்தில் “செய்திகளைச் சந்தைப்படுத்துகிற” நிலையை இரு முகாங்களைச் சேர்ந்த ஊடகங்களும் எடுக்கக் தயங்குகின்றன.

வெளிநாட்டு ஊடக கலாசாரம்



வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகளில் மக்கள் அறியக்கூடாதது என்று எதுவுமே இருப்பதில்லை. இங்கு "பேசாப்பொருட்களைக் காண்பதரிது" அப்படி ஏதாவது இருப்பின் அதையும் பத்திரிகையாளர்கள் வெளியுலகுக்குக் காலம் பிந்தினாலும் வெளிக் கொண்டு வந்து விடுகிறார்கள். இவ்வாறு தொழிற்படும் பத்திரிகையாளர்கள் சட்டத்தினாலும் மக்கள் மத்தியில் நிலவும் சனாநாயகக் கலாசாரத்தினாலும் பாதுகாக்கப்படுகிறார்கள். மேலும் இங்கு பத்திரிகையாளர்கள் அரசியல்வாதிகளால் மூன்றாம் உலக நாடுகளில் உள்ளது போல் நேரிடையான அச்சுறுத்தல்களுக்குள்ளாவது மிகக்குறைவு. பத்திரிகையளர்களை பணத்தினால் விலைக்கு வாங்கிக்கொள்கிறார்கள் அது வேறு.
மேலும் பொருளாதர அரசியல் சமூகப் பிரச்சனைகளில் மக்களும் அதிகாரத்தின் சகல மட்டத்தினரும் ஊடகங்களினூடாகச் சந்தித்துக்கொள்கிறார்கள்.
அண்மையில் அம்ஸ்ரடாமில் தவறான தகவல் ஒன்றினடிப்படையில் மொரக்கோவைப்பூர்வீகமாக கொண்ட நெதர்லாந்துவாசிகளை கைது செய்த சம்பவத்தில் நெதர்லாந்துத் தேசிய தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்கள் தொழிற்பட்ட விதம் ஊடக சுதந்திரத்திற்கு எடுத்துக்காடாகும்.
இத்தேசியதொலைக்காட்சி பாதிக்கப்பட்டவர்களின் பேட்டியை ஒளிபரப்பியதுடன் மாநகர மேயர் ஏன் அந்த மக்களிடம் மன்னிப்புக் கேட்கவிலை எனவும் அவரிடம் வலியுறுத்திக்கேட்டிருந்தது

சமூகத்தின் பல்வேறு பிரிவினரையும் இலக்காகக் கொண்டியங்கும் ஊடகங்களால் அவர்களுக்குரிய குரல்களை வழங்க முடிகிறது. ஆயினும் முதலாளித்துவ சனநாயகம் எல்லைகள் அற்றதல்ல. பயங்கரவாதத்ததிற்கெதிரான போரெனும் அணுகுமுறையினால் இச்சுதந்திரத்தின் எல்லைகள் குறுகி வருகின்றன
சனநாயக நாடுகள் என்று சொல்லப்படும் நெதர்லாந்து போன்ற வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகளின் ஊடகங்களும் தமது எல்லைக்கு வெளியே செய்தி விம்பங்களை 100 வீத நடுநிலையில் நின்று உருவாக்குவதில்லை. ஆப்கானிஸ்தான் ஈராக் போன்ற நாடுகளில் நிகழும் மேற்குலகின் தலையீடுகளையும் இந்த ஊடகங்கள் முற்றிலும் நடுநிலைமையுடன் உருவாக்குவதில்லை.ஆனாலும் பொதுமக்களுக்கேற்படும் பாதிப்புக்களை கூறவே செய்கின்றன. மேலும் தன்னார்வப் பத்திரிகையாளர்களின் நடுநிலையான புலனாய்வுச் செய்தி வழங்கலை இருட்டடிப்புச் செய்யாமல் வெளியிடும் துணிவையும் இவை கொண்டுள்ளன. பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாக்கும் சிறப்பான சட்டரீதியான பாதுகாப்புகளும் இங்கு உள்ளன. இங்குள்ள அரசியல்வாதிகளும் இந்தச்சட்டங்களை பொதுவில் மதிக்கும் சனநாயக உணர்வைக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அய்ரோப்பாவில் காணப்படும் இந்தப்பண்பு அண்மைக்காலம் வரையும் தனிமனித கருத்துச் சுதந்திரத்தில் பின்தங்கியிருந்த கிழக்கைரோப்பியநாடுகளை நோக்கி நகர்ந்து வருகிறதைக் காணமுடிகிறது. முதலாளித்துவ சனநாயகத்தின் கூறுகளை அந்த நாடுகள் உள்வாங்கி வருகின்றன.
பர்மாவில் நிகழும் இராணுவ அடக்குமுறை, துருக்கியில் குர்திஸ்தானிகளின் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறை திபேத்தில் நிகழும் ஒடுக்குமுறை சிம்பாபேயில் நிகழும் ஒடுக்குமுறை போன்றவைகள் தொடர்பாக மேற்குலக ஊடக நிறுவனங்கள் கொண்டிருக்கும் நிலைப்பாட்டுடன் ஒப்பிடும் போது, இலங்கையில் நடந்துவரும் போராடம் பற்றி அனேகமான மேற்குலக ஊடகங்க்ள் போதிய கவனம் எடுத்திருக்கவில்லை . (சில தவிர்ப்பான ஊடகங்கள் உள்ளன)

இவ்வூடகங்களின் கவனம் இலங்கையில் வாழும் மக்களின் வாழ்நிலையில் உடனடி மாற்றங்களைக் கொண்டு வரப்போவதில்லை. ஆனால் சர்வதேச மக்கள் மத்தியில் இலங்கை அரசு பற்றிய தெளிவானவிம்பத்தை ஏற்படுத்த இவை உதவும். இந்த மக்களுக்குள் இருந்து எழுந்து வரும் அழுத்தக்குழுக்கள் அந்தந்த நாட்டு கொள்கைவகுப்பாளர்களிடத்தும் அரசியல்வாதிகளிடத்தும் உரையாடக்கூடியவர்கள். அவர்களின் மூலமாக சர்வதேச அரங்கில் தமிழ் இன ஒடுக்கு முறைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.
இலங்கையின் இனங்கள் எவ்வாறு பிளவுண்ட சகிப்புத் தன்மையற்ற சமூகங்களாக மாறினவோ அதேபோல தமிழ் சமூகமும் சனநாயக சிந்தனையில் பின்தங்கி கருத்தியலில் பிளவுண்ட சகிப்புத் தன்மையற்ற சமூகமாக மாறியுள்ளது. இதனால் இலங்கையின் பல்லினச்சமூகங்களுக்கும் இடையிலும் தமிழ் சமூகத்தின் பல்வேறு முகாம்களுக்கிடையிலும் கருத்துப் பரிமாற்றத்துக்கான சாத்தியங்களை உருவாக்க வேண்டியுள்ளது. இதனை ஊடகங்களே செய்ய வேண்டும்.

ஈழம் பிரிவது இப்போதைக்குச் சாத்தியமில்லை என்கிற யதார்த்தம் எங்களை அறைந்துள்ளது. இலங்கையின் பல்லினச்சமூகங்கள் தம்முள் இணங்கி வாழ்வதைத்தவிர அவற்றுக்கு வேறு வழி இல்லை. எனவே சனநாயகச் சிந்தனை ஒன்றே எங்களை வாழ வைக்கும். சக உயிரின் உணர்வையும் உரிமையையும் மதிக்காத எந்த நாட்டிலும் அமைதி இல்லை.
(இக் கட்டுரை பிரதானவோட்டத்தில் உள்ள ஊடகங்களை(main stream media)) அடிப்படையாகக்கொண்டே எழுதப்படுகிறது).
அரிதேவா.
12/06/2009

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக