இலங்கையின் அரசியற்காற்று நிகழ்காலத்திலும் சரி எதிர்காலத்திலும் சரி தமிழர்களுக்கு எந்த வசந்தத்தையும் கொண்டு வரப்போவதில்லை என்பதை விடுதலைப்புலிகளைக் கடுமையாக எதிர்த்த ஆத்துமாக்கள் கூட தற்போது உணர்ந்திருக்கும். விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை இந்த அரசு எப்படி நாடாத்தியது என்பதைப் பார்த்த போதாவது அந்தப்புரிதல் வந்திருக்கவேண்டும்; புரிந்திருக்க வேண்டும்.
வெற்றிகொண்ட கடற்கொள்ளையன் கைப்பற்றப்பட்ட கப்பலில் என்ன ஆட்டமாடுவானோ எத்தகைய அட்டூழியங்களையெல்லாம் செய்வானோ அதனையே இந்த அரசும் செய்கிறது.
சிங்களப் பேரினவாத உணர்வையும் மேலாண்மையையும் திருப்தி செய்து கொண்டு மிக மோசமான ஊழல் நிறைந்த பகல் கொள்ளை ஆட்சியை செய்யும் அரசிடம் தமிழர்களைக் காவு கொடுத்து விட்டு விடுதலைப் புலிகள் அவலமாக மடிந்து போனார்கள்.
மிக மோசமான பிரபுத்துவச் சிந்தனையும் மட்டரகமான அரசியல் அறிவையும் கொண்ட கொலைகாரர்கள் வடக்கு கிழக்கில் அரசின் அடியாட்களாகச் செயற்பட்டு யாவற்றையும் கட்டுப்படுத்துகிறார்கள்.
இனிவரும் பல ஆண்டுகளுக்கு இந்த நிலைமை நீடிக்கவே போகிறது.
குறைந்தபட்ச சனநாயகச் சிந்தனையையாவது கொண்ட ஒரு அரச கட்டமைப்பு இலங்கையில் தோன்றாதவரை வடக்கு கிழக்கில் நடக்கும் பகற்கொள்ளையை யாராலும் தடுக்க முடியாது.
மகிந்தவையும் அவரது குடும்பத்தையும் ஆட்சிக்கு கொண்டு வந்த சிங்கள சமூகம் எப்போது தனது தவறை உணர்கிறதோ அப்பொழுதான் இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்படும்.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் கூட யார் மீண்டும் ஆட்சிக்கு வருகிறார்கள்; அவர்களின் சமூக பொருளாதார அரசியல் பார்வைகள் என்ன; புதிய ஆட்சியில் சிங்கள பௌத்த மேலாதிக்கவாதத்தின் செல்வாக்கு எப்படி இருக்கப் போகிறது போன்ற விடையங்கள் முக்கியமானவை.
ஏனேனில் தமிழர்களை நாட்டின் இரண்டாம்தரப் பிரசைகளாக கணிக்கும் கலாச்சாரத்தின் அடித்தளம் அங்கிருந்துதான் வருகிறது. காலனித்துவத்திற்குப்பின்னான இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள் எல்லாமே தமிழ் மக்களைப்பொறுத்த வரை பழைய குருடி கதவைத்திறடி என்பதாகவே இருந்து வந்திருக்கிறது.
இனமதபேதமற்ற நாட்டை உருவாக்க வேண்டும் என்ற தேவை யாருக்கு இருக்கிறது…?
தற்போதைய தேர்தல்முறைமூலம் ஆட்சியைத் தெரிவு செய்யும் முறைமையில் பெரும்பான்மையானவர்களின் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டிய கடப்பாடு சிறுபான்மையினருக்கு இருக்கிறது.
மூன்றாம் உலக நாடுகளில் தேர்தல்கள் நேர்மையான முறையில் நடாத்தப்படாமை இன்னுமொரு சாபக்கேடு.
ஆட்சிக்கு வந்த மறுகணமே மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய தேவை ஆட்சியாளர்களுக்கு அற்றுப் போகிறது. மக்களை மந்தைகளாக மாற்றிவிடுகிறார்கள்.
நீதி நிர்வாகம் சட்டம் யாவும் ஓரினத்துக்கு சார்பானவையாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் நாட்டில் சிறுபான்மை இனங்களின் அபிவிருத்தியைப் பற்றி யாரும் சிந்திக்கப்போவதில்லை.
நெஞ்சில் இரத்தம் வடிய அம்மணமாக நிற்கும் தமிழர்கள் தங்கள் மீது சமூக அரசியல் பொருளாதாரத் தளங்களில் அவிழ்த்துவிடப்பட்டிருக்கும் ஒடுக்குமுறையை எதிர்க்கத் திராணியற்று நிற்கிறார்கள்.
நாங்கள் ஒரு இனத்தை அரக்கத்தனமாக நசுக்கிக் கொண்டிருக்கிறோம்;
நாங்கள் எந்த விதமான அரசியல் பொருளாதார சமூக அறிவுமற்ற ஒரு காட்டேறிக் குடும்பத்திடம் இலங்கையின் ஆட்சியை ஒப்படைத்திருக்கிறோம்;
நாட்டுக்குள் வரும் இந்திய சீன மற்றும் மேற்குலக சக்திகள் முழுநாட்டையும் சுரண்டிச் செல்வதை மட்டுமே நோக்கமாக கொண்டிருக்கிறார்கள்;
என்பதை பெரும்பான்மையான சிங்கள மக்கள் உணராத வரை..
இந்த நிலை நீடிக்கவே செய்யும்.
சுருக்கமாகச் சொன்னால் இலங்கை மக்களிடையே அடிப்படையான சனநாயக சிந்தனை உருவாகாதவரை வசந்தம் எங்கள் வாசலுக்கு வராது.
இங்கே இன்னும் துயரம் தருவது என்னவென்றால் இலங்கை மக்கள் கண்ணியமான சனநாயகச் சிந்தனையை அடைவதை கடந்தகாலத்தில் சிங்கள ஆட்சியாளர்கள் தடுத்தே வந்துள்ளார்கள்.
இந்த விடையத்தில் தமிழ்மக்களுக்குள் முகிழ்த்திருக்கவேண்டிய சனநாயகக்கலாசாரத்தை மழுங்கடித்த பெருமை காலாதிகாலமாக தமிழ் சமூகத்தின் தலைவிதியைத் தீர்மானிப்பவர்களாயிருந்த தமிழ் அரசியல் வாதிகளையும் புலிகளையும் சாரும்.
இன்றைக்கு அரசாங்கத்தின் அடிவருடிகளாக இருப்பவர்கள் அனைவரும் கடந்தகால விடுதலைப்பண்ணையில் விளைந்த பெருமக்களல்லவா!
உண்மையிலும் இலங்கையில் எங்களுக்கு தேவைப்படுவது மக்கள் பங்கு பெறும் சனநாயகம். தேர்தல் மூலம் கழிசடைகளை ஆட்சியாளர்களாக தெரிவு செய்வதுடன் முடிந்து விடுகிற சனநாயகம் அல்ல. தேர்தல்கள் முடிந்த பின்னும் மக்கள் ஆட்சியில் தீர்மானமானகரமான பங்கை வகிக்க கூடிய சனநாயகக் கட்டமைப்புக்களும் மக்களுக்குள்ள சனநாயக உரிமைகள் பற்றிப் பொறுப்புணர்வுடன் சிந்தித்து நடக்கக்கூடிய அரசியல் வாதிகளும் மட்டுமே எங்களுக்கு தேவை. (நீங்கள் சிரிப்பது எனக்குக் கேட்கிறது. நடக்கக்கூடியதைக் கதையப்பா என்கிறீர்கள்)
அனேகமான ஆசிய ஆபிரிக்க நாடுகளில் நிலவுகிற இந்த தேர்தல் முறைச்சனநாயகம் (Electoral Democracy) உண்மையான சனநாயகம் அல்ல. பலவீனப்படுத்தப்பட்ட நீதித்துறை, பக்கச்சார்பான அல்லது கட்சிகளினால் விலைக்கு வாங்கப்பட்ட ஊடகத்துறை, ஊழல் நிறைந்த நிர்வாகம் என்பன காரணமாக இந்த நாடுகளில் உண்மையான அரசியல் சமூக பொருளாதார வளர்ச்சிகள் அடையப்படுவதில்லை.
அந்த நாடுகள் வளர்ச்சியடைந்துள்ளன எனக் காட்டப்படும் புள்ளி விபரங்கள் கூட அந்த நாடுகளில் வேர்விட்டுள்ள பல்தேசிய நிறுவனங்களின் செயற்பாடுகள் பற்றிய புள்ளி விபரங்களாக இருக்கின்றன. உண்மையிலும் வெளிக்காட்டப்படும் வளர்ச்சியினால் சமூகத்தின் சகல அடுக்குகளும் நன்மை அடைவதில்லை. பதிலாக பல்தேசியக்கூட்டுத்தாபனங்களையும் அந்நாட்டின் அதிகாரவர்க்கத்தையும் சார்ந்திருப்போர் மட்டுமே அந்த நாடுகளில் உருவாகியுள்ள வளர்ச்சியால் வரும் நலன்களை அனுபவிக்கிறார்கள். இந்தியா இதற்கு நல்ல உதாரணம்.
சனநாயகம் பற்றிப் பேசுகிற மேற்குலகம் தனது பொருளாதார அல்லது இராணுவ நலன்களை அல்லது இரண்டையும் பேணுகிற எந்த ஆட்சியாளர்களையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்தே வந்திருக்கிறது. சீனாவும் இந்தியாவும் இதையே செய்து வருகின்றன. அரேபியப் பிராந்தியத்தில் மேற்குலகமும் ஆசியாவில் சீனாவும் இந்தியாவும் தமது நலன்களைப் பேணுபவர்களைக் கண்மூடித்தனமாக ஆதரித்து வருகின்றன.
அரேபியப் பிராந்தியத்தில் மேற்குலகம் தனது நிலைப்பாட்டை தவிர்க்க முடியாமல் மீள்பரிசீலனை செய்ய வேண்டிய நிலைமையை தற்பொழுது அந்தந்த நாட்டு மக்கள் தமது பலமான சனநாயக் கோரிக்கை மூலம் ஏற்படுத்தி உள்ளனர். துனிசியா, எகிப்து, ஏமன், லிபியா, பகரேன், மொரக்கோ, அல்ஜீரியா, ஓமான் போன்ற நாடுகளில் மக்கள் மூன்று தசாப்தங்களின் பின் எழுச்சி கொண்டு மக்கள் பங்குபற்றும் சனநாயக முறைமையைக் (Participatory Democracy) கோரிநிற்கிறார்கள்.
அது ஒன்றுமட்டுமே தங்களது சமூக அரசியல் பொருளாதார சுபீட்சத்திற்கு வழிவகுக்கும் எனக் கூறுகிறார்கள். ஆனால் கறையான் புற்றெடுக்க பாம்பு வந்து குடியேறிய கதையாக இந்த அராபிய எழுச்சிகள் மாறமாட்டா என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை.
எவ்வாறெனினும் இந்த எழுச்சிகளை அரேபியாவின் வசந்தம் என்றே குறிப்பிடுகிறார்கள். துரதிஸ்டவசமாக இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மகிந்த அரசு கொண்டுவந்த கொடூரங்களும் வசந்தம் என்றே அழைக்கப்படுகின்றன.
நாங்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக வரும் வரும் எனக் கனவு கண்ட வசந்தம் பிண வாடையை மட்டுமே கொண்டு வந்தது.
சனநாயகக் கோரிக்கைகளை முன் வைத்து எழுவதற்கு முன்பு மூன்று தசாப்தங்களாக அராபிய மக்கள் சர்வாதிகாரிகளின் கீழ் அழுந்திக் கிடந்தார்கள். கேணல் கடாபியின் அருமை நண்பரான மகிந்தவின் காலடியின் கீழ் எவ்வளவு காலம் தமிழ் மக்கள் அழுந்திக் கிடக்கவேண்டும் என்பதை கணக்குத் தெரிந்தவர்கள் தயவுசெய்து கணித்துக் கூறுங்கள்.
குளோபல் தமிழ்ச்செய்திகளுக்காக அரிதேவா
(1) அபிப்பிராயங்கள்
09-03-2011, 05:13
- Posted by "நாகேஸ்"
இலங்கையைப்பொறுத்தவரை, பொது எதிரி எனப்படும் ஜெனனாயகப்பண்புகளுக்கு எதிரான சுற்றிவளைப்பு சூழ்ச்சிகள் கண்டிக்கப்படுவதில்லை. பொருளாதார பின்னடைவுக்கு எதிரான மந்தமான எதிர்ப்பும் இனங்களுக்கு இடையேயான வேறுபாடும் காட்டமாக உணர்வுரீதியாக முன்னிலைப்படுத்தப்படுகிறது. பிச்சை எடுப்பது மேல் எனவும் தன் இனத்திற்க்காக எந்த இன மானுடரையும் துவம்ஸம் செய்வது தம் விதி எனவும் ஊட்டு வழர்க்கப்படும் காட்டெருமகள், மக்கள் தமக்கான கடமைகளை சரிவர செய்வதில்லை. தவறான அடிப்படையில் வரையப்படும் கணக்கு சரியான விடையைத்தருவதில்லை. அரசியல்வாதிகளைத்தீர்மானிக்கும் மக்கள் சரியான தத்துவத்துடன் இல்லாது இருப்பது, அரசியல்வாதிகளைகுறைகூறுவதுடன் நிவர்த்திபெற்றுவிடுவதில்லை. எல்லோருக்கும் தன்னம்பிக்கையான எதிர்காலம் தேவைப்படுகிறது ஆனால் அதற்க்குரிய சரியான ஒன்றிணைவை யாரும் இதுவரை ஒழுங்குபடுத்தவில்லை. வெற்றித்திருவிழாவில்திளைத்துப்போயிருக்கும் சக நன்பர்களும் சரி அல்லது வெற்றித்தேரோடிய எம் சகதோழர்களும்சரி தவறான தத்துவத்தையே வரைகின்றனர். நல்லாட்சியில்லாதநாடு, எதிர்காலம் புரியாத மந்தைகள், கரற்றுடன் கனவுகள் முடிவடயும் முயல்க்கூட்டம். அடிப்படை மனித சகமனித உரிமைகளை மறந்துபோயிருக்கும் பேய்வீடு. ஊடக வணிகம், அரசியல்கொள்ளை, தற்புகழ்ச்சி பெருமிதம், மனிதன் தம்மை கடவுளாய் நோக்கும் மமதை. தோலுரிக்கப்படாத உண்மைகளும் தோல் உரிக்கப்பட்ட மனிதர்களும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக