சில வாரங்களின் முன்பு ஈழமோகம் தனது ஊருக்குப் போய்விட்டு வந்து முகப்பக்கத்தில் பின்வருமாறு எழுதியிருந்தார்.
கள்ளுண்டு கடிக்க வடையுண்டு கைப்பிடிக்கப்
பொல்லுண்டு பேசப் பொழுதுண்டு - மல்லுண்டு
மடிந்தோர் தம் கதையுண்டு உண்டிடினும் நகைமறந்த
உடலங்கொள் முகங்கள் எமதூரில்!
சரிநிகர் வந்த காலங்களில் சரிநிகரின் இடது பக்க மேல் மூலையில் பிரசுரிக்கப்பட்டு வந்த வெண்பாக்களையும் அதன் வீச்சையும் யாவரும் அறிவர். அன்றாட அரசியல் பிரச்சினைகளை நறுக்குத் தெறித்தமாதிரி ஈழமோகம் தந்திருப்பார்.
ஈழ விடுதலைப் போராட்ட காலத்தின் போது மரபுக் கவிதைகளைப் பின்தள்ளிப் புதுக்கவிதைகள் ஆட்சி செய்துகொண்டிருந்தன. இதயத்துக்குள் பொங்கிப் பிரவகித்த விடுதலை உணர்வும் சமூக விமர்சனங்களும் மரபுக் கவிதைகளின் இலக்கண வரம்புகளை மீறிப் புதுக்கவிதையாக உருவெடுத்தன. ஆயினும் மரபுக்கவிதகளின் மீதான பரீட்சயம் கொண்டிருந்த புதுக்கவிதைக்கவிஞர்களின் கவிதைகளின் வீச்சு ஆழமாக விருந்ததையும் இங்கு நினைவு கூரவேண்டும் .
சரிநிகரின் ஒட்டுமொத்தமான அளிக்கையின் ஒருபகுதியாவிருந்த அந்த வெண்பாக்களை பலரும் முகப்பக்கத்தில் நினைவு கூர்ந்திருந்தனர். சரிநிகர் நின்றபின் வெண்பாக்களை எழுதுவதை ஈழமோகம் நிறுத்திவிட்டார். முகப் பக்கத்தில் நீண்ட நாட்களின் பின் அவரது கவிதையைப் பார்த்துவிட்டு பின்வருமாறு அவருக்கு எழுதி இருந்தேன்.
"சொல்லுண்டு சொல்லுள் பொருளுண்டு
அள்ளுண்டு போகாது அனுபவம்
வில்லுண்டு அம்பு பூட்டஆயுதம் தமிழானால்
கல்லென்ன கால்தளராது கள்ளென்ன மொழி பிசகாது...
எழுதுங்கோ ஈழமோகம்..."
அவருக்கு பதில் எழுதிய பின்னர் கடந்த காலங்களில் எழுதப்பட்ட ஈழத்து மரபுக் கவிதைகளை மீண்டும் ஒரு முறை வாசிக்க ஆவல் ஏற்பட்டது. எழுந்தமானமாக நூலகம் இணையத்தளத்தில் தேடிபார்த்த போது மனதில் தைத்த வரிகள் இவை:
ஒளியோடு காணமுடியாத யாவும்
உறவாக வாழ்வு புரியும்.
இருளோடு கூடி உறவாட ஆட
ஒரு கோடி உண்மை புரியும்.
என இருளுக்குள்ளும் வாழ்வின் தத்துவத்தைக் கண்ட இணுவைக்கவிஞர் நாக சிவசிதம்பரம் மேலும் கூறுகிறார்
ஒளிதேடும் பிஞ்சுக்கொடியேறும் போது
தடையாவையும் தளிர் மீறும்
நிழல் போதுமென்று களையாற நேரின்
துயர் நூறு வந்து சூழும்...
1991 இல் எழுதப்பட்ட இந்தக்கவிதை இருண்ட இந்த நாட்களுக்கு ஓளியேற்றுகிறதா இல்லையா?
யார் சிவிகை ஊர்வது ? யார் சுமக்கும் ஆட்கள்?
யார் நாட்டை ஆளுவது? யார் ஆளப்படுவோர்?
யார் கையில் துப்பாக்கி? யார் உடலில் ரவைகள்?
யார் சிறையில் வாடுவது? யார் கையில் திறப்பு?
1986 ஆண்டு சோ பத்மநாதனால் எழுதப்பட்ட இந்தக்கவிதைக்கு மீண்டும் தேவையேற்படுமென்று அவர் அன்றே நினைத்தாரோ என்னவோ?
வினாக்கள் தாம் எத்தனை! ஏன் விடை கிடைக்கவில்லை.?
வெம்போர் மூண்டு எத்தனை நாள்! விடுதலை ஏன் இல்லை?
கனாக் காணும் புதியயுகம் ஏன் விடியவில்லை?
கண்ணீரும் கம்பலையும்? ஏன் ஓயவில்லை?
என மூன்று தசாப்தங்களின் பின்பும் அவரது கவிதை விடையைத் தேடி நிற்பதனை என்னெவென்று சொல்ல..
உழைக்க ஓர் கூட்டம் உறிஞ்ச ஓர் கூட்டம்
விளைக்க ஓர் கூட்டம் வெட்ட ஓர் கூட்டம்
தழைக்க ஓர் கூட்டம் தறிக்க ஓர் கூட்டம்
பிழைக்குமா தர்மம் பெருமாட்டி சொல்லு!
என 1983 களில் எழுதப்பட்ட கவிதை ஒன்றில் வாகரைவாணன் கேட்கிறார்.
இப்படி ஏராளமான கவிஞர்களின் கவிதைகள் மீண்டும் பேசுகின்றன. இந்தக்கவிதைகள் எமது ஆயுதம் தாங்கிய போராட்டம் வெற்றி பெற்றிருந்தாலும் கூட அதன் பின்னான வாழ்விற்குப் பொருத்த மான வகையில் மீள வாசிக்கப்படக்கூடியனவாக உயிர்த்து நிற்கின்றன. இந்தக்கவிதைகள் நவீனமான வாசிப்பு முறைகளைக் கோரிநிற்பவையல்ல.சிக்கலான மொழிநடையெதுவும் இன்றிக் காலங்களைக் கடந்து நாங்கள் உணர்பவற்றை முன்னுணர்ந்தவையாக வெளிப்பட்டு நிற்கின்றன.
அண்மையில் துனிசியாவிலும் எகிப்திலும் சர்வாதிகாரிகளுக்கெதிராக எழுச்சிகொண்ட மக்கள்நெருப்பின் திரியாகவும் சந்தக்கவிதை இருந்திருக்கிறது. 20 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரஞ்சு காலனி ஆதிக்கத்திற்கெதிராக துனிசியா போராடிய போது துனிசியக்கவிஞரான அபு அல்- குவாசிம் அல்-ஸபி (Abu al-Qasim al-Shabi) அவர்கள் எழுதிய வாழ்வின் விருப்பு (The Will of Life) என்னும் கவிதை எண்பது வருடங்கள் கடந்து மீண்டும் கண்டெடுக்கப்பட்டு புதிய புரட்சியின் சுலோகமானது.
மக்கள் வாழ்வதற்கு விரும்பின்
அவர்களுக்கெனத்தீர்மானிக்கப்படிருந்த
மேன்மையான கருணை
அவர்களுக்குச்சார்பாகவே வழங்கப்படும்.
இரவு மடியும்படி விதிக்கப்படும்.
அடிமைச்சங்கிலியின் கணைகள் அறுந்தே விழும்.
என அல்-ஸபி எழுதிய கவிதை அங்கே மீண்டும் நெருப்பை மூட்டியிருந்தத்து.
எமது கவிதைகள் மீண்டும் எப்படியான வகையில் கண்டெடுக்கப்படுமெனெ யாருக்கும் தெரியாது .
இந்தக்கணத்தில் முகப்பக்கத்தில் ஜமாலன் அவர்கள் சமகால தமிழ்க்கவிதைகளைப்பற்றிக் கூறியிருந்த ஒன்றையும் இங்கு நினைவு கூர்ந்து செல்லலாம். அவர் பின்வருமாறு கூறி இருந்தார்:
"நவீன வாழ்வு ஏற்படுத்தியிருக்கும் அந்நியத்தன்மை, பொருட்சார் பண்பாடு,அழகியல், சுவை ஆகியவற்றில் உருவாகியுள்ள ஒருவிதமான ஒட்டுதலின்மை, வாழ்வில்,உணர்வுகளில் ஏற்பட்டிருக்கும் பாரிய மாற்றம் போன்றவற்றைப் பேசும் கவிதைகள் குறைவே. வார்த்தைகளை வாரியிறைத்து உணர்வுகளை மொண்ணையாக வெளிப்படுத்தும் மிகைநவிற்சி சார்ந்த உணர்வுகளோ அல்லது இயல்புநவிற்சி சார்ந்த வர்ணனைகளோ கவிதையாக வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றன "
கடந்த முப்பது வருடங்களாக யுத்தத்தாலும் சனநாயக விழிப்புணர்வின்மையாலும் இனம் என்கிற பொதுமையே கோலோச்சியதாலும் அமிழ்ந்திருந்த தனிமனித உணர்வுகளின் வெளிப்பாட்டுக்கான அரசியல் சமூக பொருளாதாரக்களம் சரிவர அமையும் போது ஜமாலன் கோரி நிற்கிற கவிதைகள் வெளிவரலாம்.
இதை எழுதிக் கொண்டிருந்த போது ஈழமோகம் எனக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருந்தார். திறந்து பார்த்தேன். அது முகப்பக்கத்தில் நான் எழுதிய எதிர்வினைக்குப் பதிலாக இருந்தது. கவிதையாக இருந்தது.
சொற்களோ பொருளை விஞ்சும் சோதியோ நெருப்பை விஞ்சும்
கற்களோ மலையை விஞ்சும் கற்பனை கதையை விஞ்சும்
உற்பவம் நிகளும் காலை உணர்வுகள் கலங்க உண்மைச்
சொற்பதம் கொண்டு; வாழ்வை சொல்லிட அறியாநின்றேன்
‘சொக்கி ‘நான் எழுதுதற்கு சுந்தரம் எதையும் காணேன்.
திக்கி வாய் திணற நெஞ்சம் திகைத்திட நின்று கண்முன்
முக்கினோர் முயன்றோரெல்லாம் முதுகெலும் புடைய வீழ்ந்து
வக்கிலார் ஆகிப்போன வகையினை மட்டும் கண்டேன்.
நாங்கள் “விக்கி” நின்ற வகையை அவர் எழுதியிருந்தார்
எங்கள் போராட்டத்தை மீண்டும் எங்கிருந்து தொடங்குவது என்று அறியாத கையறு நிலையில் நிற்கிறோம். கடந்து முப்பது வருடங்கள் எங்கள் படைப்பாளிகள் எழுதியவற்றைத் திரும்ப வாசிக்கும் போது இதயம் வலிக்கிறது.
ஜமாலன் சொன்ன நவீன உலகமும் பொருள்சார் பண்பாடும் ஈழத்தமிழ் சமூகத்துள் இப்பொழுதான் நுளையத்தொடங்கியுள்ளன.
கலையும் இலக்கியமும் பேச முனைகிற ஆழமான மொழியின் திறவு கோல்களைத்தான் மீண்டும் நாங்கள் தேடத்தொடங்கியிருக்கிறோம்
வர்ணம் மொழியல்ல
வரைந்த கோடும் மொழியல்ல
வாய்மொழியும் மொழியல்ல
விழுந்த வார்த்தையும் மொழியல்ல
சுரம் மொழியல்ல
சுருதியும் மொழியல்ல
சொல்லாது கொள்ளாது உள்ளின் அறிவை
ஊடுருவிச் சென்றதெதுவோ அதுவே மொழியென...
எங்கள் படைப்பாளிகள் பொதுமைக்குள்ளும் தன்னுணர்வின் ஆழத்தைக் கண்டுகொள்ளும் மொழியின் திறவு கோல்களைக் கண்டுகொள்வார்கள் என்றே தோன்றுகிறது.
கடந்த மூன்று தசாப்தங்களின் படைப்புக்களை மீள வாசிக்கும் போது எங்கள் மொழியின் திறவு கோல்களைக் கண்டுகொள்ள மாட்டோமா என்ன?
குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவ அபிரா
12-03-2011
அனுப்புக முகப்பு, கட்டுரைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக