பின்பற்றுபவர்கள்

7 ஜனவரி, 2013

கல்லானாலும் கணவன்…









அண்மையில் ஊடகமொன்றில் வந்த செய்தியை வாசித்தபோது என்னுட் சில நாட்களாகக் குமைந்து கொண்டிருந்த ஒரு சம்பவத்தையும் பகிர்ந்து கொள்ளலாமே என்று தோன்றியது மனதில் தோன்றுகிற எல்லா உணர்வுகளையும் பொதுவெளியிற் பகிருகிற ட்ருவிற்றர் காலத்தில் வாழ்கிற போது எனது அனுபவத்தையும் பொதுவெளியில் முன்வைப்பது பிரயோசனமாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் எனது அனுபவத்தைப் பகிர முன்னர் நான் வாசித்த செய்தியையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

வீரமரணங்களும் போரும் அரசாட்சி செய்த காலத்திலும் தனிமனிதப்பிரச்சனைகளும் சமூகப் பிரச்சனைகளும் தமிழ்ச் சமூகத்துள் நிலவவே செய்தன. ஆனால் அப்பொழுது இத்தகைய சம்பவங்கள் எங்களின் ஊடகங்களின் கண்களுக்குப் படவில்லை. இப்பொழுது தனிமனித அல்லது சமூகப்பெறுமானங்கள் தொடர்பான மனித நடத்தைகளை விடுப்புக்களாகவும் விரகங்களாகவும் விற்கிற காலம் தோன்றியுள்ளது.

சமுகத்தின் பெறுமானங்களில் ஏற்படுகிற மாற்றங்களைப் பொறுப்புணர்வுடன் அணுகும் போக்கை அனேகமான ஊடகங்களின் செய்தியிடலிற் காணமுடிவதில்லை. ஒரு சமூகத்தின் கலாசார மற்றும் பண்பாட்டுக் கூறுகளை அதனுள் வாழ்பவர்கள் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றவேண்டிய தேவை இல்லை என்பதைப்பல ஊடகங்கள் மறந்து விடுகின்றன. ஒரு சமூகத்தினுள் நிகழும் பண்பாட்டு மற்றும் கலாசார மாற்றங்களை எந்த முறையில் விளங்கிக் கொள்ளலாம் என்ற கேள்வியையும் முன்னதாகவே உங்களின் முன் வைத்து விடுகிறேன்.

இனிச் செய்திக்கு வருவோம்

நான் வாசித்த செய்தியின் சாரம் இதுதான்.

இலண்டனில் இருக்கும் மகளின் அழைப்பின் பேரில் யாழ்பாணத்திலிருந்து இலண்டன் செல்லும் தாய் ஒருவர் அங்கு தனது மகள் தனது கணவனை விட்டுப்பிரிந்து இன்னொருவருடன் வாழ்வதைக் கண்டு அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் உடனே யாழ்ப்பாணம் திரும்பிவிடுகிறார். அவர் உடனே ஊர் திரும்பியதன் காரணத்தை அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் மாணவர்கள் அறிய விரும்புகிறார்கள். ஆனால் அந்தத்தாயார் அவர்களுக்கு எதனையும் சொல்ல வில்லை. பின்னர் அத்தாயார் கௌரிவிரதம் இருந்த நாள் ஒன்றில் அவரது கணவன் நிறைந்த குடி போதையில் இருந்த காரணத்திற்காக அவரைக் கண்டித்திருக்கிறார். இதனால் கோபமடைந்த அவரது கணவன் குடிபோதையில் மகளின் நடத்தையையும் விமர்சித்து சூழவுள்ளவர்களும் அவற்றை அறிந்துகொள்ளும் வகையில் உரத்துப் பேசியிருக்கிறார். சூழ உள்ளவர்களும் உடனே அந்தக்குடும்ப முரண்பாட்டைக் காணொளியாக்கி ஊடகத்திற்கு அனுப்பி இருக்கிறார்கள் அந்த ஊடகமும் அச்சம்பவக் காணொளியை வெளியிடாமல், செய்திக்கான ஆதாரம் தங்களிடம் உள்ளது என்ற தொனி புலப்பட அச்சம்பவத்தைச் செய்தியாக மட்டும் வெளிப்படுத்தி விட்டிருக்கிறது.

எந்தச் சம்பவத்தையும் யாரும் எப்படியும் செய்தியாக்கலாம் . அதற்கான முழு உரிமையும் ஊடகங்களுக்கு இருக்கின்றன. ஆனால் இத்தகைய சம்பவங்களைச் செய்தியாக்கும் போது அதன் பின்னாற் தொழிற்படுகிற கருத்தியலை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதுதான் ஆரோக்கியமான ஊடக அணுகு முறையாகும்.

இந்தச் சம்பவத்தில் பாத்திரங்களாக இருக்கிற தாய் தந்தை மகள் மகளின் பழைய கணவன் மகளின் புதிய நண்பன் மற்றும் புறநிலையாக இருந்து விடுப்புப் பார்க்கிற மாணவர்கள் ஆகியோருக்கிடையில் இருக்கிற உறவையும் அவர்களுக்கிடையில் இருக்கிற உணர்வுப் போராட்டங்களையும் அவர்களுடைய நடத்தைகளுக்கு காரணமாக இருக்கிற கருத்தியலையும், கலாசாரத்தையும் உன்னிப்பாக அவதானித்துப் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு ஊடகவியலாளனுக்கு அல்லது ஒரு படைப்பாளிக்கு அல்லது ஒரு நெறியாளனுக்கு இந்தச்சம்பவம் எமது தமிழ்ச்சமூகத்தின் ஒரு குறுக்குவெட்டு என்பது புரியும்.

நாடகம் ஒன்றிற்கான அல்லது குறும்படம் ஒன்றிற்கான கருவாக இருக்கக்கூடியது இந்தச்சம்பவம். பொறுப்புடன் புரிந்து அளிக்கையாக்கப்பட வேண்டிய கருவான அந்தச்சம்பவம் அது செய்தியிடப்பட்ட முறையினால் வெறும் விடுப்பாகிப் போனது அதிசயமல்ல.

குடிகாரக் கணவனின் இம்சைகளைச் சகித்துக்கொண்டு கௌரி விதரம் அனுஸ்டிக்கிற தாய்க்கும் தன்னைச் சந்தேகிக்கிற கணவனை விட்டு விலகித் தன்னை நேசிக்கிற இன்னொருவனோடு சேர்ந்து வாழத் துணிவு கொண்ட மகளுக்கும் இடையில் ஏற்படுகிற இடைவெளி எங்கள் கலாசாரத்தில் உருவாகத்தொடங்கியுள்ள ஒரு வெளி. குடும்பம் என்னும் சனாதனமான மரபான அமைப்பில் பெண்ணுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பாத்திரம் குறித்து அலட்டிக்கொள்ளாமல் அடுத்த தலைமுறை கௌரிவிரதம் அனுட்டிக்கப் போவதில்லை. கணவனுக்காகவே வாழ்கிற கணவனின் விருப்பங்களையே நிறைவேற்றிக் கொண்டிருக்கிற தனது சுயத்தைக் கணவனிடம் இழக்கிற பெண்களின் தொகை இனி எமது சமூகத்தில் குறைந்து செல்லும்;செல்லவேண்டும்.

இந்தச் செய்தியை வாசிப்பதற்கு முன் என்னுள் கிடந்து குமைந்து கொண்டிருந்த ஒரு சம்பவத்தையும் இங்கு பரிமாறவேண்டியது அவசியம்.

சில வாரங்களுக்கு முன்பு எனது நெருங்கிய நண்பர் ஒருவர் என்னுடன் தொலைபேசியிற் தொடர்பு கொண்டு தனது மருமகள் வீட்டிற்கு அழையா விருந்தாளியாகச் செல்லவேண்டும் வருகிறாயா என்றார். கடந்த சில மாதங்களாக அவளுடன் தொடர்பேயில்லை தொலைபேசியையும் எடுக்கிறாளில்லை என்ன பிரச்சனையோ தெரியாதென்றார். வருகிறேனென்று ஒத்துக்கொண்டேன்.

மறுநாள் எனது நண்பரின் மருமகள் வீட்டுக்குச் சென்றோம். அழைப்புமணியை அழுத்தினோம். கதவு திறந்தது மெல்லிய சிரிப்புடன் மருமகளின் கணவன் உள்ளே அழைத்தார். அழையா விருந்தாளிகள் நாமென்றாலும் வரவேற்கும் பண்பிற் பிரச்சனை இருக்கவில்லை. மருமகளின் முகத்தில் அச்சமும் மகிழ்வும் ஒன்றாகத்தெரிந்தது.

வழமையான குசல விசாரிப்புக்களின் பின் நிலவிய அமைதியை மருமகளின் கணவரே கலைத்தார். ஆரம்பத்தில் தெரிந்த மெல்லிய சிரிப்பு மறைந்துவிட்டது கோபமும் எரிச்சலும் நிறைந்த முகமொன்று வெளிவந்தது.

“நீங்கள் என்னத்துக்கு வந்திருக்கிறியள் எண்டு எனக்குத் தெரியும். கலியாணம் முடிக்க முதல் பேசிய விடயங்களை- வாக்குறுதிகளை முதல்ல சரியா நிறைவேற்றிப்போட்டு வந்து என்னோடை கதையுங்கோ. உவண்ட அம்மா சொன்னவ ஊரில இருக்கிற காணியையும் வீட்டையும் எழுதித் தாறன் எண்டு அதை இன்னும் செய்யேல்லை. அது மட்டுமில்லை இப்ப எழுத்தித்தாறணெண்டு சொன்ன காணியிலை வீடுமில்லை. எண்டபடியால் வீட்டுக்கான பெறுமதியையும் சேர்த்துக் காசாகத் தரவேணும்.” எனத் தொடங்கினார்.



திருமணம் முடித்து 15 வருடங்களின் பின்பும் ஏழு வயதில் ஒரு மகளும் இருக்கிற நிலையில் பெல்யியத்தில் வாழ்கிற என் நண்பரின் மருமகளின் கணவரின் கோரிக்கைகள் எங்கள் சமூகத்தில் உள்ள பெரும்பான்மையானவர்களுக்கு நியாயமானவையாகத்தான் தோன்றும் என்பதில் சந்தேகமில்லை. திருமணத்திற்கு முன்னரேயே எட்டு இலட்சம் ரூபாவையும் இன்னொரு ஒன்பது பரப்புக்காணியையும் சீதனமாகப் பெற்றுக்கொண்ட அவர் இவ்வாறு கேட்பது சரியானதுதான் என்பவர்கள் அதிகம் உள்ள சமூகம் நாங்கள்.

எனது நண்பர் மருமகளின் கணவனின் உரையாடலில் இடையில் நுழைந்து “தம்பி வெளிநாட்டில இருக்கிறவர்களின்ரை காணியைப் பாதுகாப்பு அமைச்சு எடுக்குது இப்ப பாதுகாப்பாக பெற்றோரின் பேரில் இருக்கிற காணியை நீங்கள் வேண்டி என்ன செய்யப்போறியள்” என்று கேட்டார்.

“அது உங்கடை பிரச்சனையில்லை அதை ஆமிக்காரன் எடுத்தாலும் பரவாயில்லை உவ்வின்ரை அம்மா எங்கடை கலியாணத்தரகருக்குச் சொன்னதைச் சரியா நிறைவேற்ற வேண்டும்” என்றார்.

வெறும் காணி சீதனம் என்ற நிலையில் நின்ற அவரது கோபம் இப்பொழுது அவரது மனைவியின்மேல் திரும்பியது. எனது நண்பரின் மருமகளுக்கு வீட்டு வேலைகள் செய்வதில் நாட்டமில்லை என்றார். விருந்தினர்கள் வந்தால் பலகாரம் செய்யத் தெரியாதென்றார் குடும்பவளர்ப்புச் சரியில்லை என்றார். நண்பரின் மருமகளுக்குப் பற்கள் சரியில்லை பழுதாகிவிட்டன என்றார். அதிகாலையில் எழுந்ததும் மனைவியின் பற்களைப் எண்ணிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார் போலிருந்தது. தனது மனைவியின் பற்கள் பழுதானதற்கு மனைவியின் பெற்றோரின் பிள்ளை வளர்ப்பு முறையே காரணமென்றார். தான் அறியாமல் அந்தக் குடும்பத்துக்குள் சென்று விழுந்து விட்டேன் என்றார். தங்களுடைய ஊராட்கள் அந்த ஊரில் பெண்ணெடுப்பதில்லை என்றார். எனது நண்பர் தனது மருமகளின் மகளின் படமொன்றை முகப்புத்தகத்தில் பரிமாறியிருந்தார். அதனைப் பார்த்தவர்கள் நாவூறு படுத்தியமையால் தனது மகளுக்குப்பல்லு மிதந்து இப்போது சாப்பிடவே கஸ்டப்படுகிறாள் என்றார்.

அவரது வெறுப்பும் கோபமும் நிறைந்த வார்த்தைகளால் கொதித்துக் கொண்டிருந்த அந்த வரவேற்பறையில் அவரது மனைவி கண்கலங்கி அமர்ந்திருந்தார் இப்படித்தான் ஒவ்வொரு நாளும் விடிகின்றதென்று அவர் தனது மாமாவிடம் கூறினார். எனது நண்பரின் மருமகளுக்கும் அவரது கணவருக்குமிடையிலான அன்பினதும் பிணைப்பினதும் ஆழத்தின் சாட்சியாக(?) அவர்களுக்கு பிறந்த மகள் இந்த முரண்பாட்டை மொழி அதிகம் புரியாவிடினும் உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

மேற்குறித்த பிரச்சனைகளைக் காரணம் காட்டியே அவர் தனது மனைவியை அவரது பெற்றோரிடமும் உறவினருடனும் உரையாடவிடாது முற்று முழுதாகத் தடுத்துவிட்டார். தன்னுடைய மனைவி தனக்குப் பிடிகாதவர்களுடன் உரையாடத் தேவையில்லை என்றும் உறுதியாகக் கூறிவிட்டார். (அவரது மனைவிக்கு, அவருக்குப் பிடிக்காதவர்களுடன் தனது கணவரை உரையாட வேண்டாம் என்று கட்டளையிட உரிமையிருக்குமென்றால் இந்த விதியை வேறு ஒரு வகையில் புரிந்து கொள்ளலாம்)

இறுதியாக அவர் இன்னும் ஒன்றையும் தெளிவாகக் கூறினார். இந்த வருடம் மார்கழி 31ம் திகதிக்கு முன்னர் காணியை எழுதித்தருவதுடன் வீட்டுக்குரிய பணத்தையும் தந்துவிட்டுத் தங்களுடனான தொடர்பை முற்று முழுதாக துண்டித்துவிடவும் வேண்டும் என்றார்.

எல்லாம் கிடைத்த பின்பும் ஏன் தொடர்பைத் துண்டிக்க வேண்டும் என்று நான் குழம்பிய போது பின்வருமாறு கூறினார் என்ரை பிள்ளைக்கு நாளைக்கு கலியாணம் நடக்கவேண்டும் உங்களோட தொடர்பிலிருந்தால் அது நடக்காது என்றார். நான் ஏன் இப்படிச் சொல்லுறன் எண்டு உங்கள் எல்லாருக்கும் நல்லா விளங்கும் என்றார்.

நான் திரும்பிவரும் வழியில் எனது நண்பரைக்கேட்டேன்: “அவர் ஏன் தன்னுடைய மகளுக்குத் திருமணம் நடக்காதென்கிறார் ”

எனது இன்னொரு மருமகள் கலப்புத் திருமணம் முடித்திருக்கிறாள் என்றார் என் நண்பர்.

மருமகளின் கணவரின் நடத்தையினால் ஏற்பட்ட அவமானம் கோபம் மற்றும் கவலை என யாவும் ஒன்றாகச் சேர்ந்து அழுத்த எனது நண்பர் மௌனித்திருந்தார்.

இருபது வருடங்களுக்கு மேலாக வெளிநாட்டில் வசிக்கும் நண்பரின் மருமகளை முறையாக மொழிபடிக்கவோ வேலை செய்யவோ அனுமதிக்காமல் வீட்டுக்குளேயே வைத்திருந்து பின் இப்பொழுது யாருடனும் உரையாடவேண்டாம் என்று கட்டளை இடுமளவுக்கு அவரது கணவர் வளர்ந்திருக்கிறார்.

கடந்த பதினைந்து வருடங்களாக வேலை எதுவும் செய்யாமல் வீட்டிலேயே இருந்து கொண்டு சாதிவெறி மற்றும் ஊர்வெறி கொண்ட அறியாமை நிறந்த உன்மத்தனாக அவர் மாறியிருந்தார். அவர் போன்ற மனிதர்களை எங்கள் சமூகத்தை எங்கு வெட்டிப்பார்த்தாலும் காணலாம்.

ஆண் பெண்ணின் சுயத்தை மதித்தல், சரிசமமாக உரையாடுவதற்கு பெண்ணுக்குள்ள உரிமையை மதித்தல், குடும்பவேலைகளில் இருக்கவேண்டிய பகிர்வு பெண்ணின் சுயவளர்ச்சிக்கான வெளி இருத்தல் பரஸ்பர விட்டுக்கொடுப்பு தொடர்பாடற் சுதந்திரம், அன்பையும் காதலையும் வளர்பதில் பரஸ்பரம் இருக்கவேண்டிய நாட்டம் எனப் பல்வேறு பண்புகளில் எங்களது சனாதனமான குடும்ப அமைப்புக்குள் மாற்றங்கள் ஏற்படவேண்டியுள்ளது. இந்த விடையங்களில் பெண்ணே பலிக்கடாவாக இருக்கும் சூழ்நிலைகள் வெளிப்படும் போது ஊடகங்கள் அவற்றை இனம் கண்கண்டு வெளிப்படுத்துவது எமது சமூகத்தைச் சனநாயகப்படுத்தும்

நான் மேற்சொன்ன எந்த பண்புகளிலும் முன்னேற்றமில்லாத ஒரு குடும்பச் சூழ்நிலையில் உணர்வற்ற மரக்கட்டைபோல வாழும் என் நண்பரின் மருமகளுக்கு என்ன தீர்வு எனக் கேட்ட போது சிலர் அவள் பிரிந்து தனியாக வாழ்வது தான் நல்லதென்றார்கள். ஆனால் அனேகமானவர்கள் எனது நண்பரின் மருமகள் கௌரிவிரதம் பிடித்தால் எல்லாமும் சரியாகிவிடுமென்கிறார்கள்.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்...?



குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக

தேவ அபிரா

25-11-2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக